PDA

View Full Version : மீள்வரவுக்கு நன்றி.M.Jagadeesan
24-04-2013, 02:09 PM
வீட்டு வாசலில் நிழலாடியது.

செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நடேசன் நிமிர்ந்து பார்த்தார். எதிரே யாமினி நின்று கொண்டிருந்தாள். நடேசனுக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தார்.

ஆம்; அது யாமினிதான்.

" வாங்க ! உள்ளாற வாங்க ! " நடேசன் வரவேற்றார்.

" என்னைத் தெரியுதா உங்களுக்கு ? "

" நீங்க யாமினி தானே ? இருபது வருஷங்களுக்கு முன்பு பார்த்தது; அதான் அடையாளம் கண்டுகொள்ள கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்படி உட்காருங்க ; ஆமா ! கூட யாரு இது ? "

" எம் பொண்ணு ; +2 படிக்கிறா ! நீங்க நல்லா இருக்கிங்களா ? "

" எனக்கென்ன குறைச்சல் ? நான் நல்லாத்தான் இருக்கேன். கொஞ்சம் இருங்க; காப்பி போட்டுக் கொண்டு வரேன். "

இரண்டு டம்ளர்களில் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் நடேசன்.

" வீட்ல யாரும் இல்லையா ? "

" நான் மட்டும்தான் இருக்கேன்; ஏன் ? "

" நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா ? "

சிறிதுநேரம் நடேசன் எதுவும் பேசவில்லை.

" நான் ஏதும் தப்பாக் கேட்டுட்டேனா ? "

" நீங்க கேட்டதில் தப்பு எதுவும் இல்லை; ஆனால் காதலிக்க ஒருத்தி ; கைப்பிடிக்க மற்றொருத்தி என்று இருக்க நான் விரும்பவில்லை; அதனால்தான் கல்யாணமே பண்ணிக்காம காலத்தை ஓட்டிவிட்டேன். "

இதைக் கேட்டதும் யாமினியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. தரையைப் பார்த்தபடியே குனிந்து இருந்தாள். சற்றுநேரம் எதுவும் பேசவில்லை. அவளால் பேச முடியவில்லை.

' இப்ப எதுக்கு என்னை பாக்க வந்து இருக்கீங்க ? காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா ? "

மீண்டும் மௌனம்;மீண்டும் அழுதாள் யாமினி.

" என்னுடைய கணவன் இப்ப உயிரோடு இல்லை; நல்லவன் என்று நம்பினேன்; ஏமாந்துவிட்டேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர் ஒரு குடிகாரன் என்பது தெரிய வந்தது. குடித்துக் குடித்தே சொத்தையெல்லாம் அழித்துவிட்டார். அளவுக்கு மிஞ்சிய குடியால் குடல்வெந்து போன வருடம் இறந்துவிட்டார். இப்போது நான் தனிமரம்; வருமானத்திற்கு வழியில்லை; இவளை வைத்துக்கொண்டு நிராதரவாக நிற்கின்றேன். உங்கள் ஞாபகம் வந்தது. அதான் உங்களைப் பார்க்க வந்தேன்."

" உங்களோட அம்மா அப்பா ...? "

" எல்லாம் போய் சேர்ந்துவிட்டார்கள். "

" உங்களுக்கு சொந்தக்காரங்க ..? "

" யாரும் இல்லை. என்னை நீங்க யாமினின்னு பேர் சொல்லியே கூப்பிடலாம்; நீங்க இன்னும் காபி சாப்பிடலையே ! நான் வேண்டுமானால் உங்களுக்குக் காப்பி போட்டு தரவா ? "

" எதுவும் வேண்டாம்; இனி எந்த புதிய உறவையும் நான் விரும்பவில்லை; என் வாழ்க்கை இப்படித்தான் என்று எப்போதோ நான் முடிவு செய்துவிட்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த முடிவு. அதை மாற்ற நான் விரும்பவில்லை. கொஞ்சம் இருங்கள் ! " என்று சொல்லிவிட்டு நடேசன் அறைக்கு உள்ளே போனார்.

சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த நடேசன், " இதில் ஐந்து லட்ச ரூபாய்க்கு செக் எழுதியிருக்கேன். உங்க பேரை நீங்க எழுதிக் கொள்ளுங்கள். என்னால் முடிந்த உதவி இதுதான்; வேறு எதையாவது எதிர்பார்த்து நீங்கள் வந்திருந்தால்.. மன்னிக்கவும் என்னால் அது முடியாது. எது எப்படி இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னைப் பார்க்க வந்ததற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "

நடேசன் கொடுத்த செக்கை யாமினி பெற்றுக் கொண்டாள். அதற்குள் டெலிபோன் மணி அடிக்கவே நடேசன் உள்ளே சென்றார். ஐந்து நிமிடம் பேசிவிட்டு வெளியே வந்தவர் , ஹாலில் யாமினியும் , அவள் மகளும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த செக் மேஜை மீது அப்படியே இருந்தது.

அவசரமாக நடேசன் தெருவுக்குச் சென்றார். அங்கே யாமினியும், அவள் மகளும் சென்றுகொண்டு இருப்பதைப் பார்த்தார்.

கலைவேந்தன்
24-04-2013, 03:21 PM
நடேசன் செய்தது மாபெரும் தவறு.

