PDA

View Full Version : ஔவையின் மூதுரை



ஜானகி
21-01-2013, 03:15 AM
என்றோ ஔவைப்பாட்டி சொன்ன மூதுரைகள் இன்றும் நமக்கு வழிகாட்டியாக உள்ளன.... உதாரணத்திற்குச் சில.....

அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி

எடுத்த கர்மங்களாகா- தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர் மரங்களெல்லாம்

பருவத்தாலன்றிப் பழா.


என்னதான் அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஒவ்வொன்றும் நிறைவேறக்கூடிய சமய சந்தர்ப்பம் வாய்த்தாலன்றிக் கைக்கொண்ட எந்தக் காரியமும் முடிவதில்லை !

கிளைகள் விட்டு நெடிது உயரும் மரங்கள், எவ்வளவுதான் பெரியதாக விளங்கினாலும், அவையெல்லாம் காய்க்கும் பருவம் வந்தாலன்றிப் பழுப்பதில்லை !


பண்டு முளைப்ப தரிசியே யானாலும்

விண்டுமி போனால் முளையாதாம்- கொண்டபேர்

ஆற்றலுடையார்க்கும் ஆகா தளவின்றி

ஏற்ற கருமஞ் செயல்.


நெல்லில் உள்ள உமி நீங்கிவிட்டால் அரிசி முளைக்காது.

அதுபோல, பெரும் ஆற்றல் வாய்ந்த திறமைசாலியானாலும், பக்கபலம் இல்லாவிட்டால், அவர்கள் எடுத்துக்கொண்ட காரியம் சுலபமாக முடிவதில்லை.

M.Jagadeesan
21-01-2013, 08:18 AM
திருக்குறளுக்கு அடுத்தபடியாக என்னைக் கவர்ந்தது ஒளவையின் பாடல்களே. தினமும் ஒரு பாடலை , உரையுடன் தந்து வரவும். ஜானகி அவர்களுக்கு நன்றி

ஜானகி
22-01-2013, 12:00 AM
மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல் சிறியர் என்றிருக்க வேண்டா- கடல் பெரிது

நன்னீருமாகாது அதனருகே சிற்றூறல்

உண்ணீருமாகி விடும்

தாழம்பூவின் மடல் பார்வைக்கு மிகப் பெரியதாகத் தோன்றும் மகிழம்பூவோ பார்வைக்கு மிகச் சிறியதாகத் தோன்றினாலும், அதன் மணம் மிக இனிமையாக இருக்கும்.

ஆரவாரமான கடல் பார்வைக்கு மிகப் பெரிதுதான் ; ஆனால் அதன் உப்புநீர் குளிப்பதற்குக்கூட பயன்படாது.

அதன் கரையருகேயுள்ள சிறு மண்குழியின் ஊற்றுநீரோ குடிக்கவும் பயன்படும்.

ஆகவே எவரையும் உருவத்தை மட்டும் பார்த்து எடைபோடாதே.

ஜானகி
23-01-2013, 12:27 AM
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்

அன்றி அது வரினும் வந்தெய்தும்- ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினு நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்


ஒன்றைநினைத்தல், அது ஒழிந்துபோய் வேறுஒன்று ஆகிவிடும்; அல்லது அது வந்தாலும் வந்துவிடும்

ஒன்றை நினைப்பதற்குமுன் அது நம்முன்னே வந்து நிற்கும்....

எல்லாம் இயற்கைனூடே எம்மை ஆட்டுவிக்கும் இறைவன் செயல் !

பயனைக் கருதாமல், விளைவுகளைப் பொருட்படுத்தாமல் செயல்படுக.

M.Jagadeesan
23-01-2013, 01:33 AM
" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை " என்ற கண்ணதாசனின் வரிகள் ஈண்டு நினைவுக்கு வருகிறது.

ஜானகி
24-01-2013, 12:33 AM
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றாற் போகா- இருந்தேங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரந் தாநினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.


