PDA

View Full Version : இன்னும் ஒருவருடம்



dellas
12-03-2013, 04:31 PM
இன்னும் ஒருவருடம்


வியாழக்கிழமை விடியற்காலை 5.30 மணி, எங்கள் நிறுவனத்தின் சீருடை அணிந்து, அந்த ஒற்றை மதில் மேல் கூட்டத்தில்
ஒருவனாக வரிசையில் அமர்ந்திருக்கிறேன். பொழுது இன்னும் விடியவில்லை. அணிந்திருக்கும் காலணியையும், கையுறையும்
தாண்டி குளிர் ஊசியாய் குத்துகிறது. உடல் நடுங்குகிறது. உடன் அமர்ந்திருக்கும் சிலர் இன்னும் தூங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

சூடாக தேநீர் குடித்தால் குளிருக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் செலவை மனது கணக்கிடுகிறது. நேற்றிரவு சாப்பாடு சரியில்லை.
மூன்று வருட காலமாக அந்த உணவு விடுதியில் உண்டதில், சுவை நரம்புகள் மரத்துப்போய் விட்டதோ என தோன்றுகிறது. மாத
இறுதியில் பணம் கட்டினால் போதும் என்பதால், எதுவும் சொல்ல விரும்புவதில்லை. கிடைக்கும் வரும்படியில் மூன்றில் ஒரு பங்கு
சாப்பாட்டிற்கே ஆகி விடுகிறது.

தங்குமிடம் நிறுவனத்தின் பொறுப்பு. நான்குபேருக்கு அளவான அறையில் ஆறுபேர் தூங்குவது சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.
காலை மடக்கி தூங்கியதில் மூட்டுகள் இரண்டிலும் , சன்னமான வலி உணரமுடிகிறது. குளிரில் அது இன்னும் கொஞ்சம் மிகையாகத்
தெரிகிறது. அருகிலிருக்கும் சற்றே வயதான ஒருவர் தொடர்ந்து இருமிக்கொண்டிருக்கிறார். இரண்டு நாளாக அவருக்கு நல்ல இருமல்
இருக்கிறது. ஓய்வெடுக்கச் சொல்லியும், மறுத்தவிட்டார். இரண்டு மாதத்தில் தன மூத்த மகளுக்கு கல்யாணம் என்று
சொல்லிக்கொண்டிருந்தார்.

எங்களை அழைத்துச்செல்லும் வாகனம் புழுதி பறக்க வந்து நிற்கிறது. காத்திருந்த அனைவரும் வந்தமர்ந்ததும், வாகனம்
புறப்படுகிறது. இன்னும் ஒன்றரை மணிநேரம் பயணத்தில்தான், வேலை செய்யும் இடத்தை அடையமுடியும். அனைவருக்கும்
இருக்கை கிடைப்பது ஒரு சுகம்தான். பலர் விட்ட தங்கள் தூக்கத்தை தொடர்கிறார்கள். எட்டு மணி நேரமும் பின் விருப்ப வேலை
இரண்டு மணி நேரமும்செய்து விட்டவர்களுக்,கு எட்டு மணி நேர தூக்கம் கண்டிப்பாக போதாது. அப்படி செய்தால்தான் ஒரு
கௌரவமான தொகையை சேமிக்க முடிகிறது. இன்றைக்கு ஏனோ எனக்கு தூக்கம் வரவில்லை.

பிரதான சாலையில் வண்டி வேகமெடுக்கிறது. ராட்சத கட்டிடங்கள் பின்னால் நகர்கிறது. கிராமத்திலிருந்து வந்த எனக்கு, இந்த அரபு
நாட்டின் கட்டிடங்கள் மிகவும் பிரமிப்பை தந்துகொண்டிருக்கிறது. கட்டிடத்தின் நாற்பதாவது அடுக்கிலிருந்து பார்த்தால் தரையில்
இருப்பவர்கள் ஒரு எறும்பின் அளவிலே தெரிவார்கள். அவ்வளவு உயரம். மனைவியோடு பத்து வயது மகளையும், எட்டு வயது
மகனையும் பிரிகையில், கடல் கடந்து செல்கிறோம் என்ற பெருமிதமும், பிரமிப்பும் பிரிவையும் தாண்டி நின்றது உண்மைதான்.
தோள் அளவிற்கு வளர்ந்து விட்டிருந்த மகளை நெற்றியில் முத்தமிட்டபோது, அவளின் வளர்ந்து விட்ட வெட்கம் மெல்ல வந்து
போனதும், வெளியில் சொல்ல இயலாது நெஞ்சோடு அமுக்கிய சோகம், கடைக்கண்ணில் தேங்கிய மனைவியின் கண்ணீர்ப்
பார்வையில் முட்டி நின்றதும் , இப்போதும் மனதை கனக்க வைக்கிறது.

வேலை செய்யும் இடம் வந்துவிட்டது. அனைவரும் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு இறங்குகிறோம். இந்த கட்டிடத்தின்
ஆரம்பத்திலிருந்து நாங்கள்தான் வேலை செய்கிறோம். இப்போது அது இருபது அடுக்குகளாக வளர்ந்து விட்டிருந்தது. கட்டிடத்தின
மேல் பூச்சு நடந்து கொண்டிருக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் இரும்புக் குழாய்களில் லாவகமாக சராம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதில் மரப்பலகைகள் இடப்பட்டு இங்குமங்கும் நடப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. நானும் இருமிக்கொண்டிருந்தவரும்,
இருபதாவது மாடியில் மின்தூக்கி உதவியோடு வந்து சேர்ந்து விட்டோம். என்னைவிடவும் நேர்த்தியாக வேலைகள் செய்பவர் அவர்.
இன்று மிகவும் தடுமாறுகிறார். நான் அவரை கீழே சென்றுவிட பணித்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். உயரமான இடமாதலால், குளிர்க்காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கிறது. பூச்சிர்க்கான கலவை மேலவந்து சேர்ந்ததும், நானும் அவரும் கரண்டிகளோடு பலகையில் செல்கிறோம். என்னைத்தாண்டி அவர் அடுத்த பலகைக்கு செல்கிறார். வேலையை ஆரம்பிக்கிறோம்.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், திடீரெனெ எதுவோ பலகையில் விழும் சத்தம் கேட்டு நான் திரும்புகிறேன். அவர் கால் தடுமாறி
விழுந்திருக்க வேண்டும். ஒரு பலகையின் ஓரத்தைப் பிடித்தபடி தொங்கிக்கொண்டிருக்கிறார். உடனே நான் ஓடிச்சென்று அவரின்
வலக்கையை எட்டிபிடிக்கிறேன். இல்லை, காலம் கடந்து விட்டிருந்தது. அவரின் கையுறை மட்டும் என் கையோடு வருகிறது.

அது நடந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. பாதி இரவில் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டேன். மனம் அதையே நினைக்கிறது.
கையுறை என் கையிலிருக்க மரண பய பார்வையோடு எதையோ என்னிடம் சொல்லவந்தார். அதற்குள் இரும்பு கம்பியில் அவர்
தலை மோதியது. தலைக்கவசம் தெறித்துப் பறக்கிறது. அவரின் மரண ஓலம் தொடங்கியவுடன் இரண்டாவது கம்பியில் மோதினார். நான்கைந்து கம்பியில் மோதியதும் அவரிடமிருந்து சத்தம் வருவது நின்றது. இறுதியில் ஒரு சிவப்பு புள்ளியாய் தரையில் அவர்
கிடந்தார். அவரின் இறுதிப்பார்வை மட்டும் என் கண்களை விட்டு அகலவே இல்லை. ஒரு வார காலத்தில் அவரின் சடலம் பலவித இன்னல்களுக்கிடையில் நாட்டிற்கு அனுப்பப்பட்டது.

இதையெல்லாம் நான் சொல்கையில் என் மனைவி பதறினாள். விரைந்து என்னிடம் ஒரு முடிவிற்கு வருமாறு வேண்டினாள். மீதி
இரவை தூங்காமல் கடத்திவிட்டு, என் முடிவை சொல்ல மனைவிக்கு தொடர்பு கொண்டேன். முதல் செய்தியாக இன்று பூப்பெய்திய
மகளுக்கு இரண்டு சவரனிலாவது தங்க நகை இல்லையே என வருத்தப்பட்டாள். என் முடிவு என்ன என்று கேட்டாள். இன்னும் ஒரு
வருடம் கடந்து வருவதாகச் சொன்னேன். எதிர் முனையில் மனைவியின் மவுனம் புரிகிறது.

கண்டிப்பாக, இறந்து போனவர் இறுதியில் சொல்ல வந்தததும் அவர் மகளைப் பற்றியதாகவே இருந்திருக்கும்.

crvenkatesh
13-03-2013, 12:31 PM
படித்து முடித்ததும் மனம் மிகவும் கனத்து விட்டது. வெளி நாடுகளில் வேலை செய்பவர்களில் பலரின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அருமை. பாராட்ட சொற்கள் இல்லை.

dellas
13-03-2013, 01:43 PM
நன்றி தங்களின் பாராட்டிற்கு.

கீதம்
14-03-2013, 12:00 PM
வெகுநாட்களுக்குப் பின்னரான தங்கள் வருகையால் மகிழ்வும், கனத்த கருவைத் தாங்கிய கதையுடனான பிரவேசத்தால் நெகிழ்வும் ஒருசேர அனுபவித்தேன். தங்கள் குடும்ப நலனுக்காக தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து வாழும் பல மனிதர்களின் நிலை இதுதான். அறிந்த விவரம் என்றாலும் ஆட்டிப்படைக்கிறது சோகம், எழுத்தாலும், எழுத்து சொல்லும் கருத்தாலும்.

இன்னும் பல கதைகளால் மன்றத்தை வளப்படுத்த வாழ்த்துக்கள் டெல்லாஸ்.

dellas
14-03-2013, 01:16 PM
தவிற்க இயலாத காரணங்களால் மன்றத்துடன் உறவாடும் வாய்ப்பை இழந்திருந்தேன். மீண்டும்
வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.

கீதம் அவர்களின் பாராட்டிற்கும் நன்றி.

கும்பகோணத்துப்பிள்ளை
14-03-2013, 01:39 PM
அமாமய்யா!
அரபு நாடுகளில் வாழ்பவர்க்கு இது புலிவால் பிடித்த கதை
வேண்டாமென்று விடவும் முடியாது!
வேண்டுமென்று பிடித்துக்கொண்டிருக்கவும் முடியாது.
நாமெல்லாம் பொருளாதாரக்கைதிகள்
ஆனாலும் விருப்பட்டு துன்பப்படுபவர்கள்!
(இஷ்டப்பட்டு கஷ்டப்படுபவர்கள்!)
உங்கள் கதையின் முடிவும் அதுதான்
அடுத்த முடிவின் (அடுத்த வருடம் கண்டிப்பாக ஊருக்கு போய்விடலாம் என்ற) ஆரம்பமும் அதுதான்.

dellas
14-03-2013, 01:42 PM
நன்று சொன்னீர்கள் பிள்ளை அவர்களே...எதார்த்தம்

நன்றி ..