PDA

View Full Version : குறளும் குற்றியலிகரமும்



குணமதி
04-03-2013, 03:03 PM
குறளும் குற்றியலிகரமும்

திருக்குறள் நாற்சீரடிகளில் குற்றியலிகரம் வரும் இடங்கள் மொத்தம் பத்தொன்பது. இப்பத்தொன்பது இடங்களில் வரும் குற்றியலிகரங்களில் அவற்றின் பயன்முறை நோக்கி மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. ஒற்றாகக் கொள்ளத்தக்க குற்றியலிகரம்.
2. எழுத்தாகக் கொள்ளத்தக்க குற்றியலிகரம்
3. ஒற்றாகவும் எழுத்தாகவும் கொள்ளத்தக்க குற்றியலிகரம்.

குற்றியலிகரத்தை எழுத்தாக எண்ணிக் கணக்கிடா நிலையில் (ஒற்றியல்பாகக் கொள்வதால்) சீர் தளை பொருந்த வரும் இடங்கள் பத்து.
1. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை – குறள். 178.
2. அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல் – கு. 254.
3. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் – கு. 291.
4. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் – கு. 324.
5. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டும் – கு. 585.
6. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் – கு. 801.
7. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை – கு. 844.
8. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துபின் – கு. 895.
9. இன்மையி னின்னாத தியாதெனின் இன்மையின் – கு. 1041.
10. துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய – கு. 1299.

குற்றியலிகரத்தை எழுத்தாக எண்ணிக் கணக்கிட வேண்டிய நிலையில் வரும் இடங்கள் இரண்டு.
1. வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கி யாண்டும் – கு. 4.
2. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் – கு. 1206.

குற்றியலிகரத்தை எழுத்தாக எண்ணிக் கணக்கிடினும் கணக்கிடாவிடினும் தளைகெடா இடங்கள் ஏழு.
1. குழலினிதி யாழினி தென்பதம் மக்கள் – கு. 66.
2. கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன – கு. 279.
3. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்தி யார்மாட்டும் – கு. 541.
4.. பேதமை என்பதொன்றி யாதெனின் ஏதங்கொண் – கு. 831.
5. அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் – கு. 842.
6. கரப்பவர்க்கி யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர் – கு. 1070
7. காதலர் தூதொடு வந்த கனவினுக்கி யாதுசெய் – கு. 1211.

இவ்வகையில் வருவனவற்றை எழுத்தாகக் கொள்ளாமையே சிறப்பு.

குற்றியலிகரத்தைப் பொறுத்தவரையில் எழுத்தெனக் கொள்ளலும் கொள்ளாமையும் ஆகிய இருவேறு தன்மைகள் இருப்பது நோக்கியே,
ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் – தொல். 1265. என வரும் நூற்பாவிற்கு
நச்சினார்க்கினியர்,
குற்றியலிகரமாவது, ஒற்றியல்பினையுடைத்து; அதுவேயன்றி எழுத்தியல்பினையும் உடைத்து என்றவாறு -
எனப் பொருள் கொண்டார்.


நன்றி: தமிழாய்வில் சில திருப்பங்கள் – முனைவர் கு.மோகனராசு.

M.Jagadeesan
06-03-2013, 06:44 AM
திருக்குறளில் இறுதிச்சீரில் வருகின்ற குற்றியலுகரம் பற்றி அறிந்துள்ளேன்; ஆனால் முதல் நான்கு சீரின் இடையில் வருகின்ற குற்றியலிகரம் பற்றி இதுவரையில் அறிந்திலேன். தக்க குறட்பாக்களுடன் எடுத்துக் காட்டியமைக்கு நன்றி.