PDA

View Full Version : முதல் வாசகர்



கார்த்திக்
19-04-2013, 03:57 AM
அன்னை இந்திரா மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் சிவா. கவிஞர் கண்ணதாசன் எழுதிய “இயேசு காவியம்” தான் பாடத் தலைப்பு.ஆசிரியர் குறிப்பில் கவிஞர் கண்ணதாசனின் படைப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் தமிழ் ஆசிரியை வசந்தி. குறிப்பாக அவரது கவிதைகளின் சிறப்பை தெளிவாக விவரித்தார்.

வகுப்பின் முடிவில் மாணவர்களின் கவிதை ஆர்வத்தை வளர்க்க அனைவரையும் சொந்தமாக கவிதை எழுதிவருமாறு கூறினார்.

சிவாவின் முழுப்பெயர் சிவசங்கர் பாரதி.அவன் தந்தை தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருப்பவர்.சிவாவின் தாத்தா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்.தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றவர்.

சிவாவின் தாத்தா திரு.முத்துகிருஷ்ணன்,கவிதை மற்றும் சிறு கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.அவரது படைப்புகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளன.அவ்வப்போது ரூ50,ரூ100 என்று பரிசுகளையும் பெற்றுத்தந்தது அவரது கவிதைகள்.

அதனால் கவிதை எழுதி வரவேண்டும் என்று தமிழ் ஆசிரியை கூறியவுடன் சட்டென்று அவனுக்கு நினைவு வந்தது அவனுடைய தாத்தா தான்.

அன்று மாலை வீடு திரும்பியதும்,அவன் பள்ளி சீறுடையை கூட கலையாமல் தாத்தாவிடம் சென்றான்.வீட்டின் முகப்பில் “கவிதாலயம்” எனப் பெரிய எழுத்துக்ளால் எழுதியிருந்தது.

தாத்தாவிடம் பள்ளியில் நடந்ததை விவரித்து, தனக்கு கவிதை எழுத உதவுமாறு வேண்டினான்.

“கவிதை எழுதப்போகிறாயா? மிகவும் சந்தோஷம்,முதலில் நீயாகவே முயற்சி செய்து உனக்கு தெரிந்ததை வைத்து எழுதி கொண்டுவா, பிறகு நான் அதை திருத்திக் கொடுக்கிறேன்” என்றார் தாத்தா.

அவனுக்கு சிவசங்கர் பாரதி எனப் பெயர் வைத்ததே அவன் தாத்தா தான்.அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று எண்ணினான்.

மாலை ஐந்தரை மணி ஆனவுடன் டியூசனுக்கு கிளம்பி விட்டான். அங்கே சென்று அவன் பாடபுத்தகத்தை திறந்து வைத்திருந்தானே தவிர அவனது சிந்தனை முழுவதும் கவிதை எழுதுவது பற்றியே இருந்தது.

சிவா,அவனது தாத்தாவின் கவிதைகளை அவ்வப்போது படித்திருக்கிறன்.தாத்தாவின் கவிதைகள் இதழ்களில் வெளியாகி பரிசு மணியார்டரில் வரும்போது அவனுக்கு ரூ10,ரூ20 என்று கொடுப்பது வழக்கம்.

சிவாவிற்கு கவிதை எழுத முடியும் என்று நம்பிக்கை இருந்தது.பல நேரம் யோசித்து அவனது ரஃப் நோட்டில் கிறுக்கத் தொடங்கினான். டியூசன் முடியும் வேளையில் அவன் ஒரு கவிதையை எழுதியிருந்தான்.

டியூசன் முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்று தாதாவைத் தேடினான்ஆனால் தாத்தா வீட்டில் இல்லை,நண்பர் ஒருவருக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அங்கே தாத்தா விரைந்து விட்டதாக பாட்டி தெரிவித்தாள். காலையில் தாத்தா வந்துவிடுவார் என சமாதானமானான்.

