PDA

View Full Version : கவிதையில் யாப்புரமணி
16-01-2013, 01:32 AM
கவிதையில் யாப்பு
யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில மாதங்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.

இந்தத் தொடரைப் பிற தமிழ் மன்றங்களிலும் என் வலைப்பூவிலும், புனைந்து பதிந்து வருகிறேன். இங்கும் பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சி.

*****

ரமணி
16-01-2013, 01:38 AM
கவிதையில் யாப்பு
ரமணி

1. கடவுள் வாழ்த்து

கணபதி
(கலிவிருத்தம்)
வெண்துகில் உடுத்து வெளியெங்கும் வியாபித்து
வெண்ணிலா நிறத்துடன் ஆனந்த முகம்கொண்ட
ஓங்கார வடிவத்தை விக்னமறத் தியானித்துப்
பாங்காக நூலமையப் பாதம் பணிவேனே.

அவையடக்கம்
(வெண்டுறை)
கற்றறிந்தோர் நூற்பல சற்றேனும் கற்றதில்
பெற்றசில செய்தி மகிழ்ச்சி வியப்பினை
மற்றவரும் கண்டு மகிழ்ந்து பயன்பெற
உற்றதே ’கவிதையில் யாப்பு’.

1.1. செய்யுளும் கவிதையும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பே.

எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்து அடிகளில் சேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம்.

செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் பிரதி பதங்களே.

கவிதை என்பது கவினுற விதைத்தல்.
பாட்டு என்பது பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே.

மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம்.

மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் அதன்நார் என்றால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம்.

யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாகும் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் அதன்பொருள் மனமே.

கவிதையில் மனதைச் சொல்லும் போது
செய்யுள் யாக்கையைக் கவினுறச் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம்.

*** *** ***

M.Jagadeesan
16-01-2013, 03:22 AM
மரபுக்கவிதை என்னும் மங்கை நல்லாளைக் கைப்பிடிக்கும் முயற்சியில் , தோற்றுப்போன 65 வயது காளை நான். வேறு வழியின்றி புதுக்கவிதைப் பெண்ணை மணந்து, நானும் ஒரு கவிஞனாக மன்றத்திலே உலாவிக்கொண்டு இருக்கிறேன். தங்களுடைய கவிதைகள் மூலமாக யாப்பிலக்கணத்தைக் கற்கமுடியும் என்று நம்புகிறேன். தொடரட்டும் தங்களுடைய நன்முயற்சி

ரமணி
16-01-2013, 04:06 AM
வணக்கம் திரு. ஜகதீசன்.

புதுக்கவிதையில் ஜெயிப்பது இல்லைபோல் யாப்பில் தோற்பது இல்லை. யாப்பின் வரையைறைக் குட்பட்ட தெல்லாம் செய்யுளாகிவிடும். செய்யுள் ஊடகத்தில் கவிஞன் மனது சரிவர வெளிப்படின் செய்யுள் கவிதையாகும்.

புதுக்கவிதை எழுதுவதற்கும் மரபில் வழிகள் உண்டு: 'ரமணியின் கவிதைகள்' என்னும் திரியில் என் இரண்டாவது கவிதை/செய்யுள் நோக்குக.

இத்தொடரை ஆரம்பிக்கும் போது நானும் ஒரு குறள் வெண்பா கூட ஒழுங்காக எழுதமுடியாதவனாக இருந்தேன். யாப்பில் படிப்பதை ஒரு மாணவனின் 'பர்சனல் நோட்ஸ்' போலக் கவிதையில் பதிந்துகொள்வது உபயோகமாகவும் உற்சாகமாகவும் உள்ளது. யாப்பு பற்றிய என் கவிதைக் குறிப்புகளை நான் இங்குப் பதிவது என்னைப்போல், உங்களுக்கும் பலருக்கும் பயன்படும் என்பது என் நம்பிக்கை.

அன்புடன்,
ரமணி


மரபுக்கவிதை என்னும் மங்கை நல்லாளைக் கைப்பிடிக்கும் முயற்சியில் , தோற்றுப்போன 65 வயது காளை நான். வேறு வழியின்றி புதுக்கவிதைப் பெண்ணை மணந்து, நானும் ஒரு கவிஞனாக மன்றத்திலே உலாவிக்கொண்டு இருக்கிறேன். தங்களுடைய கவிதைகள் மூலமாக யாப்பிலக்கணத்தைக் கற்கமுடியும் என்று நம்புகிறேன். தொடரட்டும் தங்களுடைய நன்முயற்சி

ரமணி
16-01-2013, 04:10 AM
கவிதையில் யாப்பு
ரமணி

2. செய்யுள் உறுப்புகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பத்து நான்கில்
நல்லதோர் கவிதை மரபில் முனைவோர்
எல்லோரும் நாடும் அடிப்படை உறுப்புகள்
வல்லிதின் விரிப்போம் இந்நூல் தனிலே.

மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம், பயனும், மெய்ப்பாடு,
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்து, இயைபு,
புலனும், இழைபும் என்னும் இவையே
தொல்காப் பியம்தரும் முப்பத்து நான்கே.

2.1. செய்யுள் இயற்ற

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யெனவே.

பாவே செய்யுள் என்பது ஆகும்;
அந்தப் பாவும் அளவுடன் வருவது;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகுமே.

இந்த ஏழு உறுப்புகள் யாவும்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் கட்டுண் டுவரும்.
வழக்கு என்பது பேச்சு வழக்கு,
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுளே.

*****

ரமணி
16-01-2013, 06:04 AM
2.2. வரிகள் அமைக்க

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுள் அமைக்க உறுப்புகள் ஏழெனில்
வரிகள் அமைக்கப் பத்தும் இரண்டும்:
வனப்பு, தொடையே, மாட்டு, வண்ணம்,
அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
விருந்து, இயைபு, புலனே இழைபு
என்பன அந்தப் பத்தும் இரண்டுமே.

(குறள் வெண்செந்துறை)
வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு.

விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
பொருளால் பிணித்தல் மாட்டு என்பது.

வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
அம்மை என்பது சொற்களின் அமைதி.

எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
அமைய வருவதே அழகு என்பது.

தொன்மை என்பது பழமை மதிப்பு;
தோலால் வருவது செய்யுளின் பொற்பு.

விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும்.

வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
குறிப்பால் பயின்று சொல்வது புலனாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
மெல்லின இடையின மெய்கள் செறிந்து
பயிலும் நடையே இழைபு என்பதாம்.

2.3. பொருள் உணர்த்த

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
பொருளினை உணர்த்தப் பத்தும் மூன்றும்:
நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
கூற்றும், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
பொருள்வகை என்று பத்தும் மூன்றுமே.

நோக்கு என்பது கவியின் பார்வை,
செய்யுள் அணிகளால் கேட்டாரை ஈர்த்து
தன்னை நோக்கச் செய்யும் உறுப்பே.

திணை என்பது அகமும் புறமும்;
அகமாம் மனதின் வடிகால் என்பது;
புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
தொல்காப் பியத்தில் பொருளதி காரமே.

கைகோள் என்பது களவும் கற்பும்,
ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.
கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
கூற்று என்பது அவர்களின் பேச்சே.

சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
காலம் என்பது நேரமும் பொழுதும்;
செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே.

மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையே.

முன்னம் என்பது கவிஞன் மரபு;
எச்சம் என்பது கவிஞன் போக்கு.
துறை என்பது மரபைத் தழுவல்;
பொருள்வகை என்பது வேறு படுதலாம்.

2.4. யாப்பும் தூக்கும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
யாப்பு என்பது பாட்டின் செயல்வகை;
தூக்கு என்பது ஓசையில் இடைவெளி:
’பாக்களைத் துணித்து நிறுக்கும் உறுப்பு’. ... ... ... [தொல்.பொ.313]
தூக்கு என்பது தாளமும் குறிக்கும்.
தூக்கின் தாளம் ஏழு வகையிலே.
மரபு என்பது நிறுவிய வழக்கு;
தூக்கு என்பது மதிப்பினை ஆய்தலுமே.

செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கில்
பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
அழகு, தொன்மை, தோலும், விருந்து,
இயைபு, புலனும், இழைபும் என்று
இறுதி எட்டாக உள்ள உறுப்புகள்.
மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
பாக்கள் திரட்டிலும் உகந்து வருவதே.

2.5. யாப்பியல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேறொரு நோக்கில் பார்க்கும் போது
மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
இயைபு, இழைபு என்று மொத்தம்
பத்தும் நான்கும் அமைவது யாப்பியலாம்.

பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று.
மரபு என்னும் நிறுவிய வழக்கு
பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவதே.

2.6. மூவகை யாப்பு

(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.
அடிப்படை உறுப்புகள் ஏழு ஆகும்:
மாத்திரை, எழுத்து, அசையும் சீரும்,
அடியும், பாவும், அளவும் என்றே.

செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.
அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபே.

*** *** ***

முரளி
16-01-2013, 08:23 AM
மிக சிறந்த பணி. தொடரட்டும் தங்களுடைய நன்முயற்சி.


என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.
எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.

உங்கள் இலக்கை நீங்கள் அடைய நல் வாழ்த்துக்கள்.

ரமணி
17-01-2013, 01:07 AM
3. யாப்பு விவரணம்: ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிப்படை உறுப்புகள் முதலில் ஆய்வோம்.
செயல்வகை உறுப்புகள் பின்னர் பார்ப்போம்.
பொருள்வகை உறுப்புகள் இறுதியில் வருமே.

அடிப்படை உறுப்புகள் ஏழில் வருமே:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாகவே. ... [பார்க்க 2.1.,2.6.]

செயல்வகை உறுப்புகள் ஏழில் வருமே:
யாப்பும், தூக்கும், தொடையும், மாட்டும்,
வண்ணம், இயைபு, இழைபு என்றே. ... [பார்க்க 2.6.]

பொருள்வகை உறுப்புகள் பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்றே. ... [பார்க்க 2.3.,2.5.]

ஓசை:
மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்;
எனவே முதலில் ஓசையை ஆய்வோம்.
தளைகள் பயின்றிட வருவது ஓசை.
தளையால் ஓசையும் ஓசையில் தளையும்
என்றிவ் விரண்டும் ஸயாமின் இரட்டையரே.

இயல்பான ஓசையில் வருவது இயற்பா
இசையோடு சேர்ந்து ஒலிப்பது இசைப்பா
இயற்பா இயல்வது இலக்கண விதிகளில்
இசைப்பா இயல்வது சந்த லயங்களில்
இலக்கண விதிகளில் இயலும் இயற்பாவின்
இயல்பான ஓசையைத் தளைகள் குறிப்பினும்
இயற்பா ஓசையில் எழுத்தும் சீரும்
இணைந்தே செய்யுளின் ஓசை எழுமே.

3.1. அசையும் சீரும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை விவரணம் நோக்கும் முன்னர்
அசைச்சீர் உறுப்புகள் அடிப்படை தெளிவோம்.
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்து
ஒன்றாய் ஒலிப்பது அசையெனப் படுமே.
அசைகள் ஒன்றோ பலவோ சேர்ந்து
இசைந்து ஒலிப்பது சீரெனப் படுமே.

(குறள் வெண்செந்துறை)
குறிலோ நெடிலோ தனித்துவந் தாலோ,
ஒற்றடுத்து வந்தாலோ, நேரசை எனப்படும்.

’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
[பா/னு வந்/தாள்]

தனிக்குறில் அசைகள் பெரிதும் சீரின்
இறுதியில் வருமே: ’பானு, படகு’.

ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகும்.

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும், ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
[வழி/வகை அறிந்/திடாள்]

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சீர்களின் அசைகளைப் பிரிக்கும் போது
குறில்கள் தொடர்ந்து வந்தால்,
இருகுறில் இணைப்பினை
நிரையெனச் சேர்த்த பின்னரே,
ஏதும் தனிக்குறில் மீதம் இருப்பின்
நேரசை யதுவெனப் பிரிக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் தனிக்குறில்
சீரின் இறுதியில் வருவது காணலாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இதனால் ’மகளே’ என்பது ’மக/ளே’
என்றுதான் ஆகும்; ’ம/களே’ ஆகாது.
’வருவதறி’ என்பது ’வரு/வத/றி’ ஆகும்.
’வருவதறிகுறி’ என்பது ’வரு/வத/ரிகு/றி’ ஆகுமே.

அசைகள் இணைந்து வருகிற சீர்களில்
ஈரசை மூவசைச் சீர்களே செய்யுளில்
பெரிதும் பயின்று வருமென அறியலாம்.

ஈரசைச்சீர் இருவகை: மாச்சீர் விளச்சீர்.
நேரசை இறுதியில் வருவது மாச்சீர்
நிரையசை இறுதியில் வருவது விளச்சீர்.

மூவசைச்சீர் இருவகை: காய்ச்சீர் கனிச்சீர்.
நேரசை இறுதியில் வருவது காய்ச்சீர்.
நிரையசை இறுதியில் வருவது கனிச்சீர்.

அசைச்சீர் வகைகளின் வாய்பா டுகளும்
செய்யுளை அலகிடும் முறைகள் பற்றியும்
உரிய பகுதியில் அறியப் பெறலாம்.

*****

rema
17-01-2013, 03:01 AM
மிகவும் பயனுள்ள தொகுப்பு... தொடருங்கள் ரமணி !!

குணமதி
17-01-2013, 09:13 AM
வரவேற்கத்தக்க புது முயற்சி!

கருத்துக் கூறப் படிக்க வேண்டும்.
நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்துரைக்க விரும்புகின்றேன்.

ரமணி
18-01-2013, 12:55 AM
3.2. செய்யுள் ஓசை

(நிலமண்டில ஆசிரியப்பா)
ஓசை என்பது ஒலிகளின் இணைப்பு
இயலிசை நாடகம் மூன்றிலும் ஓசை
ஒலியின் ஊடக மாக வருவதே.

இயலெனும் உரைநடை வழக்கில் ஓசை
அலைகளின் இரைச்சலாய்க் குழம்பி வருவது
நாடக வழக்கிலும் உரைநடை போன்றே.

செய்யுள் வழக்கில் ஓசை இசைந்து
இயல்பாய்ப் பயின்று ஒருங்கே வருமே
அகவல், செப்பல், துள்ளல், தூங்கலென
தமிழில் செய்யுள் ஓசைகள் நான்கு.

ஆசிரியத் தளையிரண்டால் ஆவது அகவல்
வெண்டளை யிரண்டு வருவது செப்பல்
கலித்தளை யொன்றே வருவது துள்ளல்
வஞ்சித் தளையிரண்டு வருவது தூங்கல்
ஒவ்வோர் ஓசைக்கும் தளைகள் இருப்பினும்
செப்பல் தவிர வேறு ஒலிகளில்
பிறவகைத் தளைகள் விரவி வருமே.

அகவல் ஓசை வருவது அகவற்பா
அகவற் பாவே ஆசிரி யப்பா
செப்பல் ஓசை வருவது வெண்பா
துள்ளல் ஓசை வருவது கலிப்பா
தூங்கள் ஓசை வருவது வஞ்சிப்பா
நால்வகை ஓசையில் உள்வகை உண்டே.

3.3. அகவல் ஓசை

(நிலமண்டில ஆசிரியப்பா)
மயில்கத் துவதை அகவல் என்கிறோம்
அகவிக் கூறலால் அகவல் எனப்படும்
உயர்த்துக் கூறும் ஓசை அகவல்.
எடுத்தல் என்றும் அதனை அழைப்பரே.

செய்யுளின் அகவல் எடுத்தல் ஓசை
தடைகள் இல்லாது செல்லும் ஓட்டம்
நினைத்தது உரைத்தலாம் நினைத்த வாறே.

ஒருவரே உரைக்க மற்றவர் கேட்பார்
இருவர் உரையா டலாக இன்றி.
ஒருவரே சொல்வது அழைத்தல் எனப்படும்
அழைத்தலில் அகவல் ஓசை கேட்கும்!

தச்சு வேலை செய்வோர் பேச்சில்
போர்க்களம் பற்றிப் பாடுவோர் பாட்டில்
வருவது உரைப்போர் கூறும் சொற்களில்
தனக்குத் தானே பேசும் பேச்சில்
அகவல் ஓசை கேட்பது அறியலாம்.

அகவல் ஓசை பயின்று வருவது
ஆசிரியப் பாவெனும் அகவற் பாவில்.
ஆசிரியப் பாவில் ஆசிரி யத்தளை
வெண்டளை விரவிட அகவல் கேட்கும்.
மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
என்று வந்தால் ஆசிரி யத்தளை.

’மாமுன்நேர்’ என்றால் மாச்சீரைத் தொடர்ந்துவரும்
சீரின் முதலசையில் நேரசை இருக்கும்.
’முன்’னென்றால் எதிர்நோக்கி என்றுபொருள் கொள்க.

(குறள் வெண்பா)
மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

(நிலமண்டில ஆசிரியப்பா)
இவ்விரு தளைகளும் சீர்களின் இடையிலும்
அடிகளின் இடையிலும் தொடர்ந்து வருவது
செய்யுளின் ஓசைக்கு இன்றியமை யாததாம்.

அகவல் ஓசை பயிலுமோர் செய்யுள்:
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை*இ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
--அகநானூறு 149, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.

இன்னொரு உதாரணம் பாரதி தருவது:
வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
--மஹாகவி பாரதியார்

*****

ரமணி
18-01-2013, 01:57 PM
3.4. அகவல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அகவல் ஒலிவரப் புனைவது எளிது.
நாமும் அகவல் புனைந்திடு வோமா?
அகவல் ஓசையின் தேவைகள் என்ன?

