PDA

View Full Version : ரமணியின் கதைகள்: பயணம்: நாவல்



ரமணி
06-02-2013, 11:49 PM
பயணம்
நாவல்
ரமணி

முகவுரை

இது ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்ட ஒரு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞனின் கதையைப் படர்க்கையில் (third person) சொல்லும் சுயசரிதம். கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

ஆங்கிலத்தில் stream of consciousness என்று ஒரு நாவல் உத்தியுண்டு. இந்த உத்தியில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் பாத்திரங்களின் மனவோட்டத்தின் மூலமே கதை சொல்லப்படும். James Joyce, Virginia Wolf போன்ற நாவலாசிரியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றனர். இந்த நாவலில் இந்த உத்தி கொஞ்சம் நீர்த்த வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தடாலடி திருப்பங்களும் நிகழ்வுகளும் கதையோட்டத்துக்கு முக்கியம் இல்லை எனும்போது, கதையின் வளர்ச்சியில் கதைமாந்தர்களுடைய குணநலன்களின் வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி), அவர்களின் ஊடாட்டம், உள்வினைகள் போன்ற கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கை என்பதே இவ்வகைக் கூறுகள் அடங்கியதுதானே?

கதையின் ஒவ்வொரு வரியையும் ஊன்றிக் கவனித்து, கணித்து, ஒவ்வொரு சொல்லையும் மனதில் வாங்கி, சொற்களில் பயிலும் கவிதையை அனுபவித்து, வருணனைகளை ரசித்துப் பின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டுக் கதாசிரியர் எழுதியதுபோலவே வாசகரும் படித்தால் கதையின் முழுத் தாக்கம் கிடைக்கும்.

பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோசப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது...

கனவுகளில் முன்னோக்கியும் நினைவுகளில் பின்னோக்கியும் காலத்தில் எப்போதும் பயணம் செய்யும் மனம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது முதலில் தடுமாறிப் பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, கிடைத்ததை உத்தமமாக்க முயலும்போது வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் இந்த நாவலின் பெரும் பகுதியை எழுதியிருந்தபோதிலும், மனதுக்கு சமாதானம் தரும் சரியான முடிவு கிடைக்காமல் நாவலின் இறுதி வடிவத்தை ஒத்திப்போட்டு வந்தேன். ஒரு வழியாக அந்த சரியான முடிவு மனதில் உதித்து நான் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில் நாவலை என் மனதுக்குப் பிடித்த வகையில் முடிவு செய்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நான் இப்படைப்பைக் கருதுகிறேன். அதே சமயம் வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தினத்தந்தி செய்தித்தாளில் வந்த (வரும்?) சிந்துபாத் தொடரின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதலான, சிறிய தவணை முறைகளில் கதையை இங்குப் பதிய எண்ணியுள்ளேன். ஒரு கவிதையைப் படிப்பதுபோல் மனம் விட்டு, மனம் இட்டு வாசகர்கள் படிக்கவேண்டும் என்று விழைகிறேன். உங்கள் பின்னூட்டங்களை இந்த நூலிலேயே பதிவு செய்யலாம்.

இந்த நாவல் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. இதைப் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள், தனியே படியெடுக்காமல் இந்த ’லிங்க்’ கொடுத்துப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறேன், கொஞ்சம் கொஞ்சமாக நான் இந்த நாவலை என் வலைதளத்தில் பதிவு செய்வதால்.

ரமணி
01/09/2012

*** *** ***

ரமணி
06-02-2013, 11:52 PM
பயணம்: நாவல்
ரமணி
1

மிக்க நலமுடைய மரங்கள்---பல
விந்தைச் சுவையுடைய கனிகள்---எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்---அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்...
---மஹாகவி பாரதியார், கண்ணன் என் காதலன் 3

அருகிலும் எதிரிலும் உட்கார்ந்து இருந்தவர்களை மெல்லத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே தன் இருக்கையில் உட்கார்ந்தான் ராஜா.

"மதுரை செல்லும் வைகை எக்ஸ்ப்ரஸ், முதலாவது ப்ளாட்ஃபாரத்திலிருந்து புறப்படும் சமயம்..."

அறிவிப்பின் பேரலையில் அத்தனை சந்தடியும் இரைச்சலும் கணநேரம் அமிழ்ந்து தலைதூக்க, மெல்லிய திடுக்கிடலுடன் சிலர் தங்கள் பெட்டிகளின் வாசலுக்கு விரைந்து தொற்றிக்கொள்ள, இன்னமும் சிலர் டிக்கெட் பரிசோதகர்களுடன் ஏதோ விவாதித்துக்கொண்டிருக்க, தலைகளும், பின்னல்களும், விரல்களும் வார்த்தைகளின் பின்னணியில் அவசர விடைகூறி வழியனுப்ப, எழும்பூர் ஸ்டேஷன் ஒரு பெரிய தீவுபோல் பின்னால் நகரத் தொடங்க, அவனுக்கு அது தன் வாழ்வில் மிக முக்கியமானதொரு பயணம் என்ற உணர்வு தலைதூக்க, கண்களை வெளியே ஓடவிட்டபோது கூட்டத்தைக் கலைத்துக் கொண்டு பாஸ்கர் முன்வந்து கூடவே நடந்து அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கிவிட்டுக் கூறினான்:

"All the best RAjA! Have a nice time."

வண்டியின் சூழ்நிலை பரிச்சயமாகி, ஆரம்ப சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அவன் ஒருவித லயிப்புடன் சாய்ந்தபோது, மனம் விழித்துக்கொண்டு ’வைகை’க்குப் போட்டியாகத் தன் பயணத்தைத் துவக்கியது.

இந்த ரெயில் பிரயாணத்தில் இருக்கும் சுகமும் மகிழ்ச்சியும் அலாதி. ஒரே நேரத்தில் இயற்கையையும் மனிதர்களையும் பார்க்கும், நேசிக்கும் வாய்ப்பு வேறு எந்தவகைப் பயணத்திலும் கிடைக்காது என்று தோன்றியது.

பஸ் பிரயாணத்தின் அசதியும் குலுக்கலும் இரைச்சலும் இல்லாமல் அமைதியாக வசதியாக மெல்லத் தாலாட்டியபடி முன்னேறும் ரயிலின் இந்த சூழ்நிலை அவனுக்கு எப்போதும் மிகவும் பிடித்தவொன்று.

இந்தச் சிலமணிநேரப் பயணத்தின்போது அறிமுகமாகும் மனிதர்கள்தான் எத்தனை! அதிலும் சிலர் பார்த்த உடனே பிடித்துப்போய் வெகுநாள் பழகியவர்களாக எவ்வளவு அன்னியோன்னியமாகி விடுகிறார்கள்! என்ன இருந்தாலும் முன்பின் அறிந்திராத ஒரு அன்னியன் என்ற நினைவு இல்லாமல் தன் குடும்பம் முழுவதையும் அறிமுகம் செய்துவைத்து, உணவு உடைமைகளைப் பகிர்ந்தளித்து, அவனை மகிழ்சியிலும் நன்றியிலும் திளைக்கவைத்து---

எல்லாவற்றையும்விட ரயிலில் அறிமுகமாகும் குழந்தைகள்தான் எத்தனை இனிய நினைவுகள்!

"அம்மா, அந்த மாமாவுக்கும் ஒரு எக்ளேர்ஸ் குடும்மா!", என வாஞ்சையுடன் வினவிய குழந்தை---


இப்படித்தான் ஒருமுறை அவன் திடீர் பரிச்சயத்தில் தோழியாகிவிட்ட ஓர் அழகிய குழந்தைக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்க நினைத்து வழியில் ஒரு சின்ன ஸ்டேஷனில் இறங்கி ஸ்டால் ஸ்டாலாக அலைந்து இறுதியில் வெற்றியுடன் ஒரு மில்க் பிக்கி பாக்கெட்டைக் கைப்பற்றி பாக்கி சில்லறையைக்கூட வாங்கமுடியாமல் வண்டி கிளம்பிவிட, கடைசிப் பெட்டிகளில் ஒன்றில் ஏறி வெஸ்டிப்யூல் வழியே தன் பெட்டியை அடைந்தபோது, கவலையின் சாயல் படரத் தொடங்கிவிட்ட முகங்களை சந்தித்தது நினைவுக்கு வந்தது: "எங்கம்மா அந்த அண்ணாவைக் காணோம்?"


அப்பாவின் மடியில் அமர்ந்தபடியே அகல விரியும் கண்களுடன் அவனையும் சுற்றுப்புறத்தையும் பார்த்த குழந்தை---

மெல்ல அருகில் வந்து அவனை, அவன் உடைமைகளை தொட்டுப் பார்த்த குழந்தை---

பத்திரிகைகளைக் கையில் எடுத்துக்கொண்டு எனக்கு-ஒரு-கதை-சொல்லுவியா பாணியில் பார்த்துவிட்டு அவன் அரவணைப்பில் கதை கேட்ட குழந்தை---

"ஒ தேகோ, கித்னா சுந்தர் ஹ ஓ சிடியா!" என்று அவனுடன் மழலை ஹிந்தியில் பேசிய குழந்தை---
["அங்கே பார், எவ்வளவு அழகு அந்தப் பறவை!"]

"பப்பா! ஹம் உப்பர் ஸோயேங்கே?" என்று தம் வினவியபடி கிடிகிடுவென மேல் பெர்த்தில் ஏறிவிட்ட குழந்தைகள்---
["அப்பா! நாங்க மேலே தூங்குவோமா?"]

பின் அங்கிருந்தபடியே மாடப் புறாக்களாக எட்டிப்பார்த்து மழலைக் கூவல்களை மிதக்கவிட்டு கார்ட்ஸ் விளையாடும், சாப்பிடும், மீண்டும் கீழிறங்கி ஓடும், "மத்ராஸ் கப் ஆயேகா, பப்பா!" ["மதராஸ் எப்போ வரும், அப்பா!"] என்று வாசல் வழியே எட்டிப் பார்க்கும் குழந்தைகள்---

ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தபடியே, ’ரேலு காடி ரேலு காடி’ என்று பாடிக்கொண்டு, ரயிக்குள் ரயில் விளையாடி வெஸ்டிப்யூலில் அங்கும் இங்கும் அலைந்து டிக்கெட் வழங்கிய குழந்தைகள்---

(தொடரும்)

ரமணி
08-02-2013, 12:11 AM
அப்புறம் ரயிலில் அறிமுகமாகும் பெண்கள்தான் எத்தனை பேர், எத்தனை வகையினர்!

மௌனச் சாமியார்போல் அமர்ந்திருக்கும் தம் கணவன்மார்களிடம் அவர்கள் தலையாட்டுவது அனுமதியா மறுப்பா என்ற கவலையில்லாமல் பேசிக்கொண்டே...யிருக்கும் மனைவியர்கள்---

எதிரில் இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டே ரகசியக் குரலில் பெற்றோரிடம் (அல்லது தன் சகோதர சகோதரியிடம்) கிசுகிசுக்கும்--மற்றவர்களிடம் பேச வெட்கப்படும்--உயர்நிலைப் பள்ளிப் பெண்கள்---

நுனி நாக்கில் ’அமெரிக்கன் ஸ்லாங்’ தவழவிட்டபடி அலட்சியம் தெரியும் கண்களுடன் கையில் ஹெரால்ட் ராபின்ஸ் அல்லது டிரான்சிஸ்டருடன் பெரிதாகச் சிரிக்கும் ஜீன்ஸ், பெல்பாட்டம், மாக்ஸி, மினிகள்---

எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்து பார்பரா கார்ட்லாண்ட் அல்லது டென்னிஸ் ராபின்ஸ் படிக்கும் எழில்-முக-இளம்-பெண்கள்---

இன்னும் சுடிதார் அல்லது புடவையில் நம் தென்னிந்திய மக்களைவிடக் கொஞ்சம் வெளுப்பான நிறத்தில், வார்த்தைகளில் தைரியமும் தன்னம்பிக்கையும் தொக்கி நிற்க வினோத மொழிகளில் தம் ஆடவ, மகளிர் சுற்ற நட்புகளுடன் உரையாடும் எழுவகைப் பெண்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, மற்றும் பேரிளம்பெண்கள்.

இன்னும் எப்போதாவது பால்போன்று வெளுத்த நிறத்தில், ஆடவர்போல ஆடை அணிந்து, கையில் மினரல் வாட்டர் பாட்டிலுடன், யாரென்று புரியாத சக ஆணிடம் ரகசியக் குரலில் உரையாடும் வெளிநாட்டுப் பெண்கள்.

இப்போதும் அவன் தன்னைச் சுற்றி உட்கார்ந்து இருப்பவர்கள் மேல் மெல்லக் கண்களை ஓட்டினான்.

எதிரில் மழமழவென்று முகம் மழித்துக்கொண்டு முகத்தின் தசைநார்கள் தெரிய, ஒரு உலகியல் அறிவுஜீவியின் தோரணையுடன், ஹிண்டுவில் ஆழ்ந்திருக்கும் காதோரம் தலை நரைத்த கம்பெனி எக்ஸிக்யூட்டிவ் அல்லது கல்லூரிப் பேராசிரியர்---

அருகில் கூஜா, கூடையில் பழம் பிஸ்கெட் தெர்மாஸ்ஃப்ளாஸ்க் சகிதம் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்: கணவன், மனைவி, சீருடையில் ஏழெட்டு வயதுப் பையன் மற்றும் கைக்குழந்தை. வாய்பேசாது உழைக்கும் உயிர்கள்---

அவனையடுத்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூக்கத்தில் மூழ்கியிருக்கும் நீள்முடி இளைஞன்---

நல்லவேளை அவனுக்கு ஜன்னலோர இருக்கை. இப்போதும் அவன் குழந்தைத் தனமாக ’விண்டோ ஸீட் ப்ளீஸ்’ என்று பயணச் சீட்டுப் பதிவுப் படிவத்தில் எழுதுவதுண்டு. அதை ஓரக் கண்ணால் பார்த்துப் புன்னகையுடன் அவன் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் பெண் எழுத்தர். இதனாலேயே அவள்மேல் அவனுக்கு ஒரு பாசம்.

இந்த ஜன்னல் ஓர இருக்கைதான் எவ்வளவு வசதி! கம்பியில் கைவைத்தபடி ஜன்னல் விளிம்பின் வழியே எட்டிப் பார்ப்பதில் எத்தனை மகிழ்ச்சி!

தரையில் ஒரே சீராக வேகமாக ஓடும் தண்டவாளத்தை அடுத்த பொன்னிற ஒற்றையடிப் பாதை. அதற்குமேல் சீரான மரகதப் பட்டை. மங்கிய பச்சைக் கற்றாழைக் கோடுகள்.

பின்னால் கம்பீரமாக நகரும் பனை மரங்கள். சதுரங்கக் கட்டங்கள் போல் விரியும் பசுமை வயல்கள், புல்வெளிகள். ஆச்சரியத்துடன் தலையை உயர்த்திப் பார்க்கும் ஆடுமாடுகள். அங்கங்கே பளிச்சென்று மனிதர்கள்.

ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு ஓடும் தந்திக் கம்பங்கள். அவற்றை இணைக்கும் அலைஅலையான இசைக் கோடுகளில் வால்குருவி, காக்கை மற்றும் பிற பறவைகளின் சங்கீதக் குறியீடுகள். இந்த இசைக் குறிகளுக்கு ஒலி வடிவம் கொடுக்கும் ரயில் சக்கரங்களின் தாளக் கச்சேரி.

தூரத்தே அடிவானத்தை ஒட்டியபடி ரயிலின் திசையில் நகரும் பசுமைத் தீவுகள். எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பரந்து விரியும் வானமாகிய பெருந்திரை. அதில் அவ்வப்போது காற்றுத் தூரிகையால் கதிரவன் தீட்டும் மேகவண்ண ஓவியங்கள்.

"டாடி, இந்த வைகை எக்ஸ்ப்ரஸ் எப்போ டாடி திருச்சிக்குப் போகும்?"

மழலைக் குரல் ஒன்று அவன் சிந்தனையைக் கலைக்க, தலையைத் திருப்பிப் பார்த்தவன் கண்களில் பளிச்சிட்டு மறைந்தது ஒரு அழகிய சிறுவன் முகம்.

அந்த முகத்தை, ஆர்வம் தோய்ந்த அந்தக் கருநீல குண்டு விழிகளை அவன் எங்கேயோ---

சிறிதுநேர நினைவுகூரலுக்குப் பின் மனத் திரையில் தெளிவாகத் தோன்றியது Close Encounters of the Third Kind படத்தில் ’காஸ்மிக்’ கடத்தலுக்கு ஆளாகும் அந்த ஏழு வயதுப் பையன் ’பெயர்ரி’யின் முகம்.

என்ன ஒற்றுமை! அடுத்த பெட்டியில் இருக்கும் அந்தப் பையனைப் பார்த்துப் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

(தொடரும்)

ரமணி
08-02-2013, 09:08 AM
திடீரென்று மனம் விலகிச் சென்று வைகை விரைவு-வண்டியின் சிறப்புகளில் அலைபாய்ந்தது. சென்னையில் இருந்து அவன் எப்போது மதுரைக்குச் செல்வதானாலும் பயன்படுத்துவது, பகல் பயணத்துக்கு வைகை எக்ஸ்ப்ரஸ். இரவுக்கு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்.

அதிகம் சோர்வு தோன்றாத வண்ணம் இவர்களால் எப்படி இவ்வளவு விரைவில் மதுரை போய்ச்சேர முடிகிறது? நினைக்கவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த ’பாப் மியூசிக்’ இரைச்சல் மட்டும் இல்லாவிட்டால் இது ஓர் அழகிய மானோ ரயில்தான்.

கூடவே, வைகை எக்ஸ்ப்ரஸ் அறிமுகப் படுத்தப்பட்ட புதிதில் எதிர்பார்த்ததற்கு மிக முன்பாகவே வீடு சேர்ந்து அவன் அம்மாவைக் கன்னத்தில் கைவைக்கச் செய்தது நினைவுக்கு வந்தது.

"ராஜாவா! மெட்ராஸ்லேர்ந்து எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்துட்டே? கார்த்தாலதான் வருவேன்னு பார்த்தேன். என்ன, ப்ளேன்லயா வந்தே?"

அவன் அப்பா எப்போதும் ’வெல் இன்ஃபார்ம்ட்’. இதுபோன்ற விஷயங்கள் ஒன்று அவர் எதிர்பார்த்ததாக இருக்கும். அல்லது அவ்வளவு வியப்புத் தருவதாக இருக்காது. அப்படியே இருந்தாலும் அவர் அதை அதிகம் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்.

அப்பா என்றதும் அவருடைய சிந்தனை தோய்ந்த ஒளிவீசும் கண்களும், தெளிவாகத் திருநீறு அணிந்த அகலமான நெற்றியும், செந்நிறக் கடுக்கன்கள் அணிந்த செவிகளும், தீர்க்கமான நாசியும் (குறைந்தது அரைமணி நேரப் ப்ராணாயாமம் அவரது தினசரி யோகப் பயிற்சி), எப்போதும் புன்சிரிக்கும் வசீகர முகமும் (புன்சிரிப்பு உதட்டிலா, கண்களிலா அல்லது மெல்லச் சிவந்து விரியும் நாசியிலா என்று சொல்வது கடினம்), நேர்த்தியாக வாரி முடியப்பட்ட கட்டுக் குடுமியும் நினைவுக்கு வந்தன.

இன்னைக்கெல்லாம் பார்த்தாக்கூட அவரை அறுபது வயதைக் கடந்த ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

வீட்டில் இவ்வளவு கனிவாக இருந்தாலும் பள்ளியில் அவர் கணிதத்தைப் போதிக்கத் தொடங்கினால் போதும், குண்டூசி விழும் ஓசை கேட்கும் மௌனம் நிலவும்.

கணீரென்ற குரலில் அவர், "A plus B whole square is equal to, A square plus two AB plus B square..." என்று அல்ஜீப்ராவையோ,

"ஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்களின் கூடுதல் அதன் கர்ணத்தை விடப் பெரியது. ஆயினும் அந்தப் பக்க அளவுகளின் வர்க்கங்களின் கூடுதல் அதன் கர்ணத்தின் வர்க்கத்திற்குச் சமாமகும்" என்று ஜியோமிதித் தேற்றங்களையோ அலசும்போது வகுப்பு முழுவதும் சிலையெனச் சமைந்திருக்கும்.

கரும்பலகையில் எழுதிவிட்டு வகுப்பை வலம் வரும்போது, சரியாகப் பாடத்தைப் புரிந்துகொள்ளாத முகங்களை அவர் எளிதில் இனம் கண்டுகொள்வார். பின் அவர்களில் ஒரு மாணவனை எழுந்திருக்கச் சொல்லிக் கரும்பலகையில் எழுதச் செய்து மீண்டும் மீண்டும் தெளிவுறுத்தி எல்லோருக்கும் புரியும் வரை விடமாட்டார். கணிதத்தைப் பொறுத்தவரை அவர் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் நூறு சதவிகிதம் ’பாஸ்’. இத்தனைக்கும் அவர் தன் முப்பத்தைந்து வருட சர்வீஸில் எந்த ஒரு மாணவனையும் கைநீட்டி அடித்ததில்லை. ’இம்பொசிஷன்’ கொடுத்ததில்லை. எப்போதாவது கோபத்தில் ஓரிரு சொற்கள் அவர் வாயிலிருந்து நழுவி விடுவதுண்டு. உடனே சிரித்துவிடுவார்.

அப்பாவிடம் அவனுக்கு ஒரே ஒரு குறை.

ஊரில் எல்லோருக்கும் அவர் ஓர் ஆசிரியராக, வழிகாட்டியாக, வணக்கத்திற்குரிய பெரிய மனிதராக இருந்தாரே தவிர ஒருவரும் அவரைத் தன் உற்ற நண்பராகக் கருதியதில்லை. சக ஆசிரியர்கள் கூட அவரைத் தம்மினும் உயர்ந்த பெரியவர் என்று நினைத்துப் பழகினார்களே தவிர, நண்பர் என்ற முறையில் அல்ல.

இதற்குக் காரணம் அப்பாவின் வயதா, அறிவா, தோற்றமா என்பது விளங்கவில்லை. ஆனால் இதற்கு அப்பாவைக் குறைசொல்வதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்களைக் குறைசொல்வது பொருத்தமாகப் பட்டது. அவர்கள் உருவாக்கியுள்ள ’இமேஜுக்கு’ அப்பா என்ன செய்வார்?

அவனும் அப்படியொரு ’இமேஜை’ மனசில் வைத்தே அப்பாவிடம் பழகியிருக்கிறான். ஒருகால் அந்த முப்பத்தந்து வருட வயது-இடைவெளி காரணமோ? அவன் தன் இருபத்து-நான்காம் வயதில், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பொறுப்பேற்ற போது அப்பா ரிடயராகி விட்டார்.

அல்லது அப்பாவுக்கு மணமாகி நீண்டநாள் குழந்தைப் பேறில்லாமல் பதினைந்து வருடங்கள் கழித்து அவன் பிறந்ததாலும், சிறுவயதில் அவனைச் சுற்றி இருந்த உறவினர்கள் அவரைப் பெரியப்பா என்றும் தாத்தா என்றும் அழைத்தபோது அவன் மட்டும் அப்பா என்று அழைத்தது வியப்பாக இருந்ததாலும், இத்தகைய ஒரு ’சைகலாஜிகல்’ பின்னணியில் அவனுடைய அப்பா ஒரு அப்பாவை விட வயதானவராகத் தோன்றிட அவருக்கு ஒரு தாத்தாவின் அந்தஸ்தையே கொடுத்து வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் சிறுவயதில் அவன் தன் அப்பாவை தாத்தா என்றே கூப்பிட்ட நிகழ்ச்சிகள் உண்டு!

இத்தகைய பின்னணியில் அவன் தன் ஆசை அபிலாஷைகளை, எண்ணங்களை, கருத்துகளை, மற்றபிற உணர்வுகளைத் தன் அப்பாவுடனோ--அல்லது அம்மாவுடனோ--பகிர்ந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. அல்லது உருவாக்கிக் கொண்டதில்லை.

’நோநோ! அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அம்மாவுக்கு இதெல்லாம் புரியாது. அவா வளர்ந்த சூழ்நிலை வேற, நாம வளர்ற சூழ்நிலை வேற. இதெல்லாம் அவாளுக்கு சரின்னு படாது. அல்லது என்னைத் தப்பாப் புரிஞ்சுக்குவா. ஏன் அனாவசியமா அப்பா அம்மா மனசை நோக அடிக்கணும்?’---

என்ற நினைவில், அவன் தன் ’அடலெசென்ட்’ (பருவ) உணர்வுகளை, அதைத் தொடர்ந்த ஆசைகளை, அனுபவங்களைத் தனக்குள்ளேயே பூட்டிச் சிறைப்படுத்தி விடுவது வழக்கம்.

ஒரு முயற்சியாகக் கூட அவற்றை அவன் அப்பாவிடம் வெளியிட்டது இல்லை. அவர் கருத்துக்களை அறிய முனைந்தது இல்லை.

’இனிமேல் அதற்கு வழியில்லை’ என்று அப்பாவின் சமீபத்திய கடிதம் உணர்த்தியது.

*** *** ***
(தொடரும்)

ரமணி
08-02-2013, 11:31 PM
பயணம்: நாவல்
ரமணி
2


ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டினுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 35

அன்புள்ள ராஜா,

வெகு நாட்களாக உன்னிடம் இருந்து கடிதம் வராதது குறித்து வருத்தம். ஏன் எழுதவில்லை? அஃப் கோர்ஸ், கல்லூரியில் முதல் தவணைத் தேர்வுகள் நெருங்குவதால் வேலை அதிகம் இருக்கும். அல்லது உடல் நலமில்லையா?

இங்கு அம்மாவும் நானும் நலம். நம் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து அவ்வப்போது கடிதம் வருகிறது. கோயம்புத்தூரில் வசந்தியும் குழந்தைகளும் நலம். மற்ற இடங்களிலும் அப்படியே.

அங்கு நீ எப்படி இருக்கிறாய்? கல்லூரி மற்றும் ஜாகை வசதிகள் எப்படி? அதே ரூமில்தான் இன்னமும் இருக்கிறாயா? ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறாய்? விடுமுறை நாட்களில் அனாவசியமாக வெய்யிலில் அலையாதே. உன் நண்பன் பாஸ்கர் நலம்தானே? ’ப்ரமோஷ’னுக்குப் பின் அவன் ’பாங்க்’ உத்தியோகம் எப்படி இருக்கிறது?

எனக்குத்தான் பொழுதே போகவில்லை. என் தினசரி நியமனுஷ்டானங்களில் ஒன்றும் குறைவில்லாமல் செய்கிறேன். மூன்று வேளையும் தவறாது சந்தியா வந்தனம் செய்கிறேன். காலை மாலை நேரங்களில் ’கனகதாரா, விஷ்ணு சஹஸ்ரநாமம்’ போன்ற ஸ்தோத்திரங்களை நானும் அம்மாவும் தவறாது காஸட் போட்டுக் கேட்கிறோம். இருந்தும் நேரம் நிறைய மீந்துவிடுகிறது. பலர் வற்புறுத்தியும் ட்யூஷன் வைத்துக்கொள்ள விருப்பப்படவில்லை.

நான் புதிதாக ஒரு ’ஹாபி’யை மேற்கொண்டுள்ளேன். என்ன தெரியுமா? ஜேன் ஆஸ்டினின் எம்மாவைப் போல ஜோடி சேர்க்கும் வேலை! என் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் பணியைத்தான் குறிப்பிடுகிறேன். முன்பெல்லாம் நேரம் கிடைத்தபோது எப்போதேனும் செய்துவந்ததை இப்போது ஆர்வத்துடன் முழுமூச்சாக செய்யத் தொடங்கியிருக்கிறேன். ஜாதகப் பொருத்தம் மட்டுமின்றி மற்றபிற ஆலோசனைகளையும் வழங்க யத்தனிக்கிறேன்.

இந்த இடத்தில் திடீரென்று ஒரு விஷயத்தை, ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டியுள்ளது. உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறேன். பெண் நல்ல இடம். பி.ஏ. இங்லிஷ் படித்திருக்கிறாள். வாஸ்தவமாகவே மூக்கும் முழியுமாக இருக்கிறாள். நன்றாகப் பாடுகிறாள். வீணை வாசிக்கத் தெரியும். ஆத்துக் காரியங்களைச் செவ்வனே செய்வதிலும் கெட்டிக்காரி என்று படுகிறது. மொத்தத்தில் அம்மாவின் மனசுப்படி ஒரு ஆதர்ஷ மருமகளாக அமைவாள் என்று தோன்றுகிறது. உனக்கும் வயதாகிவிட்டது, நல்ல வேலையிலும் செட்டிலாகிவிட்டாய். நானும் ஓய்வுபெற்றுவிட்டேன் அல்லவா? உன் சக வயது உறவினர்கள் வசந்தி, முரளி போன்றோர்க்கும் கல்யாணமாகிவிட்டதை நினைவுபடுத்துகிறேன்.

மற்ற லௌகிக விஷயங்களில் உன் கருத்துப் படியே நான் ஒன்றும் பிரஸ்தாபிக்கவில்லை. அம்மாவுக்கு அதில் கொஞ்சம் கோபம்தான். ஆனாலும் பெண் வீட்டார் எல்லா விஷயங்களிலும் குறைவறச் செய்ய சம்மதித்துள்ளனர். விபரங்களை நேரில் கூறுகிறேன்.

எனவே, நீ உடனடியாக வரும் 15-ஆம் தேதி வைகை எக்ஸ்ப்ரஸில் புறப்பட்டு வரத் தோதாக ஏற்பாடுகள் செய்துவிடு. 17-ஆம் தேதி நல்லநாள் என்பதால் அன்றே மதுரையில் பெண்பார்க்க ஏற்பாடு செய்துவிட்டேன். உனக்கும் பதினைந்து முதல் விடுமுறை ஆரம்பம் அல்லவா? கல்யாணத்தை உடனடியாக நடத்தப் பெண்ணின் பெற்றோர் விரும்புவதாள் இந்த அவசரம்.

இதுபோன்ற நல்ல இடம் அமைவது கஷ்டம் என்பதால் இந்த வாய்ப்பை நழுவவிடுவது உசிதமல்ல. பெண்பார்த்தபின் உன் கருத்தை அறிந்து மேலே தொடரலாம்.

பதினைந்தாம் தேதி இரவு உன்னை எதிர்பார்க்கிறேன். அம்மா உனக்குத் தன் ஆசிகளைத் தெரிவிக்கிறாள்.

இப்படிக்கு,
உன் பிரியமுள்ள அப்பா
மஹாதேவ ஐயர்


அப்பாவின் கடிதத்தை இரண்டு வாரம் முன் ஒரு நாள் ’லஞ்ச் அவ’ரில் தன் அறையில் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவுகள் இன்னமும் தொடர்ந்தன.

மனதில் விவரிக்க இயலாத ஒரு சோகம். சூன்யம்.

தான் ஆசையுடன் கட்டிய மணல் வீடுகள் மழையில் கரைந்துவிட்ட நிகழ்காலத்தை நம்ப மறுக்கும் குழந்தையின் பிடிவாதம்.

ஏதேனும் நல்லது நடந்து இருள் விலக விடியலின் முதல் ஒளிக்கீற்று தோன்றாதா என்ற ஏக்கம்.

எப்படியும் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை. அதே நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது போன்ற அச்சம்.

கொஞ்சம்கூடத் தான் எதிர்பார்த்திராத சாத்தியத்தாலோ அல்லது மூளையின் சாம்பல்நிற செல்களில் ஏதோ ஒன்றன் அனுமானத்தில் எழுந்த எச்சரிக்கையை அசட்டை செய்ததன் விளைவாலோ அடுத்த நாலைந்து ’மூவ்’களின் விஸ்வரூபத்தில் திடீரென்று ’செக்மேட்’ ஆகிவிட்ட சதுரங்க ராஜாவின் நிலையில் தான் இருப்பதாக உணர்ந்தான்.

Checkmated in life!

(தொடரும்)

ரமணி
10-02-2013, 12:49 AM
நான் முன்பின் அறிந்திராத, முகம்கூடத் தெரியாத, பி.ஏ. இலக்கியம் பயின்றுள்ள, அப்பாவின் கணிப்பில் வாஸ்தவமாகவே ’மூக்கும் முழியு’மாக இருக்கும் பெண்ணே! யார் நீ? எந்த வகையில் நீ என் ’லைஃப் பார்ட்னர்’ ஆகத் தகுதி உடையவள், அல்லது நான் உன் ’லைஃப் பார்ட்னர்’ ஆகத் தகுதி உடையவன் ஆகிறேன்? அம்மாவின் ஆதர்ஷ மருமகளே! எனக்கு ஆதர்ஷ மனைவி ஆவாயா? என் வழியில் நான் அமைத்துக்கொள்ள விரும்பும் வாழ்க்கையில் குறுக்கிட உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என் எண்ணங்கள், கனவுகள், ஆசைகள் பற்றி உனக்கு என்ன தெரியும்? நான் இதுவரை அறிந்துள்ள, பழகியுள்ள, நேசித்துள்ள பெண்களைவிட நீ என்ன உசத்தி?

How can I reconcile myself to a total stranger I have not seen, talked to, moved with, or loved?

பெரும் இரைச்சலுடன் பாலம் ஒன்றில் ஓடத் தொடங்கிய வைகை எக்ஸ்ப்ரஸ் சாந்தமடைந்து மீண்டும் சமவெளியில் பிரவேசித்தது.

புதிதாகப் போடப்பட்ட குழாயில் முதலில் வரும் துருவும் அழுக்கும் கலந்த வெதுவெதுப்பான நீரைத் தொடருந்து வரும் தெள்ளிய, குளிர்ந்த நீரைப் போல, வெறுப்பும் கோபமும் கசப்பும் நிறைந்த மனத்தின் முதல் எதிர் இயக்கத்தை அடுத்து எண்ணங்கள் சிறிதுசிறிதாகத் தெளிவடைந்து ஒருமைப்படத் தொடங்கின.

அப்பாவின் கடிதத்தில் அவனுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது, அவனுக்குப் பிடிக்காமல்போக நியாயமில்லை என்பது அவர்கள் அபிப்பிராயம்.

அப்படி ஒன்றும் சாதாரணமான பெண்ணை அவனுக்குப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. யாரந்த இலக்கியம் பயின்ற, அழகான, நன்றாகப் பாடும், வீணை வாசிக்கும் பெண்? எந்த ஊர்?

இவ்வளவு தூரம் அப்பா அம்மாவின் மனதில் நிறைந்துவிட்ட, அவர்களால் ஒருமனதாகப் பாராட்டப்படும் பெண்ணே, யார் நீ?

என்ன இருந்தாலும் இந்த விஷயத்தில் அவனை முன்பே ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும். ’ராஜா, உனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க விரும்புகிறோம். நீ யாரையாவது மனதில் நினைத்திருக்கிறாயா? அல்லது நாங்கள் முயற்சி செய்யட்டுமா?’ என்று அன்பாக, ஆதரவாக, வெளிப்படியாக அவனை ஒரு வார்த்தை---ஒரே ஒரு வார்த்தை---கேட்டிருக்க வேண்டாம்?

’நாங்கள் பார்க்கும் பெண் உனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உனக்கு உதவுவதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவது நீதானே? எங்களைப் பொறுத்தவரையில் எல்லோரையும் அனுசரித்துக்கொண்டு, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போகக் கூடிய நம்ம ஜாதிப் பெண் யாராக இருந்தாலும் சம்மதமே. உனக்கு இந்த வகையில் அனுபவம் போதாது என்பதால் நாங்கள் முயற்சிசெய்ய நேரிடுகிறது’, என்றாவது ஆலோசனை கூறியிருக்கலாம்.

ஏன் அப்பாவும் அம்மாவும் இப்படியெல்லாம் செய்யவில்லை? கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போவது அவனல்லவா? வீட்டுக்கேற்ற மருமகள் என்ற சுயநல எண்ணம் காரணமாகத்தானோ அவர்கள் பார்த்திருக்கும் முதல் பெண்ணையே வற்புறுத்தித் தலையில் கட்ட முனைகின்றனர்?

இப்படியெல்லாம் நினைக்கும் நிலைக்கு அவனை ஆளாக்கிய அப்பா அம்மாவின் நோக்கம்தான் என்ன?

கூடவே வசந்தியைப் பெண் பார்த்த நிகழ்ச்சியின்போது அவன் அப்பா அம்மா நடந்துகொண்ட விதம் நினைவில் நிழலாடியது.

"அத்திம்பேர் நீங்க என்ன சொல்றேள்? பையன் எஞ்சினியரிங் டிகிரி. நல்ல வேலை. கை நிறைய சம்பளம். பாக்கறதுக்கும் லக்ஷணமா இருக்கான். அவா அப்பா அம்மாகூட ரொம்ப நல்ல மாதிரியாத் தோண்றது. அவாளுக்கு வசந்திகிட்ட இப்பவே எவ்வளவு ஒட்டுதல் பார்த்தேளா? இந்த இடம் மட்டும் குதிர்ந்ததுன்னா நாங்க ரொம்ப பாக்யசாலிகள்."

சித்தியின் ஆதங்கத்துக்கு அப்பாவிடமிருந்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் வந்தது.

"ஏம்மா காமு, நா ஒண்ணு கேக்கறேன், தப்பா நெனச்சுக்க மாட்டியே? நீங்கள்ளாம் இவ்வளவு தூரம் குதிக்கறேளே, யாரவது பொண்ணை ஒரு வார்த்தை கேட்டேளா? கல்யாணம் பண்ணிக்கப்போறது அவதானேம்மா? காலத்துக்குத் தகுந்தமாதிரி நாம்பளும் நடந்துக்க வேண்டாமா? நீ என்ன சொல்றே மீனாக்ஷி?"

"ஆமா காமு. அத்திம்பேர் சொல்றது வாஸ்தவம்தான். வசந்தி ரொம்ப நாளா எங்ககிட்ட வளர்ந்தவ, அவள் மனசப் பத்தி நேக்கு நன்னாத் தெரியும், பெரியவா சொல்லைத் தட்டமாட்டா. இருந்தாலும் அவளையும் ஒரு வார்த்தை கேட்டுர்றதுதான் சரி."

இதற்குள் பையன் வீட்டாரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த அவன் சித்தப்பாவின் குரல் ஒலிக்க---"என்ன வசந்தி, பையன் எப்படி? முதல்ல உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு?"---நினைவலைகள் கலைந்தன.

யோசித்துப் பார்த்ததில் அப்பாம்மா பேரில் தப்பில்லை என்று பட்டது. தன் மகனின் திருமணத்திற்கு முதல்படியாக எந்த பெற்றோரும் தொடங்கும் காரியத்தைத்தானே அவனுடைய பெற்றோரும் செய்திருக்கிறார்கள்? திடீரென்று இந்த இடம் எதிர்பாராத விதமாக அமைந்திருக்கலாம். போதிய அவகாசம் இல்லாததால் நேரில் அவனிடம் பேசிக்கொள்ள நினைத்திருக்கலாம். அப்பாதான் விவரங்களை நேரில் சொல்வதாக எழுதியிருக்கிறாரே?

அப்புறம் அந்த ஜேன் ஆஸ்டினின் எம்மா!

அப்பா எப்போது ’எம்மா’ படித்தார்? அவருக்கு இந்த நாவல்கள் எல்லாம் கட்டோடு பிடிக்காது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தான்? வீட்டில் உள்ள ஆங்கில நாவல்கள் எல்லாம் அவன் மட்டும் படிப்பதுதானே வழக்கம்?

அம்மாவின் கருத்து, புத்தகங்களை விலைகொடுத்து வாங்குவது வீண் செலவு. அவாளுக்குத் தேவையான ’விகடன், கதிர், கல்கி, கலைமகள்’ போன்ற பத்திரிகைகளை அண்டை வீடுகளுடன் பகிர்ந்துகொண்டு படித்துவிடுவார்கள்.

ஓய்வு நேரத்தில் கூட அப்பா ’ஹிண்டு’வும் ’கீதா’வும் தானே படிப்பார்? பத்திரிகைகளைப் பொறுத்தவரை அவர் எப்போதாவது ’டைஜஸ்ட், பவன்ஸ் ஜர்னல்’ அல்லது ’வீக்லி’ படிப்பார். அதுகூடத் தனக்குப் பிடித்த பகுதிகள் மட்டும்தான்.

ரிடயர் ஆனதுமுதல் ஒருவேளை இந்த நாவல்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறாரோ? அதுகூட அவன் விடுமுறை நாட்களில் வந்திருந்தபோது வெளிப்படையாகத் தெரியவில்லையே?

முன்பு ஒருமுறை அப்பா தன் கல்லூரி நாட்களில் பி.ஏ. பயின்றபோது படித்ததாகச் சொன்ன புத்தகங்களும் ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தன.

"இந்தக் காலத்தில இங்க்லிஷை சரியாகவே ’டீச்’ பண்ணறதில்லை. டிகிரி சிலபஸ்லாம்கூட ரொம்பக் குறச்சலாகவும் ஏனோதானோன்னும் இருக்கு. நாங்கள்லாம் பி.ஏ. பண்றச்சே ’மெயின் சப்ஜக்ட்’ கணிதமாக இருந்தாலும் எங்க இங்க்லிஷ் பேப்பருக்கு ஏகப்பட்ட புத்தகங்கள் வெச்சிருந்தா. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்ன, டென்னிஸன், வேர்ட்ஸ்வர்த், பைரன், ஷெல்லி, கீட்ஸ், மில்டன் இவாளோட ’பொயட்ரி’ என்ன, லாம்ப், ஆர்னால்ட், தோரூ இவாளோட கட்டுரைகள்னு ஏகப்பட்ட ஆதர்ஸ். இதைத் தவிர ’நான்-டீடெய்ல்ட் ஸ்டடி’ன்னு ஜேன் ஆஸ்டின், ஸ்காட், டிக்கன்ஸ், ஹார்டி, கால்ஸ்வர்தினு ஒரு பெரிய லிஸ்ட். இதெல்லாம் போக ’ரென் அன்ட் மார்டின் கிராம்மர்’. அந்தக் காலத்தில எங்களுக்கு சாமுவேல் எல்டன்னு ஒரு வெள்ளைக்காரன் க்ளாஸ் எடுத்தான். அவன் க்ளாஸ்ல போர்டு பக்கத்தில நடந்துண்டு ஷேக்ஸ்பியரையோ, மில்டனையோ எடுத்தா நேரம் போறதே தெரியாது. நானெல்லாம் அப்பவே இங்க்லிஷ்ல ஸெகண்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணினேன். என்ன படிக்கிறேள் நீங்கள்ளாம் இப்போ?"

உண்மைதான். அப்பாவின் ’இங்க்லிஷ்’ பேச்சும் எழுத்தும் கற்றுத்தேர்ந்த ஒரு வெள்ளைக்காரன் பாணியில் இருக்கும்.

அப்பா பி.ஏ. படித்தது சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னால். இன்னுமா அவர் தான் படித்தவற்றை ஞாபகம் வைத்திருக்கிறார்?

*** *** ***

ரமணி
11-02-2013, 12:00 AM
பயணம்: நாவல்
ரமணி
3


நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தில் வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை, பாரதி-அறுபத்தாறு 52

அவனால் அப்பாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எத்தனை அப்பாக்கள்!

தும்பைப்பூ போன்ற வேஷ்டி சட்டை ஜரிகை அங்கவஸ்திரம் அணிந்து ஸ்கூலுக்குப் போகும் அப்பா.

வகுப்பில் கண்டிப்பே உருவான அப்பா.

ஊரில் எல்லோராலும் வணக்கத்துக்குரிய பெரிய மனிதராகக் கருதப்படும் அப்பா.

நெருங்கின நண்பர்களே இல்லாத அப்பா.

ஓய்வு நேரங்களில் மற்றவர்களைப் போல திண்ணையில் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந்து வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு சீட்டு மற்றும் அரட்டைக் கச்சேரியிலில் ஈடுபடாமல் கீதை படிக்கும் அப்பா.

தவறாமல் சந்தியா வந்தனம் பண்ணும், தினமும் ஸ்தோத்திரப் பாடல்களை காஸட் போட்டுக் கேட்கும், ஆனால் ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டுமே கோவிலுக்குப் போகும் அப்பா.

காய்கறி மளிகை சாமான்கள் விறகு கரி வாங்கி வருவது முதல் எல்லா வேலைகளையும் தானே முன்னின்று செயலாற்றி கவனிக்கும் அப்பா.

எப்போதும் கொஞ்சம் ’ரிசர்வ்ட்’ ஆகக் காட்சியளிக்கும் அப்பா.

இப்போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும், ஜேன் ஆஸ்டின் படிக்கும் அப்பா.

இத்தனை அப்பாக்களில் எது அவனுடைய அப்பா என்று கேட்டால் உடனே பதில் வராது. பொறுமையாக, நிதானமாக யோசிக்க வேண்டிவரும்.

அப்பாவின் இதுபோன்ற எல்லாத் தோற்றங்களிலும் அவனுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் ஒன்றிலாவது ஈடுபாடு கிடையாது.

மறுபடியும் அந்தத் ’தாத்தா இமேஜ்’தான் தலைதூக்கும். அவனுடைய தாத்தாவாக இருந்தால் இந்த எல்லாத் தோற்றங்களையும் வரவேற்றிருப்பான். ஆனால் அவன் அப்பா இன்னும் கொஞ்சம் நெருக்கமாக, மனம்விட்டுப் பேசுபராக, அவனது எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் அளிப்பவராக, மற்ற பையன்களைப் போல் சமயத்தில் எதிர்வாதம் செய்யவோ எதிர்த்துப் பேசவோ முடிவதற்கு அனுகூலமாக இருப்பவராக அமைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இப்போதும் சரி, அவனால் அப்பாவிடம் எதிர்வாதம் செய்யவோ, அப்பாவின் சொல்லை, கருத்தை மீறவோ முடியாது என்று தோன்றியது. இதுவரை மீறியதில்லை என்பதைவிட மீறுவதற்கு அவர் இடம் கொடுத்ததில்லை என்பதே உண்மை.

எல்லா விஷயங்களிலும் ஒன்று இணக்கமாக அல்லது ஒதுக்கமாக இருக்கும் அப்பாவை மீறும் துணிச்சல் அவனுக்கு எப்படி வரும்?

அப்படியே மீறினாலும் அப்பாவின் மனநிலை பற்றி அவனுக்கு என்றுமே தெரியப் போவதில்லை. அவர் தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக உணர்த்தியதில்லை. அவருக்குப் பிடிக்காத விஷயங்கள், நிகழ்ச்சிகளில் இருந்து அவர் விலகி இருப்பது மட்டுமில்லாமல் தன் கொள்கையிலும் உறுதியாக நிற்பார் என்பது மட்டும் நிச்சயம்.

மற்றவர்களைப் போல் அவர் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டார். வார்த்தைகளைக் கொட்டி வெறுப்பையும் கோபத்தையும் வெளியிட மாட்டார்.

"ராஜா, உனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். எனக்கு இந்த ’அலையன்ஸ்’ல விருப்பமில்லை. உனக்கு கௌசல்யா ரொம்பப் பொருத்தமானவளா இருக்கலாம். எம்.ஏ. இங்க்லிஷ் படிச்சிருக்கா, உன்னை மாதிரியே காலேஜ் லெக்சரரா இருக்கா, கைநிறைய சம்பாதிக்கறா, இல்லேங்கல. அழகாவும் இருக்கா, முறைப் பெண்ணும் கூட. உன்னைவிட ஒரு வயசுதான் சின்னவள்னாலும் பரவாயில்லை. ஆனால்... அவ அப்பாவோட போக்கு எனக்குப் பிடிக்கலை. அம்மாவோட தம்பிங்கற த்வேஷத்ல இதை நான் சொல்லலை. அம்மாவுக்கே தெரியும் அவனைப் பத்தி. என்னைவிட பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவன் அவன். பெரிய பணக்காரனா இருந்தா மத்தவாளை மதிக்கக் கூடாதுன்னில்லையே?"

"கல்யாணங்கறது அதைப் பண்ணிக்கறவாளோட சந்தோஷம் மட்டுமில்லை. அதில நேரடியா சம்பந்தப்பட்ட எல்லோரோட சந்தோஷமும் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நெறக்கும். அதேமாதிரி, மனுஷாளுக்கு மரியாதை முக்கியம். இன்னிக்கு எனக்குக் கிடைக்காத மரியாதை நாளைக்கு உனக்கு அவாத்தில கிடைக்கும்னு எனக்குத் தோணலே. கௌசல்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால், அதுக்கப்புறம் ஒண்ணு நீ எங்களை மறந்துடணும் அல்லது அவள் தன் பெற்றோரை மறந்துடணும். இதுக்கு சம்மதம்னா மேலே போங்கோ."

அப்பாவோட அசைக்கமுடியாத கொள்கைக்கும் கருத்துக்கும் இதைவிட ’கான்க்ரீட் எக்ஸாம்பிள்’ வேறு என்ன வேணும்?

அம்மாவுக்கு அவனிடம் ஒரே பிள்ளை என்ற பாசமும் அதீதமான அன்பும் இருந்தாலும் அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவோ அல்லது அப்பாவுக்கு ஆலோசனை
கூறவோ அம்மாவால் முடியாது. அப்பாவே அடிக்கடி அம்மாவை ’ரெஃபர்’ பண்ணினாலும் அம்மாவுக்கு அப்பாவின் பேச்சை ’என்டார்ஸ்’ பண்ணித்தான் பழக்கம்.

மேலும் இயற்கையாகவே அம்மா ரொம்ப ’கன்சர்வேடிவ்’. தோற்றத்திலும் கூட. மடிசார் புடவை கட்டிய அளவாகப் பருத்த சரீரம். நல்ல நிறம். மஞ்சள் உரமேறிய முகம். நெற்றியில் சிவப்பு நிலாக் குங்குமம், தலைவகிட்டில் அதன் எதிரொளி. முன்னால் கொஞ்சம் நரைத்த, அடர்ந்த அலைக் கூந்தல். மூக்கிலும் காதுகளிலும் வானவில், உதடுகளில் பவழம். எப்போதும் மலர்ந்திருக்கும் சோகமே அறிந்திராத முகம். மெட்டி ஒலிக்கும் மிருதுவான நடை. கலகவென்று அண்டை அயலாரிடம் பழகும் சுபாவம்.

கல்யாணம் என்றாலே அம்மாவின் கணிப்பில் முதலிடம் பெறுபவை இவ்வளவு தொகை வரதட்சிணை, இத்தனை சவரன் நகைகள், வைரமூக்குத்தி-தோடு, இவ்வளவு ரூபாய்க்கு வெள்ளி மற்ற பாத்திரங்கள், இத்யாதி இத்யாதி. இதைத் தவிர, வருகின்ற பெண் லக்ஷணமாக, சங்கீதம் கேட்கும் ஞானம் உடையவளாக, தெய்வபக்தி நிறைந்தவளாக, வீட்டுக் காரியம் எல்லாம் சவரணையாகச் செய்யத் தெரிந்தவளாக, மொத்தத்தில் அம்மாவைப் போலவே ஒரு மாமியார் மெச்சும் மருமகளாக இருக்க வேண்டும்.

அப்பாவின் கடிததில் உள்ள ’ஆதர்ஷ மருமகள்’ போல.

கைகள் மறுபடியும் அந்தக் கடிதத்தைப் பிரித்தன.

"இந்த இடத்தில் திடீரென்று ஒரு விஷயத்தை..."

கண்கள் மீண்டும் மீண்டும் அந்த வரிகளில் ஓடியபோது மனம் கனத்து ஆழமான பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

திடுக்கிட்டவனாகச் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். யாரவது கவனித்திருப்பார்களோ?

’பேப்பர்’ படிக்கும் பேராசிரியரின் வாய் மெல்லத் திறந்து மூடிக் கொண்டிருந்தது, ஒரு மீனின் வாயைப் போல. இமைகள் மட்டுமே தெரியும் தாழ்ந்த கண்கள் ’ஹிண்டு’வில் நிலைத்திருந்தன. மற்றபடி வேறு சலனமில்லை.

அவர் பக்கத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பம் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தது, மடியில் தூங்கும் குழந்தையை நோக்கியபடி.

பையன் ’காமிக்ஸில்’ மூழ்கியிருந்தான். அருகில் அந்த இளம் சந்நியாசி--அல்லது ஹிப்பி--நிஷ்டையில் மூழ்கியிருந்தான்.

திருப்தியுடன் தன் ஜோல்னாப் பையிலிருந்து சிவப்பு லெதரில் அழகாக ’பைன்ட்’ செய்யப்பட்ட தன் ’டைரி’யை எடுத்துப் பிரித்தான்.

(தொடரும்)

ரமணி
11-02-2013, 11:45 PM
அவனது டைரி காதலில் தொடங்கியது!

Love is a blend of affection, reverence, and passion.
--Rajaraman

பல நாட்கள் சிந்தனை செய்து, வார்த்தைகளைத் தேடிப் பிடித்து, புடம்போட்டு உருவாக்கி, இது காதலின் அறுதி விளக்கமாக இருக்கலாம் என்று நினைத்துப் போற்றிவந்த வரிகளை இப்போது படிக்கும்போது, அதுவும் அந்த blend மனதின் சலங்கைகளை வருடும்போது, கேலிதான் தலைதூக்கியது.

The made for each other blend
That set the filter trend.

ஏன் அந்த ’லேடிலவ்’ புகை பிடிப்பதில்லை என்று நினைத்துக்கொண்டான்.

மனதில் ஆறிப்போய்விட்ட வரிகளின் சாம்பலைக் கிளறும்போது தீப்பொறிகள் பறந்தன.

காதலை அவன் விரும்பும் வகையில் அழகாக, எளிமையாக, ஆழமாகப் படம் பிடித்துக்காட்டிய ஆசிரியர்கள் யார்யார் என்று நினைத்துப் பார்க்க,

ஜேன் ஆஸ்டின்தான் முதலில் நினைவுக்கு வந்தார். அவரது பாத்திரங்கள் எலிசபெத்-டார்ஸி, எம்மா-நைட்லி, ஹென்றி-காதரின் இவர்களில் யார் உண்மையான காதலர்கள்? கொஞ்சம் யோசனைக்குப் பின் மனம் எம்மா-நைட்லி ஜோடிக்கு வாக்களித்தது.

மற்ற ஆசிரியர்களை நினைக்கும்போது---

எமிலி ப்ரான்டியும் (ஹீத்க்ளிஃபின் காதல் ஆழமானது, மூர்க்கத்தனமானது),

தாமஸ் ஹார்டியும் (நண்பனுக்காகத் தன் காதலைத் துறந்த அந்த ’ட்ரம்பெட் மேஜர்’ஐ அவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை),

ஆர்தர் ஹெய்லியும் (நடைமுறை அமெரிக்கக் காதலர்கள்),

ஸிட்னி ஷெல்டனும் (’தி அதர் ஸைட் ஒ மிட்னைட்’இல் வரும் காதலர்கள் காதலில் தோல்வி அடைந்து தடம் மாறியவர்கள்),

இந்துமதியும் (’தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலில் அந்த அண்ணியும் தம்பியும் காதலர்களாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. அப்புறம் அந்த மாயா-ப்ரஸன்னா-நந்தகோபால் முக்கோணத்தில் மாயாவும் டாக்டரும் ஒன்று சேர்ந்தது ஒரு ஆறுதல்), மனதில் வந்து போயினர்.

இந்த ஆசிரியர்கள் படைப்பில் உண்டான காதலர்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாகப் பட்டது. அவர்கள் வாழ்க்கையில், காதலில், சந்தர்ப்பம் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

’சந்தர்ப்பங்கள் மனிதனை உருவாக்குவதில்லை. மனிதனே சந்தர்ப்பங்களை உருவாக்குகிறான்’, என்றது மனத்தில் ஒரு மூலை.

இப்போதெல்லாம் ஜேன் ஆஸ்டின் போல் திட்டமிட்டு வளர்ந்து முழுமையுறும் காதலை ஏன் ஆசிரியர்கள் சித்தரிப்பதில்லை?

இந்த நாவல்களைவிட ஜார்ஜ் மெர்டித்தின் ’தி ஆர்டியல் அஃப் ரிச்சர்ட் ஃபெவரல்’ தேவலாம். தூய்மையான, தெய்வீகக் காதலை வேறு யாரும் இவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டியதில்லை.

ஷேக்ஸ்பியரைத் தவிர. ஷேக்ஸ்பியரிடம்கூட அவரது புகழ்பெற்ற ரோமியோ-ஜூலியட், ஆன்டனி-கிளியோபாட்ராவை விட, ஃபெர்டினான்ட்-மிராண்டா, ஆலிவர்-ரோஸலின் போன்ர காதலர்கள் அவனுக்குப் பிடித்தமானவர்கள்.

’அன்பும், மதிப்பும் வேட்கையும் இரண்டறக் கலந்திருப்பதே காதல்’ என்ற அவன் கருத்துக்குப் பொருத்தமானவர்கள்.

நாவல்களிலும், ’ஃப்ரெண்ட்ஸ்’, ’சோட்டி ஸி பாத்’, ’சித்சோர்’ போன்ற திரைப்படங்களிலும் சித்தரிக்கப்படும் காதலும், காதல் சூழ்நிலையும் நிஜ வாழ்க்கையில் ஏன் சாத்தியமாவதில்லை? அல்லது எவ்வளவு தூரம் சத்தியமாகிறது?

இளைஞர்களின் முனைப்பாகவும் இளம்பெண்களின் கனவாகவும் விளங்கும் இந்தக் காதலை மேலை நாட்களில் உள்ளது போன்று வாழ்வில் ஒரு அங்கமாக்கி, நெறிப்படுத்தி, வெற்றிகரமான விவாகங்கள் நிகழ இன்றைய சமூகம் என்ன செய்துள்ளது?

இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் தம் மக்கள் திருமண முயற்சிகளில் பெற்றோர் தம் பங்கை சரிவர ஆற்றுகிறார்களா?

பாரதியும், திரு.வி.க.வும் கண்ட ’பெண் விடுதலை’க் கனவு இன்று எவ்வளவு தூரம் நனவாகியுள்ளது?

மனம் அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவனுடைய நண்பர்களில் யாராவது காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் இருக்கிறார்களா என்று நினைத்துப் பார்த்தான்.

ஏன், வசந்த் இருக்கிறானே!

வசந்த் தன் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பதை முன்பே அவனிடம் கூறியிருந்தான். இவன் தன் அறையிலிருந்தும் அவள் தன் வீட்டுத் திண்ணையிலிருந்தும் வெறும் சைகைகளாலும் கண்களாலும் பேசிக்கொண்டே தம் காதலை வளர்த்துக்கொண்ட விதத்தை, ’ராஜா, அவர்ஸ் இஸ் அ ப்ரிமிடிவ் லவ்’ என்று வசந்த் வேடிக்கையாக வருணித்ததைக் கேட்டபோது பெருமையாக இருந்தது. பொறாமையாகக்கூட இருந்தது.

வீட்டில் ஆயிரம் எதிர்ப்பு இருந்தும் வசந்தைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்க ஒரு அண்ணன் இருந்தான்...

விரல்கள் டைரியின் பக்கங்களை மெல்லத் திருப்ப

My Early Days
I was born on Fifth June as people say,
But I do not at all remember that day!

Well, the earliest thing I remember...

கல்லூரியில் படித்த நாட்கள் முதல் அவன் தன் டைரியை விடாமல் எழுதிவந்திருக்கிறான். மற்றவர்களைப் போல் அச்சிட்ட டைரிகளில் அவனுக்கு நம்பிக்கையில்லை. தினசரி நடந்தவற்றை அப்படியே இயந்திர கதியாகக் குறித்து வைப்பதிலும் விருப்பமில்லை.

முதலில் ’டைரி’ என்ற அந்தப் பதமே ஒரு ’க்ளிஷே’ (cliche)-வாகத் தோன்றியதால் அவன் தன் நாட்குறிப்புகளுக்கு ’ஜர்னல்ஸ்’ என்று பெயர் சூட்டியிருந்தான்.

அவனைப் பொறுத்தவரையில் ’ஜர்னல்ஸ்’ அவன் சுயசரிதம். சுயசரிதம் என்றால் சாதாரணமாக அல்ல. அது அவனுடைய கதை, கமலா தாஸின் ’மை ஸ்டோரி’ போல. அதில் அவன்தான் கதாநாயகன். காலவோட்டத்தின் பிராவகத்தில் அமிழ்ந்து விடாமல் ரத்தமும் சதையும் தனித்தன்மையுடைய மனமும் கொண்டு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கதாநாயகன்.

பெரும் இரைச்சலுடன்
பாறைகளின் இடுக்குகளில் பரணி பாடி
அருவியாகக் கொட்டி
ஆறாக நெளிந்து
சமவெளியில் பரந்து
மனிதர்கள் அனைவர் வாழ்க்கையையும்
இரக்கமில்லாமல் அடித்துக்கொண்டு போய்
முடிவே இல்லாத
கடலில் சங்கமித்துவிடும்
காலம் என்னும் ஜீவ நதியில்

நானூறடி நினைத்து
நாலடி எதிர் நீச்சலிட்டுத்
தன் உண்மையான ஸ்வரூபம்
எனும் சிற்பத்தை
வரும் தலைமுறை அறிவதற்காக
அறிந்து நினைவிற் கொள்வதற்காக
காலம் தொடாத கரையில்
விட்டுச் செல்லும் நோக்குடன்
நடத்தும் போராட்டம்

அவன் கதையின் ’ப்ளாட்’.

டொரதி வேர்ட்ஸ்வர்த், மெக்காலே, கீட்ஸ், ஆர்.கே.நாராயண் போன்றவர்களின் நாட்குறிப்புகளையும், கடிதங்களையும் அவன் இப்போதும் பலமுறை விரும்பிப் படிப்பதால் அவர்கள் பாணியிலேயே அவன் தன் ’ஜர்னல்ஸ்’ பக்கங்களை எழுதி, நேர்த்தியாகத் தொகுத்து ’எடிட்’ செய்து ஒரு சுவையான நாவல் போலாக்கி, சிவப்பு லெதரில் அழகாக ’பைன்ட்’ செய்துவைத்திருக்கிறான்.

மனம் வெறுமையாகி, விரக்தியாகி, அல்லது தளர்ச்சி அடைந்து, ஒன்றுமே நினைக்கப் பிடிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல், தூங்கப் பிடிக்காமல், நண்பர்களுடன் வெளியே செல்லப் பிடிக்காமல், புத்தகம் படிக்கப் பிடிக்காமல், இப்போது இருப்பதுபோல் இருக்கும் சமயங்களில் அவனுக்கு உற்ற துணைவன் அவன் ’ஜர்னல்ஸ்’.

அவன்தன் பள்ளிப் பருவத்தைப் பற்றி எழுதியிருந்த முதல் வரிகளில் விழிகள் ஓடியதும், ஏதோ ஒரு ’ஸ்விட்ச் ஆன்’ செய்ததுபோல் வரிகள் ஃபிலிம் சுருள்களாகி மூளையாகிய ப்ரொஜக்டரில் சுழல, வெளியுலகம் மூடப்பட்டு இருளடைந்து அந்த இனிய நாட்கள் வண்ணத் திரைப்படமாக மனத்திரையில் ஓட ஆரம்பிக்க, அவன் அனுவை சந்தித்தான்.

*** *** ***
(தொடரும்)

ரமணி
13-02-2013, 12:24 AM
பயணம்: நாவல்
ரமணி
4


சுட்டும் விழிச்சுடர் தான்,--கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
---மஹாகவி பாரதியார், கண்ணம்மா என் காதலி 1

அந்த நாள் அவன் வாழ்வில் மறக்க முடியாத நாள். வருடம் மாதம் தேதி சரியாகத் தெரியாவிட்டாலும் அந்த நாளைப் பற்றிய நினைவு எழுந்த உடன் மனம் எல்லாவற்றையும் மறந்து குதூகலிக்கத் தொடங்கிவிடும். இன்னதென்று அடையாளம் கூறமுடியாத மகிழ்ச்சிப் பரவசம் மெல்ல முகிழ்த்து, வண்ண வண்ண பூக்களாய்ப் பரந்து, பலூன்களாக மேலெழும்பி, இன்னும் மேலே... மேலே...

நாள் பார்த்து, சகுனம் பார்த்து, புதிய உடைகள் அணிந்துகொண்டு, புதிய சிலேட்டு புத்தகங்களைப் புதுப் பையில் எடுத்துக்கொண்டு, பையை அழகாகத் தோளில் தோகை விரித்துக்கொண்டு, முகமெல்லாம் பூரித்துப் புன்னகை மிளிர--ஷேக்ஸ்பியரின் ’வைனிங் ஸ்கூல்பாய்’ போல் அல்ல--அப்பா கூடவர, அவனும் வசந்தியும் அன்று முதல்முதலாகப் பள்ளியில் சேர்ந்து மூன்றாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தனர்.

மூன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்திருந்த பாடங்கள்: தமிழ் எழுத்துகள் முழுதும் தப்பில்லாமல் படிக்க, எழுத; அதேபோல் ஆங்கில எழுத்துகள்; சில தமிழ், ஆங்கில ’நர்சரி ரைம்’கள்; ஆத்திசூடி, கொன்றை வேந்தன்; அதுபோக ஒன்று முதல் நூறு வரை எழுதவும், ஆயிரம் வரை சொல்லவும். அவ்வளவும் அப்பாவின் உழைப்பு.

ஆத்திசூடியை அழகாக, குண்டு குண்டான எழுத்துகளில் அப்பா அவன் காப்பி நோட்டில் எழுதிக் கொடுத்து, அவன் எழுதினதும் பொறுமையாகத் திருத்திக் கொடுத்து, நன்றாக வந்ததும் மகிழ்ச்சியுடன் முதுகில் தட்டிப் பாராட்டியதை எப்படி மறக்க முடியும்?

வசந்தியும் அவனும் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு அந்த ஆதாரப் பாடசாலையில் நுழைந்ததும், ஹெட்மாஸ்டர் அவரகளை வரவேற்று, கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி, பெயர்களைக் கேட்டுப் பதிவு செய்துகொண்டார்.

பின்னர் அப்பா அவர்களை அழைத்துக்கொண்டு இருட்டாக இருந்த ஹெட்மாஸ்டர் அறையைக் கடந்து, நீரில் மிதக்கும் பெரியதொரு காகிதக் கப்பல் மாதிரி மெல்ல ஊர்ந்து செல்லும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் பிரகாசிக்கும் சிவப்பு முற்றத்தைச் சுற்றிக்கொண்டு, ஏற்கனவே தொடங்கி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வகுப்பில் நுழந்து, கண்ணாடி போட்ட ஓர் ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.

வகுப்பில் நுழைந்ததுமே அவன் முதலில் பார்த்தது அந்த அழகிய சிறுமியை!

வசந்தியைவிட அழகாக, நிறமாக, கொஞ்சம் உயரமாக, பளீரென்ற தோற்றத்துடன், அந்த அறையையே ஒளிரச்செய்து, குளிரச் செய்து, கலகலக்கச் செய்துகொண்டு, கைகள் இரண்டையும் முழங்கால் மூட்டுகளுக்கு கீழ் கொடுத்து ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டு, குண்டு மல்லிகை மாதிரி மலர்ந்த, கொஞ்சம் மருண்ட விழிகளால் அவர்களைப் பார்த்துக்கொண்டு, ஒரு தயக்கத்துடன் புன்னகைத்துக்கொண்டு... என்ன விழிகள்!

கல்யாணம் பண்ணிண்டா நான் இவளைத்தான் பண்ணிக்கணும்!

எடுத்த எடுப்பிலேயே எப்படி அவனால் அது மாதிரி நினைக்கத் தோன்றியது என்று ஆச்சரியமாக இருந்தது. புதிராகக் கூட இருந்தது.

கண்ணாடிகளின் வழியே அவனை உடுருவிப் பார்க்கும் ஆசிரியரின் கண்களை மறந்து, பக்கத்தில் நிற்கும் வசந்தியை மறந்து, வகுப்பின் இரைச்சலை மறந்து, முதுகில் பதிந்திருந்த அப்பாவின் கையை மறந்து, மாடிப்படி முகப்புத் தூண்களில் பதித்த கோலிக்குண்டுகள் மாதிரி கண்கள் அவள்மீது நிலைத்திருக்க---

’கல்யாணம் பண்ணிண்டா நான் இவளைத்தான் பண்ணிக்கணும்!’

எப்படி அவனால் அது மாதிரி நினைக்கத் தோன்றியது? அதுவும் கல்யாணம் என்றால் என்னவென்று அறிந்திருக்க முடியாத அந்த ஏழு வயதில்! அப்பா-அம்மா விளையாட்டுக் கூட அவன் விளையாடியது இல்லையே? அப்பவே என்ன ’பொஸஸ்ஸிவ் நேச்சர்’ அவனுக்கு!

இந்தக் காலத்து குழந்தைகளுக்காவது கொஞ்சம் கொஞ்சம் விஷய ஞானம் எப்படியோ வந்து விடுகிறது. அந்த ’பியர்ஸ் சோப்’ விளம்பரம் மாதிரி---

---எந்தப் பொண்ணு ’பியர்ஸ்’ தேச்சிக் குளிக்கறாளோ அவ அழகா ஆயிடுவா!
---ஒன்னப் போல தானேம்மா!
---அப்புறம் அவளைக் கல்யாணம் பண்ணிக்க மாப்ளையாட்டமா ஒருத்தர் வருவார்.
---அப்பாவாட்டம் தானே!

"ராஜா, இவள் அனுராதா. நாம குடியிருக்கமில்ல, அந்தப் பிள்ளையார் கோயில் தெருவில நம்மாத்துக்கு எதிர்த்தாப்பல நாலஞ்சாம் தள்ளி இவா வீடு இருக்கு."

வசந்தி அனுவை அறிமுகப் படுத்திவைக்க, முதல் சந்திப்பிலேயே அவர்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

கொஞ்ச நாளில் அப்பாவின் துணை இல்லாமல் தினம் இரண்டு வேளையும் பள்ளிக்கு வரப் பழகிவிட்டனர்.

மூன்று பேரும் ஒருவருக் கொருவர் துணையாக கைகளைக் கோத்துக்கொண்டு--அவன் நடுவில், இந்தப் பக்கம் அனு--அந்தப் பக்கம் வசந்தி--அம்மா சகுனம் பார்த்து வழியனுப்ப, பிள்ளையார் கோவில் வந்ததும் செருப்பைக் கழற்றிவிட்டு வாசலில் இருந்தபடியே ஒன்றிரண்டு அரைகுறைத் தோப்புக்கரணங்கள் போட்டு வேண்டிக்கொண்டு, கோவில் முனையில் திரும்பி ஒற்றைத் தெருவைக் கடந்து, அந்தத் தெருமுனையில் இருக்கும் ராமர் கோவில் வாசலில் உள்ள குழாயில் கால் அலம்பி வலம்வந்து,

"ராஜா, ராமர் எவ்ளோ அழஹ்ஹா இருக்கார்!" என்று அனும் தினமும் வியக்க, அந்தப் புன்னகை மூர்த்தியைத் தரிசித்துவிட்டு, ஒரு பாழடைந்த சுவரைத் தாண்டி, ’சுருக்குப் பாதை’ வழியே நடந்து, சில குடிசைகளைக் கடந்து, ஈயப் பட்டறையில் உள்ல துருத்தியை இழுக்கும் அந்தச் சிறுவனைப் பொறாமையுடன் பார்த்துவிட்டு (அவன் இவர்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பான்), சைக்கிள்கள் விரையும் சாலயைக் கவனமாகக் கடந்து எதிரில் உள்ள பள்ளியில் நுழையும்போது முதல் மணி அடிக்கும்.

(தொடரும்)

ரமணி
13-02-2013, 11:56 PM
நீளமான மரக் கைப்பிடியுடன் கூடிய, சற்றுப் பெரிய பூஜை மணியாகத் தோண்றும் அந்த மணியை உயரமான பள்ளி மாணவர் தலைவன் வாசலில் நின்றுகொண்டு, அவன் தலையையும் முழங்கால்களுக்குக் கீழே உள்ள தரையையும் இணைக்கும் அரைவட்டப் பகுதியில் மேலும் கீழும் வேகமாக ஆட்டியபடி அடிக்க, ஈக்கள் மொய்க்கும் ஜவ்வு மிட்டாய்களையும் இலந்தம் பழங்களையும் மொய்த்திருக்கும் சிறுவர் சிறுமியர் கலைந்து ’ப்ரேய’ருக்குத் தயாராக,

பாரத சமுதாயம் வாழ்கவே!--வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!

