PDA

View Full Version : முல்லைப் பாட்டு



jpl
19-04-2013, 04:25 PM
வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியல் இனிமையை படித்து இன்புற

ஒரு சிறந்த பாட்டு முல்லைப் பாட்டு..

103 வரிகள் கொண்டது முல்லைப் பாட்டு. சிறிது சிறிதாக் நாம் பிரித்து படித்து

இன்புறலாம்..

சங்க இலக்கியப் பாடல்களில் கள்ளுண்ட குரங்காக மனம் மயங்கி கிடப்பதற்கு

காரணம் பாடல்களின் வரிகள் நம் முன் காட்சியாக விரியும்.

அவ்வாறு நான் கண்ட காட்சிகளை உங்களையும் காண அழைக்கிறேன்.

நனந் தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த் கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை


இதில் முல்லைத் திணைக்குரிய முதற் பொருளான நிலம் பொழுது
இரண்டையும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

பெரும் பொழுது கார்காலம்
சிறு பொழுது மாலை.

திருமால், அகன்ற இடம் பொருந்திய உலகததை வளைத்துச் சக்கரமும் சங்கும்
ஆகிய குறிகளாஇ யுடையனவும் திருமகளை அணைத்தனவுமான வலிய
கையை உடையவன். மாவலி மன்னன் வார்த்த நீர் தன் கையில் விழுந்த அளவில் வானில் உயர்ந்து வளர்ந்தவன். அத்திருமாலைப் போல் ஒலிக்கும்
குளிர்ந்த கடலினை நீரைக் குடித்து,வலமாய் எழுந்து மலைகளில் தங்கிப்
பின்பு உலகத்தை வளைத்துக் கொண்டு எழுந்த விரைந்து எழும் செலவையுடைய பெருமழை பெய்த பிரிந்தவர்ககுத் துன்பத்தைத் தரும்
புல்லிய மாலைக் காலம்.

நனந் தலை உலகம் - அகன்ற இடத்தை உடைய உலகம்

வளைஇ - வளைத்து

நேமி - சக்கரம்

வலம்புரிசங்கு - வலப்பக்கச் சுற்றுகளையுடைய சங்கு.

பொறித்த - சக்கு சக்கரம் பொறித்தது போன்ற குறிகளைக் கொண்ட
சிறந்த உடல் இலக்கணம்.

தடக்கை - பெரிய என்னும் பொருளது.

நீர் செல நிமிர்ந்த மாஅல் - மாவலி மன்னனிடம் மூவடி மண் கேட்க,
மாவலி இசைந்து நீர் வார்த்த போது, கையில் விழுந்த் போது,அவன்
பெருவடிவு கொண்டு எழுந்து உயர்ந்து இவ்வுலகத்து ஓரடியில் அளந்தற்காக
பெருவடிவு கொண்டான் ஆதலால் நிமிர்ந்த மால்.

வளைஇ - வளைய என்ற பொருள் கொண்டு,உலகத்தை வளைத்து அளத்தற்காக நிமிர்ந்த திருமால் போல் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாஅல் - மால் திருமால்

பாடு இமிழ் - ஒலி முழங்கும்

பனிக்கடல் - குளிர்ந்த கடல்

பருகி - குடித்து

வலன் ஏர்பு - வலப்பக்கமாக எழுந்து

கோடு கொண்டு - மலைகளை இருப்பிடமாகக் கொண்டு

கொடுஞ்செலவு - விரைந்த செலவு

எழிலி - மேகம்

பெரும்பெயல் - பெரும் மழை

சிறுபுன்மாலை - சிறு பொழுதான பொலிவற்ற மாலைப் போது.

முல்லைத் தினை விளக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php/12267-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)

jpl
22-04-2013, 05:05 PM
அருங் கடிமூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லோடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச்

முதலில் விரிச்சி கேட்டல் என்ன என்பதனைப் பார்ப்போம்.

ஒரு செயல் நன்றாக முடியுமா இல்லையா என்பதை ஐயம்
கொண்டவர்கள், மக்கள் நடமாட்டம் குறைவான இடத்தில்
ஊர்ப்பக்கத்தில் நின்று தெய்வத்தைத் தொழுது அப்பொழுது
அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கவனிப்பர்.அயலார்
நற்சொல் கூறின் தாம் நினைத்து வந்த செயல் நன்மையாக
முடியும் என்றும் அல்லாவிடின் தீதாய் முடியும் என்றும்
கொள்வர்.

