PDA

View Full Version : டோலி



crvenkatesh
12-03-2013, 05:18 AM
டோலியா? என்னடா வம்பு இது? இந்தமாதிரி தான் மாதா தரிசனம் பண்ண முடியும்னு தெரிஞ்சிருந்தா பேசாமா சென்னை திரும்பிப் போயிருக்கலாமே? இந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பித்திருக்கலாமே? என்று என் மனம் சொன்னது. இரண்டு நாட்கள் முன்னர் நடந்த சம்பவம் மனதில் ஊஞ்சலாடியது.

கரோல் பாக் வரை ஒரு வேலையாக சுஜாதாவுடன் சென்றேன். நல்ல வெய்யில். எல்லாம் எங்கள் தலையில். ஒரு கட்டத்தில் வெப்பம் தாளாது மயங்கி கிழே விழுந்து விட்டேன். நினைவு தப்பி விட்டது. (இதெல்லாம் அப்புறம் சுஜா சொன்னது). போதாதற்கு தலையில் ஒரு மாங்காய் அளவுக்கு வீக்கம். மிகுந்த தைரியசாலியான சுஜாவையே உலுக்கி வைத்து விட்டது. உடனே என் மன்னி, மற்றும் என் அண்ணன் மகன் துணையுடன் என்னை ஒரு ஆசுபத்திரியில் சேர்த்தாள். தில்லியில் என்னுடன் பணியாற்றிய சக ஊழியர் என் உடன் பிறவா சகோதரன் பவன் குமார் கூடவே இருந்ததது சுஜாவுக்கு சற்று தைரியமாக இருந்தது. அன்றிரவு ஜம்மு போக வேண்டிய பயணம் தப்பியது. ஆறு மாத கனவாக இருந்த வைஷ்ணோ தேவி பயணம் கனவாகவே இருந்து விடுமா? அன்னையிடமிருந்து அழைப்பு வரவில்லையா? மனம் கதறியது. குழம்பியது. கண்ணீர் பெருகியது.

CT ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் என் மீது அன்பு வைத்த நெஞ்சங்கள் நூறு முறை செத்து பிழைத்தன. என் உடன் பிறவா சகோதரி லக்ஷ்மி (அவர்கள் குடும்பமும் ஜம்மு வந்திருந்தது)ரிப்போர்ட் ஒன்றுமில்லை என்று வருவதற்காக.(தன் உடல் உபாதைகளை மறந்து) பனிரெண்டு கிலோ மீட்டரும் நடந்தே வருவதாக வேண்டி கொண்டாள். என் மைத்துனர்கள் இருவரின் கண்ணீர் கதறல்கள் என் நெஞ்சை அறுத்தன. என் மன்னி மற்றும் என் அண்ணன் மகன் முகமும பயத்தில் உறைந்திருந்தது. அனைவரின் அன்பும் அன்னையின் அழைப்பும் சேர்ந்து ரிப்போர்ட் ஒன்றுமில்லை என்று வந்தது. நான் புதியதாக பிறந்தது போல் உணர்ந்தேன். உடனடியாக மன்னி உதவியுடன் தில்லியிலிருந்து ஜம்மு விமானத்தில் பதிவு செய்து மறு நாளே ஜம்மு போய் சேர்ந்தேன். அங்கு என் உடன் பிறவா சகோதரி லக்ஷ்மி, சுஜாவின் அக்கா அவள் கணவர் மற்றும் அவர்கள் குழந்தைகளின் அன்பு மழையில் நனைந்தேன். அன்று ஓய்வு எடுத்து மறு நாள் கட்டரா போய் சேர்ந்தோம். குதிரை சவாரியை மருத்துவர் வேண்டாம் என்று சொல்லி இருந்ததாலும், நடப்பதற்கு ஆயாசமாக இருந்ததாலும், எனக்கு ஒரு டோலியை ஏற்பாடும் செய்தார்கள். ஆறு கிலோமீட்டர் வரை நான்கு பேர் என்னை தூக்கிச் செல்வார்களாம். அப்போது தான் டோலியா? என்னடா வம்பு இது? இந்தமாதிரி தான் மாதா தரிசனம் பண்ண முடியும்னு தெரிஞ்சிருந்தா பேசாமா சென்னை திரும்பிப் போயிருக்கலாமே? இந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பித்திருக்கலாமே? என்று என் மனம் சொன்னது.