ஆனால் காலையிலும் தாத்தா வராததால் ஏமாற்றமடந்தான்,தமிழ் ஆசிரியையிடம் படித்துக் காட்டும் முன் தாத்தாவின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று விரும்பினான்.கருத்தை விட தனது முதல் கவிதையை தாத்தாவிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினான் சிவா.கவிதை எழுதி வரவில்லை என தமிழ் ஆசிரியையிடம் கூறிவிடுவதென முடிவிற்கு வந்தான்.ஆனால் தன்னுடைய கவிதையை பல பேர் முன்னிலையில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.பள்ளி பேருந்து நிற்குமிடத்திற்கு வந்துவிட்டான், பேருந்து வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன.

திடீரென சிவாவின் முகம் பிரகாசமானது,சட்டென்று ஒரு யோசனை,அவன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.வீட்டை அடைந்ததும் புத்தகப்பையை கீழெ இறக்கி ரஃப் நோட்டில் இருந்த கவிதை பக்கத்தை கிளித்து தாத்தா மேஜையின் மேலிருந்த பேனா ஸ்டான்டின் கீழ் வைத்தான்.பிறகு புத்தகப்பையுடன் பேருந்து நிலையத்திற்கு ஓடினான்.அவன் அங்கு போய் சேருவதற்கும் பள்ளி பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

அன்று தமிழ் வகுப்பு மதியம் மூன்று மணிக்கு தான்,எப்படியும் அதற்குள் தாத்தா வீட்டிற்கு வந்துவிடுவார்.கட்டாயம் அவனது கவிதையை படித்துவிடுவார்.எப்படியும் சிவாவின் தாத்தா தான் தனது முதல் கவிதையின் முதல் வாசகராயிருப்பார் என நம்பினான்.

மதியம் மூன்று மணிக்கு தமிழ் வகுப்பு துவங்கியது. மாணவர்களின் கவிதைகளை ஒவ்வொருவராக படித்துக்காட்ட சொன்னார் தமிழ் ஆசிரியை,எழுதி வந்தது மூன்றே பேர் தான்,அதில் சிவாவும் ஒருவன்.மற்ற இருவரின் கவிதைகள் சிவாவின் கவிதைகளை விட நன்றாக இருப்பினும் அவர்கள் அதை சுயமாக எழுதவில்லை என அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது.பிறகு மற்ற இருவரையும் சொந்தமாக முயற்சி செய்து கவிதை எழுத வேண்டும் என அறிவுரித்து,தாமாகவே கவிதை எழுதிய சிவாவை வெகுவாக பாராட்டினார் தமிழ் ஆசிரியை.

மாலை பள்ளி முடிந்ததும்,சிவா பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.ஆசிரியையிடம் பாராட்டுக்கள் கிடைத்தும்,அவனது சிந்தனையில் தாத்தா வந்திருப்பாரா? கவிதையை படித்திருப்பாரா? என்ன சொல்லப்போகிராரோ?என்றே ஓடிக்கொண்டிருந்தது.பேருந்தில் நின்றதும் தனது புத்தகப் பையுடன் கீழே இறங்கி வீட்டிற்கு ஓடினான் சிவா,அவனுக்கு அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது.

அவனது தாத்தா வீட்டிற்கு முன்பாக சிவாவின் வரவிற்காக காத்திருந்தார்.வாசலின் முன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

தாத்தாவின் நண்பர் மாரடைப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தவுடன் தான் தாத்தா வீடு திரும்பினார்.பின்னர் அவர் குளித்து வந்தவுடன் சிவா எழுதிய கவிதை அவர் மேஜையில் இருப்பதை கவனித்தார்.கவிதை சாதாரனமாக தான் அவருக்கு தோன்றியது.அதில் பிழைகளும் இருந்தது,இருப்பினும் தன் தாத்தா தான் அவனது கவிதையை முதலில் படிக்க வேண்டும் எனக் கருதி சிவா செய்த செயல் அவர் சற்றும் எதிர்பாராதது,அவரை ஆச்சர்யத்துடன் மனதையும் நெகிழ வைத்து விட்டது.