என்று ஒரு டீச்சர் பாட, அவள் குரல் மாணவர்களிடம் வார்த்தைகள் தேய்ந்து குழப்பமான விஸ்வரூபத்துடன் எதிரொலிக்க, திங்கட் கிழமைகளில் ’தாயின் மணிக்கொடி’ பார்த்து---

"இந்தக் கொடியைப் பத்தியா, ஒரு நாள்கூட அது பட்டொளி வீசிப் பறக்க மாட்டேங்கறது!" என்று அனு கேலி செய்வாள்---

கூட்டம் கலைந்து கலர்கலர் வரிசைகளாகப் பிரிந்து வகுப்பறைகளுக்குச் செல்லும்.

அவனும் அனுவும் வசந்தியும் எப்போதும் முதல் வரிசையில் அமர்வது வழக்கம். மாணவ, மாணவியர் தனித்தனி வரிசைகள் அமைந்த தூண்களாகத் தரையில் அமர, முதல் வரிசையில் மற்ற நண்பர்களுடன் அவன் இடப்புறம் அனு வசந்தியுடன், எல்லோரும் தங்கள் எதிரில் புத்தகப் பையுடன் பழைய, காலி ஜியோமெட்ரி பாக்ஸ் கலகலக்க (அதில் சிலேட்டுக் குச்சிகள், சிறு துணி மற்றும் ஒரு இன்ஜெக்*ஷன் பாட்டிலில் கலர்த் தண்ணீர்) உட்கார்ந்து, ஆசிரியர் நடத்தும் பாடத்தை மனமிருந்தால் கவனித்துக்கொண்டும், அவர் கரும்பலகையில் எழுதத் திரும்பும்போது தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டும், அல்லது பின்னால் திரும்பி அந்த எதிர்வகுப்பு வாத்தியார் தன் ஜிப்பாவில் கைவிட்டு பெரிய புகையிலைக் கற்றையை எடுத்துப் பிய்த்து வாயில் அடக்கிக்கொள்வதைப் பார்த்துக்கொண்டும், அடுத்த அறையில் முதல் வகுப்புக் குழந்தைகள் உரக்க கோரஸ் பாடும் வாய்ப்பாடு மற்றும் நர்சரி ரைம்களைக் கேட்டுக்கொண்டும் நாட்களை ஓட்டியபோது நடந்த சில இனிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

ஒரு நாள் ஆசிரியர் தமிழ்ப் பாடத்தின் இடையில் திடீரென "காக்கைக்குத் தன் குஞ்சு..." என்று கூறிவிட்டு முதல் பையனைப் பார்த்து அந்தப் பழமொழியைப் பூர்த்தி செய்யுமாறு கேட்க அவன் விழித்தான்.

அடுத்து அமர்ந்திருந்த மூன்று பையன்களும் விழிக்க, ஆசிரியர், "ராஜா" என்றார்.

அவனுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது.
"..."

"அனு?"
"..."

"வசந்தி?"
"..."

மூவரும் மௌனமாக நிற்க, ஆசிரியர், "வேறு யார்க்காவது தெரியுமா?" என்றார்.

பின்னால் இருந்து "பொன் குஞ்சு!" என்ற கரகப்பான குரல் வர மூவரும் திரும்பிப் பார்த்தனர்.

ஒரு சாதாரணப் பையன் சரியாகச் சொல்லிவிட்டானே என்ற வியப்பு அவனை ஆட்கொள்ள, வசந்தியும் அவன் எண்ணத்தைப் பிரதிபலிப்பது அவள் முகத்தில் தெரிய, அனுவோ திடீரெனச் சிரித்துவிட்டாள்!

அப்போதுதான் அந்தப் பழமொழிக்கும் அதைச் சரியாகச் சொன்ன பையனுக்கும் இடையே இருந்த உருவ ஒற்றுமையை உணர்ந்த வகுப்பு முழுவதும் கொல்லென்று சிரித்துவிட, ஆசிரியருக்கு வந்த கோபத்தில் விடை தெரியாது நின்ற ஒவ்வொருவரையும் பிரம்பால் விளாசிவிட்டார்!

அனுவை அடிக்காதீங்க சார், பாவம்! எனக்கு வேணும்னா இன்னொரு அடி கொடுத்திடுங்க!

அவன் மனத்தின் மௌனக் குரல் ஆசிரியருக்குக் கேட்கவில்லை. அடி வாங்கிய அனுவோ மிகச் சிவந்துவிட்ட கையுடனும், குழப்பம் நிறைந்த முகத்துடனும், இன்னமும் புன்னகை பாக்கியிருந்த கண்களுடனும் நின்ற காட்சி இப்போதும் நினைவில் பளிச்சிட்டது...

சில நாட்கள் ஒரு மணி நேர மதிய உணவு இடைவேளைக்குப் பின் பள்ளிக்கூடம் போகும்போது அனு கிளம்புவதற்கு நேரமாகிவிடவே அவனும் வசந்தியும் முன்னால் செல்ல, சிறிது நேரத்தில் பின்னால் அனுவின் குரல் கேட்கும்.

"ராஜா...ஆ! வசந்தீ!...கொஞ்சம் நில்லுங்களேன், இதோ நானும் வந்துட்டேன்!"

அவர்கள் வேணுமென்றே காலகளை எட்டிப்போட, அனுவின் குரல் பெரிதாகி, ஹவாய் செருப்பு சரசரக்க, தோளில் ஆடும் பையில் ஜியோமெட்ரி பாக்ஸ் கலகலக்க, ’பான்ட்ஸ் பௌடர்’ தென்றல் சூழ்ந்துகொள்ள, அவள் மூச்சிரைக்க ஓடிவந்து அவன் தோளைப் பற்றிக்கொள்ளுவாள்!

அப்போதெல்லாம் ’இவள் என்னைவிடக் கொஞ்சம் உயரமாக இருக்கிறாளே!’ என்ற எண்ணம் அவனை வாட்டும்! எப்படியாவது தான் அனுவைவிட உயரமாகிவிட வேண்டும் என்ற உறுதியும் ஏக்கமும் மனசை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

"வசந்தி, நான் சின்ன வயசில கண்ணுக்கு மையிட்டுக்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பேனாம்! அம்மா எவ்ளோ தாஜா பண்ணினாலும் கேட்க மாட்டேன். எங்கம்மா என்ன செய்வா தெரியுமா? என்னை சினிமாவுக்குக் கூட்டிண்டு போறேன்னு சொல்லி மையிட்டு விட்டுடுவா!"

"ராஜா, இந்த டிரஸ் எப்படி இருக்கு? எங்கப்பா வாங்கிக் கொடுத்தது. உனக்குப் பிடிச்சிருக்கா? எனக்கு எங்கப்பான்னா ரொம்பப் பிடிக்கும்! உனக்கு?"

"எனக்கும் எங்கப்பாவைப் பிடிக்கும், அனு..."

மனம் குழந்தை மாதிரி பழைய நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் வாஞ்சையுடன் நினைவு கூர்ந்தது...

"ஒரு குதிரையின் விலை ரூபாய் 200 வீதம் பத்துக் குதிரைகள் வாங்கி, அவற்றை ஒன்று ருபாய் 250 வீதம் விற்றால் அடையும் லாபம் என்ன?"

"IS THIS A BOOK"
NO, IT IS NOT.
IS THIS A BOX?
YES, IT IS..."

அனுவின் மனக் கணக்குகளையும் ’டிக்டேஷன்’களையும் உண்மையான அக்கறையுடன் அவனும் வசந்தியும் போட்டி போட்டுக்கொண்டு செய்வது வழக்கம்.

அப்புறம் அந்தக் குட்டை வாத்தியார்!

கறுப்பாக, அவனைவிடக் கொஞ்சமே உயரமாக, கொஞ்சம் பருமனாக, கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு அவர் சமூகப் பாடம் நடத்தியதை நினைக்கும்போது அவனுக்குப் பின்னைய நாட்களில் தான் படித்த தமிழ்வாணனின் ’கத்திரிக்காய்’ பாத்திரம் நினைவுக்கு வரும்.

குட்டை வாத்தியார் அவரைவிட உயரமான பையன்கள் முதுகில் அடிக்கும்போது உள்ளங்கையால் மெத்தென்று அடிக்கிற மாதிரி இருக்கும். அவ்வளவு பிஞ்சு விரல்கள் அவருக்கு! வழக்கமாகக் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர்கள்மேல் அவருக்கு ஒரு பாசம். அவரைப்போய் அந்த மாதிரிக் கிண்டல் பண்ணியிருக்கக் கூடாதுதான்.

ஒரு நாள் அவர் கண்களை உருட்டியபடியே வகுப்பை ஒருதரம் பார்த்துவிட்டு பெஞ்ச் மேல் ஏறிக் கரும்பலகையில் எழுதியபோதுதான் அவனுக்கு அவரது உண்மையான உயரம் கண்ணில் பட்டது. உடனே அனுவிடம்,

"அனு, உனக்கு ஒரு ரைம் தெரியுமா?" என்றான்.

"என்ன?"

"அதான், அந்த ’ட்விங்க்கிள் ட்விங்க்கிள்’."

சொன்னாள்.

"அப்படியில்லை, இங்க பார்,

Twinkle, twinkle, little Sir,
How I wonder what you are!
Up, on the bench you look so high,
Mounted like Christmas pie!"

உடனே அவள் கலகலவென்று சிரித்துவிட, அவன் வயிற்றைப் பயம் கவ்வ, நல்லவேளையாக ஆசிரியர் திரும்பிப் பார்க்காமலேயே, "அனு, வரவர நீ ரொம்பச் சிரிக்கறே" என்று அன்புடன் கடிந்துகொள்ள, அவள் ’கோஷிஷ் சினிமா ஜெயாபாதுரி’ போல் வாயை அகலத் திறந்து காற்றை உள்ளிழுத்து பலூனாக்கி உள்ளங்கையால் மூடி மெதுவாகக் காற்றை வெளியில்விட்டு அழகு காட்ட, வசந்தி அவர்கள் இருவரையும் தொடையில் கிள்ள மௌனமாயினர்.

தினமும் கடைசி பீரியட் விளையாட்டு. ஒரே இரைச்சலும் புழுதியுமாக பள்ளிக்கூடமே இரண்டுபட்டுவிடும். அனுவுக்கும் அவனுக்கும் இந்த விளையாட்டுகளில் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. இதனால் அவர்கள் இருவரும் வகுப்பில் உட்கார்ந்து படித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் கடைசிப் பீரியட்டைப் போக்குவது வழக்கம். அப்போதுதான் வீட்டுக்குப் போகும்போது தலை கலையாமல், உடை அழுக்காகாமல் இருக்கும்.

ஒரு நாள் அனு என்ன நினைத்தாளோ, மேசையின் பின்னால் நின்றுகொண்டு, முழங்கைகளை ஊன்றிக்கொண்டு கன்னத்தில் முட்டுக் கொடுத்தபடியே அவனை விளித்துப் பாடத் தொடங்கிவிட்டாள்!

"சம்மதமா, ஆஆ? நானுன் கூட வர சம்மதமா?
சரிசமமாக நிழல்போலே நான் கூடவர, சம்மதமா?"

அவனுக்குக் கொஞ்சம் வெட்கமாகிவிட்டது!

*** *** ***
(தொடரும்)

ரமணி
15-02-2013, 01:13 AM
பயணம்: நாவல்
ரமணி
5


கன்னிப் பருவத்தில் அந்நாள்---என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெயர ருண்டு---பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!
---மஹாகவி பாரதியார், தமிழ் தாய்!

பள்ளிக்கூடம் முடியும்போது மீண்டும் ஒரு ப்ரேயர்:

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

என்று சீனியர் மாணவ மாணவியர் நான்குபேர் முன்னின்று பாட, மற்றவர்கள் எதிரொலிக்கும்போது, அவர்களுக்குத் தாமும் அதுபோல் பாடும் நாள் எப்போது வரும் என்றிருக்கும்.

ஒவ்வொரு நாளும் சாயங்காலம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கத் தோன்றும். செருப்புகளைத் திண்ணையில் விசிறிவிட்டு, புத்தகப் பைகளை நடையிலேயே போட்டுவிட்டு, கிடுகிடுவென்று புழக்கடைப் பக்கம் ஓடித் தயாராக இறைத்து வைத்திருந்த தண்ணீரில் அவசரம் அவசரமாகக் காலலம்பிவிட்டு, "அம்மா, திங்கம்மா!" என்று கூவியபடியே அடுக்களைக்கு ஓடிவந்து முறுக்கோ, கடலையோ, சுண்டலோ, கொடுப்பதைப் பரக்கப் பரக்க வாயில் அடைத்துக்கொண்டு அவனும் அனுவும் வசந்தியும் விளையாடத் திண்ணைக்கு வரும்போது பின்னால் அம்மாவின் குரல் கேட்கும்.

"வசந்தி, அனு, ராஜா! எல்லோரும் வந்து காப்பி குடிச்சிட்டுப் போங்கோ?"

"அனு-ராஜா!"...

அம்மாவின் வாயில் தினமும் ஒலிக்கும் அந்தப் பெயர் இணைப்பு எப்போது சாஸ்வதமாகும்? இதைப் பற்றி அனு என்ன நினைப்பாளோ? அந்த "சம்மதமா!..." உண்மையில் அவள் மனத்தின் எதிரொலிதானோ? அவன் இப்படியெல்லாம் நினைப்பதை யாரிடம் சொல்வது? சொன்னால்தான் புரிந்துகொள்வார்களா?

Was it calf love?

இப்போது நினைத்துப் பார்க்கையில் இல்லை என்றுதான் தோன்றியது. ஆனால் இப்போதும் அவனால் தன் இளமை நாட்களின் முதிர்ந்த எண்ணங்களைப் பகுத்தறிய முடியவில்லை. காதல் என்றால் என்னவென்று தெரிந்திராத நாட்களில் அவன் அனுவைக் காதலித்துக் கொண்டிருந்தான்.

என்ன காதல், என்ன பாசம் அது!
மாடப் புறாக்களைப் போல
மென்மையாக, வெள்ளை உள்ளத்துடன் கூடி,

[’இட்டதோர் தாமரைப்பூ இதழ் விரிந்திருத்தல் போலே..’ என்று நாலாம் வகுப்பில் படித்த பாரதிதாசன் கவிதை இப்போது நினைவில் நெருடியது.]

தெள்ளிய நீரோடை போலப் பரவி,
குழப்பமே இல்லாமல் கணீரென்று
தனியாக
நீண்ட தூரம் ஒலிக்கும் கோவில் மணிபோல
உரிமை கொண்டாடி,

மெல்லிய சுருள்களாகக்
காற்றில் கலைந்து
பரந்து மறைந்து
மணம் பரப்பும்
ஊதுவத்திப் புகை போல
நிர்மலமான உள்ளத்துடன்
வாஞ்சையுடன் உறவாடி,

சின்னச் சின்ன விஷயங்களில்
மனதைப் பறிகொடுத்துக் கொண்டு,
அந்த எளிய, இனிய நாட்களை
இப்போதும் அசை போட்டுக்கொண்டு
கண்கள் சூனியத்தில் நிலைத்திருக்க,
அப்பாவின் கடிதம் மடியில் படபடக்க...

ஒவ்வொரு மாலையும் வெய்யில் தாழும் வரை திண்ணையில் ’நாலு சோவி’ ஆட்டம்.

’முக்கை’ விழும் வரை ஆடலாம். அல்லது அடி தவறும் வரை. ’நாலு’ விழுந்தால் ஏகப்பட்ட போட்டி. ’ஒட்டு’ விழுந்தால் வேண்டுமென்றே அனு ஒரு சோழியால் மற்றொன்றை அடித்து, தள்ளித் தள்ளிப் போடுவாள்!

அல்லது ’அஞ்சு கல்லாட்டம்’. "எப்படி ராஜா நீ இந்தப் மகளிர் விளையாட்டை இவ்ளோ நல்லா விளயாடறே!" என்று தினமும் அனு அதிசயிப்பாள்.

சூரியன் எதிர் வீட்டின் மொட்டை மாடிக்குப் பின்னால் மறந்ததும் ’கல்லா மண்ணா’, அல்லது ’நொண்டி’. [’வெயிட்டீஸ்! அனு, கால் தரையில படுது!’], அல்லது ஓட்டப் பந்தயம் (அவள் உயரம் காரணமாக அதில் எப்போதும் அனுதான் முதலில் வருவாள்).

விளயாட்டு முடிந்ததும் மறுபடியும் கைகால் அலம்பிக்கொண்டு சிரத்தையாக விபூதி இட்டுக்கொண்டு...

அனுவின் பொன்னிற நெற்றியின் நடுவில்
சாயங்காலத்துச் சூரியன் போல
அழகிய, வட்டமான
சிவப்புச் சாந்து.
அதன்மேல் ஒட்டினாற்போல்
சின்ன மேகமாக விபூதி...

கோவிலுக்குப் போய் நெய்விளக்கு ஏற்றி, தீபாராதனை பார்த்துவிட்டு, ஒரு கையில் விபூதியும் ஒரு கையில் குங்குமமும் ஈரமாகக் கொண்டுவந்து அம்மா, அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அடுத்தாத்து மாமிக்குக் கொடுத்துவிட்டு, மாமி கிளம்பிப் போனதும் மறுபடியும் ஸ்வாமி படங்கள் முன் உட்கார்ந்துகொண்டு அம்மா பாட எல்லோரும் இனிமையாகத் திருப்பிச் சொல்ல, ’கஜானனம் பூத கணாதி ஸேவிதம்’, ’வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்’ முதல் (செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில்) ’மகிஷாசுர மர்த்தினி’ வரை ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள்...

அப்புறம் ’போய்ட்றேன் மாமி! போய்ட்றேன் ராஜா! போய்ட்றேன் வசந்தி!’ என்று அனுவின் ஓட்டம், அவள் வீட்டுக்கு. அதன்பின் சாப்பாடு, வீட்டுப் பாடம், ஒன்பது மணிக்கெல்லாம் தூக்கம்!

(தொடரும்)

ரமணி
16-02-2013, 01:18 AM
விடுமுறை நாட்கள் வந்தால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஊரிலிருந்து வசந்தியின் சகோதரர்கள் முரளியும், சந்துருவும், அவன் பெரியப்பா பேரன் கண்ணனும், வசந்தியின் அக்கா பானுவும் கட்டாயம் வந்துவிடுவார்கள். எல்லோருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். காலையில் இருந்து விளையாட்டுக்கள்! பொழுது போவதே தெரியாது.

காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். உமிக்கரி அல்லது ’கோபால் பல்பொடி’யைக் கைநிறைய எடுத்துக்கொண்டு (பெரியவர்களுக்கு மட்டும் ’பயோரியா’ பல்பொடி. இவர்கள் பல்பொடியை வீணாக்குவதால் அப்பா கொஞ்ச நாளில் சின்னச் சின்ன பொட்டலங்கள் போட்டுவிடுவார்!) புழக்கடைப் பக்கம் பல்தேய்க்கப் போகும்போது முனுசாமி பால் கறந்துகொண்டிருப்பான். பக்கத்தில் கன்றுக்குட்டி ஆவலுடன் காத்திருக்கும், இவர்களைக் குவளைக் கண்களால் நோக்கியபடி.

ஜில்லென்ற நீரில் முகம் கழுவிக்கொண்டு, முனுசாமி பால்குவளையைக் கொண்டுபோய்க் கொடுக்கும்போது ஒரு தடவை எல்லோரும் கிணற்றில் எட்டிப் பார்த்துவிட்டு (சமயத்தில் பானு பார்த்துவிட, கோபித்துக்கொள்ளுவாள்), அம்மா காப்பி குடிக்க அழைப்பதற்குள் தோட்டத்தை ஒரு வலம் வருவார்கள்.

தோட்டத்தில் நுழைந்ததும் முதல் வேலை அன்று புதிதாய் மலர்ந்துகொண்டிருக்கும் பூக்களைக் கண்டுபிடித்து எண்ணுவது. பூக்களை அப்பா தினமும் பூஜைக்குப் பயன்படுத்துவதால் அவர்கள் கையால் அவற்றைத் தொடாமல், வலது கையின் நான்கு விரல்களை மூடிக்கொண்டு கட்டை விரலால் சுட்டுவார்கள்!

"வசந்தி இங்க பார், செம்பருத்தி இலைகளுக்கு இடுக்கில ஒரு ரோஜாப்பூ!"

"ராஜா இங்க ஒண்ணு!"

"அப்பா எவ்ளோ பூ! நான் இன்னிக்குத் தலையில் நிறைய வெச்சுக்கலாம்."

"நான்கூட நேரு மாதிரி சட்டையில ஒண்ணு சொருகிக்குவேன்!"

"காதுல வேணும்னாலும் வெச்சிக்கோயேன், யார் வேண்டான்னா?"

"ஏய், சந்துரு, டேபிள்ரோஸை மோந்து பார்க்காதே, உள்ள பூநாகம் இருக்கும்!"

"அப்புறம் இங்கே பார், மொத்தம் பதினெட்டு செம்பருத்திப் பூ இன்னைக்கு!"

"ஏய் யாரும் தப்பித்தவறி பூக்களைத் தொட்டுடக் கூடாது. குளிச்சப்புறம் மடியா பெரியப்பாக்கு பூஜை பண்ணப் பறிச்சுக் கொடுக்கலாம்."

அடுத்தது, தினமும் கொஞ்சம் இலைவிரியும் வாழைக் குருத்துகள். நீர் முத்துக்கள் தங்கி இருக்கும் இளம்பச்சை இலைக் குழல்களுக்குள் எட்டிப் பார்ப்பதில் தனி மகிழ்ச்சி.

முதலில் உள்ள வாழை அவனுடையது. அடுத்தது அனுவுடையது. அப்புறம் வசந்தி.

"சொன்னா சொன்னதுதான், அப்புறம் மாத்தக்கூடாது", என்பாள் அனு.

"ராஜா, அனுவோட வாழை பாரேன், எவ்ளோ பெரிய எலை விட்டிருக்கு!"

"’டாப்’ இல்ல! அனு வந்ததும் காட்டணும்."

"சந்தோஷம் தலை கொள்ளாது அவளுக்கு."

அனு வந்ததும் ஒரு இனிய சர்ச்சை ஆரம்பமாகும்.

"பத்தியா, நான் சொன்னேல்ல, என்னோட வாழைதான் ஜெயிக்கும்னு!"

"அதெல்லாம் கிடையாது. இன்னும் ரெண்டு மூணு நாள்ல பாரு."

"நடக்கவே நடக்காது!"

"பார்க்கலாமா?"

"ம்...பார்க்கலாம்."

இன்றும் அந்த மூன்று வாழைகள் அவன் வீட்டுத் தோட்டத்தில் வாழையடி வாழையாகத் தழைத்திருப்பதை நினைக்கும்போது பெருமையாக இருந்தாலும், கண்கள் கனத்தன. அனுதான் இல்லை!

அப்புறம் அந்தப் பயிர்க்குழிகளில் ஒவ்வொருவரும் போட்ட விதைகள்...

மூன்று நாட்களில் முளைத்து, இலைவிட்டு, முதலில் சின்னதாகக் கொடிவிட்டு, கொடி கம்புகளிலும் கயிறுகளிலும் பற்றிக்கொண்டு, பந்தலில் படர்ந்து, பரந்து, சூரிய ஒளி தரையில் பொற் செதில்களாகப் பட அடர்ந்து, திடீரென ஒருநாள் ’குப்’பென்று பூத்து...

காலையில் பார்க்கும்போது புடலையின் மென்மையான, சிறிய பூக்களின் வெண் சிரிப்பு. அவரையின் வயலட்-பிங்க் விழிப்பு. மாலையில் பீர்க்கம் பூக்களின் மஞ்சள் வனப்பு. மூக்கைத் துளைக்கும் அந்த வாசனியே தனி!

காய்ப் பூக்கள் வாடிப் பிஞ்சுகளாகி இலைகளில் ஒளிந்துகொண்டு பெரிதாகி, புடலையாய் இருந்தால் நுனியில் கயிறுகட்டிக் கற்கள் தாங்கி, ஒருநாள் எல்லோரும் காய்களை வேட்டையாடி, அப்படியும் சில காய்கள் அலையும் கைகளுக்குத் தப்பி நெற்றாகிப் பிளக்கப்பட்டு விதைகள் அடுத்த சீசனுக்காகப் பரணில் அஞ்சறைப் பெட்டிகளில் பத்திரப் படுத்தப்பட்டு...

தோட்டத்தில் பூசணிக்கென்றே தனிப் பகுதி. காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு அலைவதுபோல் அப்படியொரு வேகமான வளர்ச்சி!

தரையில்தான் அப்படி என்றால் வேலியில் கூடவா? பற்றிக்கொள்ள ஒரு சின்ன, உறுதியான கொழுகொம்பு கிடைத்தால் போதும், கிடுகிடுவென்று மேலே மேலே படர்ந்துவிடும்.

அப்புறம் சாமர்த்தியமாக அந்தக் கொடியை அதன் சுருள் கம்பிகள் அறுகாமல் வளைத்து திசைதிருப்பிட வேண்டும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும்!

மார்கழி வந்தால் போதும். ஒவ்வொரு நாள் காலையும் தோட்டம் கொள்ளாமல் பூக்கள்! அக்கம் பக்கத்து வீடுகளுக்குக் கொடுத்து மாளாது. அனுவும் வசந்தியும் முதல்நாள் இரவே அம்மாவின் கவனிப்பில் திட்டமிட்டு வரைந்து பார்த்து, மறுநாள் காலை ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு நடுக்கும் குளிரில் சீக்கிரமே எழுந்து வாசலில் விஸ்தாரமாகப் போடும் கோலங்களில் கற்றை கற்றியாக இந்தப் பூசணிப் பூக்கள் சாண உருண்டைகளில் ’ஜம்’மென்று அமர்ந்திருக்கும்!

எவ்வளவு பூக்கள் பூத்தாலும் அவற்றில் கணிசமாகக் காய்ப்பூக்கள் இருந்தாலும் காய்ப்பதே தெரியாது. திடீரென்று ஒருநாள் எல்லோர்க்கும் ஞானோதயம் உண்டாகி, காலையில் சீக்கிரமே எழுந்து, பனித்துளி படர்ந்து ’டால்’ அடிக்கும் ராட்சச இலைகளின் கம்பளிப்புழு முட்களைப் பொருட்படுத்தாமல் பரபரவென்று விலக்கித் தேடும்போது, சிந்துபாத் கதைகளில் வரும் பெரிய பெரிய முட்டைகள் போல, கைகொள்ளாமல் பசுமை வரிகளுடன் அழகழகான காய்கள்!

அனுவின் பாஷையில் சொல்வதானால் ’குண்டுக்காய்கள்!’

அனுவுக்கு ’குண்டுக்காய்’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினமும் பரங்கிக்காய் கூட்டு, சாம்பார் என்றாலும் அவள் ரெடி. பாவம், அவள் வீட்டில் என்னவோ பூசணி சரியாகவே வந்ததில்லை. வந்தாலும் காய்த்ததில்லை. இதனால் பூசணிக்காய் சீசனில் அம்மா வாரம் மூன்று, நான்கு காய்கள் அனு வீட்டுக்கு அனுப்பிவிடுவாள். சமயத்தில் அனுவே அவற்றை ஆசையுடன் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போவாள்!

"பாவம் மாமி நீங்க! எல்லாக் காயும் நானே எடுத்துண்டு போயிடறேன். ராஜா, உங்களுக்கெல்லாம் இருக்கா?"

அனுவுக்குப் பிடித்த விஷயங்களில் அவனுக்குப் பிடிக்காதது இந்தப் பரங்கிக்காய் மட்டுமே. இருந்தாலும் அவளுக்காகக் கொஞ்சம் சாப்பிட்டு வைப்பான், பிடிக்காது என்று சொல்ல மனம் இல்லாமல்.

இப்போதும் சிலநாள் அம்மா அவன் தட்டில் பரங்கிக்காய் கூட்டை முகத்தில் கொஞ்சம்கூடச் சலனமில்லாமல் பரிமாறும்போது தண்ணீர் நுழைந்த காகிதக் கப்பலாக மனம் கனத்து சமயத்தில் கண்களில் நீர் மல்கிவிடும்.

அம்மா அனுவை அறவே மறந்துவிட்டாள்!

*** *** ***
(தொடரும்)

ரமணி
17-02-2013, 01:10 AM
பயணம்: நாவல்
ரமணி
6


போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானுமோர் கனவோ?--இந்த ஞாலம் பொய்தானோ?
---மஹாகவி பாரதியார், ’உலகத்தை நோக்கி வினவுதல்’

"எங்கடா போய்ட்டீங்க எல்லோரும்? காப்பி ஆறிப்போயிண்டிருக்கு!"

அம்மா-பானுவின் கூட்டழைப்பில் ஒவ்வொருவரும் தோட்டத்திலிருந்து ஓடிவந்து மளமளவென்று காப்பி குடித்துவிட்டுத் திண்ணையில் புத்தகப் பையுடன் உட்காரும்போது கூடத்துச் சுவர்க் கடிகாரம் ஏழடிக்கும்.

அதன்பின் சளசளவென்ற சந்தைக்கடை இரைச்சலில் மலயமான் திருமுடிக் காரி ரூபாய் 200 வீதம் குதிரை வாங்கி, விற்று, லாபமடைந்து, காற்றுக்கு எடையுண்டு என்று நிரூபிக்கத் தராசில் பலூனை நிறுத்துப் பார்த்து, பாத்திகள் அமைத்து நீர் பாய்ச்சி, வலையில் சிக்கிய சிங்கத்தை விடுவித்து, பாய்மரக் கப்பல் புயலில் சிக்கி ஆளரவமற்ற தீவில் ராபின்சன் க்ரூசோவுடன் ஒதுங்கிக் கோடுகளில் நாட்களைக் கணக்கிடும்போது, அவன் மட்டும் கண்கள் மடியில் உள்ள புத்தகத்தில் நிலைத்திருக்க, மனம் அனுவை நினைத்து அவளின் அன்றைய வருகையை எதிபார்த்துக் காத்திருக்க, மணி எட்டடித்ததும் ஒவ்வொருவராக பானுவின் அழைப்பில் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டுக் குளிக்கப்போக, ஒன்பது மணிக்கெல்லாம் டிஃபன் ரெடி.

அம்மாவும் பானும்வும் ஒருவர் மாற்றி ஒருவர் சளைக்காமல் சுடச்சுட வார்த்துப்போட அவனும் வசந்தியும் சந்துருவும் முரளியும் கண்ணனும் முழுமூச்சுடன் தோசையை ஒருகை பார்க்க---

எல்லோருக்கும் முதல் தோசைக்கு உறியிலிருந்து தேன்பாகு. அடுத்தது மிளகாய்ப் பொடியுடன் இரண்டு. அப்புறம் ஒன்று கெட்டித் தயிருடன்.

ஆகாரம் முடிந்த கையோடு அவர்களின் வால்ட் டிஸ்னி உலகம் இயங்கத் தொடங்கிவிடும். இதற்குள் அனுவும் குளித்து சாப்பிட்டுவிட்டு கைகால் முகம் எல்லாம் மஞ்சள் மணக்க, "நானும் ஆட்டத்துக்கு வருவேன், இல்லேன்னா ஆட்டத்தைக் கலைப்பேன்!" என்ற பிடிவாதத்துடன் அவர்களோடு சேர்ந்துகொள்ளுவாள்.

பழைய தபால் கார்டுகளை நீளவாட்டில் ஒழுங்காக மடித்து கூடத்திலிருந்து திண்ணை வரை இரண்டு வரிசைகள் ரயில் பெட்டிகளாகப் பொறுமையுடன் நிறுத்திவைத்து (இன்ஜினுக்கு ஒரு கலர் கார்டு), "சென்னை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ் இன்னும் சில வினாடிகளில் புறப்படும்" என்று கையைக் குவித்து அறிவித்துவிட்டு, இரண்டு ரயில் வரிசைகளை ஒன்றுக்கொன்று போட்டியாக (சமயத்தில் எதிரும் புதிருமாக) விடத் தீர்மானித்து, முதல் கார்டை அனு மருதாணியால் சிவந்த தன் ஆள்காட்டி விரலால் மெல்லத் தொட, ’ஸ்...ஃபட்...ஃபட்’ என்ற மென்மையான ஒலியுடன் கார்டுகள் தலைவணங்கிப் படிகள் மீது தவழ்ந்தும் கிளைகளாகப் பிரிந்தும் அழகாகச் சாய்ந்து வரிசையாக விழுவதற்கு என்ன வேண்டுமானாலும் தரலாம்!

சமயத்தில் காற்றில் ரயில் தானே கிளம்பிவிடும்! அல்லது படிகளில் நின்று சண்டித்தனம் செய்யும். அல்லது பானு வாசலுக்கு வரும்போது அவள் தாவணியின் சலசலப்பில் தலைகீழாகப் புறப்பட்டுவிட, அவள் வசமாக வாங்கிக் கட்டிக்கொள்ளுவாள்!

கார்டுகளை வைத்து வீடு கட்டுவது, கூழாங்கற்களை ஒளித்து வைத்துவிட்டு தேடச் சொல்லுவது, தாயக்கட்டம், பரமபத சோபான படம்---

"ஏய், இந்த விளையாட்டுல யாரும் பாதியில எழுந்து போகக்கூடாது. போனா, ஸ்வாமி கோவிச்சிப்பார்னு எங்க பாட்டி சொல்லுவா!" என்று அனு ஒவ்வொரு தடவை அறிவித்தாலும் ஒரு முறைகூட அவர்கள் அதை முழுவதும் விளையாடியதாக நினைவில்லை!

அப்புறம் ஆடுபுலி ஆட்டம், கேரம் போர்டு, ’புளிய முத்துகளை’ வைத்துக்கொண்டு சில்லாக்கு அல்லது ஒற்றையா-ரெட்டையா, தீப்பெட்டிப் படக் கரன்சியில் நாலு கோலி, சிகரெட் அட்டைகளில் ஒத்த தீப்பெட்டிப் படங்களை ஒட்டி ஒரு எளிய ரம்மி---இப்படி எத்தனை எத்தனை ஆட்டங்கள்!

இதற்குள் மதியம் சாப்பாட்டுக்கு நேரமாகிவிட, தட்டு வைக்கும்வரை ’சினிமாப் பெயர்’. சரியான நடுப்பகல் வெய்யிலில் அனு விடைபெற்றுக் கொள்ளுவாள்.

சாப்பாடு முடிந்து கடைசிவரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மேல் ’நீதான் கட்டக்கடைசி!’ என்று கைமழை தூறிவிட்டு, அப்பா ஒரு ’பின்னி பிளாங்கெட்’டை விரித்துப்போட, ஒவ்வொருவரும் கையில் ’பஞ்சதந்திரக் கதைகள்’, ’பீர்பால் கதைகள்’ அல்லது ’அம்புலிமாமா’ சகிதம் படுத்துக்கொண்டு, அப்பாவின் கண்டிப்பில் தூங்குவதுபோல் பாவனை செய்துவிட்டு அவர் தூங்கியதும் ஒவ்வொருவராக நழுவி விளையாடப் போக, முனுசாமி பால் கறக்க வந்துவிடுவான்.

இப்படித்தான் ஒரு மாலை முரளி பால்கறக்கும் ஆசையில் பசுவின் மடியில் கைவைக்க, அது பின்னங்காலால் உதைவிட, வலது தொடையில் வெள்ளை சிராய்ப்புடன் கீழே விழுந்த முரளி கேவத்தொடங்க, அப்பா எழுந்துவிடப் போகிறாரே என்ற பயத்தில் அவனும் வசந்தியும் மொட்டை மாடிக்கு ஓடி, அங்கு உலர்த்தியிருந்த கருவடாங்களில் ஒன்றிரண்டு கொண்டுவந்து கொடுத்து முரளியை சமாதானப் படுத்தினார்கள்.

சில நாட்கள் திடீரென்று அப்பா வந்துவிடுவார்!

"நீங்கள்லாம் என்ன பண்ணிண்டிருக்கேள் இங்க? யாருமே தூங்கலையா?"

"தூங்கி எழுந்தாச்சு பெரியப்பா. இப்பதான் காப்பி குடிச்சிட்டு விளையாட வந்தோம்."

"அப்படியா? சரி. வெயிலில் அலையாம விளையாடுங்கோ."

"ஆட்டும் பெரியப்பா!"

அப்பா அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட, அடிக்கடி இதுமாதிரி பார்க்கும் அவர் பார்வையின் பொருள் அனுமதியா, மறுப்பா, கோபமா என்று புரியாமல் அவன் குழம்பி நிற்க, கொஞ்ச நேரத்தில் அனுவும், பானுவும் கூட அவர்கள் விளையாட்டில் கலந்துகொள்ள, எல்லாம் மறந்து மனசு லேசாகிவிடும்.

மூன்று மணி வெய்யிலில் வீட்டில் வலதுபக்கம் காம்பௌன்ட் சுவர்வரை படர்ந்திருக்கும் காட்டுச் செடிகளும் கொடிகளும் நிறைந்த புதர்களில் அவர்கள் பட்டுப் பூச்சிகளைப் பின்தொடர்ந்து அலைந்து, ’தட்டான்’களைப் பிடித்து அவற்றை சிறுசிறு கற்களைத் தூக்கவைத்து மகிழ்ந்து, வாலில் நூல் கட்டிப் பறக்கவிட்டு, காட்டுப் பூக்களைப் பறித்துத் தேனுறிஞ்சி, சில பூக்களின் தலையைச் சுண்டிவிட்டு, ’பட்டாஸ்’ காய்களைத் தண்ணிர் தெளித்து வெடிக்கச் செய்து, ஆமணக்கு விதைகளைச் சேகரித்து (’கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்பாள் அனு), அதன் மிருதுவான பூக்களில் மயங்கி, கறையான் புற்றுகளை உடைத்து, தட்டைக்குச்சிக் கட்டுகளை அவிழ்த்து மூங்கில் விற்களில் அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு அம்புகளாக வானில் எய்து (அந்த அம்புகள் மேலே செல்லும்போது சின்னதாகி மீண்டும் பழைய நிலைக்கு வந்து விழுவது பார்க்க வியப்பாக இருக்கும்), நன்றாகக் காய்ந்த குச்சிகளைத் தோலுரித்து தக்கை வண்டிகளும் பொம்மைகளும் செய்து விளையாடி, ஓணான்களை வேட்டியாட முயன்று, வானில் பறக்கும் கொக்குகளையும் கருடன்களையும் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு, கை நகங்களை நகங்களால் தட்டி உரசிவிட்டு, அந்த நகங்களில் அப்போதுதான் கண்ணில்படும் வெள்ளைப் புள்ளைகளை அதிர்ஷ்டத்தின் சின்னங்களாக நினைத்துக்கொண்டு...

பானு இருக்கும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ’கண்ணாமூச்சி’.

அனைவரும் ’சாட்-பூட்-த்ரீ’ போட்டதும் அவள், "தானா பேனா தந்திரிப் பேனா ஒனக்கொரு பழம் எனக்கொரு பழம் கொண்டோடியா!" என்று ’தாச்சி’யின் கண்களைப் பொத்தியபடி மூன்று தடவை உரக்கக் கூவிவிட்டு, "விட்டுட்டேன்... விட்டுட்டேன்... விட்டுட்டேன்!" என்று கண்களைத் திறந்துவிட, கண்களைப் பொத்திக்கொண்டவன் கம்பீரமாக நடந்து ஒவ்வொருவராகத் தேடத் தொடங்க---

"அந்தோ, பச்சைப் பாவாடை செம்பருத்திச் செடிக்குப் பின்னால! வசந்தி வெளிய வா!"

பானுவுக்கு அனுவிடம் கொஞ்சம் தாராள மனசு. அவள் கண்களைப் பொத்திக்கொண்டாலும் சரி, ஒளிந்துகொண்டாலும் சரி, அவளுக்கு பானுவிடமிருந்து நிச்சயம் ஒன்றிரண்டு கண்ஜாடைகள் கிடைத்துவிடும். இதனால் அனுவை ’அவுட்’டாக்குவது ரொம்பக் கஷ்டம். எப்படியாவது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஓடிவந்து பானுவைத் தொட்டுவிடுவாள். அப்படியே அவுட்டாகி கண்களைப் பொத்திக்கொண்டாலும் எல்லோரையும் கண்டுபிடிப்பது அவளுக்கு கஷ்டமாக இருக்காது.

’கண்ணாமூச்சி’ என்றதும் அவன் சமீபத்தில் படித்த அனிதா தாஸின் 'Games in a Twilight' சிறுகதை ஞாபகம் வந்தது. இப்படித்தான் அந்தக் கதையில் ஒரு சிறுவன் கதவின் சின்ன இடுக்கு வழியே நுழைந்து ஒரு பழைய ’ஷெட்’டில் ஒளிந்துகொண்டு தவம் கிடக்க, மற்ற குழந்தைகள் அவனை அறவே மறந்து வேறு விளையாட்டுகளுக்குச் சென்றுவிட, அவனுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய்விடுகிறது. கதையின் அழகிய வருணனைகளும் அந்த feel of wordsஸும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

சூரியன் மறைந்ததும் எல்லோரும் திண்ணையின் முன்னால் உள்ள புல்வெளியில் அமர்ந்துகொண்டு, தரை முழுவதும் இறைந்துள்ள வாடிய பூவரசம் பூக்களைப் பொறுக்கி இதழ்களைப் பிய்த்துவிட்டு ’கூஜா’ செய்து (பானு அதில் எக்ஸ்பர்ட்), பூவரசம் இலைகளில் ஊதல்கள் செய்து போட்டி போட்டுக்கொண்டு ஊதி, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என்று வாசல் ’கேட்’வரை அழகாகப் பூத்திருக்கும் அந்தி மந்தாரைப் பூக்களைப் பார்த்து வியந்து, வாடிய பூக்களை விலக்கி நன்றாகக் கறுத்த விதைகளை சேகரித்து மனம் போன போக்கில் பூமியில் ஊன்றி, மீதம் இருப்பவற்றை தீப்பெட்டிகளில் பத்திரப்படுத்தி, வாடாமல்லிப் பூக்களில் வெளுத்தவற்றைப் பிய்த்துத் தோட்டம் எங்கும் தூவி (சில நாட்களில் அவை பசுமை எறும்புக் கூட்டங்களாக முளைத்துவிடும்), இருட்டத் தொடங்கியதும் வீட்டுக்குள் நுழைவார்கள்.

விளக்கு வைத்ததும் ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு

"அனு, நீயும் எல்லோரோடையும் உட்கார்."

"இல்லை பானுக்கா, நான் எங்காத்துக்குப் போய் சாப்டுட்டு வந்துடறேன்."

"உங்க பாட்டி திட்டுவான்னு பயமா?"

"நான் சொல்லிக்கறேண்டி உங்க பாட்டிகிட்ட!"

"வேண்டாம் பானுக்கா".

"அப்ப நீ கதை கேட்க வரலையா?"

"இங்க சாப்டாத்தான் கதை."

"சமர்த்தா ராஜா பக்கத்தில உட்கார்ந்துக்கோ பார்க்கலாம்."

பானு சாப்பிடும்வரை பேருக்கென்று பாடம் படித்துவிட்டு, இரவு ஒன்பது மணி வரை பானு அளக்கும் கதைகளை மெய்மறந்து கேட்டுவிட்டுக் கொட்டாவியுடன் அனு விடைபெற்றுக்கொள்ள படுக்கச் செல்வார்கள்.

(தொடரும்)

ரமணி
18-02-2013, 12:10 AM
அப்புறம் அந்த ஆற்றங்கரைப் பள்ளிக்கூடம்.

’ப’ வடிவில் அமைந்து பெரியபெரிய வகுப்பறைகளுடன், பெரிய தாழ்வாரத்துடன் புத்தம்புதுக் கட்டடம். ஐந்தாம் வகுப்பு முழுவதும் இனிமேல் இங்குதான் என்று அறிவித்தபோது மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

அவன் பள்ளிக்கூட நாட்களின் சிறந்த நேரங்கள் இந்தப் பள்ளியில்தான் கழிந்தன. அவனும் அனுவும் வசந்தியும் போட்டியுடன் படித்து அனைத்துப் பாடங்களிலும் மாறி மாறி முதல் மார்க் வாங்கி---

எப்படியும் முதல் ’ராங்க்’ அவனுக்கே. சமயத்தில் அனுவோ வசந்தியோ அதைப் பறித்து விடுவதுண்டு. வழக்கமாக ராஜா-அனு-வசந்தி என்று வரும் முதல் மூன்று இடங்கள் எப்போதாவது ராஜா-வசந்தி-அனு என்று மாறிவிட அனு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொள்ளுவாள்!

மூன்று பேரிலும் அனுவின் கையெழுத்து மிக அழகாக இருக்கும். சீரிய கோடுகளையும் வளைவுகளையும் கொண்டு குண்டுகுண்டான எழுத்துக்களில் எழுதியிருக்கும் அவள் நோட்டுப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பது ஒரு தனி ஆனந்தம். அனுவின் எழுத்துகளின் ஒரு தனித்தன்மை, எல்லோரும் ’கி, தி’ என்று சாதரணமாக எழுதும்போது அவள் மட்டும் குற்றியலிகரங்களைத் தலைச் சுழியுடன் கலையழகோடு எழுதுவாள்.

சின்ன வயதில் பண்படுத்தப்பட்டு, பள்ளி-கல்லூரி நாட்களில் அழகுடன் எழுதும் வழக்கமுடைய பலர் நாளடைவில் தம் கையெழுத்து தேய்ந்து கிறுக்கத் தொடங்கிவிடுகின்றனர். எப்போதும் ஒரே மாதிரி சீராக, அழகாக, குண்டுகுண்டாக எழுதுபவர்கள் நூற்றுக்குப் பத்து பேர்தான் இருப்பார்கள் என்று தோன்றியது.

அனுவின் கையெழுத்துகூட அவள் கல்லூரி நாட்களில் எவ்வளவு மாறிவிட்டது! என்னதான் அந்தப் பெண்மையின் நளினம் இருந்தாலும் அனுவின் கடிதத்தில் இருந்த எழுத்துகள் அவள் எழுதினவையே என்று அடையாளம் தெரிந்துகொள்வது சிரமமாக இருந்தது.

அனுவின் கடிதம் நினைவுக்கு வர, மனத்தை சோகம் பாரமாக அழுத்தியது. அவனை அவள் எவ்வளவு தூரம் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாள் என்பதை நினைக்கும்போது உலகமே இருண்டுவிட்டது போலிருந்தது.

ஒருநிமிடம் இரண்டு நிமிடம் என்று
நேரம் ஊர்ந்த போதும்
வாசலே வராத குகைக்குள்
ரயிலில் போய்க்கொண் டிருப்பது மாதிரி.

திடீரெனச் சக்கரங்களில் ஏதோ நெருடத்
தறிகெட்டு ஓடித் தடம்புரண்டு
பெட்டிகள் ஒன்றுக் கொன்று
’தொலைநோக்கி’ யாக
மடிந்து சுருங்கிக்
கூரையில் இடித்து
வழியே இல்லாது அடைத்துக் கொண்டு
வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் அறுந்து
லண்டனில் ஏற்பட்ட அந்தப்
பாதாள ரயிலின் விபத்து மாதிரி...

அன்று அனுவின் கடிதம், இன்று அப்பாவின்.
அவனது விருப்பத்துக் கெதிராக வாழ்வின் அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திடுமென முடிந்துவிடுகின்றன.

எப்படி இருந்தாலும் அவனால் அப்பாவின் சொல்லை மீற முடியாது. மீறிதான் என்ன செய்வது? பாதையே தெரியாத பயணத்தில் வழித்துணையே வேண்டாம் என்றால் எப்படி?

ஆனாலும் அவனால் அனுவை
எப்படி மறக்க முடியும்?
அவளை மறப்பது என்பது
அவன்தன் பெயரை மறப்பது மாதிரி.

(ஈ ஒன்று தன் பெயர் மறந்த கதைப் பாட்டு சம்பந்தம் இல்லாமல் நினைவில் பளிச்சிட்டு மறைந்தது.)

வாழ்க்கையில் அவனுக்குக் கிடைத்த முதல் தோழி அனு. அவளைமட்டும் சந்தித்திராவிட்டால் அவனுடைய இளமை நாட்கள் இவ்வளவு தூரம் இனிமையாக இருந்திருக்க முடியாது.

அனுவைத் தவிர வேறு யாரும் அவன் மனதை, நினைவுகளை, கனவுகளை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க முடியாது. அசுர வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் இந்த வைகை எக்ஸ்ப்ரஸின் ஆரவாரமான சூழ்நிலையில் புலன்கள் விழித்திருக்க, மனம் மட்டும் அடிக்கடி சின்னத் தூக்கம் போட்டு, புரஃபசர் மித்ராவின் அழைப்பில், மெஸ்மெரிசத்தில் அந்தப் பழைய நாட்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்துகொண்டிருக்க முடியாது.

காலவோட்டத்தின் மணலில் பதிந்த அனுவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி அலைந்து தேடிக் கொண்டிருக்க முடியாது.

அப்படித் தேடும்போது அந்தக் காலடிச் சுவடுகள் உருமாறிச் சிதைந்து, மெல்ல மெல்ல மறைந்து, அந்த ’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ சினிமாவில் வரும் காட்சிபோல் மணல் காற்றின் உக்கிரத்தில் அவனிடம் இருந்து அவள் பிரிக்கப்பட்டு மறைந்தே போக,

அவளது தோழமையில் வாழ்ந்த
நாட்கள் நினைவு களாகி
நினைவுகள் கனவு களாகி
சங்கிலித் தொடர்போல் நீண்ட கனவுகள்
ஒவ்வொரு வளையமாக உள்ளத்தின்
ஆழமான இடுக்கில் சென்று மறைய
கடைசி வளையத்தைப் பிடித்துக்கொண்டு
அவன்தொங்கிக் கொண்டிருக்க,
கீழே அதல பாதாளம்...

*** *** ***
(தொடரும்)

ரமணி
19-02-2013, 12:06 AM
பயணம்: நாவல்
ரமணி
7


பழமை பழமை என்று பாவனை பேசலின்றிப்
பழமை இருந்த நிலை!---கிளியே!
பாமர ரேதறி வார்?
---மஹாகவி பாரதியார், நடிப்புச் சுதேசிகள்

அனுவின் தோழமையில் அவன் செலவிட்ட நாட்கள் சிவப்பு-ஆம்பர்-பச்சைக் குறிகளாக அவன் பிள்ளைப் பருவத்தைப் பாதித்திருக்க, மனம் அந்த நாட்களை, நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து, டயரியின் பக்கங்களில் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

ஆற்றங்கரைப் பள்ளிக்கூட நாட்களின் மகிழ்ச்சியான நேரங்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக வருணிக்கப்பட்டிருந்த வரிகளில் கண்கள் ஓடியபோது---

வசந்தியுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதும் அடிக்கடி அவன் பக்கம் தாவிச் சிரிக்கும் அனுவின் அகலமான கண்கள்,

கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு வகுப்பின் பின்பக்கம் போய் போண்டா தின்னும் ஆசிரியர்,

மீன்களை பாட்டில் தண்ணீரில் அடைத்து விளையாடும் பையன்கள்,

ஆடிமாத நீர்ப்பெருக்கில் முழங்கால் அளவு நீரில் அவர்கள் பாதத்தின் அடியில் மணல் குறுகுறுக்க, மீன்களின் வருடலில் கால்கள் புல்லரிக்க நின்ற சமயங்கள்,

பள்ளியின் அருகில் இருந்த அனுமார் கோவிலின் சில்லென்ற தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த நாட்கள் போன்ற காட்சிகளும் நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக நினைவில் எரிந்து பரவசமூட்டின.

சாலையில் திடீரென்று சிவப்பு சிக்னல்!

உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பில் நுழைந்த சில நாட்களில் வசந்திக்கும் அவனுக்கும் அம்மா கொடுத்த ’அட்வைஸ்’ இப்போதும் காதில் ஒலித்தது.

"ஏ வசந்தி! இனிமே பள்ளிக்கூடத்ல நீங்கள்லாம் ஆணும் பொண்ணும் சேர்ந்து விளையாடக் கூடாது. ’ஏ கோவிந்தா!... ஏ கோபாலா!’-ன்னெல்லாம் கத்தி அமர்க்களம் பண்ணாம அடக்கமா இருக்கணும். ஆம்பளைப் பசங்களோட சேர்ந்து விளையாடினா காது அறுந்துபோகும், தெரியுமா?"

"ஒனக்கும்தாண்டா ராஜா! நீயும் இனிமே ’ஏ கோசலை, ஏ லலிதாங்கி!’ன்னு வகுப்பில வெளியில கத்தாம, ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வர வழியைப் பாக்கணும், புரிஞ்சுதா?"

அம்மாவின் பலமான ’அட்வைஸ்’ ஊரெங்கும் கேட்டதோ என்னவோ இன்று அவர்கள் கிராமத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி உயர்நிலைப் பள்ளிகள்.

அம்மாவின் ’அட்வைஸ்’ அனுவின் காதுக்கு எட்டிவிட இப்போதெல்லாம் அவள் வசந்தியையே அதிகம் சார்ந்திருப்பதாகத் தோன்றியது.

வகுப்பிலாவது பையன்களும் பெண்களும் நடுவில் இடம்விட்டுத் தனித் தனி வரிசைகளாக ’டெஸ்க்’களில் அமர்வதால் அவர்கள் அதிகம் பேசிக்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும் (அப்போதுகூட அனுவின் கண்கள் அடிக்கடி அவன் மேல் விழுந்து புன்னகைக்கும்!), மற்ற நேரங்களில் முன்புபோல் அவர்கள் கலகலப்பாக இருக்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைந்துவிட்டன.

அதுவும் முக்கியமான அந்த மாலை வேளைகளில்.

’இது பையன்கள் விளையாட்டு’, ’இது பெண்கள் விளையாட்டு’ என்ற பாகுபாட்டில் அனுவும் வசந்தியும் மற்ற பெண்களோடு சேர்ந்துகொண்டு பாண்டி, ரிங் டென்னிஸ், ஸ்கிப்பிங் போன்ற விளயாட்டுக்களில் மெய்மறக்கத் தொடங்கிவிட, அவன் திடீரென்று அதிகமாகிவிட்ட தன் நண்பர்களுடன் பம்பரம், கோலி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பொழுதைப் போக்க வேண்டியதாயிற்று.

மூவரும் தினமும் ஸ்கூல் போகும் வரும் சமயங்கள் தவிர மற்ற வேளைகளில் அனுவின் தோழமை அவனுக்கு அவ்வளவு தூரம் கிடைக்காததில் வருத்தம் இருந்தாலும் கூடவே ஒரு மகிழ்ச்சி, அவள் மற்ற பையன்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் இல்லை என்பது. தவிர, அனுவும் அவனை மட்டும் நாடியதால் அவளுக்கு இருந்த ஒரே தோழன் என்கிற மகிழ்ச்சி.

இப்போது எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது அவன் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டதாகப் பட்டது.

இவ்வளவு நாள் பழகியும் அவன் ஒரு தடவை கூட அனுவின் வீட்டுக்குப் போனதில்லை!

அவள் பெற்றோர் யார், எந்த ஊரில் இருக்கிறார்கள், அவள் அப்பாவுக்கு என்ன வேலை என்று தெரிந்துகொள்ள முயன்றதில்லை.

அவள் பாட்டி தாத்தாவை ஒருமுறைகூடப் பார்த்ததில்லை.

அவள் வீடு எப்படி இருக்கும், அனு எந்த நேரத்தில் என்ன செய்கிறாள், எப்படிப் படிக்கிறாள், வசந்தியைப் போல வீட்டுக் காரியங்களை அனாயாசமாகச் செய்கிறாளா, அவள் வீட்டில் அன்று என்ன சமையல் என்றெல்லாம் அறிய ஆவல் கொண்டதில்லை.

அப்பா அம்மாவிடம்---ஏன் வசந்தியிடம் கூட---அனுவைப் பற்றிப் பேசியதில்லை.

அனுமாதிரியே அவனும் அவள் மீது உயிராய் இருந்ததைக் காட்டிக் கொண்டதில்லை.

இவற்றையெல்லாம் செய்திருந்தால் ஒருவேளை அப்பா அம்மாவுக்கு அவன் அன்பின் ஆழம் தெரிந்திருந்து நாளடைவில் அவர்கள் அந்த விஷயத்தை ஆதரித்து இருக்கக்கூடும்.

அப்பாவின் இந்தக் கடிதமும் வேறு விதமாக இருந்திருக்கக்கூடும்...

(தொடரும்)

ரமணி
20-02-2013, 01:09 AM
அவன் உயர்நிலைப் பள்ளி நாட்களில் இப்போதும் அனுவை நினைத்துக்கொள்ளும்படி செய்த நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று, அந்த ஆண்டு விழா நிகழ்ச்சி. மற்றொன்று, அந்த தீபாவளிக் கோலாட்டம்.

ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா
களிபடைத்த மொழியினாய் வாவாவா
கடுமை கோண்ட தோளினாய் வாவாவா

என்று மதுர கீதமாய் ஏற்ற இறக்கங்களுடன் பானு ’எம்மெஸ்’ஸை எதிரொலிக்க, அனுவும் வசந்தியும் மடிசார் பட்டுப்புடவை சரசரக்க, பல நூறு கண்கள் அவர்கள்மேல் நிலைத்திருக்க, பானுவின் மேற்பார்வையில் பல தடவை பார்த்த ஒத்திகையின் மெருகு அவர்கள் அணிந்திருந்த நகைகளுக்குப் போட்டியாக மினுமினுக்க,


ஒத்திகையின் போது அனு, வசந்தியுடன் ஜோடியாகப் பலமுறை கைகளைக் கும்பிட்டு வணங்க, அவன் ஒவ்வொரு வணக்கத்தின் போதும் அனுவுக்கு எதிராக நின்றுகொண்டு அவள் அவனை வணங்கியதாக நினைத்து மகிழ்ந்தான்!



பானுவின் உழைப்பு அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் பாவத்திலும் பளிச்சிட, கூட்டத்தின் ஒருமித்த கரவொலிகளைப் பெற்று, விழாத்தலைவர் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பெருமிதத்துடன் சுமந்துகொண்டு முத்துவின் குதிரை வண்டியில் ஏறி வீட்டுக்கு வந்து விடியவிடிய அந்த விழாவைப் பேசித் தீர்த்தது எப்போதும் மறக்க முடியாத நிகழ்ச்சி.

அப்புறம் அந்த தீபாவளிப் பண்டிகை நாட்கள்.

அப்பாவுக்கு அனுவை அறிமுகப்படுத்தி வைக்கும் நாட்கள்.

அதுவரை அவள்மேல் அக்கறை கொண்டிராத அவர் அன்று தானே அனுவைக் கூப்பிட்டு வெடிகள் வெடிக்கக் கற்றுக் கொடுப்பார்.

ஒரு நீளமான கம்பி மத்தாப்புக் கம்பி அல்லது நீண்ட தட்டைக் குச்சியில் செருகப்பட்ட கம்பியில் ஓலைவெடி, யானைவெடி அல்லது ஊசிவெடியைச் செருகி ஒவ்வொருவராகக் கூப்பிட்டுக் கையில் கொடுத்து அப்பா அவர்கள் கையைப் பிடித்துக்கொள்ள, வெடியை அவர்கள் விளக்கில் காட்டிப் பொறி வந்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கையை முடிந்தவரை தள்ளி நீட்ட, மற்றொரு கையால் காதைப் பொத்துவதற்குள்---’டமால்!’

உறவினர்கள் வீட்டில் யாருக்காவது தலைதீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம். நிறைய வெடிகளை ஒரு பெரிய தகர டின்னில் போட்டு ஒட்டுமொத்தமாக வெடித்து துவம்சம் செய்துவிடுவார்கள்.

தீபாவளி நாட்களில் தொடர்ந்து ஒரு வாரம் அக்ரஹாரத்தில் பெண்கள் கோலாட்டம் நடைபெறும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு அரிய கலை நிகழ்ச்சியாகப் பட்டது.

பள்ளிக் கூடப் பெண்கள் முதல் மடிசார் புடவை கட்டிய மாமிகள் வரை எல்லோரும் ஒன்றாகவும், தனித்தனிக் குழுக்களாகவும், அக்ரஹாரத் தெருக்களில் ஊர்வலம் வந்து, வயது வித்தியாசமின்றிக் கோலடிக்கும் ஓசை தெரு முழுவதும் கேட்கும்.

அந்த நாட்களில் அவனும் சந்துருவும் முரளியும் ’சயன்ஸ்’ வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு சலிக்காமல் கோலாட்டம் பார்ப்பதுண்டு.

பட்டும் சின்னாள பட்டும்
தினுசு தினுசான உடைகளில்
ஜரிகை வரிகளில் இழைகளில்
கண்ணைப் பறிக்கும் நிறங்களில்
தெருவிளக்கில் மின்னிப் பளிச்சிட

கால்கள் அப்பழுக்கு இல்லாத
வட்டமான பாதையில் நடமிட
வண்ண வண்ண கோல்களைத்
தாங்கிய கைகள் யாவும்
ஆரங் களாகக் குவிந்தும்
தலைகளுக்கு மேலே உயர்ந்தும்
ஒன்றை ஒன்று எதிர்கொண்டும்
ஓயாத ரிதங்களில் சப்திக்க

அந்தத் தாளத்தை உள்ளடக்கி
இனிய குரலொன்று உரக்கக்
கண்ணனின் லீலைகளைப் பாட
எல்லோரும் திரும்பச் சொல்ல...

கோலேன கோலே ஏ
பாலா நீலா லா கோலே
பால பாவன லீல விலோசன
பால ப்ரபஞ்ச கோலே ஏ

சந்தன வனந்தனிலே ஏ -- நாங்கள் பெண்கள்
ஷெண்பக ஒடையிலே
அந்தத் துகிலெடுத்துக் கரம்மேல்கரம் வைத்து
விளையாடும் வேளையிலே ஏ

பசுவா பசுவையா ஆ -- உமக்கு
பணம் கொடுப்பா ருமில்லை
இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
ஏய்க்கிறாரே பசுவே ஏ!

பால் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
பாலென்று கூவையிலே
பாலைத் தாடி என்று க்ருஷ்ணன்
பற்களை உடைத் தாண்டி ஈ!

தயிர்ச் செம்பு கொண்டு ஊ -- நாங்கள் பெண்கள்
தயிரென்று கூவையிலே
தயிரைத் தாடி என்று க்ருஷ்ணன்
தாடையில் அடித் தாண்டி ஈ!

எட்டடிக் குச்சிக் குள்ளே ஏ -- ஸ்வாமி
எத்தனை நாளிருப்பேன்?
மச்சுவீடு கட்டித் தாரும் -- ஸ்வாமி
மலையாளம் போய்வா ரேன்.

இவர்களுக்குச் சரியாக கோலாட்டத்தில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பாடி வலம் வரும் அனுவையும் வசந்தியையும் அவர்கள் திண்ணையில் உட்கார்ந்து கதை பேசியபடியே பார்த்து மகிழ்வார்கள். சமயத்தில் முரளியும் சந்துருவும் ’போர்’ என்று நழுவிவிட, அவன் மட்டும் தனியாக உட்கார்ந்துகொண்டு வசந்தியை ஊக்குவிக்கும் பாவனையில் அனுவின் நடவடிக்கைகளைக் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்வான்.

எல்லோருடனும் சரிக்குச் சரியாக ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டு ("பானுக்கா, நான் இன்னிக்கு கோலாட்டத்தில உங்க பக்கத்தில, என்ன?"), பாடல்களை உன்னிப்பாக கவனித்துத் தப்பில்லாமல் பாடி, கோலாட்டக்கலையின் நுணுக்கமான பயிற்சிகளை நளினமாகச் செய்யும் அனுவின் நடவடிக்கைகளை, கூட்டத்தில் அவள் அடிக்கடி காணாமல் போய் வருவதை, அதுவும் அவள் அழைப்பின் பேரில் பார்த்துக்கொண்டிருப்பது எப்படி அலுக்கும்?

திடீரென்று ஒருநாள் அனுவைக் காணவில்லை!

ஆறாம் வகுப்பின் முடிவில் பரீட்சைகளை நன்றாக எழுதிவிட்டு, கடைசி பரீட்சையான ’ட்ராயிங்’ பேப்பரில் அவன் வரைந்த அதே தாஜ்மஹால் படத்தை அவளும் வரைந்துவிட்டு---

"ராஜா, நீ என்ன படம் போட்டே?"

"தாஜ்மஹால். நீ?"

"அட! நானும் அதேதான். அழஹ்ஹா குண்டு குண்டா உருண்டையா போட்டு நல்லா மஞ்சள் கலர் அடிச்சு--நிச்சயம் எழுவதுக்குக் குறையாது. உனக்கு?"

"நானும் மஞ்சள் கலர் அடிச்சு உன்னை மாதிரியே நல்லா வரைஞ்சிருக்கேன் அனு."

"ஹை! ஸேம் பிஞ்ச், நீயும் நானும் ஒண்ணு!"

"உன் வாயில மண்ணு!"

"..."

"என்ன்ன அனு, விளயாட்டுக்குச் சொன்னா கோவிச்சுக்கறே பத்தியா? எங்கே, நம்ம ’ஸோஷல் ஸ்டடீஸ்’ டீச்சர் மாதிரி மூஞ்சிய வெச்சுக்காம சிரி, பார்க்கலாம்!"

’ஸோஷல் ஸ்டடீஸ்’ டீச்சரை நினைத்துக் கண்களில் நீர் வரும்வரை கலகலவென்று வழியெல்லாம் சிரித்துக்கொண்டே வந்தவள்தான்.

அவள் வீடு வந்ததும், "இந்த அடியை மறக்காதே ராஜா!" என்று செல்லமாக அவன் முதுகில் அடித்துவிட்டு ஹவாய் செருப்பு படபடக்க, ஜியொமெட்ரி பாக்ஸ் கலகலக்க ஓடி மறைந்தவள்தான்! கோடை விடுமுறைக்குப் பின் வரவே இல்லை.

கேட்டால் அவள் மதுரையில் ஒரு ’கான்வென்ட் ஸ்கூலில்’ சேர்ந்துவிட்டதாக வசந்தி கூறினாள்.

*** *** ***
(தொடரும்)

முரளி
20-02-2013, 02:30 AM
அருமையான படைப்பு. தொடரட்டும் எனது சிறிய பரிசு ஈ காசு 1000

ரமணி
20-02-2013, 11:57 PM
பயணம்: நாவல்
ரமணி
8


பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன்
---மஹாகவி பாரதியார், மூன்று காதல்

அதன்பின் நாலைந்து வருடங்கள் கழித்து அனுவைப் பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை.

வசந்தியைவிட அழகாக, நிறமாக, அவனைவிட இப்போதும் கொஞ்சம் உயரமாக, பளீரென்ற முகத்துடன், பூரித்த வளர்ச்சியுடன், பெண்மையின் முழுமையான பொலிவில் கம்பீரமான தோற்றத்துடன்...

என்ன அழகு அது!

பார்ப்பவர் கண்களைக் கிறங்க அடிப்பதாய், தலையைச் சிலிர்த்துக்கொண்டு, கண்களைக் கசக்கிக்கொண்டு, தன் கண்களையே நம்பமுடியாமல் திரும்பிப் பார்க்கச் செய்வதாய், ’யாரிவள்?’ என்ற கேள்விக்குறியை ஒவ்வொரு தலைக்கு மேலும் உலவவிட்டு, வானில் உலவும் ஒரு தேவலோகப் பெண் போல...

வழக்கம்போல் மாலை பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது தினமும் அனு வீட்டு வாசலின் வெறுமையையே கண்டு பழகிப் போய்விட்ட அசுவாரஸ்யத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடந்தவன் கால்களை லகான் போட்டு இழுத்து நிறுத்தியது அந்தக் காட்சி.

கொஞ்ச தூரத்தில் வரும்போதே அவன் அவளைக் கவனித்துவிட்டான். வாசலில் உட்கார்ந்துகொண்டு குழந்தைகள் புழுதியைக் கிளப்பியபடி விளையாடிக் கொண்டிருந்ததை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அடுத்த நிமிடம் மனதில் பழைய நினைவுகள் பொங்கித் ததும்ப, நினைவுகளின் அலையடிப்பின் இதயம் படபடவென்று சிறகடித்து காதில் சப்திக்க, அவனை அவள் பார்த்தவுடன் எப்படி நடந்துகொள்ளக் கூடும் என்று மனம் ஆவலுடன் கணிக்க, ஒருவேளை அடையாளம் தெரிந்துகொள்ள மாட்டாளோ என்ற பயம் எட்டிப் பார்க்க, எல்லாவற்றையும் அவளுடன் முழுமூச்சாகப் பேசித் தீர்த்துவிட வேண்டும் என்ற ஆசை உந்த, வேகமாக நடந்துவந்தபோது---

அவனைக் கண்டதும் கண்கள் சூரியகாந்திப் பூப்போல் விரிய முகத்தில் புன்னகை அரும்ப அவள் எழுந்து நின்றபோது பதிலுக்கு அவனால் ஒரு புன்சிரிப்பைத்தான் தர முடிந்தது.

என் அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி நாக்கின் முடிச்சு அவிழ மறுக்க, என்னால் மௌனியாகத்தான் நிற்க முடிந்தது!
என்று டயரியில் எழுதியிருந்ததை இப்போது படிக்கும்போதும் அந்த சோகம் அதே கடுமையுடன் மனதில் விரவியது.

ஷேக்ஸ்பியரின் As You Like It நாடகத்தின் நாயகன் ஆலிவர் அந்த மல்யுத்தப் போட்டியில் வென்றதைப் பாராட்டி இளவரசி ரோஸலின் ஓர் அழகிய முத்துமாலையை அவன் கழுத்தில் அணிவித்தபோது, அவன் வியப்பில் வாய்மூடி மௌனியாக நின்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

What passion hangs these weights upon my tongue?

அந்த வரிகளைக் கல்லூரியில் தன் வகுப்பில் விளக்கிச் சொல்லும்போது ஓர் அநாமதேய உதாரணமாக அவன் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது வழக்கம்.

ஆலிவர்-ரோஸலினாவது ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால் அவனும் அனுவும்? அவனால் எப்படித்தான் அன்று அதுபோல் நடந்துகொள்ள முடிந்தது என்று இப்போதும் புரியவில்லை.

’என்ன அனு, சௌக்யமா?’ என்றுகூட ஒரு வார்த்தை கேட்காமல்...

அவன் மௌனத்தைப் பார்த்துத்தானோ என்னவோ அவளும் ஒன்றுமே கேட்காமல்...

"வசந்தி, இன்னைக்கு நான் அனுவைப் பார்த்தேன். அவாத்து வாசல்ல உட்கார்ந்திருந்தா."

"அப்படியா? என்ன சொன்னா?"

"என்னப் பார்த்து சிரிச்சா. நான் ஒண்ணும் கேட்கலை."

அன்று மட்டுமில்லை. அதற்குப் பின் பல நாட்கள் அனுவைக் கடந்து கோவிலுக்கோ கடைக்கோ போகும்போதும் சரி, வரும்போதும் சரி, அவனால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை!

பதநீர் விற்பவன் சுமையைப் போல் ஒரு பக்கம் நினைவுகளும் மற்றொரு பக்கம் மௌனமும் போட்டு அழுத்த, கண்கள் மட்டும் எந்தத் தளைக்கும் கட்டுப்படாமல் அனுவையே பார்த்துக் கொண்டிருக்க நடக்கத்தான் முடிந்தது.

ஓரிரு முறை அவள் அவன் வீட்டிற்கு வந்திருந்தபோது கூட அவளும் வசந்தியும் பேசிக்கொண்டிருந்ததை மாடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

காற்றாட மாடிக்கு வந்து பேசமாட்டார்களா என்று ஏங்கத்தான் முடிந்தது.

அவன்இதுவரை அறிந்த பழகிய அனுராதா
கால ஓட்டத்தின் புகைவண்டிப் பயணத்தில்
பின்னால் பின்னால் சென்று மறைந்தே போக

அவளைப் பற்றிய நீங்காத நினைவுகள் மட்டும்
தூரத்தே அடிவானம் ஒட்டினாற் போலத் தெரியும்
பசுமைத் தீவுகள் போலப் பிடிவாதத்துடன் தொடர்ந்துவர

இப்போது பார்க்கும் இந்த ’டீனேஜ்’ அனுகூட
எவ்வளவு நாளைக்கு சாஸ்வதம்
என்ற கேள்வி தலைதூக்க

கொஞ்ச நாளில் அவளும்
வெறும் ரயிலின் சிநேகிதமாக
ஏதோ தெரியாத நிலையத்தில்
அவனறியாமல் இறங்கிச் சென்றுவிட

அப்பாவின் கடிதம்தான் கையில் நிரடியது
உண்மையின் இன்மை யாக
அல்லது இன்மையின் உண்மை யாக.

அனுவை அவன் கடைசியாகப் பார்த்தது ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியில். ஶ்ரீராம நவமி உற்சவத்தின் போது என்று ஞாபகம்.