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
அகவற் றளைகள் மட்டும் வரவே.
[அகவற் றளைகள்: நேரொன்று, நிரையொன்று ஆசிரியத் தளைகள்]

இங்ஙனம் புனைதல் இயலா தென்பதால்
நேர்முன் நிரையும் நிரைமுன் நேர்வரும்
ஈரசை இயற்சீர் வெண்டளை விரவி
அகவல் ஓசை சற்றே மங்கினும்
அகவற் பாவில் ஒலிக்கப் புனைவரே.
[மூவசைச் சீர்கள் இப்போது வேண்டாம்.]

அகவல் வெண்டளை விரவும் அடிகள்:
வாசலில் யாரெனப் பாரடி மகளே!
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
வா/சலில் யா/ரெனப் பா/ரடி மக/ளே!
வே/றுயார், உங்/கள் அறு/வை நண்/பரே!

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நிரை நேர்-நிரை நேர்-நிரை நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர் நிரை-நேர் நேர்-நிரை

தந்தையும் மகளும் அழைத்துக் கூவிட
அசைகள் யாவும் இசைந்து வந்திட
அகவல் ஓசை வருவது தப்புமோ?

தந்தையின் கூவல் கூர்த்த தொடர்ச்சி.
வாசலில் யாரெனப் பாரடி மகளே!
மகளின் கூவல் நின்று ஒலிப்பது,
அயர்ச்சி, அங்கதம், குரலில் தெரிய.
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த அடிகளை இப்படி எழுதினால்
வேறு ஓசைகள் விரவிடக் கேட்பீர்:
வாசலில் யாரென்று பார்த்திடுவாய் மகளே!
வேறுயார், உங்களது அறுத்திடும் நண்பரே!

அகவல் குறைந்து வினவல் ஆகிட
செப்பலும் துள்ளலும் சேர்ந்தே ஒலிக்க
அகவல் ஓசை மறைவது காண்பீர்.

கவிதையைச் செய்யுளாய்க் கிளைத்திடும் போது
கவினும் அழகும் அணியும் நோக்கி
மனதில் வருவதை வந்தபடி கொட்டாமல்
வனப்பு மிளிர எழுத முனைந்தால்
கவிதையின் விதைகள் படிப்போர் மனதில்
மெல்லத் துளிர்விட்டு நின்று நிலைக்கும்
மத்தாப் பாக எரிந்து மறையாது!

எனவே கவிதை முனையும் அன்பர்காள்!
செய்யுள் நன்கு புனையக் கற்பீர்.
தறியின் பாவு ஊடுதல் போலப்
பாவி நடப்பதே பாட்டென் றுணர்க.

ஓசை உணர்ந்து அசைகளைப் பிணைத்தால்
தளைகள் தாமே பொருந்தி வந்து
எழுதும் பாவகை எவ்வகை ஆயினும்
எழுதும் பாட்டு சிறப்பது நிச்சயம்.

*****

கும்பகோணத்துப்பிள்ளை
18-01-2013, 07:32 PM
எங்கே எப்படி எப்போது என்று காத்திருந்த எனக்கு இத்தளத்தில் நல்லதோர் வாய்ப்பிது!
ஆனாலும் இது மிகவும் வேகமாக இருக்கிறது எங்கே வாய்பை தவற விட்டுவிடுவேனோ என நினைக்கிறேன்.
விளக்கமும் எடுத்துகாட்டும் கூடவே விவாதமும் இருந்தால் இண்ணமும் எங்களுக்கு பயணுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்! தவறிறுந்தால் பொறுக்கவும்.

ரமணி
19-01-2013, 03:24 AM
வணக்கம் திரு. கும்பகோணத்துப் பிள்ளை யவர்களே!

இன்னமும் நாம் விளக்கமாக எதுவுமே பார்க்க ஆரம்பிக்கவில்லை! இதுவரை வந்தவற்றில் செய்யுளின் ஓசைபற்றியே அறிமுகம் செய்துகொள்கிறோம். எனவே இயல் 3.1-இலிருந்து வாசகர்கள் ஒருமுறைக் கிரண்டுமுறை படித்து விளங்கிக்கொண்டால் போதுமானது.

இந்தத் தொடரில் ஏராளமான பயிற்சிகள் வரும். ஆர்வலர்கள் அப்போதைக் கப்போதே பயிற்சிகளைச் செய்து இங்கு பதிந்தால் எல்லோர்க்கும் ஒரு motivation கிடைத்துப் பயனுள்ளதாக இருக்கும். அகவல் ஓசை பற்றிய முதலிரண்டு பயிற்சிகள் கீழே.

அன்புடன்,
ரமணி


எங்கே எப்படி எப்போது என்று காத்திருந்த எனக்கு இத்தளத்தில் நல்லதோர் வாய்ப்பிது!
ஆனாலும் இது மிகவும் வேகமாக இருக்கிறது எங்கே வாய்பை தவற விட்டுவிடுவேனோ என நினைக்கிறேன்.
விளக்கமும் எடுத்துகாட்டும் கூடவே விவாதமும் இருந்தால் இண்ணமும் எங்களுக்கு பயணுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன்! தவறிறுந்தால் பொறுக்கவும்.

ரமணி
19-01-2013, 03:33 AM
3.5. அகவற் பயிற்சி

நினைவிற் கொள்ள:
அகவல் இயற்றக் கீழ்வரும் தளைகள்.
மாமுன் நேரும் விளம்முன் நிரையும்
வருகிற ஆசிரியத் தளைகள் இரண்டு.
மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
வருகிற வெண்டளைகள் இரண்டு என்று.

பயிற்சி 1. எல்லாம் நேரசை: மா-முன்-நேர்

கீழ்வரும் வரிகளின் மூவசைச் சீர்களை
ஈரசைச் சீர்கள் ஆக்கி, நேர்முன் நேர்வர
எழுதி அகவல் கேட்பது அறிக.

கல்வியும் செல்வமும் வீரமும் கொண்டுள்ள
நல்லவர் இந்நாளில் கானலின் நீர்போல.

பயிற்சி 2. எல்லாம் நிரையசை: விளம்-முன்-நிரை

கீழ்வரும் உரைநடை வரிகளில் உள்ள
சீர்கள் எல்லாம் நிரை-நிரைச் சீர்களென
மாற்றி செய்யுள் வரிகள் இரண்டு
அமைத்துப் பயிலும் அகவல் அறிக.

பின்வருவதைச் சொல்லும் ஓர் அரிய கலையில்
கரையில்லாத புலமையைக் கொண்டவர் மிகச் சில பேர்கள்.

*****

முரளி
19-01-2013, 03:56 AM
மிக மிக அருமை. உங்கள் உழைப்பு, முயற்சி, ஆவல் கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி. எனது அன்பளிப்பாக மிக சிறிய பரிசு இ.பணம் ஆயிரம் , உங்கள் படைப்புகளுக்காக.

ரமணி
21-01-2013, 09:51 AM
பயிற்சி 3. எல்லாம் நேர்நிரை/நிரைநேர்: விளம்-முன்-நிரை

கீழ்வரும் சொற்களை விகுதிகள் சேர்த்து
நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்
என்னும் நிரலில் சீர்கள் வந்திட
ஈரசைச் சீர்களில் இரண்டு வரிகள்
அகவல் ஓசை பயில எழுதுக.

காற்று, கடுகு, செல், புரவி,
பாட்டு, அது, சொல், எளிது?

பயிற்சி 4. மாறிய பெயர்கள்

கீழ்வரும் பாட்டில் காற்றின் பெயர்கள்
மாறி உள்ளதைத் திருத்தி எழுதுக.

குளிர்பனிக் காற்றின் பெயராம் சாரிகை
வடக்கில் இருந்து வருவது கோடை
கிழக்கில் வாடை மேற்கில் கொண்டல்
தெற்கில் ஊதை சுழன்றால் தென்றல்.

*****

குறிப்பு:
இந்தப் பயிற்சிகளை ஆர்வலர்கள் எளிதில் முயன்று பார்க்க ஒரு வலைப்பூ தொடங்கியுள்ளேன்:
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

ரமணி
21-01-2013, 12:06 PM
நன்றி. என் வலைப்பூவில் உள்ள யாப்புப் பயிற்சிகளை முயன்று பார்த்துக் கருத்துச் சொல்வது இன்னும் சிறந்த அன்பளிப்பாக இருக்கும்!


மிக மிக அருமை. உங்கள் உழைப்பு, முயற்சி, ஆவல் கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி. எனது அன்பளிப்பாக மிக சிறிய பரிசு இ.பணம் ஆயிரம் , உங்கள் படைப்புகளுக்காக.

ரமணி
22-01-2013, 01:06 AM
3.5. அகவற் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லோர் இன்று கானல் நீரே.

கல்/வி செல்/வம் வீ/ரம் கொண்/ட
நல்/லோர் இன்/று கா/னல் நீ/ரே.

நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்
நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்

பயிற்சி 2. விடை

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.

வரு/வது உரைத்/திடும் அரி/யதோர் கலை/தனில்
கரை/யறு புல/மையை உடை/யவர் மிகச்/சிலர்.

நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை
நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை

’புலமையை’ என்பதில் ஐகாரக் குறுக்கம்
பயில ஈரசைச் சீராகும் அறிக. ... [புலமையை -> புலமயை]

*****

ரமணி
22-01-2013, 02:03 AM
பயிற்சி 5. செப்பலிலிருந்து அகவல்

செப்பல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
முதற்சீர் எதுகையும் பொருளும் தங்கி
அகவல் ஓசை கேட்க எழுதுக.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட
மாடியில் போட்ட வடாம்.

பயிற்சி 6. துள்ளலிலிருந்து அகவல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.

*****

ரமணி
22-01-2013, 10:57 AM
பயிற்சி 7. உரைநடை வாக்கியத்திலிருந்து அகவல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/01/35-7.html

கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
ஈரசைச் சீர்கள் மட்டுமே பயின்று
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.

பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து அகவல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/01/35-8.html

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
மூன்று அடிகளில் ஒரேஎதுகை வந்து
அகவல் ஓசை கேட்க எழுதுக.

மகிழ்ந்த துள்ளலில் கேட்டு சிரித்து
துள்ளிய குட்டி பாப்பா பயந்தது
கன்றுக் உறுமல் நன்றாய்ச் பன்றியின்

*****

முரளி
22-01-2013, 11:58 AM
முயற்சித்தேன். எனது இலக்கண அறிவு குறைவு என்பதனால், எனது முயற்சி வீணாயிற்று. இருப்பினும், திரும்ப முயற்சிப்பேன். நன்றி.

ரமணி
22-01-2013, 12:39 PM
நண்பரே!

மகிழ்ச்சி. பெரும்பாலான பயிற்சிகள், பயிற்சி 8-இல் உள்ளது போலக் கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைப்பதாகவே இருக்கும்.

ஒவ்வொரு சொல்லையும் மின்னெலி விசையால் சொடுக்கிட அவை விடைப் பெட்டகத்தில் ஒழுங்கில் விழும். தவறாகி விட்டால், cut-and-paste மூலம் சொல்லொழுங்கை நேர்செய்து கொள்ளலாம்.

எல்லாச் சொற்களையும் விடைப் பெட்டகத்தில் வரவழத்த பிறகு check பொத்தானை அழுத்தி விடையைச் சரிபார்க்கலாம்.

எப்போது வேண்டுமானாலும் விடை இணைப்பைச் சொடுக்கி விடையை அறிந்துகொள்ளலாம்.

முயல்க, all the best.

அன்புடன்,
ரமணிமுயற்சித்தேன். எனது இலக்கண அறிவு குறைவு என்பதனால், எனது முயற்சி வீணாயிற்று. இருப்பினும், திரும்ப முயற்சிப்பேன். நன்றி.

ரமணி
23-01-2013, 01:41 AM
பயிற்சி 9. மறைந்துள்ள பழமொழிகள்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
கீழ்வரும் பெயர்வினைச் சொற்களில் நான்கு
பழமொழிகள் உள்ளன மறைந்து.
அவற்றைத் தேடி
அந்தாதி போலமைத்து
நான்கு அடிகளில்
அகவல் ஓசை கேட்க எழுதுக.

மலை, பனி, குளம், கிணறு, தவளை, உலகு
வந்தது, நீங்கும், பெய்தால், நிரம்பும், போட்டு, தேடினான், அறியுமோ

பயிற்சி 10. காளமேகத்தின் சிலேடை அகவலில்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எள்ளும் பாம்பும் ஒன்றெனக் காளமேகம்
வெள்ளிய பாவில் சிலேடையாய்ச் சொன்னதை
அடிகளின் சீர்களில் ஈரசை பயின்று
அகவல் ஓசை கேட்க எழுதிய
அகவற் பாவின் சொற்கள் கலைந்து
போயின கீழுள்ள அடிகள் நான்கில்.
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைக்கவும்.

வெண்பா:
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் -- தேடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது.
---காளமேகப் புலவர், பாம்பும் எள்ளும் சிலேடை

கலைந்த சொற்களைல் அகவற்பா:
திறக்கின் பிண்ணாக் ஆடிக் தேய்த்தால்
முகம்காண், பரபர, எள்ளும் மூடித்
ஆய்ந்தால் ஒன்று. ஆடையில் பாம்பும்
மண்டையில் இரையும், குடம்புகும், குமுண்டு;

*****

ரமணி
23-01-2013, 01:47 PM
அன்புடையீர்!

சில குறிப்புகள்:

01. செய்யுள் ஓசை பற்றிய பயிற்சிகளை வாசகர்கள் அசை-சீர்-தளை-அடி பற்றிய விவரங்கள் அறிந்தபின் பின்னரே முயல்வது எளிதாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் இனிவரும் ஓசைப் பயிற்சிகளை இப்போது தரப் போவதில்லை. அகவற் பயிற்சிகளையும் பின்னர் முயன்று பார்க்கலாம்.

02. எனினும், இயற்பா வடிவத்தில் எழும் செய்யுள் ஓசை பற்றி முதலிலேயே தெரிந்துகொள்வது முக்கியம் என்பதால், இதுவரை வந்தவற்றில் கீழுள்ள பகுதிகளை மட்டும் ஒருமுறைக் கிருமுறை படித்து விளங்கிக் கொள்ளவும்.

2. செய்யுள் உறுப்புகள்
2.1. செய்யுள் இயற்ற
3.1. அசையும் சீரும்
3.2. செய்யுள் ஓசை
3.3. அகவல் ஓசை
3.4. அகவல் முயற்சி

03. இனிவரும் பகுதிகளில் செப்பல், துள்ளல், தூங்கலோசை பற்றிய விவரங்களும் எழுத்தெனும் அடிப்படை உறுப்பின் விவரங்களும் அறிந்த பின்னர், அசை-சீர் பற்றிய பகுதிகள் வரும்போது வாசகர்கள் அப்போது வரும் பயிற்சிகளை மும்முரமாக முயன்று பார்க்கலாம்.

04. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அப்போதே கேட்கலாம். எனக்குத் தெரிந்த வரையில் விளக்க முயல்கிறேன்.

அன்புடன்,
ரமணி

ரமணி
24-01-2013, 03:27 AM
3.5. செப்பல் ஓசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்
தானே இயல்பாக மறைவின்றி மொழிவது.
"மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
என்பார் நச்சினார்க் கினியர் உரையிலே.

"இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய
வாக்கியம் போன்ற ஓசை" என்று
கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையிலே.

வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்
வெண்பாவில் வராது அகவல் ஓசை
செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
செப்பல் ஒலித்திடும் வெண்பா வடிவத்தில்
செப்புவர் சான்றோர்தம் நல்லுரை - இப்படி
நல்வழி மூதுரை போன்ற பனுவல்கள்
செல்வழி சொல்வன வாம்.

சான்று 1.
நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை 11

சான்று 2.
நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.
--மஹாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

*****

ரமணி
25-01-2013, 01:24 AM
3.6. செப்பல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?
மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலுமே.

காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.
தானே இயல்பாய் மொழிதல் மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.

செப்பல் ஓசை பயிலும் வெண்பா
ஒன்று நான்கு அடிகளில் முயல்வோம்
வெண்பா விளக்கம் வேறோர் இயலிலே.

(பிழையுள்ள வெண்பா)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.

இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க
மா/டியில் போட்/ட வடாம்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நேர்நிரை நேரநேர் மலர்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

(வெண்பா)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
மாடியில் போட்ட வடாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எதுகை மோனை முயற்சிகள் இன்றி
இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
சொற்களை வைத்து இன்னொரு வெண்பா.

இந்த அடிகளை அலகிட்டுப் பார்த்து
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்யவும்.

(வெண்பா)
நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
வாரம் ஒருமுறை மாட்டினி மூவிகள்
பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!

*****

ரமணி
26-01-2013, 01:52 PM
3.7. துள்ளல் ஓசை

(இணைக்குறள் ஆசிரியப்பா)
துள்ளல் என்பது குதித்தல் ஆகும்
துள்ளலில் நடையே தடைப்படும்
பசுவின் கன்று துள்ளல் போல
இடையிடை உயர்ந்து மீண்டும் சமன்படுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
துள்ளலை விளக்கும் கீழ்வரும் மூன்று
அடிகளில் சீரிடை மட்டும் கலித்தளை
பயின்றிடத் துள்ளல் வருவது காண்க.

(ஆசிரியத் தாழிசை)
ஓரடிக்குள் அறுதியிட்டோ அடியிடையே தொடர்ந்துவந்தோ
காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில்
துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.

சான்று 1:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

’வகைக்கருணைக் கண்ணோக்கம்’ இருசீர்கள் தவிர்த்தெல்லாச்
சீர்களிடை அடிகளிடைக் கலித்தளையே பயின்றுவர
அடிகளிலே ஒலித்துள்ளல் அமையாது போமோகாண்!

சான்று 2
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவனை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.
--சேக்கிழார், திருத்தொண்டர் புராணம் 140

வெண்டளையும் கலித்தளையும் சமமாகப் பயின்றாலும்
அணிமேலே அணிசேர்ந்தே அதிசயங்கள் அடுக்கிவரத்
துள்ளலோசை துவளாமல் ததும்புவது கண்டீரோ?

