PDA

View Full Version : பச்சைக்கண் பாவைகீதம்
23-06-2013, 02:33 AM
“நிச்சயமாக... போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்காங்க, மோசமானவர்களும் இருக்காங்க... உங்களுக்கே தெரியும்” என்றார் பழுப்பு நிறத்தொப்பிக்காரர்.

“நீங்க சொல்றது சரிதான். உண்மையும் அதுதான்.. இல்லையா ஜூலி?” தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டான் இளைஞன்.

ஜூலி இந்தப் பேச்சில் சுவாரசியமற்றவளாய்க் காணப்பட்டாள். அவள் பதிலேதும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

“இவள் என் மனைவி ஜூலி.. இவளுக்கு ரயில் என்றாலே பிடிக்காது. ரயில் பிரயாணம் எப்போதுமே இவளுக்கு ஒத்துக்காது” என்றான் இளைஞன் தொப்பிக்காரரிடம்.

“அப்படியா..? என் மனைவிக்கு பேருந்து பிடிக்காது. ஒருதடவை ஒரு பேருந்து விபத்திலிருந்து கிட்டத்தட்ட தப்பிப் பிழைத்தாள்.. அது போனவருடம்னு நினைக்கிறேன்… இல்லை.. இல்லை.. அது அப்போ இல்லை… இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது..… எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. மான்செஸ்டரில் நடந்த விபத்து அது..”

தொப்பிக்காரர் தன் மனைவியைப் பற்றியும் மான்செஸ்டர் பேருந்து பற்றியும் ஒரு நீண்ட கதையை அலுப்பூட்டும் அளவுக்கு நீட்டி முழக்கி சொன்னார்.

அன்று வெயில் அதிகமாக இருந்தது. ரயிலோ மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. அந்தப் பெட்டியில் பழுப்புநிறத் தொப்பிக்காரர், இளைஞன், அவன் மனைவி ஜூலி, ஒரு தாயும் அவளது இரு குழந்தைகளும் மற்றும் விலையுயர்ந்த சூட் அணிந்திருந்த உயரமான அடர்நிறத்தவன் என ஏழு பேர் இருந்தனர்.

இளைஞனின் பெயர் பில். அவன் குட்டையாக வெட்டிய பழுப்பு நிற தலைமயிருடனும் மாறாத சிரிப்புடனும் காணப்பட்டான். அவன் மனைவி ஜூலி மிக நீளமான செந்நிறக் கூந்தலும் கடல்பச்சை நிறக் கண்களும் உடையவளாய் இருந்தாள். அந்தக் கண்கள் மிகவும் அழகாயிருந்தன.

தொப்பிக்காரர் பேசினார்… பேசினார்.. பேசிக்கொண்டே இருந்தார். அவர் அகலமான செந்நிற முகத்துடன் உரத்த குரலுடையவராய் இருந்தார். அவர் பில்லுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்… ஏனெனில் பில்லுக்கும் பேச்சில் ஆர்வமிருந்தது. அவர் நிறைய சிரித்தார், அவர் சிரிக்கும்போதெல்லாம் பில்லும் சேர்ந்து சிரித்தான். சகமனிதர்களுடன் பேசி சிரித்துப் பழகுவது என்பது பில்லுக்கு மிகப் பிடித்தமானதாயிருந்தது.

குழந்தைகள் இருவருக்கும் வெக்கை தாளவில்லை. பொழுதும் போகவில்லை. அவர்களுக்கு ஒரு இடத்தில் அமர விருப்பமும் இல்லை. அவர்கள் சத்தம்போட்டுக்கொண்டு ரயிலின் இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசிவரைக்குமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

“சத்தம்போடாமல் வந்து இங்க உட்காருங்க”

அவர்களுடைய அம்மா அழைத்தாள். அவள் உருவத்தில் சிறியவளாகவும் களைத்த முகமும் களைத்தக் குரலுமாய் காட்சியளித்தாள்.

“எனக்கு உட்காரப்பிடிக்கலை… எனக்கு தாகமா இருக்கு” சிறுவன் சொன்னான்.

