PDA

View Full Version : பார்வைகள் பலவிதம் ! - by முரளி



முரளி
06-04-2013, 05:34 AM
காலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். பஸ், புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அம்பத்தூரிலிருந்து திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் வரை, ஜெமினி, சத்யம் தியேட்டர் வழியாக இந்த அரசாங்க பேருந்து பயணிக்கும்.

பேருந்து வசதி குறைவு. கொஞ்சம் பழைய வண்டி. ஆனால், டிலக்ஸ் என போர்டு போட்டு விட்டதனால், டிக்கெட் காசு கொஞ்சம் அதிகம்.

கண்டக்டர், டிக்கட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். டிரைவர் டீ கடையில், தன் சக நண்பர்களுடன், வரப்போகும் ஊழியர் சங்க தேர்தலில் நிற்பவர்களில், எவன் அயோக்கியன், எவன் முள்ளமாரி , இவர்களில் யார் தேவலாம் என்பது பற்றி கார சாரமாக, கையில் சமூசாவை வைத்துக்கொண்டு , வைதுக் கொண்டிருந்தார்.

கண்டக்டர் எட்டிப்பார்த்து, தனக்காக விசில் அடிப்பதை அசிரத்தையோட நோக்கி , “வரேன்! வரேன்!” என்று சைகை காட்டினார், வண்டியை நோக்கி திரும்பினார் . அவர் தன் நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று வண்டியில் ஏறி அமர்ந்தவுடன் ,பேருந்து கிளம்ப வேண்டியது தான்.

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSBGcfNvXGeUjiQDKlhMAvG6_ojmJMKHkeJDcxkUCViHqyJqMOM

அலுவலகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்பவர்கள் அவசர அவசரமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஆயிற்று, ஏறக்குறைய ஒரு நான்கு ஐந்து இருக்கை தவிர வண்டி நிரம்பி விட்டது.

பேருந்து கிளம்பியது. முதல் நிறுத்தம், ஐஸ்வரியா பிளாட்ஸ். பெயரை வைத்து எதையும் எடை போட முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக, அங்கங்கே காறை பெயர்ந்து, பல்லிளிக்கும் குடியிருப்பு. நடுத்தர வர்க்க, கீழ் மட்ட மக்களுக்கான உளுத்துப் போன, 40 வருட, 500 சதுர அடி புறாக்கூண்டுகள். இவ்வளவு நாள் அந்த கட்டிடம் நின்று கொண்டிருப்பதே ஒரு அதிசயம்.

அந்த நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், பத்து பதினைந்து பேர் தடதடவென அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினர். அவர்கள் கண்கள் காலியான இருக்கைகளை தேடிக்கொண்டே. அவர்களிடையே அவசரம். ஒவ்வொருவரிடமும், ஒரு மியூசிகல் சேர் இடம் பிடிப்பது போல் ஒரு பதற்றம்.

இந்த களேபரத்தில், ஒரு முதியவர், கிட்டதட்ட ஒரு 65 வயதிருக்கும், ஒரு காலி இருக்கையை தனது காடராக்ட் கண்களால் கண்டு பிடித்து, அதை நோக்கி அவரால் முடிந்த வேகத்தில் ஓடினார். அவர் ஒரு நோயாளி என்பது அவரது முக சோர்விலேயே தெரிந்தது. வயது கொஞ்சம் அதிகம். ஆரோக்கியம் கொஞ்சம் கம்மி. சில பல அரசு பேருந்து போல.

அவர் இருக்கையை அடையுமுன், அவருக்கு பின்னால்,முட்டி அடித்து முன்னேறி வந்த ஒரு 20-25 வயது, வாட்ட சாட்டமான இளைஞன், அவரை இடித்து தள்ளி விட்டு, எகிறி குதித்து, அந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனது முகத்தில், ஒரு கோப்பையை தட்டிய மலர்ச்சி. 'பெண்கள்" கூட்டம் பக்கம் திரும்பி தன் ராஜ பார்வையை ஓட விட்டான், தன் திறமையை மெச்சி , யாரேனும் தன்னை சைட் அடிக்கிறார்களா என தெரிந்து கொள்ள. வயதில் பெரியவரை தள்ளி விட்டோமே என்ற வருத்தம் அவனிடம் சிறிதும் இல்லை. பெரியவரிடம், ஒரு சின்ன சாரி கூட கேட்கவில்லை.

சிகப்பு நிற சட்டை, தாடை வரை கிருதா, வாராத தலை, ஐந்து நாள் தாடி, கொஞ்சம் சிவந்த கண்கள். சண்டைக்கு தயார் என்ற தோற்றம் அவனுக்கு. பின்னாளில், முயற்சி பண்ணினால், அவன் அரசியலில் ஒரு சிறந்த அள்ளைக்கையாகவோ, ஒரு கட்சி அடியாளாகவோ ஆக நிறைய வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. எனவே, அவனை தட்டி கேட்கிற தைரியம், சுற்றி இருந்த எவருக்கும் இருந்ததாக தெரியவில்லை.

பெரியவர், பாவம், தள்ளாடி எழுந்து கொண்டார். கம்பியை பிடித்து கொண்டு. “த்சொ! த்சொ” கொட்டினார்கள், அருகிலிருந்த சிலர். “பெரியவரே, பார்த்து! பார்த்து!,” என்றனர். அவரது தள்ளாமை கண்டு சிலருக்கு அனுதாபம்.

இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நாகரிக யுவதி, அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அருவருப்புடன் பக்கத்து சீட் காரியிடம் முணுமுணுத்தாள். “ சே! என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு! பார்த்தீங்களா ? இந்த மாதிரியா அநாகரிகமாக நடந்து கொள்வார்கள்?”

இன்னொரு பயணி, ஒரு வக்கீல் கோபப்பட்டார் , “ சார் ! இந்த மாதிரி நடந்துகிறவர்களை கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்கணும்!. பொறுக்கி பசங்க. இதுக்கு ஏதாவது சட்டம் இருக்கா, பாக்கறேன்?”

மூன்றாவது ஒரு நர்ஸ் “ ஐயோ பாவம்! இந்த வயசானவர் கீழே விழுந்துட்டாரே! அடி கிடி பட்டிருக்குமோ?”. அவளது பார்வை அப்படி!

நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளர் “ வளர்ப்பு சரியில்லை சார். அப்பா அம்மா சரியாயிருந்தா, இந்த பையன் நிச்சயமா இப்படி நடக்க மாட்டான்! இந்த பையன் சரியான மெண்டல் கேசா இருக்கும்”. அவர் கொஞ்சம் ஜட்ஜ்-மெண்டல் டைப்.

பெண்கள் பகுதியில், ஒரு 45 வயது பெண்மணி, குழந்தை இல்லாதவள், “இந்த மாதிரி பசங்களை பெத்துக்காம இருக்கறதே புண்ணியம்!” பக்கத்தில் இருப்பவளிடம் பொருமினாள். இவ்வாறு சொல்வதே அவளது இயல்பாகி விட்டது. அவளது மன உளைச்சலுக்கு அதுவே ஒரு எஸ்கேப் ரூட். அவளது புண்ணுக்கு அவளாக தேடிக் கொண்ட ஒரு மருந்து.

கல்லூரி பெண் ஒன்றை கரெக்ட் பண்ணிக் கொண்டிருந்த ஒரு மாணவன் “பாத்து பெருசு! ஏன் இந்த கூட்டத்திலே வந்து கஷ்டப் படறீங்க! ஆட்டோல போலாமில்லே!”. நக்கலுக்கு, களுக்கென்று சிரித்தாள் அந்த பெண். விடலைப் பசங்களின் உலகமே வேறே.

அதை பார்த்து பொறாமை பட்ட சக மாணவன், தன் பங்குக்கு “மேல போக டிக்கெட் எடுங்க பெரியவரே! இங்கே வந்து எடுக்கறீங்க?”. கூவினான். இதுக்கும் ஒரு களுக் அந்த பெண்ணிடமிருந்து. 'எத்தனை பசங்க என்னை பாத்து வழியறாங்க!', யவ்வன கர்வம் அந்த பெண்ணின் முகத்தில்..

“முதியவர்களுக்கு மட்டும்” இருக்கையில் அமர்ந்திருந்தான் ஒரு 35 வயது இளையவன். எங்கே தன்னை எழுந்துக்க சொல்லுவாங்களோ என்று, ஆஸ்டிரிச் பறவை போல தலையை குனிந்து கொண்டான். யாரையும் பார்ப்பதை தவிர்த்தான்

ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. கீழே விழுந்த பெரியவருக்கு யாரும் எழுந்து இடம் கொடுக்க தயாரில்லை. மனமுமில்லை. ‘வேறே யாராவது இடம் தரட்டுமே? நான் ஏன் தரணும்? அப்புறம் , யார் இந்த கூட்டத்தில் நின்னுகிட்டே பிரயாணம் பண்றது?”

அவரவர் பாணியில், அவரது படிப்பு, வேலை, மன நிலைக்கேற்ப, தங்கள் எண்ண வெளிப்பாட்டை முணு முணுத்தனர். ஏதோ அவர்களால் முடிந்தது இவ்வளவுதான் !

கண்டக்டர் அவரது இடத்திலேருந்து “ டிக்கெட்! டிக்கெட்!” என்று கத்தினார்.

பெரியவர் “ சத்யம் ஒரு டிக்கெட் கொடுங்க!”

“இந்தாங்க சார் டிக்கெட்! அடி கிடி ஒண்ணும் படலியே!”

“ஒண்ணும் ஆவலை கண்டக்டர் சார். தேங்க்ஸ்”

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் சூள் கொட்டினார் “ சார், பாவம், கீழே விழுந்தாட்டாறேன்னு யாராவது எழுந்து இடம் கொடுக்கறான்களா பாருங்க! அவன் அவனுக்கு தன் சௌகரியம்தான் முக்கியம்!”. அவரது குரலில் தான் நிற்கிறோமே , மற்றவர்கள் வசதியாக உட்கார்ந்து வருகிறார்களே என்ற ஆற்றாமை, லேசாக தெரிந்தது.

“இந்த காலத்து பசங்களே இப்படித்தான்! பெரியவங்க கிட்டே மரியாதை இல்லை”- பருமனானவர் பக்கத்தில், கிடைத்த கால் இருக்கையில் , குடை சாயாமல் உட்கார, பிரம்ம பிரயத்தனம் பண்ணி கொண்டிருந்த, மற்றொரு சீனியர் சிடிசன் முணுமுணுத்தார்.

“உங்களை இப்படி இடிச்சு தள்ளிட்டு , அந்த பையன் எப்படி அதப்பா உக்காந்திருக்கான் பாருங்க? அவனை தட்டி கேட்க இங்கே யாருக்கும் தைரியமில்லை !” – இன்னொருவர் அங்கலாய்த்தார், இருக்கையில் அமர்ந்து கொண்டு.

கண்டக்டர் “ சார்! பெரியவரே! நீங்க வேணா என் சீட்லே உக்காந்துக்கோங்க! ”

விழுந்த பெரியவர் சொன்னார் “ வேண்டாங்க. தேங்க்ஸ். இருக்கட்டும்."

கண்டக்டர் “ சார், இங்கே யாரையும் கேக்க முடியாது. அந்த பையனை போய் எழுந்திருக்க சொன்னா, சண்டைக்கு வருவான்.பொறுக்கி மாதிரி இருக்கான். எதுக்கு வம்பு ? நீங்க இங்கேயே உக்காருங்க சார்”.

கண்டக்டரின் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ,இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, டிப் டாப்பாக உடையணிந்த ஒரு நாகரிக இளைஞன், “சார்! இங்கே வந்து என் இருக்கையிலே அமர்ந்து கொள்ளுங்கள்!”

“இருக்கட்டும்பா !வேண்டாம்பா!” அவசரமாக மறுத்தார் பெரியவர்.

“இல்லே சார்!, இதுலே என்ன இருக்கு? என்னாலே நிக்க முடியும்! நீங்க உக்காருங்க ப்ளீஸ்!”

வெயில் கண்ணாடி அணிந்திருந்த அந்த நாகரிக இளைஞன், தட்டுத்தடுமாறி கம்பியை பிடித்து கொண்டு எழுந்தான்.

மனசிருக்கே அவனுக்கு! பார்வை இல்லையென்றால் என்ன?




****முற்றும்.



( ஷிவ கேரா எழுதிய நூல் ஒன்று படித்ததின் தாக்கம்)

ரமணி
06-04-2013, 06:14 AM
நல்ல ஐடியா. ஆனால் அந்த 'என் பிள்ளை/உன் பிள்ளை' முறுக்கு (twist) கதையின் யதார்த்தத்தைக் கெடுக்கிறது என்பது என் கருத்து.