சிவா வந்தவுடன் அவனை கட்டி அனைத்து,உச்சி முகர்ந்தார் தாத்தா.

ஒன்றும் புரியாதவனாய் “எப்ப தாத்தா கவிதையை படிச்சீங்க?”என்றான் சிவா.

“சுமார் பனிரெண்டு இருக்கும்”என்றார்.

சிவா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏனென்றால் அவன் விரும்பியது போலவே சிவாவின் முதல் வாசகர் அவன் தாத்தா தான்!



த.கார்த்திக் செல்வன்,

சேலம்.


குறிப்பு:

இது நான் எழுதிய முதல் சிறுகதை,எனக்குள் இருந்த கதை ஆர்வத்தை வளர்த்து சிறுகதை எழுத தூண்டியது நமது தமிழ் மன்றம் தான்.அதற்கு

எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களது கருத்துக்கள் எதுவேனும் தயவு செய்து பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.தவறுகள் இருப்பின்

மன்னிக்கவும்.

முரளி
19-04-2013, 04:16 AM
தெளிவான நடை. எழுத்துப் பிழை அற்ற கதை. கோர்வையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

கார்த்திக்
19-04-2013, 06:53 AM
தங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி!

ரமணி
19-04-2013, 03:26 PM
வணக்கம் கார்த்திக் செல்வன்.

சில யோசனைகள்:

ஒரு சிறுகதையில் சொல்லுவதை விடக் காட்டுவது முக்கியம். அத்துடன், நாம் எழுதும் சிறுகதையின் உள்ளடக்கம் பற்றிக் கொஞ்சம் (சில விஷயங்கள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லாவிட்டாலும் கூட) ’ரிசர்ச்’ செய்யவேண்டும். இணையத்தில் இல்லாத தகவலும் உண்டோ? அடுத்தது, சிவா எழுதிய கவிதை பற்றிக் கோடி காட்ட வேண்டும். எல்லாவற்றிலும் தலையாயது, சிறுகதையின் ஆரம்பம்.

நீங்கள் எழுதும் சிறுகதைகளைக் கீழ்வரும் பாணியில் ஆரம்பித்துப் பழகுங்கள். கதையின் மாந்தர்கள் பற்றி எழுதும் போது கூடியவரை அவர்களை உரையாடலிலும் மனவோட்டத்திலும் சித்தரிக்கப் பழகுங்கள். நான் ’இயேசு காவியம்’ பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் ஒரு அடிகூடப் படித்ததில்லை. ஆனால் நான் அதைப் பற்றி என் கதையில் பேசும் போது எனக்குத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.

முதல் வாசகன்
தி.கே.செல்வன்

"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது இயேசுவின் வார்த்தையிலே!..."

தமிழாசிரியை வசந்தியின் இனிய, உரத்த குரலில் மாணவர்கள் மகுடிக்குக் கட்டுண்ட பாம்பாய்ச் சமைந்திருந்தனர். ஆறாம் வகுப்பு மாணவர்களே ஆயினும் அவள் கண்ணதாசனின் ’இயேசு காவியம்’ காப்பியத்தின் ’மங்களம்’ பகுதியைக் குரலிட்டுப் படித்து அந்தச் செய்யுள் அடிகளின் எதுகை மோனை மற்றும் பிற உயிர் மெய்யொலிகளில் எப்படிக் கவிதையின் பொருள் உயிர்த்து எழுகிறது என்பதை விளக்கியது அவர்களுக்கு நன்றாகப் புரிந்து கவிதை இலக்கணத்தின் ஒழுங்கிலும் சிறப்பிலும் அவர்களை ஈர்த்ததை ஆசிரியை வசந்தி கண்டுகொண்டாள்.

’இதுதான் தக்க சமயம்’ என்று மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் மறுநாள் ஒவ்வொருவரையும் நாலைந்து வரிகளில் ஒரு சின்னக் கவிதை தானே முயன்று எழுதி வரவேண்டும் என்றும் அதுவே அன்றைய வீட்டுப் பாடம் என்றும் அறிவித்தாள்.

மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். வகுப்பின் பல்வேறு முகங்களில் திகிலும் வியப்பும் ஆர்வமும் ஆவலும் மெத்தனும் முகிழ்த்ததை அவள் வெளிப்படையாகக் காண முடிந்தது. சின்னக் குழந்தைகள், அகத்தின் நினைவு முகத்தில் உடனே பளிச்சிடுகிறது, பாவம்! எல்லோரையும் ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியை வசந்தி அறிவித்தாள்:

"மாணவ மணிகளே! அச்சம் வேண்டாம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் கவிதை உணர்வு இருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு சினிமாப் பாட்டுகள் கேட்டுப் பாடி மகிழ்வோமா? எல்லோரும் கொஞ்சமாவது கவிதை எழுதப் பழகுவதே இந்தப் பயிற்சியின் குறிக்கோள். சரியாகச் செய்யமுடியவில்லை யென்றால் ஏதும் தண்டனை கிடையாது. மாறாக, நாம் இதுவரை பயின்ற இலக்கணம் அமைந்து ஒரு நல்ல பொருளில் நீங்கள் எழுதிவரும் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு பால்-பென் பரிசு!"

மாணவர்களின் அச்சம் விலகி ஆர்வம் மெல்லிய கைதட்டலாக எழுந்தது. ஆனால் சிவா என்னும் சிவசங்கர் பாரதியின் மனதில் இனம்புரியாத அச்சம். அப்பாவும் தாத்தாவும் தமிழாசிரியர்களாக இருக்கும் போது, அதுவும் தாத்தாவின் கவிதைகள் அச்சில் வெளிவந்து சன்மானங்கள் பெறும் போது, தனக்கும் கவிதை எழுதுவது கைவரும் என்று அவனுக்குப் பட்டது. இதுவரை முயலாவிட்டால் என்ன? வகுப்பில் யாருமே முயன்றதில்லையே! தாத்தா வழிகாட்ட ஒரு கவிதை இன்று இரவுக்குள் எழுதிவிட முடியாதா என்ன? அந்தப் பரிசுகளில் ஒன்று தனக்கும் கிடைக்காதா என்ன?...

*****

கார்த்திக்
19-04-2013, 03:44 PM
தங்களது யோசனைகளுக்கு மிக்க நன்றி! இனி எழுதும் கதைகளுக்கு தங்களது ஆலோசனைகளை மனதில் வைத்துக்கொண்டு எழுத முயல்கிறேன்.

Nirmal Selvan
20-04-2013, 02:37 PM
Hai bro,
I really impressed with ur story:):0 and seems to be an experienced author. the climax twist with our Grandpa was also too good and pretty ending for the story. My friends too liked ur novel and conveyed their gratitude and compliments.I know u r a talent person and its just a beginning 4u and nxt story should break this success. And finally i wish u 2 continue ur way 2wards the novel & one day u will be an eminent novelist in tamil history.

கீதம்
21-04-2013, 12:47 AM
Hai bro,
I really impressed with ur story:):0 and seems to be an experienced author. the climax twist with our Grandpa was also too good and pretty ending for the story. My friends too liked ur novel and conveyed their gratitude and compliments.I know u r a talent person and its just a beginning 4u and nxt story should break this success. And finally i wish u 2 continue ur way 2wards the novel & one day u will be an eminent novelist in tamil history.

நண்பரே, தமிழ்மன்றத்தில் இணைந்ததற்கும் முதல் பதிவாக நம் மன்ற உறவின் கதைமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாகக் கருத்தினைப் பகிர்ந்தமைக்கும் நன்றி. நம் தமிழ்மன்றத்தின் சிறப்பே தமிழில் உரையாடுவதும் எழுதுவதுமாகும். மன்றவிதிகளைப் படித்து மனத்தில் பதிந்து பின் பதிவுகளைப் பதியுங்கள். விரைவில் தமிழ்த் தட்டச்சு பயின்று தமிழிலேயே கருத்துக்களைப் பதிய வாழ்த்துக்கள்.