அவள் வீட்டு வாசலில் மேடை அமைத்து, பொம்மலாட்டக் கலையில் பல விருதுகள் பெற்ற வல்லுநர் ஒருவர் ஒரு நீண்ட சொற்பொழிவாற்றிவிட்டு, தொடர்ந்து நாலைந்து நாள் ’வள்ளி திருமணம், அரிச்சந்திர புராணம், மார்க்கண்டேய புராணம்’ போன்ற கதைகளைத் தத்ரூபமாக பொம்மைகளிடையே உலவவிட்டதை ஊரே திரண்டு ரசித்தது.

அந்த நாலைந்து நாட்களும் அவன் சயன்ஸ் வாத்தியார் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்துகொண்டு அனுவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆசிரியர் பேசுவது காதில் விழாமல், பக்கத்தில் சந்துரு, முரளி இருப்பதை மறந்து, கிழே கூட்டத்தில் பானுவுடன் அமர்ந்திருந்த வசந்தி அடிக்கடி அவனைப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல், அவள் வீட்டு வாசல்படியில் சில குழந்தைகளுடன் அமர்ந்தபடி நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த அனுவின் ஒவ்வொரு முக பாவத்தையும் செயலையும் அவனது கண்கள் ஒன்று விடாமல் மனதில் பதிவுசெய்ய...

எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

அவள் தோழமைக்காக ஏங்கிய மனம் பலவாறாகக் கணக்குப் போட்டுப் பார்த்தது. எப்படியாவது மறுநாள் அவளோடு பேசி, தோழமையைப் புதுப்பித்து, அவள் எண்ணங்களை அறிந்துகொண்டு, எல்லாவற்றையும் நேர் செய்துகொண்டு, அவளுடைய குடும்பத்தார்க்கு அவனை அறிமுகப் படுத்திக்கொண்டு, முடிந்தால் அவ்வப்போது கடிதம் எழுத வழிவகை செய்துகொண்டு, பழைய நாட்களின் மலர்ச்சியை மீண்டும் மலரச் செய்ய உறுதி எடுத்துக் கொண்டபோது...

மறுநாள் அவள் ஊருக்குப் போய்விட்டாள்.
(தொடரும்)

ரமணி
22-02-2013, 12:38 AM
அதன்பின் இரண்டு வருடங்களில் அனு அவன் மனமாகிய வானத்தில் புதிதாக முளைத்த தாரகைகளிடையே மெல்ல மெல்லத் தேய்ந்து அவள் முகம் கூடக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துபோக---

ஆசை முக மறந்து போச்சே---இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்---எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கல்லூரியில் பயின்றபோது ஒருநாள் நிலவும் நட்சத்திரங்களும் அறவே மறந்து சுற்றிலும் இருளானபோது அவன் மனம் திடுக்கிட்டு விழித்துக்கொள்ள, பலபலவென்று விடிந்து காதல் வாழ்வின் லட்சியமும் அன்றைய வெறுமையும் பிடிபட, கிறிஸ்து தன் கடைசி சாப்பாட்டில் பயன்படுத்திய அந்தப் புனிதக் கிண்ணத்தைத் தேடும் பக்தனின் உறுதியுடன் அவன் நீண்டதொரு பயணத்துக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, முன்னேற்பாடாக பழைய நினைவுகளை எல்லாம் டயரி வடிவில் அழகாகத் தொகுத்து வைத்துக்கொண்டு, பயணத்தின் முதல் கட்டமாக அனுவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான்.

என்ன எழுதினான் என்பது சரியாக நினைவில்லை. நகலும் கைவசம் வைத்திருக்கவில்லை. ஆனால் கடிதம் எழுதிய சூழ்நிலையும், பின்னணியாக அமைந்த நம்பிக்கைகளும் தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கப்பட்டு, வார்த்தைகள் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, தேநீர்க் கோப்பையில் உருவான புயல் பெரிதுபடுத்தப்பட்டு, அவனுக்கும் அனுவுக்கும் இடையில் இருந்த ஒரே தொடர்பின் சாயலும்கூட அறுந்துபோன நிகழ்ச்சியைப் படிக்கும்போது கண்கள் பனித்தன.

எப்படி அவனால் அந்த மாதிரி திடீரென்று அனுவுக்கு எழுத முடிந்தது என்று நினைத்துப் பார்க்கவே புதிராகவும் வியப்பாகவும் இருந்தது.

என்ன இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு---அதுவும் அவன் குடும்பத்தாலோ அவள் குடும்பத்தாலோ அல்லது இந்த சமூகத்தாலோ அங்கீகரிக்கப்பட்ட உறவு முறைகளுக்கு அப்பாற்பட்டு, பெண் என்ற காரணத்தாலேயே ’ஃப்ரெண்ட்’ என்றுகூட அங்கீகரிக்கப்படாத நிலையில் நிற்கும் ஒரு பெண்ணுக்கு---இப்படியெல்லாம் பகுத்தறியத் தோன்றாமல், விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், அவன் செயலை அனு மட்டும் அங்கீகரித்தால்கூடப் போதும் ஆனால் அவள் சம்மதிப்பாளா என்ற கேள்வி கவலையை எதிரொலிக்க,

கல்லூரி ஹாஸ்டல் அளித்த தனிமை மற்றும் தைரியம், மணியன் எழுதிய மேனாட்டுப் பயணக் கட்டுரைகளின் கவர்ச்சி, அவன் படித்த ஆங்கில நாவல்களில்---குறிப்பாக ஜேன் ஆஸ்டின்---’இன்டெலெக்சுவல் ரொமான்ஸ்’ தோற்றுவித்த கனவுகள், டாக்டர் ஶ்ரீநிவாச சாஸ்த்ரியின் கட்டுரை A Letter from London விவரித்த ஆங்கில வாழ்க்கை முறைகளில் ஈடுபாடு, முக்கியமாகக் கடிதங்களின் அந்தரங்கத்திற்கு அவர்கள் தரும் மதிப்பில் பொறாமை போன்ற உணர்வுகளின் பிண்ணணியில்,


ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice நாவலில் எலிசபெத் தனக்கு வரும் கடிதங்களை எவ்வளவு ’பெர்சனல்’-ஆக வைத்துக்கொள்கிறாள்! அவள் பெற்றோர் உட்பட யாருமே அவளுக்கு வரும் கடிதங்களைப் பற்றி ஆர்வம் கொள்வதில்லை. அவளுடன் ஓர் உண்மையான தோழியைப் போல் பழகும் தன் மூத்த சகோதரிக்கும்கூட ஒருசில பகுதிகளைப் படித்துக் காட்டுவதோடு சரி.

அவன் வீட்டில் இப்படி நடக்க முடியுமா?
"யார் லெட்டர்?’
"பாஸ்கர்-பா."
"எந்த பாஸ்கர்?"
"அதாம்பா என் ஃப்ரெண்ட் பாஸ்கர். காலேஜ்ல என்னோட க்ளாஸ்மேட். எனக்கு எழுயிருக்கான்."
"ஏண்டா, அப்பாட்டதான் கொஞ்சம் காமிக்கறது? அப்படி என்ன சிதம்பர ரகசியம் அந்தக் கடுதாசியில?"



அனுவின் தோழமையைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வமும் கவலையும் அவசரமும் போட்டு உந்த, அவளை "மை டியர் ஃப்ரெண்ட் அனு" என்று விளித்து, பழைய நாட்களை மீண்டும் அவளுக்கு நினைவூட்ட முயற்சிசெய்து, அவன் அவள்மேல் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் உணர்த்த மெக்காலே-ஹன்னாவையும் வேர்ட்ஸ்வொர்த்-டொரதியையும், ஜேன் ஆஸ்டினின் காதலர்களையும் இடம் தெரியாமல் உதாரணம் காட்டி,

அவன் வாழ்க்கையில் கிடைத்த முதல் தோழியான அனுவின் நட்பை மீண்டும் மலரச்செய்து அவள் சம்மதத்துடன் தொடர்ந்து கடிதம் எழுத வழிவகை செய்துகொள்ள வேண்டி,

இந்தமாதிரி கடிதம் எழுதுவது அவள் பெற்றோருக்குப் பிடிக்காது என்று அவள் கருதினால் அவன் கடிதங்களை அவள் மட்டுமே ரகசியமாக வைத்துக்கொள்ளக் கோரி,

அவள் கல்லூரி முகவரிக்கு எழுதிய நீண்ட கடிதத்திற்கு அனுவிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சுதான் பதிலாகக் கிடைத்தது,

ஒரு சின்ன ’இன்லாண்ட் லெட்டர்’ வடிவில்.

*** *** ***
(தொடரும்)

ரமணி
22-02-2013, 11:59 PM
பயணம்: நாவல்
ரமணி
9


மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!
---மஹாகவி பாரதியார், விடுதலை

அன்புள்ள ராஜா,

உன் விரிவான, நீண்ட கடிதம் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
எனக்கென்னவோ நாம் இருவரும் நண்பர்களாக இருப்பதைவிட, சகோதர பாசத்துடன்
பழகுவது மேல் என்று தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?

கடிதம் எழுவதற்கு முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக யோசித்து எழுதவேண்டும்.
எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி எப்போதுமே பெரியது. பொல்லாதது.

பழைய நாட்களை நான் மறக்கவில்லை. ஆனால் உன் கடிதத்தில் என்னால்
பழைய ராஜாவைப் பார்க்க முடியவில்லை. இப்படி நான் எழுத நேர்வதற்காக
என்னை மன்னித்துவிடு. உன் முன்யோசனை இல்லாத கடிதம் என்னை
எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்பது உனக்குத் தெரியாது.

எங்கள் கல்லூரியில் ஒரு கெட்ட வழக்கம். மாணவியருக்கு வரும் கடிதங்களை---
அவர்கள் ’டே ஸ்காலர்’களாக இருப்பினும்---பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டுத்தான்
அவர்களிடம் கொடுப்பார்கள். அதேபோல் ஹாஸ்டல் மாணவியர் எழுதும்
கடிதங்களை ’வார்டன்’ படித்த பின்னரே ’போஸ்ட்’ செய்ய அனுமதிப்பார்கள்.
இந்த விஷயம் உனக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்.

உன் கடிதம் வந்த அன்று நான் ஒருவாரம் உடல்நலிவு காரணமாக ’லீவில்’ இருந்தேன்.
என் தோழி ஒருத்தி திடீரென்று ஒருநாள் அம்மாவின் முன் பிரிக்கப்பட்ட உன் கடிதத்தைக்
கொடுத்தபோது நான் அடைந்த வேதனைக்கு அளவில்லை. இந்நிலையில் எப்படி நான்
உன் கடிதத்தை ’ரகசியமாக’ வைத்திருக்க முடியும்?

இந்த ’ரகசியம்’ என்ற பதத்துக்கு எனக்குப் பொருள் புரியவில்லை. அந்த வார்த்தை
ஒரு ’டைனமைட்’ என்று உனக்குத் தெரியவில்லையா?

என் அம்மாவிடம் நான் எல்லா விஷயங்களையும் கூறிவிட்டேன். என்னைப் புரியவைக்க
எனக்கு வேறுவழி தோன்றவில்லை.

என் மனம் மிக மென்மையானது என்று நீ அறிவாய். அதை ஒரு முள்ளால்---அது பேனா
முனையாக இருந்தாலும் கூட---குத்திப் பார்க்க உனக்கு எப்படி மனசு வந்தது?

ஆண்-பேண் நட்பும் தோழமையும் கதைகளில் மட்டுமே சாத்தியம். நடைமுறையில் சமூகம்
ஒத்துக்கொள்ளாது. எலிசபெத், ஜேன், எம்மா போன்றோர் ஆங்கில சமூகத்தில் இயற்கையாக
உலாவலாம். இங்கெல்லாம் அவர்கள் வெறும் கதைப் பாத்திரங்கள் தான்.

இதையெல்லாம் நான் எழுதும்போது கொஞ்சம் ’சென்டிமென்டல்’ஆகத் தோன்றலாம்.
ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது சில உண்மைகளையும் எல்லைகளையும்
புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவே என் கல்லூரி முகவரிக்கோ, வீட்டு முகவரிக்கோ அல்லது வேறெந்த முகவரிக்கோ
மேற்கொண்டு கடிதம் எழுதி வருத்த வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

I do not expect any more letters from you.

அன்புடன்,
அனு

பின்குறிப்பு:
1. இந்தக் கடிதத்தை என் அம்மாவிடம் காட்டிய பின்னரே தபாலில் சேர்க்கிறேன்.
2. உன் கடிதத்தால் நான் வெகுவாகப் பாதிக்கப் பட்டாலும் ’தவறுகள் குற்றங்கள் அல்ல’
என்ற நியதிப்படி நடந்தவற்றை எளிதாக எடுத்துக்கொள்ளக் கோருகிறேன்.
---அனு

அந்த நாள் மாலை.

கல்லூரி ’ஃபிலிம் ஷோ’ கூடப் போகாமல் ஹாஸ்டல் அறைக்கு விரைந்து வந்து தனிமையில் ஆவலுடன் அவன் அனுவின் கடித்தத்தைப் பிரித்தபோது---

அந்த ’நண்பர்களாக இருப்பதைவிட’
என்று எழுதி யிருந்த இடத்தில்
பற்றிக் கொண்ட விழிகளின் தீப்பொறி

அவனொன்றும் செய்ய முடியாமல் பார்த்திருக்க,
சுறுசுறு வென்று வரிகளில் அலைந்து,
நெளிந்து பரவிக் கடைசியாக
’டைனமைட்’ கட்டுகளைத் தொட்டுவிட,

கண்கள் குருடாகும் ஒளியில்,
காது செவிடாகும் ஒலியில்,
அவன்மிக ஆசையுடன் கட்டியிருந்த கோட்டைகள்,
அமைத்திருந்த பாலங்கள் தகர்ந்து விழுந்து
கீழே காட்டாற்று வெள்ளம் அடித்துப் போக,

மனம்மட்டும் இப்போதும் பிடிவா தமாக
எதையும் நம்பிட மறுத்து ஏதோவோர்
நம்பிக்கை இழையின் வலிமையில்
சிலந்திக் கூடுகள் பின்ன முயன்று,
ஜேன்*ஆஸ்டின் நாவல் ’எம்மா’வில் வருகிற
அந்த மிஸ்டர் நைட்லியை நினைத்து---

Whom are you going to dance with?" asked Mr. Knightley.

She hesitated a moment, and then replied, "With you, if you will ask me."

"Will you?" said he, offering his hand.

"Indeed I will. You have shown that you can dance, and you know we are not really so much brother and sister as to make it all improper."

"Brother and sister! No, indeed!"

(தொடரும்)

ரமணி
24-02-2013, 12:17 AM
*************************
மார்ச் 10. வெள்ளி
*************************
கல்லூரியில் மாணவியருக்கு வரும் கடிதங்களைப் படிப்பது---அதுவும் ’டே ஸ்காலர்’களைக் கூட நம்பாமல்---சே, இதென்ன காட்டுமிராண்டித் தனமான செயல்! சட்டத்துக்கு விரோதமானது என்றுகூட சொல்லலாம். எப்போதுதான் நம் மகளிர் கல்லூரிகளில் இதுபோன்ற பத்தாம்பசலித் தனமான வழக்கங்கள் ஒழியுமோ? பாரதியும் திரு.வி.க.வும், காந்தியடிகளும் முன்னின்று நடத்திய பெண் விடுதலைப் போராட்டம் வெறும் வாய்ப் பேச்சாகிவிட்டது வருந்தத் தக்கது.

என்று அவன் டயரியில் எழுதியிருந்ததைப் படிக்கும்போது, அப்போது அதைவிட வேறு ஒன்றும் துணிய முடியாமல் இருந்த அவன் இயலாமையைக் குறித்து இப்போதும் மனம் வருந்தினான்.

I do not expect any more letters from you!

அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மனம் ஒரு நிலைக்கு வந்து இலேசாகி உண்மையை எதிர்கொண்டு, தினமும் ஒருமுறையாவது அனுவை நினைத்து அவள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் படிப்பதையும், படித்து அந்த இனிய நினைவுகளில் சிலையாகித் தன்னை மறந்து மகிழ்வதையும் குறைத்துக்கொண்டு, இப்படியெல்லாம் செய்வது இனி சரியல்ல என்ற எண்ணம் வலுப்பெற, அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட முயற்சிக்க, இலக்கியப் படிப்பின் ஈடுபாடுகளில் அனுவின் நினைவுகள் தேய்ந்து, அந்த ’பன்டோரா பாக்ஸ்’ நிரந்தரமாக மூடப்பட்டுவிட, கனவுகள் மட்டும் அவ்வப்போது மனதில் ஆழப் பதிந்துவிட்ட ஆசைகளை வானவில்லிட்டுக் காட்டின.

அவன் கனவுகளில்...

அனு அவனைவிட உயரம் குறைந்து பளீரென்று தோன்றி தினமும் அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு மிதந்து பள்ளிக்கூடம் போய்ப் படித்து, பழமொழிகளைத் தவறில்லாமல் சொல்லிப் பாராட்டுகள் பெற்று, அவன் அப்பாவும் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு அவளுடன் சகஜமாக உரையாடி---

’அப்பா, இந்தத் தடவையும் அனுதான் ’ஃபர்ஸ்ட் ராங்க்’!’

’அவளுக்கென்னடா ரொம்பத் தங்கமான பொண்ணு, படிக்கறதுக்குக் கேக்கவா வேணும்?’

திடீரென்று ஒருநாள் அவர்களுக் கிடையில் திரை தொங்கப் பேசா மடந்தையாகி, அவளும் வசந்தியும் பேசிக்கொள்வதை அவன் மாடி ஜன்னம் வெழியே ஒட்டுக்கேட்டு---

’ராஜா ஏன் இப்பல்லாம் பேசவே மாட்டேங்கறான் வசந்தி?’

’அவன் ரொம்ப ’ஷை டைப்’ அனு. நீ மட்டும் அவனோட பேசறேயாக்கும்?’

’சீ, நான் எப்படி அவனோடு வலிய போய்ப் பேசறது? உங்காத்ல தப்பா நெனச்சுக்க மாட்டா?’

அப்புறம் ஒருநாள் அவள் கல்லூரி விடுமுறையில் அவன் வீட்டுக்கு வர, அவன் அவளை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் எதிர்கொண்டு வரவேற்று,

’அம்மாவும் வசந்தியும் கோவிலுக்குப் போயிருக்கா அனு. உக்காந்துக்கோ, இப்ப வந்துடுவா.’

’அப்பா?’

’அப்பா வாக்கிங் போயிருக்கா.’

’அப்ப நான்--’

’ஒரு நிமிஷம் அனு---’

என்ன என்பதுபோல் அவள் பார்க்க, அவன் மூச்சைப் பிடித்துக்கொண்டு தழதழத்த குரலில்,

’ஐ’ம் ஸாரி ஃபார் தட் லெட்டர், அனு. அது உனக்கு அவ்ளோதூரம் ’எம்பாரஸ்ஸிங்’கா ஆய்டும்னு நான் கனவுலகூட நினைக்கல. என்ன மடத்தனம் பண்ணிட்டேன் இல்லே? உன்னோட லெட்டரை என்னால ஜீரணிக்கவே முடியலை அனு. ’இன்ஃபாக்ட்’ உன்னை மறந்துட்டுகூட இருக்கமுடியும் என்னால, உனக்குத் தோழமையில இஷ்டமில்லைங்கற பட்சத்துல. அடே சமயம் உன்னைப்பத்தி யாராவது ஏதாவது சொன்னால் எனக்குப் பொறுக்காது. அந்த மாதிரி ஒரு சந்தர்பத்தை நானே என்னை அறியாமல் உண்டாக்கி உனக்கு அவப்பெயர் வரக் காரணமாய்ட்டேன்னு தெரிஞ்சபோது எனக்கு எம்மேலேயே வெறுப்பாய்டுத்து அனு.

’ஆனால் அது நான் தெரியாம செஞ்சிட்ட தப்புங்கறதைக்கூட ’எக்ஸ்ப்ளைன்’ பண்ணமுடியாமப் பண்ணிட்டையே அனு, அதுதான் எனக்கு வருத்தம். மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம, என்ன அவஸ்தை தெரியுமா? நல்லவேளை, இப்பவாவது உன்னைப் பார்க்கற சந்தர்ப்பம் கிடைச்சது. ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு அனு!’...

கடைசியாக அந்தக் கனவில் ஒருநாள் அவள் அவனுக்கு ஒரு ’இன்விடேஷன்’கூட அனுப்பாமல் கல்யாணம் செய்துகொள்ள, நாதஸ்வர ஓசையில் அவன் விழித்துக்கொண்டு கனவுதானே என்று கொஞ்சம் ஆறுதல் அடைந்தும், மனம் அந்த சாத்தியத்தை எடைபோட்டுப் பார்க்க, ’ஆல் இன் த கேம்’ என்ற சந்நியாச பாவத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஓய்ந்துபோனான்.

*** *** ***
(தொடரும்)

ரமணி
25-02-2013, 12:24 AM
பயணம்: நாவல்
ரமணி
10


அன்பெனும் பெருவெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 6

அனுவைப் பற்றி எழுதியிருந்த கடைசி வரிகளில் கண்கள் ஓடியபோது எழுந்த ஆழ்ந்த பெருமூச்சு திடீரென்று வெளியே ஏற்பட்ட ஆரவாரத்தில் அடங்கிப் போயிற்று.

தலையைத் திருப்பி வெளியே பார்த்தவன் கண்களில் பளிச்சிட்டு மறைந்தது திண்டிவனம் ரயில்நிலையம்.

அவனது சிந்தனைகளைக் கலைத்துக்கொண்டு அடுத்த ’கம்பார்ட்மென்ட்’இலிருந்து அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.

"எப்போ டாடி திருச்சி வரும்?"

"இன்னும் விழுப்புரமே தாண்டலையே கண்ணா. சாயங்காலம் ஏழு, ஏழறைக்கெல்லாம் நாம்ப திருச்சில இருக்கலாம்."

"இப்ப போச்சே அது என்ன ஸ்டேஷன்?"

"அது திண்டிவனம். அடுத்தது விழுப்புரம். அப்புறம், திருச்சி!"

மறுபடியும் அந்தத் திரைப்படம் Close Encounters of the Third Kind நினைவைப் பற்றிக்கொண்டது.

அடையாளம் கூறமுடியாத விண்வெளி வஸ்துக்கள் ஒரு நாள் இரவில் திடீரென்று விஜயம் செய்ய, அவற்றின் மின்காந்த ஈர்ப்பின் பாதிப்பில் அந்த வீட்டில் பாட்டரியில் இயங்கும் விளயாட்டுப் பொம்மைகள் தானே இயங்கத் தொடங்க, டி.வி. தானே ’ஆன்’ ஆகி ஒளிர்ந்திட, சமயலறையில் ’காஸ் ஸ்டவ்’ தானே எரிந்துகொண்டு முட்டைகள் தாமே பொரிந்துகொள்ள, இந்த நிகழ்ச்சிகளினால் பெரிதும் கவரப்பட்டுக் குதூகலிக்கும் அந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியில் வந்து சிரித்தபடியே தோட்டத்தில் அங்கும் இங்கும் ஓடிட, விழித்துக்கொண்ட அவன் தாயின் குரல் இனம் புரியாத பயமும் நடுக்கமும் கவலையும் கொண்டு, பையனைக் காணாது எதிரொலிக்க...

சின்ன வயது முதல் அவனுக்குப் பிடித்தமான ’சப்ஜெக்ட்’களில் ஒன்று ’அஸ்ட்ரானமி’. அதன் ஆரம்ப பாடங்களை அவன் தன் அப்பாவிடமிருந்துதான் தெரிந்துகொண்டான். ஒருநாள் இரவு அப்பாவுடன் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை வெறித்துக்கொண்டிருந்தபோது கேட்ட பாடம் இன்னமும் நினைவில் நின்றது.

"எவ்ளோ தூரம்ப்பா நாம்ப இந்த வானத்தில மேலே போக முடியும்? ஒரு நிலையில மோதிக்க மாட்டோம்?"

"நீ நினக்கறாப்பல இந்த வானம் ஒரு பெரிய ’பெட்ஷீட்’ மாதிரி பூமியை மூடிக்கொண்டு இருக்கலைடா ராஜா. வானங்கறது ஒரு அகண்ட பெருவெளி. வெறும் வெட்டவெளி. அதுக்கு திசைகள் கிடையாது. அந்தப் பெருவெளியில் தொங்கிண்டிருக்கற லட்சோப லட்சம் கோளங்கள்ல பூமியும் ஒண்ணு. பூமி தவிர, செவ்வாய், புதன், சுக்கிரன், வியாழன், சனின்னு பல கிரகங்கள் சூரியனைச் சுத்தி வரது. இந்த அமைப்புக்குப் பெயர் சூரியக் குடும்பம். இதுபோல பல குடும்பங்கள் வான வெளியில இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் இடையில பலகோடி மைல்கள் தூரமிருக்கு. அதோ தெரியறதே சந்திரன், அது இங்கிருந்து ரெண்டரை லட்சம் மைல் தூரத்தில இருக்கு. அது பக்கத்துல அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுண்டு அலையற குழந்தை மாதிரி அலையறது பாரு, ஒரு நட்சத்திரம், அது உண்மையில பலகோடி மைல் தள்ளி இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா நாளைக்கு நான் உனக்கு ஒரு புத்தகம் தரேன். உக்காந்து படிச்சுப்பார்."

அப்பாவின் புத்தகம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அதில் பார்த்த ராக்கெட் வகைகளும், சூரியக்குடும்ப கிரகங்களின் அழகிய, பெரிய புகைப் படங்களும் விவரங்களும் அவன் ஆவலைத் தூண்ட, விண்வெளி விஞ்ஞானம் பற்றி தமிழில் வந்திருந்த புத்தகங்களை அந்த கிராமத்தில் சின்ன நூலகத்தில் தேடிப்பிடித்து படிக்கத் தொடங்கினான்.

’பறக்கும் பாச்சா’, ’ஆர்வி’யின் ’காலக் கப்பல்’ போன்ற கதைகளில் ஆரம்பித்த ஆர்வம், கல்லூரி நாட்களில் ஒவ்வொரு மாலையும் நூலகத்தில் அமர்ந்து ஜாய்ஸின் ’தி எக்ஸ்பான்டிங் யுனிவர்ஸ்’, எச்.ஜி.வெல்ஸ் நாவல்கள் ’டைம் மெஷின்’, ’வார் ஆஃப் த வர்ல்ட்ஸ்’ போன்ற புத்தகங்களில் வளர்ந்து, அமெரிக்காவின் வெற்றிகரமான நிலாப் பயண முயற்சிகளில் மனம் மகிழ்ந்து---MAN WALKS ON THE MOON என்று எவ்வளவு பெரிய எழுத்துகளில் அந்த செய்தியை ’இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ வெளியிட்டது!---தானும் தும்பா ISRO-வில் சேர்ந்து விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு காண வைத்துக் கடைசியில் இலக்கிய ஈடுபாடுகளின் பலத்த போட்டியில் இப்போது ’சயன்ஸ் ஃபிக்*ஷன்’இல் வந்துநின்றது.

காற்றில் படபடத்த அப்பாவின் கடிதமும், டைரியின் தாள்களும் அவன் நினைவுகளை ஒருமைப்படுத்த, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் படிக்கத் தொடங்கினான்.


கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத விதத்தில் அவன் ஜெயந்தியை சந்தித்த நிகழ்ச்சியைக் கண்கள் படிக்க மனம் விரித்தது.

"ராஜா, ஒரு சின்ன காரியம் பண்ணேன்."

"என்னப்பா?"

"அந்தக் கோடியாத்துல புதுசாக் குடிவந்திருக்காரே ஒரு கணக்கு வாத்தியார், தெரியுமா?"

"தெரியாதுப்பா."

"பரவாயில்லை. நீ என்ன பண்றே, இந்த ’நோட்புக்’கை எடுத்துண்டு போய், கோடி வீட்டு வாத்தியார்---அதாண்டா பிள்ளையார் கோவிலுக்கு இடது பக்கம் ரெண்டாவது வீடு--கிருஷ்ணமூர்த்திட்ட கொடுத்திடு. அவர் ரெண்டு மூணு கணக்குகளைப் போட்டுத் தரச் சொன்னார். எல்லாத்தையும் இந்த நோட்டுல விவரமாக் குறிச்சிருக்கேன்னு சொல்லு அவர்ட்ட, என்ன?"

"சரிப்பா."

"சாப்டயோன்னோ?"

"ஆச்சுப்பா."

"சரி, பாத்துப் போய்ட்டு வா. லைட்கூட இல்லை. தெருவுல நாயெல்லாம் இருக்கும்."

"அவாத்துல ஒண்ணும் இருக்காதே?"

வாசல் அழிக்கதவைத் தட்டியதும் திண்ணை விளக்கைப் போட்டுக்கொண்டு ஓர் அழகான பெண் வந்து உள் மரக்கதவைத் திறந்தாள். பின் திண்ணையை அன்ன நடையில் கடந்துவந்து வாசல் அழிக்கதவின் பூட்டைத் திறந்தாள். பன்னிரண்டு வயசிருக்கும். வசந்தியைப் போலவே நல்ல நிறம். வட்ட முகம். அகன்ற கருவிழிகள். புறாவின் அலகுபோல் சிறிய, கொஞ்சம் கூர்மையான மூக்கின் வலதுபுறம் எடுப்பான சிவப்புக்கல் மூக்குத்தி. குட்டையான இரட்டைப் பின்னல்களில் ஒன்று முன்புறம் சரிய அதைப் பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டே அவனைப் பார்த்து விழித்தாள்.

அவனுக்கும் சில விநாடிகள் பேச வரவில்லை! கடைசியில் "அப்பா இல்லை?" என்றான்.

அனு மாதிரி அழகா, நிறமா இல்லாட்டாலும் இவளும் தன்வழியில் அழகுதான். என்ன ’ப்ரைட் ஐஸ்’!

மெல்லத் தலையசைத்து, "அப்பா, உங்களைப் பார்க்க யாரோ வந்துர்க்கா!" என்று கூவிக்கொண்டே உள்ளே சென்றாள்.

"யாரூ?" என்று வினவிக்கொண்டு வந்தவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். கொஞ்சம் பருத்த குட்டையான சரீரம். பனியனில் வழிந்த கைகளில் விபூதிப் பட்டைகள் அழிந்து காணப்பட்டன. கருகரு என்று வளர்ந்திருந்த முடிகளை இறுக்கிப் பிடித்தாற்போல் ஒரு கையில் ’ஸ்ட்ராப் வாட்ச்’. மற்றொன்றில் காசிக் கயிறு.

"மகாதேவய்யர் ஸன்னா? உள்ளே வாப்பா. எப்படிப் படிக்கறே?"

"நன்னாப் படிக்கறேன், சார்."

அவர் பின்னால் வாசல் கதவு நிலையைப் பிடித்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள்.

"பரீட்சைலாம் நன்னா எழுதியிருக்கயா?"

அந்தக் கண்கள்!

"ஓ எஸ்! நன்னா எழுதியிருக்கேன்."

கலகலப்பான தோற்றம். அதே சமயம் அமைதியும் அடக்கமும் இழைகின்றன!

"உட்கார்ந்துக்கோ. என்ன விஷயம் சொல்லு."

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, இவன் வசதியாகத் திண்ணையில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டே அவர் அறியாமல் கண்களை அவரைத் தாண்டி ஓடவிட்டான்.

"அப்பா அனுப்ச்சா. நீங்க கேட்டிருந்த கணக்கெல்லாம் இந்த நோட்டுல விவரமா போட்டுக்காராம். கொடுத்திடச் சொன்னா."

"அப்படியா? ரொம்ப ’தாங்க்ஸ்’னு சொல்லு. இந்தா, இந்தப் புஸ்தகத்தை அவரண்ட கொடுத்துவிடு."

புத்தகத்தை எடுக்க அவர் உள்ளே சென்றதும் மெல்லச் சிரிக்க முயன்று தோற்றான்.

நல்ல வேளை, என்னைவிட உயரம் கம்மி! வயசு நிச்சயம் மூணு வருஷமாவது சின்னவளாய் இருப்பாள்னு நினைக்கிறேன். டெய்லி இந்தப் பக்கமாப் போறேன், ஒரு தடவைகூட இவளைப் பார்க்கலயே?

வார்த்தைகள் எழும்பாமல் ’ஒம் பேரென்ன?’ என்று ஓரிரு முறை வாயசைத்த போது அவர் வந்துவிட்டார். ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. அல்லது காட்டிக்கொள்ளவில்லை. நல்லவர்!

"இந்த ரெண்டு புஸ்தகமும் அப்பாட்ட குடுத்திடு. ரொம்பத் ’தாங்க்ஸ்’னு சொல்லு."

"போய்ட்றேன் சார்!"

போய்ட்றேன் பெண்ணே, இல்ல கண்ணே!

(தொடரும்)

ரமணி
26-02-2013, 12:39 AM
அனு ’கான்வென்ட்’ படிப்புக்காக மதுரை போய்விட்டதைத் தொடர்ந்து மூன்று வருடங்களை வெறுமையாகவும், அசுவாரஸ்யத்துடனும் ஓட்டியவன் வாழ்க்கையில் இந்தப் புதியவள் குறுக்கிட, மீண்டும் வசந்தம் துளிர்த்தது.

"Summer is coming, summer is coming,
I know it, I know it, I know it.
Light again, leaf again, life again, love again,"
Yes, my wild little poet.
---Alfred Tennyson

வசந்தம் வருகிறது வசந்தம் வருகிறது!
தெரியும், தெரியும், தெரியும்.
மீண்டும் உயிர்கள், மீண்டும் துளிர்கள்,
மீண்டும் குயில்கள், மீண்டும் காதல்!
ஆம்*என் பொல்லாத சின்னக் கவிஞனே!

என்றது டயரி.

கொஞ்ச நாளிலேயே அவள் பெயர் ஜெயந்தி என்று தெரிந்துகொண்டான். சாமர்த்தியமாகக் கேட்டபோது வசந்தி சொன்னாள். பெயரைச் சொன்னாலும் அவள் படிக்கும் வகுப்பைச் சொல்லவில்லை.

ஒருநாள் எதிர்பாராமல் கனவுகண்டு ஜெயந்தியுடன் பேசி அவள் எட்டாம் வகுப்பில் படிப்பதை அறிந்துகொண்டான்!

நேரில் பேசத்தான் முடியவில்லை. அல்லது துணியவுல்லை. அவள் தன் எதிர்வீட்டுப் பையனுடன் சமயத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசக்கண்டு பொறாமைப்பட்டும் வார்த்தைகள் வெளிவரவில்லை. என்ன பேசுவது என்று புரியவில்லை.

அவள்தான் எவ்வளவு ’ஸோஷல்’ஆக இருக்கிறாள்!

தினமும் தவறாமல் பிள்ளையார் கோவிலுக்குப் போகும்போது ஒருநாள் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டவன் அவள் தன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் கோவிலின் வலது திண்ணையில் பெரிய வாசல் கதவின் பின் மறைவாக உட்கார்ந்துகொண்டு அவளைக் கவனிக்கத் தொடங்கினான்.

அந்த இடம் ஒரு ’வான்டேஜ் பாயின்ட்’ஆக அமைந்து, தினமும் தீபாராதனைக்குச் சற்று முன்னரே வந்து அமர்ந்து அவளைக் கவனிப்பது அவனுக்கு வழக்கமாகியது.

அடிக்கடி முன்புறம் சரியும் தன் இரட்டைப் பின்னல்களைத் தலையை வெட்டியவண்ணம் நளினமாக அவள் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாண்டி விளையாடுவதையும், ரிங் டென்னிஸ் விளையாடுவதையும், அல்லது வெறுமனே உட்கார்ந்திருப்பதையும், தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதையும் (அம்மா ஏன் இந்த மாமியுடன் பழகவில்லை என்று நினைத்தது உண்டு) அவனது கண்கள் அளவெடுத்துக் கொண்டிருக்க, ஆறு மணி யானதும் கோவில் மணி கணீரென்று ஒலிக்க, அவள் கையில் நெய்க்கிண்ணத்துடன் கோவிலை நோக்கி வரும்போது அவன் அப்போதுதான் வந்தவன் போல் உள்ளே நுழைந்து, அவள் பின்னால் வர, வெளிப் பிரகாரத்தை வலம்வரத் தொடங்குவான்.

பின்னர் தீபாராதனை ஆரம்பிக்கும்போது அவள் பெண்கள் வரிசையில் நின்று வழிபட இவன் எதிர் வரிசையில் நின்று அவளுக்கும் சேர்த்து வணங்கிக்கொண்டு, கற்பூரம் காட்டும்போது அவள் விரல்களை விறைப்பாக வைத்துக்கொண்டு தன் உள்ளங்கைகளால் கன்னத்தில் போட்டுக்கொள்வதைப் பார்த்து மனதுக்குள் சிரித்தபடியே தானும் அதுமாதிரி செய்வான்.

கோவில் மணிகள் ஓய்ந்ததும் அவள் வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட இவன் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டுத் திரும்பும்போது அவள் அம்மாவின் குரல் கேட்கும்.

"வாசு, ஜெயா என்ன பண்றா, படிக்கறாளா பாரு?"

ஜெயந்தியுடன் பேசவேண்டும் என்கிற ஆவல் எதிர்பாராமல் ஒருநாள் உள்ளூர் நூலகத்தில் நிறைவேறியது.

அவன் அந்தச் சின்ன நூலகத்துக்கு ’ரெகுலர் விசிட்டர்’. மற்ற பையன்கள் கதைப் புத்தகங்களை நாடும்போது இவன் கதைகள் தவிர, என்.கோமதியின் தமிழ்நாடு அரசு விருது பெற்ற ’அணுவும் நாமும்’, கலைக்கதிர் பத்திரிகை வெளியீட்ட ’நாமும் விஞ்ஞானிகளாவோம்’ போன்ற புத்தகங்களையும் விரும்பிப் படிப்பது வழக்கம்.

அன்று அவன் அபிமான கதாசிரியர் தமிழ்வாணனின் ’துப்பாக்கி முனை’யைப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவள் உள்ளே நுழைந்தாள்.

கொஞ்ச நேரம் ’ஷெல்ஃப்’இல் தேடிவிட்டு நூலகரிடம் "தமிழ்வாணன் புக் ஏதாவது இருக்கா?" என்றாள்.

இவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். இவனும் நண்பர்களும் விரும்பிப் படிக்கும் தமிழ்வாணன் நாவல்களை மற்றவர் கண்ணில் படக்கூடாதென மற்ற ’சப்ஜக்ட்’ புத்தகங்களிடையே ஒளித்து வைப்பது வழக்கம்!

"ஷெல்ஃப்ல பாரும்மா."

"ஷெல்ஃப்ல இல்லையே!"

"பின்ன வெளில போயிருக்கும்."

இவன் எழுந்து அவளுக்குக்காகத் தேடுவதுபோல் தேடி அவள் போய்விடப் போகிறாளே என்ற கவலையில் கொஞ்ச நேரம் மலைத்து, கிடைத்த ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்து வந்து நூலகரில் வலப்புறம் குடைந்து கொண்டிருந்தவளிடம் நீட்டியபடி மெல்லிய குரலில் (அது நூலகம் என்பதால் ’விஸ்பரில்’ பேசினானா அல்லது உண்மையில் குரல் எழுமபில்லையா தெரியவில்லை),

"ஜெயந்தி, தமிழ்வாணன் புக்ஸ்."

பார்த்தாள். ’கடலில் தெரிந்த கை’, ’ஆந்தை விழிகள்’.

"இதெல்லாம் நான் படிச்சாச்சு."

"அப்ப இந்த ’நீலப் பெட்டி’ படி. நல்லா இருக்கும்."

"வேண்டாம்."

"உனக்குப் படிக்கிறதுன்னா இனிமே தமிழ்வாணன் புதுசா எழுதினாத்தான் உண்டு போலிருக்கு."

சிரித்துக்கொண்டாள். சுற்றிலும் பார்த்தவள் கண்கள் ஒரு பையன் கையில் இருந்த புத்தகத்தில் நிலைக்க, நூலகரிடம் அதைக் கேட்டாள். ’சி.ஐ.டி. 009’!

அவள் கேட்டதும் அந்தப் பையன் மறுக்கத் தோன்றாமல் உடனே புத்தகத்தைக் கொடுத்துவிட்டான். பொறாமையாக இருந்தது. அவனாக இருந்திருந்தால் புத்தகம் படிக்க அவளையும் துணைக்கு அழைத்திருப்பான்.

நூலகத்தில் உண்டான அறிமுகத்தில் திருப்தி அடையாமல், அல்லது அதை வளர்த்துக்கொள்ள நினைத்து, பல நாட்கள் கோவிலில் முயன்றும் அவளைத் தனியே சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. ஒன்று வெளிப்பிரகாரம் கூட்டமாக இருக்கும் அல்லது அன்றைக்குப் பார்த்து அவள் வரமாட்டாள். அல்லது வந்து இவனைக் கடந்து வேகமாகச் சென்றுவிடுவாள். ஒருநாள் இவன் நவக்கிரகங்களைச் சுற்றும்போது அவள் கோயில் திண்ணையில் அமர்ந்ததைப் பார்த்துக் கையசைத்து காத்திருக்குமாறு ஜாடை காட்டியும் பலனில்லாது போயிற்று.

*** *** ***
(தொடரும்)

ரமணி
27-02-2013, 12:08 AM
பயணம்: நாவல்
ரமணி
11


என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக்கொண்டு
நின்கண்ணால் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவுகொண்டு
---மஹாகவி பாரதியார்

மற்றொரு நாள் தீபாராதனையின்போது அவளை நேர் எதிரில் தரிசிக்க முடிந்தது.

தாழ்ந்து தரைநோக்கும் கரிய விழிகளும்
கோவில் விளக்கில் மின்னும் மூக்குத்தியும்
ஓசையின்றி முணுமுணுக்கும் இதழ்களும்
எப்போதும் முன்னால் வந்துவிழும்
அந்தப் பொல்லாத பின்னலும்
விரல்களைப் பின்னிக்கொண்டு அவள்தான்
தழைந்து நின்ற தோற்றமும்
அந்தச்சில நிமிடங்களில்
அவன்மனதில் படம்பிடிக்கப் பட்டு
இப்போது நினைத்தாலும் கண்முன் தோன்றும்.

கற்பூர ஆராதனை முடிந்ததும் அர்ச்சகர் கற்பூரத் தட்டை வரிசையாக எல்லோருக்கும் நீட்ட அந்தக் கற்பூர ஜோதியைக் கண்ணில் ஒற்றிக்கொண்ட பின் அவர் தரும் விபூதி-குங்குமப் பிரசாதம் பெற்றுக்கொள்ள அவள் தன் கையை நீட்டியபோது அந்த அண்மையில் அவளது நீண்ட, அழகிய பொன்னிற விரல்களைப் பார்த்துப் பூரித்தான்.

ஒருநாள் அவளைத் தனியே வெளிப் பிரகாரத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழக்கம்போல் ஆறுமணியளவில் அவன் திண்ணையில் அமர்ந்து பார்த்திருக்க, அவள் கையில் நெய்க்கிண்ணத்துடன் ஒரு தெய்வலோகப் பெண்போல் நடந்து வந்தபோது---

She walked in beauty என்று டயரி பைரனின் கவிதையை எதிரொலித்தது.

இந்தத் தடவை எப்படியும் பேசிவிடவேண்டும் என்று நினைத்து இவன் கொஞ்சம் முன்னால் நடந்து பிரகாரத்தில் நுழைந்து, முதல்வரும் மூலவருமான விநாயகப் பெருமான் முன்நின்று வழிபடத் தொடங்க, அவள் கொஞ்சம் தயங்கிப் பின்னால் நின்றாள்.

மனம் பிரார்த்தனையில் ஒன்றவில்லை. பேசுவதற்கு இந்த இடம் சரியில்லை. யாராவது பார்த்து வத்திவைத்துவிடக் கூடும். என்ன பேசுவது?

விநாயகரை மும்முறை வலம்வந்து வலப்புறம் திரும்ப, தக்ஷிணாமூர்த்தி.

’குருப்ரம்மா, குருவிஷ்ணு, குருதேவ மஹேஸ்வர...’ என்று மனம் ’ரெடிமேட்’ வார்த்தைகளை முணுமுணுக்க, கண்கள் அவள் விநாயகரை வழிபடுவதைப் பார்த்திருக்க...

ம்ஹூம். இப்போதும் முடியாது. ஒருவேளை வேண்டுமென்றே தாமதிக்கிறாளோ?

அடுத்தது, கொஞ்சம் நடக்கவேண்டும். நடந்து வலப்புறம் திரும்பப் பெரிய முருகன் சந்நிதி. சந்நிதியின் சின்ன வாசல் வழியே வந்தால் தனியாக அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரைப் பார்க்கலாம்.

என்ன பேசுவது?

பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அவனை சற்று விரைவாகக் கடந்து முருகன் சந்நிதியை நோக்கி நடக்க, இவன் முதலில் முருகன் அடுத்து சண்டிகேஸ்வரர் என்ற தன் வழக்கத்தை விட்டு முதலில் சண்டிகேஸ்வரரை அவசரம் அவசரமாகக் கும்பிட்டுக் கைவிரல் சொடுக்கி நூலிழை போட்டுவிட்டு அந்தச் சின்ன வாசல் வழியே முருகன் சந்நிதிக்குள் அப்பிரதட்சிணமாக நுழந்தபோது அசரீரியாக அவள் குரல் கேட்டது.

என்ன பேசுவது?

என்ன ஸ்லோகங்கள் முணுமுணுத்தாள் என்பது காதில் விழவில்லை. ஆனால் அவள் குரலில் கொஞ்சம் கட்டை சுருதி ஒலித்ததாகத் தோன்றியது.

அனு மாதிரி ’மெல்லிஃப்ளூவஸ்’ குரல் இல்லைதான். இருந்தாலும் இந்தக் குரலும் இனிமையாகவே ஒலிக்கிறது.

சந்நிதியில் முருகக் கடவுள் மூன்றுவித தோற்றங்களில் எழுந்தருளி யிருந்தார். சந்நிதியின் வலது பக்கம் பாலமுருகன், நடுவில் கல்யாண முருகன், இடது பக்கம் தண்டாயுதபாணி.

இவன் பாலமுருகனிடம் நின்றிருந்தபோது அவள் தண்டாயுதபாணியிடம் வேண்டிக்கொண்டு நின்றாள். அடுத்து எப்படியும் இருவரும் கல்யாண முருகனிடம் வந்தாக வேண்டும்.

அந்தக் கணமும் வந்தது. இருவரும் எதிரும் புதிருமாக நின்றிருக்க, இவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் கண்கள் முருகனை நோக்கியிருக்க, இதழ்கள் தாழ்ந்த குரலில் முணுமுணுக்க---

என்ன பேசுவது?
உன்பெயர் ஜெயந்திதானே?
சே! அதான் அன்னைக்கு லைப்ரரில பேர் சொல்லித்தானே கூப்பிட்டேன்?

எய்த் ஸ்டான்டர்ட்தானே படிக்கறே?
நோ. இட்’ஸ் வெரி ஸிம்பிள்.

உனக்கு வசந்தியைத் தெரியுமில்ல?
இதென்ன கேள்வி? இருவரும் ஒரே ஸ்கூல். வசந்தி இவளுக்கு சீனியர். இருவரையும் அடிக்கடி சேர்ந்து பார்த்திருக்கிறான். வீட்டுக்குக்கூட ஜெயந்தி ஒன்றிரண்டு முறை வந்திருக்கிறாள்.

ஜெயந்தி, உங்கப்பா எந்த ஸ்கூல்ல வேலை பார்க்கிறார்?
அவள் அப்பாவைப்பத்தி என்ன இப்ப?

ஜெயந்தி, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? அன்னைக்கு முதமுதல்ல உங்காத்துக்கு வந்திருந்தப்ப கண்கொட்டாம பார்த்துண்டிருந்தயே?
திஸ் வில் பி ஷியர் இன்ஸலன்ஸ்.

வேற என்னதான் கேக்கறது? யெஸ், தட்’ஸ் இட்!
"ஜெயந்தி, இந்த முருகன் சிலைகள்லாம் ரொம்ப அழகா இருக்கில்ல? உனக்குப் பிடிச்ச முருகன் எது சொல்லேன்? மொத்தத்தில் இந்தக் கோவிலே அழகா இருக்கு இல்ல?"

கொஞ்ச நேரம் காத்திருந்தும் பதில் வரவில்லை. கேட்டது காதில் விழவில்லையோ?
அப்புறம்தான் தெரிந்தது அவன் ஒன்றுமே கேட்கவில்லை என்று!

"ஜெயந்தி, இந்த முருகன்---"

திடீரென்று ஒலித்த கோவில் மணியின் ஓங்காரத்தில் அவன் வார்த்தைகள் அமிழ்ந்து கலந்துவிட, அவள் அவசரம் அவசரமாக நெய்க்கிண்ணத்தை எடுத்துக்கொண்டு மீதியிருந்த தெய்வங்களையும் அறக்கப்பறக்க வலம் வந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குள் சென்றுவிட்டாள்.

(தொடரும்)

ரமணி
28-02-2013, 12:29 AM
மற்றொரு நாள் காலை ஆறுமணிக்கு ஜெயந்தியின் குரல் அவன் வீட்டு வாசலில் ஒலிக்கத் தூக்கம் கலைந்து எழுந்தவனுக்குத் தன் கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை.

"வசந்திக்கா!...வசந்திக்கா!"

அவன் புன்னகைக்க முயன்று கதவைத் திறந்தபோது ’ஆஃபீஸ் ரூம்’இலிருந்து அப்பாவின் குரல் வந்தது.

"இந்தாம்மா, ஏன் காலங்கார்த்தால கத்தற? வசந்தி மாடில இருக்கா, போய்ப்பார்."

அப்பாவுக்குக் கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாது. ரெண்டு தடவை கூப்பிட்டா கத்தறதா ஆயிடுமா?

’சாரி ஜெயந்தி. அப்பாவோட சுபாவம் அப்படி. அவரைத் தப்பா நெனைச்சுக்காதே’ என்று மனதுக்குள்தான் கூற முடிந்தது.

"ஜெயந்தியா? வா. நான்தான் பெரியப்பா அவளை வரச் சொல்லியிருந்தேன்."

அடுத்த சில நாட்கள் இந்த நிகழ்ச்சியை அவன் மனம் சிலவித சாத்தியங்களில் ’ஃபான்டஸி’களாக்கிப் பார்க்க, ஒருமுறை அவன் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவளும் வசந்தியும் பேசிக்கொண்டிருக்க, குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டும் தூங்குவதுபோல் பாவனை செய்தபடி அவள் அழகை ரசித்தான்.

மற்றொரு முறை அவள் மாடியில் வசந்திக்காகக் காத்திருக்க, அவன் கையில் ’தினமணி’யுடன் தற்செயலாக உள்ளே நுழைந்து மலைத்து அவளைக் கன்னம் சிவக்கச் செய்தான்.

வேறொரு முறை சிறிது நேரம் மாடியில் அவளுடன் தனியே விடப்பட்டபோது அவன் தன் புத்தக அலமாரியிலிருந்து தமிழ்வாணனின் புதிய நாவல் ஒன்றை எடுத்துவந்து அவளிடம் கொடுத்து முகம் மலரச் செய்து அந்தச் சாக்கில் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசத் தலைப்பட, படியில் அப்பாவின் காலடிகள் கேட்டன.

அவனும் ஜெயந்தியும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் குறுக்கிட நேர்ந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் வாஞ்சையுடன் நினைத்துப் பார்த்தபோது...

ஒருநாள் மாலை பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அவன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போனபோது அப்போதுதான் ’கேம்ஸ்’ முடிந்து ’ஸ்போர்ட்ஸ்’ உடையில் வெண்ணிற ’ஸாக்ஸ்’களை மீறிக்கொண்டு பொன்னிறக் கால்கள் தெரிய அவள் வரிசையில் சென்றதும்

மற்றொரு நாள் பள்ளி முடிந்து வெள்ளை ’மினி ஸ்கர்ட் யூனிஃபார்ம்’இல் அவள் தேவதை போல் தெருவில் நடந்துவந்த அழகும்

இரண்டொரு தடவை அவளைக் கடைகளில் பார்த்து ’நாம்மாத்துல எந்தப் பொண்ணு கடைக்குப் போவா? எல்லா வெளி வேலையும் பசங்கதான் செய்யணும்’ என்று வியந்ததும்

ஞாயிற்றுக் கிழமைகளில் அவள் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ’டிராயிங், நிட்டிங், பேப்பர் கட்டிங், எம்ப்ராய்டரி’ போன்ற கலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதும்---இதுபோன்ற கலைகளில் அவன் வசந்தியின் திறமையை அடிக்கடி வியந்ததுண்டு---

அப்போதெல்லாம் இவன் அவ்வழிச் செல்லும்போது அவள் கண்கள் ஓரிரு முறை இவன் மீது விழும். எப்போதும் சிரித்துக்கொண்டு இருப்பதைப்போல என்ன கண்கள்! இவள் ஒருமுறை கூட அழுதிருக்க மாட்டாள் என்று தோன்றியது.

தீபாவளி சமயத்தில் அவள் தவறாமல் கோலாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வலம்வரும் காட்சிகளும்

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் அவனும் அப்பாவும் கோவிலுக்குப் போகும்போது அவள் அன்றலர்ந்த மலராகக் குளித்துவிட்டுத் தலையில் காசித் துண்டு மலர்ந்திருக்க, குனிந்து பெரிய பெரிய கோலங்கள் போடும் பாங்கும்

கோலம் போடுவதில் வசந்தி ஒரு நிபுணி. முன்பெல்லாம் அவளுக்கும் அனுவுக்கும் பலத்த போட்டி, மார்கழிக் கோலங்கள் போடுவதில். இருவரும் சளைக்காமல் நடுக்கும் குளிரில் எழுந்து அதிகாலையிலேயே குளித்துவிட்டுத் தத்தம் தெரு வாசல்களில் மலையளவு கோலங்கள் போடும்போது, அவை கலையழகுடன், ஆறாம் வகுப்புப் பெண்கள் போட்ட கோலங்களா என்று மலைக்க வைக்கும்.

சில நாட்கள் அவள் அப்பாவும் கோவிலுக்கு தீபாராதனையின் போது வந்துவிட, அவன் அவள் கவனத்தைக் கவருவதற்காக அவர் அருகில் போய் நின்றுகொண்டு பேச்சுக் கொடுத்து அவள் அவனைக் கவனிப்பதில் அடைந்த திருப்தியும்

அவன் பள்ளிப் படிப்பை முடித்து ’எஸ்.எஸ்.எல்.ஸி.’ தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேறியதும் அந்த மகிழ்ச்சியைப் பங்குகொள்ள நினைத்து அவளைக் கோவில் பிரகாரத்தில் மடக்கி சாக்லேட் கொடுத்ததும், அதை வாங்கிக்கொண்டு ’தாங்க்ஸ்’ என்று ஒற்றைச் சொல்லில் அவள் ஓடி மறைந்ததும், அவர்கள் வீட்டில் ஏதேனும் நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற பயம் தலைதூக்க அவள் தம்பி வாசுவைத் தேடிப் பிடித்து அவனுக்கும் சாக்லேட் வழங்கியதும்

ஊரில் வேறொரு கோவில் சமாராதனை விருந்தில் அவளும் அவள் அம்மாவும் அமர்ந்திருந்த வரிசையில் வெற்று மார்பில் சுற்றிக் கட்டிய மேல்துண்டுடன் அவன் அடிக்கடி அலைந்து பனை விசிறியால் வீசியும், தீர்த்தம் வழங்கியும், பாயசம் பரிமறியும் கவனித்துக் கொண்டபோது, அவள் அம்மா அவனைப் பார்த்து (அர்த்தத்துடன்?!) புன்னகை செய்ததும்

மனதில் துல்லியமாக ஒலி-ஒளி-வண்ணங்களில் தோன்றி மறைந்தன.

*** *** ***

ரமணி
01-03-2013, 12:37 AM
பயணம்: நாவல்
ரமணி
12


பெண்மைக் குணமுடையான்;--சில நேரத்தில்
பித்தர் குணமுடையான்;--மிகத்
தண்மைக் குணமுடையான்; சில நேரம்
தழலின் குணமுடையான்.
---மஹாகவி பாரதியார், கண்ணன் என் தோழன் 8

மாலை வேளைகளில் காலாற நடப்பதைப் போன்ற இனிமையான அனுபவம் இல்லை என்று சொல்லிவிடலாம். கல்லூரி நாட்களில் ஸ்திரப்பட்ட இந்த வழக்கம் இன்றும் அவனை விடவில்லை.

நடப்பது என்றாள் மற்ற இளைஞர்களைப் போல் கூட்ட முடிச்சுகளாக ஆரவாரத்துடன் பேசிக்கொண்டும் அங்க சேஷ்டைகள் செய்துகொன்டும் சிரித்துக்கொண்டும் ’கண்ணோக்கி’க்கொண்டும் கமென்ட் அடித்துக்கொண்டும் கடைத் தெருக்களையும் தெப்பக்குளத்தின் நான்கு சுவரொட்டிய வீதிகளையும் மட்டுமே சுற்றிச் சுற்றி வருவது அவனுக்குப் பிடிக்காது.

"ஒனெக்கெல்லாம் எங்க ஃபார்முலா தெரியப் போறது? படிச்சாத் தானே? அப்பா கத்தைகத்தையா அனுப்பற பணம் பாக்கெட்ல. கேக்கவா வேணும்? டைட்-பேண்ட் போட்டுண்டு கிர்கிர்னு ஊர் சுத்தறாது; ’கண்கண்ட தெய்வம்’ சினிமா பாக்கறது! நீயெல்லாம் ஏய்யா படிக்க வறே? ஃபார்முலா தெரியலேன்னா கோர்ஸை விட்டுடு. பொட்டிக்கடை வெச்சுண்டு உக்காந்துக்கோ."

கணித விரிவுரையாளரின் காரசாரமான் பேச்சும் அதைச் சட்டை செய்யாது எருமை மாடாக எதிரில் நிற்கும் மாணவனும் நினைவில் வந்து போயினர்.

கல்லூரி விட்டதும் ஹாஸ்டலுக்கு விரைந்துவந்து ’மெஸ்’ஸில் போட்ட டிஃபனை சாப்பிட்டுவிட்டு ’டேபிள் டென்னிஸ்’ விளையாட்டில் இடம்பிடித்து ஒரு ’பெஸ்ட் ஆஃப் ஃப்வைஸ்’ ஆடிவிட்டு அஞ்சரை மணிக்குக் கிளம்பிவிடுவான்.

நண்பர்களிடமிருந்து மெல்ல நழுவித் தனியே நடந்து ஒலி மலிந்த சாலைகளையும் தெருக்களையும் கடந்து திருச்சி நகரின் கடற்கரையான காவேரிப் பாலத்தை அடையவும் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கவும் சரியாக இருக்கும்.

காவேரிப் பாலத்தில் நின்றுகொண்டு சூரியன் மறைவதைப் பார்ப்பது---சூரியன் உதிப்பதைத்தான் பார்க்க முடிவது இல்லை---ஓர் இனிய அனுபவம்.

தினமும் பார்க்கும் காட்சிதானே என்று அலுப்புத் தட்டாமல் எத்தனை விதத் தோற்றங்கள்! இன்று இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடியாது. கணித்தால் ஒன்று ஏமாற்றம்தான் மிஞ்சும். அல்லது கண்களையே நம்பமுடியாது.

கண்களை இதமாக வருடிக் கொடுத்துக்
கண்களில் வழிந்து ஒளிக்கற்றை பிரதிபலிக்க

நீலக் கடல்வானில் நித்திலப் பாறைகள்போல்
மிதக்கும் முகில்மகளிர் பொன்முலாம் பூசிக்கொண்டு
உடலெலாம் கதிர்பட்டுக் கதிரொளியில் குளித்திருக்க

உடல்நிறம் மாறியும் உவகை அடையாமல்
விட்டில் பூச்சிகளாக மேகங்கள் சேர்ந்து
கதிரவனை நோக்கிப் படையெடுக்க

தொல்லை தாங்காத தினகரன் காவிரியில் மறைந்து
எட்டுத் திக்கிலும் மன்மத பாணங்களை எறிய

நாணிச் சிவந்த மேக மங்கையர்
காவிரி அலைகளில் கண்ணாடி பார்க்கும்
அழகை வருணிக்கப் போதுமோ வார்த்தைகள்?

இதே காட்சி மறுநாள் பார்த்தால் ஒரே போர்க்களமாகி நிறங்களும் ஊளையிடும் காற்றின் ஒலிகளும் கலிங்கத்துப் பரணியை நினைவூட்டும்.

சில நாட்களில் கரைகளின் ஓரத்தில் நூலாடும் காவிரியின் பாதரச நீரோட்டத்தில் உடைந்த சில்லுகளின் பிரதிபலிப்பில் ஒரு ’மிஸ்டரி’ இருக்கும்.

வேறு சில நாட்களில் கதிரவன் தொடுவானில் இறங்கும் முன்னரே மேகங்கள் பின் மறைய சுவாரஸ்யமே போய்விடும்.

இப்படிக் காவிரிப் பாலத்தில் மெய்ம்மறந்து இருந்தபோதுதான் ஒருநாள் பாஸ்கரைச் சந்தித்தான்.

பாஸ்கர்!

சிலரைப் பார்த்த உடனேயே நண்பர்களாக்கிக் கொள்ள ஏக்கம் பிறக்கும். இப்படித்தான் அவன் கல்லூரியில் நுழைந்தவுடன் பாஸ்கரின் தோற்றத்தாலும் அறிவாலும் கவரப்பட்டு அவனுடன் பழகவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்க, கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் ஒருநாள் பாஸ்கரே இவனுடன் வலியவந்து பேசி, அறிமுகம் செய்துகொண்டு, விரைவிலேயே அவர்கள் நெருங்கிய நண்பர்களாகி, அந்த நட்பு அவன் வீடுவரை பரவி, பொதுவாக அவன் நண்பர்களைப் பற்றி அதிகம் அக்கறை காட்டாத அவன் அப்பாகூடத் தன் கடிதங்களில் பாஸ்கரைப் பற்றி விசாரிக்கும் அளவு வளர்ந்துவிட்டது.

பாஸ்கரை இப்போது நினைக்கும்போது அந்த ’பாஸ்கர்’ என்ற உருவத்துக்குள் அடங்கியிருக்கும் எந்த பாஸ்கரை நினைப்பது என்று இனிமையான குழப்பம்.

எத்தனை பாஸ்கர்கள்!

அவன் தோற்றமே ஒரு கவர்ச்சிதான். ’ஸ்மார்ட் அன்ட் ஸ்போர்டிவ்’. துருதுரு என்று அலையும் கண்கள். அகன்ற நெற்றி. எப்போதும் ’பளிச்’, அப்போதுதான் குளித்துவிட்டு வந்த மாதிரி. கேசம் கலையாமல், உடை சுருங்காமல், கைகளில் ’இங்க்’ கறை தவறிக்கூடப் படியாமல், செருப்பில்கூடப் புழுதியின் சுவடு தெரியாமல் எப்படி அவனால் இருக்க முடிகிறது? போதாக் குறைக்கு மார்வாரிச் சிவப்பு வேறு.

அந்தச் சரளமான, இனிமையான பேச்சு எப்படிப்பட்ட ’மில்டன்’ஐயும் அல்லது அப்பாவையும் கவர்ந்துவிடும்.

கொஞ்சம்கூட நிதானிக்காமல் எப்படி அவனால் எல்லோருடனும் கலகலவென்று பேசி, சிரித்துப் பழகமுடிகிறது? அவனுக்கு நிறைய ’கேர்ல் ஃப்ரண்ட்ஸ்’ இருக்கவேண்டும், சொல்ல மாட்டேங்கறான் பயல்! பட்டுக் கத்தரித்தாற்போல் என்ன பேச்சு அது! எதிரில் இருப்பவரை அப்படியே ஆட்கொண்டு, மெல்ல வருடிக்கொடுத்து, உற்சாகப்படுத்தி, விரல்பிடித்து வழிகாட்டி, கொஞ்சமும் விமரிசனம் செய்யாமல், கோள் சொல்லாமல், முதுகுப்பக்கம் பேசாமல், டேல் கார்னகியின் How to Win Friends and Influence People புத்தகத்தை ஏதோ இவன்தான் எழுதியது மாதிரி...

கலகலவென்று பேசினாலும் அவன் பேச்சு காலியாக இருக்காது. யாப்பிலக்கணத்தில் இருந்து சமீபத்திய ’ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவான். சமய சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நளினமாகத் தலைப்புகளை மாற்றி, ஜேன் ஆஸ்டின் நாவல்களில் வருவதுபோல் பேசுவதே ஒரு கலையாகக் கடைப்பிடிப்பவன். அவன் எதைப்பற்றிப் பேசினாலும் அதில் ஒரு தெளிவான சிந்தனையும், ஆழமும், மாத்யூ ஆர்னால்ட் கூறும் அந்த high seriousness-உம் இருக்கும்.

பாஸ்கர் ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன். நம்பத் தகுந்த பேட்ஸ்மன். ஆனாலும் இன்னும் ’க்ளப் லெவல்’இலேயே இருப்பவன். ஏன் அதற்குமேல் முயலவில்லை என்றால், "நான் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். ஆனால் என்னால் இதைத் திருமணம் செய்துகொள்ள முடியாது" என்பான்.

பாஸ்கர் கலைகளை ரசிப்பவன். இசை, ஓவியம், புகைப்படம் போன்ற கலைகளில் அவனுக்கு அதீத ஈடுபாடு உண்டு. டானா சம்மர்ஸ் முதல் மதுரை மணி வரை ரசித்துக் கேட்பான். ஹிந்தித் திரை இசையில் லதாவும் தலத் மெஹ்மூத்தும் அவனுக்குப் பிடித்த பாடகர்கள். அதுபோல ஓவியம் என்றால் ரெம்ப்ராண்ட், டாவின்ஸி, ரவிவர்மா முதல் தலைகால் புரியாத ’மாடர்ன் ஆர்ட்’ வரை ரசிப்பது மட்டுமின்றி அதன் நுணுக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் அவனே தூரிகை கொண்டு ஓவியம் வரைவான். இது தவிர நன்றாகப் புகைப்படங்கள் எடுப்பான்.

பாஸ்கர் ஒரு பேராசைகொண்ட புத்தகப் புழுவும் கூட. ’பி.ஏ.’ இலக்கியம் படித்ததால் இலக்கிய ஈடுபாடு உண்டு. இப்போது வங்கியில் வேலை பார்த்தாலும் அதைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவன். கையில் கிடைத்த பத்திரிகை அனைத்தும் மேய்வான். சென்னையில் உள்ள பெரிய நூலகங்கள் அனைத்திலும் அவன் உறுப்பினர்.

இவ்வளவு ஈடுபாடுகளை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஊர் அறிந்த கலைஞனாக/பாடகனாக/கவிஞனாக/எழுத்தாளனாக வர முயற்சி செய்யக்கூடாது என்று கேட்டால் ’பளிச்’ என்று பதில் வரும்.

"My aim in life is to know something of everything. That's all. வாழ்க்கைல எல்லா விஷயங்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுண்டு அதை நாலுபேரோட பேசிப் பகிர்ந்துண்டு, அதன் மூலமா நம்ம தோழமை வட்டத்தை வளர்த்துண்டு போறதுல இருக்கற இன்பமும் திருப்தியும் வேற எதிலையும் இருக்கும்னு நான் நினைக்கல. I want friends, not fans."

(தொடரும்)

ரமணி
02-03-2013, 12:28 AM
அப்புறம் அவன் கையெழுத்து. கொஞ்சம் வலப்புறம் சாய்ந்து, முத்துமுத்தாக இன்னைக்கெல்லாம் பார்த்துக்கொன்டே இருக்கலாம். கல்லூரித் தேர்தல்கள், ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு ’பானர்’கள் எழுதுவது அவனுக்குப் பிடித்தமான வேலை. அவனது கையெழுத்துக்காகவே பலர் அவன் வங்கியில் ’ஃபிக்ஸ்ட் டெபாசிட்ஸ்’ கணக்குகள் துவக்குவதுண்டு. இதனால் அவனுக்குப் ’ப்ரொமோஷன்’ கிடைக்கும்வரை அவனை ’டெபாசிட் செக்ஷன்’இல் வைத்திருந்தார் அவன் மானேஜர். இப்போது ’ப்ரமோஷன்’இல் சென்னைக்கு மாற்றலாகி வந்தபிறகும் ’டெபாசிட் செக்ஷன்-இன்-சார்ஜ்’தான்.

இதெல்லாம்விட பாஸ்கர் ஒரு ’ஹைலி ரொமான்டிக் ஃபெல்லோ’. அவன் பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போது மாணவிகள் சிலர் அவனையே பார்ப்பதுண்டு. ஓரிருவர் கொஞ்சம் தைரியம் பெற்று, "எக்ஸ்க்யூஸ் மி...வாட்’ஸ் த டைம் லைக்?" என்று கேட்க, அவன், "இட்’ஸ் குட் டைம்!" என்று விளையாட்டாகக் கூறிவிட்டுத் தன் மணிக்கடிகாரத்தை அவர்களிடம் காட்டுவான். கடவுள் படங்களில் தலைக்குப் பின்னால் உள்ள ஒளிவட்டங்கள் போல அவனைச் சுற்றி ஒரு ’ஆரா ஆஃப் ரொமான்ஸ்’ இருக்கிறது போலும்.

அவனுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு அவனுடைய ’ரேன்ஜ் ஆஃப் மூட்ஸ்’ வியப்பளிக்கும். உணர்ச்சிகளின் நவரசங்களிலும் சஞ்சரிக்க வல்லவன் அவன். ஆனால் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டான்.

பாஸ்கர் அவன் டைரியில் நிறைய இடம் பெற்றிருந்தான். அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள், ரசித்த இயற்கைக் காட்சிகள், சுற்றுலா சென்ற இடங்கள், விவாதித்த புத்தகங்கள், வாழ்க்கை பற்றித் தத்தம் கண்ணோட்டங்களைப் பரிமாறிக்கொண்ட நிகழ்ச்சிகள் போன்ற எல்லா விவரங்களையும் ஒன்றுவிடாமல் குறித்திருந்தான்.

பாஸ்கரின் நினைவில் கண்கள் தாழ்ந்து அவனுடைய ’ஜர்னல்ஸ்’ பக்கங்களில் நிலைத்தபோது அவன் மாலதியை சந்திக்க, வரிகளைக் கலைத்துக்கொண்டு அவள் விஸ்வரூபம் எடுத்து அவன் நினைவுகளை ஆக்கிரமித்துக்கொண்டாள்.

ஒருநாள் மாலை. அவனும் பாஸ்கரும் கல்லூரி விட்டதும் வழக்கம்போல் காவேரிப் பாலத்தில் காற்று வாங்கச் சென்றபோது சிந்தாமணித் திடல் அண்ணா சிலை ’ரவுண்டாணா’ பக்கத்திலுள்ள பஸ் நிறுத்தத்தில் அவள் தனியாகக் நின்றிருந்தாள்.

பார்த்த உடனேயே கண்கள் நிலைத்து மனசுக்குப் பிடித்துப்போய் விடக்கூடிய குழந்தை முகம். விழிகளில் ’சங்கராபரணம்’ மஞ்சு பார்கவி. (இந்த ஒப்புமையைப் பின்னால் சேர்த்துக்கொண்டான், அவள் கண்களை வருணிக்க வேறு வழியில்லை என்று.) அவள் தலையில் சூடியிருந்த அந்த ஒற்றை ரோஜா வாடியிருந்தாலும் இதழ்களில் புன்னகை விரிந்திருந்தது. புத்தகங்கள்-’டிஃபன் பாக்ஸ்’ சுமையைக் கைகள் நெஞ்சுடன் அணைத்திருக்க, கால் விரல்கள் தார் ரோடில் அருவமான கோலங்கள் போட, ரோஸ் சாரியில் அவள் பளிச்சென்று இருந்தாள். அவளைக் கடந்து சென்றபோது அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

"ப்யூட்டிஃபுல் இல்ல, பாஸ்கர்?"

"வொன்டர்ஃபுல்."

"யார் தெரியலையே?"

"தெரியாது? மாலதி. தினமும் நான் வரும் பஸ்ல திருவானைக்காவல் ஸ்டாப்ல ஏறுவா."

"பேர் எப்படித் தெரியும்?"

"ஒருநாள் பஸ்லேர்ந்து அவளுக்குப் பின் இறங்கினபோது அவள் நோட்புக்ல பார்த்தேன். ஹௌ டு யு லைக் த நேம்?"

