PDA

View Full Version : மறதி by முரளி



முரளி
06-03-2013, 09:56 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT1MkS7J6uA6yYeUqypKADT9G_sVd1BMSlOuBQ4U2EXkgLwOZktJQ

“மீனா! எங்கேயிருக்கே?”
“இதோ ஆட்டோல வந்துகிட்டேயிருக்கேங்க! இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே இருப்பேன்!”
“சீக்கிரம் வா! ஏன் இவ்வளவு லேட்? நெய்வேலி பஸ் புறப்பட ரெடியாயிருக்கு”
“எல்லாம் செக் பண்ண நேரமாயிடுச்சுங்க!”

****
மீனா ஆட்டோவில், சென்னை கோயம்பேடு ,பஸ் ஸ்டாண்ட் நோக்கி பயணம். ஒரு பத்து நிமிஷம் கழித்து:
“என்னங்க!”
“என்ன சொல்லு மீனா? எதை மறந்தே ? ஏன் இன்னும் வரல்லே!”
“காஸ் அணைக்க மறந்துட்டேங்க! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இந்த ஆட்டோவிலேயே வீடு வரை திரும்பப் போய் வந்துடறேன்”
“சரியாப்போச்சு. போ! ஆரம்பிச்சுட்டியா! இனிமே நெய்வேலி போய் சேந்தாபோலதான். சரி சீக்கிரம் வா!”.
“கோபிக்காதீங்க! டிரைவர் சார், கொஞ்சம் வீட்டுக்கு வண்டியை திருப்ப முடியுமா?”
“சரிம்மா!. மறக்கறது எல்லாம் சகஜம் தானே! ஐம்பது ரூபாய் போட்டு கொடுத்துடுங்கம்மா!”
“சரிப்பா”

****

மீனா அவசர அவசரமாக கதவை திறந்து, சமயலறைக்கு சென்றாள். காஸ் அணைத்து தான் இருந்தது. மற்றுமொரு முறை சரி பார்த்து விட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறினாள்.
“போலாமாம்மா?”
“சரிப்பா!”
கொஞ்ச தூரம் போனதும், “ஆட்டோ! ஆட்டோ! கொஞ்சம் திருப்புப்பா!”
“என்னம்மா!”
“இஸ்திரி பெட்டி அணைக்க மறந்திட்டேம்பா. கொஞ்சம் திருப்பேன் ! ப்ளீஸ்!”
“பரவாயில்லேம்மா! ஏதோ பாத்து, மேல போட்டு கொடுங்கம்மா! பெட்ரோல் என்ன விலை விக்குது தெரியுமா?”

ஐந்து நிமிஷம் கழித்து:

“போலாம்பா! எல்லாம் செக் பண்ணிட்டேன்! எல்லாம் சரியாயிருக்கு! ”

****

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம். மீனாவின் கணவன் ரவி நின்று கொண்டிருந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது. பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் கிளம்ப இன்னும் முக்கால் மணி நேரம். அண்ணா பெண்ணின் கல்யாணம். நேரமானால் அண்ணன் மூஞ்சை தூக்கி வெச்சுப்பார்.

“என்ன மீனா! இவ்வளவு லேட் பண்ணிட்டே!”
“ஏன் சொல்ல மாட்டீங்க! என் கஷ்டம் எனக்கு தானே தெரியும்”
“நான் இல்லேன்னா, உனக்கு ஏன் இவ்வளவு, குழப்பம்.! எப்பவும் நான் கூடவே இருக்க முடியமா? இப்போ பார், பஸ் மிஸ் ஆயிட்டுது!”
“ரொம்ப சாரிங்க!”
“லேட் ஆனா, அண்ணன் திட்டபோறார்.தேவையா எனக்கு! ”