*****

ஜான்
27-01-2013, 05:04 AM
நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
அகவற் றளைகள் மட்டும் வரவே.
நன்றி ஐயா ..

கடைசி வரியை கொஞ்சம் விளக்குங்களேன்

ரமணி
27-01-2013, 07:09 AM
வணக்கம் திரு.ஜான்.

அகவற் றளைகள் இரண்டு வகைப்படும் (இவை பற்றிய விவரங்கள் தளைகள் இயலில் வருவதால் இங்கு விளக்கவில்லை): நேர்முன் நேர் வருவது நேரொன் றாசிரியத் தளை [உதாரணம்: கண்ணன் என்னும் மன்னன்]. நிரைமுன் நிரை வருவது நிரையொன் றாசிரியத் தளை [உதாரணம்: வருவது உரைத்திடும்].

இவ்விரு ஆசிரியத் தளைகள் மட்டுமோ அல்லது பெரிதுமோ சீர்கள் இடையிலும் அடிகள் இடையிலும் வந்தால் எழும் ஓசையே அகவலோசை. அடிகளிடை வருவது என்பது முதலடியின் இறுதிச் சீரும் இரண்டாமடியின் முதற்சீரும் தளையில் ஒன்றுதலாகும். ஆசிரியத் தளைகள் இயற்சீர் என்றும் ஆசிரிய வுரிச்சீர் என்றும் அழைக்கப்படும் ஈரசைச் சீர்களிலேயே வரும்.

அன்புடன்,
ரமணிநேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
சீர்கள் ஈரசை பெற்று வந்தால்
சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
அகவற் றளைகள் மட்டும் வரவே.
நன்றி ஐயா ..

கடைசி வரியை கொஞ்சம் விளக்குங்களேன்

ரமணி
28-01-2013, 12:58 PM
3.8. துள்ளல் முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?
கலித்தளை பெரிதும் வருவது வேண்டும்.

(கலிவிருத்தம்)
காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளையாய்க் குதித்துவரும்
கலிப்பாவில் கலித்தளையே பெரும்பாலும் பயின்றுவரும்
கலித்தளையே சீர்களிடை பெரிதும்வர வேண்டுவது
கலித்தளையே அடியிடையே கட்டாய மில்லை.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)
வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்(து)
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.

(ஆசிரியத் தாழிசை)
இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தை/யைப் பிடித்/திழுத்(து)
இடுப்/பினி/லே இருத்/திவைத்/து நிலா/காட்/டி உண/வூட்/டினாள்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரை
நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நிரை

(குறள் வெண்செந்துறை)
மூவசைச் சீர்கள் நேரசையில் முடிந்து
நிரைதொடரக் கலித்தளை வருவது காண்க.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
பிடித்திழுத்(து) இடுப்பினிலே என்ற சீர்கள்
பிடித்திழுத் திடுப்பினிலே என்றாகிப் புணர்ச்சியில்
கருவிளம் கருவிளங்காய்ச் சீர்களாகி விளம்முன்
நிரைவர நிரையொன் ராசிரியத் தளையாகு(ம்)
எனினும் பெரிதும் கலித்தளை பயின்று
வருவதால் அடிகளில் துள்லலே கேட்கும்
குழந்தையின் துள்ளலும் தாய்தடு மாற்றமும்
பொருளிலும் ஒலியிலும் இயல்வது நோக்குக.

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
துள்ளலோசை தொடர்ந்துவர நிரையசையில் தொடங்குகிற
புளிமாங்காய் கருவிளங்காய் எனும்காய்ச்சீர் களையடுக்கி
நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர்
அடிதோறும் அமைத்திட்டால் எழுதும்பா முழுவதுமே

ஒலித்துள்ளல் வருமெனினும் இதுபோல எழுதுவது
கடினமென்றும் ஒருநிலையில் செயற்கையாகு(ம்) எனக்காண்க
எனவேதான் கலித்தளையும் பிறதளையும் விரவிவரக்
கலிப்பாக்கள் பொதுவாக இயற்றப்படல் காணலாம்.

முயற்சி 2.
[அலகிட்டுக் கலித்தளையே பயில்வது காண்க.]
(குறள் வெண்செந்துறை)
படபடக்கும் சிறகுடனே பறந்துவரும் புறாக்கூட்டம்
சடசடெனத் தரையமர்ந்து பொரியுண்ணும் அழகுகாண்பீர்!

*****

ரமணி
29-01-2013, 01:27 PM
3.9. தூங்கல் ஓசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
வஞ்சித் தளையில் தூங்கல் ஓசையில்.
தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
தூங்குவது பற்றி என்பது அல்ல.

அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்
மந்தம் ஓய்வு ஏக்கம் வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!

தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.
தூங்கலை விளக்கும் வஞ்சி யடிகள்:

(கலித்தாழிசை)
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்*ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சி யடிகள் பொதுவில் அமைவது
இருசீர் அல்லது முச்சீர் அடிகளாய்
தூங்க லோசை கேட்குமோர் பாடல்:

சான்று:
(குறளடி வஞ்சிப்பா)
மாகத்தினர் மாண்புவியினர்
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நய-ஆகமப்
பேரறிவினர் பெருநூலினர்
காணத்தகு பல்கணத்தினர்
---கி.வா.ஜ.,’கவி பாடலாம்’ பக்.201

(இணைக்குறள் ஆசிரியப்பா)
மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
அகவல் செப்பல் இரண்டும் வருமே
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்
எனினும் துள்ளல் தூங்கல் இரண்டும்
செய்யுளில் மட்டுமே வருவன.
அகவல் செப்பல் அடியிடைத் தளைக்கும்
துள்ளல் தூங்கல் அடிகளில் மட்டுமே.

*****

ரமணி
30-01-2013, 11:31 AM
3.10. தூங்கல் முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
கனிமுன் நிரையோ நேரோ வருகிற
வஞ்சித் தளைகள் பயில வேண்டும்
இருசீர் அல்லது முச்சீர் அடிகளில்.
மூவசை நிரையில் முடிவது கனிச்சீரே.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)
ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்குமே!
பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டுமே!

ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/குமே!
பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டுமே!

நேர்நிரைநிரை நேர்நேர்நிரை நேர்நிரைநிரை
நிரைநேர்நிரை நேர்நிரைநிரை நேர்நிரைநிரை

(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
நேரோ நிரையோ தொடர
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

முயற்சி 2.
(வஞ்சித் துறை)
தாலாட்டுகள் பலபாடியும்
காலாட்டுமே தூங்காது!
எட்டிநோக்கிடும் சுட்டிப்பயல்
பட்டுவிழிகள் சினம்தணிக்கும்!

தா/லாட்/டுகள் பல/பா/டியும்
கா/லாட்/டுமே தூங்/கா/து!
எட்/டிநோக்/கிடும் சுட்/டிப்/பயல்
பட்/டுவிழி/கள் சினம்/தணிக்/கும்!

நேர்நேர்நிரை நிரைநேர்நிரை
நேர்நேர்நிரை நேர்நேர்நேர்
நேர்நிரைநிரை நேர்நேர்நிரை
நேர்நிரைநிரை நிரைநிரைநேர்

(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்து
நேரோ நிரையோ தொடர
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

*****

ரமணி
31-01-2013, 01:18 PM
4. யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அசைகள் இசைந்து ஒலித்து ஒருங்கே
இயல்பாய் அமைவது செய்யுள் என்றும்
ஒசை ஒருங்கே அமைந்து ஒலிக்கத்
தளைகள் முக்கியம் என்றும்
அறிந்த பின்னர் இனிமேல்
செய்யுளின் அடிப்படை உறுப்புகள் ஆய்வோம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்பே சொன்னதை நினைவில் கொணர
அளவும் பாவும் அடியும் சீரும்
அசையும் எழுத்தும் மாத்திரை யாக
அடிப்படை உறுப்புகள் ஏழெனத் தெரியுமே. ... [பார்க்க 3.,2.1.]

4.1. மாத்திரை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மாத்திரை என்பது கால அளவு.
கண்ணிமை கைநொடி செய்தல் காலம்
மாத்திரை யாகும் ஒன்றென் றறிக.

எழுத்தொலிக் காலமே யாப்பின் மாத்திரை
எழுத்தின் மாத்திரை இப்படி யாகும்:
குறிலொன்று, நெடிலிரண்டு, உயிரளபெடை மூன்றே.

குற்றிய லிகரம், குற்றிய லுகரம்,
ஆய்தம், மெய்யிவை அரைமாத் திரையே;
உயிரின் அளவே உயிர்மெய் அளவு.

ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம் ஒன்று;
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
என்பன கால்மாத் திரையில் ஒலிக்குமே.

4.2. எழுத்து

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாம்
எழுத்து என்பது பெயர்ச்சொல் ஆகும்
எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே.

எண்ணம் உருப்பெறத் தோன்றும் எழுத்து
உருவின்றிக் ஒலியாய்க் கேட்டதை வரைந்து
உருவுடன் பார்க்க வைப்பது எழுத்து.

எண்ணங்கள் அலையுமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணங்கள் விரிந்து காணுமனம் நிறைக்கும்.
எழுத்து இன்றேல் இலக்கியம் இல்லை.

எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்கி யுள்ளன.
எழுத்தே முதலில் ஓரொலியின் வரிவடிவம்.

எழுதுதலும் எழுதியதும் குறிக்கும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்து.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போது
இலக்கணம் என்று பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
என்று ஔவையும் குறள்வழி கூறுவார்.

எழுதும் எழுத்து வரிவடி(வு) என்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரமும் சுட்டுமே.

கண்ணுக்கு மையெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனதில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனதில் எழுதுமே.

*****

ரமணி
01-02-2013, 12:01 PM
4.3. எழுத்தின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
எழுத்தெனப் படுவது எழுதப் படுவது
என்று இலக்கண நூல்கள் குறிக்குமே.

எழுத்தெனப் படுவது மூவகைப் படுமே
உயிரும் மெய்யும் சார்பும் என்று.
உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்
முதல்சார்ந்து வந்தது சார்பெழுத் தாகுமே.

முதலில் வருவது மொத்தம் முப்பது
உயிரெழுத் துகளில் பத்தும் இரண்டும்
மெய்யெழுத் துகளில் பத்தும் எட்டுமே.

4.4. உயிரின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்
உயிரில் வகைகள் மூன்று உண்டு
குறிலே நெடிலே அளபெடை என்று.
குறில்கள் ஐந்து: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழு: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.

4.5. மெய்யின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்
மெய்யில் வகைகள் மூன்று உண்டு
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றே.

கசட தபற வல்லின மாகும்
ஙஞண நமன மெல்லின மாகும்
யரல வழள இடையின மாகும்
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே.

4.6. சார்பின் வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சார்பெழுத் தென்பது வகைகளில் பத்து
உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்
என்பன அந்தப் பத்து வகைகளாம்.

முதலெழுத் துகளைச் சார்ந்து வருதலால்
சார்பெழுத் தென்னும் பெயரினைத் தாங்கி
மேலுள்ள பத்து வகைகளில் வருமே.

4.7. உயிர்மெய்

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்து
க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாக
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகுமே
சான்றாக
ககா-கிகீ குகூ-கெகே கைகொகோ
கௌ-என்று க-வர்க்க உயிர்மெய் பன்னிரண்டே.

4.8. ஆய்தம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
உயிரிலும் மெய்யிலும் உயிர்மெய் யிலும்சேரா
அஃ-எனச் சொல்லும் ஆய்த எழுத்துக்கு
முப்புள்ளி முப்பாற் புள்ளி தனிநிலை
என்றே வேறு பெயர்களும் உண்டே.

முன்னொரு குறிலும் பின்னொரு வல்லினம்
பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
சான்றாக அஃது, எஃகு, எனவரும்.
தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய்த மாகும்.

*****

ரமணி
02-02-2013, 11:56 AM
4.9. அளபெடை யென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளபு என்பது மாத்திரை அளவு
அளபு எடுத்தல் மாத்திரை நீளுதல்
அளபு எடுத்துத் தனதுமாத் திரையின்
நீண்டு ஒலிப்பதே அளபெடை யாகும்
அளபெடுத்தல் குறிக்க அளபெடுத்த எழுத்தின்
இனவெழுத் தொன்று தொடர்ந்து வருமே.

செய்யுளில் ஓசை குறையும் போது
உயிர்நெடில் எழுத்துகள் ஏழும்
ஙஞண நமன வயலள பத்தும்
தனியே நிற்கும் ஆய்த எழுத்தும்
தத்தம் மாத்திரை நீண்டு ஒலிப்பதே
அளபெடை என்று அழைக்கப் படுவது
அளபெடை இருவகை: உயிரும் ஒற்றும்.

4.10. உயிரளபெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடில்பின் தக்க குறிலே வந்து
ஒசை நிரப்பும் உயிரள பெடையாம்
மூன்று மாத்திரை யாக ஒலிக்கும்.
உயிரள பெடையில் மூவகை யுண்டு
செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்றே.

அளபெடுக்கும் போதோர் இனவெழுத்து தோன்றுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

4.11. செய்யுளிசை அளபெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத்து வந்தால்
செய்யுளிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

’ஆஅதும் என்னுமவர்’ என்று முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்று இடையிலும்,
’நல்ல படாஅ’ என்று கடையிலும்
செய்யுளிசை அளபெடுத்து வருவது காண்க.

அதும்-தொழாள்-படா என்னும் சொற்கள் தம்முள்
ஓரசைச் சீராய் நிற்றல் கருதி
ஓசை நிறைக்க அவற்றை நீட்டி
ஈரசைச் சீர்க ளாக்கி எழுதி
அசையும் தளையும் குன்றா திருக்கச்
செய்த முயற்சியே செய்யுளிசை யளபெடை.

சான்றுகள்:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
--திருக்குறள் 653

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
--திருக்குறள் 1115

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
--திருக்குறள் 55

4.12. இன்னிசை அளபெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.
’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்கள்
’கெடுப்பதும் உடுப்பதும் உண்பதும்’ என்றே
ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
இன்னிசை நோக்கி அளபெடுத்தல் காண்க.

சான்றுகள்:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
--திருக்குறள் 15

உடுப்பதூஉம் உணபதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்.
--திருக்குறள் 1079

4.13. சொல்லிசை அளபெடை

(நேரிசை ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றாக வேறுபடுத்தி,
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை என்றபெயர் பெறுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லிசை அளபெடை வந்திடும் போது
பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
என்பன சொல்லிசை அளபெடைச் சான்றுகள்.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்று
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்று.

சான்றுகள்:
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்.
--திருக்குறள் 1263

அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
--தொல்காப்பியம், பொருள்.அகத். 39

நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
--நப்பூதனார், முல்லைப்பாட்டு 1-2

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
--திருக்குறள் 91

4.14. ஒற்றள பெடை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
செய்யுளில் ஓசை குறையு மிடத்து
மெய்யெழுத்து மிகுந்து ஒலித்து பாட்டில்
ஒசை நிரப்புவது ஒற்றள பெடையாம்.

செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய்ய இடைகடை அளபெடுத்து
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததுகாட்ட மீண்டும் எழுதப்படும்.

குறிலின் குறிலிணைக் கீழ்வரும் ஒற்று
இடைகடை அளபெடுத்து மிக்கு வரும்.
’எஃஃகு இலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள்.

’எஃஃகு, இலங்கிய’ தனிக்குறிற் கீழிடை
’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
ஒற்றள பெடையாய் வருவது காண்க.

சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
செய்யு ளொசை நிறைத்தல் காண்க.

சான்றுகள்:
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர்
வெஃஃகுவார்க் கில்லைவீடு.

பூஉந் தண்ண் புனமயில் அகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்
--சிதம்பரச் செய்யுட் கோவை 12

அளபெடைச் சீர்களை அலகிடும் போது
தளைகள் தட்டில் அலகு பெறுமே
தளைகள் ஒன்றின் அலகு பெறாது.

அளபெடை மாத்திரை நோக்கும் போது
உயிரளபெடை ஒலிப்பது மூன்றுமாத் திரையில்
ஒற்றளபெடை ஒலிப்பது ஒருமாத் திரையிலே.

*****

ரமணி
04-02-2013, 04:19 AM
4.15. முற்றிய லுகரம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் என்றபெயர் பெறுமே
இஃது தனிக்குறில் அடுத்தும்
மெல்லின இடையின மெய்மேல் ஏறியும்
வருவது சான்றாக: ’நகு,தடு, தபு,பசு,
அது,அறு, தும்மு, கதவு, உண்ணு’
சொற்களில் உகரம் முழுவதும் ஒலிக்குமே.

4.16. குற்றியலுகரம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
ஒலித்திடும் உகரமே குற்றிய லுகரமாம்.

குசுடு துபுறு என்று உகரம்
வல்லின மெய்யுடன் சேரும் போது
வல்லின உயிமெய்க் குற்றுகர மாகித்
தனிக்குறில் அல்லாத மற்றைச் சொற்களில்
வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே.

வல்லின உயிர்மெய் ஆறினில் மட்டுமே
குற்றிய லுகரம் குன்றி வருமே
மெல்லின இடையின உயிர்மெய் களிலே
உகரம் குன்றி ஒலிப்பது இல்லையாம்.

தும்பு என்பது குற்றிய லுகரம்
தும்மு என்பது முற்றிய லுகரம்
நஞ்சு என்பது குற்றிய லுகரம்
நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
உண்டு என்பது குற்றிய லுகரம்
உண்ணு என்பது முற்றிய லுகரம்
குடகு என்பது குற்றிய லுகரம்
குடவு என்பது முற்றிய லுகரமே.

கு-குரு சு-சுகம் து-இது என்று
கு-சு-து என்னும் ஓரெழுத்துச் சொற்கள்
தனிக்குறிலாய் நிற்றலால் குற்றுகர மாகாது.

தனக்கு முன்வரும் அயலெழுத்தின் வகையொட்டிக்
குற்றிய லுகரம் வந்திடும் போது
ஆறு வகைப்பட்ட தொடர்களில் அமையுமே.

வல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’சுக்கு மச்சு பட்டு பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு கூத்து காப்பு உற்று’
என்பன வன்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

மெல்லின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’சங்கு பஞ்சு வண்டு பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு சாந்து பாம்பு சான்று’
என்பன மென்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

இடையின மெய்யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’தேய்கு ஆர்கு அல்கு --வ்கு மாழ்கு தெள்கு’ ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து --வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு --வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

இடைத்தொடர் வகையில் சுடுறு என்பன
ஈற்றயலிற் குற்றுகர மாகக் கொண்டு
அமையும் சொற்கள் இலையெனக் காண்க.

எஞ்சிய குதுபு குற்றிய லுகரமும்
இடையினம் மெய்கள் அனைத்தையும் ஈற்றயலின்
கொள்வ தில்லை என்றும் காண்க.

உயிர்மெய் யெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’படகு நகாசு அகடு தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

தனிநெடி லெழுத்தை ஈற்றயலில் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’பாகு காசு நாடு காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
தனிநெடில் பின்வரும் ஈரெழுத்துச் சொற்களாம்.
’தகாது ஆகாது’ போன்று இரண்டின்
மிஞ்சிய எழுத்துவரும் சொற்களில்
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராகிவிடும்.

ஆய்த எழுத்தை ஈற்றயலில் கொண்டவை
ஆய்தத்தொடர்க் குற்றிய லுகர மாகுமே.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத்தொடர்க் குற்றுகரச் சான்றுகள்.

குற்றியலுகரச் செயல்பாடு

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
குற்றிய லுகரச் செயல்பாடு பற்றி
மொழியியல் கருத்து மகிழ்ச்சி தருவது
வல்லின மெய்கள் இறுதியில் வந்தால்
எளிய தல்ல அவற்றை ஒலித்தல்
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா?
எனவே
காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாகி
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றிய லுகரம் ஆகி விடுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலம் பயிலும் இற்றைநாள் தமிழில்
ஓங்குவது காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் ஷாப் டேப் பார் ... [chalk pass boat shop tape bar]
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்து
சாக்கு பாசு போட்டு ஶாப்பு டேப்பு பாரு
என்றே பேச்சினில் ஒலிக்கும் அன்றோ?

*****

ரமணி
05-02-2013, 05:19 AM
4.17. குற்றியலிகரம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்
உகரம் இகர மாகத் திரிந்து
அரைமாத் திரையாய்க் குறைந்து ஒலித்து
குற்றிய லிகரம் ஆகி விடுமே.

நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
வருவது குற்றிய லிகரச் சான்றுகள்.

இவ்வாறே மியாவென் றுவரும் அசைச்சொல்லில்
மகரம் மேலூர்ந்த உகரம் மாத்திரை
குன்றி ஒலிப்பதும் குற்றிய லிகரம்.

கேள் + மியா = கேண்மியா என்றும்
செல் + மியா = சென்மியா என்றும்
வருவதும் குற்றிய லிகரச் சான்றுகள்.

4.18. ஐகாரக் குறுக்கம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஐ-யெனும் உயிரெழுத்து தனித்து வந்தால்
இரண்டு மாத்திரை யளவில் ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பது
ஐகாரக் குறுக்கும் என்ற பெயர்பெறுமே.
ஐப்பசி, தலைவன், வலை,கலை சான்றுகள்.

4.19. ஔகாரக் குறுக்கம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஔ-வெனும் உயிரெழுத்து தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வரும்போதும்
அளபெடுத்து வரும்போதும்
தன்னிரு மாத்திரை குன்றாது ஒலிக்குமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அதுவே உயிரெழுத்து உயிர்மெய் என்று
சேர்ந்தால் முதலில் மட்டுமே வந்து
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்து
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே:
ஔவை, வௌவால், கௌதாரி சான்றுகள்.

4.20. மகரக் குறுக்கம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ணகர, னகர மெய்களின் முன்னும்
வகரத்தின் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பது.

கேண்ம் = கேளும், மருண்ம் = மருளும்
போன்ம் = போலும், சென்ம் = செல்லும்
வரும் வங்கம் = வரும் கப்பல்
என்பன மகரக் குறுக்கச் சான்றுகள்.

4.21. ஆய்தக் குறுக்கம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்பது.

அல் + திணை = அஃறிணை
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது
என்பன ஆய்தக் குறுக்கச் சான்றுகள்.

*****

ரமணி
06-02-2013, 12:41 PM
4.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்து என்பது தனியெழுத் தாக
மொழியெனும் மாளிகை யெழுப்பும் கற்களாய்
ஒற்றை ஒலியின் தனிமம் எனவே
கற்றையாய்ச் சேர்ந்து சொல்லென் றாகி
மனதில் உள்ளதை வெளியில் கொணர்ந்து
கனவினை விதைக்கும் கனியென் றுதவுமே.

எழுத்தே தனித்தோ எழுத்துடன் சேர்ந்தோ
அக்ஷரம் என்று வடசொல் குறிக்கும்
ஸிலபிள் என்று ஆங்கிலம் குறிக்கும்
அசையென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்
செய்யுளின் அடிப்படை உறுப்பென் றாகி
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசையுமே.

எழுத்து என்பது உருவிலோ ஒலியிலோ
மோனை எதுகை முரணெனும் வகைகளில்
தொடையெனும் உறுப்பில் தொடுக்க உதவுமே.

இன்னும் எழுத்தெனும் மன்னிய யுறுப்பு
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பென அசைந்து வருமே.

4.23. எழுத்தியல் பயிற்சி
பயிற்சி 1. ஓசை நிறைக்கும் அளபெடைகள்
முயன்று பார்க்க வலைப்பூ விலாசம்:
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/423-1.html

இந்த எழுத்தியல் பயிறிசியில் இருந்து நம் 'கவிதையில் யாப்பு'ப் பயிற்சிகள் முறையாகத் தொடங்குகின்றன.
கவிதை ஆர்வலர்கள் பயிற்சிகளை உடனே முயன்றுபார்த்துப் பின்னூட்டம் இடுவார்களாக.
பயிற்சிகள் என்னுடைய கீழுள்ள வலைப்பூவில் ஒவ்வொன்றாக பதியப்படும், எல்லோரும் எளிதாக முயன்று பார்க்க.
பயிற்சிகளை விடாமல் செய்துவந்தால் மரபுக் கவிதை எழுதுவது எளிதில் வசப்படும் என்பது என் அனுபவம்

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளபெடுக்கும் போதோர் இனவெழுத்து தோன்றுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

ஈரசைச் சீரிடை வேறென நிற்கும்
ஓரசைச் சொற்கள் அளபெடுத்து வந்து
ஓசை நிறைத்தோ வேறு வகையிலோ
அளபெடுத்த சொற்களை பன்னிரண்டு மட்டும்
ஈரசைச் சீர்களாக்கி எழுதுக வரிசையிலே.

[உதாரணம்: பளார் என்பது பளாஅர் என்றாகும்.]

பளார் என்று அறைந்து விட்டான்
பெண்ணவள் கலீர் என்று சிரித்தாள்
தொண்டன் தலையாடச் சொன்னான் ஊம்
எலே என்றால் சட்டை செய்யான்
மன்னன் கணை தொடுத்து வீழ்த்தினான்
சலோ சலோ கூறக் குதிரை நகர்ந்தது
ஔ என்று மிழற்றியது குழந்தை
ஆம் சொல்வதினும் ஓம் சொல்வது அவரது பழக்கம்
வளை சென்ற சாலையில் விபத்து
அளை பேசினால் துன்பம் இல்லை

*****

ரமணி
08-02-2013, 03:44 AM
4.23. எழுத்தியல் பயிற்சி விடைகள்
பயிற்சி 1 ஓசை நிறைக்கும் அளபெடைகள்: விடை

பளாஅர் கலீஇர் ஊஉம் எலேஎ கணைஇ சலோஒ சலோஒ ஔஉ ஆம்ம் ஓம்ம் வளைஇ அளைஇ

பளாஅர் என்று அறைந்து விட்டான்
பெண்ணவள் கலீஇர் என்று சிரித்தாள்
தொண்டன் தலையாடச் சொன்னான் ஊஉம்
எலேஎ என்றால் சட்டை செய்யான்
மன்னன் கணைஇ தொடுத்து வீழ்த்தினான்
சலோஒ சலோஒ கூறக் குதிரை நகர்ந்தது
ஔஉ என்று மிழற்றியது குழந்தை
ஆம்ம் சொல்வதினும் ஓம்ம் சொல்வது அவரது பழக்கம்
வளைஇ சென்ற சாலையில் விபத்து
அளைஇ பேசினால் துன்பம் இல்லை

*****

ரமணி
08-02-2013, 09:14 AM
பயிற்சி 2. குற்றியலுகரம் அறிதல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/423-2.html

(குறள் வெண்செந்துறை)
கீழ்வரும் சொற்களில் குற்றிய லுகரங்கள்
தேர்ந்து எடுத்துத் தனியே எழுதவும்.

மஞ்ஞு உண்ணு தும்மு பன்னு நெல்லு கவ்வு துள்ளு

*****

ரமணி
09-02-2013, 03:10 AM
பயிற்சி 2 குற்றியலுகரம்: விடை

குசுடுதுபுறு என்னும் வல்லின உயிர்மெய்களே குற்றியலிகரமாக வரும்.
மெல்லின இடையின் மெய்களின் மேலேறிய உகரம் குற்றுகரம் ஆகாது.
எனவே எதுவும் குற்றியலுகரம் அல்ல.

*****

ரமணி
09-02-2013, 03:14 AM
பயிற்சி 3. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: வன்றொடர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/423-3.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
வன்றொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
தேர்வு செய்து தனியே எழுதுக
அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு

பயிற்சி 4. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: மென்றொடர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/423-4.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
மென்றொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
தேர்வு செய்து தனியே எழுதுக
அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

குத்து கூடாது இங்கு குடகு பஃது ஊறு
தகடு கோபு வாகு ஏச்சு பெரிசு துன்பு
சோறு சுஃறு மாது காடு காற்று மண்டு
அஃகு மஞ்சு ஜவ்வு குந்து ஒஃகு மாசு
எய்து அளபு அமிழ்து பல்கு வெஃகு நட்பு
தம்பு மார்பு கஃசு கூட்டு வள்பு கொக்கு

******

ரமணி
10-02-2013, 02:08 AM
பயிற்சி 3. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
வன்றொடர்: விடை

ஏச்சு காற்று குத்து கூட்டு கொக்கு நட்பு

பயிற்சி 4. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
மென்றொடர்: விடை

இங்கு குந்து தம்பு துன்பு மஞ்சு மண்டு

*****

ரமணி
10-02-2013, 02:13 AM
பயிற்சி 5. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: இடைத்தொடர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
இடைத்தொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
தேர்வு செய்து தனியே எழுதுக
அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

வெஃகு ஜவ்வு காடு குத்து கஃசு ஏச்சு
தகடு குடகு சோறு பெரிசு கோபு வாகு
குந்து அமிழ்து இங்கு ஒஃகு கொக்கு கூட்டு
மாது எய்து மாசு அஃகு ஊறு நட்பு
மார்பு மஞ்சு வள்பு பஃது காற்று தம்பு
அளபு சுஃறு கூடாது பல்கு மண்டு துன்பு

பயிற்சி 6. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: உயிர்த்தொடர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
உயிர்த்தொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
தேர்வு செய்து தனியே எழுதுக
அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு

பயிற்சி 7. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: நெடிற்றொடர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
தேர்வு செய்து தனியே எழுதுக
அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

அமிழ்து துன்பு மாது ஒஃகு குந்து மஞ்சு
கோபு தம்பு எய்து அஃகு காடு அளபு
வள்பு பல்கு குத்து மாசு குடகு தகடு
பஃது காற்று மார்பு ஏச்சு ஊறு ஜவ்வு
கொக்கு வெஃகு வாகு சோறு மண்டு கூட்டு
சுஃறு இங்கு பெரிசு கூடாது நட்பு கஃசு

பயிற்சி 8. குற்றியலுகரம் வகைப்படுத்தல்: ஆய்தத்தொடர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழுள்ள சொற்கள் முப்பத் தாறில்
ஆய்தத்தொடர்க் குற்றிய லுகரம் ஆறினைத்
தேர்வு செய்து தனியே எழுதுக
அகர வரிசையில் அமைத்தே அவற்றை.

மாசு ஒஃகு கொக்கு வள்பு மஞ்சு ஏச்சு
குந்து இங்கு ஊறு சோறு பெரிசு எய்து
குத்து மண்டு காடு நட்பு ஜவ்வு கூட்டு
தம்பு சுஃறு வெஃகு பஃது அளபு கஃசு
அஃகு வாகு மாது கூடாது அமிழ்து தகடு
காற்று கோபு பல்கு மார்பு குடகு துன்பு

*****

ரமணி
11-02-2013, 01:07 PM
பயிற்சி 5. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
இடைத்தொடர்: விடை

அமிழ்து எய்து பல்கு மார்பு வள்பு ஜவ்வு

பயிற்சி 6. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
உயிர்த்தொடர்: விடை

அளபு குடகு கூடாது சோறு தகடு பெரிசு

பயிற்சி 7. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
நெடிற்றொடர்: விடை

ஊறு காடு கோபு மாசு மாது வாகு

பயிற்சி 8. குற்றியலுகரம் வகைப்படுத்தல்:
ஆய்தத்தொடர்: விடை

அஃகு ஒஃகு கஃசு சுஃறு பஃது வெஃகு

*****

ரமணி
12-02-2013, 10:37 AM
4.30. அசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அவனின்றி அசையா தணுவும் எனும்போது
அசையென்றால் அதிர்வாகும் என்பது விளங்கும்
அணுக்கள் தனியே அசைவது அதிர்வு
அணுக்கள் சேர்ந்தே அதிர்வுகள் சீர்ப்பட்டு
ஒருமித் தசைவது அசையென அறியலாம்.

அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கி விரிந்து ... ... ... [நுடங்குதல்=மெலிதல்]
இசைந்தே ஒலிக்கும் இதயத் துடிப்பென.

4.31. யாப்பின் அசை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
அசையே செய்யுளின் தனிமம் ஆகுமே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்து சீர்களில் இணைந்து
தளைகளில் தழைத்து
தொடைகளில் தொடுத்து
இழைந்தே ஒலிக்க எழுந்திடும் கவிதையே.

4.32. எழுத்தும் அசையும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்து அசைந்திடும் போது
ஓசைகள் குறையும் வலுவும் பெறுமே.

’தாஅ’ என்று கேட்கும் போது
தாவின் ஓசை முழுவதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்ந்து ஒலிகள் மழுங்கி
’தா’-வின் ஓசை குறைந்தே ஒலிக்குமே.

’குயி’எனச் சொல்லும் போ(து)அத் தொடரிலே
வல்லின மெய்யின ஒலிகள் முரண்படப்
பொருளேது மின்றிக் கேட்கும் அசைந்தே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போது
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்து
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் இன்னிசை சுட்டுமே!

எழுத்தும் தானே தனியே அசையும்.
தனியே வருகிற குறில்நெடில் எழுத்துகள்
தனித்தனி அசையென் றாகிட முடியும்.
தனிவரும் ஒற்றை எழுத்தே
தனிச்சொல் லாகிப் பொருள்தர வரினே
ஓரெழுத் தொருமொழி என்றதை அழைப்பரே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’தா’வெனில் தருதல் ’பா’வெனில் பாட்டு
’கா’வெனில் சோலை ’பூ’வெனில் மலராம்
’உ’வெனில் சிவனார் ’கு’வெனில் பூமி
’அ’வென்பது சுட்டும் ’தீ’யென்பது சுடும்
’மா’வெனில் திருமகள் ’ம’வெனில் திருமால்
’யா’வெனும் வினையடிப் பிறந்தது யாப்பே.

*****

ரமணி
13-02-2013, 02:38 PM
4.33. அசை வகைகள்
[மேல் விவரங்கள்: 3.1. அசையும் சீரும்]

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே.

அசையில் இரண்டு வகைகள் உண்டு:
நேரசை நிரையசை என்பன அவையே.
நேரே வருவதால் நேரனப் பட்டது:
ஒன்றே எழுத்தால் ஆவதால் நேரசை.

ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்:
எழுத்துகள் இரண்டு தொடர்ந்தே வந்து
இணைந்து அசைவதால் நிரையசை யாகுமே.

குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ
ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும்
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும் ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

4.34. நேரசை என்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரசை வந்திடும் வகைகள் நான்கு
ஒருகுறில் தனித்து வருவது நேரசை
ஒருகுறில் ஓற்றடுத்து வருவதும் நேரசை ... ... [ஒற்றடுத்து வருவது = அடுத்து வருவது ஒற்றெழுத்து]
ஒருநெடில் தனித்து வருவது நேரசை
ஒருநெடில் ஓற்றடுத்து வருவதும் நேரசை.

’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின்
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்நேர்’ ஆகுமே.

4.35. நிரையசை என்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நிரையசை வந்திடும் வகைகள் நான்கு
குறில்கள் இரண்டு வருவது நிரையசை
குறிலிணை ஓற்றடுத்து வருவது நிரையசை
குறில்நெடில் இணைந்து வருவது நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத்து வருவது நிரையசை.

’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுத்தது.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

ஒற்றில்லா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
ஒற்றில்லை யென்றால் முதல்வரும் நெடிலே.
’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
’மாவு’ நெடில்குறில் தனித்த நேரசை

ஒற்றில்லா நிரையசையில் இரண்டெழுத் திருக்குமே
அவற்றுள் முதலது என்றும் குறிலே.
’உமா’வெனும் நிரையில் முதலது குறிலே.