"அடக்கமான பெயர், அவள் போலவே. தினமும் இப்படித்தான் ஒரே ஒரு ரோஜா தலையில் வெச்சிண்டு வருவாளா? பார்க்க அழஹா இருக்கில்ல?"

"தட்’ஸ் ரைட். சமயத்தில கனகாம்பரமும் டிசம்பர் பூவும்கூட கத்தைகத்தையா அலங்கரிக்கும்."

"வித்தியாசமா இருக்கா பாரு. அங்கே பார் அரட்டைக் கச்சேரி. சத்தம் ட்ராஃபிக்கை மீறி இங்கே கேக்கறது! இவள் அவர்களோட சேராமல் தனியா, அமெரிக்கையா எதையோ யோசிச்சிண்டு...இன்டலக்சுவல் டைப் போல."

"லைக்லி. அந்த கும்பல்ல ஒவ்வொருத்திக்கும் ஒரு பெயர். ஓரத்தில நிக்கறது கிளியோபாட்ரா. பக்கத்துல ’பணமா பாசமா’ சரோஜாதேவி. அடுத்தது டேம் அகதா க்றிஸ்டி. பக்கத்தில பட்டு மாமி. எல்லாம் ஶ்ரீரங்கம். என்னோட முன்பின் அறிமுகம் இல்லாத பஸ்-மேட்ஸ்."

"எப்படித் தெரியும் இந்த நிக் நேம்ஸ்?"

"எல்லாம் நான் வெச்சதுதானே!"

"யு ஆர் நாட்டி. ஆனால் பொருத்தம்தான்."

"இவளுக்கு அந்தமாதிரி பெயர் வைக்க முடியலை. வேணும்னா உயரத்துக்காக எம்மா ஓடௌஸ்னு வைக்கலாம். ஆனால் இவள் அவ்வளவு தூரம் துருதுருப்பா இல்லை. மே பி ஷி ஹாஸ் தட் ரிஸோர்ஸ்ஃபுல்னஸ்."

"ரோஸ் சாரி என்ன பொருத்தம் கவனிச்சயா?"

"அவளே ஒரு ரோஸ் தானே? A rose is a rose is a rose is a rose.*"

*For this famous quote check:
http://linksredirect.com/?pub_id=592CL574&url=http%3A//en.wikipedia.org/wiki/Rose_is_a_rose_is_a_rose_is_a_rose

*** *** ***
(தொடரும்)

ரமணி
03-03-2013, 12:32 AM
பயணம்: நாவல்
ரமணி
13


கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திது வோமடா.
---மஹாகவி பாரதியார், பெண்மை 4

முதல் கவனிப்பைத் தொடர்ந்து நாலைந்து மாதங்கள் அவளைப் பல நாட்கள் பார்த்த நிகழ்ச்சிகள் டயரியில் இடம்பெற்றிருந்தன.

*************************
செப்.10, புதன்
*************************
ஏறத்தாழ நான்கு வாரங்கள் கழித்து இன்று அந்த ரோஜாவைத் தற்செயலாக பஸ் ஸ்டாப்பில் பார்த்தேன். இன்றும் ரோஸ் சாரி. ரோஜா.

*************************
அக்.3, வெள்ளி
*************************
இன்று தற்செயலாகப் பார்த்தபோது அவள் குரல் கேட்க முடிந்தது. குரல் இனிமையாகவே உள்ளது. அனுவுக்கும் ஜெயந்திக்கும் இடைப்பட்ட த்வனி. கண்டக்டரிடம் பேசினாள். அருகில் இருந்த தோழியிடம் கொஞ்சம். மற்றபடி ஷ்...!

*************************
அக்.13, திங்கள்
*************************
இன்று பாஸ்கர் உடவரப் பார்த்தேன். அதே இடம். இன்று பசுமையாக இருந்தாள். அதே அமைதி. கண்கள் எங்கள் மேல் விழுந்தபோது கொஞ்சமும் சலமில்லை.

Not a ray of recognition.

பாஸ்கரோ, நானோ அவள் கவனத்தை ஈர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இயல்பாகக் கடந்தோம்.

*************************
அக்.14, செவ்வாய்
*************************
இரண்டாம் நாள். பாஸ்கர் சொன்னது சரிதான். கனகாம்பரம்.

*************************
அக்.17, வெள்ளி
*************************
தொடர்ந்து ஐந்து நாட்கள் பார்க்கும் வாய்ப்பு. இன்று கொஞ்சம் வாடியிருந்தாள். கடுமையான ’பிராக்டிகல்’ போலும். அல்லது...

இனி தினமும் பார்ப்பேன் என்று தோன்றுகிறது.

*************************
அக்.30, வியாழன்
*************************
இன்று என்னுடன் இரண்டாம் நம்பரில் வந்தாள். என்ன ’மெயின்’ தெரியவில்லை. zoo-வாக இருக்குமோ?

What a silent creature!

*************************
டிச.16, செய்யாய்
*************************
ஆறு வாரங்கள் கழித்து இன்று பார்க்க முடிந்தது, டி.வி.எஸ். பஸ் நம்பர் நாலில் கோவிலுக்குப் போகும்போது.

இன்று நான் அதிர்ஷ்டக்காரன். பாஸ்கர் கேட்டால் பொறாமைப் படுவான். பஸ்ஸில் எதிரெதிரே அமர்ந்து இருந்தோம். டி.வி.எஸ். வாழ்க! வசீகர முகம். வளமான உடல். கொஞ்சம் மாநிறம்தான். கையில் எத்தனை புத்தகங்கள்! எல்லாம் அழகாக அட்டை போடப்பட்டு... என்ன சப்ஜெக்ட் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.

ரோஸ் அவளுக்குப் பிடித்த நிறம் என்பது உறுதியாகத் தோன்றுகிறது. இது குறைந்தது அவளது நாலாவது ரோஸ் சாரி என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு டிசைன்.

கண்டக்டரிடம் சில்லறையைக் கொடுத்து ’திருவானைக்காவல்’ என்றபோது கோவில் அர்ச்சகர் கைமணியின் மென்மையான ’கலீர்’ கேட்டது. டிக்கெட்டைத் தவறவிட்டாள்.

எடுக்கக் குனிந்தபோது தலையில் இருந்து நீளக் கருநாகம் புரண்டது. ரோஸ் ரிப்பன்.

என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால்---பாஸ்கராக இருந்தால் கூட---அவளுக்கு உதவக் குனிந்து கொஞ்சம் ஸ்பரிசித்திருக்கலாம். எனக்கு அவ்வாறு செய்ய மனமில்லை. தேவையில்லாத அனுகூலங்கள் எடுத்துக்கொளவது அநாகரிகம்.

ஆனால் அவள் என்னை ஸ்பரிசிக்க நேரிட்டது விந்தை! நாலுகால் மண்டபம் அருகில் பஸ் திரும்பியபோது அவள் எழுந்துகொள்ள, டிரைவரின் திடீர் ப்ரேக்கில் தடுமாறி ஜன்னல் கம்பிகளைப் பிடிக்க முயன்று என் விரல்களைப் பிடித்துக்கொண்டாள். ’ட்ஃபன் பாக்ஸ்’ கீழே விழ, என்னுள் கவிதை வரிகள் தலைகாட்டின.

என் விரல்கள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விழிகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளளோடுதான்.
[மு.மேத்தாவின் கவிதையைக் கொஞ்சம் மாற்றி எழுதியது]

அந்தக் கணத்தில் அவள் முகம் பார்க்க முடியவில்லை, முனையவில்லை.

"ஐ’ம் சாரி", என்றாள் மெல்லிய முறுவலுடன். இப்போது அவள் முகம் நோக்கினேன்.

"இட்’ஸ் ஆல் ரைட்."

’ட்ஃபன் பாக்ஸ்’ஐ எடுத்துக் கொடுத்தபோது "தாங்க் யு" என்றாள். "I'm sorry for the inconvenience!"

அவள் அண்மையில் பேசக்கேட்ட நீளமான சொற்றொடார்!

It's a pleasure என்று சொல்ல நினைத்து, "It's okay. I didn't mind." என்றேன்.

கொஞ்சம் காத்திருந்து அவள் இறங்க, பின்னள் இறந்கினேன். அந்தத் தவிர்க்கமுடியாத பின்தொடரலில் கொஞ்சம் பேசியிருக்கலாம். தவறாக எடுத்துக்கொள்வாளோ என்று தோன்றியது. அவள் என்மேல் வைத்திருக்கும் மதிப்பு குறைந்து விடும்படி நான் எந்த செயலும் செய்துவிடக் கூடாது.

கோவில் வாசல் வந்ததும் அவள் வலப்புறம் திரும்பி சந்நிதித் தெருப்பக்கம் சென்றுவிட நான் நேரே கோவிலுக்குள் சென்றுவிட்டேன்.

திரும்பி வரும்போது காவிரிக் கரையில் வீசிய தென்றலின் இதமான வருடலில் நடந்தவற்றை ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். நான் செய்தது சரியென்றே தோன்றியது.

மறுநாள் பாஸ்கரிடம் சொன்னபோது எதிர்பார்த்தபடியே, "ராஜா, நீ ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டே" என்றான்.

"எனக்கு அப்படித் தோன்றவில்லை பாஸ்கர். ஓகே, நீயாயிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றேன், அவன் மனத்திலுள்ள வக்கிரங்களின் வருகைக்குக் காத்திருந்து.

ஏதாவது ஏடாகூடமாகப் பிதற்றப் போகிறானே என்று பயந்தபோது அவன் சொன்ன பதிலில் அசந்து போனேன்.

"லிஸன். நம்ம ரெண்டு பேரும் முதன்முதல அவளைப் பார்த்தபோது என்ன நினைச்சோம்? அவளுடைய அழகிலயும் அடக்கத்திலயம் மனசப் பறிகொடுக்கலை? பெண்கள்னாலே வளவளன்னு பேச்சைத் தவிர ஒண்ணும் உருப்படியாத் தெரியாதுன்னு இதுவரை நாம நினைச்சது தப்புன்னு அடிச்சுச் சொல்றமாதிரி எவ்ளோ அமைதியா, அடக்கமா, வித்தியாசமா இருந்தாள் அவள், இல்லையா? நீகூட ’இன்டலக்சுவல் டைப் போல’ன்னு சொன்ன, ஞாபகம் இருக்கா?

அதுக்கப்பறம் எத்தனை தடவை நாம அவளைப் பார்த்திருக்கோம். நீயே தனியா நிறைய தடவை பார்த்திருப்பே இல்லையா? நான் அனேகமா தினமும் காலையில் அவளை பஸ்ல பார்க்கறதுண்டு. பெரும்பாலும் மெயின் ரோடுல போகும் ஶ்ரீரங்கம் பஸ்லதான் ஏறுவா. நான் எப்போதும் டிரைவருக்கு எதிர்த்த ஸீட்லதான் உக்காருவேன். அவளுமே முன்னாலதான் உக்காருவா. ஸோ, நல்ல சான்ஸ், அவளை வாட்ச் பண்ண. அவள் பாட்டுக்குத் தான் உண்டு தன் புத்தகம் உண்டுன்னு இருப்பா. இல்லை, ஏதாவது பத்திரிகை படிச்சிண்டு இருப்பா. அநாவசியமா ஒரு வார்த்தை பேசமாட்டா. அதுக்காக முசுடுன்னு சொல்ல முடியாது. தற்பெருமையா இருக்குமோன்னு கூட நினைச்சேன். ஒருநாள் என்னாச்சு தெரியுமா?" படபடவென்று பொரிந்துதள்ளிவிட்டு மூச்சுவிட நிறுத்தினான்.

"ப்ரொஸீட்" என்றேன்.

"எங்க ஶ்ரீரங்கத்துப் பட்டாளத்துக்கிட்ட மாட்டிக்கிட்டா. ஒரு நிமிஷம் சும்மா இருக்கவிடலையே அவளை? மாலதி என்ன படிக்கறே? மாலதி ஏன் என்னவோ போல் இருக்கே? மால் ஏன் பேசவே மாட்டேங்கறேன்னு பிடுங்கி எடுத்துட்டாங்க. எனக்கு ஒரே வேடிக்கையா இருந்தது. இவளால பதில் சொல்லி மாளலை. திடீர்னு அந்தக் கிளியோபாட்ரா சத்தம் போட்டு சொல்றா, ’ஏ மால், நீ இப்படி யாரோடையும் சரியாப் பழகாம, தனியா ஒதுங்கி இருந்தா, அதுக்கு ரெண்டு அர்த்தம் உண்டு. ஒண்ணு நீ ஒரு ego-centric introvert. அல்லது You are in love. Come on, who's that guy?’ சுத்தி ஒரே சிரிப்பு."

"இன்ட்ரஸ்டிங்" என்றேன்.

"நானா இருந்தா கடுப்பாயிருப்பேன். அவள் அமைதியா, அழகா, ரத்னச் சுருக்கமா ’நோஸ்கட்’ குடுத்தா. ’ஹேமா, டோன்ட் பி ஸில்லி. அதோட, ஏன் பொய் சொல்றே? நான் காலேஜ்ல எல்லோரோடையும் கலகலப்பாப் பழகலை? அதுக்காக பஸ்ல வரும்போதுகூட டமாரம் வண்டி மாதிரி ஓசைப்படுத்திண்டே வரச் சொல்றியா? ஒரு பொது இடத்துல கொஞ்சம் நாசூக்கா, அமைதியா இருந்தா என்ன தப்பு? எனக்கு பஸ்ல படிக்கப் பிடிக்கும், படிக்கறேன். அல்லது பேசாம உக்காந்திருக்கேன். அதைப்போய் ego-centric-னு லேபிள் பண்ணா I just don't care. தவிர, இந்த ஸ்டேஜ்ல லவ் அதுஇதுன்னு கவனத்தை சிதறவிடற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.’ அவ்ளதான், எல்லார் வாயும் தெப்பக்குளம் போஸ்ட் ஆஃபீஸ் பசையால ஒட்டின மாதிரி கப்சிப்!"

"என்னோட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை."

"எதுக்கு இந்த நிகழ்ச்சியை விலாவரியா சொல்றேன்னா, இவ்வளவு தூரம் அடக்கமா, நாகரீகமா, ப்ராக்டிகலா இருக்கிற ஒரு பெண்ணை விரும்பும்போது, அதுவும் அவளோட பழகச் சான்ஸ் கிடைக்கும்போது, அவளைப் பத்தி மேலும் தெரிஞ்சுக்க முயற்சி செய்யறது என்ன தப்பு? என்னைவிட நீ கொஞ்சம் reserved type. More like her. In fact, I would say you have a better chance."

"அதுக்காக அவள் sorry for the inconvenience-னு சொன்னபோது, Not at all. It's a pleasure to help a girl in distress-னு வழியச் சொல்றயா? அல்லது டிக்கெட் மீட்டுத் தர்ற சாக்கில அவள்மேல் பட்டிருக்கலாம்னு சொல்றயா, What's your idea?", என்றேன் அவன் வாயைக் கிளறுவதற்காக.

You are thoroughly mistaken, ராஜா. எதிர்பாராத சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திண்டு ஒரு பெண்ணைத் தொடறது, அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்யறது இதெல்லாம் அநாகரிகம், சிறுபிள்ளைத்தனம், அறியாமை அல்லது sheer hypocrisy. உன்னோட ஒருத்தி கைகுலுக்க ரெடியா இருந்தா கைகுலுக்கறது நாகரிகம். அதுக்காக உன்னைக் கும்பிடறவள் கிட்டபோய்க் கையை நீட்டறது காட்டுமிராண்டித்தனம். இந்தக் காலத்தில பாம்பே, மெட்ராஸ்ல டிஸ்கோத்தேல்லாம் வந்திருச்சுன்னு கேள்விப்படறேன். ஆண்களும் பெண்களும்---முக்கியமா கல்லூரி மாணவ மாணவிகள்---கைகோத்துகிட்டு தோளோடு தோள் உரசி மேற்கத்திய இசையின் பிண்ணணியில டான்ஸ் ஆடறாங்க. இதெல்லம் ஒரு ஸோஷல் ஆக்டிவிடி, அவ்வளவுதான். சைகலாஜிகலா பார்த்த இந்தத் தொடுதல் உரசுதல்லாம் அடலசன்ட் உணர்வுகளோட வெளியீடுகள். But if you seriously love a woman, இதெல்லாம் தேவை இல்லாத அவசரங்கள். Loving is primarily respecting. நம்ம கிராமத்தில சொல்றாப்பல கெணத்து நீரை வெள்ளமா கொண்டுபோய்டும்?"

"நான் என்னதான் செஞ்சிருக்கணும்னு சொல்றே?" என்றேன் குழப்பத்துடன்.

"ஏன், பஸ்லேர்ந்து இறங்கி அவளைத் தொடர்ந்து போனபோது அவளோட பேசியிருக்கலாம். அவள் முகவரியை விசாரித்திருக்கலாம். அவளை அடிக்கடி பாக்கறது பத்தியும், எப்படி அவள் அவளோட தோழிகளிடம் இருந்து வித்தியாசமா இருக்கா, எவ்வளவு அடக்கமா, அழகா இருக்கான்னு காம்ப்ளிமென்ட் பண்ணியிருக்கலாம், நாசூக்கா. Tell me honestly, don't you like her, or better still, love her?"

என் நினைவில் அப்பாவும், கூடவே அம்மாவும், வசந்தியும், அந்தப் பூஜை அறையும் ஸ்வாமி படங்களும் தோன்ற, "நாட் யெட்" என்றேன். "நீ நினைக்கிற மாதிரி அல்லது உனக்கு முடியற மாதிரி எனக்கு இது அவ்வளவு சுலபம் இல்லை பாஸ்கர். என்னால அவ்வளவு ஈஸியா கமிட் பண்ணிக்க முடியாது."

"But I lover her, come what may", என்றான் ஒரு தீவிரத்துடன். "With all my heart and soul. அவள் இனிஷியல் என்ன தெரியுமா? என். என் மாலதி."

"புரியறது பாஸ்கர்."

(தொடரும்)

ரமணி
04-03-2013, 12:34 AM
யோசித்துக்கொண்டே டைரியின் பக்கங்களைப் புரட்டியபோது கலைடாஸ்கோப்பில் கோலம் மாறி மாலதிக்கு பதில் கோவி. மணிசேகரன் தோற்னினார்.

*************************
ஜன.10, சனி
*************************
கோவி. மணிசேகரனின் ஒரு சிறுகதையில் ஒரு குறிப்பிட்ட வருணனை என்னைக் கவர்ந்தது. துல்யமான, யதார்த்தமான, உயர்ந்த கற்பனையுடன் கூடிய வருணனை!

"முத்துக்களிலே நிலவொளி கடுகெனச் சிறைப் பட்டிருந்தது; முத்துக்கள் வெடித்தன; முழுநிலவோ சிரித்தது."
---’அதுவும் அங்கேயே முடியுமானால்’

walter de la mare-இன் கனவுக் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.

அந்த வார்த்தைகளின் தாக்கமும் அதனை அவன் வியந்ததும் இப்பொதும் பிடிபட, பக்கங்களை விரலிட்டபோது மீண்டும் அவள் தோன்றினாள்.

*************************
ஜன.16, வெள்ளி
*************************
சரியாக ஒரு மாதம் கழித்து அவளைப் பார்த்தேன். கோவிலுக்கு வந்திருந்தாள். மறுபடியும் ஒரு கோவில் சந்திப்பு அமைந்தால் நன்றாக இருக்கும்.

இப்போது ஸேக்*ஷ்பியர் வந்தார்.

*************************
ஜன.23, வெள்ளி
*************************
உயிர் ஒலிகள் மற்றும் இதர சந்தங்களைக் கையாள்வதில் ஸேக்*ஷ்பியருக்கு இணையில்லை என்ற கூற்றை நான் இதுவரை நம்பியதில்லை. அவரது கதாபாத்திரங்களின் விஸ்வரூபத்தில் அவர் கவிதைத்திறன் மறந்துபோய்விடுவது இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று Antony and Cleopatra நாடகப் படைப்பில்

Which to the tune of flutes kept stroke and made
The water which they beat to follow faster

[http://linksredirect.com/?pub_id=592CL574&url=http%3A//penelope.uchicago.edu/%7Egrout/encyclopaedia_romana/miscellanea/cleopatra/alma-tadema.html%5D]


என்ற வரிகளைக் குரலுடன் படித்தபோது அந்த kept stroke வார்த்தைகளில் துடுப்பொலி கேட்கத் திடுக்கிட்டுப் போனேன். அடுத்த வரியில் தண்ணீர் என்னமாய்த் துடுப்புடன் இழைகிறது!

நீரின் ஒலிகளையோ, துடுப்பின் ஒலியையோ நேரடி வார்த்தைகளால்---like 'the clicking oars' or 'ripples of water'--குறிக்காமல், எளிய, இடத்துக்குப் பொருத்தமான வார்த்தைகளில் சந்தங்கள் சுட்டும் ஸேக்*ஷ்பியர் உணர்வுகளை மீட்டவல கவிஞரும் கூட.

*************************
மார்ச் 13, வெள்ளி
*************************
இன்று அவள் பஸ் ஸ்டாப்பில் என்னைக் கடந்து போனபோது நான் தயக்கத்துடன் மெல்லப் புன்னகைத்தும் பதிலில்லை. இந்த நேரம் பார்த்து பாஸ்கர் பக்கத்தில் இல்லை.

*************************
மார்ச் 15, ஞாயிறு
*************************
நானும் பாஸ்கரும் கோவிலின் திறந்த வெளியில் காலாற நடந்தபடியே படிக்கச் சென்றபோது அவள் கையில் ஒரு கனமான புத்தகத்துடன் எங்களைக் கடந்துசென்றாள். இன்று கொஞ்சம் கலகலப்பான தோற்றம். எங்களைப் பார்த்தபோது அவள் மனதில் தோன்றிய புன்னகையின் கீற்று அவள் கண்களில் எட்டிப்பார்த்ததாகத் தோன்றியது. பாஸ்கரின் அந்த ’ரொமான்டிக் ஆரா’ காரணமோ? நான் இருந்தபடியாலோ என்னவோ அவன் அவளுடன் பேச முயலவில்லை. Love is after all a very private thing.

எனக்கும் பாஸ்கருக்கும் ஒரு சின்ன வாக்குவாதம். அவள் இலக்கியம் இரண்டாம் வருடம் என்பது என் கட்சி. இல்லை கடைசி வருடம் என்பது அவன் கட்சி. பந்தயம் அஜந்தாவில் டின்னர்.

அவள் இலக்கியம், அதுவும் எங்களைப் போலவே இரண்டாம் வருடம் என்று மனதுக்குள் பல்லி கூறுகிறது. பார்ப்போம்.

*** *** ***
(தொடரும்)

ரமணி
05-03-2013, 01:11 AM
பயணம்: நாவல்
ரமணி
14


வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்ஙளேதுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ மைபிறி தின்றி வருந்தினேன்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 4

*************************
மார்ச்20, வெள்ளி
*************************
கோவிலில் இன்று ஏகக் கூட்டம். அகிலாண்டேஸ்வரியின் முன் நின்று நானும் பாஸ்கரும் மனதார வேண்டிக்கொண்டோம். வேண்டுதல் முடிந்கதும் கண்கள் அலைந்தன. தேடின. நிலைத்தன.

அழகே உருவாக அவள் நின்றிருந்தாள், மழைவிட்டதும் பளிச்சென்று தோன்றும் வானவில்லாக. பக்கத்தில் மங்கிய உபரி வானவில். அம்மா போலும். பாஸ்கர் என்னை விலாவில் இடித்தான்.

கூட்டத்தில் தனியாகத் தெரிந்தாள். கண்கள் அம்மனை நோக்கியிருந்தன. கற்பூர ஆராதனையின் போது கம்பிகளில் சாய்ந்து ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

ஆராதனை முடிந்ததும் நெற்றியில் வியர்வை பொடிக்க அர்ச்சகர் இருவர் வெளிவந்து கற்பூரமும் குங்குமமும் கொடுத்தபோது நளினமாக ஒற்றிக்கொண்டு வாங்கி நெற்றியில் அழக்குக்கு அழகு சேர்த்துக்கொன்டாள். பாஸ்கர் கைகளை சுட்டுக்கொண்டான்!

"என்ன சார்! எங்க பார்த்துண்டிருக்கேள்? குங்குமம் வாய்ங்க்கோங்கோ."

வாங்கி நெற்றியில் தீற்றிக்கொண்டான். நான் அவளைக் காப்பியடிக்க முயன்று நெற்றியில் எங்கேயோ ஓரத்தில் குங்குமம் இட்டுக்கொண்டது பாஸ்கர் பின்னர் என்னைப் பார்த்துச் சிரித்தபோதுதான் தெரிந்தது.

அர்ச்சகர் கொடுத்த பிரசாதத் தட்டைப் பெற்றுக்கொண்டு அம்மாவுடன் (அல்லது அக்காவோ?) உட்பிரகாரத்தை மூன்று முறை வலம்வந்து, அகஸ்தியர் தீர்த்தத்தில் எட்டிப்பார்த்து "எவ்ளோ தெளிவா இருக்கில்லே!" என்று வியந்தவண்ணம் வெளியில் வந்து, நாங்கள் பிடிவாத நாய்க்குட்டிகளாகப் பின்தொடர, அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள விநாயகர் சிலையைச் சுற்றிக்கொண்டு வெளிக்கதவு அருகில் இருந்த மகிஷாசுரமர்தினி சுவரோவியத்தை வணங்கிவிட்டுப் பழைய சந்நிதிப்பக்கம் திரும்பிச் சென்றுவிட்டாள்.

நானும் பாஸ்கரும் கோவிலைவிட்டு வெளியில் வரும்வரை பேசவில்ல.

மறுநாள் அவன் கண்களையும் காதுகளையும் நம்பமுடியாதபடி அந்த நிகழ்ச்சி நடந்தது.

அன்று அவன்மட்டும் தனியாகக் கோவிலுக்குப் போனான். ஆறு மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கிவிட்டது. ஆறரை மணியளவில் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு தீபாராதனை.

அன்னையின் சந்நிதிக்குள் நுழைவதற்கு முன் பழைய சந்நிதிப்பக்கம் சென்று அந்த இரும்பு வாயிற்கதவு வரை போய்த் தெருப்பக்கம் பார்த்தல் என்ன என்று தோன்றியது. கூடவே, நடுவில் அவள் எதிர்ப்பட்டால் செயற்கையாக இருக்கும் என்று தோன்றிட அந்த யோசனையைப் புறக்கணித்தான்.

அன்னையின் கோவிலுக்குள் நுழையும்போது அவள் நினைவு வந்து மனம் அந்த மகிழ்ச்சியான தருணத்தை எதிர்பார்த்தது. அவளைக் காணவில்லை. மௌனமாக மகிஷாசுரமர்தினியின் காலடியில் எரியும் கற்பூரங்களைத் திரும்பிப் பார்த்தவாறே நடந்தான். ஒருவேளை சந்நிதிக்குள் இருக்கிறாளோ?

கால்களின் அவசரத்தில் விநாயகருக்கு எதிர்ப்புறம் இடம்திரும்பிய போதுதான் கவனித்தான். கோவிலில் கூட்டமே இல்லை. உள் பிரகாரத்தை நோக்கிச் சென்றபோது வழியில் இரண்டு அர்ச்சகர்கள் உட்கார்ந்துகொண்டு இருளைப் பொருட்படுத்தாது சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

பிரகாரத்தில் நுழைந்ததுமே கண்கள் தாமாக சந்நிதியை நோக்கின. அவள் இல்லை. உண்மையில் அவனைத் தவிர ஒருவரும் இல்லை. பிரகாரம் காலியாக இருந்தது!

இன்று சனிக்கிழமை யாதலால் ஒருவேளை வரமாட்டாளோ?

நேற்றைய நிகழ்ச்சியின் பின்னணியில் இன்றைய வெறுமையின் சாயல் விளத்த குழப்பத்தில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இருட்டில் பறக்கும் வௌவால்களாக அலையும் கண்களில் இப்போதும் ஏதோ ஒரு நம்பிக்கை.

சிமென்ட் பால் பளபளக்கும் கற்சுவரைப் பிடித்துக்கொண்டு சிந்தனையுடன் படியேறி சந்நிதிக்குள் நுழைந்தபோது நெடிய உருவமாக அன்னை அகிலாண்டேஸ்வரி நின்றிருந்தாள். உத்திரத்திலிருந்து தொங்கும் விளக்குச் சுடரின் மேல்நோக்கிய படபடப்பில் அவள் அணிந்திருந்த நகைகள் மினுமினுக்க, அந்த ஒளிச் சிதறலும் சுடரின் இருள்கலந்த தீட்சணியமும் தோற்றுவித்த பக்தியுணர்விலும் நம்பிக்கையிலும் மனத்தின் ஏமாற்றங்கள் மறைந்துபோக, இப்போதும் மனம் அவளை நினத்திருக்க, ஒரு கணம் தலையைச் சிலிர்த்துக்கொண்டு கண்மூடிப் பிரார்த்தித்தான்.

கண்களைத் திறந்தபோது அவனால் எதையும் நம்பமுடியவில்லை. கர்பக்கிருஹத்தில் அர்ச்சகரின் மந்திரக் கூவல்கள் இசைவடிவில் ஒலிக்க, அவர் எப்படித் திடீரென்டு தோன்றினார் என்று மனம் வியக்க, தலையைத் திருப்பியபோது நேர் எதிரில் அவள் பூனைபோல் வந்து நின்றிருந்தாள். பக்கத்தில் ஒரு சின்னப் பையன்.

அவர்களைத் தவிர சந்நிதியில் வேறு யாருமே இல்லை. இந்த நல்ல சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற ஆவலில் எண்ணங்கள் வார்த்தைகளாக ஸ்படிகித்து மோதினாலும் நாக்கின் முடிச்சு அவிழ மறுத்தது.

கண்கள் மட்டும் எந்தத் தளைக்கும் கட்டுப்படாமல் அவளையும் அன்னையையும் மாறிமாறிப் பார்த்தன.

வழக்கபடி புடவை அணியாமல் இன்று பாவாடை தாவணியில் கொஞ்சம் குட்டையாகத் தெரிந்தாள்.

வழக்கமான் மௌனத்தின் சுமை நீங்கி கொஞ்சம் ’ரிலாக்ஸ்ட்’ஆகக் காணப்பட்டாள். கைகள் பையனின் கழுத்தில் அரவணைத்திருக்க, கண்கள் அன்னையை நோக்கியிருக்க, இதழ்கள் முணுமுணுக்க நின்ற இந்த ’ஹோம்லி’ மாலதியின் எளிய, இனிய, இளைப்பாறிய தோற்றத்தில் அன்பும் பண்பும் அக்கறையும் போட்டிபோட்டுக்கொண்டு மிளிர்ந்தன.

ஆராதனை முடிந்து குருக்கள் கற்பூரம் கொணர்ந்தபோது பவ்யமாகத் தானும் கண்களில் ஒற்றிக்கொண்டு பையனுக்கும் ஒற்றிவிட்டாள். குங்குமம் வந்ததும் வாங்கி வழக்கம்போல் அழகாக நெற்றியில் உறுதிப்படுத்திக்கொண்டு பையனுக்கும் இட்டுவிட்டு மீதமிருந்ததை அவன் தளிர்க் கையில் ஒப்படைத்தாள்.

அவள் செய்கைகளைக் கவனித்தவாறே அவன் தானும் குங்குமம் இட்டுக்கொண்டு, காணிக்கை போட்டுவிட்டு அவளுடன் பேசத் துணைக்கு அன்னையையும் அழைத்தான்.

என்ன பேசுவது?
வழக்கம்போல் தலைக்கு மேலே பெரிய கேள்விக்குறி தொங்க, இதற்கிடையில் ஆராதனை முடிந்து அவள் நகர ஆரம்பிக்கத் தானும் மௌனமாகத் தொடர்ந்தான்.

வெளியில் வந்து அவள் நமஸ்கரித்தபோது பையன் கம்பத்தில் ஏறி மணிகளை வருடினான். எங்கிருந்தோ திடீரென மற்றொரு சின்னப்பையன் தோன்றி, "மாலதீ!" என்று கூப்பிட்டுக்கொண்டே பிரகாரத்தில் ஓடியபோது அவள் பெயர் உறுதியாயிற்று.

ஒரு புன்னகையுடன் படியிறங்கி வந்தவளை முன்னால் விட்டு அவன் இன்னமும் மௌனமாகப் பின்தொடர்ந்தான்.

எத்தனை சந்தர்ப்பங்கள்!
என்ன பேசுவது?

உட்பிரகாரத்தை வலம்வரும் போது விநாயகரை வழிபட்டாள். அடுத்து சுப்ரமணியர். அப்புறம் ஆறுமுகன், ரேணுகா. எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்த பின் சரஸ்வதியை நமஸ்கரித்தாள். சூரியனை நெருங்கும்போது அவன் ஒருவழியாகத் தீர்மானித்து வாய்திறக்க முற்பட்டபோது குரல் கரகரப்பாக, கொஞ்சம் செயற்கையாக வந்ததது.

"ஹலோ மிஸ். மாலதி! ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிச்சாச்சா?"

மெல்லத் தலையாட்டினாள் உடன்பாடாக.

"செகண்ட் இயர் தானே?"

"ஆமாம்."

"என்ன மேஜர்?"

நளினமாகத் திரும்பி "லிட்ரேச்சர்", என்றாள். "இங்லிஷ் லிட்ரேச்சர்."

விநாடிகள் மௌனமாக நழுவ, அவள் சூரியனை நமஸ்கரித்தாள். பின்னர் மெல்லிய குரலில் கேட்டாள்: "நீங்க யாருன்னு தெரியலையே?"

அந்தக் கேள்வியை எதிர்பார்த்து அவன் தயாராக இருந்தபோதிலும் அதை அவள் தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டபோது அந்த நாசூக்கில் அவள் சந்தேகத்தின் நியாயம் உறைக்கத் திணறிப்போனான்.

கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் யோசித்து, கொஞ்சம் புன்னகைத்து, அவளுக்கு நேர் எதிரில் போய் நின்றுகொண்டு, சின்னப் பையனைக் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, "வசந்தினு ஒரு பொண்ணு உங்ககூடப் படிச்சிருக்கலாம். அவள் எங்க சித்தி பொண்ணு. நீங்க பி.யு.ஸி அதே காலேஜ்லதானே படிச்சிங்க?"

"இங்கதான் படிச்சேன். அவங்க எந்த செக்*ஷன்?"

"பி.யு.ஸி. ஃபர்ஸ்ட் க்ரூப்லதான் படிச்சா. இப்பகூட அவளும் லிட்ரேச்சர் ஸெகன்ட் இயர்தான்."

"எந்த செக்*ஷன்?"

"தெரியவில்லை."

அப்படியா என்பதுபோல் தலையாட்டியபடியே போய்விட்டாள்!

பாஸ்கரின் ஆலோசனையைக் காற்றில் பறக்கவிட்டு
அரிய வாய்ப்பொன்று விரல்களின் இடுக்குகளில்
பிரசாதத் தீர்த்தமாக நழுவி சிந்திவிட

நாவில் பட்ட ஓரிரு துளிகளின்
அதீத இனிமையில் மெய்மறந்த வனாக
கண்களில் ஒற்றிக்கொண்டு தலையில் தெளித்துக்கொண்ட
துளிகளில் உச்சி குளிர்ந்தவனாய் நிற்க

மனமோ கடந்த நிகழ்ச்சிகளை
மீண்டும் ஒத்திகை பார்க்க
(நாடகத்துக்குப் பின் ஒத்திகை!)

தொடர்ந்து அப்பாவின் சலனமற்ற முகமும்
தீட்சண்யமான பார்வையும் நினைவில்வரக்
கடைசியில் குழப்பம்தான் மிஞ்சியது.

பாஸ்கர் யு கேரி ஆன்!

(தொடரும்)

ரமணி
06-03-2013, 12:24 AM
பாஸ்கரிடம் மறுநாள் சொன்னபோது எதிர்பார்த்தபடியே கோபித்துக்கொண்டான்.

"What nonsense I say! இப்படியா ஒரு பொண்ணோட பேசறது? எதோ பேட்டிக்கு வந்த பத்திரிகை நிருபர் மாதிரி! நீங்க யாருன்னு தெரியலையேன்னு அவ கேட்டாளாம் இவன் வாயை மூடிண்டு கம்முனு வந்துட்டானாம். எந்தப் பொண்ணுய்யா உன்னை எனக்குத் தெரியும், நாலஞ்சுதரம் காவேரிப் பாலத்துகிட்ட பார்த்திருக்கேன்னு சொல்லுவா? தெரிஞ்சாதான் அவளே வந்து பேச மாட்டாளா? உங்களைத் தெரியலைன்னா உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறேன்னு அர்த்தம். இதுகூடப் புரிஞ்சுக்க முடியலை, நீயெல்லாம் ஒரு லிட்ரேச்சர் ஸ்டூடன்ட். (பெருமூச்சுடன் தலையில் அடித்துக்கொண்டு) ஹூம், போயி, பிரபாத் தியேட்டர்ல சினிமா பாரு, ’காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’னு பாடிண்டு ஜெயலலிதா வருவா!"

"பாஸ்கர் உனக்கு எங்க குடும்பப் பின்னணி பத்தித் தெரியாது."

அவன் ஆதங்கம் புரிய மெல்லக் கூறியபோது சீறினான்.

"என்னய்யா பெரிய குடும்பப் பின்னணி? நீ என்ன காதலுக்காக குடும்ப சாம்ராஜ்யத்தைத் துறந்துட்டு ஓடப் போறியா, இல்லை பின்னால படைகள் துரத்த பிருத்விராஜ் மாதிரி ராணி சம்யுக்தாவைக் கடத்திண்டு போகப் போறியா? உனக்கு வரப்போறவளை நீ தேர்ந்தெடுக்கணுமா உங்க அப்பாம்மா தேர்ந்தெடுப்பாளா சொல்லு? அப்படியென்ன நீ எவளோ ஒருத்தியைக் கூட்டிண்டு குடும்பத்துக்குத் தலைமுழுகிடவா போறே? அந்த மாதிரி செய்யறவன் ஒரு கோழை, மடையன். அப்படிச் செய்யறது அநாகரிகம். நாமெல்லாம் படிச்சவங்க. குடும்பத்தில நம்ம கடமை, கமிட்மென்ட் பத்தித் தெரிஞ்சவங்க. நம்முடைய ’எய்ம்’ என்ன, நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் பொருத்தமானவளா ஒருத்தியைத் தேர்ந்தெடுக்கணும். நமக்கும் உகந்த வாழ்க்கைத் துணையா இருக்கணும், அதே நேரத்தில குடும்பத்தையும் அனுசரிச்சிண்டு போகணும். இதைக் கடைசி நேரத்தில கால்ல கஞ்சியைக் கொட்டிண்டு உங்கப்பா செய்யறதுக்குப் பதிலா இப்பருந்தே திட்டமிட்டு நீ செய்யப்போறே, அவ்வளவுதானே?"

"பாஸ்கர் கொஞ்சம் மெதுவா. இது பொது இடம். ரொம்பநாள் கழிச்சு இன்னைக்குத்தான் சூரியன் கடைசிவரைக்கும் நதியில் மூழ்கறது பாத்தியா? இப்ப இங்கேர்ந்து வெள்ளைவேளேர்னு ஒரு பூமராங் எறிஞ்சேன்னு வெச்சுக்க, அது சூரியனைத் தொட்டுட்டு என் கைக்குத் திரும்ப வரும்போது செக்கச்செவேர்னு ஆயிடும் இல்ல?"

"ஸில்லி. அப்புறம் உன்னால அதைக் கையில் பிடிக்கமுடியாது."

"ஸில்லி இல்லை. பொயடிக் லைசன்ஸ். ரைட். இன்னைக்கு எங்க அவளைக் காணலை?"

"அதான் லீவு விட்டாச்சே. வீட்ல உக்கார்ந்து படிச்சிண்டிருப்பா. அல்லது கோவிலுக்கு வந்திருப்பா, உன்னைத் தேடிண்டு அவள் அப்பாவோட!"

"வரட்டுமே, எனக்கென்ன கொறைச்சல்? போய்ப் பார்க்கலாம் வரையா?"

"கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்", என்றான் காட்டமாக. உடனே சாந்தமடைந்து, "வேண்டாம். We may be disappointed." என்றான்.

"எப்ப எனக்கு அஜந்தால டின்னர்?"

"குடுத்திட்டாப் போறது. நானும் ஒரு தடவை வெரிஃபை பண்ணிக்கறேன். நீ வேணா பாரு, உன்னைவிட நான் இந்த விஷயத்தில ப்ராக்டிகலா, பெட்டரா, நேச்சரலா ட்ரை பண்ணி அவளை வழிக்குக் கொண்டுவரேன். என்ன பெட்?" என்றான் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு.

"உன்னாம் முடியும் பாஸ்கர்."

*** *** ***
(தொடரும்)

ரமணி
07-03-2013, 12:15 AM
பயணம்: நாவல்
ரமணி
15


கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? -- அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாதோ?
---மஹாகவி பாரதியார், ஆத்ம ஜெயம்

ஆசையுடன் ஊதும்போது பாதியில் வெடித்துவிட்ட பலூன் போன்ற அந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து அவளைப் பலமுறை பார்க்க நேரிட்டபோது அவனால் பேசமுடியவில்லை. அல்லது முயலவில்லை.

அவளது கண்கள் ஓரிரு முறை அவன்மீது நிலைத்தபோது கூட, அவற்றில் மூன்றாம் பிறைச் சந்திரன்போல் மெல்லிய கீற்றாகப் புன்னகையும் தோழமையும் எட்டிப் பார்த்தபோது கூட அவன் புன்னகை செய்யவில்லை.

கண்கள் மட்டும் பிடிவாதமாக அவள் பக்கம் பார்த்திருக்க, மனம் அவள் அழகின் பிரதிபலிப்பில் லேசாகிப் பிரகாசமாகத் தோன்ற, கூடவே திடீரென்று யாரோ ஒன்றன்பின் ஒன்றாகச் சின்னச் சின்ன கற்களை எறிய ஏற்பட்ட எண்ண அலைகள் மனதைக் குழப்பி அலைக்கழிக்க...

’இந்த ஸ்டேஜ்ல லவ் அதுஇதுன்னு கவனத்தை சிதறவிடற அளவுக்கு நான் முட்டாள் இல்லை.’

’அவள் இனிஷியல் என்ன தெரியுமா? என். என் மாலதி.’

’நீங்க யாருன்னு தெரியலையே?’

’எந்தப் பொண்ணுய்யா உன்னை எனக்குத் தெரியும்னு சொல்லுவா?’
’நீ நினைக்கிற மாதிரி எனக்கு இது அவ்வளவு சுலபம் இல்லை பாஸ்கர். என்னால அவ்வளவு ஈஸியா கமிட் பண்ணிக்க முடியாது.’

’வசந்தி, இன்னைக்கு நான் அனுவைப் பார்த்தேன்.’
’அப்படியா? என்ன சொன்னா?’
’என்னப் பார்த்து சிரிச்சா. நான் ஒண்ணும் கேட்கலை.’

’எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி எப்போதுமே பெரியது. பொல்லாதது.’

’"ஜெயந்தி, இந்த முருகன்...’

ஒவ்வொரு முறையும் ரேடியோவில் மனசுக்குப் பிடித்த இனிமையான பாட்டைக் கேட்கும்போது யாரோ திடீரென்று நடுவில் அணைத்துவிடுவது போலிருந்தது.

’கொடியசைந்ததும்... காற்றுவந்ததா?...’

’ஏம்மா, இந்த டப்பா சங்கீதத்தைவிட்டா ஒண்ணுமே தெரியாதா உங்களுக்கு? அறுவது நாழியும் ரேடியோ பக்கத்திலேயே உக்காந்துண்டு... விளக்கு வைக்கிற நேரத்தில வேற பாட்டு கிடைக்கலையா? அதான் மத்த நேரம் பூராவும் கேக்கறேளே?’

’மலர் மலர்ந்த்---’

"சரி பெரியப்பா நான் அப்புறம் கேட்டுக்கறேன்."

ஏன்பா, அவளுக்குப் பிடிச்ச பாட்டுன்னா கேட்டுட்டுப் போறா. நாம நினைக்கற நேரத்தில நல்ல பாட்டுப் போடுவானா? இதுலெல்லாம் நீங்க ஏன் தலையிடறேள்?--என்று மனதுக்குள்தான் சொல்லமுடிந்தது.

ஒவ்வொரு முறையும் யாரோ அவனைப்
பின்தொடர்வது போலிருந்தது.

எப்போதும் இரண்டு கண்கள் அவனைப்
பார்த்துக் கொண்டிருப் பதாகப் பட்டது.

அனுமதியா, மறுப்பா, கோபமா என்று புரியாத
அப்பாவின் சலனமற்ற கண்கள்.

அல்லது கலவரம் நிறைந்த
அம்மாவின் கண்கள்.

’ஏண்டா இந்த மாதிரிலாம் செய்யறே?
ஒழுங்காப் படிச்சு முன்னுக்கு வர்ற
வழியைப் பார்ர்க்க வேண்டாமா?’

அல்லது ஆர்வமும் வியப்பும் அனுதாபமும்
தோன்றப் பார்க்கும் வசந்தியின் கண்கள்.

எல்லோருடைய பார்வையும் பரீட்சை ஹாலில் வலம்வரும் மேற்பார்வையாளர்களின் ’எனக்கொன்றும் சம்பந்தமில்லை’ என்னும் பார்வையாக இருந்தது.

பக்க்த்தில் நின்று, நிதானித்து,
அவன் பேனாவின் ஓட்டத்தையே பார்த்துக்கொண்டு,
சமயத்தில் பேனா தடுமாறி நிற்கும்போதோ,
நத்தையைப்போல் நகரும்போதோ,

அல்லது திடுமெனக் கீழே விழுந்துவிடும்போதோ கூட
ஒன்றுமே சொல்லாமல், ஒரு சின்ன ’க்ளு’கூடக் கொடுக்காமல்,

அல்லது பரீட்சை முடிந்த பிறகாவது
’நீ இப்படி செய்திருக்கலாம்’ என்று
ஆலோசனை கூறாமல்,

அவன் மற்ற பரீட்சைகளையாவது
நல்லபடியாகச் செய்யட்டுமே என்ற
அக்கறை இல்லாமல்,
முகத்தைச் சிலைபோல வைத்துக்கொண்டு...

கூடவே சுஜாதாவின் ’கொலையுதிர் காலம்’ நாவலில் வருவதுபோல் அந்த உரையாடல்கள் எப்போதும் எங்கிருந்தோ கேட்டன.

"இந்தக் காலத்துல கன்னாபின்னான்னு கதை எழுத ஆரம்பிச்சுட்டா. கதிர்ல புஷ்பா தங்கதுரை, விகடன்ல குமாரி பிரேமலதா, குமுதத்தில் வழக்கம்போல் ஒரு சாண்டில்யன்... போறாக்குறைக்கு சுஜாதாவோட படையெடுப்பு, ஜெயராஜோட அப்பட்டமான படங்கள்... வரவர கலைமகள் கல்கி தவிர ஒரு புஸ்தகத்தைக் கையால் தொடமுடியலை."

"ஆமாக்கா. இதுபோதாதுன்னு சினிமா வேற. இந்தக் காலத்துப் பசங்ககிட்ட இதப் படிக்காதே அதப் பார்க்காதேன்னு சொல்லவா முடியும்?"

"அதுவேற எனக்கு பயம் காமு. நாம என்ன வாச்மேன் உத்தியோகமா பாக்கமுடியும்? எனக்கென்னவோ இவா ரெண்டுபேரையும் நினைச்சா கவலைதான். ஊர்விட்டு ஊர்போய் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதுகள். பாத்துக்கறத்துக்கும் ஆளில்லை. என்னமோம்மா, நல்லா படிச்சுக் கரையேறணும்."

"எங்க பார்த்தாலும் கண்டகண்ட சினிமாப் படங்கள். அதுக்கு ஆயிரம் போஸ்டர். கோயம்புத்தூர்ல போறாக்குறைக்கு மலையாள சினிமா வேற. காதல் காதல்னு ஆபாசத்தைத்தான் திணிக்கறாங்க."

"காதலாவது கத்திரிக்காயாவது? நா இந்த சினிமாப் பக்கமே தலைவெச்சு படுக்கறதில்ல. உங்க அத்திம்பேர்க்கும் இதெல்லாம் கட்டோட பிடிக்காது."

அவனும் வசந்தியும் காற்றாட மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று முடிவுசெய்து அவன் கேட்டான்.

"வசந்தி, நீ அனுவைப் பத்தி என்ன நினைக்கறே?"

"எந்த அனு?"

திடுக்கிட்டான். "என்ன வசந்தி இப்படிக் கேக்கறே? நம்மளோட ஆறாவது வரைக்கும் படிச்சாளே அந்த அனுதான்."

"இல்லை, என்னோட காலேஜ்ல ஒரு அனுராதா படிக்கறா. அவளை நினைச்சிண்டுட்டேன்."

"எனக்கு வேற எந்த அனுவைத் தெரியும்?"

"அதானே?"

"நீ அனுவைப் பத்தி என்ன நினைக்கறே, சொல்லேன்?"

"அவதான் இப்ப இங்க இல்லையே? மதுரைலைன்னா ஏதோ ஒரு காலேஜ்ல படிக்கறா?"

"தெரியும், சொல்லேன்?"

’தெரியும்’ என்ற வார்த்தை வாய்தவறி விழுந்துவிட்டது, வசந்தியின் முகத்தில் தெரிந்தது. சற்றே புருவங்களை வளைத்து அவள், "எதுக்கு இப்ப திடீர்னு அனு?" என்றாள்.

பெருமூச்சுவிட்டான். "சரி, ஜெயந்தியைப் பத்தி நீ என்ன நினைக்கறே?"

"ஜெயந்தி?... ஓ அவளா! நல்ல சூட்டிக்கையான பொண்ணு. நன்னாப் படிப்பா. என்ன இப்ப திடீர்னு பெண்களைப் பத்தின ஆராய்ச்சி?"

"சும்மாதான். ஏதோ தோணித்து, கேட்டேன். நீ இதைப்பத்தி யார்கிட்டயும் பிரஸ்தாபிக்க வேண்டாம்."

"நான் ஏன் பிரஸ்தாபிக்கறேன்? But one thing. This is the time to study."

இவர்கள் யாரும் கொஞ்சம்கூடப் பிடிகொடுத்துப் பேசமாட்டார்கள் என்று புலப்பட்டது. அப்பாவோ கேட்கவே வேண்டாம். இந்த மாதிரி விஷயங்களில் அவருக்கு அக்கறையே கிடையாது.

தேடிச் சோறு நிதந் தின்று -- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னெனுறுநினைத் தாயோ?
---மஹாகவி பாரதியார், யோக சித்தி, வரம்கேட்டல் 4

என்று வசந்தியை நோக்கி மானசீகமாகக் கூறிவிட்டுக் காலரை சரிசெய்துகொண்டான்.

அவனும் பாஸ்கரும் அறையில் பாரதியை உரக்கப் பாராயணம் செய்தது நினைவுக்கு வந்தது.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம், சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர் உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
---மஹாகவி பாரதியார், சுயசரிதை, காதலின் புகழ் 49

பாரதியின் வரிகளில் ஆறுதல் அடைந்தவன், பாஸ்கரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான்.

(தொடரும்)

ரமணி
08-03-2013, 12:25 AM
ஒருநாள் மாலை தமிழ்ப் பரீட்சை முடிந்ததும் அவனும் பாஸ்கரும் சத்திரம் பஸ் நிறுத்தம் தாண்டிக் காவிரிப் பாலம் நோக்கி நடைபோட்டபோது தற்செயலாகத் திரும்பிப் பார்த்ததில் அப்போதுதான் வந்துநின்ற ஒன்றாம் நம்பர் பஸ்ஸில் மாலதி தன் தோழிகளுடன் நுழைவது தெரிந்தது.

"ராஜா, கவனிச்சேல்ல? கம் ஆன், இப்ப இருக்கற ட்ராஃபிக்ல இந்த பஸ் சிந்தாமணி ஸ்டாப்க்கு வர கொறஞ்சது மூணு நிமிஷமாகும். இப்ப திரும்பி சத்திரம் ஸ்டாப்புக்கு ஓடறதுக்குள்ள பஸ்ஸைக் கிளப்பிடுவான். So, hurry, this is the race of our life!"

இடம்வலம் சாலைநடைபாதை பாகுபாடுகளின்றி மக்களும்மாக்களும்வாகனங்களும் நீக்கமற நிறைந்து ஒரு குழம்பிய குட்டையாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்கள் தம் தலையை வானில் வைத்துக்கொண்டு ஒரு நாயின் உத்வேகத்துடன் நீந்திக் கடந்து மூச்சிரைக்க விரைந்து, கால் விரல்களிலும் கணுக்காலிலும் வலி ஊசிகள் பின்னிக்கொள்ள, அண்ணா சிலைக்கு அருகில் அந்த பஸ் அவர்களை முந்திவிட, அவர்கள் மேலும் ’தம்’ பிடித்து சாலையைக் கண்டபடி கடந்து போக்குவரத்துக் காவலரின் விசிலையும் வசவுகளையும் புறக்கணித்து, சிந்தாமணித் திருப்ப நிறுத்தத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கிவிட்ட பஸ்ஸைக் கடைசி நிமிஷத்தில் பற்றிப் படிகளில் தொற்றிக்கொண்டார்கள்.

அவர்கள் அதிர்ஷ்டம் பஸ்ஸில் கூட்டமில்லை. உட்கார இடம் கிடைத்தது. அதுவும் அந்த மகளிர் கூட்டத்தின் பக்கம், எதிரில்.

"மால் நீ அந்த சாயும் நெய்தலும் அநோடேஷன் எழுதினியா?"

"ஓ. பெரியபுராணம்."

"அய்யய்யோ இல்லை! புறநாறூறு."

"கிடையாது பெரியபுராணம்தான். ’சாயும் நெய்தலும் ஓம்புமின் | ஆய்வளை கூட்டு அறிவை’. இதான் ஃபுல் கொட்டேஷன்."

"பெரியபுராணம்தான்!" என்று கோரஸ் ஒலிக்க அவள் இரண்டாம் வருட மாணவிதான் என்று உறுதியாயிற்று.

"உன்னோட முயற்சிகள் எந்த அளவில் இருக்கு பாஸ்கர்?"

"அவள் வீட்டைக் கண்டுபிடிச்சிட்டேன்! செகன்ட் இயர்ங்கறது இன்னும் வசதி. என்னைவிட, சாரி, நம்மைவிட மூத்தவளா இருக்க சான்ஸ் இல்லை. அதே வயசுங்கறது இந்தக் காலத்தில பரவாயில்லை. மற்றபடி உடல் உள்ளம் பெர்சனாலிட்டி விஷயங்கள் பரம திருப்தி. அந்த ’ஸ்பார்க் ஃப்ரம் ஹெவன்’ மட்டும் விழுந்ததுன்னா சிலாக்கியமா இருக்கும். நீயோ நானோ, ஒன் அஃப் அஸ் மஸ்ட் கெட் ஹர்."

"நான் ஏற்கனவே உனக்கு ’கிரீன் ஸிக்னல்’ கொடுத்திட்டேன் பாஸ்கர்."

*** *** ***
(தொடரும்)

ரமணி
09-03-2013, 02:11 AM
பயணம்: நாவல்
ரமணி
16


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
---மஹாகவி பாரதியார், புதுமைப் பெண் 7

ஒரு பசுவின் அவசரத்துடன் கண்கள் டைரியில் மேய்ந்தும் பின் மனம் மேய்ந்ததை நிதானமாக எண்ணங்களாகப் பகுத்து அசைபோட்டும் அவன் தன் கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது, கண்கள் மறுபடியும் எழுத்துகளின் புல்வெளியை நாட, கௌசல்யா தோன்றினாள்.

கல்லூரியில் சேர்ந்தபின் அவன் பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் வசந்தியின் கல்லூரிக்குச் சென்று அவளைப் பார்த்துவருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல் எப்போதும் சைக்கிள்மேல் பவனி வரும் அந்தப் பியூனிடம் சொல்லியனுப்பிவிட்டுப் பார்வையாளர்கள் பெஞ்ச்சில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வசந்தி தன் அறையிலிருந்து வெளிப்போந்து மாடிப்படிகளில் இறங்கி ஹாஸ்டல் கட்டட வாசலைக் கடந்து அவனை நோக்கி வந்தாள். கூடவே ஒரு தோழி.

கொஞ்ச தூரம் வசந்தி வந்ததும் தோழி கையசைத்து விடைபெற்றுக்கொள்வாள், வசந்தி மட்டும் அவனை நோக்கி வருவாள் என்று வழக்கம்போல் எதிர்பார்த்து இருந்தவனுக்கு ஆச்சரியும் காத்திருந்தது.

வசந்தியுடன் வந்தவளைக் கண்கள் அளவெடுத்தன. மெல்லிய ஃப்ரேமுடன் கூடிய வெயில் கண்ணாடிகளுக்குள் விழிகள் கருவண்டுகளாகக் குறுகுறுத்தன. ஃப்ரேம் நடுவிலிருந்து ஓடிய எடுப்பான நாசி ஷர்மிளாவை நினைவுபடுத்தியது. கொஞ்சம் நீளவடிவம் கொண்ட முகத்தில் காலைப் பனிமூட்டம் போல் மெல்லிய பவுடர் திரையிட்டு முகத்தின் சந்தன நிறத்தைச் சற்றே மங்கச் செய்தது. அப்போதுதான் ஷாம்பு போட்டுக் குளித்தாற்போல் புதிதாகக் காணப்பட்டு, வில்லென வளைந்த hair band-டைத் தாண்டி அருவியாகக் கொட்டும் கூந்தலை நீண்ட கைகளின் நீளமான விரல்கள் அனாயாசமாக ஒதுக்கிவிட, ஒரு ’க்ளோஸப்’ புன்னகையுடன் அவள் பேசினாள்.

"ஹலோ, குட் ஈவனிங்! நீங்க ராஜா இல்லை? என்னைத் தெரியறதா?"

"குட் ஈவனிங். ஐ’ம் சாரி, எனக்கு ஞாபகம் இல்லை."

"நேச்சுரல் தானே! சின்ன வயசில பார்த்தது."

"என்ன ராஜா, இவள் யாருன்னு ஞாபகம் இல்லை? கௌசல்யா."

"நீ ஏன் சொன்னே வசந்தி? ராஜாவாக் கண்டுபிடிக்கறானான்னு பாக்க நினைச்சேன்."

"கௌசல்யா? ஐ ஸீ, நாராயணன் மாமாவோட டாட்டரா நீங்க! ரொம்ப வருஷம் கழிச்சுப் பாக்கறோம். வாட் சர்ப்ரைசிங் சேஞ்ஜ்!"

"என்ன சேஞ்ஜ், சொல்லுங்கோ?"

"சின்ன வயசில பாத்தபோது நீங்க குட்டையா, ஒல்லியா இருந்தீங்க."

"நௌ தி அதர் வே இல்ல? ஆனால் நான் வசந்தி மாதிரி குண்டு இல்ல, இல்லையா?"

"எனக்கொண்ணும் வித்தியாசம் தெரியலை. பட்தென் வசந்தி நிச்சயமா குண்டு இல்லை."

"ஓகே, அக்ரீட். ஆனால் நான் அவ்ளோ அழகா, அடக்க-ஒடுக்கமா இருக்கற மாதிரி என்னைப் பார்த்தா தெரியலை இல்ல? ஐ லுக் மாடர்ன்."

"அன்ட் ப்ரெட்டி."

கலகலவென்று சிரித்தாள்.

"வெல், சின்ன வயசில பார்த்ததுக்கு இப்போ நீங்க எப்படி இருக்கேள்னு சொல்லட்டுமா?"

"யு ஆர் வெல்கம் டு ஸே எனிதிங்."

"நீங்களும் அப்போ குட்டையா, ஒல்லியாதான் இருந்தீங்க. இப்போ பார்க்கும்போது நம்பத்தான் முடியலை."

"வொய்?"

"யு லுக் ஸோ டால் அன்ட் வெல்-பில்ட். அன்ட் சார்மிங் டூ!" என்று கண்ணடித்தாள்.

அனுவை நினைத்துக்கொண்டான். அநேகமாக இப்போது அவன் அவளைவிட உயரமாகி இருக்கக்கூடும். மதுரையில் படிக்கிறாளாமே? அவளுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

"என்ன பலமான யோசனை?"

"ஒண்ணுமில்லை. நானே இவ்வளவு உயரமா வருவேன்னு நினக்கலை."

"ஆல் இன் த கேம். ஊர்ல எப்படி, அப்பா அம்மால்லாம் சௌக்யமா?"

"சௌக்யம்."

"இப்பவும் அதே ஊர், வீடுதானே?"

"அதேதான். வேறெங்க போறது?"

"உங்க தெருவுல ஒரு கோவில் இருக்கில்ல? ம், பிள்ளையார் கோவில்!"

"ஆமாம்."

"சின்ன வயசில---மூணாவது படிக்கும்போதுன்னு நினைக்கறேன்---நாமெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து பாண்டி விளையாடி யிருக்கோம், லீவு நாள்ல. உங்களுக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லை போல. தவிர, நான் கொஞ்ச நாள்தானே உங்காத்தில இருந்தேன்."

"கொஞ்சம் ஞாபகம் இருக்கு மிஸ் கௌசல்யா."

"ஒரு சின்ன வேண்டுகோள்."

"என்ன?"

"இந்த மிஸ், நீங்க-வாங்கல்லாம் வேண்டாமே? ப்ளீஸ்."

"ரைட். உங்களுக்கும் அதேதான்."

"மறுபடியும் பார்த்தாயா, வசந்தி? ராஜா, சொல்றதைக் கேளுங்கோ, கட் தட் க்ராப்."

"நீங்க மட்டுமென்ன?"

"இதுக்கு முடிவே இல்லை!" என்று சிரித்தபடி செல்லமாக அவன் தோளில் கைவைத்துத் தள்ளினாள். அவ்வழியே போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு பெண்கள் திரும்பிப் பார்த்தனர். நல்லவேளை, அருகில் வேறு பார்வையாளர்கள் இல்லை.

"யு கால் மி ஜஸ்ட் கௌசல்யா, ஆர் கௌசி ஃபர் ஷார்ட்."

"அன்ட் யு கால் மி ராஜா. நாட் ஜஸ்ட் ரா ஆர் ஜா!"

"போதும் ரொம்ப அறுக்காதீங்கோ" என்றாள் வசந்தி.

"வசந்தி, இவள் இங்க எப்படி திடீர்னு? மாமா மாமில்லாம் மெட்ராஸ்ல இல்ல இருக்கா? கௌசல்யா, அப்பா அம்மால்லாம் சௌக்யமா?"

"நல்லா இருக்கா. நாங்க இப்போ திருச்சி வந்தாச்சு."

"அப்பா என்ன பண்றார் இப்போ? அந்தக் காலத்தில மாமா வேலை விட்டு வேலை தாவிண்டே இருப்பார்னு அப்பா சொல்லக் கேள்வி."

"ஒரு வழியா ஃபார்மஸி லைன்ல செட்டிலாய்ட்டார். இப்ப அவர் சீனிய மெடிகல் ரெப். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில ஏரியா மானேஜர் ஆய்டுவார்."

"நல்ல ப்ரொஃபஷன். இப்ப சொல்லு வசந்தி, இவளை எங்கே பார்த்தே?"

"ஒரு வாரத்துக்கு முன்னால காலேஜ் முடிஞ்சு நான் ஹாஸ்டலப் பாத்துப் போனப்ப, ’ஹாய் வசந்தி’ன்னு பின்னால யாரோ கூப்பிடறது கேட்டது. திரும்பிப் பார்த்தா இவள் தடதடன்னு ஓடிவந்தாள். எனக்கும் முதல்ல அடையாளம் தெரியலை. அடையாளம் தெரியலைன்னா முகஜாடைலாம் மறந்து போல! மாமா மாமில்லாம் மெட்ராஸ்ல இருக்காளே, இவள்கூட அங்கதானே படிச்சிண்டிருந்தாள், திடீர்னு எப்படி இங்கே வந்துசேர்ந்தானு ஒண்ணுமே புரியலை."

"நான் பி.யு. மெட்ராஸ்லதான் படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு இங்க மாத்தலாச்சு. ஸொ ஐ’ம் ஹியர்!" என்று தோள்களை உயர்த்தினாள்.

அவள் அணிந்திருந்த பாலியஸ்டர் ஷர்ட் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொஞ்சம் சுருங்கியது. விரல்களை அதன் விளிம்பில் ஓடவிட்டு சரிசெய்துகொண்டாள்.

"வசந்தி உங்க காலேஜ்ல சாரிதான் உடுத்தணும்னு ஒரு ரூல் இருக்கில்ல?"

"அப்படின்னு ஒண்ணுமில்ல. திங்கட்கிழமை மட்டும் வெள்ளை சாரி யுனிஃபார்ம் கட்டாயம். மத்தபடி எந்த உடையிலும் வரலாம். சில பேர் பெல்-பாட்டம் பேன்ட் ஷர்ட், நிறைய பேர் சல்வார் கமீஸ்ல வரா. ஆனால் இந்த மினி மிடி வகையறா கூடாது. கௌசி சாரிலகூட அழகா இருப்பா."

"அப்புறம்? கௌசல்யா என்ன மேஜர்? கெமிஸ்ட்ரி, பாட்டனி, இல்ல பிகாம்?"

"அதெல்லாம் எனக்கு ஒத்துவராத சப்ஜேக்ட்ஸ். நானும் இங்லீஷ் லிட்ரேச்சர்."

"சரிதான். ஒரு இலக்கியப் படையே இருக்கு. நான், வசந்தி, கௌசல்யா, பாஸ்கர்..." மாலதி, ஒருவேளை அனுவும்கூட.

"யார் பாஸ்கர்?"

"என் அத்யந்த சினேகிதன். வெரி மாடர்ன், லைக் யு. வெரி ஸ்மார்ட் அன்ட் ஷார்ப்."

"வாவ் வாவ்! பாக்கணுமே?"

"நீ எங்க காலேஜ்க்கு வரமுடியுமா?"

"அவரை இங்கே கூட்டி வரது?"

"வேற வினையே வேண்டாம்!"

பற்கள் பளிச்சிட ஜலதரங்கம் இசைத்தாள்.

"வசந்தி, என்ன பேசாம இருக்கே? இந்த ரியூனியனை நாம ஸெலிபரேட் பண்ணனும்னு முன்னடியே உன்கிட்ட சொன்னேன் இல்ல?"

"பண்ணிட்டாப் போறது. எங்க போகலாம்?"

"வேற எங்க நாம போக முடியும்? நம்ம காலேஜ் கேன்டீன்தான்."

(தொடரும்)

ரமணி
10-03-2013, 12:49 AM
கேன்டீனில் வேண்டுமென்றே இவன் பக்கத்தில் நாற்காலியை ஓசையுடன் இழுத்துப் போட்டுக்கொண்டாள், சுற்றிலும் சந்தேகக் கண்களை சட்டை செய்யாமல்.

"அய்யர், என்ன ஸ்வீட் இன்னிக்கு?"

"பாஸந்தி."

"இன்னிக்குன்னு கேட்டேன்."

"பாஸந்தி இன்னைக்குப் போட்டதுதாம்மா. இங்கதான் டெய்லி ஒரு ஸ்வீட் போடறோமே?"

"பொய் சொல்றார்", என்று கிசுகிசுத்தாள். "சரி, மூணு பாஸந்தி."

"கௌசி, இன்னிக்கு வறுத்த முந்திரி, கவனிச்சயா? ராஜாவுக்கு அதிர்ஷ்டம்தான்."

"ஆமாம். அய்யர், அடுத்து மூணு ப்ளேட் ஃப்ரைட் காஶ்யூஸ். ராஜா, டிஃபன் ஏதாவது சாப்பிட்டயா, அல்லது அதையும் இங்கேயே வெச்சுக்கலாமா?"

"இப்பத்தான் ஹாஸ்டல் மெஸ்ல சாப்பிட்டேன். நோ, தாங்க்ஸ்."

பாஸந்தியும் வறுத்த முந்திரிகளும் வந்தன. "அய்யர், கடைசியா காஃபி, எவர்சில்வர் டபரா செட்ல."

"அப்புறம்? எப்படி இருக்கு கௌசல்யா காலேஜ் லைஃப்? மெட்ராஸ்ல படிச்சவளுக்கு இந்த ஊர் கொஞ்சம் கிராமத்தனமா இருக்கும்."

"நாட் அட் ஆல். நான் கொஞ்சம் முற்போக்கா டிரெஸ் பண்றதைப் பார்த்து நிறையப் பேர்---சில பெண்கள் கூட--கொஞ்சம் ’அவுட்லாண்டிஷ்’னு நினைக்கறாங்க. இப்படித்தான் ஒருநாள் தெப்பக்குளம் பக்கம் ஒரு கிருதா---பெரிய சார்ல்ஸ் ப்ரான்ஸன்னு நினைப்பு---’ஹாய் பேபி, கம் வித் மி’ன்னான். நான் உடனே என் செருப்பைக் கழற்றிக் காட்டி, ’லுக், நேத்துதான் பர்மா பஸார்ல வாங்கினேன். ஃபாரின் சரக்கு. நல்லா மெத்துனு இருக்கும்!’னு சொன்னேன். அவ்வளவுதான், கூட்டத்தில அவன் போன இடம் தெரியலை."

தோள்களை உயர்த்திவிட்டுத் தொடர்ந்தாள்.

"எதுக்கு சொல்றேன்னா, நான் பார்க்க மாடர்னாத் தெரியலாம். ஆனால் நானும் வசந்தி மாதிரிதான். ஸாஃப்ட் அன்ட் மாடஸ்ட். என்ன கொஞ்சம் வாயடிப்பேன். விகல்பம் இல்லாம எல்லோரோடையும் சோஷலா பழகுவேன்."

"தட்’ஸ் நைஸ். பாஸந்திகூட உன்னைமாதிரி ஸ்வீட்டா இருக்கு."

"பாஸந்தி ஸ்வீட்டாத்தான் இருக்கும். நல்லா இருக்கா சொல்லு."

"ரியலி குட்."

"அய்யர், கேட்டீங்களா?"

"என்னம்மா?"

"உங்க கடை பாஸந்தி ரொம்ப நல்லா இருக்காம். சார் சொல்றார்."

கல்லாவில் இருந்த அய்யர் அவனைப் பார்க்க, "சார் யார் தெரியுமா? எங்க அத்தை பையன்" என்றாள்.

"இவள் இப்படித்தான் எல்லோரோடையும் வாயடிப்பாள். ஷ், கௌசி! உன் ராமாயணத்தை எல்லாம் வெளில வெச்சுக்கலாம். அய்யர், சீக்கிரம் காஃபி கொண்டாங்கோ."

அய்யர் காஃபி கொண்டு வந்ததும் அவன் அவர் கையில் பத்து ரூபாய்த்தாள் ஒன்றைத் திணித்தான்.

"என்ன தைரியம்? எங்க காலேஜ்க்கு வந்து எங்களுக்கே ட்ரீட் கொடுக்கறயா? அய்யர், எப்படி நீங்க அந்த நோட்டை வாங்கலாம்?"

"பரவாயில்லை அய்யர். பாக்கி சில்லறையை நீங்களே வெச்சிக்கோங்கோ", என்று எழுந்தான்.

"கமான், கௌசல்யா! நேரமாச்சு. எனக்கு இன்னும் அரை மணியில ஹாஸ்டல்ல இருக்கணும்."

"ராஜா, நீ பெரிய ஆள்தான். நான்தானே ஸெலிபரேட் பண்றதாச் சொன்னேன்."

"நோ, நான்தான் முதலில். அடுத்து நீ."

"அப்படியா?" என்று அரைமனதாகத் தலையாட்டிவிட்டு, நடுவிரலைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்துக் கொஞ்சம் யோசித்தாள்.

"ரைட், நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே? உனக்கும் வசந்திக்கும் எங்காத்துல டின்னர். நான் இப்பவே வார்டன்ட்ட சொல்லி வசந்தியை அழைச்சிட்டுப் போறேன். நாங்கதான் அவளுக்கு லோகல் கார்டியன்னு ஏற்கனவே பேர், விலாசம்லாம் தந்து அனுமதி வாங்கியாச்சு. கார்த்தால சரியா பதினொரு மணிக்கு டின்னர். ஒம்பது ஒம்பதரைக்கெல்லாம் வந்திரு, என்ன? அப்பாகூட உன்னைப் பார்க்கணும்னார். அவர் போனவாரம் முழுக்க ஈரோடு டூர் போய்ட்டதால உன்னைக் காலேஜ்ல வந்து பார்க்க நெனைச்சும் முடியல."

"அதனாலென்ன? நாளைக்கு நான்தான் ஆத்துக்கே வரேனே."