ஐந்து நிமிடம் கழித்து, மீனா மீண்டும் கையை பிசைந்தாள்.
”என்னங்க!”
“ம்”
“இங்கே பாருங்களேன்!”
“சொல்லு கேட்டுகிட்டு தானே இருக்கேன்!”
“திரும்ப வீட்டுக்கு போய் செக் பண்ணணுங்க!”
“விளையாடறியா! படிச்சி படிச்சி சொன்னேனே!. லிஸ்ட் போட்டு செக் பண்ணிட்டு வான்னு”
“எல்லாம் உங்களாலேதான்! நீங்க பண்ண அவசரத்திலே, வாசற் கதவை பூட்டினேனான்னு இப்போ சந்தேகமா இருக்கு”
“கல்யாணத்திற்கு போறதா வேண்டாமா?”
“கோவிக்காதீங்க! என்னமோ இந்த பாழாய் போற மறதி”
“சரி!. கீழ் வீட்டிலே, ஒரு சாவி இருக்கில்லே! அவங்களுக்கு போன் பண்ணி செக் பண்ண சொல்லு! தலைவிதிடா சாமி. பேசாம எப்பவும் போல நானே வீட்டுக்கு வந்து உன்னை பிக் அப் பண்ணி தொலச்சிருக்கலாம்.”

***

“கல்யாணி !நான்தான் மாடி மீனா பேசறேன்! ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா!”
“சொல்லுங்க அக்கா ! கல்யாணிதான் பேசறேன். வீடு பூட்டியிருக்கான்னு பாக்கணும், அவ்வளவுதானே!”
“அப்படியே, குளியலறை ஹீட்டர் அணைச்சிருக்கான்னு பாத்துக்கோங்க கல்யாணி”
“சரிக்கா ! லயன்லேயே இருங்க!”
ஐந்து நிமிஷம் கழித்து: “எல்லாம் பூட்டியிருந்தது அக்கா! நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க! கல்யாணம் ஜம்மென்று அட்டென்ட் பண்ணுங்க! வரும்போது ஒரு பலாப்பழம் வாங்கிண்டு வாங்க அக்கா!. அங்கே மலிவா கிடைக்குமாமே!”
“ஓ! கட்டாயம் கல்யாணி! தேங்க்ஸ். வெச்சுடட்டுமா”
“ஏங்க! கல்யாணிக்கு ஒரு பலாப்பழம் வேணுமாம். போகச்சே வாங்கிண்டு போகணுங்க”
“இது வேறயா! இதுக்கு தான் சொல்றது! மத்தவங்களை தொந்திரவு பண்ண கூடாதுன்னு!”
“சாரிங்க!”

****

தொடரும் ............. மீதி இதே திரியில் பார்க்க..கீழே...

முரளி
06-03-2013, 09:58 AM
மறதி by முரளி - தொடர்ச்சி 1



பஸ் டிரைவர் வண்டியில். வண்டி கிளம்ப தயாராக இருந்தது. கண்டக்டர் டீ குடித்து கொண்டிருந்தார். அவருக்காக காத்துக் கொண்டிருந்தார் டிரைவர்.

ரவிக்கு செல் போனில் அழைப்பு. பாங்கிலிருந்து அவரது துணை மனேஜர்.
“என்ன மோகன்! எனி ப்ராப்ளம்?”
“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க! உங்க கஜானா பெட்டி திறந்தே இருக்கே!”
“இருக்காதே! நான்தான் பூட்டி, சாவியை என் கைபெட்டியிலே போட்டேனே! இரு பாக்கறேன்”
ரவி பெட்டியில் தேடினான். சாவி இல்லை. “அட கடவுளே!”
பஸ் கண்டக்டர் “ரைட் ரைட் ! போலாம்!”
“கண்டக்டர் சார்! ஒரு நிமிஷம் நிறுத்துங்க! நான் இறங்கணும்!. மீனா! சாமானெல்லாம் எடுத்துண்டு இறங்கு.”
“இவ்வளவு நேரம் என்ன சார் பண்ணிகிட்டிருந்தீங்க! லேட் ஆவுதில்லே! சீக்கிரம் இறங்குங்க!”
“சாரி கண்டக்டர்! ஒரு பிரச்னை!
“சரி சரி ! பாத்து இறங்குங்க! அண்ணே ! ரைட் ரைட் போலாம்!