மன்னர் போருக்குச் செல்லுங்கால் விரிச்சி கேட்டதாக பண்டை
நூலால் அறியலாம்.

கணவனைப் பிரிந்து தலைவி பெருவருத்தம் அடைய, அவள்
பொருட்டாக விரிச்சி கேட்டு வரச் சிற்நத் முதிய பெண்டிர் அரிய
காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் போயினர். யாழின்
ஓசையைப் போன்று ஒலிக்கும் இனமான வண்டுகள் ஆரவாரிக்கும் நெல்லுடன்
நாழியில் கொண்ட நறுமணப் பூக்களை உடைய முல்லையின் அரும்புகளில்
அப்பொழுது மலர்வனவாகிய புதிய மலர்களைத் தூவினர்.தெய்வதைக்
கையால் தொழுதனர்.நற்சொல் கேட்டு நின்றனர்.

அருங்கடி மூதூர் - மன்னன் வாழும் தலைநகர் என்பது விளங்க, அரிய
காவலையுடைய மூதூர்
பகைவர் புகுதற்கு அரிய காவல் என்று பொருள் அருங்கடி என்பதற்கு.
மூதூர் - பழமையுடைய ஊர்.

மருங்கு - பக்கம் முது பெண்டிர் ஊர்ப்புற்த்துச் சென்றது..

விரிச்சி - நற்சொல் கேட்டல் ..நன்னிமித்தம் என்பனவும் இதுவே.

யாழிசை இன வண்டு -- யாழின் ஒலி போல் பாடும் தன்மையுடைய
கூட்டமான வண்டு.

நறுவீ -- நறுமணமுடைய மலர்கள்.

அரும்பு அவிழ் அலரி - அரும்பு மலரும் மலர்கள்

தூஉய் - தூவி

முல்லைத் திணை விளக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php/12267-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)

கீதம்
23-04-2013, 01:40 AM
முல்லைப்பாட்டின் பாடல்களை விளக்கத்தோடு பகிர்வதற்கு மிகவும் நன்றி. விரிச்சி கேட்டல் என்னும் அன்றைய வாழ்வியல் நடைமுறை பற்றியும் அறியத் தந்தைமைக்கு நன்றி. பாராட்டுகள். தொடரட்டும் இவ்வினிய முயற்சி.

செல்வா
23-04-2013, 01:27 PM
நீண்ட நாட்களுக்குப் பிறகு லதா அம்மாவின் முத்திரைப் பதிவு.

மரபானப் பாடல்களை உங்கள் எளிய நடையில் விளக்கும் போது அதன் இனிமையோடு சுவைக்க முடிகிறது.

நன்றிகள் அம்மா. தொடர்ந்து பகிருங்கள்.

jpl
24-04-2013, 12:44 AM
நன்றி கீதம்,செல்வா இருவருக்கும்...கொஞ்சம் நீண்ட நாளாக பூரண ஓய்விலிருக்கின்றேன். சில பல நிபந்தனைகளோடு கணினி என்னருகில் வந்து விட்டது.(பொழுது போக்வில்லை என்பதால்.)
பழைய பதிவுகளை பார்வையிடும் பொழுது..முல்லைப் பாட்டும்,நெடுநெல்வாடையும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தேன்..

////”””அகத்திணையை நீங்கள் வரிசைப்படுத்திய அடுக்கொழுங்கிலா எமது இலக்கிய பாதை உள்ளது.?
அகம் பற்றி முதலில் பார்போம்.
அகத்திணை 7 வகைகளாம்.
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
கைக்கிளை-ஒரு தலைக் காதல்
பெருங்கிளை-பொருந்தா காமம்