முரளி
06-04-2013, 06:38 AM
நன்றி ரமணி, நீங்க சொன்னது போல், முறுக்கை எடுத்திட்டேன். முறுக்கு கொஞ்சம் பிடிக்கும். அதானாலே ஹி... ஹி..

M.Jagadeesan
06-04-2013, 07:15 AM
இப்போதெல்லாம் பெரிசுகளைப் பார்த்தால் பெண்கள் எழுந்து இடம் கொடுக்கிறார்கள்; அந்த இரக்கம் ஆண்களிடம் இல்லை.

முரளிக்கே கைவந்த முத்திரைநடை கதையில் பளிச்சிடுகிறது. பேருந்தில் அன்றாடம் நடக்கின்ற ஒரு சிறிய சம்பவத்தைக் கொண்டு சிந்திக்க வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் முரளி.

sarcharan
08-04-2013, 05:50 AM
காலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். 275 A பஸ். அரசாங்க சொகுகு பேருந்து. வசதி குறைவு. ஆனால் டிக்கெட் காசு அதிகம்.


குபேரன் பிளாட்ஸ். குடியிருப்பு பேர் தான் பணக்கார பேர். உண்மையில், நடுத்தர வர்க்க, கீழ் மட்ட மக்களுக்கான உளுத்துப் போன, 40 வருட கட்டடம். இவ்வளவு நாள் நின்று கொண்டிருப்பதே ஆச்சரியம்.

சிகப்பு நிற சட்டை, தாடை வரை கிருதா, வாராத தலை, ஐந்து நாள் தாடி, கொஞ்சம் சிவந்த கண்கள். சண்டைக்கு தயார் என்ற தோற்றம் அவனுக்கு. பின்னாளில், முயற்சி பண்ணினால், அவன் அரசியலில் ஒரு சிறந்த அள்ளைக்கையாகவோ, அடியாளாகவோ ஆக வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. அவனை தட்டி கேட்கிற தைரியம், சுற்றி இருந்த எவருக்கும் இருந்ததாக தோன்றவில்லை.





உங்களது குசும்புக்கு ஒரு உதாரணம் ! நல்ல டைமிங் நகைச்சுவை








இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நாகரிக யுவதி, பள்ளி ஆசிரியை, ஒரு அருவருப்புடன் பக்கத்து சீட் காரியிடம் முணுமுணுத்தாள். “ சே! என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு! இந்த மாதிரியா அநாகரிகமாக நடந்து கொள்வார்கள்?”


மூன்றாவது ஒரு நர்ஸ் “ ஐயோ பாவம்! இந்த வயசானவர் கீழே விழுந்துட்டாரே! அடி கிடி பட்டிருக்குமோ?”


பெண்கள் பகுதியில், ஒரு 45 வயது பெண்மணி, குழந்தை இல்லாதவள், “இந்த மாதிரி பசங்களை பெத்துக்காம இருக்கறதே புண்ணியம்!”

நக்கலுக்கு, களுக்கென்று சிரித்தாள் அந்த பெண். அவங்க உலகமே வேறே.

இதுக்கும் ஒரு களுக் அந்த பெண்ணிடமிருந்து. 'எத்தனை பசங்க என்னை பாத்து வழியறாங்க!', கர்வம்.


இவர்கள் பெண்கள்!

இராஜிசங்கர்
08-04-2013, 07:53 AM
அப்டி சொல்லுங்க முரளி. எல்லா உபதேசமும் ஊருக்குத் தான். பரிவாய் பேசுவது(போல் நடிப்பது), சமுதாயத்தின் மேல் கோபம் கொள்வது
​(போல் நடிப்பது) இதெல்லாம் இந்தக் காலத்தில் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறி விட்டது. வார்த்தைகளில் இருக்கும் நவீனங்கள் என்று வாழ்க்கையாய் மாறுகிறதோ அப்பொழுது தான் உலகம் உருப்படும்.