“மோகன்! என் சாவி காணோம்பா! எங்கே வெச்சேன்னே ஞாபகம் இல்லை! அங்கே கொஞ்சம் தேடி பாருப்பா!”
“ஒரு பத்து நிமிஷம் கழித்து போன் பண்ணட்டுமா சார் ?”
பத்து நிமிஷம் கழித்து: “ சார்! உங்க சாவி கொத்து கிடைச்சுடுத்து!. உங்க டேபிள் கீழே இருந்தது!”
“அப்பாடா! இப்போதான் உயிர் திரும்பி வந்தது!முக்கியமான பேங்க் டாகுமென்ட்ஸ் இருக்கு”
“என்ன சார், இப்படி ஞாபக மறதியா இருக்கீங்களே! ரொம்ப டேஞ்சர் சார்!”
“என்னமோ ! தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுத்து!ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா மோகன்! நம்ப பியூன் தயாளன் கிட்டே கொடுத்து விடு. நான் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வாசலிலே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்!”
“சரி சார்! அரை மணி நேரத்திலே அவன் அங்கே இருப்பான்”
“தேங்க்ஸ் மோகன்!. யார் கிட்டேயும் சாவி பத்தி பேச வேண்டாம் என்ன?”
“ நிச்சயமா சார்! அப்புறம்!....”
“உன் மச்சான் லோன் பத்தி தானே! கவலையே படாதே! நான் ஹெட் ஆபிசில் பேசறேன்!”
“ரொம்ப தேங்க்ஸ் சார்”

****

ஒரு பத்து நிமிடம் கழித்து :
மீனா “ஐயையோ! என்னங்க! மாடி பூட்ட மறந்திட்டேங்க!”
“என்னது?”
“கிளம்பற அவசரத்திலே, உலர்த்தின துணி எடுத்திட்டு வரச்சே, தாள் போட்ட ஞாபகம் இல்லீங்க!”
“சரி, கல்யாணிக்கு போன் போடு!”
.
“மீனாக்கா ! நீங்க சொன்ன மாதிரி பாத்திட்டேன்!. மாடி தாள் போட்டிருக்கே!”
“ரொம்ப தேங்க்ஸ் கல்யாணி!. அப்புறம், பாத்ரூம் குழாய் ..”
“எல்லாம் மூடியிருக்கு அக்கா. வெறும் பிரமை அக்கா உங்களுக்கு .. நாங்க இருக்கோமில்லே. பாத்துக்கிறோம். அப்புறம், அனிதாவுக்கு முந்திரி ரொம்ப பிடிக்கும். அதை ஒரு கிலோ மறக்காமே பண்ருட்டியிலே வாங்கிக்கோங்க ! முடியுமா அக்கா?”
“கட்டாயம் கல்யாணி! தேங்க்ஸ்மா”
மீனா செல்லை அமர்த்தினாள்.
“என்னங்க ! கல்யாணிக்கு முந்திரி வேறே வேணுமாம் ! கொஞ்சம் அதையும் வாங்கிட்டு போயிடலாங்க”
“ஓகே! வாங்கிடலாம்”
“சாரிங்க!”
“பரவாயில்லே மீனா! மறக்கறது எல்லாருக்கும் சகஜம் தானே! நாம்ப அடுத்த வண்டியிலே போலாம்! கவலையே படாதே! அரை மணிக்கு ஒரு வண்டி !”

மீனாவுக்கு ஆச்சரியம்! மயக்கமே வரும் போலிருந்தது. “வள்ளுன்னு கடிப்பாருன்னு பயந்தேனே! என்ன ஆச்சு இவருக்கு!”