இவை தானே சந்தேகம் அமரன்?
இது இலக்கியப் பாதை என்பதை விட சங்க காலத்தில் வாழ்வியல் நெறியாக இருந்திருக்கின்றது.
மண்வாகைப் பொறுத்தே மனிதர்களின் வாழ்க்கை முறை அமைந்திருக்கின்றது.
தமிழ் பரப்பு ஐவகை நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு,அதன் வாழ்க்கை முறையே இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணத்திற்கு நெடுநெல்வாடையில் மதுரையின் ஒரு நாள் நிகழ்வு அற்புதமாக படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றது.
முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்பம் தீர்ப்பதற்காக
விரிச்சிக் கேட்கச் சென்ற முதுபெண்டிரின் செயல்(கோவிலுக்குச் சென்று நற்சொல் கேட்டல்).
என் தந்தையாரின் பணி நிமித்தம் பல ஊர்களில் வசிக்கும் வாய்ப்பு கிட்டியது.அவ்வகையில் நானறிந்தது இப்பொழுதும் கூட அந்தந்த நிலப்பகுதியில் வாழும் தற்காலத்திய மாந்தர்கள் இவ்வைந்திணை அடிப்படை கோட்பாட்டிலியே வாழ்க்கையை நெறிபடுத்துக்கின்றனர்.
சங்க கால ஊர்ப் பெயரினை நாம் இன்றும் கூட பயன்படுத்துகின்றோம்.
நெடு நல் வாடையையும்,முல்லைப் பாட்டினையும் விளக்க உரையுடன் பின்னர் பார்ப்போம்.”’’’///

வாக்குறுதி இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php/12267-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)

கொஞ்சம் முயற்சி செய்யலாம் என்றே ஆரம்பித்தேன்..இடையில் வாழ்யியல் முறை மாற்றத்தால் இணையத்தில் எழுத இயலவில்லை.அதன் பின்னர் தட்டச்சு வேகம் குறைந்தால் சோம்பேறிதனமாகி விட்டது..

இபொழுது கூகுள் டாகுமெடன்ரியில் இரண்டு வரிகள், நான்கு வரிகளாக எழுதி,சேமித்து பின்னர் மன்றத்தில் பதிவிடுகிறேன்..

jpl
24-04-2013, 01:59 PM
முல்லைப்பாட்டின் பாடல்களை விளக்கத்தோடு பகிர்வதற்கு மிகவும் நன்றி. விரிச்சி கேட்டல் என்னும் அன்றைய வாழ்வியல் நடைமுறை பற்றியும் அறியத் தந்தைமைக்கு நன்றி. பாராட்டுகள். தொடரட்டும் இவ்வினிய முயற்சி.

விரிச்சி கேட்டல் என்னும் பெயர் இல்லையே தவிர அப்பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது கீதம்.
எங்களுக்கு கோவிலில் பெண் பார்க்கும் பழக்கம் உள்ளது..அங்கு இந்த மாதிரி அசிரிரீ,நல்ல சகுனம் பார்ப்போம்.

என் பையனுக்கு பெண் பார்க்கும் பொழுது பெண் மற்றும் உறவினர்கள் எல்லோரும் மாப்பிள்ளைக்காக
கோவிலில் காத்திருந்தோம்..சற்று நேரம் கழித்து வேகமாக கோவிலுக்குள் நுழைந்தான்.அப்பொழுது கோவிலில்
மங்கல இசை ஒலித்தது..பெண் வீட்டாருக்கு மிக்க மகிழ்ச்சி..சிறிது நேரத்தில் மங்கல ஒலி நின்று விட்டது..
சம்பிரதாயமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் கொஞ்சம் தள்ளி போய் நீங்கள் இருவரும் போய்
பேசுவது என்றால் பேசுங்கள் என்று நாங்கள் கூறியதும்,சில அடி நகர்ந்து எங்கள் அருகிலேயே பேச ஆரம்பித்தார்கள்.
நம்பவே முடியவில்லை.மீண்டும் மங்கல ஒலி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.மங்கல ஒலியுடனே அப்பெண்ணிற்கு
பூ வைத்து மருமகளாக்கிக் கொண்டோம்..இபொழுது என் பேரன் L.K.G போகும் சிறுவன்..
சென்னையிலுள்ள மல்லிகேஸ்வரர் திருக்கோயில் தான் அக்கோவில்.

