PDA

View Full Version : எதார்த்தம்



நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 02:49 PM
கூட்டம் நிறைந்த சென்னை கமலா தியேட்ட்ரில் இருந்து வெளியே வந்தேன் வாழ்வில் ஓர் நல்ல படம் பார்த்த நிறைவு வண்டியை பார்க் செய்திருந்த இடம் நோக்கி சென்றேன். வெளியில் ஒரு கடை தெருவில் திருப்பத்தில் வண்டியினை நிறுத்தி வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கினேன் .மீண்டும் வண்டி இருக்கும் இடம் வந்தேன் ஒரே நெரிசலாக இருந்தது ..அப்போது

கொஞ்சம் வழி விடுங்க ! வண்டி எடுக்க வேண்டும் ! என்ற குரல் கேட்டு திரும்பினேன்.


என் அருகில் அவன். பார்த்தவுடன் நினைவில் நின்றான் கணேக்ஷ்அய்யர் என் கல்லூரி தோழன் திருமணமானவன்..


கல்லூரி முடிந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு தொடர்பில் "கணேக்ஷா எப்படி இருக்கே?" திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தான்..


"டேய் ! நீயா நான் உன்னை இங்கே எதிபார்க்கவில்லை..நான் நல்லா இருக்கேன் ..நீ எப்படி இருக்கே?"..பட படவென்று பேசிகொண்டே அவள் அருகில் வண்டியினை கொண்டு வந்தான் ..


வழக்கமான கூச்ச சுபாவம் என்னில் உதிக்க என் அவளை கண்டதும் தயங்கினேன்.அவள் கையில் குழந்தை..


என்னை பற்றி அவளிடம் கூறினான்.


"இவன் என் நண்பன் ஜெய்சிவா உனக்கு தெரியுமே இவன் நம் பிரிவில் என்னருகில் இருப்பானே அவன் தான்" ..
அவள் "ஹலோ" என்றாள்.


நானும் புன்னகைத்தேன்..எங்கள் பேச்சு கல்லூரி வாழ்வினை அலசியது அவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.

இறுதியில் அவனிடம் "இது உன் குழந்தையா?"


ஆமாம்..


சாரிடா என்னால உன் கல்யாணத்துக்கு வரமுடியல..


பரவாயில்லடா..


குழந்தை அழகாய் இருக்குது ..பேர் என்ன?


அஸ்வந்தினி..


நல்ல பேர் சரிடா நான் கிளம்புறேன்..


உன் நம்பர கொடு நைட் கால் பண்ணுறேன்..


சரி குறிச்சிக்க.


நம்பரை கொடுத்தான்..


சரி வற்றேண்டா..


"வற்றேம்மா" என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்..


மனது கனத்திருந்தது. மாலை 6 மணி பணி நிமித்தம் ஒருவரை காண பெரம்ப்பூர் செல்ல வேண்டியிருந்தது, செல்லும் வழியில் அழைப்பு வந்தது.


அவன் தான் அழைத்திருந்தான்..பிறகு அழைக்கலாம் என மனம் நினைத்தது...


அவரை பார்த்துவிட்டு என் பணி நிமித்தம் செய்ய வேண்டிய வேலைகளை கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.


பிறகு டி வி யில் பிடித்தமான மெலடி பாட்டொன்று பாடியது .அதை கேட்டு கொண்டே இரவு சாப்பாட்டினை முடித்தேன் ..


தூங்க நினைக்கையில் மறுபடியும் அழைப்பு வந்தது .. என்னை பற்றி விசாரித்தான்.


நீ என்ன பண்ணுற? கல்யாணம் ஆயிட்டுச்சா ?


உனக்கு தான் தெரியுமே என் அப்பா பனங்காட்டில் பயனி இறக்குவாருங்கிறது. இப்ப இருக்கிற நிலையில வேறு என்ன பண்ணுறது வேறு வழியில்ல அதான் இருந்த சொத்த வித்து சொந்தமாக ரியல் எஸ்ஸேட் தொழில் பண்ணுறேன்..அவள் நினைவு மறக்கல கொஞ்சம் நாள் போகட்டும் என்றேன் ..


அப்போது "அண்ணா சாப்பிட வா !" என்ற குரல் கேட்ட்து "கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்றான்..
அவனிடம் கேட்டேன் "உனக்கு ஏதுடா தங்கச்சி?"


என் கூட பிறந்த தங்கச்சி இல்லடா ! என் சித்தி மக இன்னைக்கு காலையில கூட பார்த்தியே அவதான் ..