ரவி முடிவு செய்து விட்டான். தங்களது மறதிக்கு, மறக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது என்று.

****
ஒரு வாரம் கழித்து. ரவியும், மீனாவும் அவர்களது குடும்ப மருத்துவர் அறையில்.
மறக்காமல் வந்து விட்டனர்.

“சொல்லுங்க! என்ன ப்ராப்ளம்?” டாக்டர் ஆரம்பித்தார்.

“ஒண்ணுமில்லை டாக்டர்!. கொஞ்சம் மறதி ரெண்டு பேருக்குமே! என்ன பண்ணலாம்?”

“முதல்லே, நீங்க மறக்கறதுக்கு முன்னாடி, என் பீஸ் ஐநூறு அட்வான்சா கொடுத்துடுங்க!”

ரவி சிரித்தான். “ டாக்டர், எப்போவாவது ஒரு தடவை எலெக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ் அனைச்சோமா, காஸ் அணைத்தோமான்னு பாக்கறது தப்பில்லை. ஆனால், இவள், பத்து தடவை பார்த்ததையே பார்த்து, செய்யரதையே திரும்ப திரும்ப செய்யறா. தாங்க முடியலே. இவள் வாழ்க்கையே நரகமாயிருக்கு.. நீங்க தான் இதுக்கு ஒரு வழி சொல்லணும்”

மீனா இடை மறித்தாள். “எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல டாக்டர். வெறும் மறதி தான்! அதுக்கே என்னை பைத்தியம்னு முடிவு பண்ணிட்டார் இவர். இங்கே மட்டும் என்ன வாழறதாம்? பேங்க் கீ தொலைச்சுட்டு நிக்கறார். அவருக்கே தொலைச்சது தெரியாது. நல்ல வேளை, இவரது கல்லீக் காப்பாற்றினார்”.

இன்னும் முடியலே! ..தொடரும் .... மீதி இதே திரியில் பார்க்க..கீழே...

ரமணி
06-03-2013, 11:15 AM
வணக்கம் முரளி.

இவ்வளவு தூரம் மிகைப்படுத்தி எழுதியிருப்பதால் இந்தக் கதை காமெடி வகையில் சேர்கிறது (என் கருத்தில்). காமடி யெனும் போது இன்னும் என்னென்னவோ நடக்கலாம்:

மீனா தூளியில் தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை மறக்கலாம்! இருவரும் மருத்துவ ஆலோசனை செய்துகொள்ள முடிவெடித்ததை மறக்கலாம். கண்டக்டர் மறதியில் தன் தடப் பேருந்துக்கு பதிலாக நெய்வேலித் தட வண்டியில் ஏறியிருக்கலாம்! நம் நாட்டு மக்கள் தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சி செய்த அட்டூழியங்களை மறப்பது வழக்கம்தானே? எல்லோரும் இந்நாட்டு மறதி மன்னர்கள்!

அன்புடன்,
ரமணி

முரளி
06-03-2013, 12:01 PM
மறதி by முரளி - தொடர்ச்சி - 2


டாக்டர் : “எப்போவோ ஒருதடவை ஆறது பெரிய விஷயமில்லையே மீனா? ”

“நீங்க வேற டாக்டர்!. பத்து நாளைக்கு முன்னால், இவரோட ஸ்கூட்டர் சாவியை வீடு முழுக்க,தேடு தேடுன்னு தேடினார். வெச்சது வெச்ச இடத்திலே இல்லைன்னு என்னை வேற சத்தம் போட்டார். அப்புறம் ஞாபகம் வந்து ஸ்கூட்டர்லே விட்டுட்டேன் போலிருக்குன்னு சொன்னார்.”

“சாவி கிடைச்சிதா?”

“இல்லையே! இப்போ ஸ்கூட்டரையே தேடின்டிருக்கார்!.எவனோ ஒரு மகானுபாவன் சாவியோட ஸ்கூட்டரை ஒட்டிண்டு போயிட்டான்”

“பரவாயில்லியே! உங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கே! ஜாடிக்கேத்த மூடிதான்!”