எங்களூரில் இன்னும் இவ்வாறு நிறைய பார்ப்பார்கள்...

jpl
24-04-2013, 02:12 PM
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நன் மொழி கேட்டனம் அதனால்

சிறு தாம்புக் க்யிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று, பால்
உண்ணாமையால் அடைந்த துயரத்தால், தாய்பசு வரும்
என்று சுழல்கின்ற தன்மையைப் பார்த்து, இடையர் குடியில் பிறந்த
மகள் குளிரால் நடுங்கின்ற தனது தோளின் மீது கட்டிய கையை
உடையளாய் நின்று, கையகத்துக் கோலையுடைய இடையர் பின்னே
நின்று செலுத்துதால்,”இப்பொழுது வந்து விடுவர் நும் தாயர்” என்பளின்
நல்ல மொழியை நாங்கள் கேட்டோம்.

சிறுதாம்பு தொடுத்த -- சிறு தாம்பால் கட்டப்ட்ட கன்றைக் காலில்
கட்டுவதால் சிறுதாம்பு தொடுதல்
சிறிய தாம்புகளால் வரிசையாய்க் கட்டப்பட்ட கன்றுகள் எனவும்
பொருள் கொள்லாம்.

பசலைக் கன்று --இளங்கன்று

உறுதுயர் -- பால் உண்ணாமையால் உண்டான மிக்க துன்பம்

அலமரல் - சுழலல்

ஆய்மகள் - இடையர் மகள்நடுங்கு கவல் அசைத்த கையள் -- குளிரால் நடுங்கும் தன் தோளில்
கட்டிய கையை உடையவள்

கைய கொடுங்கோள் கோவலர் -- கையில் கோல் உடைய ஆயர்

உய்த்தர - செலுத்த

இன்னே வருவர் - இப்போதே வருவர்

நன்னர் நன் மொழி - மிகவும் நன்றாகிய மொழி.

கலைவேந்தன்
24-04-2013, 02:28 PM
நெடுநாட்களுக்குப் பிறகு இலக்கிய விருந்தோடு மன்றம் வந்தடைந்த ஜெயபுஷ்பலதா அவர்களுக்கு வரவேற்புகளுடன் இனிய இலக்கிய விருந்துக்கு மனமார்ந்த நன்றிகளும்.

முல்லைப்பாட்டு குறித்த விளக்கங்களும் பாடல் நலன்கள் பகிர்ந்தமையும் மிக அருமை. தொடருங்கள். நலம் தானே...?

jpl
25-04-2013, 01:23 PM
நன்றி கலை.நலமே..தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?

கீதம்
26-04-2013, 12:32 AM
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து

சிறு தாம்புக் க்யிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று, பால்
உண்ணாமையால் அடைந்த துயரத்தால், தாய்பசு வரும்
என்று சுழல்கின்ற தன்மையைப் பார்த்து, இடையர் குடியில் பிறந்த
மகள் குளிரால் நடுங்கின்ற தனது தோளின் மீது கட்டிய கையை
உடையளாய் சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
நடுங்கு கவல் அசைத்த கையள் கைய
கொடுங்க கோற் கோவலர் பின் நினறு உய்த்தர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
நின்று, கையகத்துக் கோலையுடைய இடையர் பின்னே
நின்று செலுத்துதால்,”இப்பொழுது வந்து விடுவர் நும் தாயர்” என்பளின்
நல்ல மொழியை நாங்கள் கேட்டோம்.

சிறுதாம்பு தொடுத்த -- சிறு தாம்பால் கட்டப்ட்ட கன்றைக் காலில்
கட்டுவதால் சிறுதாம்பு தொடுதல்
சிறிய தாம்புகளால் வரிசையாய்க் கட்டப்பட்ட கன்றுகள் எனவும்
பொருள் கொள்லாம்.

பசலைக் கன்று --இளங்கன்று

உறுதுயர் -- பால் உண்ணாமையால் உண்டான மிக்க துன்பம்

அலமரல் - சுழலல்

ஆய்மகள் - இடையர் மகள்நடுங்கு கவல் அசைத்த கையள் -- குளிரால் நடுங்கும் தன் தோளில்
கட்டிய கையை உடையவள்

கைய கொடுங்கோள் கோவலர் -- கையில் கோல் உடைய ஆயர்

உய்த்தர - செலுத்த

இன்னே வருவர் - இப்போதே வருவர்

நன்னர் நன் மொழி - மிகவும் நன்றாகிய மொழி.