கீதம்
21-04-2013, 01:06 AM
கதைமுயற்சியில் முதல் நடை எடுத்துவைத்திருக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் செல்வன். தெளிவான நடையில் இனிய தமிழில் எழுதப்பட்ட கதையும் கருவும் மனம் தொட்டன.

தாங்களும் தற்போது அந்த ஆறாம் வகுப்புச் சிறுவனின் மனநிலையில்தானே இருப்பீர்கள்! எத்தனைப் பாராட்டுகள் வந்தாலும் நம் மனத்துக்கு நெருக்கமானவர்களின் பாராட்டு அது ஒற்றைச் சொல்லாயிருந்தபோதிலும் அதற்காக ஏங்குவதுதான் மனித இயல்பு. அதை அழகாக வெளிப்படுத்திய கதை.

சிவாவின் அப்பாவும் ஒரு தமிழாசிரியராய் இருந்தும் சிவாவின் மனம் தாத்தாவின் கருத்தையே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. காரணம் கவிதைகள் எழுதுவதில் அவரே அவனுக்கு ஒரு முன்னோடியாய் இருக்கிறார். அவரைப் போலவே தன் படைப்புகளும் பத்திரிகை உலகில் நற்பெயருடன் வலம்வர வேண்டுமென்று விரும்புகிறான். கவிதை எழுதுவதில் தன்மேல் நம்பிக்கை இருந்தாலும் அது தன் தாத்தாவின் வாயால் அங்கீகரிக்கப்படும்போதுதான் முழுமை பெறுமென்று எண்ணுகிறான். குறைந்தபட்சம் அவரே தன் முதல் வாசகனாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறான். அவன் விருப்பம் ஈடேறியதில் அவனோடு சேர்ந்து நாங்களும் மகிழ்கிறோம்.

நல்ல தெளிவான நடையில் இடையூறாய் உள்ள ஒன்றிரண்டு (சீருடை, புத்தகத்தைக் கிழித்து... போன்ற) எழுத்துப்பிழைகளைக் களைந்தால் கதை இன்னும் சிறக்கும். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள். சிறுகதை பற்றிய ரமணி ஐயாவின் கருத்துக்களையும் மனத்தில் கொள்ளுங்கள். சிறுகதை எழுதவிரும்பும் நம்மைப் போன்ற உறவுகளுக்கு மன்றம் அளித்த மாபெரும் பரிசு அவர். அவரது வழிகாட்டலில் நாம் நம் இலக்கை அடைய முயல்வோம். இனிய வாழ்த்துக்கள்.

Bright Prakasam R
21-04-2013, 03:17 AM
சகோதரரே வணக்கம். நீங்கள் இந்த சிறுகதையை சொல்லியவிதம் மிகவும் பிடித்திருந்தது. சுருங்கச்சொல்லி மிகத்தெளிவாக காட்சிகளை விளக்கி உள்ளீர்கள். கதாபாத்திரங்களின் பெயர்கள் மிகச்சரியான தேர்வு. கதையில் பிறமொழிச்சொற்களின் தாக்கத்தை தவிர்த்து உங்கள் பயணத்தைத் தொடருங்கள் .......... உங்கள் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கார்த்திக்
21-04-2013, 04:34 AM
நன்றி தம்பி! இது நம் தாத்தாவின் நினைவாக எழுதியது தான்.இச்சிறுகதையை அவருக்கே அர்பணிக்கிறேன்.

கார்த்திக்
21-04-2013, 04:42 AM
தங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றி! எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்.

கார்த்திக்
21-04-2013, 04:50 AM
sagotharare vanakkam, neengal intha sirukathai solliya vannam migavum pidithirunthadhu, surungacholli migathelivaga kaatchigalai vilakki ullirgal. kadhaippathirangalin peyargal migachariyana thervu, kadhaiul piramozhichorkkalin thaakkathai thavirthu ungal payanathai thodarungal.......... ungal vettriku ennoda manamardha vaalthukkal.