வேறு வழியில்லாமல் டோலியில் அமர்ந்து பயணம் துவங்கினேன். ‘ஜெய் மாதா தீ ‘ என்ற சப்தம் அந்த மலையையே நிறைத்தாலும் என் மனம் என்னமோ கனத்தது. மனிதன் மனிதனை சுமப்பதா? என்ன அநியாயம்? முள் மேல் அமர்ந்தது போல உணர்தேன் நெளிந்தேன் . என் சுமை அங்கும் இங்கும் நகர்வது உணர்ந்து முன்னால் இருந்த இருவரில் ஒருவர் ‘என்ன ஆச்சு பாபுஜி ? (ஹிந்தியில் தான்) என்று கேட்க, நான் என் மனக்குமுறலைச் சொன்னேன்.
டோலியை சற்று தூரம் சென்று பின்னர் இறக்கி வைத்தார்கள். முகத்தில் வழிந்த வியர்வையை மேல் துண்டால் துடைத்துக் கொண்டுவிட்டு என்னைப்பார்த்து அவர் சொன்னார் “ பாபுஜி, என் குடும்பம் பெருசு. எனக்கே மூன்று குழந்தைகள். இதில் போன மாதம் என் தம்பி ஒரு விபத்தில் இறந்து போக, அவன் குடும்ப பராமரிப்பும் என் கடமையானது. அவன் மனைவி, மற்றும் அவன் இரு குழந்தைகளும் என் குடும்பத்துடன் தான் வசிக்கிறார்கள். என்னைப் போலவே மற்ற பேர்களுக்கும் அவரர் பிரச்சனைகள். இத்தனை சுமைகளை சுமக்கும் எங்களுக்கு உங்கள் சுமை ஒரு சுமையே இல்லை. உங்களைப் போன்றவர்களை அண்டியே எங்கள் வாழ்க்கை ஓடுகிறது. இதைப் பற்றியெல்லாம் யோசித்துக் குழம்பாமல் தயவு செய்து வசதியாக உட்கார்ந்து வாருங்கள்” என்று சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு நான் பிரமித்தேன். “ ஜெய் மாதா தீ” என்று என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன. தெளிந்த மனதுடன் டோலியில் ஏறி உட்கார்ந்தேன். மனம் லேசாகி இருந்தது. டோலியை தூக்கிய பின் அவர் ஒரு முறை சடக்கென்று என்னை திரும்பிப் பார்த்தார். ஆச்சரியமாக.

லேசானாது என் மனசா? இல்லை என் உடலா?

“ஜெய் மாதா தீ”

மதி
12-03-2013, 05:43 AM
ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொருவர் பார்வையில் நியாயமுண்டு. கர்மாவாக இருந்துவிட்டு போகட்டும். அல்லது வேறு எதுவோ ஒன்று..

டோலி என்ற வார்த்தைக்குள் பல சுமைகளை விளக்கிய கதை நன்று.

crvenkatesh
12-03-2013, 05:49 AM
ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொருவர் பார்வையில் நியாயமுண்டு. கர்மாவாக இருந்துவிட்டு போகட்டும். அல்லது வேறு எதுவோ ஒன்று..

டோலி என்ற வார்த்தைக்குள் பல சுமைகளை விளக்கிய கதை நன்று. மிக்க நன்றி மதி, கனிவான சொற்களுக்கு.

சிவா.ஜி
12-03-2013, 08:24 AM
டோலி சுமப்பவர் மேலும் சுமக்கும் சுமைகளைக் கேட்டு தனது மனச்சுமை குறைந்தது...இதுவும் அந்த மாதாவின் அருளோ. நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் வெங்கடேஷ்.

sarcharan
12-03-2013, 09:05 AM
நல்ல கதை வெங்கடேசன்.

இதைப்படித்ததும் கைவண்டி(கை-ரிக்*ஷா) இழுக்கும் கல்க்த்தா நகரம் தான் எனக்கு ஞாபகம் வந்தது. என்ன இருந்தாலும் மனிதனை மனிதன் சுமக்கும் பணியை தடை செய்த சட்டம் பாராட்டுக்குரியது.

crvenkatesh
12-03-2013, 10:29 AM
டோலி சுமப்பவர் மேலும் சுமக்கும் சுமைகளைக் கேட்டு தனது மனச்சுமை குறைந்தது...இதுவும் அந்த மாதாவின் அருளோ. நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் வெங்கடேஷ்.

