PDA

View Full Version : உனக்கு என்ன யோக்கியதை இருக்கு ?M.Jagadeesan
28-04-2013, 02:48 AM
Robert Bruce and The Spider கதையைப் பேரனுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார் இராமசாமித் தாத்தா.

" இந்தக் கதையைப் பேரனுக்குச் சொல்லித்தர உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? " - சீறினாள் சீதாப் பாட்டி.

" இந்தக் கதையைச் சொல்வதற்கு என்று தனியாக ஏதாவது யோக்கியதை வேண்டுமா என்ன ? "- இராமசாமித் தாத்தா திருப்பிக் கேட்டார்.

" ஆமாம் ! கண்டிப்பாக ஒரு யோக்கியதை வேண்டும்; அந்த யோக்கியதை உங்களுக்கு இல்லை "

" ஏன் இல்லை ? "

" இந்தக் கதையின் மூலமாகப் பேரனுக்கு என்ன நீதி சொல்ல வர்றீங்க ? ''

" வலை கட்டும் முயற்சியில் ஆறு முறை தோற்ற சிலந்தி ஏழாம் முயற்சியில் வெற்றிபெற்றது. ஆகவே விடாமுயற்சி இருந்தால் எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடையலாம் ; மாறாக இடையிலே தொய்வு இருந்தால் எடுத்த காரியம் யாவினும் தோல்விதான் என்ற நீதியைத்தான் சொல்ல வருகிறேன். '

" இத... இதத்தான் நான் எதிர்பார்த்தேன்; உங்களோட நண்பர் கந்தசாமிக்கு ஒரு லட்ச ரூபா கடன் கொடுத்தீங்க. ஹார்ட் ஆபரேஷன் செலவுக்காக வாங்கிட்டுப் போனாரு. இன்னிக்குத் தேதியில வருஷம் இரண்டாச்சு. அசலும் வரல; வட்டியும் வந்தபாடில்ல. நீங்களும் ஒப்புக்கு ஒரு தடவ கேட்டுட்டு அத்தோட விட்டுட்டீங்க! அந்த சொரண கேட்ட மனுஷனும் ரொம்ப நல்லதாப் போச்சுன்னு பேசாம இருக்காரு !"

" வாய மூடு ! அவனுக்கு என்ன கஷ்டமோ? கண்டிப்பாக் கொடுத்துடுவான்."

" அப்படி இல்லீங்க " பாக்காத வயலும் கேட்காத கடனும் பாழ் " அப்படின்னு சொல்லுவாங்க. கொடுத்த கடனை வசூல் பண்ணனும்னா விடாம கேட்டுகிட்டே இருக்கனுங்க! அப்பத்தான் கொடுப்பாங்க ; இல்லைன்னா பேசாம இருந்திடுவாங்க."

அந்த சமயத்தில் " இராமசாமி ! " என்று யாரோ வாசலில் கூப்பிட்டார்கள்.

" சீதா! அது யாருன்னு பாரு ! "

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த சீதாப் பாட்டி," அந்த மனுசந்தான் வந்திருக்காரு; உங்க பிரண்டு கந்தசாமி; மறுபடியும் கடன்கேட்க வண்டிருக்காரோ என்ன எழவோ ! உஷாரா இருங்க ! ஒரு டம்ளர் காப்பிக்குக் கேடு . " என்று சொல்லிக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

" வாப்பா ! கந்தசாமி ! என்ன இந்தப் பக்கம் ? " என்று கேட்டு நண்பனை வரவேற்றார் இராமசாமி.

" ஒன்னுமில்லையப்பா! இன்னிக்கிக் காத்தாலப் பேரனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்; அதாவது காக்கா நரிக் கதையை சொல்லிக்கிட்டு இருந்தேன்; அப்ப என் பொஞ்சாதி வந்து , இந்தக் கதையைப் பேரனுக்குச் சொல்லித்தர எனக்கு யோக்கியதை இல்லைன்னு சொன்னா.

ஏண்டி ! என் யோக்கியதைக்கு என்ன குறைச்சல்? ன்னு கேட்டேன். அதுக்கு அவ

இந்தக் கதை மூலமாப் பேரனுக்கு என்ன நீதியைச் சொல்ல வர்றீங்க ? ன்னு கேட்டாள். அதுக்கு நான் , காக்கா போல நாம் ஏமாறக்கூடாது;அதே சமயத்தில் நரியைப்போல யாரையும் ஏமாத்தக் கூடாது என்ற நீதியைத்தான் சொல்ல வர்றேன்னு சொன்னேன். உடனே அவ

" இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்க நண்பர் இராமசாமி கிட்ட ஒரு லட்ச ரூபா கடனா வாங்கிட்டு வந்து வருஷம் இரண்டு ஆவுது; நீங்க வட்டியும் கொடுக்கல அசலும் கொடுக்கல. அந்தப் பணத்தை அவரு அந்த சமயத்துல கொடுத்து உதவாம இருந்திருந்தா இன்னிக்கி நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க ! உங்க நண்பர் நல்ல மனுஷங்க! அவரை ஏமாத்த நினைக்காதீங்க ! "என்று சொன்னாள். அதான் பணத்தையும் , வட்டியையும் எடுத்துகிட்டு வந்திருக்கேன் என்று சொல்லி ஒரு மஞ்சள் பையை நீட்டினார்.

இதையெல்லாம் சமையல் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சீதாப் பாட்டி சரேலென வெளியே வந்து,
" வாங்க அண்ணா! வாங்க! இந்தாங்க ஹார்லிக்ஸ் குடிங்க " என்று சொல்லி டம்ளரை நீட்டினாள்.