நன்றி சகோதரரே! பிற மொழிச்சொற்களை முடிந்த வரை தவிர்க முயற்சிக்கிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 01:22 PM
கதையின் கரு மாறுபட்டதோர் துவக்கம் .திரு ரமணி அவர்கள் கூறுவது போல் தொகுத்தால் சிறுகதையும் முழுமைபெறும்.அதேநேரம் நமது தனித்தன்மையினை விட்டுவிடாமல் அதையும் ஒரு பாதையாக பயன்படுத்தலாம் ...தொடரட்டும் படைபார்வம்..

கார்த்திக்
22-04-2013, 02:51 PM
கதையின் கரு மாறுபட்டதோர் துவக்கம் .திரு ரமணி அவர்கள் கூறுவது போல் தொகுத்தால் சிறுகதையும் முழுமைபெறும்.அதேநேரம் நமது தனித்தன்மையினை விட்டுவிடாமல் அதையும் ஒரு பாதையாக பயன்படுத்தலாம் ...தொடரட்டும் படைபார்வம்..

தங்களது யோசனைகளுக்கு மிக்க நன்றி!

மும்பை நாதன்
01-09-2013, 03:45 PM
சிவாவின் மனத்தின் எண்ண ஓட்டங்களோடு படிப்பவர்களின் மனத்தையும் அழைத்துச்செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

முதல் கதை என்ற அளவில் மிகச்சிறப்பாக வந்திருப்பதாகவே உறுதியாகச் சொல்லலாம்.

பின்னூட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் நல்ல ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு மென்மேலும் நல்ல படைப்புக்களை தருவதற்கு வாழ்த்துக்கள்.

மும்பை நாதன்

மும்பை நாதன்
01-09-2013, 03:51 PM
"சில யோசனைகள்:

ஒரு சிறுகதையில் சொல்லுவதை விடக் காட்டுவது முக்கியம். அத்துடன், நாம் எழுதும் சிறுகதையின் உள்ளடக்கம் பற்றிக் கொஞ்சம் (சில விஷயங்கள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லாவிட்டாலும் கூட) ’ரிசர்ச்’ செய்யவேண்டும். "

மிக அருமையாக ஆலோசனைகளை தந்து இருக்கிறீர்கள், ரமணி.

உண்மையில் இந்த மன்றத்திற்கு உன்களது பங்களிப்பு அற்புதமாக இருக்கிறது.

போகிற போக்கில் எனக்கே வாசகன் என்ற நிலையை தாண்டி சிறுகதையை படைக்கும் நிலைக்கு முன்னேற வேண்டும் என்று தோன்றுகிறது.

உங்களது பங்களிப்புக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

மும்பை நாதன்

கார்த்திக்
02-09-2013, 11:53 AM
சிவாவின் மனத்தின் எண்ண ஓட்டங்களோடு படிப்பவர்களின் மனத்தையும் அழைத்துச்செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

முதல் கதை என்ற அளவில் மிகச்சிறப்பாக வந்திருப்பதாகவே உறுதியாகச் சொல்லலாம்.

பின்னூட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் நல்ல ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு மென்மேலும் நல்ல படைப்புக்களை தருவதற்கு வாழ்த்துக்கள்.

மும்பை நாதன்

தங்களது கருத்தினை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

சிவா.ஜி
02-09-2013, 03:00 PM
தங்கள் முதல் கதைக்கு வாழ்த்துக்கள் கார்த்திக். தமிழைக் கோர்வையாய் எழுத வருகிறது...இனி சம்பவக்கோர்ப்பு, உரையாடல் நேர்த்தி மற்றும் ஆரம்ப வரிகளில் கவனம்...முடிவில் திருப்பம் அல்லது அழுத்தம் அனைத்தும் எழுத எழுத தானாய் பழகிவிடும். ரமணி ஐயாவின் ஆலோசனைகள் எழுதும் ஊக்கமுள்ள ஒவ்வொருவருக்கும் மிக்க பயண் தரும்.

வாழ்த்துக்கள்.