PDA

View Full Version : இவர்களும் சொன்னார்கள்!



குணமதி
15-02-2013, 12:13 PM
இவர்களும் சொன்னார்கள்!


தமிழ்மொழி பற்றித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களில் சிலவும் தமிழறிஞர் சிலரின் கருத்துக்களும் கீழே காண்க:

என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்! - பெரியபுராணம்.

நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்! – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?
– திருவிளையாடற் புராணம்

கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்? - மதுரைக் கலம்பகம்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன். - தமிழ்விடு தூது.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ். - தண்டியலங்காரம்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
- மனோன்மணீயம்

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் - புறநானூறு

ஆடல் பாடல் இசையே தமிழே - சிலப்பதிகாரம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்! - பாரதியார் பாடல்கள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்! – பாவேந்தர் பாடல்கள்

தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும்… தமிழ் வடக்கே போய் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறியது. அந்த ஆரியத்திலே ஒருபகுதியினர் கிரேக்கத்திற்கு இனமான ஒருமொழி பேசிய ஒருதொகுதி ஆரியர் இந்தியாவிற்கு வந்தனர். - தேவநேயப்பாவாணர்

தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும். – பி.டி. சீனிவாசஅய்யங்கார்

இங்கிருந்து (பழந் தமிழகத்திலிருந்து) போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள். – இராமச்சந்திரதீட்சிதர்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

jayanth
16-02-2013, 02:29 AM
சரியாகத்தான் சொல்லியிருக்காக...!!!

பகிர்விற்கு நன்றி குணமதி...

இராஜிசங்கர்
17-02-2013, 10:36 AM
வரும் 21ஆம் தேதி (வியாழக்கிழமை) உலகத் தாய்மொழி நாள்.