PDA

View Full Version : காகிதப் பாலங்கள்



ரமணி
09-04-2013, 01:59 AM
காகிதப் பாலங்கள்
சாவி, 15 Oct 1980
காகிதப் பாலங்கள்
ஜி.எச்.எஸ். மணியன்

"லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்..."

"ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர்? என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே...!"

"ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா..."

"ரெண்டு லெட்டரா?... வொண்ணுதானே காண்பிச்சே?"

"நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே?"

"யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம்? ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா. என்னமோ நீ இங்கே முள்ளுமேலே இருக்கறதா நெனைப்பு அவங்களுக்கு."

முள்ளின் மேலே இருப்பது பரவாயில்லே... அன்றைக்கு அப்படித்தான்... கடைத்தெருவுக்குப்போனபோது அவளைப் பார்த்தாள். உம்மிடியார்ஸுக்குப் பக்கத்தில் என்று ஞாபகம். உடம்பின் முக்கால் பகுதியை துணி வெறுமனே விட்டிருந்தது. முள்-படுக்கையில் படுத்திருந்தாள். கண்களில் வெற்றுப் பார்வை. செம்மண் சடைக் கொத்துக்கள். அவள் பக்கத்தில் ஒரு அலுமினியக் குவளை. பழக்கப்படுத்தியே வேதனையை அடக்கிக் கொண்டிருப்பாள் என்று பட்டது.

இங்கு மனசுதான் ரணமாக்கப்பட்டது. வார்த்தை முட்களாய்... இதுவும் கொஞ்ச நாட்களில் பழக்கமாகி விடும்.

"எழுதி முடிச்சுட்டியாடி கௌசல்யா?" என்றபடியே ஹாலுக்குள் வந்தாள் அவள் ’அம்மா’... அதாவது, அவளோட அவரின் அம்மா. அவள் இப்படிக் கேட்டதற்கு லெட்டரைப் படித்துக் காட்டேன் என்று அர்த்தம்...

"கவர்ல எழுதறயா?... கவர் எதுக்கு? ஒரு கார்டுல ரெண்டு வரி எழுதிப்போட்டா பத்தாது? உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே!"

கௌசல்யாவின் விழிக்கடைகளில் நீர் முத்துக்கள் தென்பட்டன. "படிக்கறேம்மா, கேக்கறேளா?"

"ம்...ம்... பாபுக்கு ரெடியா கரைச்சு வச்சிருக்கியா?"

"ரெடியா இருக்கும்மா! அது எழுந்திருக்க நாழியாகும். ம்... அன்புள்ள அண்ணாவுக்கு கௌசல்யா அநேக நமஸ்காரம். அப்பா நலமாக வந்து சேர்ந்திருப்பா (எழுதியிருந்தது: அப்பா விவரமெல்லாம் சொல்லியிருப்பார். அவரிடம் சரியாகவே பேச முடியவில்லை.) இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்யம். பாபு... ம்... சமர்த்தாக இருக்கிறது. ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுகிறது. (படிக்காமல் விட்டது: பாபு வரவர முரண்டு பிடிக்கிறது. இந்த வயசிலேயே இத்தனை பிடிவாதம். இவரை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு.) நிற்க, இவருக்கு ஆபீஸில் ஜாஸ்தி வேலை. எக்ஸாஸ்டட் ஆக வருகிறார். அட்வான்ஸஸ் செக்க்ஷன் பார்க்கிறார். சீ.ஏ.ஐ.ஐ.பி.யில்..." என்று ஆரம்பிததுமே,

"அதெல்லாம் எதுக்கு எழுதறே? அவன் பெயிலாயிட்டான்னு அப்படியே உங்க வீட்டுக்கு ஒப்பிக்கணுமாக்கும்?"

"..."

"சரி சரி, படி! மணி பன்னெண்டாகப் போறது."

"அக்கௌண்டன்ஸி பாஸ் பண்ணிவிட்டார். அறுபத்தெட்டு மார்க்... ம்... இவருக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். (படிக்காமல் விட்டது: அக்கௌண்டன்ஸியை ஜுரத்தோடுபோய் கடனுக்கேன்னு எழுதினார். அவுட்!) நான் நேற்று ஒரு கதை எழுதி முடித்தேன்..."

"அதை நல்லா எழுது."

"ஜன்னலைப் பார்த்துண்டே உக்காந்துண்டிருக்கேன். கதை எழுதி பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கேன்னு..."

"உருப்படியா வேற என்ன பண்றே? இந்த லட்சணத்துலே அப்பா உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணனும்னு நாயா அலையறார்... அப்பறம் என்ன எழுதி இருக்கே?"