மனதில் காணாத வாணவேடிக்கை கண்ட குழந்தையாக குதியாட்டம் போட்ட்து..அதை அடக்கி வைத்தேன் ..


பின் அவனிடம் "வகுப்பில் ஒரு முறை கூட சினேகமாய் பார்த்த்தும் பேசியதும் கூட கிடையாதே"..


நான் பிறப்பதற்கு முன்பே என் சித்தி சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் என் வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் தொடர்பில்லாமல் இருந்த்து. இப்போ என் கல்யாணத்தோட தான் இந்த பிரச்சனையும் தீர்ந்தது அதோடுதான் இப்படி ஒரு தங்கை இருப்பதேதெரியும் இத்தனை நாள் நம்முடன் படித்திருந்தும் எனக்கு தெரியவில்லை..


அப்படியா?


அது எதுக்கு மக்கா ..விடு ..அப்புறம் காலேஜ் முடிஞ்ச பிறகு அவளை பார்த்தியா? அப்படி பார்த்தா சொல்லு நானும் உனக்காக பேசுறேன் இன்னிக்கு வரை அவ யாருன்னும் எங்கிட்ட சொல்லல..


சொல்லவா வேண்டாமா என்று ஒரு சிந்தனை..


இறுதியில் அவள் வேறு யாருமில்லை உன் தங்கைதான் என்றேன் ..அவ உன் தங்கச்சின்னு தெரியாமலே இத்தனை நாள் என் கூச்ச சுபாவத்தினால் அவளிடம் கூறாமல் அவளை ஒரு தலையாய் விரும்பினேன்..நீ தாண்டா எனக்கு உதவி செய்யனும்..


பதிலின்றி மௌனமாகி அணைந்தது அலைபேசி ...


சிறிது நேரம் கழித்து எஸ் எம் எஸ் வந்தது..பார்த்தேன் அவன் அனுப்பி இருந்தான்..சத்தமில்லாத வெற்றிட மனநிலையில் உணர்வுகளின் பதைப்பில் அவசரமாக படித்தேன்..


சாரிடா...


எதார்த்த உண்மை முகத்தில் அறைய கலங்கிய கண்களுடன் வானை நோக்க வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின..


நமது மன்ற கதைபோட்டியில் கலந்து கொண்ட எனது முதல் சிறுகதை தாமதம் என்றாலும் உறவுகளின் மேலான விமர்சனத்திற்காக ..

கீதம்
28-04-2013, 11:33 PM
சிறுகதைப் போட்டியின்போதே படித்திருந்தேன். ஆர்வத்துடன் பங்குபெற்றமைக்கும் நல்லதொரு கதையை வழங்கியமைக்கும் பாராட்டுகள் ஜெய்.

கணேஷ் என்னதான் நண்பனின் காதலுக்கு உதவத் தயாராய் இருந்தாலும் அது தன் தங்கை என்று வரும்போது தயக்கம் மேலிடுவது அவனது சுயநலத்தைக் காட்டுகிறதா? சாதீய உணர்வைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை. சாதீய உணர்வைப் பிரதிபலிக்கும் இரண்டு விஷயங்கள் கதையில் உள்ளதால் இந்த சந்தேகம். முதலாவது நண்பனை அறிமுகப்படுத்தும்போதே சாதிப்பெயருடன் அறிமுகப்படுத்துவதும் கதாநாயகனின் தந்தை ஒரு பனையேறி என்று குறிப்பிடப்படுவதும். இரண்டாவது அவனுடைய சித்தி சாதி மாறித் திருமணம் செய்துவிட்டதால் அவரை வருடக்கணக்காக விலக்கிவைத்திருந்த செய்தி.

கதைக்குத் தேவையில்லாமல் இடைச்செருகலாகத் தெரியும் இவைதான் கதையின் முடிவு பற்றி நம் மனத்தில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கும் பதிலாக அமைகின்றன. சிலருக்கு நட்பைவிடவும் சாதி, இன, மதங்களே முக்கியமாகிவிடுகின்றன. நீ காதலிக்கும் பெண் யார் என்று சொல், நானே சேர்த்துவைக்கிறேன் என்று சொன்னவனே அது யார் என்று தெரிந்த அடுத்த நிமிடம் தன் வாக்கில் சறுக்குவதை, இயலாமையுடன் யதார்த்தம் இதுதான் என்று சொல்லி கதையை முடித்தவிதம் அருமை.

