PDA

View Full Version : வெறுமையின் சில துளிகள்



கீதம்
19-04-2013, 02:08 AM
சாத்தியக்கூறுகள் ஏதுமற்று
சட்டென்று வெளியேகிய சமரசங்களின் சாடலால்
திகைப்புற்றுக் கிடக்கிறது மனம்.


ஆடல் முடிந்த அரங்கு போல...
அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
பறவை பிரிந்த கூடு போல...
திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!


சித்திரை மாத வெயிலது உச்சிப்பொழுதுகளில்
வேட்கை மிகுதியோடு தன் வறண்ட நாவை
புழுதி பறக்கும் தெருக்களில் துழாவித் துழாவி
சொச்சமிருக்கும் ஈரத்தையுறிஞ்சியும்
தன் தாகந்தணியாது திரிவதைப்போல்
நா நீட்டியபடியே அலைகிறது வெறுமை.


இடி கொணரும் கோடைமழையென
எதிர்பாராது அணைத்தூறும் சில
அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
மெல்லக் கிளைக்கலாம்
வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.


அல்லது வெறுமனே திரிந்திருக்கலாம்
வெட்டவெளியில் சில சுவாசத்துளிகள்.


(சற்றே மெருகேற்றப்பட்ட ஒரு பழைய கவிச்சமர்க்கவிதை)

சுகந்தப்ரீதன்
19-04-2013, 06:09 PM
வெட்கை பொழுதுகளில்
வீசிய புழுதிகாற்றில்
ஊசலாடிய சுவாசக்காற்று
உயிர்பெற்று ஊஞ்சலாடுகிறது
எங்கிருந்தோ வீசிய தென்றல் காற்றில்..!!:)

கவிதையின் இறுதி இருவரிகள் வெறுமையின் வெம்மையை செழுமையுடன் செப்பும் வரிகள்..!! வாழ்த்துக்கள் கீதாக்கா..!!:icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
20-04-2013, 01:31 PM
தனிமை என்னும் நியதி!
இனிமை கொல்லும் வியாதி!
'சிறிது மாற்றினால்'
இனிமை துளிர்விடும் வேர்த்துளி!

பாராட்டுகள் கீதம் அவர்களே!

கீதம்
23-04-2013, 01:45 AM
வெட்கை பொழுதுகளில்
வீசிய புழுதிகாற்றில்
ஊசலாடிய சுவாசக்காற்று
உயிர்பெற்று ஊஞ்சலாடுகிறது
எங்கிருந்தோ வீசிய தென்றல் காற்றில்..!!:)

கவிதையின் இறுதி இருவரிகள் வெறுமையின் வெம்மையை செழுமையுடன் செப்பும் வரிகள்..!! வாழ்த்துக்கள் கீதாக்கா..!!:icon_b:

வெறுமையின் வெம்மையிலும் செழுமை காணும் இனியப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபி.


தனிமை என்னும் நியதி!
இனிமை கொல்லும் வியாதி!
'சிறிது மாற்றினால்'
இனிமை துளிர்விடும் வேர்த்துளி!

பாராட்டுகள் கீதம் அவர்களே!

ஆற்றுப்படுத்தும் அருமையானப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கும்பகோணத்துப்பிள்ளை.

ஜானகி
23-04-2013, 10:44 AM
வெறுமையெனும் பாலைவனத்துக் கற்றாழையில் பூத்த பூவிதுவோ....?

செல்வா
23-04-2013, 01:20 PM
வெறுமையிலிருந்து வரும் அனைத்துமே அழகுதான்
வெறுமையிலிருந்து வந்த இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
கீதமக்காவின் அருமையான இந்தக் கவிதை வரை :)

நிற்க

திருவிழா முடிந்த தெரு

ஆடல் முடிந்த அரங்கு

அறுப்பு முடிந்த வயல்

அனைத்தும் உற்றுப்பார்த்தால் அள்ளித்தரும் கதைகள் ஆயிரம்
உணர்வுகள் ஆயிரம்.

அவை வெறுமையல்ல.

பார்ப்பவர் கண்களில் தான் வெறுமை. அறுப்பு முடிந்த வயலில் பயிரின் வேரில் காய்ந்திருக்கும் உயிர் சிறுமழையில் கிளைத்து வெளிவருவது போல்....


இடி கொணரும் கோடைமழையென
எதிர்பாராது அணைத்தூறும் சில
அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
மெல்லக் கிளைக்கலாம்
வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.

அருமையான உதாரணம்.

ரொம்ப நல்லாருக்கு அக்கா... வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
24-04-2013, 06:15 AM
செல்வா சொன்னதைப்போல அறுப்பு முடிந்த வயல், ஆடல் முடிந்த அரங்கு, திருவிழா முடிந்த தெரு.....இவையனைத்துமே வெறுமையல்ல.....வெறுமையான ஒரு தோற்றம். ஆனாலும் அந்த நேர அந்த வெறுமை மனதை என்னவோ செய்யும்.

மிக அழகான உவமைகளோடு வெறுமையை அருமையாய் சொல்லும் கவிதை....மெல்லக் கிளைக்கலாம் வாழ்வின் சுவாரசியத் துளிகளென்று உற்சாகமூட்டி முடிகிறது.

மனதைத் தொட்டக் கவிதைக்கு அன்பான வாழ்த்துக்கள்ம்மா.

jpl
25-04-2013, 04:14 PM
படிக்கும் பொழுது பட்டெனத் தோன்றும் வெறுமை
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
ஆளரவமற்ற தனிமை
இவற்றை உணர வைத்த சுவாரசியத் துளிர்கள்
இக் கவிதை...

உவமை,உவமேயங்களும்,
ரசிக்கும் போது வெறுமையும்,தனிமையும்
சுகமுள்ளதாகிறது..

A Thainis
26-04-2013, 07:54 AM
வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
மெல்லக் கிளைக்கலாம்
வாழ்வின் சுவாரசியத் துளிர்கள் என்ற வரிகளில்
வெறுமையிலும் நம்பிக்கை உண்டு என்ற உண்மை
மிக சிறப்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெறுமையாய் கவிதை தொடங்கினாலும்
நிறைவாய் தொடர்கிறது கீதம் வாழ்த்துக்கள்.