4.36. அசையும் சொல்லும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசைதனில் வருவது உண்டு
சொல்லொன்று வரலாம் நேரசை ஒன்றில்
சொல்லொன்றோ இரண்டோ வரலாம் நிரையசையில்.

தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
தனியே பொருளது தராது நிற்குமே
ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
’லி’யெனும் நேரசைப் பொருளேது மில்லை.

தனிநெடில் நிரையசை பொருள்தர வரலாம்
தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’தா-பால்’ என்னும் சொற்களில் சான்றுள.

குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’உமா-இறால்’ என்னும் சொற்களில் சான்றுள.

நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவது பொதுவில் காண்பது
’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றாம்.

நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றாம்.

*****

ரமணி
14-02-2013, 12:28 PM
4.40. சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எத்தனை பொருட்கள் சீரெனும் சொல்லுக்கு!
அத்தனை யாகிவரும் சீரெனும் உறுப்பு
நேரடி யாகவோ மறைமுக மாகவோ.

செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே! ... [கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்]
செய்யுள் என்பதோர் செடியெனக் கொண்டால்
செடியின் இலைகளே சீர்கள் ஆகுமே
செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் ... [தொடை=எதுகை, மோனை போன்றவை]
கிளைகளே அடிகளாய் விளைந்து வந்திடக்
கிளைகளில் இணையும் காம்பே தளைகளாம்.

செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே.

சீரே செய்யுளின் செல்வம் அழகு
நன்மை பெருமை மதிப்பு புகழே
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே.

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

சீர்களே மேல்வந்த பாவின் பொற்காசு
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே.

சீர்களே பெரும்பங்கு செய்யுளின் இயல்பில்
சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும்
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓங்கி ஒலிக்குமே.

இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.
காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபெயர்
ஆரணிய மெனவிரியும் யாப்புறுப் புகளிலே.

4.41. சீரென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ பயின்று
இசைந்து ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே.

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையிலே
தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
தாளத்தின் காலச்சுழல் பாணியில் தொடங்குமே
தாளத்தின் நீடிப்பு தூக்கினில் அடங்குமே
தாளத்தின் முடிவு சீரினில் அடங்குமே
என்றே சீரினைப் பாணியோ(டு) ஒப்பிடுவார்.

சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளவு வரலாம்
சீர்வரும் சொற்பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே.

(குறள் வெண்பா)
வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
பிரியும் வகையுளி காண்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வகையுளி இல்லாக் குறளொன்று கேட்பின்
அகர முதல உளது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

ரமணி
15-02-2013, 01:26 PM
4.42. சீர் வகைகள்

(கலிவிருத்தம்)
நேரசையும் நிரையசையும் பல்வகையில் இணந்து
ஓரசைமுதல் நான்கசைவரை உருவாகும் சீர்களில்
ஈரசையும் மூவசையும் அதிகம் பயின்றும்
நான்கசைச் சீர்கள் அருகியும் வருமே.

(குறள் வெண்செந்துறை)
சீர்களின் வகைகளை நினைவினில் வைக்கச்
சீர்களின் வாய்பா டுகள்மிக உதவுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்வகைப் பெயர்தன் அசைத்தொகை பொறுத்து
ஓரசை ஈரசை மூவசை நாலசை
என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
திறமும் பிறவும் நோக்கி யவற்றை
அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
பொதுச்சீர் என்ற ஐவகைப் பெயர்களில்
அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீ ரென்பது ஓரசைச் சீரே
அகவற் சீர்கள் ஈரசை வகைகளே
வெண்சீ ரென்பது மூவசைக் காய்ச்சீர்
வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
பொதுச்சீ ரென்பது நாலசைச் சீர்களே.

4.43. ஓரசைச் சீர்

(ஆசிரியத் தாழிசை)
அசையொன்று தனிநின்று இசைநிறைக்க வருவதே
அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே.

(குறள் வெண்செந்துறை)
நாள் மலர் காசு பிறப்பு
என்பது ஓரசைச் சீர்வாய் பாடு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர் நிரை நேர்பு நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்கள்.
இறுதிச் சீரென வெண்பாவின் ஈற்றடியில்
இவற்றில் ஓன்று மட்டும் வருமே.

காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
நிரையுடன் சேர்ந்தா லாகும் நிரைபு.

தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லாத நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது நேர்பு
நிரையுடன் குற்றுகரம் சேர்வது நிரைபு.

மது-எனும் அசைச்சீர் நேர்பா மலரா?
து-எனும் எழுத்து குற்றுகர மாயினும்
ம-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
மதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
மலரெனக் குறிக்கும் வாயா டாகுமே.

மாசு என்பதில் குற்றிய லுகரம்
மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
காசெனும் வாய்பா டினிலே வருமே.

பந்து என்பதன் வாய்பா டென்ன?
பந்து என்பதில் பந்-எனும் நேரசை
குறிலொற்றுப் பெற்றதால் தனிக்குறி லன்று
குற்றுகரம் சேரக் காசு ஆகுமே.

உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
உவர்ப்பு என்று வந்தால் அதுவே
உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
பிறப்பெனும் வாய்பா டாகி வருமே.

(சிந்தியல் வெண்பா)
நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

ரமணி
19-02-2013, 01:13 PM
4.43. ஓரசைச் சீர் பயிற்சி

பயிற்சி 1. நாள்-மலர் அறிதல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/443-1.html

(இணைக்குறள் ஆசிரியப்பா)
வெண்பாக்கள் ஈற்றடி ஈற்றசையாய் வந்த
கீழுள்ள பதினைந்து சொற்களில் எட்டு
நாள்-மலர் என்னும் வாய்பாடு கொண்டன.
நாள்-மலர் எட்டையும் தெரிவு செய்து
நாள்-என வருவது கீழ்வரும் நிரலில்
அமைத்தே எழுதுக:
தனிக்குறில், தனிக்குறில் ஒற்றுடன்,
தனிநெடில், தனிநெடில் ஒற்றுடனே.
மலர்-என வருவது கீழ்வரும் நிரலில்
அமைத்தே எழுதுக.
குறிலிணை, குறிலிணை ஒற்றுடன்,
குறில்நெடில், குறில்நெடில் ஒற்றுடன் என்றே.

சொல் கொக்கு தா உறவு இசைந்து
லால் மழை கு வரைவு வீடு
மெலாம் மூப்பு சிறப்பு கலம் வினை

பயிற்சி 2. காசு-பிறப்பு அறிதல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/443-2_6412.html

(இணைக்குறள் ஆசிரியப்பா)
வெண்பாக்கள் ஈற்றடி ஈற்றசையாய் வந்த
கீழுள்ள பதினைந்து சொற்களில் ஏழு
காசு பிறப்பு வாய்பாடு கொண்டன.
காசு பிறப்பு ஏழும் தேர்ந்து
காசென வருவது கீழ்வரும் நிரலில்
அமைத்தே எழுதுக:
தனிக்குறில் ஒற்றுடன் குற்றுகரம், ... [தனிக்குறில்+உகரம் கூடாது]
தனிநெடில் குற்றுகரம்,
தனிநெடில் ஒற்றுடன் குற்றுகரம் என்றே.
பிறப்பென வருவது கீழ்வரும் நிரலில்
அமைத்தே எழுதுக.
குறிலிணை குற்றுகரம்,
குறிலிணை ஒற்றுடன் குற்றுகரம்,
குறில்நெடில் குற்றுகரம்,
குறில்நெடில் ஒற்றுடன் குற்றுகரம் என்றே.

கலம் சிறப்பு உறவு லால் கு
வீடு தா மழை கொக்கு மெலாம்
மூப்பு வினை இசைந்து சொல் வரைவு

*****

ரமணி
21-02-2013, 01:52 AM
4.44. ஈரசைச் சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்காம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இப்படி நான்கே.

ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்பது ஈரசைச் சீர்களின் வாய்பாடு.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நான்கு ஈரசைச் சீர்களே
சீரின் அசைநிரல் பெயரே சுட்டுமே.

அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர்.
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’

தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே.

அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்கள் பெயர்பெறும்.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே.

அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரிய வுரிச்சீர் என்றும் பெயர்பெறும்.

இயற்சீர் மட்டுமே அமைந்த குறளிது:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
புளிமா புளிமா மலர்-என அறிக.

*****

ரமணி
22-02-2013, 12:52 PM
4.44. ஈரசைச் சீர் பயிற்சி

நினைவிற் கொள்ள:
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்பன ஈரசைச் சீர்கள் அமைப்பு.

பயிற்சி 1. சீர் காணல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-1.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் குறள்தனை அலகிட் டறிந்து
சீர்களின் அசைகளை நன்கு நோக்கியே
சீர்களின் பெயர்களைச் செய்யுளின் அடிகள்
அமைந்திடு மாறு அமைத்து எழுதுக.

வலைதளக் குறிப்பு:
சீர்களின் பெயர்களை மின்னெலி சொடுக்கிட
சீர்களின் பெயர்களே பேழையில் விழுந்து
எழுதுதல் எளிதினில் கைவர உதவுமே.
[பேழை=textarea box]

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

*****

ரமணி
22-02-2013, 01:39 PM
பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்ற நிரலில் பொருளுடன் அமைந்து
வாய்க்கால் ரோஷம் நேசம் முதற்சீராய்
மூன்று அடிகள் வந்திட எழுதுக.

நேசம் ரோஷம் மிகுந்த வாய்க்கால் களிப்புறும் வருவதுன்
தகப்பனால் வரப்பில் மாமனே ஆவதே மிகுந்தால் நெஞ்சமே

*****

ரமணி
24-02-2013, 04:30 AM
பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-3.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவிளம் புளிமா கூவிளம் தேமா
கூவிளம் தேமா கருவிளம் புளிமா
புளிமா தேமா கருவிளம் கூவிளம்
மேல்வரும் நிரலில் அமையு மாறு
கீழ்வரும் சொற்களில் தேர்வு செய்து
அமைக்கவும் மூன்று செய்யுள் அடிகளே.

பெரிய சொற்களின் வீரம் புதுமைகள்
செயலினில் புலவர் சொல்லில் வழியிலோர்
வருமோ? பாம்பினைப் பார்த்தேன் பற்பல.

ரமணி
26-02-2013, 07:37 AM
4.43. ஓரசைச் சீர் பயிற்சி விடைகள்

பயிற்சி 1. நாள்-மலர் அறிதல்: விடை
கு சொல் தா லால் மழை கலம் வினை மெலாம்

பயிற்சி 2. காசு-பிறப்பு அறிதல்: விடை
கொக்கு வீடு மூப்பு உறவு சிறப்பு வரைவு இசைந்து

4.44. ஈரசைச் சீர் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. சீர் காணல்: விடை

மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்.

நிரைநிரை நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நிரை நேர்

கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் நாள்

பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்: விடை

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
வாய்க்கால் வரப்பில் வருவதுன் மாமனே
ரோஷம் மிகுந்த தகப்பனால் ஆவதே
நேசம் மிகுந்தால் களிப்புறும் நெஞ்சமே

பயிற்சி 3. ஒருசீர் ஒருமுறை: விடை

வழியிலோர் பெரிய பாம்பினைப் பார்த்தேன்
கருவிளம் புளிமா கூவிளம் தேமா

சொற்களின் வீரம் செயலினில் வருமோ?
கூவிளம் தேமா கருவிளம் புளிமா

புலவர் சொல்லில் புதுமைகள் பற்பல.
புளிமா தேமா கருவிளம் கூவிளம்

*****

ரமணி
27-02-2013, 12:57 PM
பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்: தேமா புளிமா கருவிளம் கூவிளம் நிரல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-4.html

கீழ்வரும் சீர்களைச் சரிவர அமைத்து
தேமா தேமா தேமா தேமா
புளிமா புளிமா புளிமா புளிமா
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
என்னும் நிரல்களில் அமைந்து வந்து
ஒரேவகை ஈரசைச் சீர்வரு மாறு
நாற்சீர் கொண்ட அளவடி எழுதுக,
கொன்றால் பசுமை மலரதன் கெஞ்சினால்
என்பன அடிகளில் முதற்சீ ரெனவர.

மிஞ்சினால் கொன்றால் வனமாம். பசுமை
தின்றால் கெஞ்சினால் கெஞ்சுவான். மணத்தினில்
மலரதன் போச்சு. மகிழ்ந்திடும் மனமிது.
மரங்கள் பாவம் அடர்ந்த மிஞ்சுவான்

*****

ரமணி
28-02-2013, 03:32 AM
பயிற்சி 5. அனைத்தும் ஒரே சீர்: தேமா
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-5.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

என்றும் வில்லின் கானல் ஒன்று வாசம் வண்ண நாருக் நீரா

காதல் --- --- காது
பூவின் --- --- குண்டு
ஒன்றே --- --- உண்டு
வான --- --- ஜாலம்

பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: புளிமா
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-6.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

கருணை துவைத்து இதயம் இலக்கு துணியை அமைதி

கவிஞன் --- ரசிகன் ---
அடித்துத் --- உலர்த்து ---
இறைவன் --- இருந்தால் ---

பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கருவிளம்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-7.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

குழலினும் புலவரும் வனத்தினில் உறைவன கலைஞரும் இனியது

--- --- புகழ்ந்திடும் புரவலன்
--- --- குழந்தைகள் மிழற்றுதல்
--- --- பலப்பல விலங்குகள்

பயிற்சி 8. அனைத்தும் ஒரே சீர்: கூவிளம்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-8.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

உள்ளதா? மென்னடை ஏறுமோ? கொண்டவள் சொத்துகள் அம்பலம்

ஏழையின் சொல்லிது --- ---
அன்னமும் நாணிடும் --- ---
தாவர ஜங்கமச் --- ---

*****

ரமணி
01-03-2013, 12:05 PM
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!

இந்தப் பயிற்சியிலிருந்து ஒவ்வொரு பயிற்சியையும் முயன்று பார்த்து
சரியான விடையை இங்குப் பதியும் முதல் பதிவுக்கு
மின்காசு (iCash Credits 100) வழங்கப்படும்... (முரசொலி)

பயிற்சி 9. செய்யுளடி அமைத்தல்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-9.html)

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஈரசைச் சீர்களே நான்கு பயின்று
பள்ளிக் குழந்தைகள் கற்றிடும் இந்த
அடிகள் மூன்றினை அமைத்து எழுதுக.

செல்வர்க் தாங்குதல் னாகும் செங்கோல்
இறைவ முறைமை கழகு வித்தவன்
செழுங்கிளை கழகு எழுத்தறி மன்னவர்க்

*****

பயிற்சி 10. செய்யுளடி அமைத்தல்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-10.html)

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஈரசைச் சீர்களே நான்கு பயின்று
புகழ்மிகு அப்பர் தேவாரப் பாடலின்
அடிகள் நான்கினை அமைத்து எழுதுக.

னெந்தை பொய்கையும் வீசு நீழலே.
வீணையும் வண்டறை மதியமும் மாலை
தென்றலும் ஈச மூசு வீங்கிள
மாசில் போன்றதே வேனிலும் யிணையடி

*****

ரமணி
02-03-2013, 08:13 AM
4.45. மூவசைச் சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
நேரசை நிரையசை சேர்ந்து வந்து
மூவசைச் சீர்கள் எட்டா கிடுமே.

ஈரசை இறுதியில் நேரசை சேர்ந்துவரும்
மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
ஈரசை இறுதியில் நிரையசை சேர்ந்துவரும்
மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர்.

’தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்’
என்பது காய்ச்சீர் வாய்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
என்னும் நால்வகை காய்ச்சீர் வகைகளே.

’தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி’
என்பது கனிச்சீர் வாய்பா டாகும்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
என்னும் நால்வகை கனிச்சீர் வகைகளே.

வெண்பாவுக் குரியதால் காய்ச்சீர் நான்கும்
வெண்சீர் வெண்பா வுரிச்சீர் என்று
இரண்டு பெயர்கள் பெற்று வருமே.

வஞ்சிப்பா வில்வரும் கனிச்ச்சீர் நான்கும்
வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்று
இரண்டு பெயர்கள் பெற்று வருமே.

தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க.

பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை]
--பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49

காய்கனிச் சீர்களுக்கு இன்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார்
ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம்.

(குறள் வெண்பா)
காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
கீழ்வரும் வெண்பா விலே.

(இன்னிசை அளவியல் வெண்பா)
ஆராரோ ஆரிரரோ கண்ணேநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் உன்கண்ணை மூடிவைத்து
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நானோய்ந்து தூங்குமுன்நீ தூங்கு.

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் காசு

கனிச்சீராம் வஞ்சியுரிச் சீர்களே வருகிற
சான்று கீழ்வரும் வஞ்சி அடிகளில்.

(குறளடி வஞ்சிப்பாவின் பகுதி)
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவியலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மண்முரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
--யா.கா.மேற்கோள்

தேமாங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி
கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி

*****

ரமணி
05-03-2013, 09:56 AM
4.45. மூவசைச் சீர் பயிற்சி

நினைவிற் கொள்ள:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
என்பன மூவசைச் சீர்களின் அமைப்பே.

பயிற்சி 1. சீர் காணல்: காய்ச்சீர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-1.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஔவையின் புகழ்மிகு மூதுரை வெண்பாவை
அவ்வளவும் மூவசைக் காய்ச்சீர் பயில
மாற்றி யெழுதிய கீழ்வரும் செய்யுளின்
காய்ச்சீர் பெயர்களை மட்டும் குறிக்கவும்.

(வெண்கலிப்பா)
நெல்லுக்கே இறைத்தநீரும் வாய்க்காலின் வழியோடிப்
புல்லுக்கும் அவ்விடத்தில் பொசிவதாகும் -- தொல்லுலகில்
நல்லவராய் ஒருவரேனும் உளராகில் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமந்த மழை.