இந்தப்பாடலின் விளக்கம் இன்னும் சற்றுத் தெளிவுபட இருந்தால் நன்றாகப் புரியுமென்று தோன்றுகிறது லதா. விளக்கத்திலும் பாடலே தொடர்வதால் புரிதலில் சிரமம் உள்ளது.

jpl
26-04-2013, 12:43 AM
சுட்டியமைக்கு நன்றி கீதம்...இபொழுது சரி செய்து விட்டேன்...

jpl
26-04-2013, 03:08 PM
நற்சொல்லை நாங்கள் கேட்டதாலும், தலைவன் போர்
சென்ற காலத்தில் நல்லோர் கேட்ட சொல் நல்லனவை
ஆதலால்,தலைவன் பகைவனை வென்று,திறைப்
பெற்று வருவது உறுதி தலைவி தேற்றுகின்றனர்.

”நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவ்ர் வாய்வது நீ நின்
பருவரல் எவ்வம் களை மாயோய் எனக்
காட்டவும் காட்டவும் காணாள் கலுழ் சிறந்து
பூப் போல் உண் கண் புலம்ப, முத்து உறைப்பக்”

அதனாலும், நின் தலைவன் பகைவர் மேல்
போகும்போது நல்லோர் கேட்ட சொல்லும் நல்லனவே
ஆதலாலும், பகைவர் மண்ணைக் கொண்டு பின்பு
அவரிடம் வாங்கிக் கொண்ட திறைப் பொருளை
உடையவராய் இங்ஙனம் தாம் மேற்கொண்ட
வினையை முடித்து இப்பொழுதே வருவது நம்
தலைவர்க்கு நேர்வது உறுதியே யாகும்.ஆதலால் நீ உள்ளத்
த்டுமாற்றத்தால் ஏற்பட்ட வருத்தை,மாமை நிறத்தை
உடையவளே, அகற்றுவாயாக என்று ஆற்றி
இருப்பதற்குரிய காரணமான பலவற்றைப் பல
முறையும் எடுத்துக் காட்டவும் காணாதவளாய்க்
கலங்கி மலர்போலும் மையுண்ட கண்கள் தாரையாய்ச்
சொரியாது தனித்து விழும் முத்துப் போலும்
துளியைத் துளிப்ப.

தெவ்வர் - பகைவர்

முனை கவர்ந்து - பகைவர் போரை வென்று மண்ணைக்
கவர்ந்து

திறையர் - திறைப் பொருளைப் பெற்றுக் கொண்டுவராய்

வாய்வது -- உண்மையாகும். உறுதியாகும்.

பருவரல் - மனத்துன்பத்தால் வரத்தக்க

எவ்வம் - துன்பம்

களை - போக்குவாய்

மாயோய் -- மாமை நிறைத்தை யுடையவளே.

சுலுழ் - கலக்கம்

உண்கண் - மைபூசப்பட்ட கண்

முத்து - தனித்தனி முத்துப்போன்று கண்ணீர்த் துளி.

jpl
04-05-2013, 01:38 PM
தலவியை வேதனைக்குள்ளாக்கிய தலவனைப் பற்றியும்,
பாசறை பற்றியும் இனி பார்ப்போம்.

கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டுப் புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடு முட் புரிசை ஏமுற வளைஇ
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி

காட்டாறு சூழந்த அகன்ற பெரிய காட்டில் தொலைவிலும்
மணக்கும் பிடவத்தோடே ஏனைப் பசிய தூறுகளையும் வெட்டி
அங்குள்ள பகைப்புலத்துக் காவலாக இருக்கும் வேட்டுவச்
சாதியின் சிறு வாயில்களை யுடைய அரண்களை அழித்துக்
காட்டின் கண்ணவாகிய முள்ளால் இடும் முள் வேலியாகிய
மதிலைக் காவல் பொருந்தும்படி வளைத்து அமைத்த,
நீரான் நிறைந்த கடல் போன்று அகன்ற பாசறையில்

கான்யாறு - காட்டாறு

அகன் நெடும்புறவு - அகன்ற நெடிய காடு.

சேண் நாறு - தொலைவிலும் மணம் கமலும்

பைம்புதல் - பசுமையான புதர்

எருக்கி - அழித்து

வேடுவப் புழை - வேடுவச் சாதியின் சிறு வாயில்

அருப்பம் - அரண்கள்

காட்ட - காட்டில் உள்ளனவான

இடு முள் - முன்னால் இடும்

ஏம் - காவல்

புணரி - கடல்

பாடி - பாசறை

கடல் போன்ற அமைந்த பாசறையின் அமைப்பை
விளக்குகிறது.