==============================================================================

கீதம்
28-04-2013, 03:03 AM
கதைகளைக் கதைகளாகவேக் கேட்டுக்கொண்டிராமல் அவற்றின் படிப்பினையை வாழ்க்கையிலும் பின்பற்றத் தூண்டும் கரு. இராமசாமிக்கு 'நம் நண்பன்தானே... இன்றில்லாவிடினும் நாளை தந்துவிடுவான்' என்ற நம்பிக்கை! கந்தசாமிக்கோ, 'நம் நண்பன்தானே, இன்றே தரவேண்டுமா, நாளை தந்தால்தான் என்ன' என்ற எண்ணம். இது ஒருவகையில் அலட்சியம் என்றாலும் இந்த அலட்சிய எண்ணம் உருவாக இராமசாமியும் ஒரு காரணம்தான். இராமசாமியின் மனைவி சொல்வது போல் வாங்கியவர் மறந்தாலும் கொடுத்தவர் நினைவுபடுத்தவேண்டியது அவசியம். பார்க்காத வயலும் கேட்காத கடனும் பாழ் என்பது எவ்வளவு அனுபவபூர்வ உண்மை. நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் ஐயா.

முரளி
28-04-2013, 06:53 AM
சிறிய சிறப்பான கதை. 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' நினைவுக்கு வந்தது. அது கடன் கொடுத்தார் நெஞ்சம் போலும் இருக்கலாம்.

வலயத்திலிருந்து இரண்டு ஜோக்ஸ் கடன் வாங்கினேன். ஹி ஹி..:

1
"சங்கீத வித்வானுக்கு கடன் கொடுத்தது தப்பாப் போச்சே''

""ஏன்...என்னாச்சு?''

""திருப்பிக் கேட்டா ஒரே பஞ்சப்பாட்டு பாடுறார்''


2
நண்பர் 1 : அந்த ஊர்ல நிறைய கடன் வாங்கினேன் அதனால இந்த ஊருக்கு வந்தேன். இங்கேயும் கடன் வாங்கறேன்.
நண்பர் 2 : இப்படி கடன் வாங்கறது சரியா சொல்லு?
நண்பர் 1 : நான் கேட்கும்போதெல்லாம் தர்றாங்களே அது மட்டும் சரியா சொல்லு.

நாஞ்சில் த.க.ஜெய்
28-04-2013, 07:03 AM
கதை கூறும் படிப்பினை அருமை. அதேவேளையில் நட்பில் இதுபோன்று நம்பிக்கை வைத்து கொடுக்கும் போது கிடைக்கும் ஏமாற்றம் ஏற்படுத்தும் வலி மிகவும் கடினமான ஒன்று .ஒருமுறை கேட்டு பின்னர் மறுமுறை கேட்கும் போது ஏற்படும் விரிசல் என்றும் ஒட்டுவதில்லை ...

கார்த்திக்
28-04-2013, 07:32 AM
நல்ல கதை கொடுத்ததிற்கு நன்றி ஐயா,கொடுத்த கடனை வசூல் பண்ணனும்னா விடாம கேட்டுகிட்டே இருக்கனுங்கிறது பொது விதியாக இருந்தாலும் நட்பிற்கு இதில் விதிவிலக்கு.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு".

என்ற வள்ளுவரின் கூற்றுப்படி உதவிடும் போது,இக்கதையில் வருவது போல் சில சிக்கல்களை சந்திப்பது இயல்பே!

செல்வா
28-04-2013, 04:55 PM
"My Lost Dollar" என்ற ஒரு கதை பள்ளிப் பாடத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. அதில் ஒரு டாலரை கடன் கொடுத்துவிட்டு ஒருவர் அதை திரும்பக் கிடைக்க செய்யும் பிரயத்தனங்கள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும்.

கதை நல்லாருக்குங்க.

A Thainis
28-04-2013, 07:44 PM
ஒரு சிறப்பான கதை அது கூறிய கருத்தும் மிகவும் அழகு, நல்ல கதையை வாசித்து இங்கு பதிவு செய்த ஜெகதீசனுக்கு நன்றிகள்.

கலைவேந்தன்
29-04-2013, 05:22 AM
கதைகளிலும் கலக்கிவரும் ஜகதீசன் ஐயாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

Nivas.T
29-04-2013, 05:28 AM
அறிவுரை சொல்லும் கதை மிக மிக அருமை

வாழ்த்துகள் ஐயா

இராஜேஸ்வரன்
29-04-2013, 05:36 AM
நல்லதை சொல்லும் சிறப்பான கதை. பாராட்டுக்கள்.

aren
03-05-2013, 11:41 AM
எதற்கெடுத்தாலும் மனைவியே ஏசுபவர்கள் இந்தக் கதையைப் படித்தவுடன் பாராட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். கதை நன்றாக வந்திருக்கிறது.

இன்னும் நிறைய கொடுங்கள்.

M.Jagadeesan
03-05-2013, 12:52 PM
கீதம், முரளி, நாஞ்சில் ஜெய், செல்வன், செல்வா, தைனிஸ், கலைவேந்தன், நிவாஸ், இராஜேஸ்வரன், ஆரென் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

மும்பை நாதன்
27-08-2013, 05:37 PM
நல்ல கதை. பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்

M.Jagadeesan
26-04-2015, 04:30 PM
மும்பை நாதன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !