PDA

View Full Version : அன்றொரு நாள் அதே நிலவில் - 1



இராஜிசங்கர்
10-04-2013, 06:54 PM
சுற்றியிருந்த மேகப் போர்வையை மெல்ல விலக்கி எட்டிப் பார்த்து நிலா. சூரியன் கிளம்பிக் கொண்டிருந்தான். பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, பணியைத் தொடர வந்தது நிலா. அதற்குத் தெரியும் இன்று அவர்கள் வாழ்வின் முக்கிய நாள் என்று.

***
'காற்றின் வழி தூது. உங்கள் கானக்குயில் 90.4கோடு. இன்றைய 'இளையதேசம்' நிகழ்ச்சியில் கருத்துரைத்த அன்பு உள்ளங்களுக்கும் கேட்டுச் சுவைத்த நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் சந்திக்கலாம் நாளை மாலை 5 மணிக்கு. சுகந்த வணக்கங்களுடன் உங்கள் சுதர்சன்.நன்றி நேயர்களே!'

'சுதர்..ஒன் அவர் வெயிட் பண்றயா? புரோக்ராம் முடிச்சுட்டு நானும் வந்துடறேன்.'

'சாரிடா மச்சி..ரூம்க்குப் போகல. மெரினா பீச் போறேன்'

'பீச்சுக்கா? என்னடா..உனக்கும் சுண்டல் சாப்பிட ஆசை வந்துருச்சா?'

'ஆமாடா..ஆசை தான்..அருணாவுடன் சாப்பிட ஆசை'

'கேரி ஆன் டா..ஆல் தி பெஸ்ட்'

'பை மச்சி'

அதிசயமாகத் தான் இருந்தது, அன்று பேருந்தில் இரண்டு காலும் வைத்து நிற்க இடம் கிடைத்தது. இதே போலொரு பேருந்துப் பயணத்தில் தான் அருணாவை முதன்முதலில் பார்த்தான். 6 மாதங்கள் பின்னோக்கிச் சென்றது அவன் நினைவுகள்.

4 மணியாகியும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த முன்மாலை நேரம் அது. தீபாவளி சிறப்புப் பேட்டிக்காக அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரைச் சந்தித்துத் திரும்பிக் கொண்டிருந்தான். அரை மணி நேரப் பேட்டிக்கு ஆயிரம் முறை அலைந்தாயிற்று. கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும். அந்த தெய்வம் வண்டி பஞ்சரையும் சேர்த்துக் கொடுத்தது. பேச்சுக் கலை, குரல் வளம், அறிவுத் திறன் இருந்தும் என்ன பிரயோஜனம்? நம் சுதர்சன் சர்க்கஸும் கொஞ்சம் கற்றிருக்கலாம். பேருந்தில் ஏறுவதற்குள் பெரிய பாடாய் அல்லவா இருக்கிறது? ஒரு வழியாக கூட்டம் குறைந்த பேருந்தில் ஏறி, மிச்சமிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். பக்கத்தில் பள்ளிக்கூடச் சிறுவன்.

அடுத்த நிறுத்தத்தில் கைப்பையுடன் நீல நிறச் சுடிதார் சகிதம் அவள் ஏறினாள். அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. சுதர்சனருகில் வந்து லாவகமாகக் கம்பியைப் பிடித்து நின்று கொண்டாள். துப்பட்டா காற்றின் வேகத்திற்கு பறந்து அவன் முகத்தில் மோதியது.

'சாரி..சாரி' - கெஞ்சலுடன் துப்பட்டாவைப் பிடித்து சொருகிக் கொண்டாள்.

டிக்கெட்டுக்குப் பணம் எடுக்க கைப்பையைத் திறக்கும் போதும் துப்பட்டா பிடி நழுவி அவன் முகத்தை வருடியது.

மீண்டும் சாரி.

'ப்ளீஸ்..உக்காருங்க மேடம் இந்த சீட்ல'

'பரவாயில்ல சார்'

'கஷ்டப்படுறேங்களே! நான் நின்னுக்கறேன்! நீங்க உக்காருங்க!'

'பரவாயில்ல.தேங்க்யூ!'

'பாவம் பொம்பளைப் பிள்ள நீங்க!'

'சோ வாட்?'

'ரொம்ப நேரம் நிக்க கஷ்டமாயிருக்கும்ல?'

'சோ, நீங்க ஒரு இளக்காரத்துல தான் உக்காரச் சொல்றேங்கன்னு எடுத்துக்கலாமா?'

'இதுக்குப் பேரு இளக்காரம் இல்லைங்க. கருணை'

'அது ஏன் பெண்களைப் பார்த்தா மட்டும் வருது?'

'அன்பு தான்'

'இதுக்குப் பேரு அடக்குமுறை மிஸ்டர்........'

'சுதர்சன்'

'உங்களை விட எங்களைத் தாழ்வாக நினைப்பதால் வரும் ஆதிக்கம்ன்னு சொல்லலமா? உங்களை விட உடல் வலுவில் நாங்கள் சில விஷயங்களில் குறைவானவராக இருக்கலாம். ஆனால் இப்படி எங்களால் சொந்தக் காலில் நிற்கக் கூட முடியாது என்று எண்ண வேண்டாம் மிஸ்டர்.சுதர்சன்'

'சின்னச் சலுகை காட்டியது தப்பா?'

'ஆம் தப்புத் தான். சலுகைகள் எங்கு அறிமுகமாகிறதோ அங்கு தான் அடக்கு முறையும் உன்னை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணமும் சலுகை தருபவர்களிடம் வருகிறது என்பது என் கருத்து'

'...'

என்ன மாதிரிப் பெண் இவள்? இதன் பெயர் தன்னம்பிக்கையா? திமிரா? ID கார்ட் IT நிறுவனத்தில் பணி புரிகிறாள் என்று சொல்கிறது. சாரியோ, நன்றியோ, எதிர்ப்போ கண்ணைப் பார்த்து பேசும் வலிமை. முகம் நிறைக்கும் அமைதி. பூவா புயலா என யோசிக்க வைக்கும் இதழ்கள். என்ன மாதிரிப் பெண் இவள்? சண்டைக்காரியா? தெளிவான சிந்தனைக்காரியா?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் இருக்கைக்கு வலப்புற இருக்கையில் அவளுக்கு இடம் கிடைத்தது.

எது எப்படியாயினும் மீண்டும் சென்று பேச வேண்டும் எனத் தோன்ற வைக்கும் கேரக்டர்.

'மேடத்துக்கு குத்துச் சண்டை தெரியுமா?'

சின்னச் சிரிப்புடன் இயல்பாக அவன் கேட்டது சூழலை லேசாக்கியிருந்தது.

'எக்சேக்டா தெரியாது. பிரச்சனையென்றால் தற்காத்துக் கொள்ளத் தெரியும்.' - 'ஏன் கேட்கிறாய்' என்பது போலப் புருவச் சுளிப்பு.

'இல்லை. மேரி கோம் சிஸ்டர் உங்க பேர் 'யூரி கோமா' என்று கேட்க நினைத்தேன்'

'ஹ..ஹா..எவ்வளவு நாசுக்காகப் என் பேரென்ன என்று கேட்கிறீர்கள் சுதர்சன்.ம்..பத்திரிக்கைக்காரரோ?'