"அப்ப சரியா கார்த்தால லேடஸ்ட் பை ஒம்பதரை மணி. மறந்துடாதே. தூங்கிடாதே!"

"ஓகே, பை! பை வசந்தி! நாளைக்குப் பார்க்கலாம்."

"பை ராஜா!" என்று பெண்கள் இருவரும் கோரஸ் பாட, கௌசல்யா, "நான் ஒரு முட்டாள்!" என்றாள்.

நின்றான். "எஸ்?"

"என்ன எஸ்? எங்க வீடு தெரியுமா உனக்கு? தில்லை நகர் மூன்றாவது கிராஸ் நம்பர் பதினஞ்சு. வாசல்ல அப்பா பேர் போட்ட போர்டும் ’நாய் ஜாக்கிரதை’ போர்டும் இருக்கும்."

"ஆல்ரைட். நாளைக் காலை பார்க்கலாம்."

*** *** ***
(தொடரும்)

ரமணி
11-03-2013, 03:09 AM
பயணம்: நாவல்
ரமணி
17


பெண்கள் அறிவை வளர்த்தால் -- வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.
---மஹாகவி பாரதியார், முரசு 10

மறுநாள். காலை சரியாக ஒன்பதரை மணிக்கு அவன் அவள் வீட்டு கேட்டைத் திறக்க முயன்றபோது ஒரு வெள்ளைப் பாமரேனியன் ஆக்ரோஷக் குரலில் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

நாயின் குரல் கேட்டு மாடி ஜன்னலில் ஓர் முகம் தோன்றி, சில விநாடிகளில் விரைந்த காலடி ஓசைகளும், "ஸ்காம்ப்! கீ கொயட்" அதட்டலும் தொடர்ந்து, "ஹலோ ராஜா! குட் மார்னிங்! பங்ச்சுவல் டு த மினிட்" என்ற குரலும் கேட்டன.

வெள்ளை மாக்ஸியின் அலைஅலையான மடிப்புகளும், பூவேலைகளும், கைகளில் பெல்ஸும் ராஜ் கபூரின் ’பாபி’யை நினைவூட்ட, ஷாம்பூவில் தோய்ந்து குளித்த கூந்தல் அலைபாய, நெற்றியில் செயற்கைத் திலகம் மினுமினுக்க, ஃபாரின் ஸ்ப்ரேயின் சுகந்தம் தென்றலாகச் சூழ்ந்துகொள்ள, கௌசல்யா ஓடிவந்து கதவைத் திறந்து அவனை வரவேற்றது ஒரு கணம் மூச்சைப் பறித்துக்கொள்ளும் காட்சியாக இருந்தது.

ஹாலில் வசந்தி சோபாவில் சாய்ந்துகொண்டு ’குமுதம்’ பார்த்துக்கொண்டிருந்தாள். "வா ராஜா" என்றாள்.

மாமா மாமியின் சுவடுகூடக் காணோம்.

"அப்பா இல்லை?"

"குளிச்சிண்டிருக்கார். அம்மா சித்த முன்னாடி எதிர்வீட்டு வரைக்கும் போய்ட்றேன்னு போனா. நான் போய் கூப்பிடவா?"

"வேண்டாம், வரட்டும்."

"ஃபீல் அட் ஹோம் ராஜா! வீட்டைப் பார்க்கறையா?"

"அப்பா வரட்டுமே?"

"சரி உக்காந்துக்கோ. இதோ வரேன்."

திரும்பி வந்தபோது ஒரு ட்ரேயில் மூன்று கோப்பைகளில் காப்பியும் ஒரு சின்ன எவர்சில்வர் தட்டில் கேக்கும் கொண்டுவந்தாள்.

"என்ன விசேஷம் கேக் எல்லாம்?"

"சொல்ல மறந்துட்டேன் ராஜா. இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்."

"என்ன கௌசல்யா? முன்னாடி ஒரு வார்த்தை சொல்றதில்லை?"

"ஐயோ நான் நேத்து நெஜமாவே மறந்துட்டேன்! என்னோட நட்சத்திரம் அடுத்த வாரம் வருது. ஆங்கிலத் தேதிப்படி இன்னிக்கு."

"விளையாடாதே கௌசல்யா. உனக்கு நேத்து ஞாபகம் இல்லைனு என்னை நம்பச் சொல்றியா? ஒரு வேளை ஃபர்ஸ்ட் டைம் என்னைப் பார்த்ததால சொல்லலியா? கமான், நான் ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்."

"ப்ராமிஸ் ராஜா! நேத்து உன்னைப் பார்த்த சந்தோஷத்துல மறந்தே போய்ட்டேன். வீட்டுக்குப் போறச்ச ஞாபகம் வந்து வசந்திகிட்ட சொன்னேன். ’வசந்தி ராஜாகிட்ட சொல்ல மறந்துட்டேன். தப்பா நினைச்சுக்கப் போறான்’னு. வசந்தி சொன்னா, ’டோன்ட் வொர்ரி, கார்த்தால சர்ப்ரைஸா சொல்லிக்கலாம்’னு. மத்தப்படி நான் நெஜமாவே மறந்துட்டேன்."

கண்களை உயர்த்தி, தலையை ஆட்டியபடி அவள் பேசிய விதம் ’நிறம் மாறாத பூக்கள்’ ரத்தியை நினைவூட்டியது.

விஜய், எனக்கு ஸ்விம்மிங் தெரியாது! நா பொய் சொல்லலை விஜய்... நெஜமாவே எனக்கு ஸ்விம்மிங் தெரியாது!

கௌசல்யா அவன் மௌனத்தைக் கலைத்தாள். "ராஜா, உனக்கு நமஸ்காரம்---"

"நோ!"

"நான் உன்னையும் வசந்தியையும் விட கிட்டத்தட்ட ஒரு வயசு சின்னவ! வசந்திக்குக் கூடப் பண்ணினேன்" என்று அவன் தடுத்ததையும் மீறி நமஸ்கரித்தாள்.

"என்ன கௌசல்யா? நான் ஒண்ணும் அவ்வளவு பெரியவன் இல்லை. தவிர, எனக்கு இந்த சென்டிமென்ட்லாம் பிடிக்காது."

"இது ஒண்ணும் சென்டிமென்டல் இல்லை. நான் மனப்பூர்வமான அக்கறையோடதான் உனக்கு நமஸ்காரம் பண்ணினேன்."

"எனக்கொண்ணும் சந்தேகமில்லை. இருந்தாலும்... எனிவே, பெஸ்ட் விஷஸ் ஃபர் திஸ் அன்ட் எவெர் ஸோ மெனி பர்த்டேஸ்!" என்று கேக்கில் ஒரு துண்டு எடுத்து ஊட்டிவிட்டான். "சொல்லியிருந்தா ஒரு கிஃப்ட் வாங்கி வந்திருப்பேன். பரவாயில்லை. என்னோட நினைவா இந்த வில்ஸன் கோரோநெட் பால்பென் உனக்குத் தரேன்."

"தாங்க் யு. ஐ வுட் லவ் தட் கிஃப்ட். நேத்திக்கே எனக்கு அந்தப் பேனா மேலே ஒரு கண்!"

"சரிதான். வசந்தி, நீ என்ன பரிசு கொடுத்தே?"

"ஆர்தர் ஹெய்லியோட ’ஏர்போர்ட்’."

"அது இன்னும் மெட்ராஸ்லயே விற்ப்னைக்கு வரல்ல போலிருக்கே? குமுதத்தில ரெவ்யு வந்தது."

"யார் சொன்னா? மெட்ராஸ் ஹிக்கின்பாதம்ஸ்ல கிடைக்குது. என் தோழி ஒருத்தி வாங்கி வந்தா."

அவன் மௌனத்தைப் புரிந்துகொண்டு தொடர்ந்தாள். "நானே இன்னும் படிக்கலை ராஜா. என்கிட்ட இருந்தா என்ன கௌசிகிட்ட இருந்தா என்னன்னு ப்ரசென்ட் பண்ணிட்டேன்."

"கார்த்தால அம்மாவும் நானும் வசந்தியும் மலைக்கோவிலுக்குப் போயிட்டு வந்தோம். அடுத்த வாரம் என்னோட நட்சத்திரம் வரும்போது போய் அர்ச்சனை பண்ணுவோம். அப்ப நீயும் வா ராஜா, என்ன?"

காப்பி கோப்பைகளை உள்ளே வைத்துவிட்டு வந்து சொன்னாள். "ராஜா, அப்பா இப்பதான் குளியலை முடிச்சிண்டு பூஜை அறைக்குள்ளே போயிருக்கார். சந்தி ஜபம் பண்ணி வெளியில் வர அரை மணியாகும். அதுவரை வா, வீட்டைச் சுத்திப் பார்க்கலாம். வசந்தி, நீயும் வா."

"நான்தான் நேத்திக்கே பாத்தாச்சே!"

"பரவாயில்லை வாயேன்."

அந்த வீடு மிகச் சுத்தமாக, கவர்ச்சியாக, அவளைப் போலவே மாடர்னாக இருந்தது. சுவர்களில் தகுந்த மென்னிறங்களில் டெகோ-லம் மின்னியது. தரையில் வெள்ளை மொஸைக் எதிரொளிப்பில் உருவங்களும் நிழல்களும் கூடின. பிரிந்தன.

டிராயிங் ரூம் சுவர்களை ஒன்றிரண்டு ’பத்திக்’ ஓவியங்களும், ஓலை, கோரை கேன்வாஸ், மரம் முதலியவற்றில் தீட்டப்பட்ட ஓவியங்களும் அலங்கரித்தன.

"இந்த பெயின்டிங்லாம் என்ன விலை இருக்கும்னு நினைக்கறே, ராஜா?"

"எனக்கு ஓவியம் பத்தி அதிகம் தெரியாது கௌசல்யா. பாஸ்கர் கரெக்டா சொல்லுவான்."

"சும்மா தோராயமா சொல்லேன்!"

"ஒவ்வொரு படமும் முப்பது நாப்பது ரூவா இருக்கலாம்."

மியூசிகல் காலிங் பெல் போல ’க்ளிங்’ என்றாள்.

"சாரி, ரொம்பக் குறைவா சொல்லிட்டேனா?"

"எல்லாம் நான் பெயின்ட் பண்ணினது."

"நெஜமாவா!"

"ப்ராமிஸ்! வேணும்னா இப்பவே பெயின்ட் பண்ணிக் காட்டவா?"

"நேத்து என்னையும் இப்படித்தான் ஏமாத்திட்டா."

அந்த இயற்கைக் காட்சிகளும், விதம்விதமாகப் பெண்களின் ஓவியங்களும், தலைகால் புரியாத ஒன்றிரண்டு ’மாடர்ன் ஆர்ட்’களும் அசரவைத்தன.

"ஒரு எக்ஸிபிஷன் நடத்தலாம் போலிருக்கே கௌசல்யா?"

"இன்னும் சிலது மாடியில அப்பா ரூம்லலயும் என்னோட ரூம்லயும் இருக்கு."

ஒவ்வொரு அறையிலும் ஃபர்னிச்சர் அளவாகக் கலையழகுடன் போடப்பட்டிருந்தன. அங்கங்கே புதிய மலர்கள் பிளாஸ்டிக், சைனா, பித்ரி ’வாஸ்’களில் உற்சாகக் கொத்துகளாக மலர்ந்திருந்தன.

(தொடரும்)

ரமணி
12-03-2013, 01:53 AM
டிராயிங் ரூமில் இருந்து ஹாலுக்கு வர இரண்டு வாசல்கள். ஹாலுக்கு வந்ததும், "இதுதான் எங்க லிவிங் ரூம்", என்றாள்.

அந்த ஹால் அவன் வகுப்பறைகளைவிடப் பெரிதாக, ஒரு பணக்காரக் கல்யாண மண்டபத்தில் ஹால் போல உயரமான கூரையுடன் சுற்றிலும் தெரியும் மாடி அறைகளுடன் அழகிய ஃப்ரென்ச் ஜன்னல்களுடன் காணப்பட்டது. வலப்புறம் சுவரில் ஒன்றிரண்டு புகைப்படங்களும், பெயின்ட்டிங்களும், ஓர் அழகிய வெளிநாட்டுக் கடிகாரமும் இருந்தன. டிராயிங் ரூம் கதவு நிலையருகில் கார்பெட் விரித்த மாடிப்படிகள் அடக்கமாகத் தெரிந்தன. மணி பத்தடிக்க, கடிகாரத்தின் குயில் பத்துமுறை இனிமையாகக் கூவியது.

இடப்புறச் சுவரை இரண்டு ஃப்ரென்ச் ஜன்னல்கள் மெல்லிய திரைகளுடன் அலங்கரித்தன. விலக்கப்பட்டிருந்த திரைகளின் வழியே காம்பௌன்ட் சுவரும் அதற்கு மேல் எட்டிப்பார்த்துத் தலையாட்டும் போகன்வில்லாவும் தெரிந்தன.

ஹால் நடுவில் உத்திரத்தில் இருந்து அழகிய, பெரிய, சரவிளக்கு ஒன்று தொங்கியது. அதன் கண்ணாடி மணிகள் காற்றில் சிலிர்த்தன.

சரவிளக்கின் இருபுறமும் நான்கு கூரை விசிறிகளும், ரிஃப்ளெக்டர் மூடிகளுக்குள் மறைந்திருக்கும் குழல் விளக்குகளும் அணிவகுத்து இருந்தன. தவிர அங்கங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய விளக்குகள் சுவரில் பொருத்தப்பட்டு இருந்தன.

கூரை விசிறிகளின் கீழ் எதிரும் புதிருமாக இரண்டு பெரிய, இரண்டு சின்ன சோபா செட்கள் போடப்பட்டு நடுவில் நீளமான, ஸன்மைகா வேய்ந்த டீப்பாய் அடியில் செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் ஒழுங்காக அடுக்கியிருந்தன. சோபாக்களை இணைத்த வட்ட முக்காலிகளில் பூஜாடிகளும் ஆஷ்ட்ரேக்களும் ஒரு மேஜைக் காலண்டரும் இருந்தன.

இடப்புறச் சுவரில் ஜன்னல்களுக்கு நடுவில் இருந்த பகுதியில் ஒரு பெரிய ’ஷோகேஸ்’ தன்னுள் கொலுவீற்றிருந்த பொம்மைகளையும் கலைப் பொருட்களையும் புகைப்படங்களையும் கொண்டு அந்தக் குடும்பத்தின் நுண்கலைச் சுவைகளுக்குக் கட்டியம் கூறின.

ஹாலின் பின்புறம் சமையல் கட்டுக்குச் செல்லும் கதவு நிலையை அடுத்து நடுவில் ஒரு சிறிய டைனிங் டேபிளும் சுவர் ஓரத்தில் ஒரு ஜோடி சோபா செட்டும் விரைவு உணவுக்காகவும், விருந்தினர்களுக்கு வசதியாகவும் போடப்பட்டிருந்தன.

டிராயிங் ரூம் செல்லும் கதவு நிலைகளுக்கு இடைப்பட்ட சுவரில் தேக்குமர ஷெல்ஃகள் வரியிட்டிருக்க, நடுவில் ஒரு ஃபிலிப்ஸ் மேஜர் ரேடியோ வீற்றிருந்தது. மற்றொரு பகுதியில் ஒரு அகாய் ’ஸ்டீரியோ ரெகார்ட் ப்ளேயர்’உம் அருகில் ஒரு நேஷனல் பானசானிக் ’கேஸட் ரிகார்டர்’உம் அவற்றின் கீழிருந்த ஷோகேஸ்களில் ரெகார்ட்களையும் எண்ணற்ற கேஸட்களையும் கொண்டு சுவரில் பதிந்த ஸ்டீரியோ பெட்டிகளில் சங்கீத அலைகளை ஒரு விசையின் சொடுக்கில் வெளியிடத் தயாராக வைத்திருந்தன. ஓரத்தில் சிவப்பு டெலிஃபோன். அருகில் இன்டர்காம். சுவர்களில் அழகிய ’லாம்ப்ஷேட்’கள். ’கன்ஸீல்ட் வயரிங்.’

"என்னென்ன ரெகார்ட்ஸ், கேஸட்ஸ் இருக்கு, கௌசல்யா?"

"எல்லாம்."

"எல்லாம்னா?"

"அம்மாவுக்குக் கர்நாடக சங்கீதம். அப்பா எல்லாம் கேட்பார். எனக்கு ஹிந்தி, தமிழ், ஆங்கிலத் திரையிசைப் பாடல்கள். எல்லாம் ரெகார்ட்ஸ் வாங்க கட்டுப்படி யாகாதுங்கறதால பெரும்பாலும் கேஸட்கள்தான். அதுவும் ரேடியோவிலிருந்து நானே ரெகார்ட் பண்ணினது. அப்புறம் கொஞ்சம் பக்தி பாடல்கள், தமிழ் நகைச்சுவை உரையாடல்கள், இதுமாதிரி."

"நானும் கௌசியும் நேத்து ராத்திரி ரொம்பநேரம் தமிழ், ஹிந்தி பாட்டு கேட்டோம். நைஸ் ரெகார்டிங்."

"நான்கூட இன்னிக்குக் கேக்கணுமே?"

"கேட்டாப் போறது."

’லிவிங் ரூம்’ஐ அடுத்து சமையலறையும் ’டைனிங் ஹால்’உம் எதிர் எதிராக இருந்தன. சமையல் அறையில் பொருட்கள் மிக ஒழுங்காக, வசதியாக, நாகரிகமாக ஸன்மைகா வேய்ந்த ஷெல்ஃப்களில் அடுக்கப் பட்டிருந்தன. மிக்ஸி, கிரைன்டர், ஒரு மூலையில் சுவரோரம் இன்டர்காம். மேடையில் காஸ் அடுப்பு விர்ரிக்க, ஒருவர் மும்முரமாக சமையல் செய்துகொண்டிருந்தார்.

"We have a very good cook in மணி அய்யர். தஞ்சாவூக்காரர். அய்யர், சாப்பாடு ரெடியா?"

"அநேகமா முடிஞ்சமாரிதாம்மா."

சாப்பாட்டு அறையில் இரண்டு மேஜைகள் ஒன்றாக இணைந்து ’ஃபார்மிகா டாப்’ பளபளக்க, சுற்றிலும் எட்டு நாற்காலிகள். அறை ஓரத்தில் ஒரு வோல்டாஸ் ஓபல் ’ஃப்ரிஜ்’ அடக்கமாக நின்றிருந்தது.

கிச்சனை அடுத்து ஒரு சின்ன தாழ்வாரமும் அதன் நடுவில் துளசி மாடமும், அப்பால் ’பாத்ரூம்’களுக்கு வழியும் தோட்டமும், கடைசியில் பின்பக்க காம்பௌன்ட் சுவரும் தெரிந்தன.

மறுபடியும் ஹாலுக்கு வந்தார்கள்.

"அப்பா மாடில இருக்காரா?"

"ஆமாம். பூஜை அறை மாடில இருக்கு. பொதுவா எல்லார் வீட்லயும் பூஜை அறை கீழ்த் தளத்தில்தான் இருக்கும். கேட்டா, ’கடவுள் மேலதான் இருக்கணும்’பார்."

"அதுவும் சரிதான்."

டிராயிங் அறைக்கு நேர்மேலே இருந்த பூஜை அறையிலிருந்து ஊதுவத்திப் புகையின் மணம் வந்தது. தொடர்ந்து மெலிதாக மணிச்சத்தம் கேட்டது.

மாடியில் இருந்து பார்க்கும்போது ஹால் ஒரு சினிமா செட் போலப் பளபளத்தது.

பூஜை அறையினை ஒட்டி ஒரு ’ஃபேமலி ரூம்’உம், அவற்றின் முன் ஓடிய செவ்வக வடிவ நடைவழியில் இடப்புறம் நான்கு அறைகளும் வலப்புறம் மூன்று அறைகளும் கதவுகளாகத் தெரிந்தன.

"இடது பக்கம் முதல் அறை என்னோடது. அடுத்தது அம்மாவோடது. அப்புறம் அப்பா. அந்தக் கடைசி அறையும் அதுக்கு எதிர்த்தாப்பல இருக்கும் அறையும் விருந்தினர் வந்தால் தங்க. இந்தப் பக்கம் முதல் அறை அப்பாம்மா பெட்ரூம். நடுவில் ஸ்டடி."

அவள் தன் அறையின் கைப்பிடியைத் திருக உள்ளே நுழைந்தார்கள்.

நுழைந்ததும் அந்த ’ஸ்ப்ரே’யின் மணம் வந்தது. கௌசல்யாவின் அறை அவன் எதிர்பார்த்ததை விட மிகவும் சுத்தமாக, ஒழுங்காக இருந்தது.

வலப்புறம் படிக்க ஒரு மேஜை இரண்டு நாற்காலிகள். மேஜையின் இன்டர்காம். சுவரில் பதிந்த ஷெல்ஃப்களில் புத்தகங்கள். ’ஷேக்ஸ்பியரின் கம்ப்ளீட் வொர்க்ஸ், ஜேன் ஆஸ்டின் நாவல்கள், யேட்ஸ் கவிதைகள்...’ அடுத்த ஷெல்ஃபில் பழுப்பு நிறக் காகிதத்தில் சீராக உறை போடப்பட்ட நோட்டுப் புத்தகங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.

கௌசல்யாவின் கையெழுத்து நளினமாக, நேர்த்தியாக, அடித்தலே இல்லாமல் அச்சுக்கோர்த்தாற்போல் இருந்தது.

அறையின் இடப்புறம் ஒரு இரும்பு சாய்வு நாற்காலி அருகில் சுவரின் கீழ்ப்பகுதியில் புத்தகங்கள் கண்ணாடி கேஸில்.

அறையின் நடுவில் ஒரு திரை. அதற்கப்பால் ஸ்டீல் கட்டில் ஃபோம் மெத்தை. அருகில் ஒரு அலங்கரிப்பு மேஜை, துணிமணி அலமாரிகள்.

"எதுக்கு நடுவில ஸ்க்ரீன்?"

"ஒரு ப்ரைவஸிக்காகத்தான். தவிர, எனக்குப் படிக்கும்போது படுக்கை கண்ல பட்டா கொஞ்ச நேரம் படுத்துண்டே படிக்கலாமேன்னு தோணும். அப்படியே தூக்கம் வந்திடும். இதைத் தவிர்க்கவே திரை. எப்படி இருக்கு என் ரூம்?"

"எக்ஸலன்ட். இதெல்லாமும் நீ பெயின்ட் பண்ணினதா?"

சுவரில் மாட்டியிருந்த சித்திரங்கள் கீழே பார்த்தவற்றை விட அழகாகவும் உயர்தரத்திலும் இருந்தன.

வெண்ணிலா காய்ந்திருக்க நிலவொளியில் பளபளக்கும் ஒரு ’ப்ரைவேட் ரன்வே’. அதில் ’டேக் ஆஃப்’ பண்ணத் தயாராக இருக்கும் ஒரு விமானம்.

அம்மா பார்த்திருக்கக் குனிந்து தன் ஷூலேஸைத் தானே கட்டிக்கொள்ளும் வெள்ளக்காரக் குழந்தை.

ஆடுகள் அங்கும் இங்கும் ஓடக் கையில் துறட்டியுடன் அவற்றை ஒன்றுசேர்க்க முற்படும் கோவணாண்டிச் சிறுவன். அந்த லான்ட்ஸ்கேப் இயற்கையாக இருந்தது.

"என்ன ரேஞ்ச் ஆஃப் சப்ஜக்ட்ஸ், ஸிம்ப்ளி பியூட்டிஃபுல், இல்ல?" என்றாள் வசந்தி.

"யு ஆர் கிரேட், கௌசல்யா?"

"நோ ஸச் திங். சில பேருக்குப் பாட வரும். சில பேருக்குக் கவிதை எழுத வரும். எனக்கு பெயின்ட் பண்ண வரும், அவ்வளவுதான்."

ஸ்டடியில் நுழைந்ததும் அந்த நான்கு சுவர்களில் பதிந்த உயரமான புத்தக அலமாரிகளும், நடுவில் நீளமான மேஜையும், டைப்ரைட்டரும், ’கார்ட்-இன்டெக்ஸ்’ இழுப்பறைகளும் ஒரு மினி லைப்ரரியை அந்து உருவாக்கியிருந்தன.

புத்தகங்கள் அவன் கல்லூரி நூலகத்தில் உள்ளதுபோல் ’ட்யூவி டெஸிமல்’ எண்ணமைப்பில் எண்ணிடப்பட்டு உரிப்பொருள் வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆங்கிலம், தமிழ் இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், பொழுதுபோக்கு, குழந்தைகள் பகுதி, இதர உரிப்பொருள்கள்.

ஆங்கில நாவல் வரிசையில் முதலில் ஜேன் ஆஸ்டின்.

"தமிழ் நாவல்கள், சிறுகதைகள் படிப்பியா?"

"நிறைய. கல்கிமுதல் சுஜாதாவரை முக்கியமான நாவல்கள், கதைகள் படிச்சிருக்கேன்."

பார்த்தான். ஐநூறு புத்தகங்களுக்குக் குறையாது! அவளை அதிசயமாகப் பார்த்தபோது, "என்னோட வாழ்க்கையை ஓவியம், இலக்கியத்துக்கு அர்ப்பணிக்கப் போறேன்", என்றாள்.

"எ லாஃடி ஆம்பிஷன், கௌசி."

"யு ஆர் கொய்ட் அன் இன்ஸ்பிரேஷன், கௌசல்யா."

"ரெண்டு பேரும் என்னை ஓவராப் புகழறீங்க. நான் எதுவுமே இன்னும் ஸீரியஸா ஆரம்பிக்கலையே? ரைட் தென், மணி பத்தரையாச்சு. வாங்க போகலாம். அப்பா கீழே காத்திருப்பார்."

*** *** ***
(தொடரும்)

ரமணி
13-03-2013, 01:19 AM
பயணம்: நாவல்
ரமணி
18


மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
---மஹாகவி பாரதியார், மஹாசக்திக்கு விண்ணப்பம் 1

"ஹலோ ராஜா! எப்படி இருக்கே? பார்த்து ரொம்ப வருஷமாச்சு!"

கீழே இறங்கியதும் மாமா அவனை அன்புடன் கட்டிக்கொண்டார்.

"நல்லா இருக்கேன் மாமா! நீங்க எல்லாரும் சௌக்யம்தானே?"

அந்த உறவின் மனித உருவை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறான். மாமா நல்ல நிறமாக, பணக்கார தோரணையுடன், சுருள் முடிகளுடன், ’பியர்’ஆல் செழித்த கன்னக் கதுப்புகளுடன், இலேசாகச் சிவந்த கண்களுடன், அவனைவிடக் குள்ளமாக நின்றார். அவர் அவனைக் கட்டிக்கொண்டபோது மெல்லிய சிகரெட் நெடி அடித்தது.

அவரைப் பார்த்தபோது அப்போதுதான் பூஜையை முடித்துவிட்டு வந்தவராகத் தெரியவில்லை. நெற்றியில் விபூதியின் வரிகளை அறவே காணோம். பேன்ட், ஷர்ட் அணிந்துகொண்டு வெளியில் கிளம்பத் தயாராகிவிட்டவர்போல் காணப்பட்டார்.

கேட்க வாயெடுத்தபோது, "நான் பூஜை பண்ணினதையே சந்தேகிக்கத் தோண்றது, இல்லே? Work while you work, pray while you pray, and eat while you eat! I have dressed up for dinner!" என்றார்.

"அப்பா காரியங்களை எல்லாம் இங்க்லிஷ் பாணிலதான் செய்வார். முடிஞ்சவரை நாங்களும் அவரை ஃபாலோ பண்றோம். இப்ப டின்னர் முடிஞ்சதும் பாரேன், பழையபடி ரிலாக்ஸ்டா வேஷ்டிக்கு மாறிடுவார்."

அவனுக்கு மாமாவைப் பார்க்கப் பெருமையாக இருந்தது.

"மாமியும் உங்களை மாதிரி வேளைக்கு ஒரு டிரெஸ் பண்ணுவாங்களா?"

"அவள் கிடக்கறா, நாட்டுப்புறம்", என்றார் ஈஸியாக. அந்த சமயம் பார்த்து மாமி வந்துவிட, "லக்ஷ்மீ, யார் வந்திருக்கா பாரேன்!"

"அட, ராஜாவா! வாப்பா, சௌக்யமா? இப்பவான்னும் மாமாவாத்துக்கு வழி தெரிஞ்சுதா? கௌசல்யா சொன்னா நீ இந்த ஊர்லதான் படிக்கறதா. உக்காந்துக்கோ வசந்தி, ஏன் நிக்கறே? அம்மா அப்பா சௌக்யமா?"

"எல்லோரும் நல்லார்க்கா, மாமி. உங்களைப் பத்தி அடிக்கடி நினைச்சுப்பா. எனக்கு நீங்க இந்த ஊருக்கு வந்துட்டது பத்தித் தெரியாது. நேத்துதான் காலேஜ்ல கௌசல்யாவைப் பார்த்தபோது சொன்னா."

"எங்களுக்கும் போன வாரம்தான் நீயும் வசந்தியும் இந்த ஊர்ல படிக்கறது பத்தித் தெரியும். வந்து பார்க்கலாம்னா மாமா ஒரு வாரமா ஊர்ல இல்லை. ஈரோடு டூர் போயிட்டார்."

"சொன்னா, கௌசல்யா சொன்னா."

மாமி கொஞ்சம் பருமனாக, ஆறு கெஜம் பட்டுப் புடவையில், மூக்கிலும் காதுகளிலும் வைரம் மின்ன, ஒரு கையில் தங்க வளையல்கள் ஒலிக்க---மற்றதில் லேடீஸ் வாட்ச்---விரல்களில் தங்க மோதிரங்கள் பளிச்சிட, கொஞ்சம் வயதுதெரியும் முகத்தில் பவுடர் திரையிட்டிருக்க, இதழ்களில் வெற்றிலைச் சிவப்பு மீதமிருக்க, பழமையும் புதுமையும் கலந்து நின்றாள்.

"எல்லாரும் இப்படி சோபாவில் உக்காந்து பேசிண்டிருங்கோ. இதோ வந்துடறேன்", என்று மெட்டி ஒலிக்க உள்ளே சென்றாள்.

மாமாவின் கம்பெனியைப் பற்றிக் கேட்டான்.

"இந்தியால இருக்கற நாலஞ்ச் லீடிங் ஃபார்மஸ்யூடிகல் கம்பெனில எங்க கம்பெனியும் ஒண்ணு. ஃபாரின் கொலாபரேஷன். பாம்பேல ஹெட் ஆஃபிஸ். Our products cover a wide range of health applications. சாதாரண ஜலதோஷத்லேர்ந்து டி.பி., அல்சர் மாதிரி சிக்கலான வியாதி வரைக்கும் மருந்துகள் தயாரிச்சிருக்கோம்னா பார்த்துக்கோயேன்."

"நீங்க எத்தனை வருஷமா இருக்கேள் இந்தக் கம்பெனில?"

ஒரு புன்னகையுடன் கௌசல்யாவைப் பார்த்தார்.

"அப்பா இந்தக் கம்பெனிக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேலாய்ட்டது."

இதற்குள் மாமியும் வந்துவிட, அவன் கேள்வியில் துணுக்குற்றாள்.

"என்ன அப்படிக் கேட்டுட்டே? எங்களுக்குக் கல்யாணம் ஆன நாள்லேர்ந்து மாமா மெடிகல் ரெப்ரஸன்டேடிவ் வேலைலதான் இருக்கார்."

"அதுக்கில்லை மாமி, அந்தக் காலத்தில மாமா ’இந்த வேலை பிடிக்கலை அந்த வேலை பிடிக்கலை’ன்னு ஒவ்வொரு வேலையா மாத்திண்டே இருப்பார்னு அப்பா சொல்லுவா. அதான் கேட்டேன்."

"உங்கப்பாவுக்கு என்னைப் பத்தி ஏதாவது சொல்லலைன்னா தூக்கம் வராது. அந்த நாள்ல எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். கொஞ்சநாள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. உங்கம்மா கூட எங்களை சரியா ட்ரீட் பண்ணலை..."

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் மாமா தொடர்ந்தார். "என்னைப் பொறுத்தவரைக்கும் நான் பழசெல்லாம் மறந்துட்டேன். அவா இன்னும் மனசில வெச்சுண்டிருக்காளோ என்னவோ?"

வசந்தி முகத்தில் சலனமில்லாமல் அமர்ந்திருக்க,. கௌசல்யா தன் தந்தையை அன்புடன் கடிந்துகொண்டாள்.

"ராஜாவையும் வசந்தியையும் டின்னர்க்கு இன்வைட் பண்ணிட்டு ஏன்பா ஆறிப்போன பழங்கதையெல்லாம் கிளறிண்டு? நாமதான்---"

"அதுக்கில்லைம்மா, அவனுக்கும் நம்ம தரப்பு விஷயம் தெரியணுமோன்னோ? எல்லாரும் என்னைத் தப்பாப் புரிஞ்சுண்ட மாதிரி அவனும் நினைச்சிடப்படாது இல்லையா?"

"எல்லாம் அவனுக்கும் தெரிஞ்சிருக்கும் பா. நீங்க இப்ப விடுங்கோ இந்த விஷயத்த?"

அன்றைய தேதிவரை அவனுக்கு அந்தக் காலத்தில் அப்பாவுக்கும் மாமாவுக்கும் இடையில் இருந்த மனஸ்தாபம் பற்றிய விவரங்கள் தெரியாது. அப்பாவோ கேட்கவே வேண்டாம். எந்த விஷயத்தையும் சுலபமாக வெளியில் சொல்லமாட்டார். அம்மாவுக்கும் மாமாவின் மீது கோபம் அல்லது வருத்தம் அதிகமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தூண்டித் துளைத்து கேட்டபோதுகூட ஏதோ சொத்து சம்பந்தமான விஷயம் என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அம்மாவிடைருந்து அறிய முடியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அப்பா அம்மாவுக்கு மாமாவையும் அவர் குடும்பத்தையும் பிடிக்கவில்லை. சொந்தத் தம்பி என்றுகூடப் பார்க்காமல் பகைமை பாராட்டும் அளவுக்கு அப்படி என்ன விஷயம் என்பது புதிராக இருந்தது.

சரியாகப் பதினொரு மணிக்கு சமையற்காரர் டின்னர் அறிவிக்க அவர்கள் கலைந்து மீன்டும் டைனிங் ஹாலில் சந்தித்தார்கள். எல்லோரும் மடியில் நாப்கின் விரித்துக்கொண்டு ஆவி பறக்கும் தக்காளி சூப் கவர்ந்திழுக்க, கண்ணுக்குத் தெரியாத ராட்டினத்தின் இடைவிடாத சுழற்சியில் ஸ்பூன் கொண்டு சூப் இறைக்கத் தலைப்பட, மாமா மட்டும் அனைவரையும் மாறிமாறிப் பார்த்தபடி தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றி அளந்த பிரதாபங்கள் அலைஅலையாய் நினைவில் தோன்றி மறைந்தன.

மாமாவின் ’ஸேல்ஸ்மன்ஷிப்’ அவரது வார்த்தைகளில் தெரிந்தது. அந்த வார்த்தைகள் எழுதிய ஓவியத்தில் அவரும் அவர் குடும்பத்தாரும் தன்னிகரற்றுத் தோன்றினார்கள்.

எல்லா ’மெடிகல் ரெப்’களும் ’பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்’ என்று அடிக்கடி வேலையை நீத்து இரண்டொரு வருடத்தில் வேறு கம்பெனிகளை நாடித் தஞ்சம் புக, மாமா மட்டும் பல வருஷங்கள் ஒரே கம்பெனியில் தொடர்ந்து, சம்பளத்தில் ஏணிப்படிகளில் ஏறி, கம்பெனி தந்த ’ஸேல்ஸ்மன் கமிஷன்’களில் இரண்டு மூன்று படிகளை ஒரே சமயத்தில் தாண்டி, மற்ற பிற ’இன்ஸென்டிவ்’களில் ’போல்வால்ட்’ தாவி இன்று ஒரு ’சீனியர் ரெப்’ஆக நின்றார்.

மறுபடியும் மாமா பல வருடங்கள் திட்டமிட்டு தன் வருமானத்தில் சேமிப்பு, மூதாதையர் மற்றும் மாமியின் சொத்து இவற்றின் சங்கமத்தில் தன் கனவுகள் எல்லாம் நனவாக அழகிய, பெரியதொரு பங்களாவைக் கட்டி அதை ’டெகோ-ல’த்தாலும் ’மொஸைக்’காலும் இழைத்து, அழகிய ’மாடர்ன் ஃபர்னிச்சர்’ மற்றும் மின் சாதனங்களால் அலங்கரித்து, ஊரிலேயே பெரிய ’ஹோம் லைப்ரரி’யில் கலைமகளைக் குடியேற்றி, நண்பர்கள் வியந்து பாராட்டப் பெருமிதத்துடன் ’வீட்டைக் கட்டிப் பார்த்துவிட்டேன் அடுத்தது கல்யாணத்தையும் பண்ணிப் பார்த்துவிடுகிறேன் (கௌசல்யாவுக்கு)’ என்று நின்றார்.

அடுத்தபடியாக அவர் குனிந்த தலை நிமிராமல் நாட்டுப்புறத்தின் மொத்த உருவமாக இருந்த மாமியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, நாகரிகப்படுத்தி, அவள் விரும்பிய கலைகளில் ஊக்குவித்து, மங்கிப்போயிருந்த அவள் சங்கீத ரசனைகளைப் புதுப்பித்து மெருகேற்றி, கேட்கவும் பாடவும் வசதிகள் செய்துகொடுத்து, அவள் அடுப்படி வேலைகளைச் சுளுவாக்கி மறக்கச்செய்து, மாதர் சங்கங்களுக்கு அறிமுகப்படுத்தி, மொத்தத்தில் பெர்னார்ட் ஷாவின் பூக்காரி* Eliza Doolittle போன்று இருந்த தன் மனைவியின் பரிணாம வளர்ச்சியில் கடைசிவரை பங்குகொண்டு ப்ரொஃபஸர் ஹிக்கின்ஸாக நின்றார், ஒரு வித்தியாசத்துடன். அந்தப் ப்ரொஃபஸர்போல் இவர் மனமுடைந்து Let a woman in your life... என்று பாடவில்லை.

[Eliza Doolittle ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் Pygmalion நாடகத்தில் வரும் ஒரு பூக்காரி. இந்த நாடகம் My Fair Lady என்ற திரைப்படமாக்கப் பட்டது. பூக்காரியை நாகரிகப்படுத்தி அவளை மணந்துகொள்ளும் பேராசிரியர் ஹிக்கின்ஸ் பின்னர் அவர்களுக்குள் வந்த சச்சரவால் அவள் அவரைக் கைவிட்டுச் செல்லும்போது திரைப்படத்தில் ஹிக்கின்ஸ் பாடும் பாடலில் வரும் வரி Let a woman in your life...
My Fair Lady (1964) - IMDb
* I'm an Ordinary Man Lyrics | from "My Fair Lady" --ரமணி]

கடைசியாக அவர் கௌசல்யா எனும் ஒரே மகவைப் பெற்றெடுத்து அவளை ஓர் இளவரசிபோல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்துப் படிக்கவைத்து, நாகரிகத்தின் சோப்புக்குமிழ் நிறங்களில் மயங்கவைத்து, அவளை ஒரு ’ஸ்பாயில்ட் கிட்’ ஆக்க முயற்சிசெய்து---ஆனால் அவள்தான் அதற்குக் கொஞ்சமும் மசிவதாகத் தெரியவில்லை---செல்வத்தின் ’எஸ்கலேட்டர்’இல் ஏற்றிவைத்து, கல்யாண ’ஷாப்பிங் சென்டர்’இல் அவளை ஒரு கனவுக்கன்னியாக உலவவிட்டுப் புண்ணியம் தேடிக்கொண்டவராக நின்றார்.

மாமாவின் தம்பட்டம் செவிகளை நிறைக்க அவனுக்கு அந்த டின்னரின் சுவையும், மணி அய்யரின் அன்பான உபசரிப்பும், கௌசல்யாவின் கனிவான கவனிப்பும் எடுபடாமல் போக, அவனும் வசந்தியும் ஒப்புக்காகச் சொல்லவேண்டிய தாயிற்று:

"Thanks for a sumptuous, delicious dinner கௌசல்யா!

கொஞ்ச நேரம் மனதுக்குப் பிடித்த ஹிந்திப் பாடல்களைக் கேட்டுவிட்டு, திடீரென்று முடிவுசெய்து அவர்கள் மூவரும் அருணா டாக்கீஸில் அப்போது ஓடிக்கொண்டிருந்த ’உபஹார்’ ஹிந்தித் திரைப்படம் பார்க்கச் சென்றபோது வழியில் கௌசல்யா கேட்டாள்.

"அப்பா உங்க ரெண்டு பேரையும் ரொம்ப போர் அடிச்சுட்டார் இல்லே? அவர் எப்போதுமே அப்படித்தான். Ego-centric you can say. ஆனால் அவருக்கு அம்மா மேலையும் என்மேலையும் அளவுகடந்த பாசம், ராஜா. எனக்காக எது வேன்ணும்னாலும் செய்வார்."

"புரியறது கௌசல்யா. இதெல்லாம் நான் ஒரு குறையா நினைக்கல. உங்க அந்தஸ்தைப் பார்க்கும்போது மாமா நிச்சயம் பெரிய ஆள்தான்."

"என்னது திடீர்னு மாமாவுக்கு ஐஸ் வெக்கறே? ஓகோ, புரியறது, புரியறது..."

"டோன்ட் பி ஸில்லி, கௌசல்யா. நான் ஒண்ணும்---"

"சும்மா விளையாட்டுக்குச் சொன்னாக்கூட கோவிச்சுக்கற பத்தியா? வசந்தி, ராஜா பெரிய கோவக்காரனா இருப்பான் போலிருக்கே?", என்று அவன் தோள்கள் மீது கைகளைப் பின்னிக்கொண்டாள்.

அவனுக்கு அனுவின் ஞாபகம் வந்தது.

’உபஹார்’ ஜெயாபாதுரியின் நடிப்பில் அவர்கள் உருகிப் போனாற்கள். எந்த நடிகையும் தன் முதல் படத்தில் இவ்வளவு அழகாக, மாறுதலாக, அதிசயிக்கத் தக்கபடி நடித்திருக்க முடியாது என்று தோன்றியது. ’சமாப்தி’யில் தாகூர் சித்தரித்திருந்த மீனுவை அப்படியே தனது பாத்திரத்துடன் ஒன்றிவிட்ட நடிப்பினால் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள்.

பருவமடைந்து ஒன்றுமே தெரியாமல் கள்ளங்கபடமற்ற குழந்தை போல, சிறுவர் சிறுமியருடன் சேர்ந்துகொண்டு, மாந்தோப்பில் அலைந்து மாங்காய் அடித்து மடிநிறைய சுமந்துகொண்டு, எதெற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டு, பெற்றோர்கள் பின் ஓடி ஒளிந்துகோண்டு, கைகளை நீட்டி அபிநயித்துக்கொண்டு, தன்னுடைய திருமணத்தின்போது கூட மனத்தளவில் குழந்தையாக, அது தனக்கொன்றும் சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சியாக நினைத்துக்கொண்டு, பின்னர் மண வாழ்க்கயின் புதுமையும், பிரிவும், அந்நியத்தன்மையும் தாங்க முடியாத சுமைகளாகிவிட, அவளது மென்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்டு மெல்ல அவள் மனதைப் பக்குவப்படுத்த முயலும் கணவனாக, கனவானாக ஸ்வரூப் தத் வந்து, வண்ண வண்ண மலர்கள் நிறைந்த தோட்டத்தில் பாடும் அந்தப் பாட்டின் இனிமையில் அவர்கள் வாயடத்துப் போனார்கள்.

மைன் எக் ராஜா ஹூம்
தூ எக் ராணி ஹோ ஓ ஓ ஓ!
மைன் எக் ராஜா ஹூம்
ப்ரேம் நகர்கி யே எக் சுந்தர்
ப்ரேம் கஹானி ஹோ!
[http://lyricsandme.com/lyrics_song_M...Raja_Hoon.htm]

பாட்டின் முதல்வரி காதில் விழுந்ததும் கௌசல்யா வசந்திக்குத் தெரியாமல் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த அவனை விலாவில் இடித்தாள். திரும்பிப் பார்த்தபோது அவள் கண்கள் அவன் கண்களை சந்திக்கமுடியாமல் தாழ, குறும்பும் நாணமும் போட்டிபோடும் அந்த முகத்தின் அந்திவானச் சிவப்பில் இளம்பிறைக் கீற்றாக மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது அந்த இருளிலும் தெளிவாகத் தெரிந்தது.

தீடீரென்று மனம் பிரகாசமாக, கண்கள் திரையிலிருந்து விலகி அவள் மீது நிலைக்க, தியேட்டர் ஹாலில் நிலவிய மௌனத்தில் துல்யமாக ஒலிக்கும் மொஹம்மத் ரஃபியின் குரலும் லக்ஷ்மி-பியாரியின் இசையும் தேய்ந்து மறைய,

மனத்தின் ஆழத்தில் இருந்து
அலையடிக்கும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு

டால்ஃபின்களாக எழுந்த
எண்ணங்களின் லயிப்பில்,
உணர்வுகளின் நன்றியில்,
கண்டுபிடிப்புகளின் சிலிர்ப்பில்,

வானத்தில் தெளித்த நீர்த்துளிப் படலங்களின்
வானவில் நிறங்கள் தோற்றுவித்த வியப்பில்
அவன் கௌசல்யாவைக் காதலிப்பதை உணர்ந்தான்.

நன்றியுடன் விரல்கள் அவர்களுக்கு நடுவில் இருந்த கைப்பிடியில் படர்ந்து அவள் விரல்களுடன் இணந்தபோது மனதில் ஒரு வைராக்கியமும் உறுதியும் பிறந்தன.

*** *** ***
(தொடரும்)

ரமணி
14-03-2013, 01:06 AM
பயணம்: நாவல்
ரமணி
19


சற்றுன் முகஞ் சிவந்தால் -- மனது
சஞ்சல மாகு தடீ;
---மஹாகவி பாரதியார், கண்ணம்மா என் குழந்தை 6

அதன்பின் ஒவ்வொரு வாரமும் கௌசல்யாவைப் பார்க்கத் தோன்றியது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைத்தது.

வசந்தியைப் பார்க்கப் போனபோது கண்கள் கௌசல்யாவைத் தேடின. அவள் வந்தபோது கண்கள் குன்றிலிட்ட விளக்காயின. வராத நாட்களில் குடத்திலிட்ட விளக்காயின.

தவறாது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவள் வீட்டுக்கு அழைத்தபோது மறுக்கத் தோன்றவில்லை. வாரம் தவறாமல் மாமா வீட்டில் சாப்பிட்டால் ஏதாவது நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற எண்ணம் உதித்தபோது ஞாயிறு மாலை நேரங்களில் அவளை வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ள வைத்தது.

நேரம் போவதே தெரியாமல் கௌசல்யாவுடன் பேசிக்கொண்டிருக்கத் தோன்றியது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவள் கருத்துகளை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தது. எல்லா விஷயங்களையும் கொஞ்சமாவது அவள் அறிந்து வைத்திருந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சமயத்தில் மலைக்க வைத்தது.

மாமாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய சாமர்த்தியமான பேச்சை கவனமாகக் கேட்கத் தோன்றியது. கௌசல்யா அவனுடன் நெருங்கிப் பழகுவதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

வெளியில் அவர் ஒன்றும் சொல்லாவிட்டாலும் மனதில் ஏதேனும் வைத்துக்கொள்வாரோ என்று சந்தேகமாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் அவன் பெற்றோரைப் பற்றிய விசாரிப்பைக் குறைத்துக்கொண்டு விட்டதை உணர்ந்தபோது கோபம் கலந்த கவலை தலைதூக்கியது.

ஒருமுறை அவன் தன் ஊருக்குப் போய்விட்டு வந்து மாமா வீட்டுக்குப் போனபோது அவர்கள் ஒன்றுமே கேட்காமல் இருந்தது வருத்தமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இப்படிக்கூட நெருங்கிய உறவினர்களால் இருக்கமுடியுமா என்று புதிராக இருந்தது.

பாஸ்கரைக் கௌசல்யாவுக்கு அறிமுகப் படுத்திவைக்கத் தயக்கமாக இருந்தது!

அவள் ஒவ்வொரு வாரமும் அவனைப் பற்றிக் கேட்கும்போது ஏதாவது காரணம் கூறி அந்த அறிமுகத்தை முடிந்தவரை ஒத்திப் போடத் தோன்றியது.

அவள் பாஸ்கரைப் பற்றி வினவியபோதெல்லாம் உள்ளுக்குள் முகம் மாறி ’இவளுக்கு என்ன முன்பின் தெரியாதவனைப் பற்றி அக்கறை?’ என்ற எண்ணம் எழுந்து சாமர்த்தியமாக மனதை மறைத்து முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது.

கொஞ்சநாளில் அவன் தன் பகுத்தறிவின் இயக்கத்தில் உண்மைகளையும் எல்லைகளையும் சரிவரப் புரிந்துகொண்டு தன் எண்ணங்களை சமன்செய்து சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து பாஸ்கரை அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தபோது கொஞ்சம் தர்மசங்கடமாகி விட்டது!

"ராஜா உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்கான். ரொம்ப நாளா உங்களை மீட் பண்ணனும்னு நினைச்சேன். இப்பதான் சந்தர்ப்பம் வாய்த்தது."

"இஸ் தாட் ஸோ? ஐ’ம் வெரி க்ளாட். ராஜா இதுவரை என்னிடம் உங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. அவனுக்கு ஒரு மாமா இருக்கார், அதுவும் உள்ளூரிலேயே இருக்கார், அவருக்கு இப்படி ஒரு அழகான பொண்ணு இருக்காங்கன்னே எனக்குத் தெரியாது!"

முதல் சந்திப்பிலேயே கௌசல்யாவுக்கும் வசந்திக்கும் பாஸ்கரை மிகவும் பிடித்துப்போனது கண்கூடாகத் தெரிந்தது. பொதுவாக எல்லோரிடமும் கொஞ்சம் ஒதுக்கமாக இருக்கும் வசந்திகூட பாஸ்கரின் தோற்றத்தாலும் அறிவாலும் சாதுர்யமான பேச்சாலும் கவரப்பட்டு அவனிடம் தாராளமாகப் பேசினாள். கௌசல்யாவோ அந்த முதல் சந்திப்பிலேயே பாஸ்கருடன் நீண்டநாள் பழகியவள்போல் சிரித்தும், ’கமென்ட்’ அடித்துக்கொண்டும், கண்களும் கைகளும் அபிநயிக்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது அவனுக்கு என்னவோ போலிருந்தது.

விடைபெற்று அவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்ததும் பாஸ்கர் அவன் கைகளைக் குலுக்கினான்.

"கங்க்ராட்ஸ் அன்ட் பெஸ்ட் விஷஸ், ராஜா! உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டக்காரன். கௌசல்யா வில் பி அன் ஐடியல் மாட்ச் ஃபர் யு."

மறுநாள் கௌசல்யாவைத் தனியே சந்திக்க முடிந்தபோது கோபித்துக் கொண்டாள்.

"லுக் ராஜா, பாஸ்கரை எனக்கு இவ்வளவு தாமதமா அறிமுகம் செய்துவைத்ததில உன்னோட உணர்வுகளை நான் மதிக்கறேன். அதே சமயத்தில யு ஹாவ் அன்டர்-எஸ்டிமேட்டட் மி. எனக்கு சோஷலாகப் பழகப் பிடிக்கும், யு நோ தட். And BhASkar is a good friend of all of us. Let's not have any confusion there."

கதைகளில் போல் அல்லாமல் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் அவர்கள் காதல் மலர்ந்து, வளர்ந்த விதத்தை இப்போது டைரியில் படிக்கும்போது விரல்கள் அவள் சம்பந்தப்பட்ட பக்கங்களைப் புரட்டிக் காட்ட மனம் அதை விரித்து ஒத்திகை பார்த்து மகிழ்ந்தது.

ஒருநாள் இருவரும் மத்தியான நிசப்தத்தில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய ’மூவ்’ ஒன்றைச் சற்று அவசரமாகச் செய்துவிட்டு அவள் பதிலுக்கு யோசித்தபோது கண்கள் அவளையே பார்த்திருக்க மனம் வியந்தது.

இவ்வளவு தூரம் நான் இவளிடம் மனசைப் பறிகொடுத்ததற்கு என்ன காரணம்? இவளுடைய அழகா? நீண்ட சந்தன விரல்கள் வழவழப்பான கன்னத்தில் அழகாகப் பதிந்திருக்க, இமைகள் சிறகடிக்க ஒரே செடியிலேயே மலர் விட்டு மலர் தாவும் பட்டாம்பூச்சி போன்ற விழிகள் செஸ் போர்டின் நிலவரத்தை முன்பின்னாகவும் பக்கவாட்டிலும் நகர்ந்து கணிக்க... எவ்வளவு அழகாக இருக்கிறாள்! நான் சந்தித்த பெண்களில் இவளைவிட அழகு அனு மட்டுமே. வெற்றி மேடையில் அனு முதல்படி என்றாள் இவள் இரண்டாவது.

அல்லது இவள் அறிவா? ஆங்கில, தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு ஆர்வம்! அவள் நூலகத்தில் எத்தனை புத்தகங்கள்! இதுபோக எத்தனை நுண்கலைகள் தெரிந்தவள்! இதுமாதிர் எல்லாத் துறைகளிலும் விஷய ஞானம் உள்ளவளாக இருக்கும் இவளுக்கு என்னவிட---இதை நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது---பாஸ்கர் இன்னும் பொருத்தமோ? ஒருவேளை என்னுடைய இந்த முயற்சியில் நான் தோற்றுப் போனால் பாஸ்கர்தான் எனக்கு வாரிசு.

அல்லது கலகலவென்று பழகும் இவள் சுபாவமா? அல்லது இவளுடன் பழகி இவளைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள உதவிய சந்தர்ப்பங்களா? எப்படி இருந்தாலும் இவள் இல்லாமல் நான் இருப்பது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. அனுவிடமிருந்து என் கடிதத்துக்கு பதில் வந்தவுடன் நான் ஒரு முடிவுக்கு வர இயலும்.

"Hey, you are losing your queen!" என்றாள் கௌசல்யா, அவன் முகத்துக்கு முன்னால் கையை மேலும் கீழும் அசைத்து. "Or else, if it is a queen sacrifice, it's the silliest I have seen!"

அந்த ’க்வீன்’ பதத்தில் திடுக்கிட்டான். கண்கள் செஸ் போர்டில் இறங்கத் தலையை இடம்வலமாக அசைத்தான். ஒரு பள்ளிச் சிறுவன் நினைத்துப் பார்த்திருக்க முடியாத ’மூவ்’. அடுத்த இரண்டு ’மூவ்’களின் கட்டாயத்தில் அவள் குதிரையால் ’செக்’ சொல்லி ராணியைக் காவு வாங்கிவிட முடியும்.

"பரவாயில்லை, வேற மூவ் பண்ணு."

"சாரி, கௌசி. ஏதோ ஞாபகம்."

"தெரியும்."

என்ன என்பதுபோல் பார்த்தபோது ஓர் அழகிய புன்னகையை மிதக்கவிட்டாள்.

The smile that launched a thousand ships! என்றது டைரி.

"நீ என்னைப் பத்தித்தான் நினைச்சிண்டிருந்தாய் இல்லையா?"

(தொடரும்)

ரமணி
15-03-2013, 01:34 AM
மற்றொரு நாள். அவனும் பாஸ்கரும் கௌசல்யா வசந்தியுடன் சுற்றுலா போனபோது நடந்தது. மரங்கள் அடர்ந்த வனாந்தரப் பகுதியில் சற்று மேடான இடத்தில் புல்தரையில் அவர்கள் உட்கார்ந்துகொண்டு பாஸ்கரின் கிடாரில் மெய்மறந்தபின் கேக், சான்ட்விச் சாப்பிட்டுவிட்டு நெஸ் காஃபியைச் சுவைத்தபடியியே எதிரில் இருந்த சுனையில் மிதக்கும் அசைவற்ற வாத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தே சூரியன் மறந்துகொண்டிருக்க, மேகங்கள் அற்ற நீல வானப் பெருந்திரையின் பின்னணியில் மரக்கூட்டங்கள் பசுமை நிழல்களாகத் தெரிந்தன.

தீடீரென்று பாஸ்கர் முழங்கையைத் தலையில் முட்டுக்கொடுத்து புல்தரையில் படுத்துக் கொண்டிருந்தவன் எழுந்து கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டு சின்னச் சின்ன பருக்கைக் கற்களைச் சுனையில் எறிந்து வாத்துக்களுக்கு உயிரூட்டினான். கௌசல்யாவும் அவனுடன் சேர்ந்துகொண்டாள். தண்ணீரில் எழுந்த சிற்றலைகளில் வாத்துக்கள் கலைந்து அப்பால் செல்ல, கௌசல்யா அவனைச் சீண்டினாள்.

"ஒரு சிகரெட் கம்பெனி விளம்பரம் மாதிரி இருக்கு. ராஜா, நீ ஏன் புகை பிடிப்பதில்லை?"

"எனக்குப் பிடிக்காது கௌசி."

"இல்லை, இப்ப நீ இருக்கற ஸ்டைல்ல ஜம்முனு ஒரு வில்ஸ் பாக்கெட்டைப் பிரிச்சு அதிலேர்ந்து ஒரு சிகரெட் செலக்ட் பண்ணி, நான் அதை லைட்டரின் க்ளிக்கில் ஏற்ற, உதடுகளுக்கு நடுவில் பொருத்திப் புகையை ஆனந்தமா உள்ளிழுத்து இதமா வெளியவிட்டா க்ளாஸா இருக்கும்! ரிலாக்ஸ்!... க்ளிக்! ஒரு ஃபோட்டோ, அவ்வளவுதான். நாளையில் இருந்து நீ ஒரு பெரிய மாடல்!"

"யு புட் இட் ஸோ நைஸ்லி", என்றான் பாஸ்கர்.

"ஸ்டில் யு வொன்ட் லைக் ஸ்மோக்கிங்?"

"என்ன பேச்சு இது கௌசி? போற போக்கைப் பாத்தா நீயே அவனை ஸ்மோக் பண்ண வெச்சுடுவே போலிருக்கே?"

"ஸ்மோக்கிங், ட்ரிங்க்கிங் இதெல்லாம் ஒருத்தரோட பர்சனல் விஷயங்கள் வசந்தி. அளவோட இருக்கறவரைக்கும் இதெல்லாம் வைஸஸ்னு நான் நினைக்கல. எங்கப்பாகூட அடிக்கடி ஸ்மோக் பண்ணுவார், எப்பவானும் குடிப்பார், அவர் வேலைசேர்ந்த பழக்கங்கள் அப்படி. அதுக்காக அவர் கெட்டவர்னு சொல்லமுடியுமா?"

"ஒத்துக்கறேன். அதுக்காக இந்தப் பழக்கங்கள் கொஞ்சங்கூட இல்லாதவங்களை நாமே தூண்டிவிடறது எவ்ளோதூரம் சரின்னு நினைச்சுப் பார்க்கணும், இல்லையா?"

"கௌசல்யா ஒரு ஜோக்காக சொல்லியிருக்கலாம் இல்லையா வசந்தி?" என்றான் பாஸ்கர்.

"இல்லை. நான் ராஜாவோட வில்பவரை டெஸ்ட் பண்ணினேன். எனக்குத் தெரியாதா அவனோட வில்பவர் வில்ஸ் பவரைவிட வலிமையானதுன்னு?"

"சிகரெட் புகைக்க வில்பவர் தேவையில்லை கௌசி. சிகரெட் பழக்கம் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தவோ, அறவே ஒழிக்கவோ நினைச்சா, நினைச்சதை செயல்படுத்த வில்பவர் வேணும்."

"வில்பவர்னு சொன்னதும் எனக்கு ஒரு வழக்கம் ஞாபகம் வருது", என்றான் பாஸ்கர். "உனக்குத் தெரியுமா ராஜா?"

"கேள்விப் பட்டிருக்கேன், சொல்லு."

"உங்களுக்கு?"

தலைகள் மறுத்தன.

"கல்லூரி ஹாஸ்டல் மாணவர்கள்கிட்ட இருக்கறதா சொல்லப்படும் வழக்கம். ஒருவிதமான ராகிங்னுகூடச் சொல்லலாம். என்ன செய்வாங்க, புதுசா சேர்ந்த ரெண்டு மாணவர்களை எதிரும்புதிருமாக நிற்கவைத்து, ’உங்க வில்பவர்க்கு ஒரு டெஸ்ட்’னு சொல்லி, ரெண்டு பேரையும் கண்ணை மூடிண்டு கைகளால பெடல் பண்ற மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் படாம சுத்தணும்; சுத்திண்டே வாய்விட்டு ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு மாத்திமாத்தி எண்ணனும்னு சொல்வாங்க. நடுவில நிறுத்தக் கூடாது, எக்காரணம் கொண்டும் கண்ணைத் திறக்கக் கூடாது. மீறினா ஆளுக்கு பத்து ரூபாய் ஃபைன்.

"இந்தப் புதுப் பையன்கள் ரெண்டு பேரும் மும்முரமா பெடல் பண்ற போது சுத்தி இருக்கறவங்க சத்தம் போடாம நழுவிப் போய் டிஃபன் காப்பி சாப்பிட்டு பீடா போட்டுண்டு பதினஞ்சு இருவது நிமஷம் கழிச்சு வருவாங்க. வரும்போது ஒரு மாணவர் பட்டாளத்தையே கூட்டிண்டு வருவாங்க. பார்த்தா, இந்த ரெண்டு பேரும் பேக்கூ மாதிரி கண்ணை மூடி பெடல் பண்ணிண்டு, நம்பர்ஸ் எண்ணிண்டு! கடைசியா ஒருவழியா ரெண்டு பேரையும் கண்ணைத் திறக்கச் சொன்னா, எதிர்ல ஒரு பெரிய கும்பல், கைதட்டல், எக்காளச் சிரிப்பு! எப்படி இருக்கும் ரெண்டு பேர்க்கும்? இந்த எக்ஸ்பெரிமென்ட்ல ஒரு பையனுக்குப் பைத்தியமே பிடிச்சுடுத்தாம். இன்னொருத்தன் தற்கொலையே பண்ணிக்கொண்டானாம்!"

கௌசல்யாவின் சிரிப்பு மரங்களியே எதிரொலிக்க, வசந்தி, "ஐயோ பாவம்!" என்றாள்.

*** *** ***
(தொடரும்)

ரமணி
16-03-2013, 01:27 AM
பயணம்: நாவல்
ரமணி
20


கத்துங் குயிலோசை -- சற்றே வந்து
காதிற் படவேணும்; என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே -- நன்றாயிளந்
தென்றல் அவரவேணும்.
---மஹாகவி பாரதியார், காணி நிலம் 2

ஒருமுறை மாமா ஒரு வாரம் டூர் போனபோது அவனைக் கட்டாயப் படுத்தி மாமிக்கும் கௌசல்யாவுக்கும் துணையாக அவர் வீட்டில் தங்கச் சொன்னபோது, கௌசல்யாவுடன் மனம்விட்டுப் பேச, பழக வாய்ப்புக் கிடத்தது.

அந்த நாட்கள் அவன் வாழ்வில் மறக்கமுடியாத, முக்கியமான நாட்களாகி டைரியில் நிறைய இடம் பிடித்துக்கொண்டன.

அந்தப் புதிய பங்களாவில் ’கெஸ்ட் ரூம்’இல் தங்கும் முதல் நபர் என்பதே ஒரு பெருமையாக இருந்தது. கௌசல்யாவின் அறை போலவே அந்த அறை மிகவும் வசதியாக இருந்தது. படுத்துக்கொள்ள ஃபோம் மெத்தையும் தலையணகளும், வசதியாக சாய்ந்துகொள்ள ’ஸ்டீல் ஈஸிசேர்’உம், எழுதப் படிக்க அழகிய மேசையும்---மேசைமேல் ’இன்டர்காம்’---அலமாரியில் அவனுக்குப் பிடித்த புத்தகங்களும், ஜன்னல் வழியாகப் பார்த்தால் தோட்டத்தில் கொள்ளை கொள்ளையாகப் பூக்களின் அழகும், தென்னை ஓலைகளில் அமர்ந்து ஊஞ்சலாடும் காக்கைகளும், கிரீச்சிடும் அணில்களும், விர்ரெனப் பறக்கும் குருவிகளும்...

மாமியும் கௌசல்யாவும் அவனுக்காகவே பார்த்துப் பார்த்து எல்லா வசதிகளும் செய்துகொடுத்த மாதிரி இருந்தது.

அவர்கள் அன்பை வியந்துகொண்டு எழுந்தபோது ’இன்டர்காம்’ ஒலித்தது.

"குட் மார்னிங், ராஜா! கௌசி ஹியர். எழுந்தாச்சா? நல்லாத் தூங்கினாயா?"

"ஹாய் கௌசி! குட் மார்னிங்! எங்கேர்ந்து பேசறே?"

"சமையலறை. பெட் காஃபியா இல்லை பல் தேய்ச்சிட்டு வரயா?"

"அஞ்சு நிமிஷத்தில வரேன். மணி ஆறுதான் ஆறது, அதுக்குள்ள எழுந்தாச்சா?"

"எழுந்து, காஃபி சாப்ட்டு, குளிச்சாச்சு."

"என்ன விசேஷம்?"

"ஒண்ணுமில்லை. தினமும், அம்மாவும் நானும் காலைல சீக்கரமே குளிச்சிடுவோம். அப்பதான் புத்துணர்ச்சியா இருக்கும்."

"Incredible of a college girl!"

"Not at all!" என்று வைத்துவிட்டாள்.

ஐந்து நிமிடத்தில் அவன் அறைக்கதவு மெல்லத் தட்டப்பட்டது. திறந்தபோது நெற்றியில் குங்குமம் துலங்க, மஞ்சள் மணக்க, தலையில் துண்டு முடிந்திருக்க, ஈரம் தோய்ந்த ஒன்றிரண்டு கேசக் குழல்கள் நெற்றியிலும் கன்னத்திலும் விளிம்பு கட்ட, பாவாடை தாவணி அவள் அழகை இரட்டிப்பாக்க, கையில் காஃபி ட்ரேயுடன் கௌசல்யா நின்றிருந்தாள்.

"என்ன மலைச்சுப் போயிட்ட?"

"வசந்தியை நான் இதுபோலப் பார்த்திருக்கேன். ஆனால் நீ? உன்னைப் பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு, கௌசல்யா."

"வசனம்லாம் அப்புறம். காஃபி ஆறிடப் போறது."

டீப்பாயில் ட்ரேயை நளினமாக வைத்துவிட்டு தாவணியைக் கொஞ்சம் சரிசெய்துகொண்டு அவன் எதிரில் ஸ்டீல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, காப்பிக் குடுவையில் இருந்து காப்பியைக் கோப்பியில் ஊற்றினாள். கோப்பை நிறைந்ததும் அதன் அடியில் இருந்த பீங்கான் தட்டை மெல்ல உயர்த்தி அவனிடம் நீட்டும்போது ஆவி பறக்கும் காஃபியின் மணம் மூக்கைத் துளைத்தது.

அவன் விரல்கள் ’ஸாஸர்’இல் பதிந்தபோது சொன்னாள்: "Take care NOT to touch me. நான் இன்னைக்கு மடி."

"என்ன விசேஷம் கௌசி?"

"இன்னிக்கு என்ன கிழமை?"

"ஓ, வெள்ளிக் கிழமை."

"வெள்ளியும் செவ்வாயும் அம்மாவும் நானும் இப்படித்தான் இருப்போம். இன்னும் கொஞ்ச நேரத்தில ஸ்வாமி அறைல இருப்போம். சாப்பிடு, ஆறிடப் போறது."

"உனக்கு?"

"ஓவர்."

"என்னோட கொஞ்சம் சாப்பிடேன் கௌசி."

"ஓகே", என்று மற்றொரு கோப்பையில் பாதி நிறைத்துக் கொண்டாள்.

"ராஜா, உனக்குத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கப் பிடிக்குமா?"

"நிறைய."

அனுவின் ஞாபகம் வந்தது.

’நான் சொன்னேல்ல, என்னோட வாழைதான் ஜெயிக்கும்னு!’
அப்புறம் அந்தக் கடிதம்!
’நடைமுறையில் பார்க்கும்போது சில உண்மைகளையும் எல்லைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.’
யு ஆர் க்ரூயல் அனு!

"அடிக்கடி என்ன யோசனை, ராஜா?"

சொல்லிவிடலாமா? வேண்டாம்.

"ஒண்ணுமில்லை கௌசி. சின்ன வயசில நானும் வசந்தியும் தினமும் ஒரு தடவை கார்த்தால தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்போம். அது நினைவுக்கு வந்தது."

கௌசல்யா போனதும் அவனும் பத்து நிமிடத்தில் குளித்துவிட்டுப் படியிறங்கி கூடத்துக்கு வந்தபோது சிவானந்த விஜயலக்ஷ்மியில் ’கனக தாரா’ டேப்பில் ஒலித்துக் கொண்டிருந்தது. துண்டால் ஈரத் தலையை முடிந்துகொண்டு, நெற்றியில் குங்குமம் துலங்க, காலைப் பொழுதின் முதல் சூரியஒளிக் கற்றைகளில் அவள் எப்போதும் அணிந்திருக்கும் நகைகள் மினுக்க, மாமி அவனைப் பார்த்துப் புன்னகத்தாள்.

"நான் போய்ப் பூப்பறிச்சிண்டு வரேம்மா", கௌசல்யா கிளம்பப் பின்தொடர்ந்தான்.

அடிக்கடி பார்த்ததாக இருந்தாலும் அந்தத் தோட்டம் எப்போதும் புதிதாக, அழகாக, அடக்கமாக இருந்தது. பூச்செடிகள் வீட்டின் பக்கங்களில் இருக்க, காய்கறித் தோட்டம் வீட்டின் பின்னால் இருந்தது.

வாசலிலும் பக்கங்களிலும் குரோட்டன்ஸ் போகன்வில்லாச் செடிகள்
நெடுநெடுவென வளர்ந்து கலர்கலரான இலைகளையும்
பூக்களையும் சுமந்து நிற்க, சரக்கொன்றை மரம் நெடுக
இளங்காலை வானம் மலர்ந்திருந்தது.

நடுநடுவே ரோஜாச் செடிகள் பரந்து
ஆரோக்கியமாக வளர்ந்து நிறையப் பூத்து
வரிசை வரிசையாகப் பழுப்பு முட்களையும்
இளம்பச்சை முட்களையும் அவற்றை உள்ளடக்கிய

பச்சை, பழுப்பு இலைகளையும் தாங்கி,
அந்த இலைகளுக்கு நடுவில் தலைநீட்டும் பச்சை,
பச்சை பிளந்து ரோஸ், முழுவதும் ரோஸ் மொக்குகள்
மலரும் நாட்களை எதிர்பார்த்து வளர்ந்திருக்க,

அன்று மலரும் அதிர்ஷ்டம் பெற்ற மொக்குகள்
மலரத் தொடங்கி மெல்ல இதழ் விரிக்க,
அடியில் காப்பிப்பொடிச் சக்கைத் துகள்களில்
எறும்புகள் மொய்க்க நின்றன.

மயில் மாணிக்கக் கொடிகள்
பக்கச் சுவர்களில் தொடங்கி, கயிறுகளில் படர்ந்து,
ரத்தச் சிவப்புப் பூக்களை
வாரி யிறைத்துக்கொண்டு மலையேற,

நந்தியாவட்டைச் செடிகளில்
பனிபெய்து நிலத்திருக்க,

பந்தலில் படர்ந்த நித்திய மல்லிக் கொடிகளின்
முன்னைய இரவு மலர்கள் இப்போதும் மணம் வீசின.

இன்னும் உள்ளே தள்ளி
குண்டுமல்லிப் பூக்கள் பரவலாக
மலர்ந்து மணம்பரப்ப,

செம்பருத்திச் செடிகள்,
பிடிவாதத்துடன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு
எடுத்ததைத் தரமாட்டேன் என்று
அடம்பிடிக்கும் குழந்தையைப் போல்
தன்னுள் ஆச்சரியப் பூக்களை ஒளித்து வைத்திருக்க

கௌசல்யா அவனுடன் பேசியபடியே
ஒவ்வொரும் பூவாகப் பறித்துக்
குடலையில் சேர்த்தபோது
அவளே ஓர் ஆச்சரிய மலராகத் தெரிந்தாள். பேசும் மலர்!

காய்கறித் தோட்டத்தில் நீண்ட பாத்திகளில்
வெண்டைச் செடிகள்
ஆங்காங்கே காய்கள் வளர
மென்மஞ்சளில் வெல்வெட் விழிக்கப் பூத்திருந்தன.
கத்திரிச் செடிப் பூக்கள் மென்நீலத்தில் ரகசியம் பேசின.

குட்டை குட்டையான கொத்தவரங்காய்ச் செடிகள்
பூத்ததே தெரியாமல் ரோஸ்வண்ண முறுவலில்
பொம்மைப் போர்வீரர்கள் போலக்
காய்வாட்கள் ஏந்தி நின்றன.

மிளகாய்ச் செடிகள் கடுகெனப் பூத்துக்
கண்ணைப் பறிக்கும் பசுமையில்
காய்களத் தாங்கி நின்றன.

ஓரத்தில் கொத்தமல்லிச் செடிகள் பசுங் காளான்களாக்
கூட்டம் கூட்டமாக வளர்ந்திருந்தன.

உயரமாக வளர்ந்து பரவியிருந்த
முருங்கை மரக்கிளைகளில் அணிகள்
ஒன்றையொன்று துரத்தி
ஓடிப் பிடித்து விளையாடி
பூக்களைச் சிலிர்த்தன.
சில பூக்களைக் கொத்தாகச் சேர்த்து
சிலந்தியொன்று வலையின் இழையில் தொங்கவிட் டிருந்தது.

வாழை மரங்கள் அப்போதுதான் உட்கொண்ட
நீரின் வெண்நுரை அடியில் படிந்திருக்க,
கற்றை கற்றையாக வளர்ந்து,
பெரிய பெரிய இலைகளில்
காற்றைத் தோண்ட முயன்று,

இன்னும் சில மரங்கள் குருத்துகளையும்
பாதிவிரிந்த இலைகளின் நுனியில் நீர்த்துளிகளையும்
தாங்கியந்த நீர்த்துளிகளில் எங்கிருந்தோ ஊடுருவித்
தாக்கும் கதிர்களை நிறங்களாகப் பிரதிபலித்து,
புரியாத மொழிகளில் பேசின.

அண்ணாந்து பார்த்தபோது சில மரங்களில்
வாழைத் தார்கள் நுனியில் பூவினைத்
தாங்கி வணங்கித் தழைந்திருந்தன.

தென்னை மரங்களில் காக்கைகள் உட்கார்ந்து ஊஞ்சலாடி
மூக்கைத் தேய்த்து ஒலி எழுப்பி
திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு பறக்க,

தூரத்தே இலைச் சருகுகளை
ஓசைப் படுத்திக்கொண்டு அணில்கள்
வாலைக் குழைத்தபடி எதையோ தேடின.

மாடி ஜன்னல் விளிம்புகளிலும்,
வெயில் மறைப்புக்களிலும், இன்னும்
சட்டென்று கண்ணில் படாத இடங்களிலும்

சிட்டுக் குருவிகளும் குண்டுக் குருவிகளும்
அமர்ந்துகொண்டு அங்கும் இங்கும்
தலையைத் திருப்பிச் சளசளவென்று பேசின.

தத்தித் தத்தி நடந்து
தரையில் மூக்கை உராய்ந்தன.
திடீரென்று உணர்ந்த ஆபத்துகளில்
விர்ரிட்டுப் பறந்தன.

சில செடிகளுக்கு அடியில் தேங்கியிருந்த தண்ணீரில்
சிறகுகளை அடித்துக்கொண்டு நீராடின.

கௌசல்யாவின் பூக்குடலை நிறைந்ததும் அவர்கள் உள்ளே சென்றபோது அவன், ’நீயும் வேணும்னா எங்களோட பூஜைல உக்காரு’ என்ற மாமியின் அழைப்பை நாசூக்காக நிராகரித்துவிட்டு கூடத்தில் உட்கார்ந்துகொண்டு ’ஹிண்டு’ பேப்பரை மேயத் தொடங்கியபோது மணி ஏழடித்தது.

(தொடரும்)

ரமணி
17-03-2013, 02:14 AM
இந்த மர நிழல்களில் அமர்ந்து அவர்கள் தம் இலக்கிய ஈடுபாடுகளைப் பரிமாறிக்கொண்ட நாட்கள் நினைவுக்கு வந்தன.

"எனக்கென்னவோ மாடியில் ’ஸ்டடி’யில் பட்டிக்கிறதைவிட தோட்டத்தில் உட்கார்ந்து படிப்பது வசதியாகவும் ரம்யமாகவும் இருக்கு."

"எனக்கும் இதுபோன்ற சூழலில் படிக்கப் பிடிக்கும் கௌசி. முக்கியமா கவிதைகள்."

"Let nature be your teacher."

"ஷேக்ஸ்பியரின் As You Like It நாடகத்திலகூட இதுமாதிரி ஒரு கவிதை வருது."

"அப்புறம் ராஜா, எனக்கு English Prosody-பத்தி அவ்வளவாத் தெரியாது. சொல்லித் தருவியா?"

"With pleasure. எப்போ ஆரம்பிக்கலாம்?"

"இப்பவே!"

இலக்கியம் முதல் வருடம் சேர்ந்த புதிதில் ஆங்கில யாப்பிலக்கணத்தில் ஆர்வம்கொண்டு அதைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ளப் புத்தகங்கள் கிடைக்காமல் ஒவ்வொரு Encyclopaedia-வாகத் தேடிக் கடைசியில் Pears Encyclopaedia-வில் கண்டுபிடித்து அதை முழுமூச்சாக உடனே படித்து வரிவிடாமல் குறிப்பெடுத்துக் கொண்டு மனனம் செய்தது நினைவுக்கு வரக் கேட்டான்.

"எங்கேர்ந்து ஆரம்பிக்க?"

"Begin from the beginning."

"நான் Pears Encyclopaedia-வில் படித்துப் புரிஞ்சிண்ட மாதிரியே உனக்கும் சொல்லித் தரேன். நம்ம தமிழ் யாப்பிலக்கணத்தில அசை சீர் அடிலாம் ஹைஸ்கூல் இலக்கணத்தில் படிச்சேல்ல? அதுமாதிரி இங்க்லிஷ்லேயும் உண்டு. நான் சொல்றதை நல்லா கவனி The express left Manchester at seven. இந்த வாக்கியத்தை ஒரு தடவை சொல்லு பார்க்கலாம்."

சொன்னாள்.

[ராஜாவும் கௌசல்யாவும் ஆங்கில இலக்கிய மாணவர்களாதலால் கொஞ்சம் விரிவாக அவன் உரையாடித் தன் டயரியில் பதிந்த ’லெக்சர்’ இங்குச் சுருக்கமாக அவர்கள் உரையாடலில் தரப்படுகிறது, வாசகர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தால்.
For more details, check links such as the following:
PROSODY
About Poetry: English Prosody and Literary Terms
Prosody Guide
http://linksredirect.com/?pub_id=592CL574&url=http%3A//homepage.ntu.edu.tw/%7Ekarchung/prosody.htm
--ரமணி]

"என்ன தெரியறது? ஆங்கில வார்த்தைகளோட உட்பிரிவுக்கு syllable-னு பேர். இது உனக்குத் தெரியும். ஒரு வார்த்தைல ஒண்ணோ ரெண்டோ மூணோ அதுக்கும் மேலையோ syllables இருக்கலாம். இப்ப நாம் சொன்ன வாக்கியத்தில The, express, Manchester இந்த மூணு சொற்களில் முறையே ஒண்ணு, ரெண்டு, மூணு syllable இருக்கறதை முதலில் கவனிக்கணும். அப்புறம் அந்த வாக்கியத்தைச் சொல்லும்போது சில syllables அழுத்தம் கொடுத்தும் மிச்சமுள்ளதை அழுத்தம் கொடுக்காமலும் சொல்லறோம். இந்த வாக்கியத்தை scan பண்ணிப் பார்த்தா இப்படி வரும்."

அவள் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் காட்டினான்:
The express left Manchester at seven.
The- exp/ress- left/ Man/ches-ter at- seven-.

"நான் எழுதினதில ஒவ்வொரு syllable-ம் stressed-ஆ அல்லது unstressed-ஆன்னு காட்டறதுக்கு a dash for unstressed and a slash for stressed syllables அந்த syllableமுடியற இடத்தில போட்டிருக்கேன். எந்த மொழியிலேயும் எழுதும்போது வார்த்தைகளை இடம்விட்டு எழுதினாலும் பேசும்போது வார்த்தைகளைச் சேர்த்து சில அசைகளில் அழுத்தம் கொடுத்தும் சிலவற்றில் கொடுக்காமலும் பேசறோம் இல்லையா? இப்போ இந்த வாக்கியங்களைப் படி."

The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

"Robert Frost என்றாள்."

"அந்த உரைநடை வாக்கியத்துக்கும் இந்தக் கவிதை அடிகளுக்கும் என்ன வித்தியாசம்? கவிதையின் முதல் அடியை அலகிட்டுப் பார்த்தாத் தெரியும்".

The- woods/ are- love/ly-, dark/ and- deep/.

"எல்லா வரிகள்லயும் ஓசையில் தாழ்ந்த ஓர் அசையும் உயர்ந்த ஓர் அசையும் மாறிமாறி வரது."

"வெரி குட். இதுதான் ஆங்கிலக் கவிதையோட அடிப்படை உருவம். அசைகள் சேர்ந்து வருவது சீர்--meter. ஒரு dash ஒரு slash சேர்ந்துவரும் சீருக்கு iamb என்று பெயர். இதே மாதிரி மத்த ஈரசை, அப்புறம் மூவசைச் சீர்கள்க்குப் பெயர்களும் pattern-களும் உண்டு."

கௌசல்யா ஆர்வத்துடன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தாள்.

-/ dash slash = iamb eg: upon, arise
/- slash dash = trochee eg: virtue, further
--/ dash dash slash = anapest or anapaest eg: intervene
/-- slash dash dash = dactyl eg: tenderly
//- slash slash dash = spondee eg: 'slow moon' in 'The slow moon climbs'

"தமிழ்ல ஈரசை, மூவசைச் சீரடின்னு சொல்ற மாதிரி ஆங்கிலத்தில iambic, trochaic, anapaestic, dactylic and spondaic meterனு சொல்லறது. எப்படி குறளடினா ரெண்டு சீர், அதோட ஒவ்வொரு சீர் சேர்த்து சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடின்னு சொல்ற மாதிரி ஆங்கிலத்தில ரெண்டு சீருள்ளது dimeter, then trimeter, tetrameter, pentameter, hexameterனு ஆறு சீரடி வரைக்கும் சொல்றது."

"ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு."

"அப்புறம் குறளியில், சிந்தியல், அளவியல், விருத்தம்னு நாம் அடிகளின் எண்ணிக்கையை வெச்சு சொல்றமாதிரி ஆங்கிலத்தில tercet for a group of three lines, quatrain for four, sestet for six, septet for seven and octave for eight lines. நாம மேலே பார்த்த Robert Frost poem stanza-ல, ஒவ்வொரு அடியும் iambic tetrameter, and every stanza is a quatrain. என்ன, புரியுதா?"

"நல்லா. எனக்கு நம்ம தமிழ் எதுகை மோனை, இயைபு போல ஆங்கிலக் கவிதைல வரும் alliteration, assonance, rhyme பத்தி ஓரளவு தெரியும். இருந்தாலும் நீ சொல்லு, refresh பண்ணிக்கறேன்."

"மெய்யெழுத்து, அதாவது consonants, ஒன்றி வந்தா alliteration. உதாரணம் Peter Piper picked a peck of pickled peppers. இந்த வரி என்ன metre தெரியுமா?"

விரல்களால் எண்ணிக்கொண்டு கொஞ்சம் யோசித்தாள். "I got it! Trochaic hexameter."

"Brilliant! Samuel Taylor Coleridge's poem 'The Rime of the Ancient Mariner' has a beautiful example of alliteration."
The fair breeze blew, the white foam flew,
The furrow followed free;

"லவ்லி! கடல்ல போறமாதிரியே இருக்கில்ல?"

"Too much of alliterations can get artificial.. அதனாலதான் apt alliteration's artful aid-னு சொல்வாங்க."

"Always avoid aweful alliterations-னு நானும் எங்கேயோ படிச்ச்ருக்கேன்."

"மெய்யொலிகள் மாதிரி உயிரொலிகளுக்கு assonanceனு பெயர். உதாரணம் அலெக்ஸாண்டர் போப். இதில வர O sounds கவனி. அதுதான் assonance."
Since my old friend is grown so great,

"alliteration, assonance அடிகளுக்கிடையிலும் வரலாம். அப்புறம் rhyme எல்லோர்க்கும் தெரிஞ்சதுதான். Rhyme-லதான் பெரும்பாலான English classical poetry-யே இருக்கு."

"Rhyme-ல விதங்கள் இருக்கில்ல?"

"சொல்றேன். cat--mat is single pure rhyme; silly--billy double pure; mystery--history--triple pure; love--move eye rhyme; breath-deaf near rhyme. bent--firmament wrenched rhyme ஒரே அடிக்குள்ள வந்தா leonine rhyme: For the moon never beams without bringing me dreams (Edgar Allan Poe)."

"ஒரு syllable-ல rhyme இருந்தாலே கணக்கு போல."

"Rhyme schemes-ஐ வெச்சு பாவகைகளே இருக்கு. Couplets-ங்கர ரெண்டு அடிகள்ல ஒண்ணுக்கொண்ணு rhyme வரணும். நாலடி quartrain can have 'abab' or 'aabb' or 'abba' பதினாலு லைன் sonnets of Shakespeare, Milton, இந்த வடிவத்தில ஒரு நிர்ணயித்த rhyme scheme இருக்கு."

"Metre-ஐ மட்டும் வெச்சிண்டு rhyme இல்லாம எழுதினா அது blank verse இல்ல?"

"ஆமாம்."

"இது போதும் எனக்கு. இனிமே நான் படிக்கற ஒவ்வொரு ஆங்கிலக் கவிதையையும் அலகிட்டுப் பார்க்கப் போறேன். அப்புறம் நானே எழுத முயற்சி செய்யப்போறேன்."

"உனக்கு எதுதான் முடியாது, கௌசல்யா? ஆல் தெ பெஸ்ட்."

(தொடரும்)

ரமணி
18-03-2013, 01:44 AM
ஆங்கில யாப்பிலக்கணம் படித்ததும் அவர்களுக்குத் தாம் படிக்கும் ஒவ்வொரு கவிதை வரியையும் பிரித்துப் பார்க்கத் தோன்றியது. இந்த வகையில் டென்னிஸனுடய கவிதைகளின் சந்த நலன்களும் வார்த்தை ஓவியங்களும் அதிசயிக்க வைத்தன. ஷேக்ஸ்பியர், கீட்ஸ், பைரன், ஷெல்லி கவிதைகளில் உத்திகளும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து உவகையூட்டின. பொதுவாக எளிமையாக, நேரடியாக எழுதும் வேர்ட்ஸ்வர்த் கவிதைகளில் கூட இந்த உத்திகள் பயன்பட்டது வியப்பளித்தது.

கௌசல்யாவின் கவிதை ஆர்வம் அவளையே கவிதைகள் இயற்றத் தூண்ட, ஒருநாள் அவள் வெட்கத்துடன் தான் யாத்த முதல் வரிகளை அவனிடம் கொடுத்து அவன் கருத்தைக் கேட்டாள்.

Rhythm and rhyme, short and long,
All that takes to write a song,
Jolly well it means to me a lot!
And there my pen, it goes about!

Round and round I go in thought
And my pen is forced to come to halt.
More I think, the more I care
At what you taught me, what you are.
Numerous ways to write a heart!

"முதல் முயற்சியிலேயே இவ்வளவு தூரம் உனக்குக் கவிதை எழுத வந்தது க்ரேட்! ஆனால் ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. புதுசா கவிதை முனையறபோது இவ்வளவு variations வரக்கூடாது. கூடுமான வரைக்கும் metre-ஐ விடக்கூடாது. அதுலதான் ஒரு கவிஞனோட திறமை இருக்கு. Variations இருந்தா அதுக்கு ஒரு நோக்கம் இருக்கணும். A very good effort, anyway. இதையே திரும்பத் திரும்பத் திருத்தாம வேற எழுத முயற்சி செய்."

"இந்தக் கவிதைல ஒண்ணு கவனிச்சயா?"

"என் பெயர் தானே? ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்தைக் கோர்த்தா RAJA RAMAN-னு வரது. உன் கவிதைலயும் என்னைப் பத்தி நெனச்சது எனக்கு சந்தோஷமா இருக்கு", என்று அவள் கன்னத்தைத் தட்டினான்.

"உனக்குக் கவிதை எழுத வருமா ராஜா? நீ ஏதாவது எழுதியிருக்கயா?"

"முயற்சியும் ஆர்வமும் இருந்தால் யாருக்கு வேணும்னாலும் எது வேணும்னாலும் கூடும் கௌசி. என் கருத்து என்ன தெரியுமா? ஒரு கவிஞன் பிறப்பதில்லை, உருவாகிறான்."

"எனக்காக இப்பவே ஒரு ரெண்டு லைன் கவிதை எழுதி ட்ரை பண்ணறயா?" என்று அவனைப் புன்சிரிப்புடன் ஆர்வமாகப் பார்த்தாள்.

"வொய் நாட்?" என்று கொஞ்ச நேரம் யோசித்துக் காகிதத்தில் கிறுக்கி அவளிடம் கொடுத்தான்.

Jasmines, lilies, roses and lotus flowers
They can't excel your smile!
They last only for hours
Yours has a life of eternal style.

"நான் என் கவிதையை முடிக்க மூணு நாளாச்சு. நீ எப்படி இவ்ளோ சீக்கிரம் எழுதினே ராஜா?" என்று மலைத்துப் போனாள். "The best compliment I have received."

"’வலிமையான உணர்வுகளின் இயற்கையான வடிகால்தான் கவிதை*’, அப்படின்னு வேர்ட்ஸ்வர்த் சொல்லியிருக்கார். I was overwhelmed by your smile."

[*"...poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquillity:..."--William Wordsworth, in his 'Preface to Lyrical Ballads']

*** *** ***
(தொடரும்)

ரமணி
19-03-2013, 01:48 AM
பயணம்: நாவல்
ரமணி
21


மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே?
---மஹாகவி பாரதியார், சுயசரிதை 38

ஆங்கில யாப்பிலக்கண நெறிகளைப் பின்பற்றித் தமிழில் ஒரு புதிய யாப்பிலக்கணம் படைக்க முயன்று அவர்கள் பல நாட்கள் விவாதித்துத் தங்கள் புதுக்கவிதை இலக்கணத்தின் சீர்களை உருவாக்கிப் பெயரிட்டபோது, அவை ஏற்கனவே பாரதியார் பாடல்களிலும் கண்ணதாசன் திரைப்பாடல்களிலும் ராகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதைக் கண்டு அதிசயித்தார்கள்.

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

கண்/ணன்- என்/னும் மன்/னன்- பே/ரைச்- சொல்/லச்- சொல்/ல-
கல்/லும்- முள்/ளும்- பூ/வாய்- மா/றும்- மெல்/ல- மெல்/ல-.

பாரதியார் அநேகமாகத் தன் ஒவ்வொரு கவிதையிலும் அவர்களுடைய புதிய சீர்களுக்கும் அடிகளுக்கும் இயைபுகளுக்கும் உதாரணங்கள் தந்து அவர்கள் வேலையை எளிதாக்கினார்.

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

வா/ழிய- செந்/தமிழ்-! வாழ்/க- நற்-றமி/ழர்-!
வா/ழிய- பா/ரத- மணித்/திரு- நா/டு-!

பாரதியின் ’பாஞ்சாலி சபதம், சூதாட்டச் சருக்க’த்தின் ஆரம்ப வரிகளில் அவர்கள் ஒரு புதிய ஐந்தசைச் சீரைக் கண்டுபிடித்து அதற்கு ’பகடைக்காயொலிச்சீர்’ என்று பெயரிட்டார்கள்.

மாயச் சூதினுக்கே -- ஐயன் மன மிணங்கி விட்டான்;
தாய முருட்டலானார் -- அங்கே சகுனி ஆர்ப்பரித்தான்;

மா/யச்- சூ-தினுக்-கே/ -- ஐயன்/ மன மிணங்-கிவிட்-டான்/;
தா/ய- முருட்-டலா-னார்/ -- அங்/கே- சகு-னிஆர்ப்-பரித்-தான்/;

அப்புறம் அந்த ’ப்ரைவேட் சிலபஸ்’.

அவனும் கௌசியும் தம் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடத் தயாரித்தது. மாதம் ஒரு ஆங்கில நாவலும், இரண்டு தமிழ் நாவல்களும், ஒவ்வொரு ஞாயிறும் காலைவேளையில் தமிழ் ஆங்கிலக் கவிதைகளும், விடுமுறை நாட்களில் இவையெல்லாம் இன்னும் அதிகமாகவும் அவர்கள் படித்தறிய முனைந்து, ஒருவருக்கொருவர் வினா-விடைத் தேர்வுகள் வைத்துக்கொண்டு, நூலகங்களுக்குப் படையெடுத்து, புத்தகங்களை ஒருவருக்கொருவர் இரவல் கொடுத்து வாங்கிக் கொண்டபோது கௌசல்யா குறிப்பிட்டாள்:

"அந்தக் காலத்தில் தலைவனும் தலைவியும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்ள உயிரினங்களையும் இயற்கைப் பொருட்களையும் தூது விடுவார்கள். தமயந்தி அன்னத்தைத் தூதுவிட்டாள். துஷ்யந்தன் மேகத்தை. இந்தக் காலத்தில நாம் புத்தகங்களைத் தூது விட்டுக்கறோம்."

பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகும் சிறுகதை, தொடர்கதைகளைப் படித்து வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் விமரிசனங்களை ஒப்பிட்டுக்கொண்டது ஏதோ நேற்று நடந்தது போலிருந்தது.

"இப்போ எழுதற ஆசிரியர்கள்ல என் ஃபேவரிட் சுஜாதா. உனக்கு?"

"நான் தமிழ்த் தொடர்கதைகள் அதிகம் படிப்பதில்லை கௌசி, சுஜாதாவும் இந்துமதியும் தவிர. நல்லபெருமாளோட ’போராட்டங்கள்’ எனக்குப் பிடிச்சது. அதேபோல் நா.பா.வோட ’சத்திய வெள்ளம்’. மற்ற ஆசிரியர்களை--மெய்ன்னா கல்கியைப்--படிக்காததால ஃபேவரிட்னு யாரையும் குறிப்பிட முடியாது. ஆனால் எனக்கு சுஜாதாவும் இந்துமதியும் பிடிக்கும். போன தலைமுறை எழுத்தாளர்கள்ல சூடாமணியோட சிறுகதைகள் பிடிக்கும். அசோகமித்திரன், ஜானகிராமன், ல.ச.ரா.லாம் இனிமேல்தான் படிக்கணும்."

"நான் நிறையத் தமிழ் நாவல்கள், சிறுகதைகள் படிப்பேன். எல்லோரையும்விட சுஜாதாவின் துணிச்சலான வார்த்தை அமைப்பும், விஷய ஞானமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

"எனக்கும் சுஜாதாவை அந்த விதத்தில் பிடிக்கும். அவரே சொல்லியிருக்கற மாதிரி அவருடைய நாவல்களைவிட சிறுகதைகள் டாப். ’பார்வை, நகரம், இளநீர்’, அவர் கல்கியில் எழுதின விஞ்ஞானக் கதைகள்."

"அவர் நாவல்களில் எனக்குப் பிடிச்சது ’ப்ரியா, சொர்க்கத் தீவு, 24 ரூபாய்த் தீவு’."

"சுஜாதாவோட நாவல்களில் கதையம்சம் அவ்வளவு சிறப்பா இருக்காது. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு. உதாரணமா, ’24 ரூபாத் தீவு, அப்சரா’. அவர் நாவல்களின் உயிர் பாத்திரப் படைப்புதான். அப்புறம் அந்த யுனீக் ஸ்டைல். ஆனால் அந்த ’சொர்க்கத் தீவு’ ஆல்டஸ் ஹக்ஸ்லியோட Brave New World நாவலை ஞாபகப் படுத்தறதும் அல்லாம நிறைய ஒற்றுமைகளும் இருக்கு."

"நான் Brave New World படித்ததில்லை."

"படிச்சுப் பார், தெரியும்."

இப்போது டைரியில் இதையெல்லாம் படிக்கும்போது ’கரையெல்லாம் ஷெண்பகப்பூ’வை நினைத்துக் கொண்டான். இப்போது கேட்டால் கௌசி நிச்சயம் அதுதான் அவளுடைய ஃபேவரிட் என்று சொல்லுவாள்.

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் சொன்னான்: "சுஜாதா இதுவரை சமூக நாவல்கள் எழுதலை இல்ல? அவரே ஒரு சமயத்தில் தனக்கு சமூக நாவல்கள் எழுத வராதுன்னு சொன்ன ஞாபகம்."

"சமூக நாவல்களைப் பொறுத்தவரை இந்துமதிக்கு ஒரு தனி அந்தஸ்து உண்டு. அவருடைய மாஸ்டர்பீஸ் அந்த ’தரையில் இறங்கும் விமானங்கள்’தான்னு சொல்லுவேன்."

"என்ன ப்ரசன்டேஷன், பாத்திரங்கள், இல்லே? இப்ப நினைக்கும்போது அந்தக் கதையில் ஒரு மாற்றம் செய்திருக்கலாம்னு தோணுது, கௌசி. அந்தப் பையன் பேரென்ன, விசுதானே? அந்த விசுவும் அவன் அண்ணியும் ரொம்ப ரெசோர்ஸ்ஃபுல் பாத்திரங்கள். ஒரே மாதிரி எண்ணங்கள், உணர்வுகள், பார்வைகள். ஆசிரியர் அவர்கள் ரெண்டுபேரையும் இணைச்சிருக்கலாம்."

"ஐ டோன்ட் அக்ரி வித் யு. அந்த அண்ணி ஒரு ட்யூட்டிஃபுல் வய்ஃப். அவளால எந்த சந்தர்ப்பத்திலயும் தன் கணவனைப் பிரியமுடியாது. அப்படிப் பிரிஞ்சா கதையின் முடிவு ஒரு நிறைவைத் தராது."

"ஒய் நாட்? கணவனும் மனைவியும் இரு துருவங்களா இருந்துண்டு என்ன வாழ்க்கை?"

"அந்த நாவல்ல ஆசிரியரோட தீமே வேற ராஜா. தி என்டயர் ஸ்டோரி இஸ் ஸ்பன் அரௌன்ட் விஸ்வம்."

"நீ சொல்றது சரிதான். ஆனாலும் எனக்கு அந்த எண்ணம் இருந்தது, ரைட் வென் ஐ ரெட் த நாவல்."

அவனுக்கு ’வளையும் நேர்கோடுகள்’ ஞாபகம் வந்தது. ஒருவேளை கௌசல்யா இப்போது அவன் கருத்தை ஆதரிக்கலாம்.

மாமியும் கௌசல்யாவும் பூஜையை முடிப்பதற்குள் அவன் செய்தித் தாள்களையும் பத்திரிகைகளையும் மேய்ந்துவிட்டு, சரியாக மணி எட்டரைக்கெல்லாம் மணி அய்யரின் கைவண்ணத்தில் மலர்ந்த இட்டலிகளை மிளகாய்ப் பொடியுடனும் தேங்காய்ச் சட்டினியுடனும் ஒருகை பார்த்துவிட்டு, அந்த சூட்டைத் தணிக்க சில்லென்று புதிய சாத்துக்குடிச் சாறு அல்லது டாங்கோ உடனடி ஆரஞ்சுப் பொடிச்சாறோ சாப்பிட்டுவிட்டு, அவன் மாமாவின் ஸ்கூட்டரில் கௌசல்யாவைக் கல்லூரியில் இறக்கிவிட்டுத் தன் கல்லூரிக்குச் செல்லும்போது பெருமையாக இருக்கும்.

மதிய உணவு இடைவெளியில் அவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று நிறைவாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கல்லூரி செல்வார்கள்.

மாலை கல்லூரி எப்போது முடியும் என்று இருக்கும். கடைசி மணி அடித்ததும் விடுவிடு என்று நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை மாற்றிக்கொண்டு அவன் ஸ்கூட்டரில் அவள் கல்லூரியை அடையும்போது அவள் வாசலில் காத்திருப்பாள்.

"கௌசி, வசந்தி எங்கே?"

"தோழியுடன் ஹாஸ்டலுக்குப் போயிட்டா. அவங்களுக்கு அஞ்சரை மணிக்குள்ள டிஃபன் எடுத்துக்காட்டா தீர்ந்து போயிடும்."

"சரி, உட்கார். நாளைக்குப் பாத்துக்கலாம்."

கல்லூரி முடிந்து புற்றீசல்கள்போல் வெளிப்படும் பெண்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டே செல்ல, சிலரைப் பார்த்து கௌசல்யா கையசைக்க, அவர்கள் அந்த வண்ணமலர்க் கூட்டத்தில் மிதந்துசென்று வீட்டை அடையும்போது மாமி முகத்தில் மகிழ்ச்சி சுடர்விட இவர்களை எதிர்பார்த்திருக்க மணி ஐந்தடிக்கும்.

டிஃபன், காஃபி சாப்பிட்டுவிட்டு அடுத்த அரை மணியில் மொட்டை மாடியில் உள்ள அறையில் டேபிள் டென்னிஸ். கௌசல்யா சிரத்தையாக, ஸ்போர்ட்ஸ் உடையில் கையில் விலையுயர்ந்த ’டீடி ராக்கெட்’டுடன் வருவாள்.

அந்த ’பெஸ்ட் அஃப் ஃபைவ்’ போட்டியில் எப்போதும் அவனுக்கே வெற்றி.

"உன்னை மாதிரி எனக்கு ஸ்பின்லாம் வரமாட்டேங்கறது ராஜா!"

"பழக்கம்தான் கௌசி."

"நான்கூட சீரியஸா டேபிள் டென்னிஸ் பழகப் போறேன்."

"அவசியம் இல்லை கௌசி. இந்த அளவு போதும். அப்படிப் பாத்தா நீ என்னைவிட செஸ் நல்லா ஆடறயே? உனக்கு எவ்வளவோ பயனுள்ள வேறுவகையான ஈடுபாடுகள் இருக்கும்போது, இந்த விளையாட்டைப் போய் மும்முரமா கத்துக்க வேண்டியதில்லை. இல்லைனா உன் ஆர்வங்கள் சிதறிப்போய் எதையும் முழுமையாகச் செய்ய முடியாது."

"வசந்திகூட இதையேதான் சொல்லுவா. அவளும் என்னளவுக்கு டீடி ஆடறா."

"நான்தான் அவளுடன் இங்க ஆடியிருக்கேனே? அவள் உன்னைவிடக் கொஞ்சம் பெட்டராவே ஆடறா."

இருட்டத் தொடங்கியதும் சிறிது நேரம் கேஸட்கள் கேட்டுவிட்டு, இருவரும் ’ஸ்டடி’யில் அமர்ந்து ஒருவருக்கொருவர் அனாவசியமாகப் பேசாமல் அவரவர் பாடங்களை ஆழ்ந்து படித்துவிட்டு, எட்டரை மணி வாக்கில் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் ஒன்பது முதல் பத்துவரை படித்துவிட்டு, தத்தம் அறைகளுக்குச் சென்று கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு, இன்டர்காமில் பரஸ்பரம் ’குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்’ சொல்லிக்கொண்டு உறங்கச் செல்வார்கள்.

(தொடரும்)

ரமணி
20-03-2013, 01:34 AM
ஒருநாள் மத்தியானம் கல்லூரியில் இருந்து சீக்கிரம் வந்தவன் மாமியுடன் பேசிக்கொண்டிருந்த போது தற்செயலாக நினைத்துக்கொண்டு அவர்களுடன் அப்பா-அம்மாவின் மனத்தாங்கல் பற்றிக் கேட்டான்.

"அது ஒண்ணும் சொத்து சம்பந்தமான பிரச்சனை இல்லைப்பா. எங்களுக்குக் கல்யாணம் ஆறதுக்கு முந்தி உங்க அம்மாவழித் தாத்தா, உங்க பாட்டி காலமாகி ரெண்டு வருஷம் கழிச்சு குடும்பத்தில சொத்து பிரிக்கும்போது உங்கம்மாவுக்கு நகைகள் தவிர வேற ஒண்ணும் பணமாக் கொடுக்கலைன்னு உங்கப்பா கொஞ்சநாள் கோவமா இருந்தாராம். அது அப்புறம் சரியாயிடுத்து. உண்மையான மனஸ்தாபம் அதுக்கப்புறம்தான் ஆரம்பிச்சது."

"எனக்கு விவரம் தெரியாது மாமி. என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்கோ."

ஒரு நெடிய பெருமூச்சுடன் மாமி தொடர்ந்தாள்.

"வேற ஒண்ணும் இல்லைப்பா. என்னை உங்க மாமாவுக்குக் கல்யாணம் ஆறதுக்கு முந்தியே தெரியும். ஆனால் நாங்க வடமா, நீங்க ப்ருஹத்சரணம். இந்த உட்பிரிவுக்குள்ள அந்தக் காலத்தில வேற வழி இல்லைனான்னாதான் கல்யாணம் பண்ணிவெப்பா. போறாக் குறைக்கு எங்க கல்யாணம் நிச்சயமானதும் கொஞ்ச நாள்ல உங்க தாத்தா---அதான் என் வருங்கால மாமனார்---தவறிப்போய்ட்டார். அவர் பாவம் வயசாகித் தள்ளாமைல எல்லாரும் என்னிக்கோ ஒருநாள் போறாப்பலதான் போனார். அவருக்கே தான் இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்போம்னு தோணிட்டதால, தன் கடைசி காலத்தில, இருக்கற நெலம் புலம் எல்லாம் கணக்கெடுத்து பாகம் பிரிக்க ஏற்பாடு பண்ணிட்டார். உங்க மாமா, உங்க தாத்தாக்கு ரெண்டு பொண்ணுக்கப்புறம் பிறந்த ஒரே பிள்ளைங்கறதால அவருக்குத்தான் மேஜர் ஷேர். அது மத்த அக்கா தங்கை, வீட்டு மாப்பிள்ளைகளுக் கெல்லாம் பிடிக்கலை. உங்க மாமா வேற உங்கப்பாவைவிடப் பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவரோன்னோ, சின்னப் பையனுக்கு இவ்வளவு சொத்தான்னு பொறாமையோ என்னவோ.

"இதைத் தவிர, உங்க மாமா அவா அவருக்குப் பார்த்து வெச்சிருந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது, தனக்குப் பிடிச்ச பொண்ணைத்தான் (அதாவது என்னை) பண்ணிப்பேன்னுட்டார். அதனால இவா எல்லோரும் சேர்ந்து---உங்கப்பா மூத்த மாப்பிள்ளையோன்னோ, அவர்தான் அங்க லீடர்---உங்க தாத்தா தவறிப் போனதுக்கும் எங்க கல்யாண நிச்சயத்துக்கும் முடிப்போட்டு, நான் அதிர்ஷ்டம் கெட்டவள், அதுவும் இல்லாம வேற ஜாதி, அதனால உங்க மாமா என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்லிப் பார்த்தா. மாமா கேக்கலை. நான் விரும்பி நிச்சயம் பண்ண பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், அவள் வேற ஜாதிங்கறது மஹா தப்பு, அதுவும் பிராம்மண ஜாதிதான்னு ஒத்தக்கால்ல நின்னுட்டார். கல்யாணமும் கொஞ்சநாள் தாமசமா நடந்தது.

"கல்யாணமாகிக் கொஞ்சநாள் புக்காத்தில---அதான் ஒங்காம்---நாங்க இருக்கவேண்டி வந்தது. மாமா அப்போ பக்கத்து ஊர்ல வேலையாய் இருந்தார். உங்கப்பாம்மாக்கும் பிள்ளை குட்டி கிடையாது. அதுவேற அவா மனசை அரிச்சிண்டிருந்தது..."

"மாமா என்ன வேலைல இருந்தார்?"

"முதல்ல தாலுகா ஆஃபீஸ்ல க்ளார்க்கா இருந்தார். அதை விட்டுட்டு கொஞ்சநாள் ஒரு கம்பெனில சேல்ஸ்மேன் வேலைல சேர்ந்தார். அப்புறம் இந்த மெடிகல் ரெப் வேலைல ஒருவழியா செட்டில் ஆனார்."

பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொண்டு மாமி தொடர்ந்தாள்.

"புக்காத்துல உங்கம்மாவும் அப்பாவும் என்னைப் பாடாப் படுத்தி வெச்சுட்டா. நின்னா குத்தம், ஒக்காந்தா குத்தம், சமைச்சா கேக்கவே வேணாம். உங்க பாட்டி இருந்திருந்தா இப்படில்லாம் செஞ்சிருக்கமாட்டா... பாடாப் படுத்திட்டான்னா என்ன? சாப்பாடு தண்ணிக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆனால் நான் ஏதோ வேண்டாதவள் மாதிரி இவா என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கவே பிடிக்காமல் நடந்துண்ட விதமும், எதுக்கெடுத்தாலும் தப்புக் கண்டுபிடிச்சிண்டு, மாமாட்ட சத்தம் போட்டுண்டு...

"நானும் முதல்ல இதெல்லாம் சஹஜம், அவா ஸ்வபாவமே அப்படித்தான்னு பல்லைக் கடிச்சுப் பொறுத்திண்டு இருந்தேன். கொஞ்ச நாள்ல இப்படிக்கூட அக்கா-தம்பிக்குள்ள த்வேஷம் பாராட்டுவாளான்னு வெறுப்பாய்டுத்து. மாமாவும் அமைதியா, பொறுமையா இருந்தார். அவருக்கும் ஒரு நல்ல வேலை மனசுக்குப் பிடிச்சமாதிரி அமையலை. அவருக்கு விவசாயம் பண்றது பிடிக்காததால இருந்த நெலத்தை எல்லாம் வித்துட்டார். கடைசில ஒருநாள் இவா ஆர்பாட்டம் அதிகமாக, அக்காவோட சண்டைபோட்டு அமர்க்களமாகி, உங்கப்பா ’கெட் அவுட்’னு கத்த எழுந்து வந்தவர்தான். இன்னிவரைக்கும் பெரியக்கா வீட்டுப் பக்கம் தலைவெச்சுப் படுக்கலை."

"ஆனால் நான் சின்ன வயசுல கௌசல்யாவைப் பார்த்திருக்கேனே? எங்காத்துக்கெல்லாம் வந்திருக்கா."

"அதான் அதுல வேடிக்கை. உனக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு கௌசல்யா பிறந்த உடனே உங்கம்மா மனசு மாறினாப்போல இருந்தது. அவளை உன்னை மாதிரியே மூணாங் க்ளாஸ்ல ஸ்கூல்ல சேர்த்தபோது, முதல் வருஷ லீவுல ஒரு வாரம் வரவழைத்துச் சீராட்டினா. என்ன இருந்தாலும் அத்தை இல்லையா, மனசு கேட்கலை! அவாளுக்கு வேற ரொம்ப நாள் குழந்தை இல்லாம எவ்வளவோ தவமிருந்து நீ பிறந்தே..."

"அப்ப மாமா வரல்லையா?"

"நான் மட்டும் வந்து ஒரு வாரம் இருந்துட்டுக் கௌசல்யாவைக் கூட்டிண்டு வந்துட்டேன்."

"அப்போ அப்பாம்மா எப்படி இருந்தா?"

"அப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் நாங்க போனதும் திரும்பப் பேச்சுவார்த்தை இல்லை. நான் எழுதின நாலஞ்சு கடுதாசிக்கும் பதில் இல்லை."

"அதுக்கப்புறம் இத்தனை வருஷம் கழிஞ்சுமா சரியாகலை?"

"என்னவோப்பா. உங்கப்பாவும் பிடிவாதக்காரர் மாமாவும் பிடிவாதக்காரர். நாள்போக நாள்போக நான் இவர்ட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன், ’அவா அந்தக் காலத்து மனுஷா, கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பா, நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்’னு, கேக்கமாட்டேங்கறார். ’நாளைக்கே ராஜாவுக்குக் கௌசல்யாவைக் கொடுக்க வேண்டியிருந்தா என்ன பண்ணுவேள்’னுகூட கேட்டேன். அதுக்கு அவர், ’அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வந்தாப் பாத்துக்கலாம். முதல்ல அவாளுக்கு எதிரா லைஃப்ல உயர்ந்து காட்டணும்’னு சொன்னார். இப்ப என்னடான்னா நாங்க பெரிய பணக்காராளாய்ட்டோம், அவாளை மதிக்கறதில்லைனு உங்கப்பாம்மா கட்சி. உன்னோட சித்தி, அதான் வசந்தியோட அம்மா காமு-அக்கா, அவா குடும்பத்தோடல்லாம் நாங்க சுமுகமா இல்லையா?

இப்பவாவது இவர் விட்டுக்கொடுப்பார்னு பார்த்தா அதுவும் நடக்கலை. உங்கம்மாவும்---சொந்தத் தம்பின்னுகூடப் பார்க்காம அப்படி என்ன விரோதமோ? பாவம், நீ ரொம்ப நல்ல பையன். உனக்கும் கௌசல்யாவைப் பிடிச்சிருக்கு, அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. பழசெல்லாம் மறந்துட்டு எல்லாரும் ஒண்ணு சேரலாம்னா ஒவ்வொருத்தரும் தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிக்கறா. நான்தான் எல்லோருக்கும் நடுவுல கிடந்து அல்லாடறேன்."

"கௌசல்யா என்னை விரும்பறதைப் பத்தி நீங்களும் மாமாவும் என்ன நினைக்கறேள்?"

"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் அதை ரொம்ப வரவேற்கரேன்பா. அதுதான் நேச்சுரல், விரும்பத்தக்கதும் கூட. மாமாவுக்கும் உன்னைப் பத்தி சந்தோஷம்தான். உன்னைவிட பெட்டர் மேட்ச் கௌசல்யாவுக்குக் கிடைகாதுன்னு அவருக்குத் தெரியாமல் இல்லை. தவிர, அவருக்குக் கௌசல்யாகிட்ட அளவுகடந்த பாசம். அவளுக்காக அவர் என்ன வேணும்னாலும் செய்வார். மொத்தத்துல உங்கப்பா மனசு வெச்சா நடக்கும்."

"எனக்கு இதுவரைக்கும் இந்த விவரங்கள்லாம் தெரியாது மாமி. நான் இந்த லீவுல அப்பாகிட்ட பக்குவமா பேசிப் பார்க்கிறேன்."

*** *** ***
(தொடரும்)

ரமணி
21-03-2013, 02:09 AM
பயணம்: நாவல்
ரமணி
22


அச்சமில்லை அமுங்குதல் இல்லை,
நடுங்குத லில்லை நாணுத லில்லை.
பாவ மில்லை பதுங்குத லில்லை;
---மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 24

அந்த வருடக் கோடை விடுமுறையின் போது அப்பாவிடம் பக்குவமாகக் கௌசல்யாவைப் பற்றிக் கூறி அவர் மனசை மாற்றி சம்மதம் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலில் அவன் பல்வேறு வழிகளை யோசித்துத் தன்னைத் தயார்ப்படித்திக்கொண்டு ஒரு முடிவுக்கு வருவதற்குள் முதல் வாரமே ஒருநாள் மத்யானம் சாப்பிடும்போது அம்மா திடீரென்று விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டாள்.

"என்னப்பா, ரா..ஜா..! மாமா மாமி எல்லாரும் சௌக்யமா இருக்காளா? மாமா பொண்ணு கௌசல்யா பார்க்க ரொம்ப அழஹா இருக்காளாமே?"

"..."

"அவளை ஸ்கூட்டர்ல எல்லாம் ஏத்திண்டு போறயாமே?"

அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பில் அவன் நிமிர்ந்து பார்க்க, அம்மா தொடர்ந்தாள்.

"என்ன அப்படி ஆச்சரியமா பார்க்கற? நீ கடுதாசி எழுதாட்டத் தெரியாதா? இப்ப என்ன, ஹாஸ்டல்லதான் இருக்கயா, அல்லது காலி பண்ணிண்டு அவாத்திலேயே கெஸ்டா போய்ட்டயா?"

வசந்தியின் மேல் கோபம் வந்தது.

"ஏம்மா இந்த மாதிரியெல்லாம் பேசறே? நானும் வசந்தியும் மாமாவாத்துக்குப் போறதைப்பத்தி நான்தான் ஒரு லெட்டல்ர்ல எழுதியிருந்தேனே? நீங்கதான் அந்த லெட்டர்க்குப் பதில் போட்டபோது அவாளப் பத்தி ஒண்ணுமே கேக்கலை. அப்புறம் என்ன இருக்கு நான் எழுத? மாமா ஒரு வாரம் டூர் போனபோது என்னை வீட்டுக்கு வந்து துணையா இருக்கச் சொன்னார். அந்த நாலஞ்சு நாள் அவர் ஸ்கூட்டரை எடுத்துண்டு காலேஜ் போனேன். போற வழியில கௌசல்யாவை அவள் காலேஜ்ல ட்ராப் பண்ணினேன். இதுல என்ன தப்பு?"

"இன்னைக்கு மாமா டூர் போறபோது உன்னைத் துணைக்கு இருக்க்ச் சொல்வார். நாளைக்கு அவா எல்லாரும் எங்கேயாவது போனால் வீட்டைப் பார்த்துக்கச் சொல்வார். நீ என்ன வாச்மேனா?"

"உன்னுடைய கற்பனைக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லைம்மா. ஒண்ணுமட்டும் சொல்வேன். மாமா நீ நினைக்கற மாதிரி இல்லை. அவர் ரொம்ப நல்லவர்."

"அட, அப்படியா? என்னோட தம்பியைப் பத்தி நீ கொஞ்சநாள் பழக்கத்தில தெரிஞ்சுண்டது இத்தனை வருஷமா எனக்குத் தெரியாமல் போய்ட்டது பத்தியா? (அப்பாவைப் பார்த்தபடியே) மாமா ரொம்ப நல்லவர், அக்கா அத்திம்பேரை மதிப்பவர்னா அப்பாட்ட மன்னிப்புக் கேட்டுண்டு சுமுகமா வந்துண்டு போயிண்டு இருக்க வேண்டியதுதானே?"

அவனால் இந்தக் கேள்விக்கு பதில்சொல்ல முடியவில்லை. மாமா மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற அம்மாவின் கருத்தில் அடிபட்டவனாய் நிமிர்ந்து அம்மாவின் கண்களை நேருக்குநேர் பார்த்தபோது வார்த்தைகள் வைராக்கியத்துடன் வெளிவந்தன.

"எனக்கு உங்க மனஸ்தாபத்தைப் பற்றிய முழு விவரமும் தெரியும்மா."

அப்பாவைப் பார்த்தபோது அவர் சலனமில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"மாமி சொல்லியிருப்பா, கண்ணும் காதும் வெச்சு! என்ன சொன்னா அவ?"

"மாமி கண்ணும் காதும் வெச்சு சொல்லுவான்னா முன்னாடியே நீங்க என்கிட்ட விவரம் சொல்லியிருக்க வேண்டியதுதானே? ஏன் ஏதோ சொத்து விஷயம்னு மூடி மறைச்சீங்க?"

அவன் கேள்வியின் உஷ்ணம் அவனையே தாக்க அம்மாவின் பதிலில் கோபத்தை எதிர்பார்த்து ஏமாந்தான்.

"சொல்லவேண்டியது அவசியமில்லைனுதான் சொல்லலை."

"மாமா மாமியைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டார், அதுவும் மாமி வடமான்னு தெரிஞ்சும்கூட; இதுதானே உங்க விரோதத்துக்குக் காரணம்?"

அம்மா பதில் பேசாமல் அவன் தட்டில் ரசத்தை வார்த்தாள். அப்பா மோர்சாதம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் முதல்முதலாகப் பேசினார்.

"இந்தாப்பா, முதல்ல சாப்பிடு. அப்புறம் கூடத்தில் உட்காந்து பேசலாம்."

(தொடரும்)

ரமணி
23-03-2013, 01:57 AM
அடுத்த அரைமணியில் அம்மாவும் சாப்பிட்டுவிட்டுக் கூடத்துக்கு வந்துவிட, அப்பா ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு புளிபோட்டுத் தேய்த்துப் பளபளவென்று மிளிரும் தன் பித்தளை வெற்றிலைச் செல்லத்தைத் திறக்க, அவன் அப்பாவுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு, நன்றாக யோசித்து, தைரியத்தை வரவழத்துக்கொண்டு பேசத் தொடங்கினான்.

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
---மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 32

என்று டைரியில் பாரதியார் அவனுக்கு உதவியிருந்தார்.

"நான் கேக்கறதைக் கொஞ்சம் புரிஞ்சுண்டு, பாரபட்சமில்லாமல் எனக்கு பதில் சொல்லுங்கோப்பா, என்ன? மாமாவும் மாமியும் அந்தக் காலத்திலேயே ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிண்டாங்க. மாமி வேற சப்கேஸ்ட். அவா கல்யாணம் நிச்சமாகிக் கொஞ்சநாள்ல தாத்தா தவறிட்டார். அதை நீங்க எல்லாரும் ஏதோ அபசகுனமா நினைச்சு வீட்டுக்கு வந்த நாட்டுப்பொண்ணு துரதிர்ஷ்டம் பிடிச்சவள்னு முடிவுகட்டினீங்க. ஓகே, அதெல்லாம் உங்க சென்டிமென்ட்ஸ். எனக்கு அந்தக் காலத்து நிலவரம் பத்தித் தெரியாது. அதைப் பத்திக் கமென்ட் பண்ண எனக்கு அருகதை இல்லை...

"என்னோட கேள்வி, அதுக்காக கௌசல்யா என்ன பாவம் பண்ணினாங்கறதுதான்."

அப்பா தனக்கே உரிய அமைதியான ’அன்டர்டோன்’இல் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக உச்சரித்தபடியே கேட்டார்.

"நீ ஏன் கௌசல்யாவைப் பத்தி நினைக்கறே? அவளைப் பத்தி அவள் பெற்றோர்க்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன வந்தது?"

"நான் எதிர்த்துப் பேசறதா நினைச்சுக்காதீங்கப்பா. நான் ஏன் கௌசல்யாவைப் பத்தி நினைக்கவோ அக்கறை கொள்ளவோ கூடாது?"

"எல்லாக் குடும்பத்தைலையும் சொந்தத்தில பொண்ணுன்னு இருக்கத்தான் செய்வா. அதுக்காக எல்லோரும் அத்தை பொண்ணையோ அல்லது மாமா பொண்ணையோவா கல்யாணம் பண்னிக்கறா?"

"அது வேற விஷயம்பா. சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கும்போது, அதுவும் அவள் ரொம்ப நல்லவளா, படிச்சவளா, பண்புள்ளவளா இருக்கறபோது, ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள நினக்கக்கூடாது?"

அம்மா இடைமறித்தாள்.

"உனக்கு இன்னும் இருபது வயசுகூட ஆகலை. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"

அவன் நினைவில் அனுவும், ஜெயந்தியும், மாலதியும், கௌசல்யாவும் தோன்றி மறைய, அம்மாவின் பாமரத்தனமான கணிப்பு அவன் முகத்தில் ஒரு ஏளனம் கலந்த புன்னகையை வரவழைத்தது.

"எனக்கொண்ணும் அவசரம் இல்லைம்மா. நான் எம்.ஏ. முடிச்சு ஒரு நல்ல காலேஜ்ல வேலைக்கு சேர்ந்தபின்தான் கல்யாணம் பண்ணிப்பேன். ஒரு விவாதத்துக்காக கேக்கறேன். என்னிக்கோ ஒருநாள் திடீர்னு முடிவுபண்ணி, யாரோ முன்பின் தெரியாத ஒரு பொண்ணைப் பார்த்து என் தலைல கட்டறதைவிட, நமக்கு நல்லாத் தெரிஞ்ச பொண்ணைப் பார்த்து, சமயம் வரும்போது பண்ணிவெக்கறது எவ்வளவோ நல்லது இல்லையா?"

அப்பா தொடர்ந்தபோது அவன் வார்த்தைகளில் காயம்பட்டிருப்பது தெரிந்தது.

"நாங்க அப்படியொண்ணும் அவசரப்பட்டு உனக்குப் பொருத்தம் இல்லாம சோடையா ஒரு பொண்ணைப் பார்த்துப் பண்ணிக்கோன்னு சொல்லிடமாட்டோம். கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப் பயிர். உனக்கு இப்பத் தெரியாது. நாளைக்கு நீயும் நாலஞ்சு குழந்தைகளுக்குத் தகப்பனாகி அவாளுக்கு கல்யாணம் பண்ணிவெக்க அலைவே பாரு, அப்பத் தெரியும். வரன் பாக்கறது என்ன விளையாட்டுன்னு நெனச்சயா?"

"எனக்கு உங்க வரன் பார்க்கற திறமைல கொஞ்சம்கூட சந்தேகம் இல்லைப்பா. இருந்தாலும் நான் கௌசல்யாவை விரும்பறேன்."

"அவளோட மேக்கப் அழகுலயும் விதவிதமான மாடர்ன் ட்ரெஸ்லயும் மயங்கிட்ட போலிருக்கு. அல்லது மாமி ஏதாவது சொக்குப்பொடி போட்டாளா?"

"கௌசல்யா நீ நினைக்கற மாதிரி சாதாரணமானவ இல்லைம்மா! அவள் மாடர்னா இருக்கலாம். அதுக்காக அடக்கமா இல்லைனு சொல்லமுடியாது."

"என்ன இருந்தாலும் அவா பெரிய பணக்காரக் குடும்பம். வேளைக்கு ஒரு டிரஸ் போட்டுப்பா. தினம் ஒரு சினிமா பார்ப்பா. ஸ்டைலா டைனிங் டேபிள்ல சமையற்காரர் பரிமாற சாப்பிடுவா. அவளுக்கு இந்த கிராமமும் கட்டுப்பெட்டியா இருக்கற அத்தையும் ஒத்துவருமா? நாம நம்ம அந்தஸ்துக்குத் தகுந்தாப்பல அடக்க ஒடுக்கமா, தெய்வ பக்தியோடு இருக்கற, ஆத்துக் காரியம்லாம் சவரணையாச் செய்யற பொண்ணைத்தானே பார்க்கமுடியும்?"

"கௌசல்யாவைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம நீ பேசறம்மா. அவள் எவ்வளுக்கெவ்வளவு மாடர்னா இருக்காளோ, அவ்வளவுக்கவ்வளவு அடக்கமாயும், கடவுள் பக்தியோடும், அனுசரணையாவும் இருப்பா. எனக்கு அது நிச்சயாத் தெரியும். அதனாலதான் எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, புரியுதா?"

வெற்றிலைச் சக்கயைத் துப்பிவிட்டு வந்து அப்பா மென்மையாகச் சொன்னார்.

"அவசரப்படாதே ராஜா. எந்த விஷயத்திலயும் நிதானமா யோஜனை பண்ணி ஒரு முடிவுக்கு வரணும். கௌசல்யாவை நீ விரும்பறதில தப்பு இல்லை. ஆனால் உண்மையிலேயே உனக்கு அவளைப் பிடிச்சிருக்கான்னு பொறுத்திருந்து பார். இந்த வயசில அப்படித்தான் இருக்கும். இன்னிக்கு ஒருத்தரைப் பிடிக்கும். அவாளை நாளைக்கே பிடிக்காமப் போய்டும். காரணமா, அதைவிட உசந்தவாளா வேற ஒருத்தர் தெரியலாம். அல்லது ஒரே சமயத்தில ரெண்டு மூணுபேர் உகந்தவாளாத் தெரியலாம். இதெல்லாம் ஒரு passing phase. எல்லா விஷயங்களையும் தீர யோஜனை பண்ணித்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும், வர..ணும். தவிர, நம்ப குடும்ப கௌரவம், அந்தஸ்து, இதெல்லாம் பார்க்க வேண்டாமா? எல்லாத்தையும் உதறிட்டுப் போக நாம என்ன சந்நியாசிகளா?"

அப்பாவின் சொற்களில் அசந்துபோனான். அவர் இதுபோல ’ரெண்டு மூணுபேர் உகந்தவளா’--இப்படியெல்லாம் பேசணும்னா அதுக்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும். வசந்தி. அவள் அம்மாவிடம் ஏதாவது சொல்லி அம்மாமூலம் அப்பாவுக்கு ந்யூஸ் போயிருக்கலாம் அல்லது---அப்பாதான் தான் ஒண்ணும் வலிய கருத்து சொல்றதில்லையே தவிர சுத்தி நடப்பதைக் கூர்ந்து கவனிச்சு வெச்சுப்பாரே, அதனால---அப்பாவே யூகிச்சிருக்கலாம். அவனுக்கு சற்றுமுன் வசந்தியின்மேல் வந்த கோபம் இப்போது குழப்பமாக மாறியது.

"இதுல என்ன குடும்ப கௌரவம் பாதிக்கப்படுதுன்னு புரியலைப்பா. இருபத்திநாலு வருஷமா மனசில வெச்சுக்கற அளவுக்கு அந்த விவகாரம் அப்படியொண்ணும் பெரிசாத் தெரியலை."

"உன் மாமாவோட ஆட்டிட்யூட் மாறணும். அப்பதான் நாம மேலே போகமுடியும்."

"நீங்களும் கொஞ்சம் மனசு மாறி விட்டுக்கொடுத்துப் போலாம்பா. என்ன இருந்தாலும் மாமா உங்களைவிட எவ்ளோ சின்னவர்!"

"அதனாலதான் சொல்றேன். அன்னைக்கு வீட்டைவிட்டு வெளியேறினவன் இன்னி வரைக்கும் சுமுகமா இல்லையே?"

"மாமாவைக் கேட்டா ’உங்கப்பாதான் இன்னும் எல்லாத்தையும் மனசில வெச்சிண்டு இருக்கார்’னு சொல்றார். மாமியோ ’உங்கப்பாவும் மாமாவும் தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்னு ஒத்தக்கால்ல நிக்கறா, நடுவுல நான் கிடந்து அல்லாடறேன்’கறா."

"வேறென்ன சொன்னா மாமி? அந்தக் காலத்தில நான் ஒரு மாமியாருக்கு மேல அவளைக் கொடுமைப் படுத்தினதா இல்லாததும் பொல்லாததும் சேர்த்துச் சொல்லியிருப்பாளே? அவளுக்காவது நான் நாத்தனார்தான். நாளைக்கு இந்தாத்துக்குக் கௌசல்யா மாட்டுப்பொண்ணா வந்தா, நான் நெஜமாவே மாமியார் ஆய்டுவேன். அப்ப எவ்வளவுதான் அவளை நல்லா வெச்சிண்டாலும் ஏதாவது சாக்கு கண்டுபிடிச்சு, கொடுமைப் படுத்தறான்னுதான் சொல்லுவா. அதுதாண்டா உலகம்."

"உங்களோட தகராறுக்காக நான் கௌசல்யாவைப் பார்க்கக்கூடாது அவளோட பேசக்கூடாது, அப்படித்தானே?"

"நான் ஏண்டாப்பா குறுக்க நிக்கறேன்? நன்னாப் போய்ப் பாரு, பேசு. அதான் ஏற்கனவே மயங்கியாச்சே? தடால்னு கீழே விழாம இருந்தா சரிதான்."

"அம்மா நீ பேசறது காரணமில்லாத பேச்சு. அல்லது ஒரு விஷயத்தை முழுக்கப் புரிஞ்சுக்காம, இல்லை புரிஞ்சுக்க மாட்டென்னு அடம்பிடிக்கற மாதிரி பேசறே. நான் கௌசல்யாவை விரும்பறதில என்ன தப்பு சொல்லும்மா? அவளை மட்டும் கணக்கில எடுத்துண்டு சொல்லு."

"எனக்குத்தான் அவளைப் பத்தி முழுக்கத் தெரியாதுன்னு நீயே சொல்லிட்டயே?"

"நிச்சயமா. நீ அவளை சின்ன வயசில பார்த்ததுதானே? அப்புறம் மத்த விஷயம்லாம் வசந்தி சொல்லக் கேட்டதுதானே?"

அப்பா குறுக்கிட்டார். "இந்த விஷயத்தில உங்க மாமா என்ன சொல்றான்னு தெரியுமா?"

"மாமா ஒண்ணும் எதிர்ப்புத் தெரிவிக்கலைப்பா. தவிர, அவருக்கு கௌசல்யான்னா உயிர். அவளுக்காக மாமா என்ன வேணும்னாலும் செய்வார்."

"அந்த மாதிரி நாம கமிட் பண்ணிக்க முடியாது. கௌசல்யா உன்னை விரும்பறான்னா நீயும் பதிலுக்கு அவளை விரும்பணும்னு ஒண்ணும் சட்டமில்லை. உங்க மாமாவும் கௌசல்யாவுக்காக, ஏதோ அவள் கேட்கற விளையாட்டு பொம்மை மாதிரி உன்னை வாங்கிடலாம்னு நெனச்சான்னா அதுக்கு நான் உடன்பட மாட்டேன். உன்னை மருமானா, மாப்பிள்ளையா மதிச்சு அவன் ஏத்துக்கணும்."

"நீங்க நினக்கற மாதிரி இது அவ்வளவு சிக்கலான விஷயம் இல்லைப்பா. மாமா என்கிட்ட ரொம்ப அன்பா, மரியாதையாதான் பழகறார். அடுத்த தடவை பார்க்கறப்ப நான் அவரை சுடச்சுட நேரடியாகவே கேட்டுடறேன். நிச்சயம் அவருக்கு நீங்க நினக்கற மாதிரி எண்ணம் இருக்காது."

"சரித்திரக் கதைகள்ல வர தூதுவன் மாதிரி நீ அங்கேயும் இங்கேயும் போய்ட்டுவரப் போறே, அவ்வளவுதான். வேற ஒண்ணும் உருப்படியா நடக்கப் போறதில்லை. எனக்கு உங்க மாமாவைத் தெரியாதா? இல்லை அவள் தர்ம பத்தினியைத்தான் தெரியாதா?" என்றாள் அம்மா அபிநயத்துடன்.

*** *** ***
(தொடரும்)

ரமணி
25-03-2013, 12:45 AM
பயணம்: நாவல்
ரமணி
23


போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே... --உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!
---மஹாகவி பாரதியார், கண்ணம்மாவின் காதல் 2

கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறந்தவுடன் அவன் ஒரு சனிக்கிழமை வசந்தியைப் பார்க்கப் போனபோது ஓர் அதிசயம் காத்திருந்தது.

வழக்கம்போல் ப்யூனிடம் சொல்லி அனுப்பிவிட்டு பார்வையாளர்கள் பெஞ்ச்சில் அமர்ந்து சுவாரஸ்யமாக ’ஃப்லிம் ஃபேர்’ பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருந்தவன், "என்ன ராஜா, அவ்ளோ இன்டரஸ்டிங்காப் படிக்கறே?" என்ற குரல்கேட்டு நிமிர்ந்தபோது வசந்தி அருகில் ஜெயந்தி நின்றிருந்தாள்!

அவனைக் கண்டதும் வெட்கத்துடன் புன்னகைத்து, "குட் ஈவனிங்" என்றாள்.

முன்பு பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் உயரமாக, ஒல்லியாகப் பாவாடை தாவணி அணிந்துகொண்டு கொஞ்சம் நீளமான இரட்டைப் பின்னல்களுடன் நின்றாள். வழக்கம்போல் ஒரு பின்னல் முன்னால் வந்துவிழும் என்று பார்த்தால்---காணோம்! முகத்தில் கொஞ்சம் இளமையின் மாற்றம் தெரிய, அந்தச் சிவப்புக்கல் ஒற்றை மூக்குத்தி இப்போதும் பளபளக்க, கண்கள் துருதுரு என்று அலைய, குரலில் கொஞ்சம் மெருகேறியிருக்க, கால்களின் கட்டை விரல்கள் செய்வதறியாது பின்னிக்கொள்ள, அவனது நந்தவனத்தில் மறுபடியும் மலர்க் கண்காட்சி!

"ஹல்லோ மிஸ் ஜெயந்தி! எங்கே இந்தப் பக்கம்? அப்பா ஏதோ திண்டுக்கல் காலேஜ்ல சேர்க்கப் போறதாச் சொன்னார்?"

"எங்க இருந்தாலும் ஹாஸ்டல்லதான் இருக்கணும். இங்கேயாவது வசந்தி இருக்காங்க."

"நான் இந்த ஒரு வருஷம்தானே இருப்பேன்?"

(அதுக்கப்புறம் நான் இருப்பேன், பார்த்துக்கறேன்.) "பி.யு.ஸி.ல என்ன க்ரூப்?"

"எம்.பி.ஸி.தான் எடுத்திருக்கேன். எனக்கு கெமிஸ்ட்ரினா பிடிக்கும்."

"ம்ஹூம். அப்புறம்? எப்படி இருக்கு காலேஜ் லைஃப், ஹாஸ்டல் லைஃப்?"

"ஃபைன். முதல்ல எல்லா சப்ஜக்ட்டும் இங்க்லிஷ்ல சொல்லித்தறதும் எல்லோரும் இங்க்லிஷ் பேசறதும் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. இப்ப சரியாயிடுத்து."

"எங்களுக்கெல்லாம் கூட கொஞ்சநாள் இந்தக் கஷ்டம் இருந்தது. நாமெல்லாம் ஹைஸ்கூல்ல தமிழ் மீடியம் தானே?"

கொஞ்சம் தயங்கிக் கேட்டாள். "நீங்களும் இங்க்லிஷ் ஃபைனல் இயரா?"

"ஆமாம். நான், வசந்தி, கௌசல்யா எல்லோரும் இங்க்லிஷ்தான்."

"ராஜா, நாங்க கொஞ்சம் ஷாப்பிங் போகப் போறோம். கௌசிக்குத் தலைவலின்னு சீக்கிரமே வீட்டுக்குப் போயிட்டா. நீ என்ன செய்யப் போறே, எங்களோட வரையா?"

"வித் ப்ளஷர். ஜெயந்திக்குக் கௌசல்யாவை அறிமுகப் படுத்தினாயா?"

"ஓ! இவளுக்கும் மாமா மாமிதான் லோகல் கார்டியன். இப்பதான் முதல்முதலா அவங்க வீட்டுக்குப் போகப் போறா."

ஜெயந்தியுடன் ஷாப்பிங் போகப் பிடித்திருந்தது. மூவரும் கல்லூரி கேன்டீனில் காப்பி சாப்பிட்டுவிட்டுப் பேசியபடியே காலாற மெயின் கார்ட் கேட் பக்கம் வந்தனர்.

"இன்னமும் தமிழ்வாணன் நாவல்கள் படிக்கிறாயா, ஜெயந்கி?"

"எப்பவானும் படிக்கறதுண்டு. அநேகமா எல்லா நாவலும் படிச்சாச்சு", என்று கன்னம் சிவந்தாள்.

"அப்புறம்? இந்த ஊரில் எல்லா இடமும் பார்த்தாச்சா?"

"என்னைக் காலேஜ்ல சேர்க்க அப்பா அம்மா வந்திருந்தபோது மலைக்கோட்டை, சமயபுரம், திருவானைக்கா, ஶ்ரீரங்கம் போனோம். மற்ற இடங்கள் இனிமேல்தான் பார்க்கணும்."

அவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கித் தனக்கு வேண்டிய ’பிளாஸ்டிக் பக்கெட், ப்ளாஸ்டிக் மக், டூத் பேஸ்ட், டூத் ப்ரஷ், ரிப்பன்’, வளையல்கள் போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டாள். சாரதாஸில் நுழைந்து தனக்கு நாலைந்து தாவணிகள் எடுத்துக்கொண்டு, "உங்களுக்குப் பிடிச்சிருக்கா, வசந்தி?" என்று கேட்டு அவனை ஓரக் கண்ணால் பார்த்தபோது மெல்லத் தலையாட்டினான்.

எல்லாப் பொருள்களையும் அவள் அந்த ’ப்ளாஸ்டிக்’ வாளியில் வைத்துத் தூக்கி வந்தபோது அவன் எவ்வளவோ உதவ முற்பட்டும் மறுத்துவிட்டாள்.

மறுநாள் அவர்கள் கௌசல்யா வீட்டுக்குப் போனபோது அந்த முதல் சந்திப்பிலேயே ஜெயந்தியைக் கௌசல்யாவுக்கும் மாமிக்கும் பிடித்துப்போனது.

"என்னையெல்லாம் வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம், ஜெயந்தி. நாமெல்லோரும் இப்ப தோழிகள் ஆய்ட்டதால என்னைக் கௌசின்னே கூப்பிடு."

"உங்க வீடு ஃபன்டாஸ்டிக், கௌசி. இங்கேயே இருந்திடலாம் போலிருக்கு."

"இருந்திடேன், எனக்கும் சந்தோஷமா இருக்கும். நாளைக்கே உங்க அப்பாவுக்கு ஒரு லெட்டர் போட்டுடு."

(தொடரும்)

ரமணி
27-03-2013, 01:49 AM
அவனால் கௌசல்யாவைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கௌசல்யாவாகத் தோன்றினாள். இப்படிக்கூட வெள்ளை உள்ளத்துடன் மனதில் பட்டதை சட்டென்று வெளியிட்டு, அந்த உடனடிப் பேச்சிலும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து உதிர்த்து, கலைடாஸ்கோப்பின் வண்ணக் கோலங்கள் போன்ற அழகழகான முக பாவங்களில் எப்போதும் சிரித்துக்கொண்டு ஒரு பெண்ணால் இருக்க முடிவது வியப்பாக இருந்தது. கோபமோ வருத்தமோ பட்ட சந்தர்ப்பங்கள் அவள் வாழ்க்கையில் அதிகம் இருந்திருக்காது, அந்த வகையில் அவள் அதிர்ஷ்டசாலி என்று தோன்றியது.

"ஜெயந்தியை பற்றி நீ என்ன நினைக்கறே, ராஜா?"

"எ வெரி நைஸ் கேர்ள், இல்ல?"

"நான் உன்னுடைய கருத்தைக் கேட்டேன்."

"எஸ், எ நைஸ் கேர்ள். அழகானவள், நல்லவள். புத்திசாலி. வெரி ஆக்டிவ். இனிமையாப் பேசறா."

"உனக்கு அவளை முன்பே தெரியுமாமே?"

"தெரியும்னா பார்த்திருக்கேன். ஒரே ஊர்தானே? வசந்தியோட தோழிவேறு. எங்காத்துக்கெல்லாம் வந்திருக்கா."

வசந்தி எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறாள் போலிருக்கிறது. அனுவைப் பற்றி ஏதாவது சொல்லியிருப்பாளோ?

வினாடிகள் மௌனமாக நழுவ, திடீரென்று கேட்டாள்: "ஜெயந்தி உனக்கு நல்ல மேட்ச், இல்லை?"

சட்டென்று நிமிர்ந்தான். அவள் கண்களில் தெரிந்தது குறும்பா, கேலியா அல்லது சோகமா என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

"ஏன் இப்படிக் கேட்கிறே கௌசி? டஸ் இட் மீன் எனிதிங்?"

"இல்லை, நீ அவளை விரும்பறதா வசந்தி நினைக்கறா."

"அப்படி-யா? ஆமாம் நான் அவளை நினைத்துப் பார்த்தேன், உன்னை சந்திப்பதற்கு முன். இப்பவும் அவள் ஒரு friend. Let's not have any confusion there."

மற்றொரு சந்தர்ப்பத்தில் கௌசல்யாவோடு இதே மாதிரி மெல்லிய பிணக்கம் ஏற்பட்டது.

"ராஜா, அனு இப்ப எங்க படிக்கறா?"

"எந்த அனு?"

"அனுராதா. உன் பால்ய சிநேகிதி."

"வசந்தி சொன்னாளா?"

"எனக்கு வேற எப்படித் தெரியும்?"

வசந்தியின் மீது கோபம் வந்தது.

"என்ன சொன்னா, கௌசி?"

"நீயும் அனுவும் வசந்தியும் சின்ன வயசில இணைபிரியா நண்பர்களாம். அனு உன்மேல உயிரா இருந்தாளாம். அதே மாதிரி நீயும் அவள்மேல உயிரா இருந்தாயாம். அப்புறம் ஒருநாள் அவள் உன்னிடம் சொல்லிக்காம எங்கேயோ படிக்கப் போனதும் உனக்கு ரொம்ப ஏமாற்றமாய்ட்டதாம். யு ஸ்டில் மிஸ் ஹர், இல்ல?"

"இதபார் கௌசி, உனக்கு நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

"சொல்லு. ஐம் ஆல் இயர்ஸ்."

"ஒவ்வொரு ஆணும் தன் இளமைப் பருவத்தில் இருந்தே ஒரு பெண்ணைப் பற்றி நினக்கத் தொடங்கிவிடுகிறான். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தும். உனக்கு உன் பள்ளிப் பருவத்தில் யாரும் தோழர்கள் இருந்தது இல்லையா, அவர்களுடன் நீ மனம்விட்டுப் பழகினது இல்லையா?"