கதைப்போட்டியில் இக்கதை தேர்வாகாமைக்கு எனக்கு சில காரணங்கள் தோன்றுகின்றன. அவற்றை இங்கு குறிப்பிடுவதன் மூலம் அடுத்தடுத்தப் படைப்புகளில் உங்களால் கவனமாக இருக்கமுடியுமென்று நினைக்கிறேன். முதலாவது, கதையை பத்திகளாகவும், உரையாடல்களை அடைப்புக்குறிகளுக்குள்ளும் கொடுத்திருந்தால் வாசிக்கையில் ஒரு தெளிவு இருக்கும். இப்போது யார் எதைச் சொல்கிறார்கள் என்பதில் தெளிவின்மை உள்ளது. வாக்கியமுடிவில் முற்றுப்புள்ளிகள் இல்லாதது ஒரு பெரிய குறை. உதாரணமாக கீழ்க்கண்ட வரிகளை எடுத்துக்கொள்வோம்.


கூட்டம் நிறைந்த சென்னை கமலா தியேட்ட்ரில் இருந்து வெளியே வந்தேன் வாழ்வில் ஓர் நல்ல படம் பார்த்த நிறைவு வண்டியை பார்க் செய்திருந்த இடம் நோக்கி சென்றேன் கொஞ்சம் வழி விடுங்க ! வண்டி எடுக்க வேண்டும் ! என்ற குரல் கேட்டு திரும்பினேன் என் அருகில் அவன். பார்த்தவுடன் நினைவில் நின்றான் கணேக்ஷ்அய்யர் என் கல்லூரி தோழன் திருமணமானவன்.. கல்லூரி முடிந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு தொடர்பில் கணேக்ஷா எப்படி இருக்கே? திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தான்.. டேய் ! நீயா நான் உன்னை இங்கே எதிபார்க்கவில்லை..நான் நல்லா இருக்கேன் ..நீ எப்படி இருக்கே?..பட படவென்று பேசிகொண்டே அவள் அருகில் வண்டியினை கொண்டு வந்தான் ..

இதை இப்படிப் பிரித்து எழுதிப்பாருங்கள்.




கூட்டம் நிறைந்த சென்னை கமலா தியேட்டரில் இருந்து வெளியே வந்தேன். வாழ்வில் ஓர் நல்ல படம் பார்த்த நிறைவு. வண்டியை பார்க் செய்திருந்த இடம் நோக்கி சென்றேன்.

“கொஞ்சம் வழி விடுங்க ! வண்டி எடுக்க வேண்டும் !” என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

என் அருகில் அவன். பார்த்தவுடன் நினைவில் நின்றான் கணேக்ஷ்அய்யர் என் கல்லூரி தோழன் திருமணமானவன்.. கல்லூரி முடிந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு தொடர்பில்.

“கணேக்ஷா எப்படி இருக்கே?” திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தான்..

“டேய் ! நீயா நான் உன்னை இங்கே எதிபார்க்கவில்லை..நான் நல்லா இருக்கேன் ..நீ எப்படி இருக்கே?”

பட படவென்று பேசிகொண்டே அவள் அருகில் வண்டியினை கொண்டு வந்தான்.



இரண்டாவது, கதாநாயகனுக்கும், நண்பனுக்குமான நட்பின் ஆழம் அதிகமாய் உணர்த்தப்படவில்லை. ஆழமான நட்பில்லாத நிலையில் நண்பனிடம் இவன் தன் காதல் பற்றிய சாதகமான முடிவை எதிர்பார்க்க முடியாது. இவனிடமும் காதல் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. அவள் நண்பனின் மனைவி என்று நினைக்கும்போது திடுக்கிடவில்லை. இயல்பாக ஏற்றுக்கொண்டான். தங்கை என்று தெரிந்தபின்தான் மீண்டும் காதல் எண்ணம் தலைதூக்குகிறது. இங்கே காதலின் அழுத்தமும் சொல்லப்படவில்லை.

இறுதியாய் ஒரு சந்தேகம்… நண்பன் தங்கையுடனும் தன் கைக்குழந்தையுடனும் சினிமாவுக்கு வருவதென்பது நம் நடைமுறை வாழ்வியலில் சட்டென்று ஏற்கவியலாத ஒன்று. இங்கே தியேட்டர் என்பதற்கு பதில் கோயில், கடை என்று வேறு ஏதாவது இடத்தைக் குறிப்பிட்டிருக்கலாம். எனக்குத் தோன்றியவற்றை சொல்லியிருக்கிறேன். என் புரிதலில் குறையிருந்து உங்கள் தரப்பில் விளக்கம் அளித்தால் ஏற்றுக்கொள்வேன்.