'இல்லை.கானக்குயில் பண்பலையில் RJ'

'ஓ! 'இளையதேசம்' சுதர்சன்?'

'யெஸ்'

'அப்பொழுதே நினைத்தேன்..கேட்ட குரலாக இருக்கிறதே என்று'

'என்ன அதிசயம்?'

'என்ன?'

'இந்த இதழ்களுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா?

'ஏன்? ஐயாவுக்கு பேருந்தில் நிற்க முடியாமல் அழும் பெண்கள் தான் தெரியுமோ ?சிரிக்கும் பெண்களைப் பார்த்ததே இல்லையோ?'

'சிறு திருத்தம்..சிரிக்கும் சிலைகளைப் பேருந்தில் பார்த்ததில்லை'

'அடடா..குத்துச் சண்டை படித்தால்தான் சரியா வரும் போல!'

'ஹ..ஹா..இல்லை இல்லை'

'சரி..என் ஸ்டாப் வந்து விட்டது..பார்க்கலாம்'

'அடுத்த ஒலிம்பிக்கிலா?

'ஹ..ஹா..மறக்க மாட்டீர்கள் போல?'

'நிச்சயமாக'

'அருணா'

'ஸ்வீட் நேம்'

'சி யூ'

'பை'

சில நாட்கள் கழித்து 'இளையதேசத்தில்' பேசினாள். செல்போன் வழி ஆரம்பித்த நட்பு. ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். காலத்தின் ஓட்டத்தில் காதலாய்க் கனிந்திருந்தது இவனுள். இது அவளுக்குத் தெரியாது என்றில்லை. யதார்த்தமாக வெளிப்படுத்தியுமிருந்தான். யோசிக்கக் கொஞ்ச நாள் வேண்டுமென்றாள். சரியென்றுதான் இவனுக்கும் பட்டது.

திருமணத்திற்குப் பின் தேவி அவனுடன் இருப்பதில் அவனுக்கு ஒன்றும் கஷ்டமில்லை. இன்னும் சொன்னப் போனால் மகிழ்ச்சி தான். அருணாவைப் பார்ப்பதற்கு முன் அப்படித் தானே நினைத்திருந்தான்!

இன்று அருணா கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கிறாள் இது பற்றி பேசுவதற்கு. என்ன சொல்லப் போகிறாள்? மனது கேட்டது இவனிடம்.

அவனைப் பார்த்து நிலவு புன்னகைத்தது - பேருந்தின் ஜன்னல் வழி.

(தொடரும்)

இராஜிசங்கர்
10-04-2013, 06:56 PM
தேவி பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் வந்துவிட்டால் சேட்டை செய்ய ஆரம்பித்து விடுவாள்.

'இந்தாம்மா! காபி குடி'

'தேங்க்ஸ் அத்தை'

'முடிஞ்சதா'

'இன்னும் இந்த செல்ஃப் மட்டும் தான்'

'தேவி வரைந்த பேப்பரா தான் இருக்கும் இது முழுக்க'

'ஆமாத்தை. நாய்க்குட்டி..நல்லா கிறுக்குது'

இன்னும் தேவிக்குட்டிக்குப் பென்சிலைச் சரியாகப் பிடிக்க வரவில்லை. அதற்குள் என்னவெல்லாம் முயற்சிக்கிறாள். யானை, குதிரை, பேய், பென்-10 என்று. பள்ளி விடுமுறையென்றால் கலர் பென்சிலும் கையுமாகத் தான் இருப்பாள். நிலா வரைய முயன்றிருக்கிறாள். கோழி முட்டையை உடைத்து வைத்தது போல் இருந்தது.

அருணாவுக்கும் அப்படித் தானோ? நிலவென்று நினைத்து ரசித்திருந்தது, கடைசியில் கோழி முட்டையாக ஆகியிருந்தது.

பொறியியல் இளங்கலைப் படிப்பு முடித்த கையுடன் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

'பிறந்தோம். படித்தோம். திருமணம் செய்தோம் என்றெல்லாம் இருக்க முடியாது. எனது கனவுகள் வேறு. லட்சியங்கள் வேறு. கட்டாயப்படுத்தாதீர்கள்' - தீர்க்கமான வாதம். மூன்று ஆண்டுகள் எடுபட்டது - அதாவது அப்பாவிற்கு முதல் மாரடைப்பு வரும் வரை. அன்று முதல் குடும்பத்தில் அவள் முற்போக்கு எண்ணங்கள் பிடிவாதங்களெனப் பெயர் சூட்டப்பட்டன. கருத்துக்கள் திமிராய்த் திரிந்தன. கடைசியில் அவள் தான் இறங்கி வர வேண்டியிருந்தது.

நல்ல கலர். ஆறு இலக்கச் சம்பளம். அமெரிக்க மாப்பிள்ளை. திருமணத்திற்குப் பின் இங்கே - சென்னையில் செட்டில் ஆவதாய் முடிவு. தலையை ஆட்ட வைத்தது குடும்பச் சூழ்நிலை.

ஜிமெயிலில் 'சேட்'டினார்கள். ஸ்கைப்பில் சில நேரம் வீடியோ கால். அருணாவை விடக் கொஞ்சம் மார்டன். பிடிக்கவில்லை என்று சொல்லக் காரணங்கள் இல்லை. பிரசாத்தை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் - அது காலத்தின் கட்டாயமாகக் கூட இருந்திருக்கலாம். பொதுவாகத் தமிழ்ச் சூழலில் கணவனை மனைவிக்குப் பிடிக்க வேறு என்ன சிறப்பான காரணங்கள் வேண்டும்? அவன் 'கணவன்' என்பதே போதுமல்லவா? அப்படித் தானே பழக்கி வைத்திருக்கிறார்கள் நம் பெண்களை!

ஏகப்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்குள். அவள் சித்தாந்தங்களை ஆழமாகச் சீண்டாத வரை விட்டுக் கொடுத்திருந்தாள். சுடிதார் ஜீன்ஸ் ஆனது. தலைப் பின்னல் 'V' கட் ஆனது. விஜய் டீவி ஸ்டார் சீரிஸுக்குப் போனது. புளி சாதம் பீசாவானது. அவனுக்கு இது போதவில்லை. அவன் ரசிக்கும் 'பப்'கள் இவளுக்கு அலர்ஜித்தது. 'மாட்டேன்' என்று சொன்ன போது 'பட்டிக்காடு' என்ற வசையாடல்கள். ரசிக்க 1000 இருக்கிறது என்ற உபதேசங்கள்.

'நீங்க எவ்ளோ தான் சொன்னாலும் என்னால முடியாது பிரசாத். அந்தக் கலர் கலர் லைட். எல்லார் கையிலும் மதுப்புட்டி. மங்கிய வெளிச்சம். நீங்கள் ரசிக்கலாம். என்னால் முடியவில்லை பிரசாத். கட்டாயப்படுத்தாதீர்கள். நீங்க போய்ட்டு வாங்க. நோ ப்ராப்ளம். என்னைக் கூப்பிடாதீர்கள்'

'சோ, நீ வர மாட்ட?'