“இந்தா, இந்த ஆரஞ்சைத் தின்னு” சிறுவனின் தாய் தன் பையிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“எனக்கு…?” சிறுமி உரத்துக்கேட்டாள்.

“உனக்கும் தரேன், வீணாக்காம ஒழுங்கா தின்னுங்க” என்று அவளிடமும் ஒன்று கொடுத்தாள்.

இருவரும் தங்கள் பழங்களை உண்டுமுடித்து ஒருநிமிடம் போல் அமைதியாய் இருந்தார்கள். பின் சிறுவன் சொன்னான், “எனக்கு குடிக்க ஏதாவது வேணும். தாகமா இருக்கு”

உயரமான அடர்நிறத்தவன் தன் பெட்டியிலிருந்து ஒரு செய்தித்தாளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். ஜூலி கண்களைத் திறந்து எதிரில் இருப்பவனது செய்தித்தாளின் பின்பக்கத்தை மேய்ந்தாள். புடாபெஸ்டின் வானிலை பற்றியும், லிவர்பூலில் நடக்கும் கால்பந்து போட்டி பற்றியும் இருந்த செய்திகளைப் படித்தாள். அவளுக்கு புடாபெஸ்ட் பற்றிய அக்க்கறையும் இல்லை, கால்பந்து விளையாட்டில் ஆர்வமும் இல்லை என்றாலும் பில்லுக்கும் தொப்பிக்காரருக்கும் இடையில் நடக்கும் சம்பாஷணைகளைக் கேட்க அவள் விரும்பவில்லை. ‘பேச்சு… பேச்சு… பேச்சு… எப்பவும் பேச்சு… பில் ஒருநாளும் பேச்சை நிறுத்துவதே இல்லை…’ மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள்.

திடீரென்று ஏதோ தோன்ற அப்போதுதான் கவனித்தாள்.. செய்தித்தாளுக்கு மேலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்த உயரமானவனின் கண்களை. அவனுடைய உதடுகளை அவள் காணமுடியாவிட்டாலும் அவன் முறுவலிக்கிறான் என்பதைக் கண்கள் உணர்த்தின. சட்டென்று பார்வையைத் தாழ்த்தி செய்தித்தாளிலிருந்த புடாபெஸ்டின் வானிலையை மீண்டும் வாசித்தாள்.

ரயில் டாலிஷ் நிலையத்தில் நின்றது. மக்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்க எங்கும் பெரும் இரைச்சலாக இருந்தது.

“இதுதான் நம்ம ஸ்டேஷனா?” சன்னல் வழியே வெளியே பார்த்தபடி சிறுமி கேட்டாள்.

“இல்லை,,,இது இல்லை.. நீ வந்து உட்கார்” தாய் அழைத்தாள்.

“நாங்க லீவுக்காக பென்சான்ஸ் போறோம்…” சிறுமி பில்லைப் பார்த்து சொன்னாள்.

“ஆமாம், என் சகோதரி அங்கே கடலை ஒட்டி ஒரு சின்ன ஹோட்டல் நடத்திட்டிருக்கா.. நாங்க அங்கதான் தங்கப்போறோம். அது ரொம்பவே மலிவு…” என்றாள் அப்பெண்.

“ஆங், அது ரொம்ப நல்ல நகரம்… எனக்கு அங்கே ஒருத்தரைத் தெரியும்.. அவருக்கு கிங் தெருவில் ஒரு உணவகம் இருக்கு. விடுமுறைக்கு வர நிறைய பேர் அங்கே போவாங்க. கோடைக்காலத்தில் எக்கச்சக்கமா சம்பாதிச்சிடுவார்…” சொல்லிவிட்டு தொப்பிக்காரர் உரக்கச் சிரித்தார்.

“பென்சான்ஸில் உங்க விடுமுறை நாட்கள் ரொம்ப நல்லா இருக்கும்.”

“நானும் ஜூலியும் செயின்ட் ஆஸ்டல் போறோம். இதுதான் எங்களுடைய முதல் உல்லாசப் பயணம். ஜூலிக்கு ஸ்பெயின் போகணுமென்று ஆசை… ஆனால் எனக்கு செயின்ட் ஆஸ்டல் போகத்தான் விருப்பம். நான் எப்பவும் விடுமுறைக்கு அங்கேதான் போவேன். ஆகஸ்டில் ரொம்ப நல்லா இருக்கும். பொழுதும் அற்புதமாய்க் கழியும்.” பில் சொன்னான்.

ஜூலி சன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்தினாள். ‘புடாபெஸ்ட் எங்க இருக்கு? எனக்கு அங்கே போகணும்… எனக்கு வியன்னாவுக்கு போகணும்… பாரிஸூக்கு… ரோமுக்கு… ஏதென்ஸூக்கு…’ அவளுடைய பச்சைக் கண்கள் சலிப்பும் எரிச்சலுமாய்க் காணப்பட்டன. சன்னல்வழியே கடந்துகொண்டிருந்த இங்கிலாந்தின் சிற்றூர்களையும் மலைகளையும் பார்த்தபடியிருந்தாள்.

தொப்பிக்காரர் ஜூலியைப் பார்த்தார். பின் பில்லிடம் “நீங்க சொல்றது சரிதான்.. இங்கிலாந்தில் விடுமுறைப்பொழுது நல்லாவே கழியும். நானும் என் மனைவியும் எப்பவும் பிரைட்டன் போவோம். ஆனால் வானிலை…. ஒரு வருடம் போயிருந்தபோது நல்ல மழை… காலை, மதியம், இரவு எந்நேரமும் மழை… நிக்கவே இல்லை… முதல் வாரத்திலேயே ஊருக்குத் திரும்பிட்டோம்.” சொல்லிவிட்டு சத்தமாய் சிரித்தார்.

பில்லும் சிரித்தான். “அப்போ… நாள் முழுவதும் என்னதான் செஞ்சீங்க?”

ஜூலி புடாபெஸ்டின் வானிலையை மூன்றாவது தடவையாகப் படித்தாள். பின் எதிரிலிருப்பவனின் கைகளைப் பார்த்தாள். நல்ல நீளமான சுத்தமான பழுப்பு நிறக் கைகள். அழகான கைகள் என்று எண்ணிக்கொண்டாள். அவன் விலையுயர்ந்த ஜப்பானிய கைக்கடிகாரம் அணிந்திருந்தான். ‘ஜப்பான்… எனக்கு ஜப்பானுக்குப் போகணும்’ நினைத்துக்கொண்டாள். மெல்லத் தலையை உயர்த்த…. மீண்டும் அவனுடைய கண்கள் செய்தித்தாளுக்கு மேலாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தன. இம்முறை அவள் பார்வையைத் திருப்பவில்லை. அவளுடைய பச்சைநிறக் கண்கள் அவனுடைய அடர்பழுப்பு நிறக்கண்களுக்குள் ஒரு நிமிடம் ஆழமாய் ஊடுருவி நின்றன.

ரயில், நியூட்டன் அப்பாட் ரயில் நிலையத்தைக் கடந்தபின் பரிசோதகர் பயணச்சீட்டுகளைப் பார்வையிடலானார்.

“ரயில் ரொம்ப தாமதமாப் போகுதே… என் கடிகாரப்படி இருபது நிமிஷம்…” தொப்பிக்காரர் அவரிடம் முறையிட்டார்.

“பத்து நிமிஷம்! அவ்வளவுதான்!” பரிசோதகர் ஜூலியைப் பார்த்துப் புன்னகைத்தார்.

உயரமானவன் செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு தன் பயணச்சீட்டை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தான். அவர் பார்த்துவிட்டு, “உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை சார், ஆறுமணிக்கு முன்னால் படகு ப்ளைமவுத்தைவிட்டுக் கிளம்பாது.. உங்களுக்கு நிறைய நேரமிருக்கு”

உயரமானவன் புன்னகைத்தபடி, பயணச்சீட்டை தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மீண்டும் செய்தித்தாளை விரித்தான்.

‘படகு… இவன் ப்ளைமவுத்தில் ஒரு படகு பிடிக்கப்போகிறான்… எங்கே போவானாக இருக்கும்?’ ஜூலி யோசித்தபடி தன் விரிந்த பச்சைநிற விழிகளால் அவனை மறுபடி ஏறிட்டாள்.

அவன் அவளைப் பார்க்கவில்லை. செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய கண்கள் புன்னகைத்துக்கொண்டிருந்தன.

ரயில் டாட்னஸ் ரயில் நிலையத்தில் நின்றது. நிறைய பேர் ஏறவும் இறங்கவும் செய்தனர்.

“எல்லோருமே விடுமுறைக்காக கிளம்பியிருக்காங்க…” பில் சொல்லிவிட்டு சிரித்தான். “விடுமுறை அட்டகாசமா இருக்கப்போகுது. இரண்டு வாரத்துக்கு வேலை கிடையாது. செயின்ட் ஆஸ்டல் ஒரு அழகான அமைதியான நகரம். நாம் அங்கே காலைநேரத்திலும் படுத்தே கிடக்கலாம், மதிய நேரங்களில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம், மாலை வேளையில் குடிக்கலாம்.. இல்லையா ஜூலி?” அவன் மனைவியைப் பார்த்தான்.

“இப்போ பரவாயில்லையா ஜூலி?”

“ம்… பரவாயில்லை… பில்,” அவள் அமைதியாய் சொன்னாள்.

அவள் சன்னலின் ஊடாய் மீண்டும் பார்த்தாள். இப்போது ரயில் சற்று வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்யத் தொடங்கியிருந்தது. பில்லும் தொப்பிக்காரரும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்கள். பில் சொன்ன இருமனிதர்களும் நாயும் கதையைக் கேட்டு தொப்பிக்காரர் பலமாய் சிரித்தார்.

“அருமையான கதை… எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்க அதை சொன்ன விதமும் பிரமாதம். உங்களுக்கு இந்தக் கதை தெரியுமா….” பில்லிடம் கேட்டுவிட்டு தானும் ஒரு கதை சொல்லலானார். அந்தக் கதை ஒரு பிரஞ்சுக்காரனையும் மிதிவண்டியையும் பற்றியது.

“இந்தக் கதைக்கெல்லாம் ஜனங்க ஏன்தான் சிரிக்கிறாங்களோ… அலுப்படிக்கிற கதைகள்!” ஜூலி நினைத்துக்கொண்டாள்.

ஆனால் பில்லுக்கு அவை சுவாரசியமாயிருந்தன. அடுத்ததாய் அவன் ஒரு முதியவளும் பூனையும் கதையைச் சொல்ல, தொப்பிக்காரர் மறுபடியும் பலமாய் சிரித்தார்.

“இதுவும் ரொம்ப நல்லாயிருக்கு…. எனக்கு இந்தக் கதை தெரியாது...எப்படித்தான் இத்தனையையும் ஞாபகத்தில் வைத்திருக்கீங்களோ?”

‘எப்படியா… அவன்தான் அவற்றை நித்தமும் சொல்லிக்கொண்டே இருக்கிறானே…” ஜூலி மனத்துக்குள் சொல்லிக்கொண்டாள்.

“எனக்கு ஒண்ணு புரியலை… அந்தப் பூனை ஏன் செத்துப்போச்சு?” திடீரென்று சிறுமி பில்லைப் பார்த்துக் கேட்டாள்.

“ஷ்ஷ்ஷ்… சும்மா இரு.. வா வந்து உன் சாண்ட்விச்சை சாப்பிடு” சிறுமியின் தாய் அவளைத் திசைதிருப்ப முயன்றாள்.

“பரவாயில்லை, விடுங்க. எனக்கு குழந்தைகளை ரொம்பவும் பிடிக்கும்” என்றான் பில்.

தொப்பிக்காரர் குழந்தைகளின் சாண்ட்விச்சைப் பார்த்தார்.