"இல்லைனு சொல்லமுடியாது."

"அப்புறம்? நீ இப்ப அவர்களைப் பிரிந்து வருந்தறேன்னு நான் சொல்லலாமா?"

"நோ. ஐ டோன்ட் மிஸ் எனி ஆஃப் தெம். இதெல்லாம் அந்தந்தக் காலகட்டத்தில தோன்றி மறையும் அன்பு, ராஜா."

"சரியாச் சொன்னே. அந்த வகையில்தான் நான் அனுவை விரும்பினேன். காதலிச்சேன்னுகூட சொல்லலாம். ஆனால் அவள் என்னை அதேபோல் விரும்பினாளான்னு கேட்டாத் தெரியாது."

"So, you loved her and are now pining for her."

"கதைகள்ல வர்ற மாதிரி இதை அவ்ளோ சுலபமா சொல்லிவிட முடியாது, கௌசி. இன்னும் கொஞ்சம் விளக்கமா நான் உனக்குச் சொன்னா இதை நீ சரியான கோணத்தில் புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்."

"சொல்லு."

"உன்னைப் பொறுத்தவரைக்கும் உங்க பெற்றோரோட குறிக்கோள் என்ன? உன்னை அருமையா வளர்த்து நல்லாப் படிக்கவைத்து ஒரு நல்ல மாப்பிள்ளையிடம் ஒப்படைக்கணும், இல்லையா? அதுபோல என்னைப் பற்றியும் என்னோட பெற்றோர் நினைப்பார்கள் இல்லையா?"

கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு கண்களில் கனல் தெரிய அவள் தலையாட்டியபோது மிக அழகாகத் தோன்றினாள். கோபத்தில் மேலும் விளங்கித் தெரியும் அவள் அழகை இப்போதுதான் பார்க்கிறான்.

"சரி. இப்ப ஒரு படி மேலே போ. உனக்கே அந்த குறிக்கோள் இருந்ததுன்னா? என்ன செய்வே? உன்னோட வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திக்கும் ஆண்களை எடைபோட்டு அவர்களில் யாராவது உனக்குப் பொருத்தமான்னு நினைச்சுப் பார்க்கமாட்டே? ஒரு முடிவுக்கு வர அவர்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சுக்க ஆசைப்படமாட்டே? அவர்களோட பழகிப் பார்த்தால் அது முடியும்னா அந்த வழியில் முயற்சி செய்யமாட்டே?"

"Thought provoking."

"என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த எய்ம் எப்படியோ எனக்குச் சின்ன வயசிலேர்ந்தே இருந்தது கௌசி. சொன்னா உனக்குப் புரியுமோ என்னவோ? அனுவை முதன்முதலா நான் அந்த எலிமென்டரி ஸ்கூல் க்ளாஸ்க்ல பார்த்த உடனே என் மனசில என்ன தோணியது தெரியுமா? ’கல்யாணம் பண்ணிண்டா நான் இவளைத்தான் பண்ணிக்கணும்’னு~ அவ்ளோ அழகா இருந்தா அவ!"

"சுவாரஸ்யமா இருக்கு. கொஞ்சம் அசாதாரணமாயும் தெரியுது."

"Therefore, I began to adore her", என்று தொடங்கி அனுவைப் பற்றிய நிகழ்ச்சிகள், அவன் அனுபவங்கள் எல்லாவற்றையும் அவளிடம் விவரித்தான், அந்தக் கடிதம் தவிர. அடுத்து ஜெயந்தியைப் பற்றியும் மாலதியைப் பற்றியும் சொன்னான். அத்துடன் அவனுடைய குடும்பப் பின்னணி பற்றியும் விளக்கினான். மாலதியைப் பற்றிச் சொன்னபோது "தெரியும்" என்றாள்.

"அவள்ட்ட நான் கேட்டபோது வசந்தியைத் தெரியாதுன்னு சொன்னாளே?"

"மாலதி B section. A section நானும் வசந்தியும். அந்த சமயத்தில் எங்களுக்குள் அறிமுகம் இல்லை."

"BhAskar loves her sincerely."

"நல்ல பொண்ணு. யார் வம்புக்கும் போகமாட்டா. First in the class. மொத்தமே அவளுக்கு எங்களை மாதிரி அக்கறையாப் படிக்கற நாலைந்து தோழிகள்தான். தன் தோழிகள்கிட்ட உயிராப் பழகுவா. போலித்தனம் கிடையாது. BhAskar would be lucky if he gets her."

அவன்தன் மனம்திறந்த
வார்த்தைகளின் வெள்ளப் பெருக்கில்
அவள்விழிகளின் கோபக்கனல் அழிந்து
அவர்களிடையே மௌனம் திரையாக விழுந்தது.

சிலநிமிடங்களில் அவளொரு தீர்மானத்துடன்
அந்த மௌனத்தை விலக்கி
உண்மையை எதிர்கொண்டபோது
அவர்களிடையே தூரம் அதிகமாகிவிட்டது தெரிந்தது.

"கல்யாணம் சம்பந்தப்பட்ட உன்னுடைய கணிப்பில் நான் எந்த இடத்தில் இருக்கேன், ராஜா?"
தயங்கினான்.

எவ்வளவு எளிதாகக் கேட்டுவிட்டாள்!
அவள்தன் மனதில் காதல் என்று
நினைத்துப் போற்றி வந்தது
அவனைப் பொறுத்தவரை வெறும் தேடல்,

அதுவும் அந்தத் தேடல்
அவளுடன் முடிந்துவிடும் என்ற
உத்திரவாதம் இல்லை
என்னும் உண்மையை

அவனுக்கு முன்னரேஅவள்
இனம் கண்டுகொண்டது புரிந்துபோக,
அவளுக்கு முன்தான் மிகவும்
சின்னவனாகி விட்டதை உணர்ந்தான்.

முன்பு ஒருமுறை அவளைப் பற்றி நினைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது.
நான் சந்தித்த பெண்களில் இவளைவிட அழகு அனு மட்டுமே. வெற்றி மேடையில் அனு முதல்படி என்றாள் இவள் இரண்டாவது.

"Come on, RAjA! Let's face it! நீ இதுவரைக்கும் சந்தித்து உனக்கு மனைவியாகத் தகுந்தவள்னு நினைச்சுப் பார்த்த பெண்களை வரிசைப் படுத்தச் சொன்னா, முதலில் அனு. அப்புறம் ஜெயந்தி, மாலதி. இப்போது நான். Anu is out of question now. மாலதியை நீ பாஸ்கருக்கு விட்டுக்கொடுக்கத் தயார். மீதி ஜெயந்தியும் நானும். So we have a fifty-fifty chance? That's not bad. கல்யாணம் என்பது இப்போதெல்லாம் ஆண்களின் சுயம்வரம் தானே?"

"நீ என்னை சரியாப் புரிஞ்சுக்கலை கௌசி. இதுவரை என்னுடைய காதல் ஒருதலைக் காதலாகவே இருந்து வந்திருக்கு கௌசி. மறுமுனையில் நான் அன்பை, நேசத்தை எதிர்பார்க்கலைதான். இப்பத்தான் முதல்முறையா I am at the receiving end. ஒருவேளை எனக்கு அந்தத் தகுதி இல்லையோ என்னவோ?"

சட்டென்று எழுந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
"God, I love you RAjA! நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்."

அவன் தோள்களில் அவள் கண்ணீர் சுட்டது.

அவளது நீண்ட, மென்மையான விரல்களை வருடியபடியே சொன்னான். "எனக்கு இப்போதும் ஏதோ ஒரு பயம்தான் கௌசி. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிராக் காதலிக்கறோம். ஆனால் அது எவ்வளவு தூரம் வெற்றிபெறும்னு தெரியலை."

"ஏன், யார் நமக்குக் குறுக்கே இருக்கா?"

"உங்கப்பா, எங்கப்பா?"

"எங்கப்பா எனக்காக எதுவும் செய்வார்."

"போன சம்மர்ல நான் எங்க அப்பா அம்மாட்ட உனக்காக நிறைய வாதாடினேன். எங்கப்பாட்ட நான் அதுவரைக்கும் அதுமாதிரி பேசினதில்லை. அவர் என்ன சொல்றார் தெரியுமா? நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுல அவருக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதுக்கு முன்னால உங்க மாமாவோட ஆட்டிட்யூட் மாறணும்னு தீர்மானமா சொல்லிட்டார்."

"உண்மையைச் சொல்லப் போனா எங்கப்பாவும் பிடிவாதக்காரர் தான். யாரவது ஒருபக்கம் விட்டுக்கொடுத்தாத் தேவலாம்."

"அப்புறம் அப்பா சொன்னதில் ஒரு பாயின்ட் இருக்கு கௌசி. நீ விரும்பறதால என்னை அவரோட மாப்பிள்ளையா ஏத்துக்கறதா மாமா நினைச்சார்னா அது சரியில்லை. அவர் என்னை எனக்காக ஏத்துக்கணும்."

"நிச்சயமா."

"நீயும் நானும் இணைவதில் நம் குடும்பங்கள் இன்னமும் பிரிஞ்சிரக் கூடாது கௌசி."

"கரெக்டா சொன்னே. நீயோ நானோ குடும்பத்தை விட்டுத் தனியா வாழ முடியாது. கூடாது."

"நான் உங்கப்பாட்ட பேசிப் பார்க்கறேன் கௌசி."

*** *** ***

ரமணி
29-03-2013, 01:06 AM
பயணம்: நாவல்
ரமணி
24


கண்ணும் கருத்தும் எனக்கொண்டு -- அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்
பண்ணும் பூசனை கள்-எல்லாம் -- வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ -- உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?
---மஹாகவி பாரதியார், யோகசித்தி 1

ஜெயந்தியுடன் நிறையப் பேசவேண்டும், பேசி அவள் விருப்பு வெறுப்புகளை, ஆசைகளை, திறமைகளை, எதிர்காலத் திட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவன் ஆசைகள் அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவன் அவளைப் பார்க்க நேரிட்டபோதும் சந்திக்க நேரிட்டபோதும் வசந்தியோ கௌசல்யாவோ எப்போதும் கூடவே இருந்ததனால் அவனால் சம்பிரதாயமாகப் பேசிக்கொள்வதைத் தவிர வேறொன்றும் தெரிந்துகொள்ள முடியாமல் போயிற்று.

எத்தனை சந்தர்பங்கள்!

தொடர்த்ச்சியாகப் பல வாரங்கள் கௌசல்யாவின் வீட்டில் சந்தித்தபோது அவள் என்னதான் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தாலும் அவனுடன் தான் ஒரு ஜூனியர் மாணவி என்கிற உணர்வோடுதான் பழகுவதாகத் தோன்றியது.

வந்த புதிதில் வசந்தியும் கௌசியும் அவளுக்குத் தீவிரமாக டேபிள் டென்னிஸ் பயிற்சி அளித்து, கொஞ்ச நாளில் நான்கு பேரும் ’டபிள்ஸ்’ விளையாடத் தொடங்கியபோது, எப்போதும் ஜெயந்தி அவனுடைய பார்ட்னராக அவர்களால் ஒருமனதாக அனுப்பப்பட்டாள்.

"வசந்தி, ராஜா டீ.டில எக்ஸ்பர்ட். அதனால் அவனுக்கு ஜெயந்திதான் பார்ட்னர், என்ன?"

ஜெயந்தி மெல்லிய புன்முறுவலுடன் விழிகளில் வெட்கத்தைத் தவழவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்வதை ரசித்தவாறே அவன் அவளை வரவேற்று சொல்லிக்கொடுத்து விளையாடி ஒவ்வொரு முறையும் தோற்றாலும் அதிலும் ஒரு மகிழ்ச்சி தலைதூக்கும்.

"சாரி சார், என்னால் இதுக்கு மேல ஆட முடியலை!"

"கவலைப் படாதே, வி வில் மேக் இட். ஒரு சின்ன வேண்டுகோள்."

என்ன என்ற பார்வை.

"நீ என்னை சார்னு கூப்பிடறதை ஜீரணிக்க முடியலை. நான் என்ன அவ்வளவு வயசானவனாத் தெரியறேனா?"

"ஓ நோ!..." கண்கள் தாழக் கன்னங்களில் குறுகுறுப்பு.

"அப்புறம்? நான் உன் நண்பன் ஜெயந்தி. யு தோன்ட் மைன்ட், ஐ ஹோப்?"

மெல்லிய திடுக்கிடலில் தலையாட்டல்.

"லுக், உனக்குக் கௌசல்யாவும் வசந்தியும் எவ்வளவுதூரம் நண்பர்களோ, அந்த மாதிரி என்னையும் உன் நண்பனா நினைச்சுக்கோ. நான்வந்து, வசந்தியைவிடச் சின்னவன், கௌசியைவிடப் பெரியவன். என்னை ராஜான்னே நீ கூப்பிடலாம், சரியா?"

மறுபடியும் கன்னங்கள் குறுகுறுக்க, விழிகள் வெட்கத்துடன் நோக்க, மெல்லிய குரலில் "சரி" என்றாள்.

"சரி ராஜான்னு சொல்லு!"

"...சரி ராஜா!"

"அதுதான் நல்லது. நாளைக்குப் பார், நாமதான் ஜெயிக்கறோம்."

சொல்லிவைத்தவாறே மறுநாள் அவர்கள் முழுமூச்சுடன் விளையாடி வசந்தி-கௌசல்யா ஜோடியை ஒரு ஐந்து நிரல் ஆட்டத்தில் வென்றுவிட, அதன்பின் ஜெயந்தி அவனுடன் ஆடிய ஒற்றையர் ஆட்டங்களில் அவள் திறமை விரைவில் வளர்ந்து, தொடர்ச்சியாக அவர்கள் வசந்தி-கௌசியை வெல்ல, அந்த ஜோடி பிரிக்கப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஜெயந்தி அனைவருடனும் சேர்ந்து ஜனரஞ்சகமான ஹிந்தி, தமிழ் சினிமாப் பாட்டுகளைக் கேட்பதிலும், சமீபத்திய நல்ல படங்களைப் பார்ப்பதிலும், தோட்டத்தை வலம் வருவதிலும், ஓவியங்களை ரசிப்பதிலும், மற்ற மகளிர் நுண்கலைகளிலும் ஆர்வம் காட்டியபோது அவளுடைய சுவைகளை ஒருவாறு தெரிந்துகொள்ள முடிந்தது.

இலக்கியத்தில் அவளுக்கு அவன் எதிர்பார்த்த அளவு ஆர்வம் இல்லை. தனக்கு அவ்வளவு தூரம் கவிதை கட்டுரைகளில் ஈடுபாடு கிடையாது என்றும், ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் வழக்கம் உண்டு என்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டபோது கூறினாள்.

"என்ன தமிழ்வாணன் நாவல்களா?"

விழிகளில் நாணம் வழியப் பொய்க்கோபம் காட்டினாள். வசந்தி அந்த சப்ஜெக்டைத் தொடர அவன் உதட்டைக் கடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

"என்ன நீ அடிக்கடி அவள்ட்ட தமிழ்வாணன் நாவல்களான்னு கேக்கறே? வாட்’ஸ் ஆல் திஸ் அபௌட்?"

அவன் குறும்புடன் "அவளையே கேளேன்", என்றான்.

"என்னடி ஜெயந்தி? என்ன விஷயம்?"

"எதா இருந்தாலும் சொல்லிடு", என்றாள் கௌசல்யா. "ஐ ஸ்மெல் சம்திங் ஃபிஷ்ஷி."

ஜெயந்தி தயக்கத்துடன் அந்த நூலகச் சந்திப்பைப் பற்றிக் கூறியதும், வசந்தியும் கௌசல்யாவும் அவனை வியப்புடன் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் பளிச்சிட்டன.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்தான் கௌசல்யா அவனிடம் ஜெயந்தியைப் பற்றியும் அனுவைப் பற்றியும் விவரங்கள் கேட்டு அவனை மலைக்கவைத்தாள்.

ஜெயந்தியுடன் ஏற்பட்ட இந்த அரைகுறைத் தோழமையின் காரணமாக அவள் அவன் மனதையும் நினைவுகளையும் நீண்ட நாள் ஆக்கிரமித்துக் கொள்ள, அவளைப் பார்க்க நேரிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் ஒரு தேனீயின் கவனத்துடன் சேகரித்து தனது டைரியில் தொகுத்திருக்க, இப்போது படிக்கும்போது இனித்தது.

ஒருநாள் காலை அவனும் வசந்தியும் ப்ரின்ஸிபால் அறைக்குமுன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவள் திடீரென்று மாடிப்படிகளில் தோன்றி அவனது அந்தநேர வருகைக்கு வியப்புக் காட்டி, "குட் மார்னிங்!" என்று தன் தோழிகளுக்குமுன் சொன்னபோது பெருமையாக இருந்தது.

ஒரு வார நாளில் அவன் வசந்தியைப் பார்க்கப் போயிருந்தபோது மழை பிடித்துக்கொள்ள, ஜெயந்தி தன் அறைக்கு ஓடி அவள் குடையை எடுத்துவந்து இரவல் கொடுத்ததும், அவன் மறுநாள் மாலை ஹாஸ்டலுக்கு வந்து அவளுக்குச் சொல்லி அனுப்பிக் காத்திருந்து (வசந்தி கல்லூரியில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்துக்குப் போயிருந்தாள்), அவள் வந்ததும் நன்றிகூறிக் குடையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவளுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.

விடுமுறை நாட்களில் அவனும் வசந்தியும் ஜெயந்தியும் ஒன்றாக ஊருக்குப் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவன் பேருந்தில் அவர்களுக்கு நடுவில் உட்கார நினைத்து முடியாமல் போனபோது, கோபம் மெலிதாத் தலைதூக்கி வசந்தியை மானசீகமாகக் கடிந்துகொள்ள வைத்தது.

விடுமுறை நாட்களில் ஊரில் அவன் வழக்கம்போல் தினமும் மாலை ஜெயந்தியின் அப்பாவைக் கோவிலில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது அவள் ஒன்றும் தெரியாதவள் போல எதிர் வரிசையில் நின்றுகொண்டு அடிக்கடி ஓரக் கண்ணால் அவர்களைப் பார்த்தபோது அந்த feined innocence---அவன் டைரியின் பிரயோகம்---அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

(தொடரும்)

ரமணி
31-03-2013, 02:31 AM
அதன்பின் ஒருநாள் கௌசல்யா அவனிடம் அனுவைப் பற்றிக் கேட்டதும் அவனுக்கு வசந்தியின் மேல் ஏற்பட்ட கோபம் அவளை ஒருநாள் தனியாகச் சந்தித்தபோது வார்த்தைகளாக வெடித்தது.

"வசந்தி, உன்மேல் எனக்கு எக்கச்சக்க கோபம்."

"ஏன்?"

"உனக்கே தெரியும்."

அவள் புரியாமல் விழித்ததில் கடுப்பானான்.

"செய்யறதையும் செஞ்சிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறே, இல்லை? உன்னை யார் கௌசிகிட்ட அனு, ஜெயந்தியைப் பற்றிச் சொல்லச் சொன்னா?"

"ஏன், சொன்னதில் என்ன தப்பு?"

"என்ன தப்பா? என்னைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம, என் நடவடிக்கைகளில் உனக்குத் தெரிஞ்சதை வைத்து, ஒரு இங்கிதமாக்கூட என்னோட ஆலோசனையைக் கேக்காம, என்னை அனு, ஜெயந்தியோட இணைத்து கௌசல்யாட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்குன்னு நினைச்சுப் பார்த்தியா?"

"நான் அவள்கிட்ட எதுவும் தப்பாச் சொல்லலையே?"

"என்ன தப்பாச் சொல்லலை? உபகாரம் பண்ணாட்டாலும் உபத்திரவம் பண்ணமாட்டேன்னு நினைச்சேன்."

"இப்ப நான் என்ன உபத்திரவம் பண்ணிட்டேன் ராஜா? என்ன வாய் நீளுது?"

"What the hell you think you are! நான் கௌசல்யாவைக் காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியும். எனக்கு எதிரா நீ சதி செய்ய நினைக்கறே இல்லை? என் விஷயத்தில் தலையிட உனக்கு என்ன உரிமை இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? அல்லது நீ எங்கப்பாம்மாவோட ஸீக்ரட் ஏஜன்டா?"

"அவசரப்படாதே ராஜா. Come on, let's sit and talk."

அவள் பதிலில் கொஞ்சம் திருப்தி அடைந்து அவன் அவளை ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் பின்தொடர்ந்து, இருவரும் தனியாகச் சென்று ஓர் இடத்தில் அமர்ந்ததும் வசந்தி நிதானமாகத் தொடங்கினாள்.

"ராஜா, நானே உன்னிடம் சில விஷயங்களை மனம்விட்டுப் பேச நினைச்சேன். நல்ல வேளையா இன்னிக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது."

அவன் கண்களில் கனல் மீதமிருக்க, கால் விரல்கள் தரையைக் கீற, அவனைக் கருணையுடன் பார்த்தபடியே அவள் தொடர்ந்தபோது குரல் மென்மையாகப் பாசத்துடன் வெளிவந்தது.

"கௌசல்யா விஷயத்தில் நீ ரொம்ப அவசரம் காட்டறே ராஜா. அவ்வளவு தீவிரமாக யாரையும் காதலிக்க முற்படக் கூடாது, விளைவுகளை சரியா ஆராயாம. ஒருவேளை உன் முயற்சி வெற்றி பெறலைன்னா என்ன பண்ணுவே?"

"நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும் வசந்தி. நான் கௌசல்யாவைக் காதலிக்கறதைவிட அவள் என்னை அதிகமா காதலிக்கறா. தவிர, அவளைவிடப் பொருத்தமா எனக்கு வேற யாரும் கிடைக்கமாட்டா."

"நீயும் கௌசியும் இணைய முடிஞ்-சா, என்னைவிட சந்தோஷப்படறவா யாரும் இருக்கமுடியாது. ஒருவேளை அது நடக்காமல் போயிடுத்துன்னா அவள் எவ்வளவு தூரம் மனசு ஒடிஞ்சு போயிடுவா தெரியுமா?"

"நீ சொல்றது தப்பு. கௌசல்யா அப்படி ஒண்ணும் சென்டிமென்டல் டைப் இல்லை."

"அங்கதான் நீ தப்பு பண்றே. என்ன இருந்தாலும் அவள் ஒரு பெண். காதல் என்பது வயது, அறிவு, சூழ்நிலை எல்லாத்தையும் கடந்த உணர்ச்சி. அது பெண்களுக்கு ஆண்களைவிட அதிகம், once they are committed. கௌசல்யாவால ஓர் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது."

"அவள் ஏன் ஏமாறணும்? நான் அவளைக் கைவிட்டு விடுவேன்னு நினைக்கறயா?"

"நிச்சயமா மாட்டே, அது உன்கையில் இருந்தால். போன சம்மர்ல நீ விவாதித்ததை எல்லாம் பெரியம்மா என்கிட்ட விவரமாச் சொன்னா. கௌசல்யா உன்னை விரும்பறாங்கறதுக்காக மாமா விட்டுக்கொடுத்தாலும், நீ அவளை விரும்பறேங்கறதுக்காக உங்கப்பா விட்டுக்கொடுக்க மாட்டார். அவருக்கு வேணுங்கறதெல்லாம் மாமாவோட போக்கு முழுவதும் மாறணும்."

"நான் மாமி, கௌசிகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். மாமாட்டயும் பேசப் போறேன்."

"அதுக்கு அவசியம் இல்லை."

"ஏன்?"

"மாமா ஏற்கனவே தன் கருத்தை வெளிப்படையாச் சொல்லிட்டார்."

"எப்போ? என்ன சொன்னார்?"

"போன மாசம் ஒரு ஞாயிற்றுக் கிழமை. நீயும் பாஸ்கரும் ஊர்ல இல்லாதபோது. மாமி அவர்ட்ட எல்லா விஷயங்களையும் சொல்லி இதுக்கு ஒரு வழி பண்ணுங்கோன்னு கேட்டிருப்பா போலிருக்கு. நான் மத்யானம் அவாளோட சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மாமா இந்த விஷயத்தை திடீர்னு ஆரம்பிச்சு, தீர்மானமா தன் கருத்தைச் சொல்லிட்டார்."

"என்ன சொன்னார், சொல்லேன்?"

"என்ன சொன்னார் தெரியுமா? ’பெரியக்காவும் அத்திம்பேரும் ஏதோ நான்தான் தப்பு பண்ணிட்டாதாகவும் அவாமேல ஒண்ணுமே தப்பில்லாத மாதிரியும் இன்னமும் குதிச்சுண்டிருக்கா. நான் அவா வீட்டைவிட்டு ஓடி வந்துட்டேனாம், அதனால நான்தான் அவா கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணுமாம். அவர் அன்னிக்குக் கோபத்தோட ’கெட் அவுட்!’னு கத்தினாரே, அதுக்கு யார் மன்னிப்புக் கேக்கறது? இதபார் லக்ஷ்மி, கௌசல்யா ஆசைப்படறாங்கறதுக்காக அவளுக்கு நாம் ராஜாவைப் பாக்கறோம். சும்மாச் சொல்லப்டாது, அவன் ரொம்ப நல்ல பையன், பொருத்தமானவன்தான். அதுக்காக அவனோட அப்பா அம்மா நம்மளைக் கண்டபடி பேசறதை நாம கேட்டுக்கணும்னு தலையெழுத்து இல்லையே? அவனுக்கு உண்மையில் கௌசல்யாமேல ஈடுபாடு இருந்தா, இங்க வந்திடட்டும், நாம பாத்துக்கறோம். அல்லது அவனோட பெற்றோரை வழிக்குக் கொண்டுவரது அவன் பொறுப்பு.’ போதுமா?"

"அப்ப, மாமா கௌசல்யாவுக்காகத்தான் என்னை ஏத்துக்கறார்னு ஆறது."

"ஆமாம். தவிர, மாமா இன்னொண்ணு சொன்னார். ’அப்படி ஒருவேளை கௌசல்யாவுக்கு ராஜா அமையலைன்னா குடிமுழுகியா போயிடும்? எம் பொண்ணுக்கு இதைவிடத் தகுந்த இடத்தில எனக்குப் பண்ணிக்கொடுக்கத் தெரியும். என்னோட முயற்சிகளில் நான் இதுவரை தோற்றதில்லை.’"

"கௌசல்யா இதுக்கு என்ன சொல்றா?"

"அன்னிக்கு அவள் ஆத்துல இல்லை. அதனால அவளுக்கு இன்னும் விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன். தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா."

கொஞ்சம் மௌனமாக யோசித்தான்.

"கௌசல்யாவோட மனச் சுமையைக் குறைத்து அவள் ஒரு நடக்கத்தக்க ஏமாற்றத்தை எளிதாக எடுத்துக்கொள்ள அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப் படுத்தணும்ணுதான் நான் அவள்ட்ட அனு, ஜெயந்தி பத்தி சொன்னேன். நீ அவா ரெண்டு பேரையும் ஒரு காலகட்டத்தில விரும்பினே--ஒருவேளை இப்போதுகூட விரும்பறேன்னு--எனக்கு நீயே மறைமுகமா இன்டிகேட் பண்ணியிருக்கே. எனக்கு வேறு விதமான நோக்கங்கள் கிடையாது. I know you are romantically inclined right from your boyhood. And I am ready to help you with what I can. If only you would ask me."

"I am extremely sorry for that rush of anger வசந்திம்மா. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கறேன்", என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

"மன்னிப்புங்கறது பெரிய வார்த்தை. உன் கோபம் நியாயமானதே. நானும் உன்னைக் கேட்டிருக்கலாம்."

"ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? நான் கௌசிட்ட அனு, ஜெயந்தி, மாலதி பற்றிய என்னுடைய இன்வால்வ்மென்ட் முழுக்கச் சொல்லிட்டேன். She has taken it in the right spirit. இப்பதான் அவள் என்னை முன்னைவிடத் தீவிரமாக் காதலிக்கறா!"

"யார் மாலதி? எங்க க்ளாஸ்மேட் மாலதின்னு ஒரு பொண்ணு B section-ல இருக்கா. அவளா?"

"அவளேதான். கௌசியும் தெரியும்னு சொன்னா. BhAskar is mad after her. நானும் அவனுக்கு விட்டுக் கொடுக்கறதாத் தீர்மானம் பண்ணிட்டேன்."

"என்கிட்ட நீ இதுவரை ஒண்ணுமே சொல்லலையே?"

"உனக்கு அவகாசம் இருந்தா இப்பவே சொல்லிடறேன் வசந்தி. எப்படியோ நீயும் என்னைப் பத்தி சரியாத் தெரிஞ்சுண்டா சரிதான்", என்று தொடங்கி அனுவின் கடிதம் தவிர எல்லா விவரங்களையும் அவளிடம் சொன்னான். அத்துடன் இளவயது முதல் ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரிடம் காணும் ஈடுபாட்டை முற்றிலும் புறக்கணிப்பது தவறு, வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றும் இந்த அன்பின் வெளியீடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் சீரான விவாகங்கள் நிகழ உதவமுடியும் என்ற அவன் கருத்துகளை விளக்கியபோது, வசந்தி சொன்ன ஒரு ’பாயின்ட்’ சிந்திக்கவைத்தது.

"என்னைப் பொறுத்தவரையில் கணவன்-மனைவிக்கு இடையே குறைந்தது மூன்று வருடமாவது வயது வித்தியாசம் இருக்கணும். அப்பதான் மனைவிக்குக் கணவன்மேல் மரியாதையும் பக்தியும் ஏற்பட வாய்ப்பு அதிகம்."

"உன் கருத்து எனக்கு உடன்பாடு இல்லை வசந்தி. எவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் கணவனும் மனைவியும் நண்பர்கள் மாதிரிப் பழகறதுதான் விரும்பத்தக்கது. Your husband is more your friend than your master or god."

"கௌசல்யா விஷயத்தில் நீ இன்னும் தீவிரமா முயற்சி பண்ணி உங்கப்பாம்மா சம்மதத்தைப் பெறுவதுதான் உங்க ரெண்டுபேருக்குமே நல்லது."

"அதுக்கு நான் ஒரு வழி வெச்சிருக்கேன். அது ஒருவேளை என்னுடைய கடைசி முயற்சியாக்கூட இருக்கலாம்."

"என்ன வழி?"

"இந்த சம்மர்ல கௌசியை நம்மாத்துக்குக் கூட்டிண்டு போகப் போறேன். அப்பாவும் அம்மாவும் அவளுடன் நேரடியாப் பழகி அவளைப் பற்றித் தெரிஞ்சுக்கட்டும். அப்போதாவது அவா மனசு மாறாதா பார்க்கலாம்."

"அதுவும் சரிதான்", என்று ஆமோதித்தாள். "அப்புறம் இன்னொரு விஷயம்."

"என்ன வசந்தி?"

"நீ ஜெயந்தியோட பழகறது உங்கம்மாவுக்குப் பிடிக்கலை."

அசந்துபோனான். "அம்மாவுக்கு எப்படித் தெரிஞ்சது?"

"நிஜமா நான் சொல்லலை. அம்மாவே ஒருநாள் கேட்டா. நீ அடிக்கடி அவளைக் கோவில்ல பார்க்கறதை வெச்சு முடிவு கட்டியிருப்பான்னு நினைக்கறேன்."

"என்ன கேட்டா அம்மா?"

"அம்மா என்னைக் கேட்டா, ’ராஜா அந்தப் பொண்ணோட பழகறானா’ன்னு. ’எனக்குத் தெரியாது பெரியம்மா’ன்னு சொன்னேன். ’ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிக்கறேள், தெரியாதுங்கறயே? அவன் உன்னைப் பார்க்க வரும்போது அவளைப் பார்க்கறதுண்டா?’ என்று கேட்டா. நான், ’இதெல்லாம் சகஜம் பெரியம்மா. எல்லோரும் வாரா வாரம் கௌசி வீட்ல சந்திப்போம். மற்றப்படி வேற ஒண்ணுமில்லை’னு சொன்னேன்."

"அதுக்கு அம்மா என்ன சொன்னா?"

"ஜெயந்திக்கு யாரோ சொந்தத்தில் பையன் இருக்கானாம். தவிர, அவா பெரிய பணக்காராளாம். தூத்துக்குடில சொந்த வீடு, நிலம்லாம் இருக்காம். ’நாம ஏன் அனாவசியமா அவா விஷயத்தில தலையிடணும்? அவனை இந்த மாதிரி விஷயத்தில ரொம்ப ஜாக்கரதையா இருக்கச் சொல்லு. நீ சொன்னாக் கேப்பான். நாளைக்கு ஏதாவது ரசாபாசமா ஆய்டக்கூடாது’ன்னா."

மிகவும் முன்னேற்பாடுடன் பிரயாசைப்பட்டு மலை ஏறும் ஒருவனுக்குக் கால் இடறிப் பல அடிகள் சறுக்கியதுபோல் உணர்ந்தான். கொஞ்சநேரக் குழப்பத்துக்குப் பின் வார்த்தைகள் ஜாக்கிரதையாக வெளிவந்தன.

"எனக்கு நீ ஒரு உதவி செய்யணும் வசந்தி."

"ஜெயந்தியைப் பத்தி விசாரிச்சுச் சொல்லணும், இல்லையா?"

"தட்ஸ் ரைட். அப்பதான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்."

"முயற்சி செய்கிறேன்."

*** *** ***

ரமணி
02-04-2013, 01:43 AM
பயணம்: நாவல்
ரமணி
25


சாத்திரம்---(அதாவது, மதியிலே தழுவிய
கொள்கை, கருத்து, குளிந்திடு நோக்கம்)---
ஈங்கிதில் கலக்க மெய்திடுமாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன் றில்லை.
---மஹாகவி பாரதியார், தமிழ்ச் சாதி 69

ஒரு தேர்ந்த பத்திரிகை நிருபரைப் போல வசந்தி விரைவிலேயே அவன் கேட்ட விவரங்களை சேகரித்துக் கொடுத்தாள்.

"ராஜா, ஒரு சுவாரஸ்யமான செய்தி."

"சீக்கிரம் சொல்லு!"

"நீ கேட்ட விவரங்கள் சேகரிச்சிட்டேன்."

"நினைச்சேன். மேலே சொல்லு."

"ஜெயந்திக்கு இப்போ வயது பதினேழு, பிறந்த தேதி சொல்லமாட்டேன்! அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி, வயது 49. அம்மா பெயர் மங்களா, வயது உனக்கு அவசியமில்லை! பூர்வீகம், அப்பாவுக்குத் தஞ்சாவூர், அம்மாவுக்குத் திருநெல்வேலி. செட்டிலானது தூத்துக்குடியில. அங்கே அவாளுக்குக் கொஞ்சம் நிலமும் பெரிய வீடும் இருக்கு. இன்றைய நிலவரப்படி சுமார் அஞ்சு லகரம் தேறும். அப்பா ரொம்ப நாளா ஸ்கூல் வாத்தியார் வேலைல இருக்கார். கொஞ்ச நாள்தான் நம்ம ஊர்ல இருப்பார் போலிருக்கு. என்ன முகத்தில் ஈயாடலை?"

"ஏய், மேலே சொல்லேன்."

"ரைட். இதான் உனக்கு முக்கியமான விஷயம். ஜெயந்திக்கு ஒரு அத்தை பையன் இருக்கான். கிட்டத்தட்ட உன் வயசாம். மெட்ராஸ்ல பி.காம். படிக்கறான், மூணாவது வருஷம். பார்க்க ஸ்மார்ட்டா இருப்பான்னு ஜெயந்தி சொல்லக் கேள்வி."

"அப்ப அவ்ளோதான்!"

"அவசரப்படாதே! இன்னொரு விஷயம் இருக்கு."

"அதையும் சொல்லிடேன்."

"ஜெயந்திக்கு அந்தப் பையனை அவ்வளவாப் பிடிக்காதாம்."

"ஏன்?"

"அந்தப் பையன் அப்படியே அவன் அம்மாவை உரிச்சு வெச்சிருக்கானாம், குணத்தில."

"அதில் என்ன தப்பு?"

"அவன் அம்மா மஹா முன்கோபியாம். ஆத்துல சதா சண்டையாம்."

மெலிதாக விசிலடித்தான்.

"இது ரொம்பத் தப்பு. பெண்கள் கல்லூரியில் வந்து விசிலா அடிக்கறே?"

"ஐம் சாரி வசந்திம்மா. கோவிச்சுக்காதே. உன்னைவிட்டா எனக்கு யார் உதவி செய்வா?"

"உடனே றெக்கை முளச்சிடுமே? நான் சொல்ல வந்ததை இன்னும் சொல்லி முடிக்கலை."

"ஐயையோ! இன்னும் என்ன?"

"ஜெயந்தியோட அப்பா அவளுக்கு அந்தப் பையனைத்தான் கட்டிவெப்பேன்னு ஒத்தக்கால நிக்கறாராம்."

"போச்சுடா! என்னால இரண்டு வருங்கால மாமனாரை வழிக்குக் கொண்டுவர முடியாதும்மா."

"இருந்தாலும் ஜெயா ஒரு நல்ல பொண்ணு. உன்மேல் அவளுக்குத் தனி மரியாதை."

"உனக்குக் கிண்டலா இருக்கு."

"உண்மையைத்தான் சொல்றேன். உன்னைப்பற்றி அவள்கிட்ட மெதுவாக் கேட்டேன்."

"என்ன சொன்னாளோ?"

"நீ ரொம்ப ஸ்மார்ட்டாம். தங்கமான குணமாம். ஆழ்ந்த அறிவாம். சோஷலா பழகறையாம். மொத்தத்தில கௌசல்யாவுக்கு ஐடியல் மேச்சாம்."

"போச்சுடா!"

"மிஸ் எம்மா ஓடவுஸ் மிஸ்டர் எல்டனைப் பத்திச் சொன்ன மாதிரி இல்லை?"

"அப்ப நான் எல்டன்ங்கறே? என்னைப் பத்தி நான் மிஸ்டர் நைட்லினுல நினைச்சிண்டிருக்கேன்."

அவன் நினைவில் அனுவும் அவள் கடிதமும் அதற்கு டைரியில் எழுதியிருந அவன் ரியாக்*ஷனும் பளிச்சிட்டு மறைந்தன.
"Brother and sister! No, indeed!"

"என்ன யோஜனை? மறுபடியும் அனுவா?"

திடுக்கிட்டான். "எப்படித் தெரியும்?"

"தெரியும்."

"வசந்தி, எனக்கு ஒரு உதவி---"

"சாரி ராஜா. அனு எங்கேயோ மதுரைல இருக்கா. அவள் தாத்தா பாட்டிகூட இப்ப நம்ம ஊர்ல இல்லை போலிருக்கு. Absolutely no source of information."

"பரவாயில்லை."

இருவரும் சிறிது நேரம் பேசவில்லை.

பின் அவன் தயக்க்த்துடன் நிதானமாகச் சொன்னான்.

"வசந்தி எனக்கு ஒரே ஒரு குறை."

"சொல்லு."

"நீ மட்டும் என்னோட சித்தி பொண்ணா இல்லாம இருந்தா---"

"ஓ!" கண்களில் வியப்புத் தோன்றப் பார்த்தாள். "அசடு மாதிரி பேசாதே."

"உண்மையைத்தான் சொல்றேன் வசந்தி. என்னை முழுவதும் புரிந்துகொண்டவள் நீ ஒருத்திதான். உன்னை எல்லோர்க்கும் பிடிக்கறது. அப்பா அம்மாகூட உன்மேல் உயிரா இருக்கா. இத்தனைக்கும் நீயும் கௌசல்யா மாதிரி ஒரு முற்போக்காவும் இருக்கே, அதே சமயத்தில சம்ப்ரதாயத்தையும் விட்டுக்கொடுக்கமாட்டே."

அவன் புகழுரைகளில் வசந்தி என்ன சொல்வதென்று ஒரு கணம் தோன்றாமல் நின்றாள்.

அவளை மேலும் தர்மசங்கடப் படுத்த விரும்பாமல் சொன்னான்:
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறவன் ரொம்பக் கொடுத்து வெச்சவன் வசந்தி."

(தொடரும்)

ரமணி
04-04-2013, 01:42 AM
கௌசல்யாவுடனும் வசந்தியுடனும் அவன் தன் மனதைப் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து பாஸ்கரிடமும் விவரங்களைக் கூறமுற்பட்டு இருவரும் ஒருநாள் மாலை

கல்லணையின் சுவரில் சாய்ந்துகொண்டு
வெள்ளமாய்க் கீழே சுழித்துவரும்
காவிரி யாற்றின் பேரலைகளை
கல்லணையின் மதகுகள் தடுத்துச்
சின்னஞ்சிறு நீர்த்துளிகளாய் சலித்துக்
காற்றில் எறிய

முகத்தில் தெளித்த அந்தச்
சாரலின் சில்லிப்பில் சிலிர்த்துக்
கண்களை ஓட்டிய போது
ஓர்நீண்ட பனிப்படலம் போல
நீர்த்துளிகள் தெறித்துக் கிளம்பி
வானவில் வண்ணங்களில் காற்றில்
மறையும் அழகு

கண்நிறைக்க, அதை ரசித்தபடியே, நீண்ட நேரம் உரக்க விவாதித்தது இந்த வைகை எக்ஸ்ப்ரஸின் இரைச்சலை மீறி இப்போதும் காதில் ஒலித்தது.

"பாஸ்கர், எனக்கு உன்கிட்ட நிறையப் பேசணும்."

"எதைப் பத்தி?"

"என்னைப் பத்தி."

"உன்னைப் பத்தியா!"

"ஆமாம். என்னைப் பத்தி உன்னிடம் நிறைய விஷயங்கள் சொல்லணும்னு ரொம்ப நாளா எண்ணம்."

"எதுவானாலும் தயங்காமச் சொல் ராஜா. அந்தரங்க விஷயம் எதுவானாலும் சரி, நீ தயங்காம என்னிடம் நம்பிச் சொல்லலாம். உன் சம்மதம் இல்லாம யார்கிட்டயும் சொல்லமாட்டேன்."

"நாம ரெண்டுபேர்க்கும் ஒரே மாதிரி எண்ணங்கள், உணர்வுகள், பார்வைகள் இருக்கு, பாஸ்கர். மேலும் எந்த மாதிரியான சந்தர்ப்பத்திலும் நீ என்னைவிட விவேகமாக, எளிதாக, இயற்கையாக நடந்துக்கறே. சீக்கிரம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டு அலசி ஒரு முடிவுக்கு வந்துடறே. இந்த வகையில் பார்க்கும்போது, வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளில் என்னோட இடத்தில் நீ இருந்திருந்தா எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பேன்னு நினைச்சுப் பார்க்கறபோது சுவாரஸ்யமாத்தான் இருக்கு. உதாரணமா, மாலதி விஷயத்தில் உன்னுடைய பார்வைகள், கருத்துக்கள், ஆலோசனைகள் எல்லாம் கொஞ்சம் முற்போக்காகவும் அதே சமயம் சாத்தியமாயும் இருக்கு. அதனால அவள் உனக்குத்தான் தகுதியானவள், எனக்கும் அதுல சந்தோஷம்தான். இந்த நிலைமைல எனக்கு உன்னோட உதவியும் ஆலோசனையும் தேவைப் படறது, பாஸ்கர்."

"உனக்கில்லாமல் வேறு யாருக்கு நான் உதவி செய்யப்போறேன், ராஜா? மாலதியைப் பொறுத்தவரையில் நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை. பிகாஸ், அவள் என்னை விரும்பறாளான்னு இதுவரை ஏதும் தெரிஞ்சுக்க முடியலை."

"ஏற்கனவே உன்கிட்ட சொன்னமாதிரி, நான் மாலதியை மறந்துட்டேன் பாஸ்கர். எனக்கு இப்போ இருக்கற சந்தர்ப்பங்கள் கௌசல்யா வடிவத்திலும் ஜெயந்தி வடிவத்திலும்தான் இருக்கு. அனுகூட ரிட்டன் ஆஃப்."

பாஸ்கர் மெலிதாக விசிலடித்தான்.

"லவ்லி நேம்ஸ்! கௌசல்யா, தெரியும். அவள் உன்மேல பைத்தியமா இருக்கா. ஜெயந்தி, அறிமுகம் இருக்கு. யார் அந்த அனு?"

"உணமையில் நான் உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரே பெண் அனுதான் பாஸ்கர். கௌசல்யா இப்ப என்னைக் காதலிக்கறதைவிடப் பலமடங்கு நான் அனுவைக் காதலிச்சேன். அதுவும் எந்த வயசில!"

அடுத்த அரைமணி நேரம் அவன் அனுவுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின், நினைவுகளின் உரத்த சிந்தனையில் ஆழ்ந்துபோனான். அந்தக் கடிதம் பற்றிக் கூறியதும் பாஸ்கர் முகத்தில் மெல்லிய சோகம் படர்ந்தது. தொடர்ந்து கௌசல்யா, வசந்தியுடன் ஏற்பட்ட பிணக்குகள் பற்றியும் விவரித்து முடித்தபோது, அதுவரை ஒன்றும் பேசாமல் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த பாஸ்கர் அவன் தோளில் கைவைத்தபடி சொன்னான்.

"ஒரு நல்ல ஆர்ட் ஃபில்ம் பார்த்த மாதிரி இருக்கு. இனிய, எளிய நிகழ்ச்சிகள். மெலிதான சோகம். ஆனால் இன்னும் எல்லாம் முடிந்துபோய் விடவில்லை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை ஆக கௌசல்யா இருக்காளே?"

"என்னுடைய ஒரே நம்பிக்கை அவள்தான். இருந்தாலும் என்னால் அனுவை மறக்க முடியவில்லையே பாஸ்கர்!"

"உன் இழப்பு எனக்குப் புரியுது ராஜா. ஆனால் நீ அதற்குக் காரணமில்லை. You tried your best."

"எனக்கு எங்கப்பாம்மா மேலதான் கோபம். என்னய்யா, அஞ்சாறு வருஷத்துக்கு மேல எங்களோட ஒண்ணா இருந்து பழகியிருக்கா. எப்பப் பார்த்தாலும் எங்க வீட்லதான் இருப்பா. பார்க்கறதுக்கு ரொம்ப அழகா, புத்திசாலித்தனமா, துருதுருன்னு வளைய வருவா. அம்மாவுக்கும் அனுவை ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்படி இருக்கும்போது அவள் குடும்பத்தைப் பற்றித் தெரிஞ்சிக்க ஒரு க்யூரியாசிடி இருக்காது? அம்மாவாவது அனுவோட நிறையப் பழகியிருக்கா. ஆனால் அப்பா? அவர் அவள் பெயர்கூடத் தெரிஞ்சிண்டு இருப்பாராங்கறது சந்தேகம்."

ஓர் உத்வேகத்துடன் ஆரம்பித்தவன் கொஞ்சம் யோசித்து நிதானமாகத் தொடர்ந்தான்.

"எங்க ரெண்டுபேர் குடும்பமும் ஒண்ணுக்கொண்ணு அறிமுகமாகி நெருக்கமா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்! இத்தனைக்கும் அவா எதிர்வரிசைல நாலஞ்சு வீடுதான் தள்ளி இருந்தா. குழந்தைகள் உயிராப் பழகறபோது ஏன் தாங்களும் நண்பர்களாக இருக்கலாம்னு பெற்றோர்களுக்குத் தோணலை பாஸ்கர்? நான் ஒருநாள்கூட எங்க அம்மாவும் அனுவோட பாட்டியும் அல்லது அம்மாவும் பேசிப் பார்த்ததில்லை. உண்மையில் அனுவோட பெற்றோர்களோ அல்லது பாட்டி தாத்தாவோ யார்னுகூட எனக்கு இதுவரையில் தெரியாது. நானும் ஒருநாள்கூட அவங்க வீட்டுக்குப் போனதில்லை."

"இதெல்லாம் அந்தக் காலத்தில்---ஏன் இந்தக் காலத்திலும்---எல்லோர் குடும்பங்கள்லயும் சகஜம் ராஜா. அப்படிப் பார்த்தா அனுவோட குடும்பமும் உங்க குடும்பத்தோட பழக முயற்சி செய்யலையே? அந்தக் காலத்தில் பெரியவர்கள் எந்த அடிப்படையில் தம் நண்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்னு நம்ம கண்ணோட்டத்தில அளவிட முடியாது."

"அப்புறம் அந்த அடலசன்ட் வயதில் நான் அனுவை ஒரு பெண்ணாகப் பார்த்தபோது அவளுடன் எவ்வளோ பேச முயற்சி பண்ணியும் எனக்கு முடியலைன்னு சொன்னேன் இல்லையா? அப்பவாவது அம்மாவும் அப்பாவும் என்னைப் புரிஞ்சிண்டு வழிகாட்டியிருக்கலாமே? ஏன் அவா யாருக்கு வந்த விருந்தோன்னு கொஞ்சம்கூட அக்கறை இல்லாம நடந்துக்கணும்?"

"அனுவை நீ விரும்புவது பற்றி உன் பெற்றோரிடம் சொன்னாயா?"

"இல்லை பாஸ்கர்."

"ஏன் சொல்லலை?"

"அதுக்கு ரெண்டு காரணம் இருந்தது பாஸ்கர். ஒண்ணு, அனுவும் என்னை விரும்பறாளான்னு முதல்ல தெரிஞ்சுக்க நினைச்சேன். ரெண்டு, எங்க குடும்பக் கட்டமைப்பு. இந்தக் காதல் கீதல்லாம் அனாசாரமான விஷயங்கள்னு நினைக்கற குடும்பம் அது. நான் ஹைஸ்கூல் படிக்கும்போதே ஒரு பொண்ணை லவ் பண்ணினேன்கிறதை எங்க அப்பா அம்மாவால ஜீரணிக்க முடியும்னு நினைக்கறயா?"

"சிக்கல்தான். இருந்தாலும் இதுமாதிரி விஷயத்தில் நீயா ஏதாவது சொல்ற வரைக்கும் அவாளுக்கு சுயமான ஆர்வமோ அக்கறையோ ஏற்பட வாய்ப்பில்லைதான். உண்மையைச் சொல்லப்போனா உங்க அப்பா அம்மாவுக்கு இந்த சாத்தியம்கூட மனசில் பட்டிருக்காது."

"ஆனால் ஜெயந்தி விஷயத்தில் அம்மா என்னை நல்லா நோட் பண்ணியிருக்கான்னு தெரியறதே! அப்பாட்டகூட சொல்லியிருப்பா. கௌசல்யாவைப் பற்றி நானே அப்பாட்ட தர்க்கம் பண்ணியிருக்கேன். இதெல்லாம் பார்க்கும்போது தெரியற ப்ளைய்ன் ட்ரூத் என்ன தெரியுமா?"

"என்ன?"

"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்தக் காதல்ங்கற வார்த்தையே பிடிக்காதுன்னு தோண்றது. அதுவும் தன் பையன் ஒரு பெண்ணை விரும்பறான்னா அது ஒரு அருவருப்பான, செய்யக்கூடாத, தவறான செயலாக அல்லது குற்றமாக நினைப்பானு படறது. அவாளோட கணிப்பில் கல்யாணாம்னா வரதட்சிணை, நகைகள், பாத்திரங்கள், தின்பண்ட சீர்வரிசைகள் இவ்வளவுதான். தவிர, பையன்---அவன் பார்க்க எப்படி இருந்தாலும் சரி---ஒரு நல்ல உத்யோகத்தில் இருக்கணும்.பெண் மூக்கும் முழியுமா, அடக்க ஒடுக்கமா, பாடத் தெரிஞ்சவளா, தெய்வபக்தி உள்ளவளா, நன்னா சமைப்பவளா இருக்கணும். ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன அந்த டெமாக்ரஸி தத்துவம்தான் ஞாபகம் வருது. எனக்கு வரப்போறவள் அப்பாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்மாவால் தன்னைப்போல் இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டு, நான் எனக்காக என்பதுபோல் ஏற்றுக்கொள்ளணும். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்னு சொல்லுவா, ஆனால் அதுக்காக இவா எடுத்துக்கற முயற்சி என்னவோ நீ சொன்ன மாதிரி கடைசி நேரத்தில கால்ல கஞ்சியைக் கொட்டிண்டு அலையறதுதான்."

"நீ சொல்வதில் எனக்கு முழுக்க உடன்பாடு உண்டு. கல்யாணம்கற விஷயத்தை இன்னும் முன்னாடியே திட்டமிட்டுத் தீர விசாரித்து, மனப் பொருத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்யலாம். ஆனால் இதெல்லாம் விடியறதுக்குள்ள மாறிவிடக்கூடிய விஷயங்கள் இல்லையே?"

"நான் வந்து என்னை உதாரணமா வெச்சுச் சொல்லலை. நாமாவது ஆண் பிள்ளைகள். அதுவே பெண்களா இருக்கும்போது எத்தனைபேர் தம் கனவுகளையெல்லாம் மறந்துவிட்டு முன்பின் தெரியாத ஒரு அன்னியனுக்கு வாழ்க்கைப்படும் போது அது க்ளிக்-ஆனா அதிர்ஷ்டம் இல்லைனா வாழ்க்கை முழுவதும் கஷ்டம்னு அல்லாடற நிலைமை உருவாகிறது இல்லையா?"

"ஆனால் இங்கே வெளிநாடுகள்போல் ஒரு லிபரல் சோஷல் செட்டப் இல்லையே? சமூகத்தில் ஆணும் பெண்ணும் அவதூறு இல்லாமல் பழக முடியலையே? ஹைஸ்கூல்லர்ந்து தனித்தனியான கல்வி. செக்ஸ் பத்தி அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான கருத்து கிடையாது. நம்ம பையன்களுக்கும் லைஃப்ல ஒரு தெளிவான சிந்தனை, நோக்கம், குறிக்கோள் கிடையாது. We are all hypocrites. இந்தமாதிரி சூழ்நிலைல நம் சமூகத்துக்கு எப்படி ’டேட்டிங்’ போன்ற மேலைநாட்டு வழக்கங்கள் ஒத்துவரும்?"

"இந்த இடத்திலதான் பெற்றோருடைய உதவி, ஆலோசனை தேவைப்படறது பாஸ்கர். Marriages are not made in heaven but in schools and colleges. டீன் ஏஜ் காலத்தில உருவாகிற அன்பை நடுநிலையோடு ஆராய்ந்து, நெறிப்படுத்தி, தகுதியுள்ள இடத்தில் ஊக்குவித்து... இதெல்லாம் பெற்றோர் பணிதானே?"

"நீ சொல்லும் மாற்றம் பெற்றோர்களிடம் வந்தால் மட்டும் போதாது. சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கையில் பொறுப்பு வகிக்கும் அத்தனை பேர்களிடமும் இந்த மாற்றம் அவசியம்."

கதிரவன் மறைவால் சிவந்த மேகக் கூட்டங்களில் மெல்லிய காளான் திரைகளாக இருள் படர்ந்து அவற்றின் வண்ணப் பூச்சுகளை அரிக்கத் தொடங்குவதையும், காக்கைகளும் கிளிகளும் கூட்டம் கூட்டமாக மரங்களை நாடுவதையும் கவனித்தபடி எழுந்துகொண்டவன் கூறினான்:

"குறைந்தது நம்முடைய பிற்காலத்திலாவது நாம் இவற்றையெல்லாம் செயல்படுத்தி ஒரு புதிய தலைமுறையை உருவாக்கணும் பாஸ்கர்."

*** *** ***
(தொடரும்)

ரமணி
06-04-2013, 03:21 AM
பயணம்: நாவல்
ரமணி
26


கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?
---மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் 27 மாலை வர்ணனை 149

கடைசி வருடப் பலகலைத் தேர்வுகள் முடிந்து ஒரு திங்கட்கிழமையில் இருந்து விடுமுறை ஆரம்பமானபோது விடுமுறைக்கு முன்வந்த ஞாயிறு அன்று கௌசல்யா தன்வீட்டில் அளித்த Farewell Party-யின் வியப்புகளும் கனவுகளும் சந்தோஷங்களும் டைரியின் பக்கங்களில் உறைந்திருக்க, இப்போது படிக்கையில் விளக்கில் இருந்து எழுந்த பூதமாக மனதை நிறைத்துக் கொண்டது.

சரியாக மூன்று மணிக்கு நானும் பாஸ்கரும் கௌசல்யாவின் வீட்டில் நுழைந்தபோது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

பாஸ்கர் தன் எலெக்ட்ரிக் கிடார் தோளில் தொங்க, NEVER LEAVE ME என்ற வாசகம் அவன் அணிந்திருந்த வெளிர் மஞ்சள் அரக்குக் காலர் டீ-ஷர்ட்டில் அரக்கு வண்ண எழுத்துகளில் கண்ணில் பளிச்சென்று தெரிய, அழகாக வெட்டிவிடப்பட்டு இருபுறமும் மென்மையாகச் சரியும் அவன் மீசை முகத்தின் சந்தன நிறத்தைத் எடுத்துக் காட்ட, வழக்கமாகத் துருதுருவென்று அலையும் விழிகளை rimless goggles மறைத்து எதிரில் இருக்கும் உருவங்களைப் பிரதிபலிக்க, வாய் சூயிங்கத்தை மெல்ல அசைபோட, அவன் அந்த பங்களாவின் ’கேட்’-டைத் திறந்துகொண்டு நடந்து கம்பீரமாகப் படியேறி அழைப்பு மணியை அழுத்த முனைந்து கதவுக்குப் பதில் ஓர் அழகிய திரை தொங்க மலைத்துக் கொஞ்சம் தயங்கி நிற்க, நான் ’கௌசி!’ என்று விளித்தபோது திரை கொஞ்சம் விலக, பாஸ்கரின் முகத்தில் ஓடிய வியப்பை உணர்ந்து அவன் கண்களை நோக்கியபோது என் விழிகளும் வியப்பில் விரிந்து பரவசமாயின.

பாஸ்கரின் விளிம்பற்ற கருப்புக் கண்ணாடிகளில் கொஞ்சம் குழப்பமும் கொஞ்சம் ஆர்வமும் கொஞ்சம் முறுவலும் அலைமோதத் திரைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த மாலதியின் முகம் தெரிந்தது.

"எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு" என்று மனசுக்குள் பாடல் வரிகள் ஓடியபோது பாஸ்கர் உலகின் அனைத்து ஆச்சரியங்களையும் குரலில் காட்டி, "ஹல்லோ மிஸ் மாலதி! Good evening, what a surprise!" என்றான்.

"Good evening to both of you", என்று இனிய குரலில் நளினமாகத் தலைசாய்த்து, திரையை முழுதும் விலக்கினாள். "ப்ளீஸ் கம் இன்" என்றாள். "எப்படித் தெரியும் என் பெயர்?"

"என் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள். என்.மாலதி, B.A. English Literature. எப்படி எழுதியிருக்கீங்க எக்ஃஜாம்ஸ்?"

"Not bad at all."

"நைஸ்லி புட். என் பெயர் பாஸ்கர். இவன் ராஜா. ரெண்டு பேருமே உங்க செட், B.A. English Literature. இவன் குமாரி கௌசல்யாவோட அத்தை பையன். நான் இன்னும் யாருக்கும் சொந்தமாகலை."

"அதற்குள் என்ன அவசரம்?" என்றாள். "ஹலோ! நீங்கதான் ராஜாவா? கௌசி உங்களைப் பத்தி நிறைய என்னிடம் சொல்லியிருக்கா."

"நான்கூட உங்களை இதற்கு முன் சந்தித்திருக்கேன். You remember that?"

புருவங்களை மென்மையாக நெரித்துப் பின் சட்டென்று விழிகளில் நாணம் சூழக் கூறினாள். "Yes, I remember. அப்போ நீங்க யாருன்னு தெரியாது."

"நானும் ராஜாவும் தினமும் வாக்கிங் போகிற போது உங்களைக் காவேரிப் பாலத்துக்குப் பக்கம் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் பார்க்கறதுண்டு. அடிக்கடி உங்களைப் பத்தித்தான் பேசுவோம்."

"ம்ஹூம். நான்கூட உங்க ரெண்டு பேரையும் பார்த்திருக்கேன். நீங்க ஶ்ரீரங்கத்தில் இருக்கேளா?"

"எப்படித் தெரியும்?"

"பஸ்ல காலேஜுக்கு வந்தபோது அடிக்கடி தினமும் உங்களைப் பார்த்திருக்கேன்."

"பஸ்ல வரும்போது யாரைப் பார்த்திருக்கே மாலதி?" என்று கௌசல்யாவின் குரல் கேட்டது.

"ஹாய் ராஜா! ஹாய் பாஸ்கர்! You look the go-go Charlie in this dress. Never?... Never Leave Me! யாரவள் பாஸ்கர்?"

"தெரியாது, கௌசல்யா."

"உனக்கு அவளைத் தெரியாதா அல்லது அவளுக்கு உன்னைத் தெரியாதா?"

"அவளுக்கு என்னைத் தெரியுமோ என்னவோ, எனக்கு அவளைத் தெரியவில்ல?"

"What do you mean by that?"

"எனக்கு அவள்யார் என்று தெரியும், ஆனால் அவளைத் தெரியாது. அவளுக்கோ என்னைப் பத்தியே தெரிஞ்சிருக்குமான்னு தெரியவில்லை."

"ஆச்சரியமா இருக்கே! இப்படிக்கூட ஒரு நிலைமையா?"

"என்ன நிலைமை? இப்ப யாருக்கு யாரைப் பத்தித் தெரியணும்?" என்றபடியே வசந்தி எங்களுடன் சேர்ந்துகொண்டாள். பின்னால் அவளுக்கே உரித்தான ஆர்வமும் நேசமும் நாணமும் தோய்ந்த விழிகளுடன் ஜெயந்தி.

கௌசல்யா உரத்த குரலில் சிரிப்பொலிகளுடன் வசந்திக்கு விளக்கியபோது என் கண்கள் ஒவ்வொருவராக நிலைத்தன.

ரத்தச் சிவப்பு மாக்ஸியில் கௌசல்யாவின் அழகும் இளமையும் வழிந்தோட, ஶாம்புவில் நீராட்டப்பட்டுப் பளபளக்கும் பட்டுக் கூந்தலில் காதோரம் ஓர் ஒற்றச் செம்பருத்திப் பூவைச் செருகியிருந்தாள்.

மாலதியும் வசந்தியும் எடுப்பான புதுப் புடவைகளில் அளவான மேக்கப்புடன் பழமையும் புதுமையும் பிரதிபலிக்க நின்றனர். மாலதி வழக்கம்போல் தலையில் ஓர் ஒற்றை ரோஜாவை வைத்துக்கொண்டிருந்தது பின்னால் கண்ணாடியில் தெரிந்தது.

ஜெயந்தியின் எளிய, இனிய தோற்றத்தில் அவள் அணிந்திருந்த நீலப் பாவாடையும் கறுப்பு தாவணியும் பெரும் பங்கு வகித்தன. அவள் அங்கும் இங்கும் தலையைத் திருப்பிப் பார்த்தபோது அந்த சிவப்புக்கல் மூக்குத்தி பளிச்சிட்டது.

"கௌசி, எங்க அப்பா அம்மா?"

"ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருக்கா. வர ராத்திரியாகும்."

"ஏன் அவா பார்ட்டில கலந்துக்கலை?"

"வரலைன்னுட்டா. கேட்டா, ’நீங்க எல்லாம் வாலிப யுவ யுவதிகள். பேச்சு, பாட்டு எல்லாம் உண்டுன்னு சொல்றே. நாங்க இருந்தா உங்களுக்கு போர் அடிக்கும். என்ஜாய் யுர்செல்வ்ஸ்’ அப்படின்னு அப்பா சொல்லிட்டார். அதுவும் சரிதான்!"

ஹால் முழுவதும் வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே ஹைட்ரஜன் பலூன்கள் காற்றில் குதித்தன. சோஃபாக்கள் இணைக்கப்பட்டு நடுவில் டீப்பாயில் அகாய் ’ஸ்டீரியோ ரெகார்ட் ப்ளேயர்’-இல் ரெகார்ட் ஒன்று சுழன்றுகொண்டிருக்க, சுவரில் மென்மையான மேற்கத்திய சங்கீதம் வழிந்தது. மற்றொரு டீப்பாயில் ஒரு ’கேஸட் ரெகார்ட் ப்ளேயர்’ காத்திருந்தது. ஹாலிலேயே இன்னொரு பக்கம் சாப்பாட்டு மேஜைகள் இணைந்திருக்க அதன்மேல் பளபளக்கும் சைனாவில் சிற்றுண்டி வகைகள் காத்திருந்தன. காற்றில் ரசாயன நறுமணம் கலந்திருந்தது.

"Well, ladies and gentlemen!..."

தன் வழக்கமான வெட்கத்தைக் கைவிட்டு ஜெயந்தி ஒரு தேர்ந்த அறிவிப்பாளரின் இயற்கையான கவனத்துடன் ஆங்கிலத்தில் தொடங்கியபோது கொஞ்சம் வியப்பு மேலிட்டது.

"...நாம் இதுவரையில் இதுபோலக் கூடியது இல்லை. நம் கல்லூரியில் ப்ரேக்கப் சோஷல் பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கலாம். But then, this is an informal and personal get-together. இந்த மாலை நம் நினைவுகளில் எப்போதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கப் போகிறது. We have a unique programme for this evening. முதலில் கொஞ்சம் சாப்பிடுவோமா?"

சாதாரணமாக வந்தோம்-சாப்பிட்டோம்-போனோம் என்று அமையாது அந்த பார்ட்டி ஜெயந்தியின் வார்த்தைகளில் சூடுபிடித்து கலகலப்பான ஈடுபாடுகளுக்கு இடமளித்து நினைவுகளை இனிமையாக்கிவிட, மெலிதான மேற்கத்திய இசை ஒலிக்க சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து பாஸந்தியும் அக்காரவடிசிலும், மெதுவடையும் கட்லெட்டும், டிக்ரி காஃபியும் சாப்பிட்டோம்.

"ஃப்ரெண்ட்ஸ்! இன்றைய பார்ட்டி நிகழ்ச்சிகளை நாம் ஒரு நினைவுக்காக ஒலிநாடாவில் பதிவு செய்கிறோம். இந்த மாலையின் முதல் நிகழ்ச்சி அறிமுகம்! மூன்று வருடங்கள் பழகிவிட்டு விடைபெறும்போது அறிமுகமா என்று கேட்கலாம். அறிமுகம் என்று நான் குறிப்பது நாம் ஒருவரை ஒருவர் எந்த சூழ்நிலையில் எப்படிச் சந்தித்து நேசத்தையும் நட்பையும் வளர்த்துக்கொண்டோம் என்று விவரிப்பதாகும். இந்த வகையில் பாஸ்கர் ராஜாவையும், ராஜா ஜெயந்தியையும், ஜெயந்தி வசந்தியையும், வசந்தி மாலதியையும், மாலதி கௌசல்யாவையும், கௌசல்யா பாஸ்கரையும் சந்தித்த நிகழ்ச்சிகளைக் கூற வேண்டுகிறேன். Come on, BhASkar!"

(தொடரும்)

ரமணி
06-04-2013, 03:44 AM
"சிலரை முதன்முதலாகப் பார்க்கும்போதே அவர்களுடன் பேசி நண்பர்களாகிவிட வேண்டும் என்ற ஆசை எழுவதுண்டு. ராஜாவை முதன்முதல் பார்த்தபோது எனக்கு இந்த எண்ணம் தோன்ற, நானே வலியச்சென்று பேச்சுக்கொடுத்து நண்பனானேன்", என்று பாஸ்கர் என்னைப் பற்றி இரண்டு நிமிடங்கள் புகழ்ந்து பேசிவிட்டு, "நான் என் குடும்பச் சூழ்நிலை காரணமாக என் பட்டப் படிப்பை இத்துடன் முடித்துக்கொண்டு வேலை தேடப் போவதால் ராஜாவைப் பிரிய நேரிடுகிறது. நாங்கள் எங்கு இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக இருப்போம்" என்று முடித்தபோது நான் நெகிழ்ந்துபோய் அவன் கைகளை அழுத்தினேன்.

நான் ஜெயந்தியைப் பார்த்த, சந்திக்க முயன்ற, இறுதியில் சந்தித்த நிகழ்ச்சிகளை முடிந்தவரை நடுநிலையாக விவரித்தபோது அவள் கன்னம் சிவந்து கண்கள் தாழக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"வசந்தியை என் ஹைஸ்கூல் நாட்களில் இருந்தே தெரியும். அதனால் அவளை முதன்முதல் எப்போது சந்தித்தேன் என்பது நினைவில்லை", என்று தொடங்கிய ஜெயந்தி, "வசந்தி என் கனவுத் தோழி மட்டுமல்ல. She is my friend, philosopher and guide." என்று முடித்து வசந்தியின் கழுத்தில் கரங்களைத் தழுவவிட்டது மாலதியை வியப்பில் ஆழ்த்தியது.

மாலதியின் அறிவையும் அடக்கத்தையும் புகழ்ந்த வசந்தி, அவளை மோனா லிஸாவுக்கு ஒப்பிட்டுக் கூறியது பாஸ்கரைக் குளிர்வித்தது. கடைசியில் அவள் பாஸ்கரைப் பார்த்தபடியே, "இப்படிப்பட்ட ஒரு தோழியுடன் பழக வாய்ப்பளிப்பது எங்கள் கடமை என்று நானும் கௌசியும் கருதியதால், உங்களுக்கு ஏற்கனவே தோற்றத்தால் தெரிந்திருந்து நீங்கள் பழகுவதற்கு பகீரதப் பிரயத்தனங்கள் எடுத்துக்கொண்ட மாலதியை ஓர் இனிய ஆச்சரியமாக இங்கு வரவழத்தோம். I hope MAlati will have no reservations. I wish you all the best." என்று முடித்து அவனுக்கு வாழ்வில்-ஒரு-முறை வாய்ப்பை நல்கினாள்.

கௌசல்யாவை முன்பே தெரிந்திருந்தாலும் சமீபத்தில்தான் பழக முடிந்தது என்று ஆரம்பித்த மாலதி, அவளது நுண்கலைத் திறன்களைப் புகழ்ந்து "She is going to have a very bright future." என்று முடித்தாள்.

கௌசல்யா தான் பாஸ்கரை முதலில் சந்தித்த விவரங்களைக் கூறிவிட்டு, அவனது தோற்றம், சுபாவம், ஈடுபாடுகள், கலைகள், அறிவு இவற்றை மிகவும் புகழ்ந்து, "பார்த்தால் பசுபோல இருக்கும் இந்த பாஸ்கருக்குள் எத்தனை பாஸ்கரிகள்", என்று முடித்தபோது மாலதியின் விழிகள் வியப்பால் விரிந்தன.

அறிமுகம் முடிந்ததும் அரட்டை தொடர்ந்தது. எங்கள் கல்லூரியில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், சந்தித்த ஆசிரியர்கள், கேட்ட, ரசித்த கல்லூரி மற்றும் பிற நகைச்சுவைத் துணுக்குகள், சின்னச் சின்ன கதைகள் இவற்றையெல்லாம் பேசித் தீர்த்தபோது பாஸ்கர் எல்லாவற்றிலும் ’டாமினேட்’ செய்து அந்த அறையையும் மாலதியையும் கலகலக்கச் செய்தான்.

பிறகு கொஞ்ச நேரம் டேபிள் டென்னிஸ் ஆடிவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். அதன்பின் பாஸ்கர் தன் எலெக்ட்ரிக் கிடாரை மீட்டி புகழ்பெற்ற தமிழ், ஹிந்தி, ஆங்கிலத் திரைப் பாடல்களைக் கௌசல்யாவுடன் சேர்ந்து பாடியும், ’ட்யூன்’களை கிடாரில் வாசித்துக்காட்டியும் எல்லோரையும் மகிழ்வித்தான்.

மணி ஏழானதும் ’டின்னர்’ தயார்பண்ணக் கௌசல்யாவுடன் வசந்தியும் ஜெயந்தியும் சென்றுவிட, கொஞ்ச நேரத்தில் நானும் பாஸ்கர் மாலதியைத் தனியாக விட்டுவிட்டுக் கிளம்பி மாடிப்படியேறி திருப்பத்தில் நிதானித்து மறைவாக நின்று அவர்களைக் கவனிக்கத் தொடங்கினேன். "பாஸ்கர் இப்போது அவளிடம் தன் காதலை வெளியிடுவானா?"

பாஸ்கரின் மென்மையான குரல் தெளிவாகக் கேட்டது. கல்லூரிப் பாடங்களில் ஆரம்பித்து மெதுவாக மற்ற விஷயங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்து, நிறைய ஜோக்குகள் அடித்து, கடைசியில் ’பெர்சனல்’ விஷயங்களைத் தொட்டு... பாஸ்கரின் முறையே அலாதி.