'நோ டௌட்'

'வந்துதான் ஆகணும்னு சொன்னா?'

அவனின் இந்தக் கேள்வியில் அதிர்ந்துதான் போய் விட்டாள். அவனுக்கு இப்படியொரு ஆணாதிக்க முகமிருக்கும் என்று இது வரை அவள் யோசித்தது கூட இல்லையே!

'கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கும் - கணவன் என்ற போதிலும். எது வசதி?' - வார்த்தைகள் கொஞ்சம் சூடாகத் தான் வந்து விழுந்தன.

அதன் பிறகு இதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அவன் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் இருந்தது.

ஹனி..குட் மார்னிங் ஸ்வீட்டி..பை டியர்..செல்லக் கொஞ்சல்கள் குறைந்திருந்தது. அவ்வப்போது சின்னச் சின்னதாய் பிரச்சனைகள். முடிவு காணாமலே முடிக்கப்பட்டிருந்தது - சில நேரம் இவர்களால், சில நேரம் அவன் அம்மா தலையீட்டால்.

அந்த நேரத்தில்தான் தேவி ஜனித்திருந்தாள். 'எல்லாம் சரியாகி விடும்' என்று நம்பிய இரவுகளில் ஏமாந்ததால் விளைந்த குழந்தை.

நிறைய மாறியிருந்தது. ஆனால் எல்லாமே எதிர்த்திசையில். அருணா பிரசவம் முடிந்து அம்மா வீட்டில் 3 மாதம் தங்கியிருந்து, திரும்பி வருவதற்குள் அவன் அந்நியனாகியிருந்தான். 'ரீட்டா' வின் பழக்கம் வேறு. சந்தேகிக்காத அளவுக்கு அவன் நடந்து கொள்ளவில்லை. விசாரித்தார்கள். சந்தேகம் சரியென அவனே ஒப்புக் கொண்டிருந்தான் - சிறிதும் குற்ற உணர்ச்சியில்லாமல்.

அன்றைக்கே தாய் வீடு திரும்பியிருந்திருப்பாள் - அந்த அத்தை மட்டும் அப்படி அழுது மயங்கி விழாமல் இருந்திருந்தால்; பாவம், பிரசாத்துக்கு 3 வயது இருக்கும் போது விபத்தில் மாமா இறந்து போக, ஒற்றை மனுஷியாய் இவ்வளவு தூரம் வளர்த்திருக்கிறாளே, அந்த மரியாதைக்காக அங்கேயே தங்கும் படி ஆனது. ஆம்.தங்கும்படி தான். வாழும்படி இல்லை.

***

'தேவிக்குட்டி..இந்தா இந்த ட்ரெஸை மாத்திட்டு பாட்டி கூட இரு. சேட்டை பண்ணாம சமத்துப் பிள்ளையா இருக்கணும். சரியா?'

'என்னம்மா! தலை வலிக்குதுன்னு தானே ஆபிஸ்க்கு லீவ் போட்ட? வெளில போய்ட்டு வந்தா இன்னும் கஷ்டமால்ல இருக்கும்?'

'பரவாயில்ல அத்தை. ஒரு முக்கியமான வேலை. போய்த்தான் ஆகணும். வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும். டின்னடர்க்கு வெயிட் பண்ண வேண்டாம்த்தை'

அவள் ஸ்கூட்டி மெரினா பீச் நோக்கிப் பறந்தது.

(தொடரும்)

இராஜிசங்கர்
10-04-2013, 06:58 PM
பிரசாத்தின் சேம்சங் க்ராண்ட் சிணுங்கியது.

'ஹாய்..ஸ்வீட்ஹார்ட்'

'எங்க இருக்கேங்க பேபி?'

'வீட்ல'

'எப்போ டார்லிங் இங்க வருவேங்க? நான் அப்பவே வந்துட்டேன்'

'வித் இன் 30 மினிட்ஸ் ஐ வில் பி தேர் டியர்'

'ம்..ஒகே..தென்?'

'தென், உனக்கொரு கிஃப்ட் இருக்கு டுடே'

'ஓ! இஸ் இட்? என்ன?'

'கெஸ் இட்'

'ரிங்?'

'நோ'

'ரோஸ்'

'நோ'

'க்ரீட்டிங்க்ஸ்'

'சில்லி'

'சாக்லேட்ஸ்'

'ம்ம்ஹும்'

'ஹே.............நாட்டி'

'அதுவும் இல்ல'

'தென், வாட்?'

'தேட் இஸ் சஸ்பென்ஸ்..பீச்சில் வச்சு தான் தருவேன்'

'ஓகே ஹனி..சி யூ.வெய்ட்டிங் ஃபார் யூ'

'ஷ்யர்டா..லவ் யூ ஸ்வீட் ரீட்'

'மி டூ பிரசாத்'

டீவியை அணைக்க ரெமோட் எடுத்தான். 'மூன் வாக்' பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சம்பந்தமில்லாமல் 5 வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் அவன் மனதில் நடை போடத் தொடங்கின.

***

'அம்மா..முடியாது போம்மா!'

...

'நோ'

...


'தமிழ்நாட்டிலா? அதுவும் சென்னையிலா? சான்சே இல்ல!'

...

'அம்மா! நான் சொல்றதக் கொஞ்சம் கேளு'

...

'எத்தனை தடவ தான் நான் சொல்றது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோயேன்'

...

'அம்!!!!!!'

...

இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

ஏன் இந்த அம்மாக்கள் இன்னும் மாறவே இல்லை. கல்யாணம் பண்ணச் சொல்லிக் கழுத்தருக்கிறார்கள். மாதாமாதம் பணம், வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், பார்த்துக்க வேலையாட்கள், வசதியான வாழ்க்கை. இதை விட என்ன பெரிதாய் வேண்டும்? ஜாலியாக வாழ வேண்டியது தானே? இதை விட்டு விட்டு கொள்ளி வைக்க பேரன், ஜல்லி கொட்ட மருமகள் என்று ஒரே ரோதனையாக இருக்கிறது. எரிச்சலில் அடித்த ஜின்னும் ஜீவ்வென்று இறங்கியிருந்தது அவனுக்கு.

மறுநாள் அருணாவென்ற பெயர் தாங்கியபடி போட்டோ மெயிலில் வந்தது. லட்சணமான முகம், விற்புருவம், செதுக்கி வைத்தது போல் மூக்கு, அளவாய் சிரித்த இதழ்கள், ஸ்காட்சில் ஐஸ் துண்டு தெறித்தது போன்ற கன்னக்குழி - நிச்சயமாய் அழகி தான்! கலர் மட்டும் அவனை விடக் கொஞ்சம் கம்மி.

'இங்கேயே வந்து விடு'. அம்மாவின் அழுகையில் இதுவும் ஒன்று. கடைசியில் வேறு வழியில்லாமல் அவள் அழுகை தான் ஜெயித்தது.

முதல் கொஞ்ச நாட்கள் அவளை ரசிக்கத்தான் செய்தான். விருந்து மருந்தெல்லாம் முடிந்த பின், 'இவள் எனக்கேற்றவள் இல்லையோ' எனத் தோணத் தொடங்கியது. IT பார்க்கில் வேலைக்குப் போகிறாள். அதென்ன அசிங்கமாய் சுடிதார் போட்டுக் கொண்டு. ஜீன்ஸ் தான் போடேன். சொன்னவுடன் நிற்காமல் எடுத்தும் கொடுத்தான். இப்படி மாற்றிய பட்டியல் பெரிது.

நிறைய மாறியிருந்தும் இன்னும் இடைவெளி இருப்பதாகவே அவனுக்குப் பட்டது.

ரொம்பப் பழசாய் இருக்கிறாளோ?

இன்னும் திருக்குறளும், பாரதியும் படித்துக் கொண்டு.

சே குவாரா தெரிகிறது. கார்ல் மார்க்ஸ் தெரிகிறது. ஹாரி பாட்டர் தெரியவில்லையே?

'பப்' வருவதற்கு ஏன் இப்படிச் சண்டை பிடிக்கிறாள்? நான் என்ன அவளைக் குடிக்கவா சொன்னேன்?

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே கோபம் தலைக்கேறியது.

அன்று என்ன வார்த்தை சொன்னாள்? ராட்சசி! நினைவுகளில் தோய்ந்தான்.

'இது தான் உங்க முடிவா பிரசாத்?'

'ஆமா'

'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே?'

'என்னன்னு?'

'அமெரிக்கா திரும்ப போகணும்னு சொல்றேங்கல்ல! அதைப்பற்றி'

'இங்க பாரு அருணா! நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு இங்க ஒத்து வரல. இந்த க்ளைமேட், ட்ராஃபிக், கரண்ட் கட், மனிதர்கள், அழுக்கு எதுவுமே பிடிக்கல. என்னால இங்க இருக்க முடியாது'

'அதை இப்போ சொன்னா எப்டி? இங்க செட்டில் ஆக ஒத்துக்கிட்டு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேங்க? இப்போ இப்டி சொன்னா என்ன பண்றது? அதுவும் இந்த மாதிரி சமயத்துல, அம்மா இல்லாம நான் என்ன பண்ண முடியும் பிரசாத்?'

'அதெல்லாம் எனக்குத் தெரியாது. இங்க வர்றதுக்கே மனசில்லாம தான் வந்தேன். ஈவன் உன்னை கட்டிக்கிட்டது கூட! இதுக்கு மேல ரெண்டையும் என்னால பொறுத்துக்க முடியாது'

அவன் வார்த்தை முடிவதற்குள் அவள் இதயத்திற்குள் அவனுக்கென - அவனுக்கு மட்டுமென எழுப்பிய கோட்டைகள் இடிந்து விழுந்தன.

யார் யாரோ சமாதானம் பண்ணிப் பார்த்தார்கள். அவன் அமெரிக்கா திரும்பும் முடிவில் எந்த மாறுதலுமில்லை.

'வேணும்னா அவளையும் கெளம்பச் சொல்லுங்க. கூட்டிடுப் போறேன். உங்க இந்தியாவை விட அங்கு ஆஸ்பத்திரிகள் அதிகம் தான். அங்கேயே குழந்தை பெத்துக்கலாம். அடுத்த லீவ்ல கூட்டிட்டு வரேன்'

'இவன் என்ன எனக்குப் பிச்சை போடுவது? பொறுக்க முடியாது என்று சொன்ன பின் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு கூட்டிட்டுப் போறேன் என்கிறான்? பெண்ணென்றால் அவ்வளவு இளப்பமாய்ப் போய் விட்டதா?' - விம்மிப் புடைத்த கேள்விகள். கேட்க முடியாத சூழ்நிலை. இவள் இப்பொழுது தனியாள் இல்லையே? இவளுக்குள் இன்னொரு உயிர் துடித்துக் கொண்டிருக்கிறதே? அவனால் பொறுக்க முடியாவிட்டாலும், அதன் அப்பா அவனல்லவா? அதை மாற்ற முடியாதே?

'சரி பிரசாத். கொஞ்ச நாள் டைம் கொடுங்களேன். ஒரு இரண்டு மாதம். அங்கே வேலை தேடிக்கொள்கிறேன். அப்புறம் போகலாம். இங்கே இருந்து தேடிக் கொள்வது எனக்கு வசதி.'

'வேலைக்கெல்லாம் ஒன்னும் போக வேண்டியதில்லை'

'ஏன்?'

'வேலைக்குப் போய் என்ன பண்ணப் போற? காசு பணம் இல்லையா என்னிடம்?'

'பிரசாத், உங்கள் நடை, உடைகளில் இருக்கும் நவீனங்கள் சிந்தனைகளிலும் செயல்களிலும் இல்லையே? காசு பணத்திற்காகவா வேலைக்குப் போவது? நான் படிச்சுருக்கேன் பிரசாத். என் அப்பா கஷ்டப்பட்டுத் தான் என்னைப் படிக்க வைத்தார். அதை எப்படி வீணடிக்க முடியும்?'

'அதெல்லாம் முடியாது. நீ வேலைக்குப் போவதில் எனக்கு விருப்பமில்லை. என்னிடம் பணம் இருக்கு. உன்னை உட்கார வைத்து சோறு போட என்னால் முடியும்'

'பிரசாத், தயவுசெய்து நிப்பாட்டிக்கோங்க. எனக்கு என்ன தேவையென்று நான் தான் தீர்மானிக்கனும். நீங்க இல்ல. அதென்ன மூச்சுக்கு முன்னூறுவாட்டி, என்னிடம் பணம் இருக்கு. என்னிடம் பணம் இருக்கு ன்னு சொல்றேங்க? இப்போவே 'என் பணம்'ன்னு சொல்ற உங்கள நம்பி நான் எப்டி அங்க தனியா வர முடியும்? நான் வேலைக்குப் போவேன்'

அவள் பேச்சு அவன் அதிகார மனப்பான்மையைச் செருப்பால் அடித்து விட்டது போன்ற உணர்வு. ஆத்திரம் தாளாமல் ஒரு அறை விட்டான்.

'என்னடி..நானும் பார்க்குறேன்..ரொம்ப ஓவராத் தான் போற?' - இன்னொரு அறை வைக்க ஓங்கிய கையைத் தடுத்து இவனுக்கு விழுந்தது ஒரு அறை.

'என்னடி..என்னையே அடிக்குறயா? உன்ன என்ன செய்யுறேன்னு பாரு' - பெல்ட்டில் கை வைத்தான்.

'யார் சுழட்டினாலும் பெல்ட் சுழலும் என்பது ஞாபகம் இருக்கட்டும் மிஸ்டர்.பிரசாத்'

அவன் கை தானாய் உறைந்தது பெல்ட்டிலிருந்து.

***

கிஃப்டை மறக்காமல் எடுத்துக் கொண்டான். சாலையில் விரைந்து கொண்டிருக்கும் போது அவன் செல்போன் சிணுங்கியது.

ரீட்டா காலிங்...

(தொடரும்)

இராஜிசங்கர்
10-04-2013, 07:00 PM
'நிலா நிலா ஒடி வா! நில்லாமல் ஓடி வா!'

'ம்..அப்டித் தான். பாட்டி சொல்லிக் குடுத்தது மாதிரி படிச்சுட்டு இரு தேவிக்குட்டி.கீழ அரிசிக்காரர் சத்தம் கேக்குது. இதோ வந்துடுறேன்'

'நிலா நிலா ஓடி வா!'

அப்படிச் சொல்லித்தான் ராகுல் அம்மா அவனுக்குச் சாப்பாடு ஊட்டுவாங்களாம். 'உனக்கு என்ன பாட்டு படிப்பாங்க உங்க அம்மா?' - என்ற அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

'ஆமா அம்மா எனக்கு என்ன பாட்டு படிப்பாங்க? பாட்டி வந்ததும் கேட்கணும்.

அப்புறம் செல்வியோட அப்பாவும், அம்மாவும், செல்வியும் இந்தப் பக்கமா பைக்குல போறாங்களே? எங்க போறாங்க? ஓ! எக்ஸிபிஷன்க்கா? பாவம் செல்வி.இன்னைக்குத் தான் கூட்டிட்டுப் போறாங்க! எங்க மம்மி நல்ல மம்மி, போன வாரமே கூட்டிட்டுப் போய்ட்டாங்க. டெட்டி பியர் வாங்கினோம். குல்ஃபி ஐஸ் சாப்பிட்டோம். ராட்டினமெல்லாம் சுத்தினோமே! அச்சோ இதை ஜானுட்ட சொல்ல மறந்துட்டேனே! நாளைக்கு அந்த மீசைக்கார மிஸ் வர்றதுக்குள்ள அவட்ட சொல்லணும். அந்த மிஸ் பார்த்துருச்சுன்னா ஏன் பேசிட்டு இருக்கன்னு அடிக்கும். ஆனா ஏன் அப்பா நம்ம கூட எக்ஸிபிஷன் வரல? அவர் கூட தனியா கடைக்குப் போயிருக்கேன். அம்மா கூடத் தனியா எங்கெங்கயோ போயிருக்கேன். பாட்டி கூட, அம்மா கூட கோவிலுக்குப் போயிருக்கேன். சுதர் அங்கிள் கூட..இல்லையில்ல..அவர் டாடின்னு கூப்டனும்ன்னு சொல்லிருக்காரே? சுதர் டாடி கூட நிறைய இடம் போயிருக்கேன். போன சண்டே கூட, அம்மா, நான், சுதர் டாடி வெளிய போனோமே? அது ஏன்? அம்மாவும், அப்பாவும் நானும் செல்வி மாதிரி பைக்கில் போனதேயில்ல? நேத்தைக்கு ஜானு கூட போனாளே? இதையும் பாட்டிட்ட கேட்கணும்.

'அம்மா! தேவி எங்கம்மா? ராகுல் அப்பா மெரினா பீச் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்காரு. அப்டியே தேவியையும் கூட்டிட்டுப் போலாம்ன்னு நினைச்சோம். பாவம் வயசான காலத்துல உங்களப் போட்டுப் படுத்திட்ருக்கும் கன்னுக்குட்டி..எங்க அது?' - சம்பிரதாயமாய்க் கேட்ட கேள்விக்கு பதிலை எதிர்பார்க்காது மாடி நோக்கி நடந்தாள், அடுத்த வீட்டு ராகுலம்மா. பெண் பிள்ளையென்றால் உயிராய் இருப்பாள். ராகுல் மேல் வைத்த பாசத்திற்கு இம்மியளவு குறையாமல் தேவி மேலும் வைத்திருந்தாள்.

ராகுல் கண்ணா! தேவிக்குட்டி ரெடியா? ரெடி..ஒன்..டூ..த்ரி..புர்ர்ர்ர்ர்.........

(தொடரும்)

இராஜிசங்கர்
10-04-2013, 07:02 PM
அந்த நாள் அவர்கள் அனைவருக்கும் முக்கிய நாள் என்று அந்த நிலவுக்குத் தெரியும்.

சுதர்சன், பெண்ணியம் மதிப்பவன். தேவியைத் தன் குழந்தையெனப் பார்த்துக் கொள்ள நினைக்கும் மனம் கொண்டவன். இதற்காக அவள் பயந்தால் அவர்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டாம் என்று சொல்லவும் தயாராக இருந்தான். தேவியே போதுமே! அருணாவின் சுயகௌரவமும், தன்மானமும் அவளை அவன் ரசிக்கும் முதற்காரணிகள். அவற்றிற்கு முன் மற்றவை அற்பம் தான்! அருணா என்னவள்! என் புத்தகங்களின் பக்கங்கள் அனைத்தும் அவளாய் இருப்பதில் எனக்கு சம்மதம். கவிதை வரைய முயன்றது அவன் மனது.

அருணா, முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட பெண். அவள் எப்படியெல்லாம் கணவன் வேண்டுமென்று நினைத்திருந்தாலோ அதற்கு நேர் மாறாய் பிரசாத் அமைந்திருந்தான். சரியாகி விடும் என்று சில விஷயங்களில் பொறுத்துத் தான் போனாள். சில காரணிகள் அவளால் காம்ப்ரமைஸ் பண்ண முடிவதில்லை. பிரசாத் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று வாழ்ந்து கொண்டிருக்கையில் தான் சுதர்சன் வந்து சேர்ந்தான். 'தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அவசியமா? ஏன், நல்ல நண்பனான சுதர், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது? பிரசாத்தை விட சுதர் பொருத்தமென்றால் சேர்வதில் என்ன தவறு உள்ளது? தேவியைப் பற்றிய அவன் நிலைப்பாடு நன்றாகத் தெரியுமே!' ரொம்ப நாள் கழித்து அவள் கன்னங்கள் சிவப்பது போல் இருந்தது.

பிரசாத், அமெரிக்கக் குடியுரிமைக்கு அப்ளை செய்து விட்டான். அவன் உலகம் வேறு. அதில் சிரிப்பு, கவர்ச்சி, ஜாலினெஸ், குட்டைப்பாவாடை, ராக் மியூசிக் அதற்குத் தான் முன்னிலை. அழுகைகள், கவிதைகள், சம்பிரதாயங்கள், கமிட்மெண்ட் இவையெல்லாம் டைம் வேஸ்ட். ரீட்டா கிட்டத்தட்ட இந்த வாழ்க்கையைத் தான் விரும்பினாள். 2 நாளில் அமெரிக்கா கிளம்புகிறார்கள். விசா வந்தாச்சு. ரீட்டா கன்னங்களில் பரிசளித்தாள்.

பீச்சில் பந்து விளையாண்டு கொண்டிருந்த குழந்தை தேவி, சுதர்சனையும் பிரசாத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

'அதெப்படி, டீச்சர் சொன்னது தப்பா இருக்கும்?'

'அப்பான்னா டாடின்னு சொன்னாங்க. அப்பா தான் டாடியாம். ராகுல் கூட அப்பான்னும் டாடின்னும் கதிரேசன் அங்கிளைத் தானே சொல்கிறான். ஆனா எனக்கு அப்பா பிரசாத், டாடி சுதர்சன். எப்டி எனக்கு மட்டும் ரெண்டு?'

'அதெப்படி, டீச்சர் சொன்னது தப்பா இருக்கும்?'

'வீட்டுக்குப் போய் பாட்டிட்ட கேக்கணும்'

இப்பொழுதும் அந்த நிலா பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு தான் இருந்தது.

(முற்றும்)

நன்றி: பேனா பிடிக்கக் கற்றுத் தந்த எங்கள் மாலன் சாருக்கும், மங்கிய சுடரைத் தூண்டி விட்ட முகமறியா ரமணி சாருக்கும்.

prakash01
11-04-2013, 05:26 PM
கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

இராஜிசங்கர்
11-04-2013, 05:41 PM
கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

நன்றி பிரகாஷ்!

கீதம்
11-04-2013, 11:42 PM
எழுதலாமா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி இருந்த நீங்கள் தயக்கம் உடைத்து ஒரு முழுத் தொடர்கதையைப் படைத்தமைக்கு முதல் பாராட்டுகள் இராஜி.

ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை. கதைமாந்தர்களின் குணாதிசயங்களை அழகாய்க் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தக் கதையில் யாரையுமே குறை சொல்வதற்கில்லை. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேறாத சூழலில் வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது. இதில் சில சமயம் இருபக்க வேதனை, பல சமயம் ஒருபக்க வேதனை! இந்த வேதனைச் சுழலில் சிக்கி காலமெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிராமல் தானே தனக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வருவது அருணாவின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

தேவியின் இன்றைய குழப்பம் விரைவில் தீரட்டும். நல்லதொரு கதைக்கும் அதை அழகாய்ப் படைத்தமைக்கும் பாராட்டுகள் இராஜி.

ரமணி
12-04-2013, 01:49 AM
வணக்கம் இராஜிசங்கர் அவர்களே.

இந்தக் கதையில் எனக்குத் தோன்றும் ஓரிரு நிறை-குறைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். சரியான கோணத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஆசிரியரின் பரிவுப் பார்வை விழுவது யார் மேல்--அருணாவா, சுதர்சனா அல்லது குழந்தை தேவியா--என்று நேரடியாகக் குறிக்காமல் விட்டது கதையின் பெரிய நிறை. கீதம் அவர்கள் குறிப்பிட்டது போல் ’அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும்’ மணவாழ்க்கையைத் திசை திருப்பக் குழந்தைக்குக் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அந்தக் குழப்பம் தீரும்போது குழந்தை தன் வயதிலேயே கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடம் அதன் எதிர்காலத்துக்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்பதும் சுட்டப்படுகிறது.

கதையின் அளவுக்கு விஞ்சிய உரையாடலை ஒரு குறையாகச் சொல்லலாம். வார்த்தைகள் முற்றுவதில் ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. வார்த்தைகள் கனிவதில் நம்பிக்கை என்ற போர்வையில் புதுவாழ்வு தொடங்குகிறது. ஆனால் வார்த்தைகளின் பின்னணியில் போதுமான அளவு மனவோட்டத் துலாக்கோலாலால் இருப்பதையும் வருவதையும் அலசியது போதாதோ என்று தோன்றுகிறது.

பொதுவாக ஆண்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் (பெண்களைவிட) சுயநலக்காரர்கள் என்று காலம் திரும்பத் திரும்ப அறிவுறுத்தும் போது மணவாழ்க்கை முறிந்த ஒரு பெண்ணுக்கு விடிவு இன்னொரு கல்யாணத் தேடல் என்பது எவ்வளவு தூரம் நிலையானது, சரியானது, வாழ்வில் அவளுக்கு வேறென்ன தேர்வுரிமைகள் உள்ளன என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கதையின் நாயகியைக் கீழ்வரும் கதைகளின் நாயகியோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது:

’பிரச்சினையின் பெயர்: சந்திரலேகா’: மாலன்
http://www.sirukathaigal.com/சமுகநீதி/பிரச்சினையின்-பெயர்-சந்/

’காதலின்...’: மாலன்
http://www.sirukathaigal.com/நகைச்சுவை/காதலின்/

’காதலின்...’ கதை மேலுள்ள இணைப்பில் முழுதாக இல்லை. அது ’கல்லிற்குக் கீழும் பூக்கள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. கதை இப்படி முடிகிறது:

"நாங்க பிரண்ட்ஸ். ஆனா நல்ல சிநேகிதர்கள். காதலில் பிரமைகள் உண்டு. பிம்பத்திற்காக வாழ்கிற பொய்கள் உண்டு. பெரியவா சின்னவா பேதம் உண்டு. இதில் இந்த இம்சைகள் எல்லாம் கிடையாது சார். இது சுத்தம். ஓடற ஜலம் மாதிரி சுத்தம். சுமுத்திர தண்ணி மாதிரி உப்புக்கரிப்பு கிடையாது. காதலைவிட, ஸ்நேகம் உயர்ந்தது. ரொம்ப உயர்ந்தது..."

மொத்தத்தில், உங்களுக்குச் சிறுகதை வசப்படுகிறது என்பது நிச்சயம். நிறையப் படித்து மேலும் முயலுங்கள்.

*****

ஜான்
12-04-2013, 02:14 AM
மீண்டும் படித்துவிட்டு சொல்கிறேன் ராஜிசங்கர்

இராஜிசங்கர்
12-04-2013, 05:13 AM
இந்தக் கதையில் எனக்குத் தோன்றும் ஓரிரு நிறை-குறைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். சரியான கோணத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.



கண்டிப்பாக சார். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் முக்கியம்.




கதையின் அளவுக்கு விஞ்சிய உரையாடலை ஒரு குறையாகச் சொல்லலாம். வார்த்தைகள் முற்றுவதில் ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. வார்த்தைகள் கனிவதில் நம்பிக்கை என்ற போர்வையில் புதுவாழ்வு தொடங்குகிறது. ஆனால் வார்த்தைகளின் பின்னணியில் போதுமான அளவு மனவோட்டத் துலாக்கோலாலால் இருப்பதையும் வருவதையும் அலசியது போதாதோ என்று தோன்றுகிறது.



சார், சில விஷயங்களை உரையாலடாக எழுதியது கதையின் கிரிஸ்பி(crispy)க்காகத் தான். நாமே விளக்கி எழுதினால் சில சமயம் படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டி விடும். உரையாடல்கள் வழியாக அவர்கள் மனவோட்டத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற பாணியில் எழுதினேன்.

அடுத்த முறை இதில் கவனம் செலுத்துகிறேன் சார். ரொம்பவும் நன்றி.




பொதுவாக ஆண்கள் என்றாலே ஏதோ ஒரு வகையில் (பெண்களைவிட) சுயநலக்காரர்கள் என்று காலம் திரும்பத் திரும்ப அறிவுறுத்தும் போது மணவாழ்க்கை முறிந்த ஒரு பெண்ணுக்கு விடிவு இன்னொரு கல்யாணத் தேடல் என்பது எவ்வளவு தூரம் நிலையானது, சரியானது, வாழ்வில் அவளுக்கு வேறென்ன தேர்வுரிமைகள் உள்ளன என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.