"இன்னும் அனுப்பவில்லை. அனு எப்படியிருக்கிறாள்? (அவளுக்காவது இந்தமாதிரி பிடுங்கல்கள் இல்லாத... உடனே வேறமாதிரி பிடுங்கல்கள்னு ஜோக் அடிக்காதே.) ஜாதகம் ஏதாவது வந்ததா? சூரியநாராயணின் ஜாதகம் அப்பாவிடம் வாங்கிக்கொள். அடிக்கடி லெட்டர் போடு. (இந்த லெட்டர் ஒண்ணுதான் நமக்கு எல்லாம் ஒரு பாலமா இருக்கு. அது வழியாத்தான் நான் அங்கே வரமுடியும், புரிந்ததா?) அன்புள்ள உன் தங்கை கௌசல்யா ராமச்சந்திரன். பி.கு. மன்னிக்கு என் ரிகார்ட்ஸ்."

"அவ்வளவுதானா? ஒண்ணு மாத்திரம் சொல்லணும். நீ எழுதற கதையெல்லாம் உன் லெட்டரைவிட சின்னதாத்தான் இருக்கு... கட்டாயமா!"

"பக்கத்து லெட்டர் பாக்ஸ்ல இதைப் போட்டுட்டு வந்துடறேம்மா!"

"இருக்கட்டும். அதை அப்படியே அலமாரிலே வை. உங்க அண்ணாவுக்கு, அப்பாகூட ரெண்டு வரி எழுதணும்னு சொன்னார். ஏதோ அந்த ரெண்டாயிரத்தை இப்பவே தந்துடறேன்னு உன் அண்ணா வீராப்புப் பேசினான்? அப்பா எழுதினவுடனே போஸ்ட் பண்ணிக்கலாம்."

கௌசல்யாவுக்கு இருட்டிக்கொண்டது. லெட்டரில் தான் படிக்காமல் விட்ட வரிகள், மாற்றிப் படித்த வரிகள்... சமாளித்துக்கொண்டு,

"அப்பாவுக்கு நகச்சுத்தி மாதிரி இருக்குன்னாரே... அவர் சொல்லட்டும், நானே எழுதிடறேன்."

"சரி சரி..." என்று மாமியார் தலயைச் சாய்த்துக்கொண்டார்.

கௌசல்யா ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு, தான் நேற்று எழுதி முடித்திருந்த கதையைத் திரும்பப் படிக்க ஆரம்பித்தாள்.

இந்தக் கதை எழுதுவதுமட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படியிருக்கும் எந்று யோசித்துப் பார்த்தாள்.

"பேப்பரை வேஸ்ட் பண்ணிக்கிட்டு" என்று மாமியார் இரைந்தது மூளைக்குள் குதித்துக்கொண்டிருந்தது. இருக்கலாம். ஆனால் இந்தக் கதை எழுதறதுதான் அவளுக்கும், ஒரு புது உலகத்திற்குமிடையே பாலம் போட்டுத் தருகிறது.

அது ஒரு புது உலகங்கூட இல்லை. அது ஒரு அழகான ரோஜாத் தோட்டம்! சின்ன ரோஜாத் தோட்டம்! கற்பனை ரோஜாத் தோட்டந்தான்!

"ஏ கௌசல்யா! ஆரம்பிச்சுட்டியா, ஜன்னலைப் பார்த்துண்டு ஒக்காந்திருக்கிறதை! போஸ்ட்மேன் எதையோ விட்டெறிஞ்சுட்டுப் போனான். என்னன்னு பாரு...!"

போஸ்ட்மேன் விட்டெறிந்ததைப் பார்த்தவுடனே... எல்லா நமைச்சல்களையும் மீறிக்கொண்டு சந்தோஷம் குமிழியிட்டது!

’இந்த வாரம்’ பத்திரிகை அவளுக்கு வந்திருந்தது, அவளுடைய முதல் கதை பிரசுரமாகி!

"அம்மா, அம்மா... இதைப் பாருங்களேன். என் கதை வந்திருக்கு! அ..ப்..பா! பகவான் என்னை ஏமாத்தலே..." பத்திரிகையை மார்போடு அணைத்துக்கொண்டாள்.

"என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோம்மா! அப்பாகிட்டே காட்டணும்! சாயங்காலம் அவர்கிட்ட காட்டணும்!"

மறுபடியும் கதவு தட்டப்பட்டது. இந்தத் தடவை, "அம்மா, மணியார்டர்"---போஸ்ட்மேன்.

"யாருக்கு மணியார்டர் போஸ்ட்மேன்? அவருக்குன்னா ஆதரைசேஷன் இருக்கு."

"மணியார்டர் உங்களுக்குத்தாம்மா! நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களா? ஒரு செவண்டிஃபைவ் ருபிஸ் வந்திருக்கும்மா, ’இந்த வாரம்’ பத்திரிகையிலிருந்து."

சந்தோஷம் பிரவாகமெடுத்தது. கைவிரல்கள் லேசாக நடுங்கின. தாழ்ப்பாளைப் பிடித்துக்கொண்டாள்.

"இந்தாங்கம்மா. எனக்கு ரொம்ப சந்தோஷம்மா... நான் லெட்டர்ஸ் போடற லொகாலிட்டிலே ஒரு எழுத்தாளர் அம்மா இருக்காங்கன்னா எனக்கு சந்தோஷம் இல்லீங்களா? வரேம்மா... நெறைய எழுதிக்கிட்டே இருங்க."