மாலதியின் ஒற்றைச்சொல் விடைகள் கொஞ்சம் கொஞ்சமாக சோப்புக் குமிழ்கள் போல் பருத்தன. களுக்கென்று உடைந்து புன்சிரிப்பு மென்சிரிப்பாகி விரைவில் அவள் சிரிப்பலைகள் அந்த ஹால் சுவர்களில் மோதி எதிரொலிக்க, பாஸ்கரின் திறமையை வியந்து திருப்தியுடன் கௌசல்யாவின் நூலகத்தை நோக்கிச் சென்றேன்.

நிலைகொள்ளாமல் தவித்து, அடுத்த பதினைந்து நிமிடங்களில் கீழிறங்கி வந்து, பாஸ்கரின் குரல் மெதுவாக ஒலிக்கக் காதுகளைத் தீட்டிக்கொண்டு, காலடி வீழல்களைப் படிகளின் ’கார்ப்பெட்’ மௌனமாக்க, அந்தத் திருப்பத்தில் நின்று கவனித்தபோது அவர்கள் இருவரும் நீண்டநாள் பழகிய நண்பர்கள் அல்லது காதலர்களைப் போல தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அவன் அடித்த ஜோக் ஒன்றில் உடல் குலுங்க நகைத்தவள் நிலை தடுமாறி அவன் தோளைப் பிடித்துக்கொண்டாள்.

"சாரி, பாஸ்கர்."

"டோன்ட் ஸே தட் மாலதி."

அதைக் கவனிக்காதவள் போல, "எனக்குத் தெரியும் உங்களால் முடியாதுன்னு. It's not easy to master a tongue-twister.", என்றாள்.

"இப்ப உன் படிப்பெல்லாம் முடிஞ்சதால நீ ஒண்ணு பண்ணலாமே மாலதி."

"என்ன பண்ண?"

"உன் தோழிகள் அன்னைக்கு உன்னை ’நீ ஒரு இன்ட்ரோவர்ட் அல்லது யு ஆர் இன் லவ்’னு பரிகாசம் பண்ணியது நினைவிருக்கா மாலதி? நீ என்ன பதில் சொன்னே?"

அவள் ஞாபகம் வந்து கன்னம் சிவக்க, அவன் மென்மையாகக் கூறினான்.

"உன் படிப்பெல்லாம் இப்ப முடிஞ்சிட்டதால் நீ கொஞ்சம் சாவகாசமாக என்னைப் பத்தி நினைத்துப் பார்க்கலாம், மாலதி. இவ்ளோ நாள் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். உனக்காகக் காத்திருந்தேன். நீ என்னை நினைப்பதாக இருந்தால் காத்திருக்க வேண்டியது இல்லை."

பாஸ்கரின் நேர்மையான காதலில் அவள் மலைத்துப் போனாள். கொஞ்சம் யோசித்து அவனைத் திருப்திசெய்ய முயன்றவளாகக் கூறினாள். "எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவை பாஸ்கர். மேலும் நான் எம்.ஏ. செய்வதாக இருக்கேன்."

"நானும் காத்திருக்கேன் மாலதி."

"தாங்க் யு பாஸ்கர்."

*** *** ***
(தொடரும்)

ரமணி
08-04-2013, 01:47 AM
பயணம்: நாவல்
ரமணி
27


நிலவு செய்யும் முகமும் -- காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் -- தெய்வக்
கள்து லங்கு நகையும்
---மஹாகவி பாரதியார், திருவேட்கை 1

விரல்கள் டைரியின் பக்கங்களை வருடிச் சென்று கௌசல்யாவின் தோழமையில் மலர்ந்த நாட்களை எடுத்துக் கொடுக்க, மனம் அவற்றை மாலையாகத் தொகுத்துக் கொடுக்க, நினைவுகளின் வசந்தத்தில் மனத் தோட்டத்தில் மீண்டும் ஒருமுறை மலர்ந்த அந்த நாட்களின் இனிமையை நுகர்ந்தபோது, அவனும் கௌசல்யாவும் கடைசி வருடத் தேர்வுகளை எழுதிவிட்டுக் கோடை விடுமுறையைக் கழிக்க அவன் வீட்டுக்குப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

வசந்தியைக் கலந்தாலோசித்து, மாமா மாமியின் சம்மதம் பெற்று, கௌசல்யாவுடன் நேரடியாகப் பழகிவிட்டால் அப்பாம்மாவின் மனம் மாறிவிடும் என்ற நம்பிக்கையுடனும், எதிர்காலக் கனவுகளுடனும், அவனும் கௌசல்யாவும் ஊர் சேர்ந்து முத்துவின் குதிரைவண்டியில் ஏறி, தெருமுனையில் வரும்போதே அம்மா வாசலில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ந்து, அவன் கௌசல்யாவின் தோளைத்தொட்டு அறிவித்து முகம் மலர்ந்தபோது, இவர்களை ஒருதரம் பார்த்துவிட்டு அம்மா சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்!

வண்டியை வாசலில் நிறுத்தி, அக்கம்பக்கம் ஜன்னல்களில் தலைகள் எட்டிப்பார்க்க, சிலர் தங்கள் வீட்டு வாசலுக்கே வந்துவிட, வண்டிச் சத்தத்தைக் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்துவிட்டு, அவனும் கௌசல்யாவும் தங்கள் சூட்கேஸ் சகிதம் வாசல் கேட்டைத் திறந்து, அதன் ’க்ரீச்’சில் அம்மாவை எதிர்பார்த்து ஏமாந்து, வாடாமல்லிச் செடிகள் அணிவகுத்து நிற்கும் நடைபாதையைக் கடந்து, திண்ணை அழிக்கதவின் வெளித்தாழ்ப்பாளை மெல்லத் தட்டியபோது ’ஆஃபீஸ் ரூம்’ ஜன்னலில் அப்பாவின் தலை தெரிந்தது.

"யாரூ? ராஜாவா! வாவா! கூட யாரு? ஐ ஸீ, கௌசல்யா! வாம்மா வா!"

அப்பாவின் வரவேற்பில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தும் அம்மாவின் புறக்கணிப்பு தகிக்க, அவன் கௌசல்யாவைப் பார்த்தபோது, அவள் அவன் கண்களைத் தவிர்த்து, முகம் மலரத் தனக்கே உரிய கலகலப்புடன் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள்.

"என்ன அத்திம்பேர்! எப்படி இருக்கேள்? உங்களையும் அத்தையையும் நான் குழந்தையா இருக்கும்போது பார்த்ததுதான். என்னைப் பார்த்த உடனே அதெப்படி அவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சேள்! ஃபன்டாஸ்டிக் மெமரி உங்களுக்கு! எங்க அத்தை?"

"சமையல் உள்ளில் எதோ வேலை இருக்குன்னு இப்பதான் உள்ளே போனா... ம்!... வெரி குட்! உங்க அப்பா அம்மா எல்லாரும் சௌக்யமா?"

"எல்லாரும் சௌக்யம் அத்திம்பேர். உங்களையெல்லாம் ரொம்பக் கேட்டதாச் சொன்னா. அம்மா அத்தைக்கு லெட்டர் கொடுத்திருக்கா."

"ரொம்ப சந்தோஷம். அத்தை உள்ளே இருக்கா, போய்ப்பாரு."

கௌசல்யா ஓட்டநடையாகக் கூடத்தை நோக்கிச் செல்ல, அவன் கொஞ்சம் பயத்துடன் அவளைத் தொடர, அவளின், "அத்தை!... அத்தை! யார் வந்திருக்கேன் பாருங்கோ!"--வைத் தொடர்ந்து அம்மாவின் மஞ்சள் முகம் தென்பட்டுக் கொஞ்சம் மலைத்து, அம்மா தன் வியப்பை அளவான, கணக்கிட்ட வார்த்தைகளில் வெளியிட்டாள்.

"அட, கௌசல்யாவா! பரவாயில்லையே? இந்த அத்தையைக்கூட ஞாபகம் இருக்கா உங்களுக்கெல்லாம்? எப்படி இருக்கா உங்க அப்பா அம்மா?"

"எல்லாரும் சௌக்யம் அத்தை. அம்மா உங்களுக்கு லெட்டர் கொடுத்தனுப்பியிருக்கா. அத்தோட இதையும் கொஞ்சம் வாங்கிக்கச் சொன்னா."

கௌசல்யா தன் சூட்கேஸைத் திறந்து அதிலிருந்து ஆப்பிள், வாழைப் பழங்களையும், நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தையும், மற்றும் சில விலை உயர்ந்த அன்பளிப்புப் பொருட்களையும் எடுத்து மேஜைமேல் வைக்க, அம்மா கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கண்கள் விரியக் கேட்டாள்.

"பரவாயில்லையே! இப்பவே உங்கம்மா சீர்லாம் கொடுத்தனுப்ப ஆரம்பிச்சுட்டாளா?"

"சீர்லாம் ஒண்ணுமில்லை அத்தை! இந்த பிர்லா மந்திர் மாடல் மார்பிள்ல செஞ்சது. இந்தக் குங்குமச் சிமிழ்லாம் மலைக்கோட்டைல வாங்கினது. அப்புறம் இந்த ஸ்வாமிபடம் ரெண்டும் நான் பெயின்ட் பண்ணினது."

"நீ பெயின்ட் பண்ணதா! பரவாயில்லையே, ரொம்ப நன்னா வந்திருக்கு. வசந்திகூட இந்தமாதிரி ட்ராயிங்லாம் நன்னா செய்வா. எதுக்கு இவ்ளோ பழம்? வாழைப்பழம் நம்மாத்துலேயே ஏகப்பட்டது இருக்கு. சாப்பிடத்தான் ஆளில்லை. உங்காத்தில ஆப்பிள் மரம்லாம் இருக்கா என்ன?"

"ஆப்பிள், வாழை எல்லாம் கடையில் வாங்கினோம்."

"இல்லை, உங்காத்தைச் சுத்திப் பெரிசா அழகா தோட்டம்லாம் இருக்குன்னு ராஜா சொல்லியிருக்கான். ஒருவேளை ஆப்பிள் மரம்கூட வெச்சிருக்கேளோன்னு கேட்டேன். ரொம்ப சந்தோஷம். எல்லாத்தையும் எடுத்துண்டுபோய் ஸ்வாமி ரூம்ல வெச்சிடு. ஏண்டா, நீ போன வாரமே வரதா எழுதியிருந்தையே? மாமா ஆத்துல டேரா போட்டுட்டையாக்கும்?"

"மாமா டூர் போட்டு நேத்துதான் வந்தார்மா. திரும்ப இன்னைக்கு வெளியூர் போறார். எனக்கும் ஹாஸ்டலைக் காலிபண்ண டயம் இருந்தது. கௌசல்யா வேற திடீர்னு என்னோட வரேன்னுட்டா!"

அம்மவின் கண்கள் அவன் கண்களை நேருக்குநேர் சந்தித்து நிலைத்தபோது தர்மசங்கடமாகப் போயிற்று. இதற்குள் கௌசல்யா ஸ்வாமி ரூமிலிருந்து மறுபடியும் கூடத்துக்கு வந்துவிட, அம்மாவின் கேலிக் கணைகள் அவள்பால் திருப்பப்பட்டுத் தொடர்ந்து அவளை வதைத்தன.

"உன்னைப் பார்த்தா அடையாளமே தெரியலையே கௌசல்யா?"

"நீங்க என்னைக் குழந்தையாப் பார்த்ததுதானே?"

"அதுக்கில்லை. கௌசல்யான்னா என்னமோ இங்கிலீஷ்காரப் பொம்மனாட்டியாட்டம் தலையை பாப் பண்ணிண்டு லிப்ஸ்டிக் பூசிண்டு சென்ட் போட்டுண்டு கவுன், மாக்ஸிலதான் இருப்பான்னு சொல்லக் கேள்வி! நீ என்னடான்னா தழையத் தழையப் பின்னிண்டு அழகா, லட்சணமாப் புடவை கட்டிண்டு வந்து நிக்கறையே! சந்தோஷம். ராஜா சொல்லிக் கொடுத்தானாக்கும், ’அத்தை ரொம்பக் கட்டுப்பெட்டி, அவளுக்கு இந்த நாகரிகம்லாம் தெரியாது, அதனால நீ எப்பவும் புடவையில் இருந்தாப் போறும்’னு?"

"நான் காலேஜ் போறச்சே விதவிதமா ட்ரெஸ் பண்ணிக்கறது உண்டு அத்தை. ஆனால் எனக்குப் புடவை கட்டிக்கத்தான் பிடிக்கும்."

"என்னவோம்மா. உன்னை நினக்கறபோது பாவமாத்தான் இருக்கு. தினுசு தினுசா ட்ரெஸ் பண்ணின்டு தினம் ஒரு சினிமாவோ டிராமாவோ போறதுக்கு இந்த கிராமத்துல என்ன பண்ணுவியோ? காமு அத்தை கோயம்புத்தூர்ல இருக்கா. அது நகரம். பொழுது போயிடும். இந்த அத்தையாத்துல உனக்கு என்ன பொழுதுபோக்கு இருக்கு சொல்லு?"

"நான் ஜாஸ்தி சினிமா ட்ராமால்லாம் போகமாட்டேன். எனக்கு உங்காத்துத் தோட்டத்திலேயே நல்லா பொழுதுபோகும் அத்தை! எனக்கு மரம் செடிகள்னா ரொம்பப் பிடிக்கும்."

"சரி, ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து குளிச்சிட்டு சாப்பிடற வழியைப் பாருங்கோ. சமையல் ரெடியாய்டுத்து."

"நான் கார்த்தாலேயே குளிச்சிட்டேன்."

"நான் இனிமேல்தான் குளிக்கணும். வென்னீர் இருக்காம்மா பாய்லர்ல?"

"இருக்கே! என்னது, கௌசல்யா குளிச்சாச்சா? இவ்ளோ சீக்கிரமாவா! நீங்க ரெண்டு பேரும் ஏழுமணி பஸ்கே கிளம்பியிருப்பேளே?"

"அம்மாவும் நானும் தினமும் கார்த்தால சீக்கிரமே குளிச்சிடுவோம்."

"சரி. ட்ரெஸ் மாத்திண்டு சாப்பிட வா. உன்னோட பொட்டியெல்லாம் இந்த ஸ்டோர் ரூம்ல வெச்சிக்கோ. அங்கேயே ட்ரெஸ் பண்ணிக்க வசதியிருக்கு. அத்தை வீடு பழைய காலத்து வீடும்மா. ஒங்காம் மாதிரி மாடர்னா ஆளுக்கொரு ரூம் இருக்காது. இருக்கற இடத்தில கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்."

"இந்தாத்துக்கு என்ன அத்தை, அரண்மனையாட்டம் நீளமா பெரிசா இருக்கே! வாசல்லேர்ந்து கொல்லை வரைக்கும் நடக்கறதுக்குள்ள கால் வலிக்கும் போலிருக்கே! எனக்குத் தனி ரூம் வேணுங்கறதில்லை. நான் எங்க வேணும்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்."

"ரொம்ப நன்னாப் பேசக் கத்துண்டு இருக்கேடியம்மா! அசல் உங்க அம்மாதான்!"

கௌசல்யா முதல்முறையாகக் கொஞ்சம் முகம் சுருங்கிச் சமாளித்துக்கொண்டாள்.

அடுத்த சில நாட்களில் அம்மாவின் கேலியும் சீண்டுதலும் மேலும் அதிகரித்துக் கௌசல்யாவைத் திணற அடித்தன. அம்மாவின் பாசம் இழையிடும் செயல்கள் அவளுக்குக் கௌசல்யாவைப் பிடித்திருப்பது போல் தெரிந்தாலும் அந்தச் செயல்களுடன் வந்த சொற்கள் புதிராக இருந்தன. ஒருவேளை இது கௌசல்யாவுக்கு அம்மா வைக்கும் ஒரு ’டெஸ்டோ’ என்றுகூடத் தோன்றியது.

அவனுக்கு எதிர்லேயே இப்படியெல்லாம் பேசும் அம்மா அவன் இல்லாத சமயங்களில் கௌசியை என்ன பாடு படுத்துவாளோ என்று பயமாகவும் வருத்தமாகவும் இருந்தது. சமயத்தில் அவளை ஏன் அழைத்துக்கொண்டு வந்தோம் என்றுகூட நினைக்கத் தோன்றியது. மாமா மாமிமேல் தனக்குள்ள கோபத்தையும் விரோதத்தையும் அம்மா கௌசல்யாவின் மேல் காட்டுகிறாளோ என்ற ஐயம் தலைக்கிக் கோபம் துளிர்க்க, அம்மாவை சூடாக நாலு வார்த்தை கேட்டுவிட்டால் என்ன என்றும் தோன்றியது.

அவன் வெளிப்படையாகக் கௌசல்யாவை ஆதரித்துப் பேசுவது விஷயங்களை மேலும் சிக்கலாக்கி விடக்கூடும் என்று அஞ்சிப் பேசாமல் இருக்க வேண்டியிருந்தது.

அம்மா அவனையும் விடுவதாக இல்லை.

(தொடரும்)

ரமணி
10-04-2013, 03:20 AM
இத்தனை நாள் அவள் அவன்மேல் கொண்டிருந்த அதீதமான பாசம் கொஞ்சம் மட்டுப்பட்டு, அப்பாவுக்கு எதிரில் அவனைப் புகழ்ந்தும் செல்லம் கொடுத்தும் பேசுவது அறவே ஒழிந்து அந்த இடத்தைக் கண்டிப்பும் குத்தலும் கிண்டலும் பிடித்துக்கொள்ள, அம்மாவின் சொல்லம்புகள் அவனையும் வதைத்தன. குறிப்பாக அவன் மாமா மாமிக்குப் பரிந்தோ அல்லது கௌசல்யாவைப் புகழ்ந்தோ பேசமுடியாமல் பார்த்துக்கொண்டாள்.

வந்த முதல்நாளே அம்மா அவனிடம் தனியாக, "ஏண்டா, உனக்கு என்ன ஒரு ’இது’ இருந்தால் எங்களைக் கேட்காம, ஒரு கடுதாசிகூடப் போடாம, திடுதிப்னு கௌசல்யாவைக் கூட்டிண்டுவந்து நிப்ப! அப்பா உன்மேல ரொம்பக் கோவமா இருக்கார்", என்றபோது பயம் வயிற்றில் பந்தாகச் சுருண்டுகொள்ள, அவன் அதை மறைத்து,

"கௌசல்யா தாம்மா வரணும்னு ஆசைப்பட்டாள். திடீர்னு கிளம்பினதால லெட்டர் போட முடியலை."

"கௌசல்யா வரணும்னு ஆசைப்பட்டா அவள் அப்பாவுக்கு ஒரு லெட்டர் போட முடியலையோ? அவாளுக்கு நம்பளைக் கண்டாலே இளக்காரம் தெரிஞ்சுக்கோ. இல்லேனா உங்க மாமா அப்பாவுக்கு ஒரு கடுதாகூடப் போடாமல் பொண்ணை இப்படித் திடீர்னு அனுப்புவானா? குறைஞ்சது வர்றவள்ட்ட எழுதிக் குடுத்தனுப்பறது? அநேக வருஷம் கழிச்சு ஒரு பந்தத்தைத் தொடர நெனைக்கறபோது, அப்பா ஆத்துக்கு மூத்தவர், அவரிடம் கேட்காவிட்டாலும் சொல்லணும்னு ஒரு மரியாதை வேண்டாம்?"

"மாமா அப்பாவுக்கு லெட்டர் எழுதி அனுப்பலையா?"

"இல்லை. உங்க அருமை மாமிதான் எனக்கு எழுதியிருக்கா. உங்க மாமா தன் பாஸ் திடீர்னு விஜயம் பண்ணதால அவர் கூடவே வெளியூர் போய்ட்டாராம், எழுத முடியலையாம். எல்லாம் நொண்டிச் சாக்கு."

"கரெக்ட்! மாமாவோட பாஸ் நேத்திக்கு வீட்டுக்கே வந்து சாப்பிட்டார். அப்புறம் அவா ரெண்டு பேரும் அவர் கார்ல ஏறி எங்கேயோ வெளியூருக்குக் கிளம்பிப் போனாங்க."

"ராஜா!" என்றாள் அம்மா கூர்மையாக. "எனக்கு உங்க மாமாவைப் பத்தி நன்னாத் தெரியும். நீ ஒண்ணும் சப்பைக்கட்டு கட்டவேண்டாம்."

"நான் உண்மையைத்தான் சொல்றேன். நம்பினா நம்புங்கோ நம்பாட்டா போங்கோ!"

"அவன் எப்படி வேணும்னாலும் போகட்டும், எங்களுக்குக் கவலையில்லை! அவன் எங்களை மதிக்கலைன்னா அது அவனுக்குத்தான் நஷ்டமே தவிர எங்களுக்கு ஒண்ணுமில்லை. மரியாதை இல்லாத இடத்தில் அதை எதிர்பார்க்கறதும் அவாளோட ஒட்டறதும் நமக்கு வழக்கமில்லை."

"ஏம்மா நீ ஒண்ணும் இல்லாத விஷயத்தைப் பெரிசுபடுத்தறே? உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதுக்காக கௌசல்யா அவ அத்தையைப் பார்க்க வரக்கூடாதா?"

"போன லீவுல நீ அப்பாவோடையும் என்னோடையும் கௌசல்யா பத்தி தர்க்கம் பண்ணதெல்லாம் நான் மறக்கலைடா. அப்பாவும் மறக்கலை! எனக்கு உன் ப்ளானெல்லாம் தெரியாமல் இல்லை. நவராத்திரி லீவுல நீ வந்தபோதே நான் இதை எதிர்பார்த்தேன். ஒண்ணு மட்டும் முடிவாத் தெரிஞ்சுக்க. எங்க சம்மதம் இல்லாமல் நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. மீறிப் பண்ணிண்டா அப்புறம் உனக்கோ அவளுக்கோ இந்தாத்தில இடமில்லை. இந்த விஷயத்தில மட்டும் என்னையோ அப்பாவையோ யாரும் அசைக்க முடியாது."

அம்மாவின் பேச்சு ஒவ்வொரு சமயமும் அவள் மனத்தாங்கலை வெளிப்படுத்தினாலும், அவன் கௌசல்யாவை ஊரில் கோவிலுக்கோ ஊர் சுற்றிப் பார்க்கவோ கூட்டிச்செல்ல அம்மா தடை சொல்லவில்லை. அம்மா அவனிடம் கண்டிப்புடன் சொன்னதெல்லாம் கௌசல்யாவின் காதுகளை எட்டியதாகத் தெரியவில்லை. வெளியில் சென்றபோது கௌசல்யா அவனுடன் வழக்கம்போல் கலகலவென்று பேசிக்கொண்டு, அவனை நச்சரித்து அவன் அனுவுடன் படித்த பள்ளி, அந்த நூலகம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்து அவனைக் கேலிசெய்து மகிழ்ந்தாள்.

அம்மாவின் முடிவை எதிரொலித்து அப்பாவும் மறுநாள் கௌசல்யா மாடியில் இருந்தபோது அவனையும் அம்மாவையும் ஆஃபீஸ் ரூம் வரச்சொல்லித் தீர்மானமாக் கூறிவிட்டார்:

"ராஜா, உனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். எனக்கு இந்த ’அலையன்ஸ்’ல விருப்பமில்லை. உனக்கு கௌசல்யா ரொம்பப் பொருத்தமானவளா இருக்கலாம். அழகாவும் இருக்கா, முறைப் பெண்ணும் கூட. உன்னைவிட ஒரு வயசுதான் சின்னவள்னாலும் பரவாயில்லை. ஆனால்... அவ அப்பாவோட போக்கு எனக்குப் பிடிக்கலை. அம்மாவோட தம்பிங்கற த்வேஷத்ல இதை நான் சொல்லலை. அம்மாவுக்கே தெரியும் அவனைப் பத்தி. என்னைவிட பத்துப் பன்னிரண்டு வயசு சின்னவன் அவன். பெரிய பணக்காரனா இருந்தா மத்தவாளை மதிக்கக் கூடாதுன்னில்லையே?"

"கல்யாணங்கறது அதைப் பண்ணிக்கறவாளோட சந்தோஷம் மட்டுமில்லை. அதில நேரடியா சம்பந்தப்பட்ட எல்லோரோட சந்தோஷமும் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நெறக்கும். அதேமாதிரி, மனுஷாளுக்கு மரியாதை முக்கியம். இன்னிக்கு எனக்குக் கிடைக்காத மரியாதை நாளைக்கு உனக்கு அவாத்தில கிடைக்கும்னு எனக்குத் தோணலே. கௌசல்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனால், அதுக்கப்புறம் ஒண்ணு நீ எங்களை மறந்துடணும் அல்லது அவள் தன் பெற்றோரை மறந்துடணும். இதுக்கு சம்மதம்னா மேலே போங்கோ."

’பட்ட காலிலேயே படும்’ என்பதுபோல் கௌசல்யா அத்தையின் வீட்டில் பத்து நாட்கள் தங்கிவிட்டுக் கிளம்பிப் போனதும் அப்பாவுக்கு மஞ்சள் காமாலை கண்டு படுத்த படுக்கையாகி, தொடர்ந்த பணக் கஷ்டங்களால் அவர் அந்தப் பெரிய வீட்டை விற்றுவிட்டு அதே தெருவில் ஒரு சிறிய ’ஸ்ட்ரீட் ஹவுஸ்’-ஐ வாங்கிக் குடிபோக, அவர்கள் உரவில் விரிசல் ஏற்பட்டது.

*** *** ***

jayanth
10-04-2013, 03:23 AM
கலக்குறீங்க ரமணி...!!!

ரமணி
12-04-2013, 03:19 AM
பயணம்: நாவல்
ரமணி
28


இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே!
எதற்குமினி உலைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி கடைநமது வசத்தில் இல்லை.
---மஹாகவி பாரதியார், பேதை நெஞ்சே! 1

ஆரம்பம் என்று நினைத்தது முடிவு ஆனது.
முதல்படி என்று எண்ணியபோது பயணம் முடிந்து போனது.

கௌசல்யாவின் அறிமுகம் அவன் குடும்பத்தில் இறுகிக் கிடந்த இதயங்களைத் தளர்த்தித் தென்றலைத் தவழவிட்டதென்னமோ உண்மைதான். அதே சமயம் அந்த ஜன்னல்கள் முழுவதுமாகத் திறந்துகொள்ளவில்லை.

அவள் அவன் வீட்டில் அம்மாவின் கேலிக் கணைகளையும் கோள்சொற் கணைகளையும் ஏற்று, எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக வளைய வந்துகொண்டு இருந்த அந்தப் பத்து நாட்களில் ஒரு முறைகூட மாமாவிடம் இருந்து கடிதம் வராதது பெருத்த அவமரியாதையாகக் கருதப்பட்டு, கண்ணுக்குத் தெரியாமல் விஸ்வரூபம் எடுத்து,

கௌசல்யா திருச்சிக்குக் கிளம்பிப் போனபோது அவன் அவளுடன் செல்லவிருந்தது தடைசெய்யப்பட்டு, அவளுக்குத் தனியாகப் பயணம் செய்வது பழக்கம்தான் என்று அவன் பெற்றோர் அவளிடம் நன்றாகக் கேட்டு அறிந்துகொண்டு, அவள் அதற்குத் தகுந்தாற்போல் தன் பெற்றோருக்கு நாலைந்து நாட்கள் முன்னரே கடிதம் எழுதிப் போட்டு, அந்தக் கடிதத்துக்கு அவள் அம்மாவிடம் இருந்து சம்மதம் தெரிவித்து (அவள் அப்பா கடந்த இரண்டு நாட்களாக ஊரில் இல்லை என்ற செய்தியுடன்) பதில் வந்ததும், அவன் அப்பா மட்டும் ஊரின் பஸ் நிலையம் வரைசென்று கௌசல்யாவைத் தனியாக பஸ் ஏற்றிவிட்டு வந்தார்.

அதன்பின் அவன் கௌசல்யாவை சந்தித்தது அந்த ஜூன் மாதம் நடைபெற்ற வசந்தியின் திருமணத்தின் போதுதான். இடைப்பட்ட காலத்தில் அந்த இருபத்தைந்து வருட உதாசீனப் பனிப்போர் அந்தக் குடும்பங்களிடையே தொடர்ந்தது.

வசந்தியின் திருமணம் அவன் அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க---

"நன்னாயிருக்கு! வசந்தியோட கல்யாணத்தைச் சத்திரத்தில் பண்றதாவது! அவள் சின்ன வயசிலேர்ந்தே என்கிட்ட வளர்ந்தவளாக்கும்! அவள் என் பொண்ணு மாதிரி! கல்யாணத்தை இங்க நம்பாத்துல வெச்சிக்கலாம். பக்கத்து வீடு ரெண்டையும் ஒழிச்சுக் கொடுப்பா, நான் ஏற்பாடு பண்ணறேன். எதிர்த்தாம் இப்பவே காலிதான். அங்க மாப்பிள்ளை ஆத்துக்காராளைத் தங்கவைக்கலாம். இந்த ஊர்ல தண்ணீர் கஷ்டம் கிடையாது. கறிகாய்லாம் மலிவு. பூ வேணுங்கறது கிடைக்கும். பஸ் ஸ்டாண்டுலேர்ந்து நடந்தே வந்துடலாம். இல்லேன்னா ப்ளஷர் கார் கூட ஏற்பாடு பண்ணிக்கலாம். வக்கீல் கணபதி அய்யர் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல தன் காரைத் தரேன்னு ஏற்கனவே சொல்லியிருக்கார்."

"ஆமாம் நாகராஜன்! நீர் எதுக்கும் கவலைப் படாதேயும்! பொண்ணை அழைச்சிண்டு முன்னாடியே பரிவாரத்தோட வந்து சேரும். எல்லாம் நாங்க பாத்துக்கறோம்."

மாமாவின் வைராக்கியத்தைத் தகர்த்து அவரை அக்கா வீட்டு வாசல் படியை மிதிக்கவைத்துவிட அம்மா கையாண்ட தந்திரம் அவனுக்குப் புரிந்தது. விட்டுக்கொடுக்க முடியாத மனது கட்டாயப்படுத்த முனைந்தது அவனுள் சில நம்பிக்கைகளையும் சாத்தியங்களையும் பயங்களையும் தோற்றுவித்தது.

அக்கம்பக்கத்து விடுகள் இணைக்கப்பட்டுத் தெருவை முக்கால் வாசி அடைத்துப் பந்தல் போடப்பட்டு, கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் காத்திருக்க, இப்போது நல்ல ’பொஸிஷன்’களில் இருக்கும் அப்பாவின் அந்தக்கால மாணவர்கள் தோள்கொடுக்க, மதுரை கைலாசம் அய்யரின் நளபாகம் நாவெல்லாம் நினைவெல்லாம் இனிக்க, மணக்க, வசந்தியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

தன் ஆதர்ஷ தோழியின் திருமணத்தில் அவனும் கௌசல்யாவும் மாப்பிள்ளை வீட்டாரை விழுந்துவிழுந்து உபசரித்தனர். கௌசல்யாவும் ஜெயந்தியும் அவ்வப்போது வசந்தியை அடைகாத்திருக்க, அவனும் பாஸ்கரும் உக்கிராண அறை முதல் வெளி வேலைகள் வரை அனைத்துக் காரியங்களிலும் பங்குகொண்டு பெரியவர்களுக்கு உதவினார்கள்.

வசந்தியின் திருமணத்தில் முதல் நாளன்று

துருவங்கள் இணைந்தன. பல வருடங்களாக
ஸ்பரிசிக்காத கரங்கள் ஸ்பரிசித்துக் கொண்டன.
வணங்கிக் கொண்டன. ஒன்றையொன்று குலுக்கிக் கொண்டன.
வளைக் கரங்கள் தீண்டிக் கொண்டன. தழுவிக் கொண்டன.

முகங்கள் சந்தித்துக் கொண்டாலும்
இதயங்கள் சந்தித்துக் கொள்ளாதது
அப்போது தெரியவில்லை.

கல்யாண சந்தடிகள் ஓய்ந்து மூன்றாம் நாள் மாப்பிள்ளை வீட்டாரைக் கட்டுச் சாதக் கூடைகளுடனும் வசந்தியைக் கண்ணீருடனும் வழியனுப்பியபோது அவனும் கௌசல்யாவும் பஸ் நிலையம் வரை கூடவே சென்று வழியனுப்பிவிட்டுப் பின் பாஸ்கரையும் பஸ் ஏற்றிவிட்டதும் வீட்டுக்கு வந்து இருவரும் வயிற்றுக்கு இதமாக வற்றல் குழம்பும் வெண்டைக்காய்ப் பொரியலும் தயிர் சாதமும் சாப்பிட்டுவிட்டு, கௌசல்யா எதிர்வீட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட, அவன் மாடிக்குச் சென்று மேசை மின்விசிறியைப் போட்டுக்கொண்டு களைப்புத் தீர ஒரு மணி நேரம் உறங்கினான்.

குரல்கள் கேட்க விழித்துக் கொண்டான்.

முதலில் சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. ஏன் எல்லோரும் இவ்வளவு சத்தமாகப் பேசிக்கொள்கிறார்கள்? சட், கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை.

"காமு, லக்ஷ்மி ஏன் கண்ணைக் கசக்கறா?"
என்று காதில் விழுந்தபோது அவன் சகலமும் விழித்துக்கொண்டு ஓசையின்றி மாடியின் திறந்தவெளிப் பகுதிக்கு நழுவினான்.

கூடத்திலும் ஸ்வாமி அறையிலும் வெளிச்சத்துக்காக எடுத்துக் கட்டிய சுவர்களின் சின்ன ஜன்னல்களைத் தகர ’ஷேட்’கள் மறைத்திருக்க, அவன் மறைவாக ஒரு நிழலில் அமர்ந்துகொண்டு இருபுறமும் பார்வையை ஓடவிட்டபோது, ஹாலில் மாமி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகத் தன் புடவைத் தலைப்பை நனைத்திருந்தாள். அம்மாவின் கண்களும் சிவந்திருந்தன.

"என்னவாம் காமு? ஏன் அவள் அழறா?"

"தெரியலை பாட்டி! அவள் ஏதோ அக்காவைப் பேசியிருப்பா போலிருக்கு. அக்காவும் திருப்பிக் கொடுத்திருக்கா."

"உங்க அக்காவுக்கும் இவ்வளவு வாய் கூடாதுடி காமு! இருவத்தஞ்சு வருஷம் கழிச்சு வந்து நமஸ்காரம் பண்றவனை நாலுபேர் முன்னாடி ’இப்பவானும் பெரியவாளை மதிக்கத் தோணித்தே, சந்தோஷம்! நல்லா இருங்கோ!’ என்று சொன்னது எந்த விதத்தில் நியாயம் சொல்லு?"

சித்தி அந்தக் கேள்விக்கு பதில்கூற விருப்பமின்றி அந்த இடத்தைக் காலி பண்ண விமரிசனங்களும் விவாதங்களும் தொடர்ந்தன.

"இவ அக்கா எப்போதும் இப்படித்தான். பார்க்கத்தான் மீனாக்ஷி மாதிரி இருக்காளே தவிர, பேச ஆரம்பிச்சா குத்தல்தான்."

"அதிருக்கட்டும் ஷேஷம்மா! இந்த நாணாவும் லேசுப்பட்ட ஆளில்லை. அந்தக் காலத்திலேயே அவன் தான்தோன்றித் தனமாக இருப்பான். இப்ப ஏகப்பட்ட பணம் என்ன, கார் என்ன, பங்களா என்ன! கேக்கவா வேணும்?"

"அவன்மேல் தப்பில்லை பாட்டி. இத்தனை வருஷம் கழிச்சுப் பாக்கறபோது, ’என்னமோ வாசல் படியை மிதிக்க மாட்டேன்னு சபதம் பண்ணியே? உன்னை மிதிக்க வெச்சுட்டேன் பத்தியா?’னு இவள் பெருமை அடிச்சுக்கலாமா?"

"அதுக்கு நாணா, ’நான் தாண்டிப்போன படியை மிதிக்கலையே! இது வேற படின்னா? நீங்கதான் இப்போ வேற வீடு மாறிட்டேளே? அதுவும் இந்தப்படி சின்னதுதானே, தாண்டியே உள்ள வந்துட்டோம்’னு வேடிக்கையாச் சொன்னது மட்டும் இவாளுக்கு சுருக்குனு தச்சதாக்கும்?"

"ஏன்?"

"தோட்டமும் தொரவுமா இருந்த பெரிய வீட்டை வித்துட்டு இவா இந்தச் சின்ன வீட்டை வாங்கினதை அவன் இடிச்சுக் காட்டிட்டானாம்!"

"என்னவோ போங்கடி! தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்லுவா. இங்க என்னடான்னா வலது கையும் இடது கையும் அடிச்சுக்கறது!"

"நாணா பொண்ணுக்கு மஹாதேவய்யர் பையனைப் பாக்கறாளாமே?"

"நெருங்கின சொந்தத்தில் கல்யாணம் பண்ணிண்டா செல பேர்க்குக் குழந்தை இல்லாமப் போயிடறது!"

"சிறிசுகள் ரெண்டும் ஒண்ணை ஒண்ணு விரும்பறதுகள்! பெரியவா விட்டுக்கொடுக்கலைன்னா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போறது!..."

"எல்லார்க்கும் நான் ஒருத்திதான் கிடைச்சேன். கல்யாணமாகி இருவத்தஞ்சு வருஷம் கழிஞ்சும் இந்த மாதிரி அல்லல் படணும்னு என் தலையெழுத்து. என் தலையெழுத்துதான் இப்படின்னா என் பொண்ணோட---"

"பார்த்தியா நாணா உன் பொண்டாட்டி பேசறதை?"

"பேசாம என்ன செய்வா? ஆசையோட அத்தையைப் பார்க்க வந்த எம் பொண்ணை நீ ’ட்ரீட்’ பண்ணின விதம் தெரியாதா? உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா என் பொண்ணு என்ன பண்ணுவா?"

"உன் பொண்ணு இல்லததையும் பொல்லாததையும் சொல்லிருப்பா. நான் என்ன அவளைக் கடிச்சா தின்னுட்டேன்? சொல்லி என்ன பிரயோஜனம், அவ அம்மா மாதிரிதானே அவளும் இருப்பா?"

"அக்கா, வார்த்தையை அளந்து பேசணும். என்னைப் பத்தி எங்க ஆத்துக்காரருக்குத் தெரியும். உங்களைப் பத்தி எல்லாருக்கும் தெரியும்!"

"என்னடி சொன்னே?"

"லக்ஷ்மீ, நீ ஓவராப் போறே."

"என்ன அத்திம்பேர் ஓவராப் போறா? ஏதோ கல்யாணமான புதுசுல நீங்க ரெண்டுபேரும் ஆட்டிவெச்சபடி ஆடினோம். இன்னமும் பணிஞ்சுபோணும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்து?"

"அதுதான் சரிக்குச் சரியா உக்காந்து சம்பந்தம் பேச வந்துட்டியாக்கும்?"

"நாங்க ஒண்ணும் சம்பந்தம் பேச ஆசைப்படலை?"

"பின்ன நாங்களா கேக்கறோம்?"

"நாணா, நீ பொண்ணைப் பெத்தவன்! நீதான் தணிஞ்சு போகணும்."

"எத்தனை நாளைக்கு காமு? இவ்வளவு நாள் கழிஞ்சும் எங்களை இந்தப் பாடு படுத்தறவா நாளைக்கு என் பொண்ணை நல்லா வெச்சுப்பான்னு என்ன உத்தரவாதம்? அதான் ஏற்கனவே கோடி காமிச்சுட்டாளே? உரிமை எடுத்துக்கட்டும், வேணாங்கலை. அதே நேரத்தில் கொஞ்சமாவது பாசமும் இருக்கவேண்டாம்?"

"பாசத்துக்கு என்ன கொறச்சல் நாணா? சில பேருக்கு மனசில எதையும் வெச்சுக்கத் தெரியாது. உனக்கே உங்க அக்காமேல நம்பிக்கை இல்லேன்னா எப்படி?"

"உங்களுக்கெல்லாம் அக்கா என்ன செஞ்சாலும் தப்பில்லை. இவாளைக் கேள்வி கேட்பாரில்லையா?"

"சில பேருக்கு நான் எது செஞ்சாலும் தப்புத்தான். சித்தம் போக்கு சிவன் போக்குன்னு இருக்கறவாளை யாராலும் திருப்திப்படுத்த முடியாது."

"ஆமாம், நாங்கள்லாம் சித்தம் போக்கு சிவன் போக்குன்னு அலையறவா. அதான் ஆலகால விஷத்தைக் கண்டத்துல வெச்சிண்டு துப்பவும் முடியாம முழுங்கவும் முடியாமத் தவிச்சிண்டு இருக்கோம்."

"லக்ஷ்மீ, நீ ஏன் குறுக்கே குறுக்கே பேசி விஷயத்தை சிக்கலாக்கறே?"

"பார்த்தியாடி காமு, நான் விஷமாம்!" என்று அம்மா கண்ணீர் உகுத்தாள். "அந்தக் காலத்தில நாணாட்டத் தலைல அடிச்சிண்டேன், கேக்கலை. இவள் வந்த நேரம் அப்பா போய்ச் சேர்ந்தார். இவள் பொண்ணு வந்திட்டுப் போனா, எங்களுக்கு வீடே போய்ட்டது!"

அம்மாவின் தாக்குதலில் மாமி நிலைகுலைந்து கண்ணீர் பெருக்க,

கண்ணீர்த் துளிகளை ஆகுதியாகக் கொண்டு
கோபக் கனல்கள் செழித்தன.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; -- தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
---மஹாகவி பாரதியார், அக்கினிக் குஞ்சு

நேற்றுவரை தோழமை வேடம் பூண்டிருந்த
முகங்களில் வன்மம் குடிகொண்டது.
முகங்களின் தசைநார்கள் அதிர்ந்து
சொல்லம்புகளை எய்தன.

அந்த அம்புகள் நுனிகளில் சினமெனும்
நஞ்சைத் தாங்கி நெஞ்சைக் குதறின.

சொற்கள் சொற்களைக் காயப் படுத்தின.
குரல்கள் குரல்களை ஆக்கிரமித்தன.
குரல்களோடு பொருதன. வென்றன. தோற்றன.
பெரியோரைச் சிறியோராக்கின.

உறவுகள் எரிந்து தணிந்தபோது அவனும் கௌசல்யாவும் தனி மரங்களாக விடப்பட்டனர்.

*** *** ***
(தொடரும்)

ரமணி
14-04-2013, 02:37 AM
பயணம்: நாவல்
ரமணி
29


புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
---மஹாகவி பாரதியார், மனப் பெண் 7-8

கரசரண க்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா |
ஶ்ரவணநயனஜம் வா மானஸம் வாபராதம் |
விஹிதமஹிதம் வா சர்வம்*ஏதத்க்ஷமஸ்வ |
ஜய ஜய கருணாப்தே ஶ்ரீமஹாதேவ ஶம்போ |

கரசரண க்ருதம் வாக் | காயஜம் கர்மஜம் வா... |
ஶ்ரவணநயனஜம் வா | மா...னஸம் வா பராதம் |
விஹிதமஹிதம் வா | சர்வம்...ஏதத்க்ஷமஸ்வ |
ஶிவ ஶிவ கருணாப்தே | ஶ்ரீ மஹாதேவ ஶம்போ |
ஶிவ ஶிவ கருணாப்தே... | ஶ்ரீ... | மஹாதேவ ஶம்போ... |

மெலிதான ’ஃபேன்’ காற்றில் தம்புராவின் குடத்தில் விழுந்திருந்த அவள் பட்டுப்புடவைத் தலைப்பின் குஞ்சங்கள் சிலிர்க்க, விஜயாவின் குரல் ஹால் தூண்களில் பட்டு எதிரொலித்தது.

"ஶம்போ மஹாதேவ..."
என்று இமைகள் தாழ்ந்து ஓரம்பார்க்கும் விழிகளால் அவள் ஐந்துமுறை ஆழமாக விண்ணப்பித்துக் கொண்டபோது, ஆவர்த்தியாக வந்த அப்பாவின் பெயர்ப் பிரயோகத்தில் அம்மாவின் கண்கள் மருண்டு அப்பாவை நோக்கி உடனே சமாளித்துக் கொண்டன.

"சரணம் ஶ்ரீ காளதீசா,
ஶம்போ... மஹாதேவா!"

என்று மறுபடியும் மூன்று முறை பக்தி தோய்ந்த குரலில் அவளது விண்ணப்பம் தொடர்ந்தபோது, அம்மாவின் கண்கள் அப்பாவின் முகத்தில் நிலைத்ததைப் பார்த்தான்.

அப்பாவின் முகத்தில் புன்னகை மெலிதாகத் துளிர்த்து, அவர் கண்கள் அவள்மேல் கருணையுடன் படிந்திருக்க, பணிவும் பவ்யமும் கலந்து பயமில்லாமல் விஜயாவின் குரல், ஒரு கோவில் மணியின் ஓங்காரத்துடன் செவிகளில் பாய்ந்து ஊனை உருக்கியது.

அவன் விரல்கள் சப்தமில்லாமல் தாளமிட, விழிகள் அவளை நோக்கியிருந்தன.

அப்பாவின் கடிதத்தில் கண்டிருந்த, ’நன்றாகப் பாடும், வீணை வாசிக்கும், மூக்கும் முழியுமாக இருக்கும்’ பெண் இப்போது இப்படி அவன்முன்பு விஸ்வரூபம் எடுத்திருப்பது அவனை பிரமிக்க வைத்தது.

பெண் என்பதைவிட, ’டீன் ஏஜ்’ பருவத்தை அப்போதுதான் கடந்திருந்த குழந்தையாகத் தோன்றினாள். தழையத் தழையப் பின்னியிருந்த கூந்தலில் மல்லிகைத் தேன்கூடு. கொஞ்சம் ஒல்லியாக, அவனைவிடக் கொஞ்சம் நிறமாக இருந்தாள். அனாவசிய ஒப்பனைகள் இன்றி புதிதாகக் குளித்த செழுமையுடன் இருந்தாள். புருவ அலைகளுக்கிடையில் ஸ்டிக்கர் சூரியன் இறங்கிக் கொண்டிருக்க, மேலே சின்ன மேகமாக விபூதிக் கீற்று. பாடலின் நிரவல்களுக்கு ஏற்றபடி அவள் கண்டமும் முகத்தசைகளும் தென்றலாக அசைய, அவ்வப்போது சுருங்கி விரியும் நாசி மடல்களில் வசீகரமும் காதுகளில் வைரமும் தெரிந்தன. தம்புராவின் தந்திகளை மருதாணியால் சிவந்த நீளமான விரல்கள் மீட்டின. முதுகை நிமிர்த்தி கால்களைச் சம்மணமிட்டு அவள் அமர்ந்திருந்த பாங்கில் தன்னம்பிக்கையும் உயரமும் தெரிந்தன. கழுத்தில் தங்க நகையருவிகள் இறங்கிப் புடவையில் மறைய, கைகளில் பொன் வளையல்கள் சிணுங்கின.

தரையில் பரந்திருந்த இரட்டை அகலப் பட்டுப் பாயில் அவளுக்கு இருபுறமும் அவள் அம்மாவும் அவன் அம்மாவும் அமர்ந்திருக்க, அவர்கள் முன் வெள்ளித்தட்டில் மலர்களும் பழங்களும் தாம்பூலமும் நிறைந்திருக்க, பின்னால் அவள் தங்கையும் இரண்டு மாமிகளும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனும் அப்பாவும் அவள் அப்பாவும் சோபாவில் அருகருகே அமர்ந்திருக்க, அவனுக்கு வலப்புறம் ஸ்டூல் நுனியில் உட்கார்ந்திருக்கும் அவள் தம்பி வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க, சுவரில் இருந்த ஸ்வாமி அலமாரியில் சிவபெருமான் காளை வாகனத்தில் குடும்ப சமேதரராக எழுந்தருளியிருக்க, அவர்முன் சிறிய வெள்ளி விளக்கின் ஜோதி அசையாமல் தூண்போல் ஒளிர்ந்திருக்க, ஆங்காங்கே சொருகியிருந்த ஊதுபத்திகளின் சுகந்தம் ஹால் முழுவதும் வியாபித்திருக்க,

விஜயாவின் குரல் அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றிலும் கலந்து, நிறைந்து, ஒவ்வொரு மனதாக வலம்வந்தது.

"அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
அடிமுடி காணா நெடுமலை வாண
அகில புவன பரிபாலா சகல வரகுண விஷாலா!"

குரலின் அழுத்தத்தில், தெளிவில், வார்த்தைகள் உயிர்ப்பிக்கப்பட்டுக் காற்றில் மிதந்தன. மீண்டும் மீண்டும் அவள் அவற்றை அழைத்து மெருகூட்டி அனுப்பியபோது புதுப்புது அர்த்தங்கள் சேர்ந்துகொண்டன. அறிந்தோ அறியாமலோ அவள் அந்த வரிகளில் அப்பாவின் ’கேரக்டர்’-ஐ சிறைப்படுத்திவிட்டது வியக்க வைத்தது.

ஒருமுறை---ஒரே ஒருமுறை---அவள் விழிகள் உயர்ந்து அவன்மீது நிலைத்துப் பின் தாழ்ந்து ஒதுங்கின.

"அறியேன் | சின்னஞ்சிறியேன் உனக்கனந்தம் | தண்டனிட்டேன்...
அபராதங்கள் முழுதும் | க்ஷமித் தருள்வாய் | கைகும்பிட்டேன்...
பரிவாய் உன்சொல் | கனவில்கொண்டு | பிழைக்கும் வழி தொட்டேன்...
பேதை யாகிலும் உன் | பாதம் பணியும் என்...
பெருகிய பவ வினைதீரும் | குருபரனே கருணைக் கண்பாரும்..."

அந்த ஒரு பார்வையில் அவனை அவளுக்குப் பிடித்துவிட்டதும் அவனது பதில் வேண்டுவதும் தெரிந்தது. அந்த வேண்டுதலை வெளியிட்ட வரிகளில் தோய்ந்த குரலின் பணிவும் விஸ்வாசமும் நெகிழவைத்தது. அந்த வேண்டுதல் அவனிடமா அல்லது அப்பாவிடமா என்ற ஐயமும் எழுந்தது. இந்த சமயத்திற்காக இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருந்த விதத்தில் அவளது தைரியமும் சுதந்திர மனப்பான்மையும் குடல்வலிவும் புலப்பட, அவனுக்கு அவளைப் பிடித்துவிட இவையே போதுமானதாக இருந்தன.

பாடலைக் கண்மூடி ரசித்தாலும் அவளது துணிவை அப்பா எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற கவலை மெல்லத் தலைதூக்கியது. அன்று காலை அவன் அம்மாவிடம், "உங்களுக்குப் பெண் பிடிச்சிருந்தா நிச்சயம் பண்ணிடலாம். எனக்குன்னு தனி அபிப்ராயம் கிடையாது. அதாவது என்னைப் பொறுத்தவரையில் ஓகேன்னு எடுத்துக்கோங்கோ. இன்னொரு முறை நான் பெண்பார்க்க வரமாட்டேன். அப்படி உங்களுக்குப் பிடிக்கலைன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்", என்று கூறியது நினைவுக்கு வர, அவள் கண்கள் மீண்டும் அவனை நோக்கி உயர்ந்தபோது அவனுக்கு அந்தப் பாடலின் செய்தி புரிந்தது.

"இதுமாதிரி விட்டேத்தியாப் பேசறதில் அர்த்தமில்லை. இது உன்னுடைய கல்யாணம். உன் சம்மதம்தான் முக்கியம். நல்ல, பெரிய இடம். பொண்ணைப் பொறுத்தவரை ஒண்ணும் குறைசொல்ல முடியாது. இப்பத்தான் படிப்பை முடிச்சிருக்கா. அவாளுக்கும் இதுதான் முதல் முயற்சி. அப்பா ரெண்டு வருஷம் திண்டுக்கல்ல வேலை பார்த்தபோது அவளோட அப்பா, கூட வேலை பார்த்திருக்கார். நம்மாத்துல சம்பந்தம் பண்றதை பாக்யமா நினைக்கறா."

"அதான் பெரியவாளாப் பார்த்துப் பேசி முடிவு பண்ணிட்டேளே? அப்புறம் இதுல நானோ அவளோ சொல்றதுக்கு என்ன இருக்கு?"

"அதெப்படி? என்னதான் பெரியவா பார்த்தாலும் பொண்ணுக்கும் பையனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்க வேண்டாமா? நீ ஒரே பொண்ணைத்தான் பார்ப்பேன்னு நினைக்கற மாதிரி அவளும் நினைக்கலாம் இல்லையா? மனசுங்கறது எல்லார்க்கும் ஒண்ணுதானே?"

அவன் நினைத்ததை அவள் நினைப்பது புரிந்தது, அந்தப் பாடல் வாயிலாக.

"ஶம்போ... மஹாதேவா!
சரணம் ஶ்ரீ காளதீசா,
ஶம்போ... மஹா... தேவா...!"

என்று இறுதியாக அவள் அப்பாவின் பெயர்விளித்து அவரை ஒருகணம் பார்த்துவிட்டுப் பாடலை நிறைவு செய்தாள்.

பாடல் முடிந்ததும் அப்பா மூச்சை ஆழமாக உள்ளிழுத்துவிட்டுக் கண்களைத் திறந்து, "குழந்தை ரொம்ப நன்னாப் பாடறா", என்றார்.

"எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்", என்றாள் அவள் அப்பா.

இதற்குள் அம்மா எழுந்துகொண்டு புடவைத் தலைப்பைப் போர்த்தியபடி அப்பாவின் அருகில் வந்துநிற்க, அவள் தம்புராவை வைத்துவிட்டு எழுந்து மீண்டும் ஒருமுறை அவர்களை நமஸ்கரிக்க, அப்பாவும் எழுந்துநின்று அவள் நமஸ்காரத்தை ஏற்று, "சகல சௌபாக்யங்களோட சௌக்யமா இருக்கணும்மா!", என்று ஆசிர்வதிக்க, எல்லோரும் குறிப்பறிந்து விலக, அவர்கள் தனியாக விடப்பட்டனர்.

சமையல் அறையில் பாத்திரங்களைக் கையாளும் ஒலிகளுக்கு நடுவில், "ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்து டிஃபன் கொண்டுவை பத்மா. அவா டிஸ்கஸ் பண்றா", என்று அவள் அப்பா கிசுகிசுப்பது கேட்டது.

அப்பா அவனைப் பாசத்துடன், பரிவுடன், பெருமையுடன் பார்த்து, "ராஜா, உன்னோட ஒப்பீனியன் என்ன?" என்றார்.

"எனக்குப் பிடிச்சிருக்கு."

"நிச்சயத்துக்கு நாள் பார்த்துடுங்கோ", என்றார் அப்பா, அவர்களிடம் இருந்து விடைபெறும் முன்.

கல்யாணத்துக்குப் பின் காதலிப்பது எளிதாக இருந்தது. சுகமாக இருந்தது.

மனைவியே காதலியாகிப் போனதும் மனதின் சஞ்சலங்கள், சபலங்கள் மறைந்து---அல்லது மறந்து---போயின.
மேனியைப் படித்தபின் மனதைப் படிப்பது சாத்தியமானது.

பிரம்மச்சரியக் காதலின் கவலையும் அவசரமும் அச்சமும் அனிச்சயமும் அனாதரவும் அறவே நீங்கி இப்போது அந்த இடங்களை நிம்மதியும் நிதானமும் நிர்பயமும் நிர்விகல்பமும் பிடித்துக்கொள்ள அவர்களது இல்லற வாழ்க்கை இனிதே தொடங்கி நல்லறத்தின் வழிப்பட்டு நலமாய் நடந்தது.

’அன்பும், மதிப்பும் வேட்கையும் இரண்டறக் கலந்திருப்பதே காதல்’ என்று அவன் டைரியின் முதல் பக்கத்தில் எழுதியிருப்பது இப்போது கணவன் மனைவி இருவருக்கும் சாத்தியம் ஆனது.

மாதங்களடைவில் விஜயா அவன் டைரியில் நிறைய இடத்தைப் பிடித்துக் கொண்டாள். பாஸ்கரைப் போல் எப்போதும் சுத்தமாக, புதிதாகத் தோன்றும் அவள் அவனுக்கு வற்றாத ஆச்சரிய நதியாய் விளங்கினாள். அவளது கர்நாடக சங்கீதப் புலமை அவனையும் கர்நாடக சங்கீதம் கேட்கவைத்தது; ரசிக்கவைத்தது. அவளும் அவனது இலக்கிய ஈடுபாடுகளில் ஆர்வம் காட்டி, அவன் பரிந்துரைத்த ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் படித்து (தமிழ்க் கதைகளுக்கும் கவிதைக்கும் அவள் ஏற்கனவே நல்ல ரசிகையாக இருந்தாள்) அவற்றை அவனுடன் விவாதிக்கும் அளவு வளர்ந்தாள். விரைவிலேயே அம்மாவின் மேற்பார்வையில் அவள் தன் நளபாகத்தை மேம்படுத்தி, வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு இதமாகவும் சமைக்கக் கற்றுக்கொண்டாள்.

எல்லாவற்றையும் விட, அவளை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிகவும் பிடித்துப் போனது. அம்மா தன் கேலிப் பேச்சுகளை மிகவும் குறைத்துக் கொண்டுவிட, அப்பாவும் அவளுடன் எளிதாகப் பழகி அவளைப் பாசத்துடன் கவனித்துக் கொள்ள, மகள் இல்லாத வீட்டில் மாற்றுப் பெண் மகளானாள்.

கல்யாணமான மறு வருடமே அவனுக்கு மதுரையில் ஒரு புகழ்மிக்க கல்லூரியில் வேலை கிடைத்துவிட, ஊரிலிருந்து தினமும் மதுரை சென்றுவர முடிந்ததால் எல்லோரும் ஒன்றாகக் குடும்பம் நடத்த முடிந்தது.

அனுவும் ஜெயந்தியும் மாலதியும் கௌசல்யாவும் இப்போதெல்லாம் வெறும் கதைப் பாத்திரங்களாகிப் போக, அவனுக்குத் துணைதேடும் போட்டியில் அப்பா அவனுக்கு வாய்ப்பே அளிக்காமல் வென்றுவிட்ட ஏமாற்றம் மட்டும் மனத்தின் அடியில் வண்டலாய் இறங்கியிருந்தது.

அவர் அமைத்துவிட்ட ’ரெகார்ட்’-ஐ இனி அவனது அடுத்த தலைமுறை வம்சம்தான் உடைக்க முடியும் என்று புரிந்தது.

அவன் இவ்வளவு காலம் போற்றிப் பாதுகாத்து வந்த டைரியின் அந்தரங்கம் இனி அவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அதை விஜயாவும் படிக்கவேண்டும், அதை அவள் படிப்பது அவனைப் பற்றி அவளும் அவளைப் பற்றி அவனும் மேலும் புரிந்துகொள்ள உதவும் என்று தீர்மானித்து அந்த அக்கினிப் பரீட்சைக்குத் தயாரானான்.

*** *** ***
[அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுபெறும்.--ரமணி]

ரமணி
16-04-2013, 01:09 AM
பயணம்: நாவல்
ரமணி
30


ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
---மஹாகவி பாரதியார், புதுமைப் பெண் 4

இரண்டு நாட்கள் உட்கார்ந்து அவன் டைரியின் இரண்டு ’வால்யூம்’-களையும் ஒரே மூச்சில் படித்து முடித்த விஜயாவின் முதல் ’ரியாக்*ஷன்’ ஒரு கேள்வியாக வெளிப்பட்டது.

"இதென்ன டைரியா, சுயசரிதமா, முன்கதைச் சருக்கமா, நாவலா அல்லது கற்பனை விரவிய வரலாறா?"

"வாழ்க்கை" என்றான் ஒற்றைச் சொல்லில்.

"எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."

"தாங்க்யு விஜி."

"உங்களை அல்ல. உங்கள் கதையை."

"என்ன சொல்ற விஜி?"

"கதை முழுக்க உங்கள் சுயநலம்தான் பிரதானமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் நான். என் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள்! மத்தவாள்லாம் அப்புறம்தான்."

"என்னுடைய டைரியில் என்னைப்பற்றி தானே விஜி பிரதானமா எழுதமுடியும்?"

"அதுக்காக மத்தவாளைக் குறை சொல்றதுக்கும் ஓர் அளவு வேண்டாம்? உங்க அப்பா அம்மாவை இப்படித்தான் மிகைப்படுத்தி வரையறதா? They look like caricatures, not portraits."

"நோ, விஜி. Certainly not."

"எனக்கு அதிகம் ரிசெம்ப்ளன்ஸ் தெரியலை. Specially about your mother. கல்யாணத்துக்கு முன் உங்க டைரியைப் படிச்சிருந்தா நான் உங்கம்மாவைப் பத்தி என்னென்னவோ நினைச்சு பயந்திருப்பேன். உங்கப்பாகூட எனக்கு அவ்ளோதூரம் ஒரு இன்ட்ரோவர்ட்டாத் தெரியலை."

"நான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன் விஜி, கல்யாணமான புதுசுல. மானுடம் என்பது மனதைப் பொறுத்தது. ஒரு மனிதனைப் பற்றி---அது ஆணோ பெண்ணோ---மற்றவர்கள் என்ன நினைக்கறாங்களோ அதுதான் அவன். அல்லது அவள். தன்னுடைய நினைப்பும் மற்றவர்களுடைய நினைப்பும் ஒத்துப் போகும்போது மனிதன் உயர்ந்தவனாகிறான். ஆனால் இது நூத்துல ஒருத்தருக்குத்தான் சாத்தியம். அப்பாம்மாவைப் பொறுத்தவரைக்கும் நீ மனுஷாளைப் பார்க்கறதைவிட மனசைப் பார்க்கக் கத்துண்டிருக்கே."

"இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேல பழகியும் உங்களுக்கு அவர்கள் மனசு பிடிபடலையா? Then something is wrong with you!"

"Impressions, விஜீ! நான் அவர்கள் மனசைப் புரிஞ்சுக்க முயலாமல் இல்லை. ஆனால் அந்த முயற்சி அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. என்னுடைய துணை தேடும் முயற்சிகள்ல அவர்களிடமிருந்து எனக்கு ஒரு சாதகமான ரெஸ்பான்ஸ் அல்லது கைடன்ஸ் கிடைக்கலையே?"

"உங்க அப்பா அம்மா இருக்கும்போது உங்களுக்கென்ன தனியாத் துணை தேடும் முயற்சி? அதுவும் சின்ன வயசிலேர்ந்தே?"

"That's a good question. எனக்கு இதுக்கு சரியா பதில் சொல்லத் தெரியலை. ஒருவேளை என்னுடைய இயற்கை அப்படி இருந்திருக்கலாம். அல்லது நான் வளர்ந்த சூழ்நிலையில் என்னுடைய உள்மனசில தோழமையின் பற்றாக்குறையால I might have felt insecure."

"பேர் என்னவோ ராஜாராமன். குணத்தில் கிருஷ்ணன்."

சிரித்தான்.

"உங்களுடைய தேடல் முடிஞ்சுபோச்சா அல்லது இன்னும் தொடருமா?"

"இன்னும் தொடரும்."

"என்னது?..."

"ஆமாம் விஜி. ஆனால் எனக்காக அல்ல. இன்னும் நாலு மாசத்தில் நமக்குப் பிறக்கப் போற ப்ரேம் அல்லது ப்ரீதிக்காக அந்தத் தேடல் தொடரும்."

"இப்பவே பேர் வெச்சாச்சா? குழந்தையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது தன் துணையைத் தானே தேடிக்கொள்ளும்! அப்பா மாதிரிதானே குழந்தையும் இருக்கும்?"

"ஏன், அம்மா மாதிரி இருக்கலாமே?"

"என்னை மாதிரி ஏமாளியாகவா?"

"என்ன சொல்ற விஜி? நான் உன்னை ஏமாத்திட்டேன்னு நினைக்கறயா? அல்லது நீயும் கல்லூரி வயதில காதலிக்கலையேன்னு வருத்தப்படறயா?"

"யு ஆர் டீஸிங் மி. நீங்க காதலிச்சா உலகமே காதலிக்கணும்னு ஒண்ணும் சட்டமில்லை."

’கௌசல்யா உன்னை விரும்பறான்னா நீயும் பதிலுக்கு அவளை விரும்பணும்னு ஒண்ணும் சட்டமில்லை.’ என்று அப்பா சொன்னது நினைவில் பளிச்சிட, "எங்கப்பா மாதிரியே பேசறே விஜி. அதுதான் அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்கு."

"அவருக்குப் பிடிச்ச அளவுகூட உங்களுக்குப் பிடிக்கலை போலிருக்கே?"

"கமான் விஜி! பொய் மட்டும் சொல்லப்டாது. கல்யாணமாய் இதுநாள் வரைக்கும் நான் என்னைக்காவது உன்னைப் பிடிக்காத மாதிரி நடந்துகொண்டேனா?"

"வெளிப்படையா இல்லை. ஆனால் உங்க உள்மனசில அனு, ஜெயந்தி, மாலதி, கௌசல்யாவுக்கெல்லாம் அப்புறம்தானே நான்? Now I know I rank low in your personal preference."

"It's not like that-னு புரிஞ்சுக்கோ விஜி! கல்யாணத்துக்கு முன் காதலிச்சது குற்றமில்லை, பாவமில்லை. அந்த சமயத்தில் நீ என் வாழ்க்கையில் குறுக்கிட்டிருந்தா உன்னையும் காதலிச்சிருப்பேன்! It's as simple as that. ஆனால் ஒண்ணு. நான் உன்னைக் காதலிக்கறேங்கற ஒரே காரணத்துக்காக எங்க அப்பா அம்மா உன்னை எனக்குப் பார்த்திருக்க மாட்டா. அட்லீஸ்ட், இப்ப எனக்கு அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. I love you Viji, with all my heart and soul! இந்த க்ஷணத்தில என்னைவிட அதிர்ஷ்டமானவன் உலகத்தில் யாரும் இருக்கமுடியாது. என்னைப் பார் விஜி! Do you love me?"

"நாட் யெட்", என்றாள் பொய்க் கோபத்துடன். "எனக்கு உங்களை இன்னும் சில கேள்விகள் கேட்கணும்."

"நல்லாக் கேள் விஜி."

"கல்யாணத்துக்கு முன் காதலிப்பது பாவமில்லை. ஆனால் காதலிச்சுக் கைவிடறது பாவமில்லையா? கௌசல்யா சரியாத்தான் சொன்னா, ’கல்யாணங்கறது ஆண்கள் சுயம்வரம்’னு."

"குட் லார்ட்! நான் ஒண்ணும் அவளைக் கைவிடலை. குடும்ப சிக்கல்களைத் தவிர்க்கவே நாங்கள் முழு மனசோட சம்மதிச்சு எங்கள் காதலைத் துறந்தோம். அவள் எழுதின லெட்டரைக் காட்டறேன், படிச்சுப்பார். You will be convinced."

"கௌசல்யாவுக்குக் கல்யாணம் ஆய்டுத்தா?"

"இன்னும் இல்லை. அவள் காலேஜ் ஸ்பான்சர் பண்ணி இப்ப கலிஃபோர்னியா யுனிவர்சிடில டாக்ரேட் பண்றா."

"அனு?"

"அனு, ஜெயந்தி, மாலதி பற்றித் தெரியாது."

"அப்ப பாஸ்கர் மாலதியைக் கல்யாணம் பண்ணிக்கலையா? என்னவோ பெரிசா ப்ரபோஸ்லாம் பண்ணினாரே? எல்லா ஆண்களுமே இப்படித்தான் போலிருக்கு."

"பாஸ்கர் பாவம் விஜி! வீட்டில் ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பி, காதலிச்ச பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியலை. கல்யாணம் பண்ணிண்ட---அல்லது பண்ணிவைக்கப்பட்ட---பொண்ணும் ஒரே பிடுங்கல் டைப். அவனுக்கு இப்படி ஒரு சராசரி பொண்ணுதான் கிடைக்கணுமா?"

"அப்படீன்னா உங்க நண்பர்கள்ல யாரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கலை?" என்றாள் குரலில் கேலியுடன்.

"வசந்த் தவிர."

"வசந்த் ஒரு நண்பனாத் தெரியலையே? உங்க டைரியில அவர் ஒருதரம் தானே வரார்?"

"யு ஆர் ரைட். பாஸ்கர் அளவு அவன் எனக்கு நெருக்கமில்லை. ஆனால் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தான் குடும்பத்தோட."

"அவரோட வாழ்க்கை?"

"அவன் ரொம்ப சந்தோஷமா இருக்கான்."

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தி இருந்தா. கல்பனான்னு பேரு. காலேஜ்ல ரெண்டு வருஷம் எனக்கு சீனியர். கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் தான் காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிண்டா. அவள் இப்ப சந்தோஷமா இல்லை."

"எனக்குத் தெரிஞ்சு சில arranged marriages fail ஆகியிருக்கு."

டைரியின் ஒரு பக்கத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொன்னள்:

"காதலியே மனைவியாகிக் கசந்த வாழ்வும் உண்டு.
மனைவியே காதலியாகி மணந்த வாழ்வும் உண்டு.
ஆதலினால் காதல் செய்யத் தேவயில்லை உலகத்தீரே!"

அந்த வரிகளில் இருந்த கவிதையையும் கிண்டலையும் ரசித்தான்.

"வாழ்க்கைல எல்லாவிதமான சேர்க்கைகளும் சாத்தியம் விஜி."

"அதேதான் நானும் சொல்ல வரேன். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கணும். இப்படித்தான் மணவாழ்க்கை அமையும்னு என்னால் தீர்மானிக்க முடியாது."

"ஆனால் யாருடன் உன் மணவாழ்க்கை அமையணும்னு உனக்குத் தீர்மானிக்க முடியும் விஜி. உனக்கு இருக்கும் அந்த உரிமையை நான் மறுக்கக் கூடாது."

"என்னுடைய அந்த உரிமையைப் பயன்படுத்தறதால என் வாழ்க்கை சந்தோஷமா அமையும்னு உத்தரவாதம் இல்லை. உங்கப்பா சொன்ன மாதிரி, ’கல்யாணங்கறது அதைப் பண்ணிக்கறவாளோட சந்தோஷம் மட்டுமில்லை. அதில நேரடியா சம்பந்தப்பட்ட எல்லோரோட சந்தோஷமும் முக்கியம்.’ இந்த நோக்கம் பெரும்பாலும் காதல் கல்யாணங்கள்ல இருப்பதில்லை."

"அதுக்குக் காதலர்கள் மட்டுமே காரணமில்லை. அப்படிப் பார்த்தா தம் மகனுக்குத் தாம் பார்த்த பெண்ணை எத்தனை குடும்பங்கள்ல நல்லா வெச்சுக்கறாங்க?"

"இதுக்கெல்லாம் சைகலாஜிகல் காரணங்கள் இருக்கு. என்னைவிட உங்களுக்கு நல்லாத் தெரியும். என்னுடைய பாயின்ட், Marriage by choiceதான் சிறந்ததுன்னு சொல்லமுடியாது. There is no formula to make a marriage click,"

"Marriage by choice தான் சிறந்ததுன்னு நான் சொல்லவரலை. But it is preferable to marriage by chance."

"இருக்கலாம். அந்த ’சாய்ஸ்’ என்கிற உரிமையைப் பயன்படுத்த, பையனுக்கோ பெண்ணுக்கோ போதுமான அளவு மனமுதிர்ச்சி இருப்பதில்லை. பெற்றோர்களுக்கும் அந்த உரிமையில் பங்கு இருக்கணும்."

"என் டைரியில் நான் சொல்லியிருக்கற விஷயமே அதுதான் விஜி! பையனோ பெண்ணோ, காதலிக்கத் தலைப்படுவது இயற்கை. காதல் என்பது உன்னதமான சமூகம் அமைக்க இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம். அதைப் பெற்றோர் புறக்கணிக்கக் கூடாது. சரியான இடத்தில் ஊக்குவித்தும் தவறான இடத்தில் திருத்தியும் அதை நெறிப்படித்தறதுதான் அவர்கள் கடமை. கல்யாண விஷயத்தில் மனப் பொருத்தத்துக்குத்தான் முதல் இடம் தரணும். மனங்கள் பொருந்துவதற்கு மக்கள் பழகணும், பெற்றோர் கண்காணிப்பில்."

"பெற்றோர் கண்காணிப்பில் மக்களைப் பழவிடணும் என்பது ஒரு நல்ல பாயின்ட். இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அதற்கு நான் தயார்", என்று தன் வயிற்றைத் தொட்டுக் காட்டினாள். "ஆனால் சமூக மட்டத்தில் நீங்க விரும்பற மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரம் வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை."

அவனுக்கு அந்த நம்பிக்கை இருந்தது.

[நிறைவு பெற்றது]

*** *** ***