“இப்போ பஸ்லே தான் ஆபீஸ் போயிண்டிருக்கார்! இன்சூரன்ஸ் கிளைம் கேட்டு நடையா நடக்கிறார்.இதிலே நான் மறதியாம்.”

டாக்டர் “அட கஷ்ட காலமே!”. ஆனால், இதிலேயும் ஒரு லாபம் இருக்கே! இப்போ ரவி ஸ்கூட்டர் சாவி தேடவேண்டாம்!”. சிரித்தார்.

ரவி “டாக்டர்! சும்மா கோட்டா பண்ணாதிங்க! எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க!”

“சொல்றேன்! எனக்கென்ன தோன்றதுன்னா மீனவோடது ஒரு குறை. ஒ.சி.டி (அப்செசிவ் க்ம்ப்பல்சிவ் டிசார்டர்- obsessive Compulsive disorder)ன்னு சொல்வாங்க. தேவையில்லாத சந்தேகங்கள், மனக் குழப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றி ஒரே காரியத்தை செய்ய தூண்டினால், அது ஒ.சி.டி".


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRRjr7w9ZKzkDIwRq7cCVRjPGf4amA897h9TAlsO1PnWdotG1y8

“நிஜமாவா டாக்டர், எனக்கு ஒ.சி.டி.யா?”

“அப்படித்தாம்மா தோணறது. கவலை படாதே சீக்கிரம் குண படுத்திடலாம். ரவி, நான் வெறும் எம்.டி. தான். தேவைப்பட்டால் சொல்றேன். ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்த்துடலாம், உங்க மனைவிக்கு.”

மீனா “இருக்காது டாக்டர்! எனக்கு எப்படி ஒ.சி.டி? ”

“ ஆனால், ரவி, பெரிய விஷயங்களையும் நீங்க மறந்து போறீங்க. ஆனால், மறந்து விட்டோம்கிற பிரக்ஞை கூட உங்களுக்கு இல்லை. இல்லேன்னு நினைக்கிறீங்க. ஆனால், மறதி உங்களுக்கு இருக்கு.உங்க பிரச்னை கொஞ்சம் வித்தியாசம்!"

"அதெப்படி?"

"ஒரு பர்க்ளர் அலாரம் இருக்குன்னு வெச்சுக்கோங்க. திருடன் நுழையலன்னா கூட, சில அலாரம் தப்பா அடிக்கும். அது உங்க மனைவி. திருடன் உள்ளே நுழைஞ்சா கூட, சில அலாரம் அடிக்காது. அது மாதிரி நீங்க. ரெண்டும் பிரச்னை தான்.?"

“ஐயையோ! என்ன டாக்டர் பயமுறுத்தறீங்க? ”

“சும்மா தமாஷுக்கு சொன்னேன் ரவி, ஒண்ணும் டென்ஷன் ஆகாதீங்க. மறதிக்கு, உங்க வேலை பளு கூட காரணமாக இருக்கலாம். கொஞ்சம் பட படப்பை கொறைங்க. யோகா ட்ரை பண்ணுங்களேன். ஈசியா சரி பண்ணிடலாம்!”

மீனா “நம்பவே முடியலே டாக்டர்! எனக்கா ஒ.சி.டி. ? நல்லா செக் பண்ணிட்டு சொல்லுங்களேன்?”

“இது இதுதான் ஒ.சி.டி!. திருப்பி திருப்பி கேக்கறீங்களே இதுதான்! அந்த நோய்க்கு அடையாளம் ! ” டாக்டர் சிரித்தார்.

மீனா“ அப்போ டாக்டர், என்னோட ஒ.சி.டியை எப்படி சரி பண்றது?”

”ரொம்ப சுலபம் மீனா. உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் இருந்தால், அதை முதல்லே குறைக்கணும் !. ரிலாக்ஸ்டாக இருக்க பழகுங்க . அப்புறம், நல்லா தூங்கணும். அதுக்கு சில மாத்திரை தரேன். இன்னொண்ணு மீனா! உங்க ஒ.சி.டி நினைப்பை ‘இது ஒரு பைத்தியக்காரத்தனம், மடத்தனம், அர்த்தமே இல்லை’ ன்னு ஒதுக்கணும்.”

மீனா “சே! எனக்கா ஒ.சி.டி.? நம்பவே முடியலே ! நிஜமாவா டாக்டர்? ”.

“ஆமாம்மா! கவலை படாதிங்க! சரி பண்ணிடலாம்!”

டாக்டர் தொடர்ந்தார் : “நீங்க என்ன பண்ணுங்க, எதுக்கும் ஒரு லிஸ்ட் போட்டு செக் பண்ணுங்க! கதவை பூட்டினவுடனே, “கதவை தாள் போட்டாச்சு” அப்படின்னு ஒரு தடவை மனசுக்குள்ளே சொல்லிக்கோங்க! ‘காஸ் அணைச்சாச்சு’ன்னு லிஸ்ட்லே டிக் பண்ணிக்கோங்க. கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாயிடும்.”

ரவி “அப்பாடா! ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்!”

டாக்டர் கை குலுக்கினார். “மீனா , ரவி , இப்போதைக்கு சில மாத்திரை எழுதி தரேன். சாப்பிடுங்க. ஒரு வாரம் கழிச்சி என்னை வந்து, மறக்காமல் பாருங்க. மீனாக்கு டெஸ்ட் எடுத்து பாக்கணும் !”

ரவி "சரி டாக்டர், தேங்க்ஸ். மீனா! வா போகலாம்"

மீனா : " என்னங்க! எனக்கா ஒ.சி.டி? என்ன பண்ணப் போறேன்னு தெரியலியே!"

ரவி : "அதெல்லாம் ஒண்ணுமில்லே ! கவலைப் படாதே!சரியாயிடும். இப்போ கிளம்பு! ".

வெளியே வந்து ஆட்டோவில் ஏறும்போது, மீனா கேட்டாள் “ என்னங்க டாக்டர் பீஸ்..? கொடுக்கலியே! மறந்துட்டீங்க போலிருக்கே ?”

“உஷ்! எனக்கு எல்லாம் தெரியும்! வாயை மூடிகிட்டு சைலண்டா வா!”

****


ஒரு மணி கழித்து ரவி மீண்டும் டாக்டர் அறையில்.

"டாக்டர், உள்ளே வரலாமா!”

"வாங்க! ரவி, நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்."

“இந்தாங்க டாக்டர் !உங்க பீஸ் கொடுக்க மறந்துட்டேன்! சாரி"

"அதனாலென்ன பரவாயில்லே.!”

"அப்புறம் டாக்டர், இங்கே எங்கேயோ, என் செல் போன் மறந்து வைச்சுட்டேன் போலிருக்கு!"

"அப்படியா.! ஓ ! சொல்ல மறந்திட்டேனோ? சாம்சங் கேலக்சி போன் தானே ! இதோ இருக்கு இந்தாங்க! சுவிட்ச் ஆன் பண்ணிக்கோங்க”

“தேங்க்ஸ்! டாக்டர்!”

*** முற்றும்

நன்றி : கூகிள் மற்றும் விக்கிபீடியா

http://en.wikipedia.org/wiki/Obsessive%E2%80%93compulsive_disorder

http://www.helpguide.org/mental/obsessive_compulsive_disorder_ocd.htm

முரளி
06-03-2013, 12:13 PM
நன்றி ரமணி! சின்னதா இருக்கட்டுமேஎன்று நிறுத்தினேன். இப்போது மிச்சத்தையும் திரியில் ஏற்றி விட்டேன். ஒ.சி.டி (அப்செசிவ் க்ம்ப்பல்சிவ் டிசார்டர்- obsessive Compulsive disorder) பற்றி சொல்ல ஆசை. கொஞ்சம் நகைச்சுவை கலந்து அதை நிறைவேற்றிக் கொண்டேன். நன்றி மன்றத்திற்கு. அன்பர்களுக்கு உபயோகமாக இருந்தால், அதுவே போதும்.