“ம்ம்.. எனக்கும் பசி வந்துவிட்டது. இங்கே ரயிலில் இருக்கும் உணவகத்தில் சாண்ட்விச் கிடைக்கும். வரீங்களா.. நாமும் போகலாம்.. எனக்கு குடிக்கவும் ஏதாவது வேணும்”

“ஆமாம்… கதை சொல்லுவதென்பது தொண்டை காய்ந்துபோகிற வேலையில்லையா?” பில் சிரித்தான்.

இருவரும் எழுந்து பெட்டியை விட்டு வெளியேறினர்.

சிறுமி சாண்ட்விச்சைத் தின்றுமுடித்துவிட்டு ஜூலியைப் பார்த்துக் கேட்டாள். “ஆனா… அந்தப்பூனை ஏன் செத்துப்போச்சு?”

“எனக்குத் தெரியலையே… ஒருவேளை அதுவே சாக விரும்பியிருக்கலாம்.”

சிறுமி ஜூலியின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள். “எனக்கு உங்க முடி ரொம்ப பிடிச்சிருக்கு.. ரொம்பவும் அழகாயிருக்கு” என்றாள். ஜூலி அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

கொஞ்சநேரத்துக்கு அந்தப் பெட்டியே அமைதியாயிருந்தது. உயரமானவன் தன்னுடைய பையைத் திறந்து ஒரு புத்தகத்தை வெளியிலெடுத்தான். அதை தன் இருக்கைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு ஜூலியை முறுவலுடன் நோக்கினான். ஜூலி அவனையும் புத்தகத்தையும் பார்த்தாள். ‘இத்தாலியின் பிரதான நகரங்கள்- வெனிஸ், ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பில்ஸ்’ அட்டையிலிருந்ததை வாசித்தவள், சன்னல் வழியே வெளியே பெய்துகொண்டிருக்கும் மழையைப் பார்த்தாள். ‘இரண்டு வாரம் ஆஸ்டனில்… பில்லுடன்… இந்த மழையில்…’

அரைமணி நேரத்துக்குப் பிறகு இருவரும் வந்துசேர்ந்தனர். “இந்த ரயிலில் ஏகப்பட்ட பேர்…” சொல்லிக்கொண்டே பில் ஜூலியிடம், ”சாண்ட்விச் சாப்பிடுறியா ஜூலி?” என்று கேட்டான்.

“வேண்டாம்.. எனக்கு பசியில்லை… நீங்க சாப்பிடுங்க”

ரயில் ப்ளைமவுத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்கப்பட்டு மக்கள் மெல்ல நகர ஆரம்பித்தனர். “நிறைய பேர் இங்க ஏறுவாங்க” தொப்பிக்காரர் சொன்னார்.

உயரமானவன் எழுந்து நின்று தன் புத்தகத்தையும் செய்தித்தாளையும் தன் பைக்குள் வைத்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். ரயில், நிலையத்தில் நின்றதும் நிறைய பேர் ஏறினர். ஒரு வயதானவரும் இரு பெண்மணிகளும் இவர்களிருந்த பெட்டிக்கு வந்தனர். அவர்கள் தங்களோடு ஏராளமான மூட்டை முடிச்சுகளைக் கொண்டுவந்திருந்தனர். பில்லும் தொப்பிக்காரரும் எழுந்து அவர்களுக்கு உதவினர். இருபெண்களில் ஒருத்தி ஒரு பெரிய பை நிறைய ஆப்பிள்களை எடுத்துவந்திருந்தாள். சட்டென்று பை கிழிந்துவிட ஆப்பிள்கள் பெட்டியின் நாலாபக்கமும் உருண்டோடின.
“நாசமாப்போக…” அவள் எரிச்சலோடு கூவினாள்.

எல்லோரும் சிரித்தனர். பின் ஆப்பிள்களைத் தேடி எடுத்து அவளிடம் கொடுத்தனர்.

ரயில், ப்ளைமவுத் ரயில் நிலையத்தைக் கடந்துவிட்டிருந்தது. ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து ஒவ்வொருவரும் இருக்கையில் அமர்ந்துவிட, அப்பெண் சில ஆப்பிள்களை எடுத்துக் குழந்தைகளிடம் கொடுத்தாள்.

“ஜூலி எங்கே? அவளைக் காணோமே..” பில் திடுக்கிட்டுக் குரலெழுப்பினான்.