சார், அருணா மீண்டும் மண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை என்பது என் எண்ணம் சார். பிரசாத்துடனான வாழ்வு சரிவரவில்லை எனும் போது பொருத்தமான துணையான சுதர்சனைத் தேர்வு செய்ததில் தவறில்லையே? அதற்காகத் தான் இவ்வாறு எழுதினேன் 'தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அவசியமா? ஏன், நல்ல நண்பனான சுதர், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது? பிரசாத்தை விட சுதர் பொருத்தமென்றால் சேர்வதில் என்ன தவறு உள்ளது? தேவியைப் பற்றிய அவன் நிலைப்பாடு நன்றாகத் தெரியுமே!'




இந்தக் கதையின் நாயகியைக் கீழ்வரும் கதைகளின் நாயகியோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது:

’பிரச்சினையின் பெயர்: சந்திரலேகா’: மாலன்
http://www.sirukathaigal.com/சமுகநீதி/பிரச்சினையின்-பெயர்-சந்/

’காதலின்...’: மாலன்
http://www.sirukathaigal.com/நகைச்சுவை/காதலின்/

’காதலின்...’ கதை மேலுள்ள இணைப்பில் முழுதாக இல்லை. அது ’கல்லிற்குக் கீழும் பூக்கள்’ என்னும் தொகுப்பில் உள்ளது. கதை இப்படி முடிகிறது:

"நாங்க பிரண்ட்ஸ். ஆனா நல்ல சிநேகிதர்கள். காதலில் பிரமைகள் உண்டு. பிம்பத்திற்காக வாழ்கிற பொய்கள் உண்டு. பெரியவா சின்னவா பேதம் உண்டு. இதில் இந்த இம்சைகள் எல்லாம் கிடையாது சார். இது சுத்தம். ஓடற ஜலம் மாதிரி சுத்தம். சுமுத்திர தண்ணி மாதிரி உப்புக்கரிப்பு கிடையாது. காதலைவிட, ஸ்நேகம் உயர்ந்தது. ரொம்ப உயர்ந்தது..."



ஆமாம் சார்.. அருணா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்ததே மாலன் சார் மேல் உள்ள அன்பால், மரியாதையால் தான்! என் மனதோடு பேசும் எழுத்துக்கள் அவருடையது. என் ஒவ்வொரு எழுத்துக்களின் பின்னும் அவர் வாழ்த்துக்களும் தூண்டுதலும் தாக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அதில் எனக்குச் சம்மதம் தான்!




மொத்தத்தில், உங்களுக்குச் சிறுகதை வசப்படுகிறது என்பது நிச்சயம். நிறையப் படித்து மேலும் முயலுங்கள்.

*****
மிக்க மகிழ்ச்சி சார், நீங்க இப்டி சொன்னது. ஒரு பாசிட்டிவ் எனெர்ஜி தருகிறது. 'இன்னும் சிறப்பாகச் செய்' என்று உந்துகிறது. இதயத்திலிருந்து நன்றிகள் ரமணி சார்.

இராஜிசங்கர்
12-04-2013, 05:15 AM
எழுதலாமா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி இருந்த நீங்கள் தயக்கம் உடைத்து ஒரு முழுத் தொடர்கதையைப் படைத்தமைக்கு முதல் பாராட்டுகள் இராஜி.

ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை. கதைமாந்தர்களின் குணாதிசயங்களை அழகாய்க் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தக் கதையில் யாரையுமே குறை சொல்வதற்கில்லை. அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேறாத சூழலில் வாழ்க்கை சிக்கலாகிவிடுகிறது. இதில் சில சமயம் இருபக்க வேதனை, பல சமயம் ஒருபக்க வேதனை! இந்த வேதனைச் சுழலில் சிக்கி காலமெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிராமல் தானே தனக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வருவது அருணாவின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

தேவியின் இன்றைய குழப்பம் விரைவில் தீரட்டும். நல்லதொரு கதைக்கும் அதை அழகாய்ப் படைத்தமைக்கும் பாராட்டுகள் இராஜி.

ரொம்ப நன்றிக்கா! எழுதும் போது உங்கள் ஞாபகம் வந்தது. அன்று நீங்கள் கொடுத்த உற்சாகம் கூட ஒரு காரணம் அக்கா, இதை மீண்டும் நான் தூசி தட்டியிருப்பதற்கு.

இராஜிசங்கர்
12-04-2013, 05:16 AM
மீண்டும் படித்துவிட்டு சொல்கிறேன் ராஜிசங்கர்

ஓகே சார். காத்திருக்கிறேன்.

இராஜிசங்கர்
12-04-2013, 05:17 AM
எங்கள் ஜெயந்த் அண்ணாவை இன்னும் காணோம்.. :traurig001:

மதி
12-04-2013, 05:33 AM
ஒரே மூச்சில் படித்து முடித்தேன்...

தேர்ந்த ஒரு கதை சொல்லியை போல் ஒரு நடை. ஆரம்பமே அசத்தலாய் இருந்தது. ஆங்காங்கே தூவிய வர்ணனைகளும் அருமை. ஒவ்வோரு கதாபாத்திர மனநிலையையும் காட்சிகளாய் ஒவ்வொரு பாகமாய் ஆக்கியவிதமும் அழகு. குறிப்பாய் கவனிக்க வைத்தது கதையோட்டத்திலேயே கதாபாத்திர அறிமுகம். தேவியின் அறிமுகம் அதுமாதிரி உறுத்தாமல் இருந்தது.

மற்றவிஷயங்களை சொல்வதானால்.. வசனங்கள் ஆங்காங்கே உறுத்தல். குறிப்பாய் அருணாவின் வசனங்கள். தைரியமான பெண்ணாய் இருந்தாலும் அந்த வசனங்கள் மனவோட்டங்களாய் இருக்கலாமே தவிர முதல் அறிமுகத்திலேயே சுதரும் அருணாவும் இப்படி பேசிக்கொள்வார்கள் என்பது எனக்கு முரணாய் பட்டது. மேலும் மோதலாய் ஆரம்பித்த பேச்சு.. இதழில் சிரிப்பு பற்றி சுதர் பேச ஆரம்பிக்கையில் புன்னகைக்கத் தோன்றாது. மேலும் பின்வரும் கதைப்படி ஏற்கனவே ப்ரசாத்தால் ஈர்க்கப்பட்டு பின் ஆசைகள் நிராசையானவள் என்ற கோணத்தில் எந்த ஒரு ஆணையும் முதல் பார்வையில் சந்தேகமாய் பார்க்கத் தோன்றும் என்பது என் கருத்து.

அடுத்து அன்றைய இரவில் நிலவொளியில் அனைத்து கதாபாத்திரங்களும் மெரினா கடற்கரையில் கூடப் போகிறார்கள் என்ற விஷயம் படிப்பவர்க்கு ஆர்வத்தௌ உண்டு பண்ணிய அதே சமயம் அந்த பாகம் சரியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தேவி சுதரையும் ப்ரசாத்தையும் பார்க்கிறாள் என்று மட்டுமே உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் மனநிலை என நல்லாவே நீங்கள் கதைப்படுத்தியிருக்க முடியும்.. அச்சோ..இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு இருக்கேன்.