Nivas.T
29-04-2013, 04:08 AM
கீதம் அவர்கள் கூறியதைப்போல் கதையின் வரைவு சிறு தளர்வுகள் கொண்டிருப்பினும் கதையின் கரு, அது கூறும் கருத்தின் உண்மையின் வலியும் தெளிவு.

சாதியம் தாண்டிய நட்பு
பணத்தை கடந்த மனிதம்

இவையெல்லாம் இன்று வெறும் வார்த்தைகளாகவே வாழ்கின்றன
நானும் இவற்றை அனுபவித்தவன் என்பதால் சொல்லமுடிகிறது

முதல் கதை, சொல்லிய விதம் பிசகினாலும் சொல்லவந்த கருந்து பிசகாமல் சொல்வதும் எதார்த்தமே.....

பாராட்டுகள் ஜெய்

நாஞ்சில் த.க.ஜெய்
29-04-2013, 08:43 PM
அக்கா தங்களுடைய கருத்தினை நான் ஆமோதிக்கிறேன்..தாங்கள் கூறிய படி திருத்தங்கள் செய்துள்ளேன் கதை எழுதும் முன் முடிந்த அளவு கதையினை மேன்மையுற கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேனே தவிர இத்திருத்தங்களை காண தவறிவிட்டேன் ..நன்றி அக்கா..


இந்த கதையில் தோன்றும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் ..இக்கதை சாதி ரீதியான நட்பின் உண்மை நிலையினை கூறுவதாகவே அமைத்துள்ளேன் ..

இவர்களிடையேயான நட்பு புரிதலுடையது இதில் "என்னிடம் சொல் நான் செய்கிறேன்" என்று கூறும் ஒரு வார்த்தை அவர்களிடையேயான நட்பின் ஆழத்தினை உணர்த்தும் வகையில் இருப்பதாகவே நினைக்கிறேன் .

மற்றொன்று இவனுடைய காதலின் மீதன்பால் கொண்ட அன்பினால் திருமணம் செய்யாது காத்திருந்த காலம் அவனுடைய அவள் மீதான காதலின் ஆழத்தினை கூறுவதாக நினைத்து கதை வரிகளை அமைத்துள்ளேன் .

மூன்றாவது அவள் அவனுடைய மனைவி என்று தவறான புரிதலில் தயக்கத்தில் அவளுடன் பேசாது அவனிடம் மட்டும் பேசியதன் மூலம் தன்காதலி வேறொருவன் மனைவி என்ற வருத்தம் மனதளவில் இருப்பதாகவே நினைத்து இந்த வரிகள் அமைத்தேன் .

.இதன் மூலம் தாங்கள் கூறும் சந்தேகங்கள் கதை எழுதும் முன்னரே தோன்றியது இந்த தெளிவுரை மூலம் என் மனதில் பட்ட வரிகளை இங்கே பதித்துள்ளேன்..


இது போன்று தங்கள் மற்றும் தோழர்களின் வழிமுறை என்றும் தெளிவுற எமது படைப்புகளில் பின்னூட்டமாக இருந்தால் நானும் சொல்வேன் காதாசிரியன் என்று ..

நாஞ்சில் த.க.ஜெய்
29-04-2013, 08:49 PM
கீதம் அவர்கள் கூறியதைப்போல் கதையின் வரைவு சிறு தளர்வுகள் கொண்டிருப்பினும் கதையின் கரு, அது கூறும் கருத்தின் உண்மையின் வலியும் தெளிவு.

சாதியம் தாண்டிய நட்பு
பணத்தை கடந்த மனிதம்

இவையெல்லாம் இன்று வெறும் வார்த்தைகளாகவே வாழ்கின்றன
நானும் இவற்றை அனுபவித்தவன் என்பதால் சொல்லமுடிகிறது

முதல் கதை, சொல்லிய விதம் பிசகினாலும் சொல்லவந்த கருந்து பிசகாமல் சொல்வதும் எதார்த்தமே.....

பாராட்டுகள் ஜெய்

உண்மையான வார்த்தைகள் . இதுபோல் இல்லாவிட்டலும் வேறுவகையில் நானும் அனுபவித்துள்ளேன் ..பாராட்டுக்கு நன்றி நிவாஸ் அவர்களே..