“ஒருவேளை… உணவகத்துக்குப் போயிருக்கிறாளோ என்னவோ…” தொப்பிக்காரர் சொன்னதை இடைமறித்தான் பில்.

“ஆனா.. பசியில்லைன்னு என்னிடம் சொன்னாளே…”

சிறுமி பில்லைப் பார்த்தாள். “அவங்க ப்ளைமவுத்திலேயே இறங்கிட்டாங்க… அந்த உயரமான கறுப்பு ஆளோட போனாங்க.. நான் பார்த்தேன்” என்றாள்.

“நிச்சயமா அவளா இருக்காது… அவள் ரயிலில்தான் இருக்கணும். அவள் ரயிலை விட்டு இறங்கலை..” பில் உறுதியாய் சொன்னான்.

“ஆமாம்.. அவள் இறங்கிட்டா… நானும் பார்த்தேன்.. அந்த உயரமான ஆள் அவளுக்காக ப்ளாட்ஃபார்மில் காத்திருந்தான்” சிறுமியின் தாய் சொன்னாள்.

“என்னது? அந்த ஆள் அவளுக்காக காத்திருந்தானா? ஆனா.. ஆனா.. அவன் எல்லா நேரமும் செய்தித்தாள்தானே படிச்சிட்டிருந்தான்… ஒரு வார்த்தை கூட பேசலையே…”

“எல்லோருக்கும் எல்லாச் சமயங்களிலும் வார்த்தைகள் தேவைப்படுவதில்லை… தம்பி.” குழந்தைகளின் தாய் சொன்னாள்.

“ஆனால் அவள் என் மனைவி.. அவள் அப்படி செய்யக்கூடாது..” பில் உரக்கச் சொன்னான். அவனது முகம் கோபத்தால் சிவந்திருந்தது. அவன் எழுந்து நின்று, “நான் இந்த ரயிலை நிறுத்தப்போகிறேன்” என்றான். எல்லோரும் அவனைப் பார்த்தனர். குழந்தைகள் சிரித்தனர்.

“வேண்டாம் வேண்டாம்.. அப்படி செய்யாதே... வாப்பா… வந்து உட்காருப்பா.. உன் சாண்ட்விச்சை சாப்பிடு..”

“ஆனா.. எனக்குப் புரியலை… அவள் ஏன் போனாள்? நான் என்ன செய்யப்போறேன்?” பில்லின் முகம் களையிழந்து போயிருந்தது. ஒன்றிரண்டு நொடிகளுக்குப் பிறகு இருக்கையில் அமர்ந்தவன் சொன்னான்.. “நான் என்ன செய்யப்போறேன்?”

“எதுவுமில்லை…” தொப்பிக்காரர் தன் சாண்ட்விச்சை மெல்லத் தின்றுகொண்டே சொன்னார்…

”செயின்ட் ஆஸ்டலுக்குப் போய் உன் விடுமுறையைக் கழி.. உனக்கு அங்கே பொழுது நல்லபடி போகும். ஜூலியை மறந்துவிடு.. அந்த பச்சை நிறக்கண்களை.. இப்போதே…”

தொப்பிக்காரர் இரண்டாவது சாண்ட்விச்சை எடுத்து உண்ணத் தொடங்கினார்.

“பச்சைநிறக் கண்களுடைய பெண்ணொருத்தியை முன்பு நான் அறிந்திருந்தேன். அவளால் என் நேரம் மிகவும் மோசமான நேரமானது. வேண்டாம்.. நீ ஜூலியை மறந்துவிடவே விரும்பு..”

**********************************************************
(மூலம் - Jennifer Bassett எழுதிய The girl with green eyes என்னும் ஆங்கிலச் சிறுகதை)

ampalam
24-06-2013, 07:29 PM
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என்றுமே வித்தியாசமான களத்தினை அறிமுகப்படுத்தும். அதே வரிசையில் இந்தக் கதையும் மாறுபட்ட விதத்தில் இருக்கு.