மதி
12-03-2013, 05:55 AM
நல்ல நகைச்சுவைக் கதை. அப்புசாமியும் சீதேகிழவியும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

OCD பற்றிய அறிமுகமும் நன்று. நன்றி

சிவா.ஜி
12-03-2013, 08:08 AM
இந்த வீட்டை பூட்டிட்டோமா, காஸை அணைச்சுட்டோமா....இதெல்லாம் எல்லாருக்கும் நடக்கறதுதான். ஆனா கதையில வர்றவங்க மாதிரி ரொம்ப அதிகப்படியா ஆச்சுன்னா...என்ன பிரச்சனைங்கறதை சொல்லி கதைக்கு கணம் சேர்த்திருக்கறீங்க முரளி.

நல்ல நடையில் கவனமீர்க்கும் கதை. வாழ்த்துக்கள்.

sarcharan
12-03-2013, 09:30 AM
நைஸா டாக்டர் செல்லை அபேஸ் பண்ண பாத்திருக்காரு....

கீதம்
13-03-2013, 10:57 PM
obsessive Compulsive disorder என்றாலே ஷேக்ஸ்பியரின் லேடி மெக்பெத் தான் நினைவுக்கு வருகிறாள். குற்றவுணர்வின் காரணமாக தன் கையிலிருக்கும் இரத்தக்கறையை(?) அடிக்கடி கழுவிக்கொண்டேயிருப்பாள்.

இதுபோல் ஏதேனும் குற்றவுணர்வோ, பயமோ, மனக்குழப்பமோ தான் இதுபோன்ற காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்யவைக்கின்றன என்பதை கதாபாத்திரங்கள் மூலம் அறியத்தந்த தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

சிலருக்கு தங்கள் விசித்திர செய்கைகள் பற்றித் தெரிந்திருந்தும் மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து தங்களுக்குள்ளேயே மறைத்துவைக்க முயல்வார்கள். பிரச்சனை பெரியதாகும்போது சிகிச்சை கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போகிறது.

இப்படி கதைகள் வழியே விசித்திர மனநோய்கள் பற்றிய அறிமுகத்தைத் தருவதன்மூலம் அந்நோயின் பிடியிலிருந்து ஆரம்பத்திலேயே தங்களைக் காக்கும் வழியை அறியமுடியும். நல்லதொரு கதைக்கும் கதை நோக்கத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள் முரளி ஐயா.

முரளி
14-03-2013, 07:04 AM
சிவாஜி, சர்சரண் மற்றும் கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

மும்பை நாதன்
30-08-2013, 05:00 PM
அது, அது ... ... அது வந்து என்னமோ ஒரு பின்னூட்டம் போடனும்னு நினச்சேன்.

அது எந்த கதைக்குன்னு மறந்து போய்ட்டேன்.

சரி, சரி நினைவு வரும்போது பின்னூட்டம் போட்டுர்றேனே.

ஆங்க் ! இப்ப நினைவு வந்துடிச்சு.

இந்த 'மறதி' யோட 'முரளி' கதை.. .. ..

இல்லப்பா, முரளியோட 'மறதி' கதை நகைச்சுவையோட நல்ல ஒரு விஷயத்தையும் தெரியப்படுத்துது.

ஒரு நல்ல கதை. பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்

முரளி
31-08-2013, 01:14 AM
நன்றி. நாதன்.


இந்த 'மறதி' யோட 'முரளி' கதை.. .. ..

உங்க நினைவாற்றலை நான் ரொம்பவே ரசித்தேன். :lachen001: