PDA

View Full Version : போர்வை வியாபாரி.



M.Jagadeesan
10-03-2013, 12:17 PM
உச்சிவேளை பகல் 12 மணி. சூரியன் நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், ஒரு சைக்கிளில் பின்புறம் கேரியரில், போர்வையை அடுக்கி வைத்துக்கொண்டு, தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தான். ஒரு போர்வைகூட விற்பனை ஆகவில்லை. நடந்து நடந்து கால்கள் வலித்தன; தாகத்தால் நாக்கு வறண்டது. சற்றுநேரம் ஒய்வு எடுத்துக்கொள்ள நினைத்தவன், சாலையோர மரத்தடி நிழலில் ஒதுங்கினான்.தாகம் தணித்துக்கொள்ள அருகிலிருந்த தெருக்குழாயைத் திறந்தான். புஸ்......சென்று காற்றுதான் வந்தது; தண்ணீர் வரவில்லை.அந்தநேரம் பார்த்து மரக்கிளையில் அமர்ந்திருந்த காக்கை ஒன்று போர்வையின்மீது எச்சமிட்டது. அதைக்கண்ட அவன்

" ஆண்டவா! என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் ? நான் உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. காலையிலிருந்து ஒரு போர்வைகூட விற்பனை ஆகவில்லை; தண்ணீர் வரவேண்டிய குழாயில் நான் திறந்தால் காற்றுதான் வருகிறது. போதாக்குறைக்கு காக்கை வேறு போர்வையில் எச்சம் போட்டுவிட்டது. என்னை ஏன் இப்படி துரதிஷ்டசாலியாகப் படைத்துவிட்டாய் ? " என்று கூறித் தலையில் அடித்துக்கொண்டான்.

" உன் முட்டாள்தனத்துக்கு ஆண்டவன்மீது ஏனப்பாப் பழியைப் போடுகிறாய்?" என்ற குரல்கேட்டு வாலிபன் திரும்பிப் பார்த்தான். மரத்தின் மறுபுறத்திலிருந்து குரல் வந்தது. அங்கே ஒரு பெரியவர் மரநிழலில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்ற வாலிபன்

" ஐயா! நான் என்ன முட்டாள்தனம் செய்தேன் ?"

' தம்பி ! எந்தக் காலத்தில் எதை விற்பனை செய்வது என்று தெரியாத உன்னை முட்டாள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது ? இந்த வேகாத வெயில் காலத்தில் எவனாவது போர்வை வாங்குவானா ? இந்த வெயில் காலத்துக்கு ஏற்றவாறு தார்பூசணி, இளநீர் போன்றவற்றை விற்பதை விட்டுவிட்டுப் போர்வையைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக அலைகிறாயே! மார்கழி மாதம், குளிர்காலத்தில் செய்யவேண்டிய போர்வை வியாபாரத்தைக் கோடை காலத்தில் செய்யலாமா? ஒருசெயல் வெற்றிபெற வேண்டுமானால் காலம், இடம், கருவி ஆகியக் கூறுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரை உனக்குத் தெரியாதா?"

" ஐயா! நான் அதிகம் படிக்காதவன்; எட்டாம் வகுப்புவரைதான் படித்துள்ளேன். எனக்குத் தெரிந்த வியாபாரம் துணிமணிகளை வாங்கி விற்பதுதான்; வேறு ஒன்றும் தெரியாது."

" தம்பி! இதற்குப் படிப்பறிவு எதுவும் தேவையில்லை; பட்டறிவு இருந்தால் போதுமானது. நான் சொல்வதைக் கவனமாகக் கேள்; உன்னைப்போன்ற சிறு வியாபாரிகள் காலத்துக்கு ஏற்றவாறு தொழிலை மாற்றிக் கொள்ளவேண்டும்;தொழிலுக்கு ஏற்றவாறு இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்; அத்தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கின்ற கருவிகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும். இதுதான் வெற்றியின் இரகசியம்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.( காலம் அறிதல்-483 )

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். ( காலம் அறிதல்- 484 )

என்பதுதான் வள்ளுவர் வாக்கு."

" ஐயா! சற்று விளக்கமாகக் கூறுங்கள்."

" நல்லது தம்பி! விளக்கமாகவே கூறுகிறேன். உன்னைப்போன்ற சிறு வியாபாரிகள், தெரு வியாபாரிகள் காலத்துக்கு ஏற்றவாறு தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டும்;அதாவது இந்தக் கோடைகாலத்தில் நீ செய்யவேண்டிய வியாபாரம் தார்பூசணி, இளநீர் விற்பதுதான். அடுத்தபடியாக வருவது இடம். ஜனநடமாட்டம் மிகுந்த சாலை ஓரங்களில், மரத்தடி நிழலில் செய்தால் இந்த வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.மூன்றாவதாக வருவது கருவிகள். தொழிலுக்குத் தேவையான கருவிகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒரு தள்ளுவண்டி, தார்பூசணி, இளநீர் வெட்டுவதற்குத் தேவையான கத்திகள், இளநீர் உறிஞ்சிக் குடிப்பதற்கு ஸ்ட்ரா, நான்கைந்து கண்ணாடிக் குவளைகள், பனிக்கட்டி ஆகியவை இருந்தால் போதுமானது. இந்த வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.

ஒருசெயலில் நாம் வெற்றிபெற வேண்டுமானால் காலம், இடம்,கருவி ஆகிய மூன்று காரணிகளும் மிகவும் இன்றியமையாதது. வள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள இக்கருத்துக்கள் நாடாளும் வேந்தனுக்கு மட்டுமல்ல, தனிமனித வாழ்க்கைக்கும் மிகவும் பொருந்தும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இந்தப் போர்வையை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு , விரைவில் இளநீர் வியாபாரத்தைத் தொடங்கு. எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.'

" நாளையே இதே இடத்தில் கடையைப் போட்டுவிடுகிறேன் ஐயா! தங்கள் யோசனைக்கு மிக்க நன்றி.நான் வருகிறேன் ஐயா!"

" நல்லது சென்று வா."

sarcharan
12-03-2013, 08:56 AM
கதையோடு கூட திருக்குறாளும் பயின்றோம். பயனுள்ள கதை.

ஜான்
12-03-2013, 02:20 PM
காலம், இடம்,கருவி ஆகிய மூன்று காரணிகளும் மிகவும் இன்றியமையாதது:aktion033:

M.Jagadeesan
12-03-2013, 03:19 PM
சர்சரண், ஜான் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி.

dellas
12-03-2013, 05:57 PM
நன்று

M.Jagadeesan
13-03-2013, 01:49 AM
dellaas அவர்களின் பாராட்டுக்கு நன்றி.