பகிர்வுக்கு நன்றி

கீதம்
24-06-2013, 10:41 PM
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என்றுமே வித்தியாசமான களத்தினை அறிமுகப்படுத்தும். அதே வரிசையில் இந்தக் கதையும் மாறுபட்ட விதத்தில் இருக்கு.

பகிர்வுக்கு நன்றி

மொழிபெயர்ப்புக் கதைகளின் மூலம் அந்தந்த மொழிபேசும் மக்களுடைய வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல விவரங்களை அறியமுடியும். உண்மைதான். பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

பாரதி
27-06-2013, 06:51 PM
நல்ல மொழிபெயர்ப்பு. கதையை படித்ததும் எனக்குத் தோன்றியது - ஒரு குறும்படமாக எடுக்கப்படத் தேவையான அனைத்தும் இக்கதையில் இருக்கிறது. அருமையாக மொழியாக்கம் செய்து மன்றத்தில் படைத்தமைக்கு நன்றி.

கீதம்
27-06-2013, 11:03 PM
நல்ல மொழிபெயர்ப்பு. கதையை படித்ததும் எனக்குத் தோன்றியது - ஒரு குறும்படமாக எடுக்கப்படத் தேவையான அனைத்தும் இக்கதையில் இருக்கிறது. அருமையாக மொழியாக்கம் செய்து மன்றத்தில் படைத்தமைக்கு நன்றி.

எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி பாரதி அவர்களே.

மதி
01-07-2013, 01:06 PM
அட.. இப்போது தான் இதைப் படித்தேன்..

நேற்று நடந்தது மாதிரியே இருந்தது.. :) விமானப்பயணக் களைப்பில் ரயிலேறினால்.. அருகில் இருகுழந்தைகளின் தாய். அவர்களுக்கு சாப்பிட ரொட்டியும் சிப்சும் வைத்துக்கொண்டு.. எதிரில் மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் வாரயிறுதியை கழித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் தம்பதி.. சீட் முன்பதிவு செய்யாததால் ஒவ்வொரு இருக்கையாய் போய் உட்கார்ந்து கொண்டிருந்த காதல் ஜோடி, கன்னாபின்னாவென்று கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள்.. இப்படியாக மூன்றரை மணிநேரம் போனது.. :)

அந்த களைப்பிலேயும் ரசிக்கவே தோன்றியது.. என்ன நான் ரயிலைவிட்டு இறங்கும் போது எந்தப்பெண்ணும் என்னுடன் இறங்கவில்லை. அதற்கிப்போது தேவையுமில்லை.

நல்ல மொழிபெயர்ப்பு கீதாக்கா...!:icon_b:

கீதம்
10-07-2013, 12:11 AM
அட.. இப்போது தான் இதைப் படித்தேன்..

நேற்று நடந்தது மாதிரியே இருந்தது.. :) விமானப்பயணக் களைப்பில் ரயிலேறினால்.. அருகில் இருகுழந்தைகளின் தாய். அவர்களுக்கு சாப்பிட ரொட்டியும் சிப்சும் வைத்துக்கொண்டு.. எதிரில் மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் வாரயிறுதியை கழித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் தம்பதி.. சீட் முன்பதிவு செய்யாததால் ஒவ்வொரு இருக்கையாய் போய் உட்கார்ந்து கொண்டிருந்த காதல் ஜோடி, கன்னாபின்னாவென்று கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள்.. இப்படியாக மூன்றரை மணிநேரம் போனது.. :)

அந்த களைப்பிலேயும் ரசிக்கவே தோன்றியது..

கதை நிகழ்வுக்களத்தைக் கண்கூடாய் பார்த்து அனுபவித்திருக்கீங்க. ஆச்சர்யம்தான்.


என்ன நான் ரயிலைவிட்டு இறங்கும் போது எந்தப்பெண்ணும் என்னுடன் இறங்கவில்லை. அதற்கிப்போது தேவையுமில்லை.

ஆஹா... இப்படியொரு நினைப்பும் வந்ததா? வரலாமா இனி?


நல்ல மொழிபெயர்ப்பு கீதாக்கா...!:icon_b:

நன்றி மதி.