PDA

View Full Version : சிறுகதைகளை அலசுவோம் வாருங்கள்!



ரமணி
22-04-2013, 01:17 PM
சிறுகதைகளை அலசுவோம் வாருங்கள்!

இந்தத் திரியில் நாம் படித்த பல சிறுகதைகளைக் குறிப்பாக ஆசிரியர் நோக்கில் அலச முயல்கிறோம். பலரும் பதிவுகளிலும் பின்னூட்டத்திலும் பங்குகொண்டு கதைகளில் பயிலும் உத்திகளையும் நிறை-குறைகளையும் அறிந்துகொள்வோம், வாருங்கள்.

ஏற்கனவே நான் வேறொரு இழையில் குறிப்பிட்டபடி, என் அன்னை, தந்தை, தம்பி மூவரும் (இவர்கள் இப்போது அமரர்கள்) பல சிறுகதைகள் எழுதி அவை பல ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளிவந்து, தமிழ்க் கதை வாசகர் உலகில் பரவலாக அறியப்பட்டார்கள். அன்னையார் உமா குருமூர்த்தி, குருப்ரியா மற்றும் ஜி.உமா என்ற பெயர்களிலும், தந்தையார் எச்.குருமூர்த்தி, உமாகாந்தன் என்ற பெயர்களிலும், தம்பி ஜி.எச்.எஸ்.மணியன், ஹரி, மோஹினி சாட்டர்ஜி என்ற பெயர்களிலும் சிறுகதைகள் எழுதி அவை பல ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் பிரசுரமாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தந்தையின் கதைகளில் நகைச்சுவை தூக்கலாகவும், அன்னையின் கதைகளில் குடும்பச் சூழலும் சோகமும் தூக்கலாகவும், தம்பியின் கதைகளில் இரண்டும் அளவாகவும் இருக்கும்.

இந்த இழையில் இவர்களின் சில கதைகளைக் குறிப்பாக ஆசிரியர் நோக்கில் அலசுவது என் நோக்கம். எல்லோரும் தங்கள் கருத்தைப் பின்னூட்டலாம். தவிர, வேறு ஆசிரியர்களின் சிறுகதைகளையும் இங்கு விவாதிக்கலாம்.

1. உமா குருமூர்த்தி: வாழ வைத்தவள்
http://umagurumurthy.wordpress.com/2013/04/19/வாழ-வைத்தவள்/

வரதட்சிணையும் சீர்-செனத்தி எதிர்பார்ப்புகளும் அதிகம் உலாவிய அன்றைய திருமண வாழ்விலும் இவற்றையெல்லாம் விஞ்சியோ அல்லது இதமாகத் திருப்திசெய்தோ இல்வாழ்க்கை செவ்வனே நடத்துவோர், நடத்துவிப்போர் இருந்தார்கள் என்பது இந்தக் கதையின் கரு.

கதையின் நிறைகள்:

* கதையின் ஆரம்பம் வாசகரை உடனடியாகக் கதைக்குள் ஈர்ப்பதாக இருக்கிறது.
* ஒரு மனைவி தன் கணவனின் அக்காவிடமே தன் கணவனைப் பற்றி மனம் திறப்பது வாசகருக்கு ஆச்சரியம் தருவது. இது அவளது தைரிய மனப்பான்மையையும் நம்பிக்கையும், அக்காவின் நல்ல குணத்தையும் காட்டுவதாக அமைத்தது ஒரு ’செயலூக்கம் உடைய கொக்கி’ (effective hook).
* தொடர்ந்து வரும் திருப்பங்களில் கதை இனிதாகப் பயணித்து சுபமாக முடிவது வாசகருக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆசிரியர் உணர்ந்து அதற்கேற்பக் கதையை நன்கு அமைத்திருக்கிறார்.
* கதைத் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என்பது கதை முடிவில் தெரிகிறது.

குறிப்பாக ஏதும் குறைகள் என் பார்வையில் படவில்லை.

*****

ரமணி
30-05-2013, 01:33 PM
2. உமா குருமூர்த்தி: முப்பது வருஷங்கள்
http://umagurumurthy.wordpress.com/2013/04/19/11/

முப்பது வருஷங்கள் தாம் வாழ்ந்த ஊரைப் பல வருஷங்கள் கழித்து ஒருவர், அதுவும் ஒரு தலைமை ஆசிரியர், பார்க்க வருகிறார். ஊரின் கோவிலுக்குள் நுழைந்ததுமே அவரை அடையாளம் கண்டுகொண்ட நண்பர் ஒருவரு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்து உபசரிக்கிறார். தொடர்ந்து ஊரார் பலர் அவரை சந்தித்து அவரால் தாம் பெற்ற நன்மைகள் குறித்துப் பேச, ஊர் மக்களின் ’தேவதா விலாசம்’ ஆசிரியர் நெஞ்சைத் தொடுகிறது.

மறுநாளே வயதான தம் தந்தையைப் பட்டணத்துக்குத் திரும்ப அழைத்துச் செல்ல அவர் பிள்ளைகள் இருவரும் வந்துவிட, அவர் ஒரு வாரம் இருந்து வருவதாகக் கூறி அவர்களை அனுப்புகிறார். ஒரு வாரத்தில் அவர் பிள்ளைகள் இருவரும் தம் குடும்பத்துடன் அவரை அழைத்துப் போக வர்ந்துவிடுகின்றனர்!

பெற்றோரிடமும் பிறந்த மண்ணிடமும் கொண்ட பாசம் என்றும் அழியாது நினைவுகளில் சுடர் விட்டுக்கொண்டிருக்கும் என்று விளக்கும் இனிய கதை. இயல்பான கதைப் போக்கு, நடை, பாத்திரப் படைப்பு.

*****