PDA

View Full Version : நான் தேடும் தென்றல்



A Thainis
26-04-2013, 07:35 AM
தென்றலின் சுகம் தெய்வீகம்
காற்று செய்யும் காதல் - நாளும்
பொழுதும் மனம் தேடும் மகிழ்ச்சி
கதை கதையாய் சொன்னார்கள்
கவிதையும் ஆயிரமாய் வடித்து
செவிக்குளிர பாடினார்கள் - தென்றல்
மீது என் தேகம் காதல் கொள்ள
தேடும் வேளையில் வேகம் எடுத்தது

தென்றலின் முகவரி தெற்கு என்றார்கள்
தெரு தெருவாய் அலைந்தேன் - முடிவில்
முழுதும் வியர்வையில் நனைந்தேன்

மாலை வேலை என்றார்கள்
அடை மழையிலும் குடை பிடித்து
காத்திருந்து குளிர் காய்ச்சல்தான் வந்தது

சோலை கொள்ளை என்றார்கள்
சோலையெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு
பாலையான பரிதாபம் கண்டேன்

கடலோரம் தென்றலின் நிரந்த முகவரி
அறிந்து சென்னை மெரினா வந்தேன்
சித்திரை வெயில் என்பதையும் மறந்து
வெற்றுக் காலோடு ஆசையாய்
கடல் மண்ணில் கால் பதித்தேன்
முத்து முத்தாய் கொப்பளங்கள்
பாதங்களில் எண்ணெய்பூசி மரநிழலில்
படுத்திருந்தேன் இன்ப வருடலில்
சட்டென்று மனம் மகிழ தேகம் சிலிர்த்தது
தெய்வீகம் சூழ ஆசைகள் சிறகடித்தது
வருடியவளை உணர்வுகள் உறுதிசெய்தன
வந்தது அவள்தான் காற்றின் காதலி
நான் தேடும் தென்றல் - என்னை
தேடி வந்தது தெய்வீக சுகம் தந்தது.