பயிற்சி 2. சீர் காணல்: கனிச்சீர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-2.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஔவையின் புகழ்மிகு மூதுரை வெண்பாவை
அவ்வளவும் மூவசைக் கனிச்சீர் பயில
மாற்றி யெழுதிய கீழ்வரும் செய்யுளின்
கனிச்சீர் பெயர்களை மட்டும் குறிக்கவும்.

(வெண்டுறை)
நெல்லுக்கென இறைத்தநீரது வாய்க்கால்வழி யோடிவந்திடப்
புல்லுக்குமே வழியெங்கிலும் பொசிவதாகுமே -- தொல்லுலகினில்
நல்லாரென ஒருவராவது உள்ளாரெனில் அவர்பொருட்டென
எல்லார்க்குமே பெய்வதாகுமே மழை.

*****

ரமணி
06-03-2013, 03:37 AM
பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்:
தேமா புளிமா கருவிளம் கூவிளம் நிரல்: விடை

கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
பசுமை மரங்கள் அடர்ந்த வனமாம்.
மலரதன் மணத்தினில் மகிழ்ந்திடும் மனமிது.
கெஞ்சினால் மிஞ்சுவான் மிஞ்சினால் கெஞ்சுவான்.

*****


பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்: தேமா புளிமா கருவிளம் கூவிளம் நிரல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-4.html

கீழ்வரும் சீர்களைச் சரிவர அமைத்து
தேமா தேமா தேமா தேமா
புளிமா புளிமா புளிமா புளிமா
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
என்னும் நிரல்களில் அமைந்து வந்து
ஒரேவகை ஈரசைச் சீர்வரு மாறு
நாற்சீர் கொண்ட அளவடி எழுதுக,
கொன்றால் பசுமை மலரதன் கெஞ்சினால்
என்பன அடிகளில் முதற்சீ ரெனவர.

மிஞ்சினால் கொன்றால் வனமாம். பசுமை
தின்றால் கெஞ்சினால் கெஞ்சுவான். மணத்தினில்
மலரதன் போச்சு. மகிழ்ந்திடும் மனமிது.
மரங்கள் பாவம் அடர்ந்த மிஞ்சுவான்

*****

ரமணி
08-03-2013, 03:17 AM
பயிற்சி 5. அனைத்தும் ஒரே சீர்: தேமா: விடை

காதல் கானல் நீரா காது
பூவின் வாசம் நாருக் குண்டு
ஒன்றே ஒன்று என்றும் உண்டு
வான வில்லின் வண்ண ஜாலம்

பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: புளிமா: விடை

கவிஞன் இலக்கு ரசிகன் இதயம்
அடித்துத் துவைத்து உலர்த்து துணியை
இறைவன் கருணை இருந்தால் அமைதி

பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கருவிளம்: விடை

புலவரும் கலைஞரும் புகழ்ந்திடும் புரவலன்
குழலினும் இனியது குழந்தைகள் மிழற்றுதல்
வனத்தினில் உறைவன பலப்பல விலங்குகள்

பயிற்சி 8. அனைத்தும் ஒரே சீர்: கூவிளம்: விடை

ஏழையின் சொல்லிது அம்பலம் ஏறுமோ?
அன்னமும் நாணிடும் மென்னடை கொண்டவள்
தாவர ஜங்கமச் சொத்துகள் உள்ளதா?

*****


பயிற்சி 5. அனைத்தும் ஒரே சீர்: தேமா
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-5.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

என்றும் வில்லின் கானல் ஒன்று வாசம் வண்ண நாருக் நீரா

காதல் --- --- காது
பூவின் --- --- குண்டு
ஒன்றே --- --- உண்டு
வான --- --- ஜாலம்

பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: புளிமா
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-6.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

கருணை துவைத்து இதயம் இலக்கு துணியை அமைதி

கவிஞன் --- ரசிகன் ---
அடித்துத் --- உலர்த்து ---
இறைவன் --- இருந்தால் ---

பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கருவிளம்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-7.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

குழலினும் புலவரும் வனத்தினில் உறைவன கலைஞரும் இனியது

--- --- புகழ்ந்திடும் புரவலன்
--- --- குழந்தைகள் மிழற்றுதல்
--- --- பலப்பல விலங்குகள்

பயிற்சி 8. அனைத்தும் ஒரே சீர்: கூவிளம்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-8.html)

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

உள்ளதா? மென்னடை ஏறுமோ? கொண்டவள் சொத்துகள் அம்பலம்

ஏழையின் சொல்லிது --- ---
அன்னமும் நாணிடும் --- ---
தாவர ஜங்கமச் --- ---

*****

ரமணி
09-03-2013, 04:41 AM
பயிற்சி 9. செய்யுளடி அமைத்தல்: விடை

எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை
--அதிவீரராம பாண்டியன், வெற்றிவேற்கை

பயிற்சி 10. செய்யுளடி அமைத்தல்: விடை

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
--அப்பர் தேவாரம் 5.90.1

*****


நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!

இந்தப் பயிற்சியிலிருந்து ஒவ்வொரு பயிற்சியையும் முயன்று பார்த்து
சரியான விடையை இங்குப் பதியும் முதல் பதிவுக்கு
மின்காசு (iCash Credits 100) வழங்கப்படும்... (முரசொலி)

பயிற்சி 9. செய்யுளடி அமைத்தல்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-9.html)

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஈரசைச் சீர்களே நான்கு பயின்று
பள்ளிக் குழந்தைகள் கற்றிடும் இந்த
அடிகள் மூன்றினை அமைத்து எழுதுக.

செல்வர்க் தாங்குதல் னாகும் செங்கோல்
இறைவ முறைமை கழகு வித்தவன்
செழுங்கிளை கழகு எழுத்தறி மன்னவர்க்

*****

பயிற்சி 10. செய்யுளடி அமைத்தல்
(http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/02/444-10.html)

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஈரசைச் சீர்களே நான்கு பயின்று
புகழ்மிகு அப்பர் தேவாரப் பாடலின்
அடிகள் நான்கினை அமைத்து எழுதுக.

னெந்தை பொய்கையும் வீசு நீழலே.
வீணையும் வண்டறை மதியமும் மாலை
தென்றலும் ஈச மூசு வீங்கிள
மாசில் போன்றதே வேனிலும் யிணையடி

*****

ரமணி
10-03-2013, 04:37 AM
4.45. மூவசைச் சீர் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. சீர் காணல்: காய்ச்சீர்: விடை

தேமாங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய்

பயிற்சி 2. சீர் காணல்: கனிச்சீர்: விடை

தேமாங்கனி கருவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
தேமாங்கனி கருவிளங்கனி தேமாங்கனி கருவிளங்கனி
தேமாங்கனி கூவிளங்கனி

*****


4.45. மூவசைச் சீர் பயிற்சி

நினைவிற் கொள்ள:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
என்பன மூவசைச் சீர்களின் அமைப்பே.

பயிற்சி 1. சீர் காணல்: காய்ச்சீர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-1.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஔவையின் புகழ்மிகு மூதுரை வெண்பாவை
அவ்வளவும் மூவசைக் காய்ச்சீர் பயில
மாற்றி யெழுதிய கீழ்வரும் செய்யுளின்
காய்ச்சீர் பெயர்களை மட்டும் குறிக்கவும்.

(வெண்கலிப்பா)
நெல்லுக்கே இறைத்தநீரும் வாய்க்காலின் வழியோடிப்
புல்லுக்கும் அவ்விடத்தில் பொசிவதாகும் -- தொல்லுலகில்
நல்லவராய் ஒருவரேனும் உளராகில் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமந்த மழை.

பயிற்சி 2. சீர் காணல்: கனிச்சீர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-2.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஔவையின் புகழ்மிகு மூதுரை வெண்பாவை
அவ்வளவும் மூவசைக் கனிச்சீர் பயில
மாற்றி யெழுதிய கீழ்வரும் செய்யுளின்
கனிச்சீர் பெயர்களை மட்டும் குறிக்கவும்.

(வெண்டுறை)
நெல்லுக்கென இறைத்தநீரது வாய்க்கால்வழி யோடிவந்திடப்
புல்லுக்குமே வழியெங்கிலும் பொசிவதாகுமே -- தொல்லுலகினில்
நல்லாரென ஒருவராவது உள்ளாரெனில் அவர்பொருட்டென
எல்லார்க்குமே பெய்வதாகுமே மழை.

*****

ரமணி
11-03-2013, 04:59 AM
பயிற்சி 3. சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

நாவுணர்த்தும். வெண்ணிறத்தி அவ்வகையே லொன்றினாலும்
பயன்படுதல் மாயமாகும் எரிந்தபின்னர் கரைந்துவந்து

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கற்பூரம் கடலுப்பு ----- -----
கற்பூரம் கடலுப்புப் ----- -----
கற்பூரம் சுடர்விட்டு ----- -----
வற்றாத கடலுப்பு ----- -----

*****

ரமணி
12-03-2013, 04:38 AM
பயிற்சி 4. சீர் நிரல் வர அமைத்தல்: கனிச்சீர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-4.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

வரம்வேண்டுவோம் மலர்போலவே வீற்றிருப்பது
மணமிகுந்திடும் மலர்மீதிலே கண்டால்மனம்

வெண்டாமரை ----- கலைமகளவள் -----
----- நிறைவெய்திட ----- பூமகளிடம்
வெண்டாமரை ----- ----- உள்மனவெளி.

*****

ரமணி
14-03-2013, 03:05 AM
பயிற்சி 3. சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்: விடை

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
(தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்)
கற்பூரம் கடலுப்பு வெண்ணிறத்தி லொன்றினாலும்
கற்பூரம் கடலுப்புப் பயன்படுதல் அவ்வகையே
கற்பூரம் சுடர்விட்டு எரிந்தபின்னர் மாயமாகும்
வற்றாத கடலுப்பு கரைந்துவந்து நாவுணர்த்தும்.

*****


பயிற்சி 3. சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

நாவுணர்த்தும். வெண்ணிறத்தி அவ்வகையே லொன்றினாலும்
பயன்படுதல் மாயமாகும் எரிந்தபின்னர் கரைந்துவந்து

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கற்பூரம் கடலுப்பு ----- -----
கற்பூரம் கடலுப்புப் ----- -----
கற்பூரம் சுடர்விட்டு ----- -----
வற்றாத கடலுப்பு ----- -----

*****

ரமணி
14-03-2013, 03:06 AM
பயிற்சி 4. சீர் நிரல் வர அமைத்தல்: கனிச்சீர்: விடை

(ஆசிரியத் தாழிசை)
(தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி)
வெண்டாமரை மலர்மீதிலே கலைமகளவள் வீற்றிருப்பது
கண்டால்மனம் நிறைவெய்திட வரம்வேண்டுவோம் பூமகளிடம்
வெண்டாமரை மலர்போலவே மணமிகுந்திடும் உள்மனவெளி.

*****


பயிற்சி 4. சீர் நிரல் வர அமைத்தல்: கனிச்சீர்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-4.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

வரம்வேண்டுவோம் மலர்போலவே வீற்றிருப்பது
மணமிகுந்திடும் மலர்மீதிலே கண்டால்மனம்

வெண்டாமரை ----- கலைமகளவள் -----
----- நிறைவெய்திட ----- பூமகளிடம்
வெண்டாமரை ----- ----- உள்மனவெளி.

*****

கீதம்
14-03-2013, 01:07 PM
தொடரும் தங்கள் சீரிய முயற்சிக்கு நன்றியும் பாராட்டும் ரமணி ஐயா...

நேரமிருக்கும்போதெல்லாம் தொடர்கிறேன்.

ரமணி
15-03-2013, 01:23 PM
பயிற்சி 5. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நிரல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-5.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

அடிபற்றி காசென்ன முயலொன்று நாவினிலே
எவருக்கும் நடந்திடுவான் மானிடனே வானத்தில்

----- ----- விழித்திருக்கும் வெண்ணிலவில்
ஆசானின் ----- ----- மாணவனே
----- பணமென்ன குணமிருந்தால் -----
தேனென்றால் ----- தினவெடுக்கும் -----

பயிற்சி 6. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
நிரல் ஒழுங்கின்றி
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-6.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் புளிமாங்காய்
புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

வெண்முகிலின் படபடத்த வானத்தின் இதழ்களிலே
பாவமொன்று தேனீக்கள் திகிலோங்கும் உண்டோசொல்

----- பரப்பினிலே ----- சுவடில்லை
பழியொன்று ----- வழியெதுவும் -----
----- பாவையவள் நெஞ்சத்தில் -----
பூவிரித்த ----- ----- உறவாடும்

*****

ரமணி
18-03-2013, 02:58 PM
பயிற்சி 5. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நிரல்: விடை

வானத்தில் முயலொன்று விழித்திருக்கும் வெண்ணிலவில்
ஆசானின் அடிபற்றி நடந்திடுவான் மாணவனே
காசென்ன பணமென்ன குணமிருந்தால் மானிடனே
தேனென்றால் எவருக்கும் தினவெடுக்கும் நாவினிலே

பயிற்சி 6. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
நிரல் ஒழுங்கின்றி: விடை

வானத்தின் பரப்பினிலே வெண்முகிலின் சுவடில்லை
தேமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் புளிமாங்காய்

பழியொன்று பாவமொன்று வழியெதுவும் உண்டோசொல்
புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய்

படபடத்த பாவையவள் நெஞ்சத்தில் திகிலோங்கும்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்

பூவிரித்த இதழ்களிலே தேனீக்கள் உறவாடும்
கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்

*****


பயிற்சி 5. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நிரல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-5.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

அடிபற்றி காசென்ன முயலொன்று நாவினிலே
எவருக்கும் நடந்திடுவான் மானிடனே வானத்தில்

----- ----- விழித்திருக்கும் வெண்ணிலவில்
ஆசானின் ----- ----- மாணவனே
----- பணமென்ன குணமிருந்தால் -----
தேனென்றால் ----- தினவெடுக்கும் -----

பயிற்சி 6. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
நிரல் ஒழுங்கின்றி
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-6.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் புளிமாங்காய்
புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய்
கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய் புளிமாங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

வெண்முகிலின் படபடத்த வானத்தின் இதழ்களிலே
பாவமொன்று தேனீக்கள் திகிலோங்கும் உண்டோசொல்

----- பரப்பினிலே ----- சுவடில்லை
பழியொன்று ----- வழியெதுவும் -----
----- பாவையவள் நெஞ்சத்தில் -----
பூவிரித்த ----- ----- உறவாடும்

*****

ரமணி
19-03-2013, 04:39 AM
பயிற்சி 7. ஒருசீர் ஒருமுறை: கனிச்சீர்:
நிரல் ஒழுங்கிலும் ஒழுங்கின்றியும்
ஹ்த்த்ப்://கவிதையில்யப்பு-பயிர்ச்சி.ப்லொக்ச்பொத்.இன்/௨0௧௩/0௩/௪௪௫-௭.ஹ்த்ம்ல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி புளிமாங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி தேமாங்கனி
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

இமைகவிழ்ந்திடும் காற்றுவாங்கையில் மழைபெய்யுமுன் மகிழும்நிலை
தூக்கம்வரும் தூங்கிடும்நிலை கருமுகில்குழு தேனுண்டிடத்

----- விழிசோர்ந்திட ----- எப்பொழுதிலும்
காதல்மகள் ----- கடற்கரையிலே -----
மலரமர்ந்திடும் முரல்வண்டினம் ----- -----
----- ----- காரிருளிலே சூழ்வந்திடும்

பயிற்சி 8. அனைத்தும் ஒரே சீர்: தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நிரல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக,
முதலடி யெல்லாம் தேமாங் காயும்
இரண்டாம் அடியினில் புளிமாங் காயும்
மூன்றாம் அடியிலில் கருவிளங் காயும்
நான்காம் அடியில் கூவிளங் காயும்
நிரலெனச் சீர்கள் அமைந்து வரவே.

சிதைவுறுமே உருவங்கள் எழுந்துவந்து திருவாகின்
நாமெல்லாம் ஓமென்னும் பாடலிலும் பாவையவள்

----- நாதத்தில் பூலோகம் -----
கருவெல்லாம் ----- ----- அறிவாகும்
கடலலைகள் ----- கரையினிலே -----
ஆடலிலும் ----- ----- வல்லவளே

*****

கீதம்
19-03-2013, 08:43 AM
பயிற்சி 7:

தூக்கம்வரும் விழிசோர்ந்திட இமைகவிழ்ந்திடும் எப்பொழுதிலும்
காதல்மகள் மகிழும்நிலை கடற்கரையிலே காற்றுவாங்கையில்
மலரமர்ந்திடும் முரல்வண்டினம் தேனுண்டிடத் தூங்கிடும்நிலை
மழைபெய்யுமுன் கருமுகில்குழு காரிருளிலே சூழ்வந்திடும்

பயிற்சி 8:

ஓமென்னும் நாதத்தில் பூலோகம் நாமெல்லாம்
கருவெல்லாம் திருவாகின் உருவங்கள் அறிவாகும்
கடலலைகள் எழுந்துவந்து கரையினிலே சிதைவுறுமே
ஆடலிலும் பாடலிலும் பாவையவள் வல்லவளே

முயற்சி செய்திருக்கிறேன். சரியா என்று சொல்லுங்கள் ரமணி ஐயா.

ரமணி
19-03-2013, 01:01 PM
வணக்கம் கீதம் அவர்களே.

Perfect! வலைப்பூ பயிற்சிகளில் நான் பெரும்பாலும் விடைகளைத் தட்டெழுதுவதைத் தவிர்ப்பதால் பயிற்சிகளுக்குக் கண்டறிந்த விடையைத் தயாரிப்பது உங்களுக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை யல்லவா?

என் மகிழ்ச்சியின் எதிரொலியாக உங்களுக்கு iCash Credits 500 அளித்துள்ளேன்!

அன்புடன்,
ரமணிபயிற்சி 7:

தூக்கம்வரும் விழிசோர்ந்திட இமைகவிழ்ந்திடும் எப்பொழுதிலும்
காதல்மகள் மகிழும்நிலை கடற்கரையிலே காற்றுவாங்கையில்
மலரமர்ந்திடும் முரல்வண்டினம் தேனுண்டிடத் தூங்கிடும்நிலை
மழைபெய்யுமுன் கருமுகில்குழு காரிருளிலே சூழ்வந்திடும்

பயிற்சி 8:

ஓமென்னும் நாதத்தில் பூலோகம் நாமெல்லாம்
கருவெல்லாம் திருவாகின் உருவங்கள் அறிவாகும்
கடலலைகள் எழுந்துவந்து கரையினிலே சிதைவுறுமே
ஆடலிலும் பாடலிலும் பாவையவள் வல்லவளே

முயற்சி செய்திருக்கிறேன். சரியா என்று சொல்லுங்கள் ரமணி ஐயா.

ரமணி
19-03-2013, 02:25 PM
பயிற்சி 9. செய்யுளடி அமைத்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-9.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
யாதானும் எனத்தொடங்கும் குறட்பா முதல்வர
பல்குழுவும் எனத்தொடங்கும் குறட்பா பின்வரக்
காய்ச்சீர்கள் அதிகமாகப் பயில்வது நோக்கியே
ஆய்ந்தறிந்து ஒழுங்கில் எழுதுக அமைத்தே,

ஊராமால் நாடு. வேந்தலைக்கும் சாந்துணையுங்
இல்லது பல்குழுவும் நாடாமால்
வாறு. உட்பகையும் கல்லாத என்னொருவன்
கொல்குறும்பும் யாதானும் பாழ்செய்யும்

*****

ரமணி
21-03-2013, 05:33 AM
பயிற்சி 10. செய்யுளடி அமைத்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/03/445-10.html

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
எண்சீர்க்கழி நெடிலடி விருத்தம் அமைந்து
வானரங்கள் எனத்தொடங்கும் செய்யுளிரு அடிகளை
நான்கு சீர்கள் வரிகளில் வருமாறு
நான்கு வரிகளில் எழுதுக அமைத்தே.

மந்திசிந்து கெஞ்சும் கானவர்கள் மந்தியொடு
வானவரை வான்கவிகள் கனிகொடுத்து வானரங்கள்
வந்துவந்து கமனசித்தர் கனிகளுக்கு விழியெறிந்து
விளைப்பார். காயசித்தி கொஞ்சும் யழைப்பார்

*****

ரமணி
21-03-2013, 06:55 AM
4.46. நாலசைச் சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியில்
நேரசை நிரையசை சேர்ந்து வந்திடும்
நாலசைச் சீர்கள் பதினா றாகுமே.

நாலசைச் சீர்கள் பதினா றில்வரும்
தண்பூ நான்கு நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு நறுநிழல் நான்கு.

நாலசைச் சீர்கள் அமைவது அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும்.

நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்று அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்று அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமாம்.

(ஆசிரியத் தாழிசை)
’தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ’
’தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ’
என்பன பூச்சீர் வாய்பா டாகும்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர்நேர் நேர்நிரைநேர்நேர்
நேர்நேர்நிரைநேர் நிரைநேர்நிரைநேர் நிரைநிரைநிரைநேர் நேர்நிரைநிரைநேர்
என்னும் எட்டு பூச்சீர் வகைகளே.

(ஆசிரியத் தாழிசை)
’தேமாந்தண்ணிழல் புளிமாந்தண்ணிழல் கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்’,
’தேமாநறுநிழல் புளிமாநறுநிழல் கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல்’
என்பன நிழற்சீர் வாய்ப்பா டாகும்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர்நிரை நிரைநேர்நேர்நிரை நிரைநிரைநேர்நிரை நேர்நிரைநேர்நிரை
நேர்நேர்நிரைநிரை நிரைநேர்நிரைநிரை நிரைநிரைநிரைநிரை நேர்நிரைநிரைநிரை
என்னும் எட்டு நிழற்சீர் வகைகளே.

வெண்பா ஒழிந்த பிறபாக் களிலே
பொதுப்பட வந்து நிற்பத னாலே
பொதுச்சீர் என்று நாலசை பெயர்பெறும்.

பொதுவெனும் சொல்லிங்கு பொதுமக்கள் என்பதில்போல்
சிறப்பற்ற சாதாரணம் என்றே பொருள்படும்
இதனால் நாலசைச் சீர்கள் செய்யுளில்
பொதுவென் பதனால் அருகியே வருமே.

நாலசைச் சீர்களை அலகிடும் போது
பூச்சீர் களெட்டும் காய்ச்சீர் எனவும்
நிழற்சீர் களெட்டும் கனிச்சீர் எனவும்
கொண்ட லகிட்டுத் தளைகாண வேண்டுமே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சான்றாக ’வடிவார்கூந்தல் மங்கையரும்’ என்பது
போன்ற தொடர்களை அலகிடும் போது
வடி/வார்/கூந்/தல் மங்/கைய/ரும்
புளிமாந்தண்பூ கூவிளங்காய் என்றுவரும் சீர்களை
புளிமாங்காய் கூவிளங்காய் என்றே கொண்டு
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை
என்றே தளைதனைக் காணுதல் வேண்டுமே.

(கலித்தாழிசை)
’அங்கண்வானத் தமரரசரும்’ அலகிட
அங்/கண்/வா/னத் தம/ரர/சரும் என்று
தேமாந்தண்பூ கருவிளங்கனி யாகித்
தேமாங்காய் கருவிளங்கனி என்றே கருதக்
காய்முன் நிரைவரும் கலித்தளை பயிலுமே.

’வெங்கண்வினைப்பகை விளிவெய்த’ அலகிட
வெங்/கண்/வினைப்/பகை விளி/வெய்/த
தேமாநறுநிழல் புளிமாங்காய் என்னும் சீர்களைத்
தேமாங்கனி புளிமாங்காய் என்றே கருதக்
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித் தளையாகும்.

’அந்தரதுந்துபி நின்றியம்ப’ அலகிட
அந்/தர/துந்/துபி நின்/றியம்/ப
கூவிளந்தண்நிழல் கூவிளங்காய் என்னும் சீர்களைக்
கூவிளங்கனி கூவிளங்காய் என்றே கருதக்
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித் தளையாகும்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சிப் பாவினில் பொதுச்சீர் வரலாம்
வெண்பா தன்னில் வருதல் ஆகாது
குற்றுகரம் வந்தால் ஒழியப் பொதுச்சீர்
அகவல் கலியெனும் பாக்களில் வராதே.

பூச்சீர் நிழற்சீர் நாமைத்த சொற்றொடர்கள்:
(கலிவிருத்தம்)
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதுகாண்பாய்
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய்
வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இப்படிச் சொற்களை முயன்றமைத் தாலும்
இவைபோல் வந்திடும் சொற்கள் பிரிந்திட
நாலசை அமைவது அரிதெனப் புரியுமே.

*****

ரமணி
25-03-2013, 02:55 PM
4.50. தளை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைதல் என்றால் பிணித்தல் கட்டுதல்
தளைத்தல் எனினும் அதுவே யாகும்
தளையெனும் சொல்லில் விளையும் பொருள்கள்
கட்டு கயிறு விலங்கு சிலம்பென
ஒட்டிப் பிணைத்து இசைந்திட வைக்குமே.

பூக்களை நாரினால் கட்டித் தளைக்கப்
பூச்சரம் ஒன்றுரு வாவது போலே
சீர்களைச் செய்யுளில் இசைவரத் தளைக்க
சீர்களின் தொடரென அடியுரு வாகுமே.

4.51. தளையென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீரொடு சீர்சேர்த் தியற்றும் அடியிலே
சீர்களின் இடைநின் றவற்றைப் பிணித்திடும்
செய்யுளின் உறுப்பு தளையெனப் படுமே.

சீர்கள் இரண்டு சேரும் போது
முதலில் நிற்பது நின்றசீர் ஆகும்
எதிரில் வருவது வரும்சீர் ஆகுமே.

இடமிருந்து வலமெழுதும் இன்றமிழ்ச் செய்யுளில்
இடப்புறம் நிற்பது நின்றசீர் ஆகும்
வலப்புறம் வருவது வரும்சீர் ஆகுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
சீர்கள் இரண்டு தளைப்பது காண
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.
எனவே
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றியோ ஒன்றாதோ கூடி நிற்பது
தளையெனும் உறுப்பின் இலக்கண மாகுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகள் பெரிதும் சீரிடை வரினும்
அடிகளுக் கிடையிலும் தளைகள் வருவன
அடியிடைத் தளைகள் வருவது காண
நின்ற அடியின் ஈற்றுச்சீர் ஈற்றசையும்
வருகிற அடியின் முதற்சீர் முதலசையும்
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.

*****

ரமணி
26-03-2013, 03:21 PM
4.52. தளை வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்
வருவது ஒன்றிய தளையெனப் படுமே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும்
மாறி வருவது ஒன்றாத் தளையாம்.

தன்சீர் தனதொடு ஒன்றலும் உறழ்தலும்
என்றிரண் டாகும் இயம்பின தளையே.
---இலக்கண விளக்கம், 717

நேர்முன் நேர்வர ஒன்றுதல்:
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
ஒன்றும் ஒன்றாத் தளைகள் குறிப்பில்
நின்ற சீரே சீர்ப்பெயர் தாங்கும்
எதிர்வரும் சீரின் முதலசை பெயர்பெறும்.

தனிச்சொல்
ஏனெனில்

நேர்முன் நேரசை ஒன்றிடும் போது
நின்ற சீரது இயற்சீ ராகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது தேமா புளிமா வாகுமே

தனிச்சொல்
அல்லது

நின்ற சீரது மூவசை யாகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது நான்கில் ஒருகாய்ச் சீராம்
வருவது யாதொரு சீரென் றாயினும்
வரும்சீர் முதலசை நேரசை யாகும்

தனிச்சொல்
இதனால்

நேர்முன் நேரசை ஒன்றுதல் குறிக்க
மாமுன் நேரென, காய்முன் நேரென
நின்றசீர் வருமசை நோக்கிக் குறிப்பரே.

நிரைமுன் நிரைவர ஒன்றுதல்:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இயற்சீர் முன்நிரை யொன்றும் போது
நின்ற சீரது விளச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
விளம்முன் நிரைவர ஒன்றுத லென்பரே
நின்ற சீரது கனிச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
கனிமுன் நிரைவர ஒன்றுத லென்பரே.

நேர்நிரை முன்வர ஒன்றாமை:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேர்முன் நிரைவரும் ஒன்றாமை குறிக்க
மாமுன்நிரை காய்முன்நிரை யெனும்வாய் பாடும்
நிரைமுன் நேர்வரும் ஒன்றாமை குறிக்க
விளம்முன்நேர் கனிமுன்நேர் யெனும்வாய் பாடும்
தளைகள் அறிய மிகவும் பயன்படும்.
தளைவாய் பாடில் ’முன்’எனும் சொல்லுக்கு
எதிர்வரும் என்று பொருள்கொளல் வேண்டுமே.

*****

ரமணி
30-03-2013, 03:04 PM
4.53. எழுவகைத் தளைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சீர்முன் சீர்வர எழுந்திடும் தளைகள்
சீர்வகை சார்ந்து ஏழு வகைகளில்
எழுவது அறிதல் எளிதில் ஆகுமே.

சீர்களின் வகைகள் மூன்றினில் அமையும்
ஈரசை பயிலும் இயற்சீர் ஒருவகை
மூவசை பயிலும் காய்ச்சீர் ஒருவகை
மூவசை பயிலும் கனிச்சீர் ஒருவகை.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கு
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டு.

இயற்சீர் நான்கும் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
கலிப்பா வுக்கென்று தனிச்சீர் இலையெனில்
கலிப்பா வுக்கோர் தனித்தளை யுண்டு.

நின்றசீர் வரும்சீர் ஒன்றிட வரும்தளை
நான்கு வகைகளில் அமைந்து வருமே
மூன்றினில் அமையுமே ஒன்றாத தளைவகை.

ஒன்றும் தளைகள் நால்வகைப் பெயர்களில்:
நேரொன்று நிரையொன்று ஆசிரி யத்தளை
வெண்சீர் வெண்டளை ஒன்றிய வஞ்சித்தளை.
ஒன்றாத் தளைகள் மூவகைப் பெயர்களில்:
இயற்சீர் வெண்டளை கலித்தளை மற்றும்
ஓன்றாத வஞ்சித்தளை என்பன அவையே.

ஈரசைச் சீர்நின்று இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் நேரொன் றாசிரியம்
நிரையசை யொன்றுதல் நிரை யொன்றாசிரியம்.
நேர்நிரை யொன்றாமை இயற்சீர் வெண்டளை.

மூவசை பயிலும் சீர்வகை எட்டில்
காய்சீர் நின்று இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் வெண்சீர் வெண்டளை
நிரையசை யொன்றாமை கலித்தளை யாகுமே.

கனிச்சீர் நின்று இனிவரும் சீரோடு
நிரையசை யொன்றுதல் ஒன்றிய வஞ்சித்தளை
நேரசை யொன்றாமை ஒன்றாத வஞ்சியே.

தளைகளின் பெயர்களை நோக்கிடும் போது
ஆசிரியப் பாவிற்குத் தளைகள் இரண்டும்
வெண்பா விற்குத் தளைகள் இரண்டும்
கலிப்பா விற்குத் தளையென ஒன்றும்
வஞ்சிப் பாவிற்குத் தளைகள் இரண்டும்
என்றே எழுவகை பிரிவது காண்போம்.

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
ஆயிரு தளைகள் ஆசிரியப் பாவிற்கும்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
ஆயிரு தளைகள் வெண்பா விற்கும்
கலித்தளை யொன்றே கலிப்பா விற்கும்
ஒன்றிய வஞ்சி ஒன்றாத வஞ்சி
ஆயிரு தளைகள் வஞ்சிப்பா விற்கும்
உரிய தளையென அறியப் படுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
நின்றசீர் வரும்சீர் ஒரேவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்புடைத் தளைகளாம்
நின்றசீர் வரும்சீர் வேறுவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்பில்லாத் தளைகளாம்
அதாவது
இயற்சீரோ காய்ச்சீரோ அன்றிக் கனிச்சீரோ
நின்றதும் வருவதும் அதுவே ஆயின்
வந்திடும் தளைகள் சிறப்புடை யனவாம்
சீர்களின் வகைகள் கலந்து வருவது
சிறப்பில்லாத் தளைகள் என்பதை அறிவோம்.

*****

ரமணி
06-04-2013, 06:03 AM
4.54. தளை வாய்பாடுகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேலே கண்ட தளைவகை விவரம்
கீழே உள்ள வாய்பா டுகளில்
எளிதில் விளங்கிட நினைவில் வைப்போம்.

மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
என்பன இயற்சீர்த் தளைவாய் பாடாம்.

காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகுமே
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன காய்கனிச் சீர்தளை வாய்பாடு.

4.55. எழுதளைச் சான்றுகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரொன்றாசிரியத்தளை:
வெற்றி வாழி வீரம் வாழி
...
உண்மை வாழி ஊக்கம் வாழி
---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை

வெற்/றி வா/ழி வீ/ரம் வா/ழி
உண்/மை வா/ழி ஊக்/கம் வா/ழி
தேமா தேமா தேமா தேமா

கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிது.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

நிரையொன்றாசிரியத்தளை:
மங்கல குணபதி மணக்குளக் கணபதி!
---பாரதியார்

மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்

தேமா கூவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் கருவிளம் புளிமா தேமா
என்னும் நிரல்கள் தனித்தோ சேர்ந்தோ
மன்னும் சுழலில் நேர்நிரை யொன்றும்
ஆசிரியத் தளைகள் மட்டுமே வந்து
அகவல் ஒழுகிசை தகவுற அமையுமே.

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
வேறொன் றிலாது இவ்விரு தளைகளே
சீரிடை அடியிடை வருமா றெழுதினால்
சொற்களை வலிந்து கொள்வது நேர்ந்து
சொல்லும் பொருளின் ஓட்டம் தடைப்பட
இவற்றுடன் இயற்சீர் வெண்டளை விரவுதல்
அகவற் பாக்களில் மிகவும் காணலாம்.

அகவற் றளைகள் இயற்சீர் வெண்டளை
அகவற் பாவினில் விரவிடும் போது
அகவற் றளைகள் அதிகம் வந்தால்
அகவல் ஓசை தகவுறக் கேட்கும்.

இயற்சீர் வெண்டளை:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03

மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு

தளைகள் குறளில் நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்து வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க.

வெண்சீர் வெண்டளை:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.

(குறள் வெண்செந்துறை)
வெண்சீரின் வெண்டளையே வந்ததுகாண் இக்குறளில்
சீரிடையே பாதமிடை காய்முன்நேர் வந்திடவே.

மேல்வந்த அடிகள் இரண்டிலும் கூட
வெண்சீர் வெண்டளை பயில்வது நோக்குக.

கலித்தளை:
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள்

காய்ச்சீர்முன் நிரைவரவே கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடையே பயில்வதனை எளிதாக அறியலாமே.

ஒன்றிய வஞ்சித்தளை:
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நய*ஆகமப்
---கி.வா.ஜ.

யோ/கத்/தினர் உரை/மறை/யினர்
ஞா/னத்/தினர் நய/*ஆ/கமப்

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க.

ஒன்றாத வஞ்சித்தளை:
புனல்பொழிவன சுனையெல்லாம்;
பூநாறுவ புறவெல்லாம்;
வரைமூடுவ மஞ்செல்லாம்;
---யா.கா.வி.

கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க.

