PDA

View Full Version : ஆணியே புடுங்க வேணாம்.



M.Jagadeesan
04-04-2013, 03:04 AM
ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம். கோபம் வராமல் உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டால், ஆணியும் அடிக்கவேண்டாம் ; ஆணியும் புடுங்க வேண்டாம்." என்று அறிவுரை கூறினார்.

" அப்பா! இனி உங்கள் அறிவுரைப்படியே நடந்துகொள்வேன்." என்றான் மகன்.


தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.(அடக்கமுடைமை-129)

பொருள்:
=====
நெருப்பினால் சுட்டபுண் ஆறினாலும், அதனால் ஏற்பட்ட வடு மாறாது நிலைத்து விடுவதைப்போல, நாவினால் பேசுகின்ற சுடுசொற்கள் ஒருவன் மனதில் ஆறாத புண்ணை ஏற்படுத்திவிடும்.

நன்றி: இணையத்திலிருந்து எடுத்தது.

கீதம்
04-04-2013, 08:59 AM
முன்பே அறிந்த கதை என்றாலும் அதிலிருக்கும் கருத்து என்றைக்கும் மனத்தில் இருத்த வேண்டிய ஒன்று.

கதையோடு குறளையும் சுட்டிக்காட்டி, கடுஞ்சொற்கள் உண்டாக்கும் வடுவினைச் சுட்டியமைக்கு நன்றி.

அன்புரசிகன்
05-04-2013, 05:30 AM
நல்லதொரு உத்தி... அப்போ கோபக்காரன் வீட்டுக்குப்பக்கத்தில ஒரு ஆணிக்கடை போடலாம் போல... :D .... நன்றி..

M.Jagadeesan
05-04-2013, 06:48 AM
கீதம், அன்புரசிகன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

sarcharan
05-04-2013, 09:32 AM
இந்த திரியின் தலைப்பைக்கண்டவுடன் வடிவேலு நகைச்சுவை மாதிரி ஒன்று இருக்கும் என்று எண்ணினேன்.

முற்றிலும் மாறுபட்டக்கதை.

முரளி
06-04-2013, 02:27 PM
அழகான குறளோவியம். நன்றி ஜெகதீசன்.

dellas
08-04-2013, 05:56 PM
ஆணி பிடுங்குவதிலும் இவ்வளவு இருக்குதா...??

நல்லவை எங்கிருந்தாலும் ஏற்பதே சிறப்பு.

பாராட்டுக்கள்..

M.Jagadeesan
09-04-2013, 01:46 AM
சர்சரண், முரளி, டெல்லாஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.

மும்பை நாதன்
28-08-2013, 05:53 PM
முன்பே படித்த கதைதான் என்றாலும் குறளை சேர்த்து தந்திருப்பது நன்றாக இருக்கிறது.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்