PDA

View Full Version : எது சரி ?



M.Jagadeesan
05-03-2013, 04:07 PM
தினற்பொருட்டாற் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டாற் ஊன்தருவார் இல். ( புலால்மறுத்தல் -256 )

இதன் பொருள் :

தின்பது காரணமாக உலக மக்கள் கொல்லவில்லை யானால் , பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்பது பரிமேலழகர் கருத்து. மகாவித்துவான் மு. அருணாசலக் கவிராயர் அவர்களும், பேராசிரியர் கா. சு. பிள்ளை அவர்களும், பிறரும் தாங்கள் பதிப்பித்த பதிப்புகளில் இவ்வுரையை அப்படியே பொழிப்புரையாக்கிப் பதிப்பித்திருக்கிறார்கள்.

மூலத்திற்கும் உரைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ? என்பதைத் தயவு செய்து அமைதியாக இருந்து எண்ணிப் பார்ப்பது நல்லது.

" தின்பதற்காக " என்று உலகமக்கள் கொல்லாதிருந்தால் என மூலத்தில் இருக்கும்போது பரிமேலழகரும், பிறரும் உலக மக்கள் வாங்காதிருந்தால் என்று கருதும்படி உரை எழுதுவானேன் என்பது நமது ஐயப்பாடு.

குறளுக்கு உள்ள நேரான உரை பின்வருமாறு:

தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லுவதில்லை யானால் , விலை பெற்று ஊன் தருபவர் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதே.

இவ்வுரை நேரானதே எனினும் கருத்தில் பெரும்பிழை காணப்படுவதைக் காணுங்கள். அதாவது தின்பதற்காகக் கொல்லுகிற எவனும் வேறு எவனுக்கும் விலை கொடுக்க வேண்டியிராது. அவனே கொன்று தின்பான். கொன்று தின்பவனிடம் சும்மாயிருப்பவன் விலை கேட்க முடியாது. கொடுப்பதற்கு அவனிடம் ஊனும் இராது. ஆகவே இவ்வுரையும், குறளும் குழப்பத்தை விளைவிக்கின்றன. ஆகவே உண்மைதான் என்ன என ஆராய வேண்டியிருக்கிறது.

முதன்முதலில் ஏடு எழுதியவரோ , அச்சுக் கோப்பவரோ, பதிப்பித்தவரோ செய்த சிறு பிழையே இக்குழப்பதிற்கெல்லாம் காரணமாயிற்று. " கொல்லா " என்பது தவறு. " கொள்ளா " என்பதே சரியான பாடம் ஆகும்.இப்போது கொல்லா என்பதைக் கொள்ளா எனத் திருத்தி மூலத்தைப் படித்துப் பாருங்கள். இக்குழப்பங்கள் அனைத்தும் ஒழிந்து வெளிப்படையாகப் பொருளைக் காணலாம்.

' தின்பதற்காக வாங்குபவர்கள் இல்லையானால் பொருளுக்காகக் கொன்று விற்பவர் எவரும் இரார் " என்பதே வள்ளுவரின் குறளும் , அவரது கருத்துமாகும். ' கொல்லுவதுதான் பாவம், கொன்றதைத் தின்பது பாவமில்லை " என்பாரது கூற்றையும் வள்ளுவர் இக்குறளின் மூலம் மறுத்திருப்பதைக் கண்டும் மகிழலாம்.

தினற்பொருட்டாற் கொள்ளாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டாற் ஊன்தருவார் இல்.

என்பதே சரி.


நன்றி : திருக்குறளில் எழுத்துப்பிழை பற்றிய ஆய்வு - முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ. பெ. விசுவநாதம் .