PDA

View Full Version : தேமாங்காய்.. புளிமாங்காய்..



கலைவேந்தன்
14-02-2013, 04:41 AM
http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c58.0.403.403/p403x403/307403_10200676661944730_572462480_n.jpg

தேமாங்காய்.. புளிமாங்காய்..

தேமாங்காய்.. புளிமாங்காய் ..
பாங்காய்த்தான் வாசித்தாள்..
பூசனிக்காய் .. முருங்கைக்காய்
இடையிடையே யோசித்தாள்..

வடுமாங்காய் போலிவளோ
நெடுங்கனவு கண்டிருந்தாள்..
சிடுமூஞ்சித் தகப்பனையும்
கடுந்தாங்கி வளர்ந்திடுவாள்..

தெம்மாங்காய் பாட்டுபாடி
கம்மாயில் ஓடியவள்..
அம்மா’ங்காய் இறந்தவுடன்
சும்மாடில் காய் சுமந்தாள்..

தீம்போக்காய் மேல்நின்று
மேம்போக்காய் மேய்வோரின்
பார்வைக்காய் துடித்திடுவாள்
தீமைக்காய் அழுதிடுவாள்..

ஏழைக்காய் வாய்த்திட்ட
விதிக்காய் நினைப்பாளோ..?
கோழையாய் மடிந்திடாமல்
வாழத்தான் நினைப்பாளோ..?

காய்விற்றுப் பிழைத்தாலும்
காயம் விற்றுப் பிழைக்காமல்
செல்வாக்காய் வாழ்வாளோ..?
சொல்வாக்காய்க் கூறுங்களேன்..!!

M.Jagadeesan
14-02-2013, 05:02 AM
காய் விற்றுப் பிழைத்தாலும்
கல்வியை விடவில்லை !
எதிர்காலம் அவளுக்கு
ஏற்றமே என்றுரைப்பேன் !


பாராட்டுக்கள் கலைவேந்தன்.

முரளி
14-02-2013, 05:06 AM
காய்விற்றுப் பிழைத்தாலும்
காயம் விற்றுப் பிழைக்காமல்
செல்வாக்காய் வாழ்வாளோ..?
சொல்வாக்காய்க் கூறுங்களேன்..!!

அருமை. கண்ணதாசனின் கவிதை நினைவு வந்தது. அவர் பாடினது (காதலன் காதலி) நிலவை பற்றி. நீங்கள் பாடுவது (இன்றைய ஏழை பெண்ணின்) நிலைமை பற்றி.


அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ "

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

ஜான்
15-02-2013, 01:06 AM
இவள் போன்ற உழைப்பபாளிகள்,கனவைத் தேக்கி வைத்துக் கட்டுடைப்பவர்கள் இவர்களின் கதைகளின் தொகுப்பைத் தானே வரலாறு என்கிறோம்...

நல்ல வார்த்தைகள் கவிதை முழுவதும் ...

பாராட்டுகள் அண்ணா

கீதம்
25-02-2013, 12:28 AM
காயம் சுமக்கும் காயத்தினால்
காய் சுமக்கும் காலத்திலும்
கல்வியே சகாயம் என்கிறாள்!
எதிர்கால அபாயம் விலக்க
ஏட்டிலே உபாயம் கற்கிறாள்!

இவளுக்காய் இதயமுருகும் கவியின் இதயமுருக்கும் கவிதைக்காய் இனிய வாழ்த்துக்கள்.