சந்தர்ப்பம் அவளை பிறிதொரு முடிவெடுக்கவைத்திருக்கலாம். பின்னர் அவள் மிகவும் வருந்தி இருக்கலாம். இத்தனை காலம் எந்தக்காதலிக்காக மணம் முடிக்காமல் இருந்தாரோ அவளும் அவள் மகளும் திக்கின்றி வந்திருக்கும் போது உளுத்துப் போன வேதாந்தத்தைப் பேசி ஐந்து லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முடிவெடுத்தது தவறு.

மீண்டும் வாழ அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம்.

இனி மிச்ச கதை..?

ஒன்று யாமினி தன் மகளுக்காக கல்லுடைத்து கல் சுமந்து கூலி வேலை செய்து பிழைத்திருக்கலாம்.

அல்லது தவறான வழியில் சென்று தனது மகளுக்காக தன்னையே உருக்கிக்கொண்டிருக்கலாம்.

அல்லது வேறு வழியின்றி தாயும் மகளும் இறந்திருக்கலாம்.

எது நடந்திருந்தாலும் அது நடேசனின் பொறுப்பின்மை தான் காரணம்.

கும்பகோணத்துப்பிள்ளை
24-04-2013, 09:57 PM
நடேசன் போல் சில பேர்களுண்டு தன்னுடைய கொள்கைக்காக அடுத்தவர்களைப் புதைப்பது.. நடேசன் மேல் தவறில்லை போலத்தோன்றினாலும் உன்மையில் அவர் ஒரு குற்றவாளி தன்னைச்சுற்றி ஒரு குறுகிய வட்டம்போட்டு வாழ்பவர்.

M.Jagadeesan
25-04-2013, 01:34 AM
குற்றவாளி நடேசனே ! என்று தீர்ப்பளித்த கலைவேந்தன் மற்றும் பிள்ளை அவர்களுக்கு நன்றி.

செல்வா
26-04-2013, 06:14 PM
ம்.......... கதை நல்லாருக்குங்க.

M.Jagadeesan
27-04-2013, 01:55 AM
செல்வாவின் பாராட்டுக்கு நன்றி.

முரளி
27-04-2013, 07:16 AM
நடேசன் போல் சில பேர்களுண்டு தன்னுடைய கொள்கைக்காக அடுத்தவர்களைப் புதைப்பது.. நடேசன் மேல் தவறில்லை போலத்தோன்றினாலும் உன்மையில் அவர் ஒரு குற்றவாளி தன்னைச்சுற்றி ஒரு குறுகிய வட்டம்போட்டு வாழ்பவர்.

சரியாக சொன்னார், கும்பகோணத்துப்பிள்ளை. கதை சிறப்பாக இருந்தது ஜெகதீசன்.

M.Jagadeesan
27-04-2013, 07:51 AM
முரளியின் பாராட்டுக்கு நன்றி.

அன்புரசிகன்
29-04-2013, 07:35 AM
சில சீரியவர்களின் வாழ்க்கையை அழகாக உணர்த்தும் கதை. மது போதையில் அழியாது சுற்றத்தாரையும் வருத்தாத அந்த கதாநாயகனை எனக்கு பிடிச்சிருக்கு...." என்னுடைய கணவன் இப்ப உயிரோடு இல்லை; நல்லவன் என்று நம்பினேன்; ஏமாந்துவிட்டேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர் ஒரு குடிகாரன் என்பது தெரிய வந்தது.

நடேசன் செய்தது மாபெரும் தவறு.
எது நடந்திருந்தாலும் அது நடேசனின் பொறுப்பின்மை தான் காரணம்.

தன்னைச்சுற்றி ஒரு குறுகிய வட்டம்போட்டு வாழ்பவர்.

முதலாவது கூற்றுடன் ஒப்பிடுகையில் வந்த பதில்கள் ஒத்துப்போகவில்லையே...

அவனை குறுகிய வட்டத்தில் வாழ்பவராக பார்க்கும் நீங்கள் ஏன் அவளை சந்தர்ப்பவாதியாக பார்க்க இயலவில்லை... பெண் என்பதாலா???

aren
03-05-2013, 11:37 AM
கதையைப் படித்தவுடன் ஏதோ ஒன்று நெருடுகிறது. நடேசன் கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆதரவு எதுவும் இல்லாமல் வந்த ஒருத்தி ஒரு சில நல்ல வார்த்தைகளாவது சொல்லியிருக்கலாம். ஏதோ தவறு செய்துவிட்டார்கள் ஆனால் அதற்காக இவ்வளவு தண்டனையா என்று கேட்கத்தோன்றுகிறது.

கதை நன்றாக வந்திருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.

M.Jagadeesan
03-05-2013, 01:00 PM
அன்புரசிகன், ஆரென் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

மும்பை நாதன்
27-08-2013, 05:32 PM
எழுத்து நடை யெல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் என்ன என்று சொல்லத்தெரியவில்லை. ஏனோ கதையைப் படித்தவுடன் முழு மன நிறைவு கிடைக்க வில்லை.
ஒரு சமயத்தில் காதலித்த பெண் சூழ் நிலையால் ஆதரவுக்காக வரும் போது மனைவி என்ற உரிமையைத்தந்து ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட ஒரு தோழியாக ஏற்று ஆதரவு அளித்திருக்கலாமோ ?
மும்பை நாதன்