PDA

View Full Version : குறுந்தொகை பாடல்-1



jpl
17-04-2013, 03:05 PM
சங்க காலப்பாடல் என்றாலே பயந்து ஓடிவிடுகிறோம்.நமக்கும் அதற்கும் காததூரம் என்று..
அக்கால வாழ்வியலின் பதிவு.அக்கால முறைபடி ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள்.
நாம் அவற்றை இலக்கிய வடிவில் பார்க்க பயிற்றுவிக்கப்பட்டு விட்டோம்.
அழிந்த பாடல்கள் போக நமக்கு கிடைத்தவை அனைத்தும் பொக்கிஷங்கள்.
இதோ அவற்றிலிருந்து ஒரு பாடல்..

குறுந்தொகைப் பாடல் ஒன்று

தலைவியின் உணர்வுகள்..(தலைவி என்றால் இபொழுது கதாநாயகி எனலாம்)


பைங் காற் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை!
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே

-ஒரம் போகியார்-

துறை; தலைமகள் பொழுது கண்டு அழிந்தது.

பொருள்
பசிய கால்களையுடைய கொக்கினது புல்லிய முதுகினைப் போன்று
ஆழமான நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன.
இபோழுது மாலைக் காலமும் வந்தது.அக்காலம் வாழ்வதாக!
இங்ஙனம் வந்தது மாலை மட்டுமன்று அதன் பின்வரும் யாமத்தையும் உடையது;
இனி யான் என் செய்வேன்.?

கருத்து
மாலைக் காலம் வந்தனால் துன்புற்ற தலைவி “இம்மாலையோடு எம் துயர் ஒழிந்திலது
இதன் பின் வருவது கங்குல்,அதுவும் என் துயரை மிகுவிப்பதாகும்” என வருந்திக் கூறியது.


நெய்தல் திணைக் குறித்தான இலக்கணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php/12267-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page2)


இதில் வரும் குறிப்புகளைக் கொண்டே திணை விளக்கப்பட்டது.

இப்பாடலில் ஆம்பல் பூக்கள் நிரம்பிய நீர்பரப்பினை கொக்கினது முதுகு
என்றிருப்பது ஒரம் போகியாகியாரின் கற்பனை வளம் படித்து இன்புறதக்கது.

கீதம்
17-04-2013, 11:21 PM
சங்க இலக்கியங்களில் காணப்படும் உவமைகள் யாவும் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. கூம்பியிருக்கும் வெண்ணிற ஆம்பலுக்கு கொக்கின் உடலை உவமையாய்க் காட்டி கண்முன் விரித்த அழகு வியக்கவைக்கிறது. காதல் பிரிவையும் துயரையும் உணர்த்தும் பாடலை விளக்கத்தோடு பகிர்ந்தமைக்கு நன்றி jpl.

( தமிழ்நாட்டில் வேனக்காலமாம்... தமிழ்மன்றத்தில் எப்போது? :))

jpl
18-04-2013, 04:32 AM
நன்றி கீதம்...

சிவா.ஜி
18-04-2013, 05:46 AM
வாங்க மேடம். ரொம்ப நாளைக்குப் பிறகு உங்கள் தமிழை இம் மன்றத்தில் சுவைத்தது மிக்க மகிழ்ச்சி. பொருள் பிடிபடாததாலேயே....போற்றக்கூடிய சங்கப் பாடல்களெல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. என்னவென்று அறியாதவரை...அயர்ச்சி...இன்னதென தெளியும் போது உள்ளமெல்லாம் மலர்ச்சி. சங்கத் தமிழ் பாடல்களின் சிறப்பு இது. இன்னும் சுவைக்கத் தாருங்கள் மேடம்.

பகிர்வுக்கும் பங்களிப்பிற்கும் மிக்க நன்றி.

jpl
19-04-2013, 03:00 AM
நன்றி சிவா.ஜி