பொருந்தி வராதவைகளை எவ்வளவு பிரயாசைப்பட்டு வருந்தி அழைத்தாலும் வருவதில்லை;

பொருந்தி இருப்பவைகளைப் போ என்றாலும் போவதில்லை.

விரும்பும் இன்பம் வருவதுமில்லை; வேண்டாத துன்பம் போவதுமில்லை.

இதை நினைத்து நினைத்து ஏங்கி நெஞ்சம் புண்ணாகி வாழ்நாள் முழுவதும் சிந்தித்து மாய்வதே மனிதன் தொழிலாகிவிட்டது.

M.Jagadeesan
24-01-2013, 06:35 AM
ஒட்டுவதுதான் ஓட்டும்; நாம் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும்; அவ்வளவையும் நம் அனுபவிக்கமுடியாது. ஒளவையின் நீதி உணர்ந்து போற்றத்தக்கது.

கும்பகோணத்துப்பிள்ளை
24-01-2013, 11:06 AM
என்னத்ததான் எண்ணைய தடவிண்டு தரையில உருண்டாலும் ஒட்ற மன்னுதானே ஒட்டும்!

ஜானகி
25-01-2013, 12:03 AM
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நா நாழி - தோழி

நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம்

விதியின் பயனே பயன்.


ஆழ்கடலில் ஆழமாக அமுக்கி முகந்தாலும், ஒருபடிப் பாத்திரம் நான்குபடி நீரைக் கொள்ளாது.

அதுபோல,பெண்களுக்கு, பொருளும், கணவனும் கிடைத்தாலும், அவரவர் விதியாகிவிட்ட சுபாவப் போக்கைப் பொறுத்தே எதையும் அனுபவிப்பார்கள்.

ஜானகி
26-01-2013, 12:18 AM
எழுதியவாறே காண் இரங்கு மடநெஞ்சே

கருதியவாறாமோ கருமம்- கருதிப் போய்க்

கற்பகத்தைச் சார்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா ஈந்ததேல்

முற்பருவத்திற் செய்த வினை


எந்தக் காரியமும் நினைத்தவுடன் நினைத்ததுபோல முடிந்துவிடுவதில்லை

எல்லாம் கொடுக்கும் கற்பக மரத்தைத் தேடிச் சென்றாலும் அது எட்டிக்காயைக் கொடுப்பதுண்டு.

எல்லாம் முன் வினைகளைப் பொறுத்தது.

ஜான்
26-01-2013, 12:36 AM
முன்வினைப் பயன் என்பது ஔவையின் பாடல்களில் சற்று அதிகமாகவே சொல்லப் பட்டுள்ளதோ?

ஜானகி
27-01-2013, 01:29 AM
வினைப்பயனை வெல்வதற்கு வேதமுதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை- நினைப்பதனைக்

கண்னுறுவதல்லாற் கவலைப்படேல் நெஞ்சே மெய்

விண்ணுறுவார்க்கில்லை விதி


செயலின் பயனை வெல்வதற்கு வேதம் முதலான நூல் அனைத்திலும் எந்த உபாயமும் இல்லை.

மனமே கவலைப் படாதே !

நம் நினைப்பைப் போலக் கண்ணில் படுவதெல்லாம் பலவித பாவனைகளாகத் தோன்றுமே தவிர, வெட்டவெளியை நோக்கி நிற்கும் உண்மையான அறிவாளிகளுக்கு விதி என்பது ஒன்றுமில்லை !

குணமதி
31-01-2013, 01:31 AM
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்

விண்டுமி போனால் முளையாதாம்- கொண்டபேர்

ஆற்றலுடையார்க்கும் ஆக தளவின்றி

ஏற்ற கருமஞ் செயல்.



ஆக தளவின்றி - ஆகா தளவின்றி என்று திருத்தவேண்டுமெனக் கருதுகிறேன்.

ஜானகி
31-01-2013, 01:54 AM
திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.