PDA

View Full Version : திருக்குறள் உலகப் பொதுமறையா ?



M.Jagadeesan
23-01-2013, 02:20 AM
திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் "புலையர்" என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் "புண்" என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் "புலையர்" என்று திட்டுவது பொருத்தமன்று.
"புலால் மறுத்தல்" அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே "இறைச்சி உண்ணக்கூடாது" என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.
மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் "மது கூடாது" என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.
புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி


மேல்கண்ட கருத்துக்களை திரு ந. முருகேச பாண்டியன் அவர்கள், " திருக்குறள் உலகப் பொதுமறையா ? " என்ற தமது கட்டுரையில் கேட்டுள்ளார்.
" ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் " என்ற கருத்து திருக்குறளுக்குப் பொருந்தாது. திருக்குறளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருக்குறளை முழுவதும் படிக்கவேண்டும். திருக்குறளை பலமுறைப் படிக்கவேண்டும்; மீண்டும், மீண்டும் படிக்கவேண்டும். முதல் தடவை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள், இரண்டாம் முறை படிக்கும்போது தோன்றும். இரண்டாம்முறை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள் மூன்றாம்முறை படிக்கும்போது தோன்றும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும், புதிய கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருக்கும் அறிவுக்கேணி திருக்குறளாகும். " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்பது திருக்குறளுக்கே மிகவும் பொருந்தும்.

ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (செங்கோன்மை-550 )

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. ( கொல்லாமை- 327 )

இவ்விரண்டு குறள்களும் கருத்தால் முரண்பட்டு நிற்பதுபோல் தோன்றும். ஆனால் முரண் நம்மிடம் உள்ளதேயன்றி , வள்ளுவரிடம் அல்ல. முன்னது நாடாளும் வேந்தனுக்குச் சொல்லப்பட்ட நீதி; பின்னது பற்ற்ற துறவிக்குச் சொல்லப்பட்ட நீதி. எனவே ஒவ்வொரு குறளையும், அதன் பின்புலத்தை மனதில்கொண்டே ஆராயவேண்டும்.

திருக்குறள் உலகப்பொதுமறை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. திருக்குறளை எழுத்தெண்ணிப் படிப்பார்க்கு இவ்வுண்மை தெற்றென விளங்கும்.

A Thainis
23-01-2013, 01:27 PM
திருக்குறள் ஒரு உலக பொதுமறையா? என்ற ந. முருகசே பாண்டியன் எழுப்பிய கேள்விகளுக்கு தரமான, ஏற்க்கதக்க, உண்மையான கருத்துக்களை தெளிவாக விளக்கியுள்ளார் ஜெகதீசன் அவர்கள், வாழ்த்துக்கள். சாதி, சமயம், மொழி, இனம், நாடு, அனைத்தும் கடந்து வாழ்வியல் உண்மைகளை ஓங்கி ஒலிப்பது குறளே, குறளுக்கு நிகர் குறளே.

M.Jagadeesan
23-01-2013, 03:48 PM
A. Thainis அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

முரளி
24-01-2013, 05:07 AM
மிக அழகான அலசல். பாராட்டுக்கள் ஜெகதீசன் ஐயா. திரு ந. முருகேச பாண்டியன் அவர்களின், " திருக்குறள் உலகப் பொதுமறையா ? " எனும் கேள்விக்கு ஆணித்தரமான தெளிவான பதில் கொடுத்திருக்கிறீர்கள்.
ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும்.

ஆனால் முரண் நம்மிடம் உள்ளதேயன்றி , வள்ளுவரிடம் அல்ல.

திரு ந. முருகேச பாண்டியன் அவர்களின் கேள்வி வேண்டாத ,தேவையற்ற சர்ச்சை போல தோன்றுகிறது. உங்கள் பதிலில் அழுத்தம் தெரிகிறது. எனக்கு தெரியாத விஷயத்தை புரிய வைத்ததிற்கு நன்றி. .

M.Jagadeesan
24-01-2013, 05:14 AM
முரளி அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

கும்பகோணத்துப்பிள்ளை
24-01-2013, 11:44 AM
" அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்பது திருக்குறளுக்கே மிகவும் பொருந்தும்.
சரியான வார்த்தைகள்.
யானையின் காதுகளை முறமென்று
தடவியறிந்து கொண்டார் போன்று உள்ள வாதங்களை விலக்குவோமாக

'உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்' எனும் அபிராமி பட்டரின் வாக்கிற்கினங்க

செந்நாப்போதார் மொழி எந்நாட்டாருக்கும் அறமே! என உணர்வுடையோர் மதிக்கத்தவறார்.

இப்படியாக பொருள்கொள்ளலாமே!

கொல்லான் - கொலைகாரர்களிடையே வாழ்ந்தாலும் கொலைத்தொழிலை விட்டொழிக்ககூடிய மனஉறுதியள்ள ஒருவனை
புலாலை மறுத்தானை - புலால் புசிக்கும் வழக்கமுடையவன் நந்நலமெனக்கருதி மனஉறுதியுடன் மறுக்க முடிந்தவனை
எல்லா உலகும் தொழும் எனக் கொள்ளலாமே.

வித்தியசபடுத்தமுடிந்தவர்களெல்லாம் வித்தியாசமானவர்களே!
சொல்லுபவையைவிட சொல்லப்பட்டவையையே மேம்பொருளாகக்கொள்ளவேண்டும் {உட்பொருளாக}!