PDA

View Full Version : பெருசும், சிறுசும்.



M.Jagadeesan
06-04-2013, 03:42 PM
காலை 9 மணி. அது ஒரு ஹார்டுவேர் பொருட்கள் விற்பனை செய்யும் கடை. வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள், கார்ப்பெண்டர்கள், பெயிண்டர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்தக் கடைக்கு வந்தார். கூட்ட நெரிசலில் நுழைய முடியாமல் சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தார். பத்து நிமிடம் சென்றிருக்கும். கூட்டம் குறைந்த பாடில்லை. கல்லாவில் உட்கார்ந்திருந்த கடை முதலாளி பெரியவரைப் பார்த்து

" பெருசு ! உங்களுக்கு என்ன வேணும் ?" என்று கேட்டார்.

" புருசு வேணும்." என்றார் பெரியவர்.

" எதுக்கு ?"

" வீட்டுக்கு வெள்ளையடிக்க ! எவ்வளவு விலை?"

" எழுபது ரூபா ஆகும்."

" சரி, ஒன்னு கொடுங்க."

" பெருசுக்கு நல்லதா புருசு ஒன்னு எடுத்துக் குடுடா !" என்று கடைப் பையனிடம் சொல்லிவிட்டு மற்றவர்களைக் கவனித்தார் கடை முதலாளி.

கடைப்பையன், பெரியவருக்கு ஒரு புருசு கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட பெரியவர் , கடை முதலாளியிடம் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார். அதை வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டார் கடை முதலாளி. உடனடியாக சில்லறை கொடுப்பதற்குள் , கைபேசி சிணுங்கவே ,அதை எடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

பெரியவர் கால்மணி நேரமாக நின்றுகொண்டிருந்தார். பெரியவருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறையை மறந்துவிட்டு , வியாபாரத்தைக் கவனித்தார் கடை முதலாளி.

" ஐயா ! எனக்குப் பாக்கித்தொகையைக் கொடுத்தீங்கன்னா நான் போயிடுவேன்! என்னால நிக்க முடியல !"

" உடனே முதலாளி, பெருசு ! நீங்க என்ன வாங்கினீங்க? எவ்வளவு கொடுத்தீங்க ?" என்று கேட்டார்.

" இந்தப் புருசு ஒன்னு வாங்கினேன்; ஐந்நூறு ரூபாய் கொடுத்தேன். " என்றார் பெரியவர். சொல்லி முடிப்பதற்குள் பெரியவருக்கு வியர்த்தது.

மீதி 430 ரூபாயை பெரியவரிடம் கடைக்காரர் கொடுத்தார்.

அவசர அவசரமாக ரூபாயை வாங்கி , பேண்ட் பைக்குள் திணித்துக்கொண்டு பெரியவர் புறப்பட்டார். கர்சீப்பால் தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

பெரியவர் சிறிது தூரம் சென்றிருப்பார்.

" தாத்தா ! தாத்தா !" என்ற குரல் கேட்டு பெரியவர் திரும்பினார். தன்னை நோக்கி ஒரு பத்துவயதுப் பையன் ஓடி வருவதைக் கண்டார்.

பெரியவரிடம் வந்த அந்தப் பையன், " தாத்தா! நீங்க கர்சீப் எடுக்கும்போது , உங்க பேண்ட் பாக்கெட்டிலிருந்து இந்த ரூபா நோட்டுங்க கீழே விழுந்துடிச்சி ! இந்தாங்க " என்று சொல்லிக் கொடுத்தான். கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே அந்தப் பையன் ஓடிவிட்டான்.

பெரியவர் அந்தப் பணத்தை உற்றுப் பார்த்தார். அந்த ரூபாய் நோட்டிலிருந்த காந்தித் தாத்தா , பெரியவரைப் பார்த்து,

" நீயும் பெருசு; நானும் பெருசு, ஆனால் நமக்குள்ளே எத்தனை வித்தியாசம்! " என்று கேட்பதுபோல் தோன்றவே பெரியவர் குற்ற உணர்ச்சியால் தலை கவிழ்ந்தார்.

நீதி
====

பெருசுகள் எல்லாம் பெரியோர் அல்லர்
சிறிசுகள் எல்லாம் சிறியோர் அல்லர்
பெருசுகள் பலபேர் சிறியோர் ஆவதும்
சிறிசுகள் சிலபேர் பெரியோர் ஆவதும்
அவரவர் செயலால் விளைவது தானே!

கலைவேந்தன்
06-04-2013, 04:19 PM
அருமையான பதிவு ஐயா... நன்றி.

முரளி
07-04-2013, 01:40 AM
மிக அழகாக சொன்னீர்கள். பொய்யும் பித்தலாட்டமும் எந்த வயசிலும் இருக்கும், தேவைதான் மனிதனை உந்தி தள்ளுகிறது என்பது உண்மையே.

ரமணி
07-04-2013, 02:02 AM
கதையின் செய்தியும் ஓட்டமும் அருமை. அந்தக் கடைசி வரியை நீக்கிவிட்டால் இது ஒரு நீதிக் கதையாக இருப்பது சிறுகதையாக மாறும்.

M.Jagadeesan
08-04-2013, 01:03 AM
கலைவேந்தன், முரளி, ரமணி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

இராஜிசங்கர்
08-04-2013, 07:04 AM
பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே..

நல்ல பதிவு ஐயா!

M.Jagadeesan
08-04-2013, 09:49 AM
புடம்போட்ட புறநானூற்று வரிகளால் பின்னூட்டமிட்ட இராஜிசங்கருக்கு நன்றி.

dellas
08-04-2013, 05:50 PM
நல்ல நீதி ..

பாராட்டுக்கள்.

M.Jagadeesan
09-04-2013, 01:47 AM
டெல்லாஸ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

கீதம்
09-04-2013, 11:57 PM
வயதால் அன்று, தன் செயல்களாலேயே பெரியவர், சிறியவர் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள் மனிதர்கள் என்னும் அருமையானக் கருத்தை அழகானக் கதையின் மூலம் உணரச் செய்தமைக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
10-04-2013, 02:12 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

jayanth
10-04-2013, 03:11 AM
நம்மிலும் பல பேர் "பெருசு" போல் இருக்கிறார்கள்...!!!

M.Jagadeesan
10-04-2013, 03:37 AM
நம்மிலும் பல பேர் "பெருசு" போல் இருக்கிறார்கள்...!!!

உண்மைதான் ஜெயந்த்.

மும்பை நாதன்
28-08-2013, 05:38 PM
பிறருக்கு தெரிந்து விடாது என்ற நிலையில் இதுபோல் செய்பவர்கள்தான் ஏனென்று தெரியாமலே சில சமயம் நஷ்டப்படுகின்றனர்.
பதிவுக்கு நன்றி.