பேருந்தில் நாம் அடிக்கடி பார்க்கும் காட்சி ஒன்று: கையில் குழந்தையுடன் பெண்மணி ஏறினால், பெரிய 'பேகன்' பீலிங்கில் குழந்தையை வாங்கிக் கொள்வோம். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த குழந்தை, நம்மை குளோஸ்-அப்பில் பார்த்ததும் கன்னாபின்னாவென்று கதறும். கொஞ்சல் என்று நினைத்து சில பல தத்து பித்துக்களை அவிழ்த்து விடுவோம். அது 'ஹாரன்' கொடுக்க ஆரம்பித்து விடும். வேறு வழியில்லாமல் குழந்தையை தாயிடம் கொடுத்து விடுவோம். ஏன், கொஞ்ச நேரம் எழுந்து கொண்டு அந்த அம்மாவையும் உட்காரச் சொன்னால் என்ன? அதற்கெல்லாம் மனசு வராது. பொதுவாகவே நாம் இப்படித் தான் இருக்கிறோமோ? நமக்கு (பணமாகவோ, பெயராகவோ, வசதியாகவோ)பலனென்றால் உதவி செய்கிறோம். இல்லாவிட்டால் சமூக அமைப்பின் மீது கோளாறு சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறோம். மனம் இன்னும் விசாலமாக வேண்டும்.

முரளி
08-04-2013, 01:00 PM
ரமணி, ஜெகதீசன், சர்சரன், இராஜி சங்கர் அனைவருக்கும் நன்றி.

dellas
08-04-2013, 05:47 PM
அபாரம்..முரளி. பார்வைகள் பலவிதம்தான்.

பாராட்டுக்கள்..

கும்பகோணத்துப்பிள்ளை
14-04-2013, 11:42 PM
பலருக்கு 'சுள்' ன்னு கொடுததீர்கள்.... ;) ... ;) நாமளும் ஒரு விதம்தான்!

மதி
16-04-2013, 04:38 AM
தினசரி அன்றாடம் பார்த்து உச் கொட்டிச்செல்லும் காட்சியை மனதில் உறைக்கின்ற மாதிரி அழகான் காட்சிப்படுத்தியுள்ளீர்கள். இறுதி டச் நச்..

முரளி
29-04-2013, 06:29 AM
நன்றி மதி, கும்பகோணத்து பிள்ளை மற்றும் டல்லஸ்.

A Thainis
29-04-2013, 10:06 AM
கண்கள் இல்லையென்றால் என்ன மனம் இருக்கே என்ற இறுதி வரிகள் காய்ந்துபோன நெஞ்சில் ஈராக்கற்றை வீசி சென்றது, பார்வைகள் பலவிதம் சமூக அக்கறையை அள்ளி தந்தது முரளிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
29-04-2013, 07:53 PM
இன்றைய சூழலில் இது ஒரு மாறுபட்ட உண்மை பார்வை..

முரளி
04-05-2013, 06:58 AM
நன்றி தைனிஸ், நாஞ்சில் த.க.ஜெய் .

அமரன்
04-05-2013, 11:23 AM
பேருந்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் "நிலை"யிலிருந்து கண்களை வீசியுள்ளார்கள். அந்த வகையில் பார்க்கையில் அந்த இளைஞனில் பிழையில்லை என்று தோன்றுகிறது. ஒருவராவது "மனிதன்"நிலையிலியிலிருந்து பார்வை வீசியிருந்தால் அவ்விளைஞனுக்கு சுளீர் கொடுத்தது போலிருக்கும்.

காந்தியின் போராட்டம் வென்றதற்கு உணர்த்தியமையே காரணம். உணர்த்துதலை நாம் எவரும் செய்யத் துணிவதில்லை. அவ்விளைஞனுக்கு உணர்த்த தட்டிக் கேட்க வேண்டும் என்றில்லை. அப்பெரியவருக்கு இருக்கையை விட்டுக் கொடுத்தாலே போதும். எல்லா விடயங்களிலும் நாம் இப்படித்தான் தப்பர்த்தம் கொண்டு தவறிழைக்கின்றோம்.

நல்ல கதை. பாராட்டுகள் முரளி.

முரளி
12-05-2013, 05:14 AM
நன்றி அமரன்.

கும்பகோணத்துப்பிள்ளை
16-05-2013, 10:00 PM
காந்தியின் போராட்டம் வென்றதற்கு உணர்த்தியமையே காரணம். உணர்த்துதலை நாம் எவரும் செய்யத் துணிவதில்லை.

