PDA

View Full Version : துளசியோட கதையை முடிச்சுடுங்க !



M.Jagadeesan
12-05-2013, 02:11 AM
மதுசூதனன் அலுவலகத்தில் தன் வேலையில் மூழ்கி இருந்தான்.

அப்போது ஆபீஸ் பியூன் சுப்பு அவனிடம் வந்து, " சார் ! மேனேஜர் உங்களைக் கூப்பிடறார். " என்று சொன்னான்.

" இதோ வந்துட்டேன் " என்று சொல்லிக்கொண்டே மேனேஜருடைய கேபினுக்கு மதுசூதனன் சென்றான்.

" சார் ! மே ஐ கம் இன் ? "

" வாங்க மது வாங்க ! பிளீஸ் பீ சீடெட். "

" என்ன சார் ! என்ன விஷயம் ? எதுக்குக் கூப்பிட்டீங்க ? "

" ஒரு முக்கியமான விஷயம்; அது உங்களால மட்டும்தான் முடியும். "

" என்ன மேட்டர்னு சொல்லுங்க ! " மது கேட்டான்.

" துளசியோட கதைய நீங்க முடிச்சுடனும் ! "

மதுவுக்குக் குப்பென்று வியர்த்தது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

" சார் ! நான் அவங்களை நெருங்கக் கூட முடியாது; அப்புறம் எப்படி அவங்கக் கதைய நான் முடிக்கிறது ? சார் ! என்னால முடியாது; தயவுபண்ணி வேறு யாரையாவது துணிச்சலான ஆளை நீங்க ஏற்பாடு பண்ணுங்க ! சாரி சார் ! என்னால முடியாது. "

" மது ! மத்தவங்களை விட உங்களுக்குத்தான் துளசியோட பழக்கம் அதிகம்; அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்டும் உங்களுக்கு அத்துபடி; அதனாலதான் இந்தவேலைக்கு உங்களை நான் தேர்ந்தெடுத்தேன். மத்தவங்ககிட்ட இந்த வேலைய ஒப்படைச்சா அவங்க சொதப்பிடுவாங்க ! இனிமேலும் இந்த வேலைய நான் தள்ளிப்போட முடியாது; நாலாபுறமிருந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க ! உங்கபேரு வெளிய வராம நான் பாத்துக்கிறேன்.

இந்த File -ல் எல்லா விவரமும் இருக்கு; இத எடுத்துகிட்டு போங்க; இன்னும் இரண்டு நாள்ல இந்த வேலைய நீங்க முடிக்கணும். இந்தாங்க இந்த ஐம்பதாயிரம் ரூபாயை அட்வான்சா வச்சிகுங்க ! மீதியை வேலைய முடிச்சப்புறம் தரேன் ! "

மிகுந்த மனக் கலக்கத்தோடு அந்த ரூபாயை மது வாங்கிக் கொண்டான்.

" சரிங்க சார் ! இரண்டு நாள் கழிச்சு வந்து உங்களைப் பார்க்கிறேன். "

இரண்டு நாட்கள் கழிந்தது. வேலையைக் கச்சிதமாக முடித்த மது மேனேஜரிடம் சென்று பைலைக் கொடுத்தான். பைலைப் படித்துப் பார்த்த மேனேஜர் துள்ளிக் குதித்தார்.

" வெல்டன் மது ! அபாரம் ! அருமை ! நான் நினைச்ச மாதிரியே வேலையைக் கச்சிதமா முடிச்சிட்டீங்க ! எழுத்தாளர் துளசியின் அகால மரணம், அதாவது சாலை விபத்துல அவங்க காலமானது நமக்கு ஹெவி லாஸ். அவங்களோட " ஆளவந்தார் கொலை வழக்கு " என்கிற துப்பறியும் கதை ஜனங்ககிட்ட ரொம்பவும் வரவேற்பைப் பெற்றது. ஆனா நம்மளோட துரதிஷ்டம் அந்தக் கதையோட கிளைமேக்சை எழுதிகிட்டு இருக்கும்போது துளசிக்கு இந்த மாதிரி ஒரு மரணம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. துளசி இறந்து மூணு மாசம் ஆயிடுச்சி. ஜனங்க அவங்க கதையை முடிக்கச்சொல்லிப் பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேரடியாகவும், போன் மூலமாகவும், கடிதங்கள் எழுதியும் கதையை முடிக்கச் சொல்லி என்னைக் கேட்டுகிட்டாங்க. நல்லவேளை ! கதையோட அவுட்லைனை துளசி என்னிடம் கொடுத்து வச்சிருந்தாங்க. மீதிக் கதை முடிக்க அது ரொம்பவும் உதவியா இருந்தது. இந்த பைல் மட்டும் இல்லைன்னா, கதையை முடிக்க ரொம்பவும் கஷ்டமா இருந்திருக்கும். துளசி மாதிரி ஒரு பிரபலமான எழுத்தாளரோட கதையை அவங்க விட்ட இடத்திலிருந்து எழுதறதுன்னா அது சாதாரண விஷயம் இல்லை. முதல்ல நீங்க ரொம்பவும் பயப்பட்டீங்க ! அது இயல்புதான் ஆனாலும் எனக்கு உங்கமேல ரொம்ப நம்பிக்கை இருந்தது; அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

துளசியோட கதையைக் கச்சிதமா முடிச்சிட்டீங்க ! இந்தாங்க மீதி ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக்குங்க !"

" தேங்க்ஸ் !" என்று சொல்லி அந்த ரூபாயைப் பெற்றுக் கொண்டான் மதுசூதனன்.

=============================================================================

முரளி
12-05-2013, 05:08 AM
ஜமாய்ச்சுட்டீங்க ஜெகதீசன். சூப்பர். எதிர்பார்க்காத திருப்பம். பாராட்டுக்கள்.

jpl
12-05-2013, 07:32 AM
ஆரம்பத்திலிருந்தே வேறு ஏதோ ஒன்று ஆவலை தூண்டி,படிக்க வைக்கிறது கதை...நன்று..

A Thainis
12-05-2013, 09:25 AM
வித்தியாசமான தலைப்பில் சிறுகதையில் பெரும் பரபரப்பு வச்சு கலகிட்டீங்க ஜெகதீசன் வாழ்த்துக்கள்.

ரமணி
12-05-2013, 03:08 PM
கதை சுவாரஸ்யமாக இருந்தது. இப்படித்தான் ஷெர்லக் ஹோம்ஸ் கதையை ஆ.கா.டாயில் முடித்தபோது வாசகர்கள் கூட்டமே அதை எதிர்க்கப் பின்னர் டாயில் அந்தப் பாத்திரத்தை உயிர்ப்பித்தார்.

கார்த்திக்
12-05-2013, 03:20 PM
நல்ல விறுவிறுப்பான கதை,எதிர்பாராத திருப்பத்தை கொடுத்து அசத்திட்டீங்க ஐயா!

M.Jagadeesan
13-05-2013, 01:30 AM
முரளி , தைனிஸ், செல்வன், ரமணி, மற்றும் jpl ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

கீதம்
17-05-2013, 11:39 PM
நல்ல சுவாரசியமான கதை. கதையின் ஆரம்பவரிகள் சிலவற்றிலேயே முடிவு இன்னதென யூகித்திருந்தேன். ஆனால் இடையில் மானேஜர் ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்ததைப் படிக்கும்போது என் யூகத்தில் தவறோ என்று நினைத்தேன். ஆனால் இறுதியில் என் முதல் யூகமே சரி என்று தெரிந்தபோது முறுவல் எழுந்தது. ஒரு மர்மக்கதை போல் கதையைக் கொண்டு சென்ற விதத்திலும், சரியான யூகத்தையும் இடையில் திசைதிருப்பிய திறமையும் கண்டு வியக்கிறேன். பாராட்டுகள் ஐயா.

கும்பகோணத்துப்பிள்ளை
18-05-2013, 02:09 AM
சிறுகதைக்கே உரித்தான திருப்புமுனையை சரியாகக்கையாண்டிருகிறீர்கள் பாராட்டுகள் ஜயா

நாஞ்சில் த.க.ஜெய்
20-05-2013, 03:46 AM
இதில் தோன்றும் இடர்பாடு முதலில் ஒரு துணை எழுத்தாழருக்கு கொடுக்கபடும் 50000 ௫ . ஒரு எழுத்தாழருக்கு அவ்வளவு கொடுக்கபடுகிறது என்பதில் முரண்படுகிறேன். இது கதையினை வேறு கோணத்தில் கொண்டுசெல்கிறது.மாறுபட்ட கதை.எதிர்பார முடிவு .

leomohan
06-08-2013, 01:48 PM
கையை கொடுங்க ஜகதீசன். கடைசி வரி வரைியில் மர்மத்தை தக்க வைத்ததற்கு. பாராட்டுக்கள். துளசியோட கதையை முடிச்சிட்டீங்க. பலே.

மும்பை நாதன்
23-08-2013, 04:07 PM
துளசியோட கதையை முடிச்சிட்டீங்க..
இதே மாதிரி நிறைய கதைகளை படிக்கனும்கிற ஆசையை ஆரம்பிச்சு வச்சிட்டீங்க.
சிறு கதை இலக்கணம் பற்றி விவாதிக்கும் போது பயன் படுத்த வேண்டிய கதை.
பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்