பகை மன்னனின் அரண்மனைக்குரிய காட்டரண்
நான்கு வகை அரண்களுள் ஒன்றான காட்டரணிடத்தில்
வஞ்சிப் போர் புரிய புக்க மன்னர் பாசறை அமைப்பது
வழக்கம்.

காட்டில் பிடவும் முதலிய புதர்களை அழித்து,வேடுவர்களின்
வாயில்களையும் அழித்து கடல் போன்று பாசறை அமைத்து,
அதற்கு முள்வேலியும் அமைத்தனர்..

yazhini
05-05-2013, 07:28 PM
எனக்கு ஐந்திணை பாடல்கள் மிகவும் பிடிக்கும்,நீங்கள் குறிப்பிட்டது போல பொருள் உணர்ந்து படிக்கும் போது அவை காட்சிகளாக நம் மனக்கண் முன் விரியும். உங்கள் செம்மை பணிக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
06-05-2013, 07:57 AM
பழந்தமிழ் பாடல்களை படிக்கும்போது இனம் புரியா இன்பம் தோன்றுகிறது. தெளிவான விளக்கங்களோடு வாசிக்கையில்....மனம் மகிழ்கிறது. நன்றிங்க மேடம்.

jpl
06-05-2013, 01:32 PM
எனக்கு ஐந்திணை பாடல்கள் மிகவும் பிடிக்கும்,நீங்கள் குறிப்பிட்டது போல பொருள் உணர்ந்து படிக்கும் போது அவை காட்சிகளாக நம் மனக்கண் முன் விரியும். உங்கள் செம்மை பணிக்கு மிக்க நன்றி.

நன்றி யாழினி


பழந்தமிழ் பாடல்களை படிக்கும்போது இனம் புரியா இன்பம் தோன்றுகிறது. தெளிவான விளக்கங்களோடு வாசிக்கையில்....மனம் மகிழ்கிறது. நன்றிங்க மேடம்.

நன்றி சிவா.ஜி

கீதம்
08-05-2013, 07:33 AM
அலுவலகப் பணியாய் வெளியூர் சென்றிருக்கும் அப்பாவைக் கேட்டு அடம்பிடித்து உண்ண மாட்டாமல் உறங்கமாட்டாமல் அழுது தேம்பும் குழந்தையிடம் அதன் தாய், 'இதோ அப்பா இப்ப வந்திடுவார் அழாதேடி தங்கமே' என்று சொல்லித் தேற்றுவது போல் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியைத் தேற்றும் தோழியின் செயலை அழகாக எடுத்தியம்புகிறது பாடல். என்னதான் தேற்றினாலும் மனம் தேறாமல் கண்ணீரை உகுக்கும் தலைவியின் நிலை பரிதாபத்துக்குரியதே... முல்லைப்பாட்டுப் பகிர்வுக்கும் எளிய விளக்கத்துக்கும் மிக்க நன்றி லதா.

jpl
08-05-2013, 01:04 PM
அலுவலகப் பணியாய் வெளியூர் சென்றிருக்கும் அப்பாவைக் கேட்டு அடம்பிடித்து உண்ண மாட்டாமல் உறங்கமாட்டாமல் அழுது தேம்பும் குழந்தையிடம் அதன் தாய், 'இதோ அப்பா இப்ப வந்திடுவார் அழாதேடி தங்கமே' என்று சொல்லித் தேற்றுவது போல் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியைத் தேற்றும் தோழியின் செயலை அழகாக எடுத்தியம்புகிறது பாடல். என்னதான் தேற்றினாலும் மனம் தேறாமல் கண்ணீரை உகுக்கும் தலைவியின் நிலை பரிதாபத்துக்குரியதே... முல்லைப்பாட்டுப் பகிர்வுக்கும் எளிய விளக்கத்துக்கும் மிக்க நன்றி லதா.