சரியாகச்சொன்னீர்கள் அமரன்!
ஆனால் உணர்த்தினாலும் உணரக்கூடிய மனநிலையில் பெரும்பாலோர் இருப்பதில்லை. அப்படியே உணர்ந்தும் உணத்தியும் காரியங்கள் செய்தால் அதற்க்கும் ஒரு சுயநலத்தை கற்பித்தும் 'வந்துட்டார்யா வள்ளலு" என்று ஏளனம் செய்தும் சுயநலமிகுந்தும் வக்கரித்துப்போயுமிருக்கிறார்கள் பலர்.

Vinoth Kumar
18-05-2013, 08:43 AM
பார்வைகள் பலவிதம் ! :icon_b::icon_b:http://www.tamilmantram.com/vb/images/smilies/icon_b.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/food-smiley-004.gifhttp://www.tamilmantram.com/vb/images/smilies/medium-smiley-077.gif

irungovel
20-05-2013, 10:57 AM
நண்பரே, இது கற்பனை கதையாக இருந்தால் சரி. உண்மைச் சம்பவமாக இருந்தால், ஒரு கேள்வி, நீங்கள் முதல் நிறுத்ததிலேயே ஏறி அமர்ந்து விட்டீர்கள். ”ஐந்து இறுக்கைகள் காலியாகவும் இருந்தன.” - என்றும் எழுதியிருகிறீர்கள். நீங்கள் எழுந்து அந்த பெரியவருக்கு இடம் கொடுத்திருக்கலாமே? - தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நின்று கொண்டு வருவதில் உள்ள சிரமம் உணர்ந்து நான் கூட இடம் கொடுத்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.

முரளி
20-05-2013, 11:40 AM
நன்றி இருங்கோவேல். உங்கள் நகைச்சுவையை நான் ரசித்தேன்.

இது ஒரு கற்பனைக் கதை. ஒரு நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் எவ்விதம் பார்க்கிறார்கள், பார்வைக் கோணம் என்பது என்ன என விளக்கவே இந்த கதை. சமூகம் சார்ந்த மனவியல்.

உண்மையான சம்பவம் என்றே கூட வைத்துக் கொள்வோம். இந்த வண்டியில் நான் அமர்ந்திருந்தேன் என யார் உங்களுக்கு சொன்னார்கள்? யாரோ சொல்லிக் கூட நான் இந்த கதை எழுதியிருக்கலாமல்லவா? அல்லது நான் அந்த பெரியவரை விட வயது முதிர்ந்தவனாக கூட இருக்கலாமல்லவா?

இப்படி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கதையை, அந்த பேருந்தின் ஓட்டுனர் கூட எழுதியிருக்கலாம். நடத்துனர் சொல்லி, அவர் எழுதியிருக்கலாம்.ஓட்டுனர் எழுந்து இடம் கொடுத்திருக்கலாமே என்று நாம் சொல்ல முடியுமா? ஆவர காரியமா அது? :lachen001:

பாருங்கள், இந்த கதையை படித்த மற்றவர் விமர்சனத்திற்கும், உங்கள் பார்வைக் கோணத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்?

எனக்கென்னவோ, அந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், நிச்சயம் எழுந்து இடம் கொடுத்திருப்பீர்கள் எனவே தோன்றுகிறது. ஏனென்றால், நீங்கள் தமிழ் மன்ற உறுப்பினர்.

மும்பை நாதன்
25-08-2013, 03:06 PM
என்ன முரளி, பேருந்தில் ஏறினால் எறங்கறதுக்குள்ளே ஒரு கதை எழுதிடுவீங்க போல இருக்கு.
மிக இயல்பாய் ஒரு பேருந்தில் பார்க்கும் தினசரி காட்சியை வைத்து ஒரு சிறு கதை எழுதி இருப்பது உங்கள் திறமையை காட்டுகின்றது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்

முரளி
24-12-2015, 07:32 AM
நன்றி மும்பை நாதன் !

Keelai Naadaan
03-01-2016, 11:00 AM
அன்றாடம் பேருந்தில் நடக்கும் நிகழ்வுகளை அருமையாய் கதை ஆக்கி இருக்கிறீர்கள்.
நம் மனசாட்சியை உரசி பார்க்க செய்கிறது.

tnkesaven
14-01-2016, 06:05 AM
மனித நேயம் என்ற சொல் வழக்கொழுந்தி விட்டது

முரளி
10-04-2016, 01:41 PM
நன்றி கீழை நாடன் , கேசவன் . வினோத் குமார் : தாமதத்திற்கு மன்னிக்கவும் !