PDA

View Full Version : ஆறு மணியளவில்!



neechalkaran
19-03-2013, 05:56 AM
ஆகாய வீதியில் மேகங்கள்
விபத்துள்ளாகி கண்ணாடிகள்
உடைந்து தெறித்தோடியது

காக்கைகள் குளித்துக்
கொண்டிருக்க
கள்ளப்பார்வை
நீட்டியது அந்த நிலா

ஜன்னல்களுக்கு மேலே
வடிந்துக் கொண்டிருந்தவொன்று
வாசலில் படுத்துக் கொண்டது

எலக்ட்ரான்கள் வெடித்து
இறங்கிச் சென்ற
மின்சாரத்தைத் திருடியது
இடிதாங்கி

கனியாகிக் கொண்டிருந்த
காய்களின் பதவியேற்பு
விழாவில் மலர்தூவி வாழ்த்தியது
வானம்

குருவிகள் போட்டச்
சித்திரங்களை மழித்து
கழுவிக் கொண்டன கற்சிலைகள்

குடைக்குள் ஒளிந்துக்
கொண்டு மின்மினிகளுடன்
ஒரு கண்ணாம்பூச்சி

சக்கரம் கடித்தவுடன்
வானத்தை நோக்கி
காறித் துப்பியது
சாலையோரக் குழி

இருட்டின் முடிவில்
சொப்பனங்கள் சிதறிக் கொள்ளும்
நேரமாதலால் விடை பெற்றது
மழைக் கால நினைவுகள்

-நீச்சலகாரன் (http://neechalkaran.blogspot.com)

கீதம்
19-03-2013, 06:34 AM
ஒரு மழைக்கால மாலையை கவிநயத்துடன் கண்முன் விரித்த அழகுக்குப் பாராட்டுகள்.

ஆகாய வீதியில் மேக ஊர்திகள் மோதி வெடித்துச் சிதறும் கண்ணாடிச் சிதறல்களாய் மின்னல்கள்... அழகு வர்ணனை...

தொடர்ந்து பெய்யட்டும் கவிமழை.

ஜானகி
19-03-2013, 08:19 AM
சுண்ணாம்பும், மஞ்சளும் நீரில் கரைத்து, வாசல் கோலத்தின்மேல் கொட்டியது போல, கருத்தைக் கவருகிறது, எண்ணச் சிதறலான கவிதை....தொடரட்டும் !

dellas
19-03-2013, 08:32 AM
மேகமூட்டம் தொடங்கி சாலைக்குழிகள் வரை..அற்புதமாக வழிந்துள்ள கவிதை...

பாராட்டுக்கள்.

ஜான்
20-03-2013, 02:11 AM
நவீன எலெக்ட்ரான் களும் குடைக்குள் ஒளிந்து கொண்டதும் கண்ணா மூச்சியும் நன்று

பாராட்டுகள் நீச்சல்காரன்

Sasi Dharan
20-03-2013, 11:31 AM
அழகான வரிகள் அலங்கரிக்கின்றன..
மழைகால நினைவுகளில் காதலையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்!!!