’ஆகட்டும்’ பாணியில் தலையாட்டத்தான் முடிந்தது.

"அங்கே யாருகூட அரட்டை கௌசல்யா?"

"அம்மா! இதோ பாருங்கம்மா, இப்ப பிரசுரமாச்சுல்லே கதை, அதுக்கு சன்மானம் அனுப்பிச்சிருக்காம்மா... எழுபத்தஞ்சு ரூபா!"

’அம்மா’ எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

"என்னோட மொதல் கதைம்மா இது, நமஸ்காரம் பண்ணிக்கறேன்..."

கௌசல்யா குனிந்து பின்னல் தரையில் புரள, கால் கட்டை விரல் சொடக்கிடச் சேவித்தாள்.

"பணம் கொடுப்பாளா இதுக்கெல்லாம்? அப்பன்னா நீ நெறைய எழுதலாமே! இப்படி ஜன்னலைப் பார்த்துண்டு ஒக்காந்திருக்கற நேரத்துக்கு... பாபு வேற தூங்கிண்டிருக்கு... எவ்ளோ இது?"

"எழுபத்தஞ்சு ரூபாம்மா!"

கௌசல்யா நிமிர்ந்து மாமியாரைப் பார்த்தாள்.

அவளுக்கும், தனக்கும் உள்ள உறவில் புதிதாக ஒரு பாலம் தென்பட்டது.

அதுவும் காகிதப் பாலம்தான்!

*** *** ***

கும்பகோணத்துப்பிள்ளை
09-04-2013, 02:26 AM
பணமும் காகிதம்தான்.... அனால் அது எவ்விதம் மனிதர்களை மாற்றுகிறது!

சிவா.ஜி
09-04-2013, 11:41 AM
காகிதப்பாலம்.....எத்தனை அர்த்தம் பொதிந்த முத்தாய்ப்பான வார்த்தைகள். மிக இயல்பான கதையோட்டம், உரையாடல்கள் மூலமாகவே பாத்திரங்களின் குணாதிசயங்களின் பிரதிபலிப்பு....நல்லதொரு கதைக்கு பாராட்டுக்கள் ரமணி ஐயா.

ரமணி
09-04-2013, 12:04 PM
கதையை எழுதியவர் மறைந்த என் தம்பியாவர். இதுபற்றி இந்த அஞ்சலில் குறித்துள்ளேன்:
http://www.tamilmantram.com/vb/showthread.php/31082-ரமணியின்-கதைகள்?p=572635&viewfull=1#post572635

dellas
09-04-2013, 03:47 PM
மிதிப்பதிலிருந்து மதித்தலுக்கு மாறச் செய்வது காகித பணமே.!.எதார்த்தமான உண்மை.

நல்ல கதையோட்டம் ..பாராட்டுக்கள்.
--

கீதம்
09-04-2013, 11:41 PM
கண்ணீர் நதியைக் கடக்க உதவும் காகிதப்பாலங்கள்! மனத்துக்கு அல்லாமல் பணத்துக்கு மதிப்பளிக்கும் புகுந்த வீட்டு உறவுகளிடையே சிக்கிய ஒரு பெண்ணின் எண்ணச்சிக்கலை மிக அருமையாய் வெளிப்படுத்திய உரையாடல்கள் வெகு நேர்த்தி!

மறைந்த கதாசிரியருக்கும் மகிழ்வாய் எம்மோடு பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் பாராட்டுகள்.

இராஜிசங்கர்
10-04-2013, 05:43 AM
[b][SIZE=3][color=#000080]

"பணம் கொடுப்பாளா இதுக்கெல்லாம்? அப்பன்னா நீ நெறைய எழுதலாமே! இப்படி ஜன்னலைப் பார்த்துண்டு ஒக்காந்திருக்கற நேரத்துக்கு... பாபு வேற தூங்கிண்டிருக்கு... எவ்ளோ இது?"

"எழுபத்தஞ்சு ரூபாம்மா!"

கௌசல்யா நிமிர்ந்து மாமியாரைப் பார்த்தாள்.

அவளுக்கும், தனக்கும் உள்ள உறவில் புதிதாக ஒரு பாலம் தென்பட்டது.

அதுவும் காகிதப் பாலம்தான்!

*** *** ***

ஆமாம்.. காகிதப் பாலம்தான். கணம் தாளாமல் ஒரு நாள் கிழிந்தும் கூடப் போகலாம்.

நல்ல கதை. வாழ்த்துக்கள்.

இராஜேஸ்வரன்
10-04-2013, 09:22 AM
காரணம் எதுவாக இருந்தால் என்ன? பாலம் ஏற்பட்டதே ஒரு இனிமையான அனுபவம்தானே!

அற்புதமான கதை. மனமார்ந்த பாராட்டுக்கள்.

மும்பை நாதன்
28-08-2013, 05:31 PM
எந்த ஒரு நிகழ்வாய் இருந்தாலும் அதனால் எனக்கு என்ன பலன் என்று பார்க்கும் மனோபாவத்திற்கு நாயகியின் 'அம்மா'வும் விலக்கு இல்லை.
கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மும்பை நாதன்