PDA

View Full Version : தொ(ல்)லை பேசி



arun karthik
02-02-2013, 03:43 PM
“ஹலோ... ராமு, நல்லா இருக்கியா?” தன் மகனை தொலைபேசியில் அழைத்தார் ரங்கராஜன்.

“இருக்கேன் இருக்கேன்” என்று ராமு கடிந்த வாறே பதில் கூறினான்..

“எங்கப்பா இருக்க?”

“ஆபீஸ்ல”.

“இன்னைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை ஆச்சே!“

“எங்க ஆபீஸ் லீவு இல்லப்பா. நானும் மேனேஜர் பாலு சாரும் சேர்ந்து தான் வொர்க் பண்ணிட்டு இருக்கோம்.”, என்றான் ராமு.

“சரி. உங்க அம்மாதான் உன்கிட்ட எதோ பேசனும்னு போல இருக்குன்னு சொன்னா. இரு அவ கிட்ட பேசு” என்றார் ரங்கராஜன்.

“சீக்கிரம் கொடுங்கப்பா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ”.

“ராமு, உன்ன பார்க்கணும் போல இருக்கு வீட்டுக்கு வாடா” என்று ஆசையாக அழைத்தாள் ராமுவின் அம்மா கனகா.

“இல்லம்மா. எனக்கு வேலை இருக்கு. வர முடிஞ்சா போன் பண்ணிட்டு வரேன்" என்றான் ராமு .

“சரிப்பா. உடம்ப பத்திரமா பார்த்துக்க. நான் வைக்கறேன்” என்று போனை துண்டித்தாள் கனகா.

“பார்த்தியாப்பா! கஷ்டப்பட்டு படிக்க வச்சு, ஒரு வேலையும் வாங்கி கொடுத்து,கல்யாணமும் பண்ணி வச்சு,வீட்டுக்கு வாடா பார்க்கணும்னு சொன்னா, இப்படி பொய் சொல்றான்.” என்று ரங்கராஜன் புலம்பினார், தனது வீட்டிற்கு வந்திருந்த,நெருங்கிய தோழனும், ராமுவின் மேனேஜருமான பாலுவிடம்.

முரளி
03-02-2013, 11:06 AM
சுருங்க சொல்லி விளங்க வைத்தல் ஓர் கலை என நான் நினைப்பதுண்டு. அது உங்களிடம் உள்ளது. மன சோர்வை, மகனின் உதாசீனத்தை அழகாக, அரை பக்கத்திற்குள்ளே, எதிர்பாராத திருப்பத்தோடு எழுதியுள்ளீர்கள். எனது வாழ்த்துக்கள்.

ரமணி
03-02-2013, 01:11 PM
வணக்கம் அருண் கார்த்திக்.

அரை பக்கத்தில் பொடி வைத்துக் கதை சொல்லும் கலை உங்களுக்கு இயல்பாய் வருகிறது. எனினும் கதையில் ஒரு சின்ன ஓட்டை: மானேஜர் பாலு தன் அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பது ராமுவுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி இருக்கும் போது அவருடன் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் தான் வேலை ஒன்றைச் செய்துகொண்டிருப்பது போல் சொல்வது பொருத்தமாக இல்லை. பாலு அப்பாவை சந்திருக்கப் போயிருப்பார் என்பது ராமுவுக்குத் தெரியாவிட்டாலும் அப்பா தொலைபேசியில் பாலுவை விசாரிக்கக் கூடும் என்னும் சாத்தியம் அவனுக்குத் தோன்றவேண்டும் அல்லவா?

இந்தக் கதைக்கு இப்படியொரு சஸ்பென்ஸ் தரலாம்: ராமு அப்பாவிடம் பேசி முடித்ததும் அப்பாவுக்கு ஒரு கால் வருகிறது மானேஜர் பாலுவிடம் இருந்து, ராமுவைப் பற்றி விசாரித்து!

அன்புடன்,
ரமணி

arun karthik
04-02-2013, 07:46 AM
பின்னூட்டத்திற்கு நன்றி.
ஒரு சில மகன்கள் இருக்கிறார்கள் . இது தனது தந்தைக்கு பொய் என்று தெரிந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்ளாதவர்கள் .

மும்பை நாதன்
01-09-2013, 04:52 PM
சுருக்கமான ஒரு கதையில் சொல்ல விரும்பியதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

ராமு பேசும் தொனியிலேயே ஒரு 'ஐ டோன்ட் கேர் ( I dont care ) ' என்கிற மனோபாவம் வெளிப்படுகிறது.

பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்

arun karthik
07-09-2013, 07:13 PM
மும்பை நாதன் பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...