பாராட்டுக்கு நன்றி சிவா.ஜி.

crvenkatesh
12-03-2013, 10:30 AM
நல்ல கதை வெங்கடேசன்.

இதைப்படித்ததும் கைவண்டி(கை-ரிக்*ஷா) இழுக்கும் கல்க்த்தா நகரம் தான் எனக்கு ஞாபகம் வந்தது. என்ன இருந்தாலும் மனிதனை மனிதன் சுமக்கும் பணியை தடை செய்த சட்டம் பாராட்டுக்குரியது.

பாராட்டுக்கு நன்றி sarcharan.

ஜான்
12-03-2013, 02:23 PM
லேசானது என் மனசா? இல்லை என் உடலா...சிந்திக்க வைத்தது

crvenkatesh
13-03-2013, 03:30 AM
லேசானது என் மனசா? இல்லை என் உடலா...சிந்திக்க வைத்தது

மிக்க நன்றி ஜான், கனிவான சொற்களுக்கு!

M.Jagadeesan
13-03-2013, 06:06 AM
உலகத்திலேயே பெரிய சுமை குடும்ப சுமைதான். அந்த சுமைக்கு முன்னே டோலியின் சுமை சாதாரணமானது என்று விளக்கிய சிறுகதைக்கு என் பாராட்டுக்கள்.

crvenkatesh
13-03-2013, 12:17 PM
உலகத்திலேயே பெரிய சுமை குடும்ப சுமைதான். அந்த சுமைக்கு முன்னே டோலியின் சுமை சாதாரணமானது என்று விளக்கிய சிறுகதைக்கு என் பாராட்டுக்கள். தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

கீதம்
13-03-2013, 11:10 PM
அழகான சிறுகதை. கதையின் இறுதியில் உள்ள கருத்து சிந்திக்கவைக்கிறது. மனிதரை மனிதர் இழுப்பதா என்று நினைத்து ஒருமுறை ரிக்*ஷாவில் ஏற மறுத்த என்னிடம் என் கணவர் இதைத்தான் கூறினார். நம்மால் அவர் வீட்டில் ஒருவேளை அடுப்பு எரியுமானால் அதை ஏன் நாம் தடுக்கவேண்டும் என்று நினைத்து ஏறினேன். இருந்தாலும் மனம் வலிக்கத்தான் செய்தது.

கதை சொந்த சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது போல் தோன்றுகிறது. அலங்காரமில்லாத இயல்பான வாக்கியங்களும், உள்ளதை உள்ளபடியே எழுதிய உணர்வோட்டங்களும் அதை மெய்ப்பிக்கின்றன. லக்ஷ்மியைக் குறிப்பிடும்போது உடன்பிறவா சகோதரி என்று ஒவ்வொரு முறையும் குறிப்பிடாமல் ஒருமுறை மட்டுமே குறிப்பிட்டால் போதுமானது. இதுபோல் சில திருத்தங்கள் செய்தால் கதை மேலும் மெருகேறும்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

மும்பை நாதன்
31-08-2013, 05:38 PM
அருமை. அருமை. சுமை அதிகமா குறைவா என்பது மனதில்தான் இருக்கிறது.

இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நடக்கும் போது யாராவது சுமை தூக்கி வந்து கொண்டிருந்தால் உடனே வழி விட வேண்டும் என்று நான் சிறுவனாய் இருந்த போதே என் தந்தை சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள்.

என்னுடைய 51 வயது வரையில் காலில் சுளுக்கு இருந்த போது தவிர மற்ற சமயங்களில் நான் 'போர்ட்டர்' வைத்துக்கொண்டது இல்லை.

ஆனால் சமீபத்தில் ஒரு வயதான போர்ட்டருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே என் சுமைகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

அவருக்கு பணம் கொடுத்து அனுப்பிய உடனே என் மகள் கேட்டாள்:

அந்த தாத்தாவுக்கு Help பண்ணனும்னுதானே டாடி...?

நான் புன்னகைத்தேன்.

மும்பை நாதன்