அருமையான உவமை கீதம்..என் மகன் பணி நிமித்தம் மதனபள்ளி செல்லுங்கால் பேரனின் செய்கை இதே..
அக்காலத்தில் போன் இல்லை..இப்பொழுது அவன் போனில் பேசுகிறான்..”ஐயா எப்ப ஐயா வருவ?நீ வரமாட்டிங்கிற என்று மழலை தமிழில் கொஞ்சுவான்..(ஐயா --அப்பா)என் மருமகள் ஐயா நாளைக்கு வந்து விடுவார்கள் என்று கூறி சமாதானப்படுத்துவாள்..நன்றி கீதம்..

jpl
29-05-2013, 04:25 AM
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர், கவளம் கைப்ப


தழையால் வேயப்பட்ட கூரை ஒழுங்கு அமைந்த தெருவில்,
நாற்சந்தியான முற்றம்:

அதில் காவலாய் அமைத்த மதம் பாயும் கன்னத்தையுடைய
சிறிய கண்களையுடைய யானைகள்:

அவை வளரும் தன்மையுடைய கரும்புகளுடன் வயலில்
விளைந்த நெற்கதிர்களைப் பொதியக்
கட்டிய சாலியையும் இனிய அதிமதுரத் தழையும் தின்னாமல்
அவற்றால் தம் நெற்றியைத் துடைத்துக் கூரிய கொம்புகளில்
உயர்த்தி வைத்த த்ம் கையில் கொண்டு நின்றன.

பிளவுடைய முள்ளையுடைய பரிக்கோலால் யானைப் பேச்சான
வடமொழிச் சொற்களைப் பலமுறை கூறுவர்.

அந்த யானைப் பேச்சன்றிப் பிறவற்றைக் கல்லாத இளைஞர்
உணவைத் தின்னும்படி குத்த..(குத்துவார்)

(பாடி வீட்டுள் த்ழை வேய்ந்த கூரைகள் ஒழுங்காக அமைதிருக்கும்
தெருவின் நாற்சந்தி கூடும் இடத்தில் காவலாய் யானைகள் நிறுத்தப்
பட்டுள்ளன்.

அந்த மத யானைகள் தமக்கு இடும் கரும்புடனே கதிரும்
சேரக் கட்டிய அதிமதுரத் தழையை உண்ணாமல்
அவற்றைத் துதிக்கையின் கொம்புகளின் மேல் கையை
வைத்துக் கொண்டு இருந்தன்.

பாகர் அவ்வியானைகளை வட மொழிப் பற்றிக் குத்துக் கோலால் குத்தி
உணவை உண்ணும்படி செய்வர்.)

உவலைக் கூரை - தழையால் வேய்ந்த கூரை வீடுகள்

ஒழுகிய - வரிசையாய் அமைந்த

கவலை முற்றம் - நாற்சந்தி கூடும் முன்பக்கம்

கவலை - நாற்சந்தி

காவல் நின்ற - காவலாய் நிறுத்தப்பட்ட

தேம்படு கவுள - மதம் பாய்கின்ற கன்னத்தை
யுடைய

ஓங்கு நிலைக் கரும்பு - உயர்ந்து வளரும் தன்மை
யுடைய கரும்புடன்

கதிர் மிடைந்து -- நெற்கதிர்களை நெருக்கமாகப் பொதிந்து

இன்குளகு - இனிய அதிமதுரத் தழை

நுதல் - நெற்றி

அயில் நுனை மருப்பு - கூரிய முனையுடைய கொம்பு

கொண்டென - கொண்டதாக

கவை முட் கருவி - பரிக் கோல் ; குத்துக் கோல்

கவளம் கைப்ப -- கவளததை உண்ணுமாறு குத்த

கல்லா இளைஞர் - யானைப் பேச்சன்றிப் பிறவற்றைக்
கல்லாத இளைஞர்.

கீதம்
29-05-2013, 12:44 PM
கரும்பு தின்னக்கூலியா என்று கேட்போம்... அந்த யானைகளுக்கு கரும்பும் நெல்லும் இனிய அதிமதுரத் தழையும் கூட கசக்கிறதாமே... உண்ணமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதுபோல் தும்பிக்கையைத் தூக்கி தந்தங்களின்மேல் வைத்துக்கொண்டு என்ன அட்டகாசம்! காட்சியைக் கண்முன் கொணரும் அருமையான பாடல்.. தெளிவான விளக்கம். பகிர்வுக்கு நன்றி லதா.