அழகான நடை.. ஈர்க்கும் விவரணை.. நிறைய எழுதுங்கள் மேடம்.. வாழ்த்துக்கள்.

இராஜிசங்கர்
12-04-2013, 06:31 AM
மற்றவிஷயங்களை சொல்வதானால்.. வசனங்கள் ஆங்காங்கே உறுத்தல். குறிப்பாய் அருணாவின் வசனங்கள். தைரியமான பெண்ணாய் இருந்தாலும் அந்த வசனங்கள் மனவோட்டங்களாய் இருக்கலாமே தவிர முதல் அறிமுகத்திலேயே சுதரும் அருணாவும் இப்படி பேசிக்கொள்வார்கள் என்பது எனக்கு முரணாய் பட்டது. மேலும் மோதலாய் ஆரம்பித்த பேச்சு.. இதழில் சிரிப்பு பற்றி சுதர் பேச ஆரம்பிக்கையில் புன்னகைக்கத் தோன்றாது. மேலும் பின்வரும் கதைப்படி ஏற்கனவே ப்ரசாத்தால் ஈர்க்கப்பட்டு பின் ஆசைகள் நிராசையானவள் என்ற கோணத்தில் எந்த ஒரு ஆணையும் முதல் பார்வையில் சந்தேகமாய் பார்க்கத் தோன்றும் என்பது என் கருத்து.


ஆக்சுவலி, கதைப்படி அருணா கேரக்டர் வாழ்வின் ஏமாற்றங்களால் நொந்து போன கேரக்டர் கிடையாது மதி சார். அப்டி இருந்தா நீங்க சொல்றது பக்காவா வரும். தைரியமான பொண்ணு நம்ம அருணா. சுதர்சன் வழிவது கூட கொஞ்சம் ரசிக்கும் படி தானே இருந்தது. எரிச்சல் வரவில்லையே (?!!). பின் எதற்கு சந்தேகப்பட வேணும்? அவளுக்கு பிரசாத் இப்டி அமைந்ததனால், பார்க்கும் ஆண்களை எல்லாம் ஏன் வெறுக்க வேண்டும்? என்ன லாஜிக் இருக்கு இதன் பின்? (என்று நான் கேட்கவில்லை..அருணா கேட்கிறாள்)



அடுத்து அன்றைய இரவில் நிலவொளியில் அனைத்து கதாபாத்திரங்களும் மெரினா கடற்கரையில் கூடப் போகிறார்கள் என்ற விஷயம் படிப்பவர்க்கு ஆர்வத்தௌ உண்டு பண்ணிய அதே சமயம் அந்த பாகம் சரியாக கையாளப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தேவி சுதரையும் ப்ரசாத்தையும் பார்க்கிறாள் என்று மட்டுமே உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அவர்கள் மனநிலை என நல்லாவே நீங்கள் கதைப்படுத்தியிருக்க முடியும்..


தேவிக்கு பிரசாத்தையும் சுதரையும் பற்றிய குழப்பங்கள் தானே இருக்கிறது? அதனால் அவர்கள் இருவர் கேரக்டரை மட்டும் ஜூம் பண்ணியிருந்தேன் மதி சார்.



அழகான நடை.. ஈர்க்கும் விவரணை.. நிறைய எழுதுங்கள் மேடம்.. வாழ்த்துக்கள்.

ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் சார். இனி வரும் கதைகளில் இந்தக் குழப்பங்கள் வராதவாறு பார்த்துக் கொள்கிறேன்.

jayanth
12-04-2013, 11:32 AM
எங்கள் ஜெயந்த் அண்ணாவை இன்னும் காணோம்.. :traurig001:


வந்துட்டேன்மா...!!!
வீட்டிலும் வேலைப் பளு(???!!!???!!!)
அலுவலகத்திலும் பளு( :-( )...
கதை பார்த்தேன்.. இன்னும் படிக்கவில்லை...
படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதுதானே முறை...
மீண்டும் நாளை சந்திப்போம்...(பின்னூட்டத்துடன்...!!!)

கும்பகோணத்துப்பிள்ளை
12-04-2013, 12:59 PM
கதை மாந்தர்களின் வார்தை வெளிப்பாடுகள் நிருபித்திருக்கின்றன உங்களுக்கு எழுதுவது வசப்பட்டிருக்கிறதென்று.
சில முரண்பாடுகளைத்தவிர்த்து சம்பவங்கள் கதையினுடே தெளித்துவிட்ட லாவகமும் நன்றாக வந்திருக்கிறது.
ஆனால் சம்பவங்கள் முடியிடப்படுவதை மட்டும் வாசகர்களிடம் விட்டுவிட்டீர்கள் கடைசிவரைக்கும்... இதுவும் ஒரு உத்தியோ?! ..நான் படைப்பாளி இல்லை இதுகாறும் படிப்பவன் மட்டுந்தான்.

பாராட்டுகள் இராஜிசங்கர்... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....

இராஜிசங்கர்
12-04-2013, 01:14 PM
வந்துட்டேன்மா...!!!
வீட்டிலும் வேலைப் பளு(???!!!???!!!)
அலுவலகத்திலும் பளு( :-( )...
கதை பார்த்தேன்.. இன்னும் படிக்கவில்லை...
படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதுதானே முறை...
மீண்டும் நாளை சந்திப்போம்...(பின்னூட்டத்துடன்...!!!)

​ஓகே அண்ணா! டன்!!

இராஜிசங்கர்
12-04-2013, 01:16 PM
கதை மாந்தர்களின் வார்தை வெளிப்பாடுகள் நிருபித்திருக்கின்றன உங்களுக்கு எழுதுவது வசப்பட்டிருக்கிறதென்று.
சில முரண்பாடுகளைத்தவிர்த்து சம்பவங்கள் கதையினுடே தெளித்துவிட்ட லாவகமும் நன்றாக வந்திருக்கிறது.
ஆனால் சம்பவங்கள் முடியிடப்படுவதை மட்டும் வாசகர்களிடம் விட்டுவிட்டீர்கள் கடைசிவரைக்கும்... இதுவும் ஒரு உத்தியோ?! ..நான் படைப்பாளி இல்லை இதுகாறும் படிப்பவன் மட்டுந்தான்.

பாராட்டுகள் இராஜிசங்கர்... தொடருங்கள் உங்கள் படைப்புகளை....

ஆமாங்க கு.கோ.பி இப்பல்லாம் அப்டி எழுதினா தான் மரியாத!​ (சும்மா விளையாட்டுக்கு)

நன்றிங்க!

மும்பை நாதன்
29-08-2013, 05:03 PM
கதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.
பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்

இராஜிசங்கர்
31-08-2013, 05:17 AM
கதையோட்டத்திற்கு பொருத்தமான முறையில் உரையாடல்களும் நிகழ்வுகளும் கோர்க்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.
பின்னூட்டங்களுக்கு கொடுத்திருக்கும் பதில்களின் மூலம் கதை ஒரு நியதிக்கு உட்பட்டு கட்டுக்கோப்போடு எழுதப்பட்டு இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
நன்றிங்க சார்