*****

ரமணி
10-04-2013, 02:16 PM
4.56. எழுதளை நிரல்கள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாற்சீர் கொண்ட அளவடி யொன்றிலும்
நாற்சீர் அளவடி பல்கிடும் போதும்
சீரிடை அடியிடை ஒன்றெனத் தளைத்து
எழுவகைத் தளைகளும் எழுந்திடும் நிரல்வகை
சுழலுற வருவது கீழே காண்போம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
நேரொன்றாசிரியத்தளை: தேமா
அடிகள் அனைத்திலும் தேமா வந்தால்
தேமா தேமா தேமா தேமா
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
மாமுன் நேர்வரும் தொடரில் அமைய
நேரொன் றாசிரி யத்தளை பயின்று
ஏந்திசை யகவல் ஓங்கி வருமே.
சான்றாக
விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

நிரையொன்றாசிரியத்தளை: கருவிளம்
அடிகள் அனைத்திலும் கருவிளம் வந்தால்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
விளம்முன் நிரைவரும் தொடரில் அமைய
நிரையொன் றாசிரி யத்தளை பயின்று
தூங்கிசை யகவல் ஏங்கி வருமே.
சான்றாக
விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே ... ... ... [விசி=கட்டு]
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

இயற்சீர் வெண்டளை: புளிமா
அடிகள் அனைத்திலும் புளிமா வந்தால்
புளிமா புளிமா புளிமா புளிமா
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
மாமுன் நிரைவரும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும்
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

இயற்சீர் வெண்டளை: கூவிளம்
அடிகள் அனைத்திலும் கூவிளம் வந்தால்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
என்னும் ஒன்றே நிரலில் சுழன்று
விளம்முன் நேர்வரும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

இயற்சீர் வெண்டளை: தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
அடிகள் அனைத்திலும் இப்படி நிரல்வர
இந்த நிரலே சுழலில் வந்து
மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
மாறி வந்திடும் தொடரில் அமைய
இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்று
தூங்கிசைச் செப்பல் ஏங்கி வருமே.
சான்றாக
விண்ணும் நிலமும் நிகழ்த்திடும் விந்தைகள்
எண்ணில் அடங்காக் கணக்கினில் ஆகுமே
என்னும் அடிகளை நோக்கிடு வோமே.

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய்
(பல விகற்ப பஃறொடை வெண்பா)
அடிகளிலே தேமாங்காய்ச் சீரொன்றே வந்துநின்றால்
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விண்ணோக்கின் மண்ணோக்கின் காண்கின்ற ஆச்சர்யம்
எண்ணேதும் கொள்ளாத எண்ணிக்கை யாயாகும்
மேல்வரிகள் காட்டிடுமே சான்று.

வெண்சீர் வெண்டளை: கூவிளங்காய்
(பல விகற்ப பஃறொடை வெண்பா)
அடிகளிலே கூவிளங்காய்ச் சீரொன்றே வந்துநின்றால்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விண்வெளியில் மண்ணிலத்தில் காணுகின்ற விந்தைபல
எண்களிலே வந்திடாத கோடிவகை யாகிடுமே
மேல்வரிகள் காட்டிடுமே சான்று.

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
(பல விகற்ப பஃறொடை வெண்பா)
அடிகளிலே தேமாங்காய் கூவிளங்காய் வந்துநின்றால்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
என்றநிரல் சுற்றிவந்து வெண்பாவின் சீராகி
காய்முன்நேர் வந்துநிற்கும் வெண்சீரின் வெண்டளையில்
ஏந்திசையின் செப்பலோசை கேள்.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விண்மீதும் பூமியிலும் காண்கின்ற விந்தைகளே
எண்ணேதும் சுட்டிடாத எண்ணிக்கை யாகிடுமே
மேல்வரிகள் காட்டிடுமே சான்று.

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலித்தளை: புளிமாங்காய்
அடிகளிலே புளிமாங்காய் இதுவொன்றே வருமானால்
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பின்கண் நிலத்தின்கண் நிகழ்கின்ற வியப்பேபார்
விசியேதும் அடக்காத கணக்கொன்றின் விரிவாகும்
கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இதுமூன்றும்.

கலித்தளை: கருவிளங்காய்
அடிகளிலே கருவிளங்காய் இதுவொன்றே வருமானால்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பினிலே நிலத்தினிலே நிகழ்ந்துவரும் வியப்புகளாம்
விசித்தலிலே அடங்கிடாத கணக்கினிலே விரிவதாகும்
கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இவைமூன்றும்.

கலித்தளை: புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்
அடிகளிலே புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்வந்தால்
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
எனும்நிரலில் சுழல்வந்து கலிப்பாவின் அடிகளாகி
நிரைவருமுன் வரும்காயின் கலித்தளையே பயின்றுவந்து
எந்திசைத்துள் ளலோசையென எழுந்துவரச் செவியுறலாம்.

விசும்பின்கண் நிலத்தினிலே நிகழ்கின்ற வியப்புகளாம்
விசியேதும் அடக்கிடாத கணக்கொன்றில் விரிவதாகும்
கலித்தளையே பயின்றுவரும் வரிகளாகும் இவைமூன்றும்.

(வஞ்சிப்பா, வஞ்சியினங்களில் அடங்காத அளவடி வஞ்சித்தளை அடிகள்)
ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி
அடிகள்தனில் புளிமாங்கனிக் கனிச்சீரிது முழுதும்வர
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்பின்வெளி நிலத்தின்வெளி நிகழ்ந்தேவரும் வியப்பானது
விசியேதிலும் அடங்காவரும் கணக்கொன்றதன் விரிவாகுமே
கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.

ஒன்றிய வஞ்சித்தளை: கருவிளங்கனி
அடிகள்தனில் கருவிளங்கனிக் கனிச்சீரிது முழுதும்வர
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்புமீதிலும் நிலவெளியிலும் தினம்நிகழ்கிற வியப்புகள்பல
விசியெதுவிலும் அடங்கிடாவரும் கணக்குதனிலே விரிந்துநிற்குமே
கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்
அடிகள்தனில் புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்வந்திடப்
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி
எனும்நிரலதன் சுழலமைந்திட தளைவஞ்சியின் அடிகளாகிட
கனிமுன்நிரை யெனவொன்றிடும் தளைவஞ்சியே பயின்றுவந்திட
எந்திசைவரும் ஒலித்தூங்கலே அடங்கிவருதல் செவியில்வரும்.

விசும்பின்வெளி நிலவெளியிலும் நிகழ்ந்தேவரும் வியப்புகள்பல
விசியேதிலும் அடங்கிடாவரும் கணக்கொன்றினில் விரிந்துநிற்குமே
கனியொன்றிடும் தளைவஞ்சியின் வரிகளாவன இவைமூன்றுமே.

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி
அடிகள்தனில் தேமாங்கனிச் சீரொன்றென முற்றும்வர
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
அகவல்வரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்ணின்வழி மண்ணின்வழி நேர்ந்தேவரும் ஆச்சர்யமே
எண்ணேதுமே கட்டாதுள எண்ணிக்கையில் நின்றேவரும்
கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.

ஒன்றாத வஞ்சித்தளை: கூவிளங்கனி
அடிகள்தனில் கூவிளங்கனிச் சீரொன்றென முற்றும்வர
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
அகவல்வரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்வழியினில் மண்வழியினில் நேர்ந்திடுகிற ஆச்சரியமே
எண்வழியினில் கட்டவியலா எண்ணதுவினில் நின்றுவருமே
கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி கூவிளங்கனி நிரல்
அடிகள்தனில் தேமாங்கனி கூவிளங்கனி முற்றும்வர
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி
என்னும்நிரல் சுற்றில்வர வஞ்சித்தளை துஞ்சியேவர
கனிமுன்வரும் நேரசையினால் ஒன்றாதுள வஞ்சித்தளை
அகவல்வரும் தூங்கலோசையாய் ஏங்கிவருதல் காதில்விழும்.

விண்ணின்வழி மண்வழியினில் நேர்ந்தேவரும் ஆச்சரியமே
எண்ணேதுமே கட்டவியலா எண்ணிக்கையில் நின்றுவருமே
கனியொன்றிடா வஞ்சித்தளை முற்றும்வரும் மூன்றடிகளில்.

*****

ரமணி
13-04-2013, 07:13 AM
4.57. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
எழுதளை நிரல்களின் சான்றுகள் பலவும்
பழுதற விரிவில் நோக்கிய பின்னர்
எழுதளை நிரல்களின் வாய்பா டுகளைச்
சுழல்வரச் சுருக்கமாய்க் குறிப்பிடு வோமே.

நேரொன்றாசிரியத்தளை
நேரொன் றாசிரியத் தளைவர ஒரேவழி
தேமா தேமா தேமா தேமா
என்னும் சீர்களின் சுற்றில் மட்டுமே.

நிரையொன்றாசிரியத்தளை
நிரையொன் றாசிரியத் தளைவர ஒரேவழி
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
என்னும் சீர்களின் சுற்று மட்டுமே.

இயற்சீர் வெண்டளை
இயற்சீர் வெண்டளை இசைந்தே வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனிதனிச் சுற்றில்
ஒன்றோ பலவோ அடிகளில் உறுத்தலாம்:
புளிமா புளிமா புளிமா புளிமா
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்

வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை விளங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்

கலித்தளை
கலித்தளை துள்ளிக் கலித்து வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்

ஒன்றிய வஞ்சித்தளை
ஒன்றிய வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி

ஒன்றாத வஞ்சித்தளை
ஒன்றாத வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி

*****

ரமணி
14-04-2013, 06:38 AM
4.58. தளைகள் மயக்கம்

(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஒவ்வொரு பாவுக்கும் ஒன்றோ மேலோ
அவ்வகைத் தளையே உரித்தா யிருப்பினும்
அவ்வகைத் தளைவர இயற்றுதல் கடினம்.
இதனால்
வெண்பா தவிர்த்த பாவகை இனங்களில்
தன்தளை தவிரப் பிறதளை மயங்குமே.

வெள்ளையுட் பிறதளை விரவா அல்லன
எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்.
---யாப்பருங்கலம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தன்தளை யொன்றே வந்திடும் பாக்களில்
இன்னிசை இயல்பாய் நடப்பது காணலாம்
இன்னிசை இயல்பாய் நடப்பது என்பது
ஏந்திசைத் தூங்கிசை வகைகளில் வருவதே.

பிறதளை மயங்கி வந்திடும் பாக்களில்
ஒழுகிசை பிரிந்திசை வகைகள் வருதலால்
இன்னிசை இயல்பாய் நடத்தல் இயலாதே.

எல்லாத் தளையும் மயங்கினும் தன்றளை
அல்லாத் தளையாற் பாவினி தியலா
---யாப்பருங்கலம்

***

யாப்ப ருங்கல விருத்தி யுரைக்கும்
ஒருவகைப் பாவினில் பிறதளை மயங்குதல்
பலவகை களில்விகற் பித்து வருமே.

ஆசிரிய அடியுள் தளை மயக்கம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
ஆசிரிய அடியினில் மயங்கிடும் தளைவகை
வெண்டளை ஆசிரியம்
வெண்டளை கலித்தளை
வெண்டளை மட்டுமே
கலித்தளை மட்டுமே
வெண்டளை வஞ்சித்தளை
வஞ்சி ஆசிரியம்
வஞ்சி கலித்தளை
என்று பலவகை விகற்பித்து வருமே.

சான்று
(நேரிசை ஆசிரியப்பா)
நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின்
விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவ
னுண்டுசிலம் பேறி யோங்கிய விருங்கழைப்
படிந்தமாக் களிறு பயிற்றுமென்ப
மடியாக் கொலைவில் லென்னையர் மலையே.
--யாப்பருங்கலம்

நெடுவரைச் (இவெ) சாரற் (இவெ) குறுங்கோட்டுப் (கத) பலவின் (நேஆ)
விண்டுவார் (இவெ) தீஞ்சுளை (இவெ) வீங்குகவுட் (கத) கடுவ (நேஆ)
னுண்டுசிலம் (வெவெ) பேறி (நேஆ) யோங்கிய (நிஆ) விருங்கழைப் (நிஆ)
படிந்தமாக் (நிஆ) களிறு (இவெ) பயிற்றுமென்ப (கத)
மடியாக் (இவெ) கொலைவில் (நேஆ) லென்னையர் (நிஆ) மலையே.

***

கலி அடியுள் தளை மயக்கம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
கலிவரும் அடியினில் மயங்கிடும் தளைவகை
தன்தளை ஆசிரி யத்தளை யுடனே
தன்தளை வெண்டளை
தன்தளை ஆசிரியம் வெண்டளை
வெண்டளை மட்டும்
ஆசிரியம் மட்டும்
தன்தளை வஞ்சித்தளை
வஞ்சி ஆசிரியம்
வஞ்சி வெண்டளை
வஞ்சி ஆசிரியம் தன்தளை
வஞ்சி தன்தளை வெண்டளை
வஞ்சி வெண்டளை ஆசிரியம்
வஞ்சித்தளை மட்டுமே
என்று பலவகை விகற்பித்து வருமே.

சான்று
(சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா)
குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவிற் றகையுறூ*உ மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீ*இத் தாங்குவனந் தோன்றப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
எனவாங்கு
ஆனொடு புல்லிய பெரும்புதன் முனையுங்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.
--யாப்பருங்கலம்

குடநிலைத் (இவெ) தண்புறவிற் (வெவெ) கோவல (நிஆ) ரெடுத்தார்ப்பத் (கத)
தடநிலைப் (நிஆ) பெருந்தொழுவிற் (கத) றகையுறூஉ (கத) மரம்பாய்ந்து (வெவெ)
வீங்குமணிக் (கத) கயிறொரீ*இத் (வெவெ) தாங்குவனந் (வெவெ) தோன்றப்போய்க் (கத)
கலையினொடு (கத) முயலிரியக் (கத) கடிமுல்லை (கத) முறுவலிப்ப
எனவாங்கு
ஆனொடு (இவெ) புல்லிய (நிஆ) பெரும்புதன் (நிஆ) முனையுங் (நேஆ)
கானுடைத் (நிஆ) தவர்தேர் (நேஆ) சென்ற (நேஆ) வாறே.

***

வஞ்சி அடியுள் தளை மயக்கம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)
வஞ்சி அடியினில் மயங்கிடும் தளைவகை
வெண்டளை மட்டும்
ஆசிரியம் மட்டும்
கலித்தளை மட்டும்
முச்சீர் அடிவரும் வஞ்சிப் பாவினில்
தன்தளை வெண்டளை
ஆசிரியம் தன்தளை
கலித்தளை தன்தளை
வெண்டளை ஆசிரியம்
வெண்டளை கலித்தளை
கலித்தளை ஆசிரியம்
என்று பலவகை விகற்பித்து வருமே.

கீழ்வரும் வஞ்சிப் பாவின் அடிகளில்
ஆள்கிற தளைவகை அறிந்தே
அடைப்புக் குறிக்குள் உள்ள
தளைவகை எண்ணுடன் ஒப்புதல் நோக்குக.

சான்று
(குறளடி வஞ்சிப்பா)
பூம்பொழிற் றண்கானல்
புனல்பொழி தண்படப்பை
வீநாறு பூங்காஞ்சிக்
கானாறு கோட்டெருமைக்
குழக்கன்று பிழைத்தோடிக்
காய்த்துறுப பெருஞ்செந்நெல்
தேய்த்துழக்கு மதுநோனார்
எனவாங்குத்
தீங்கழை வாங்கி விலங்கும்
பூம்புனல் ஊர புலம்பா னாளே.
--யாப்பருங்கலம்

[தளைகள்: தனிச்சொல் முன்னடிகள்:
இயற்சீர் வெண்டளை: 2; வெண்சீர் வெண்டளை: 6; கலித்தளை: 5]
தனிச்சொல் பின்னடிகள்:
இயற்சீர் வெண்டளை: 4; நேரொன்றசிரியத்தளை: 2;]

*****

ரமணி
17-04-2013, 02:40 AM
4.59. தளைப் பயிற்சி
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/04/459-1.html

நினைவிற் கொள்ள:
மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகும்
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன எழுதளை வாய்பா டாகும்.

பயிற்சி 1. தளைவர அமைத்தல்: நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்

கீழ்வரும் அடிகளில் கருவிளம் தேமாச்
சீர்கள் கலந்து உள்ளதைப் பிரித்து
முதலிரண் டடிகளில் நேரொன் றாசிரியம்
பின்னிரண் டடிகளில் நிரையொன் றாசிரியத்
தளைகள் வந்திட அமைத்து எழுதுக
முன்னம் பின்னால் இனிவரும் பணிவுடன்
என்பன அடிகளின் முதற்சீ ராய்வர.

இனிவரும் பின்னிப் செய்த பணிவுடன்
கனிவுறும் தினங்களில் புகழினைப் பரவுவோம்.
இன்னல் பின்னால் இறைவனின் எல்லாம்
முன்னம் சூழும் பின்னி. மனம்பெறப்

*****

ரமணி
19-04-2013, 01:47 PM
4.59. தளைப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. தளைவர அமைத்தல்:
நேரொன்று நிரையொன்று ஆசிரியத்தளைகள்: விடை

நேரொன்றாசிரியத் தளை:
முன்னம் செய்த இன்னல் எல்லாம்
பின்னால் சூழும் பின்னிப் பின்னி.

நிரையொன்றாசிரியத் தளை:
இனிவரும் தினங்களில் கனிவுறும் மனம்பெறப்
பணிவுடன் இறைவனின் புகழினைப் பரவுவோம்.

*****

ரமணி
19-04-2013, 02:19 PM
4.59. தளைப் பயிற்சி
பயிற்சி 2. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்டளை

கலைந்த சொறகளை ஒழுங்கினில் அமைத்து
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்னும் நிரல்வர அடிகள் நாலில்
இயற்சீர் வெண்டளை பயில எழுதுக
காக்கை யாக்கை எஞ்சும் மிஞ்சும்
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே.

மிஞ்சும் காக்கை விருந்தினர் எஞ்சும்
விரைத்தால் கரைந்தால் இனிவரும் பெயரும்
வாசலில் வாசலில் வினைகள் யாக்கை
மறைந்திடும் உறவினர் யோனியில் நாட்செல.

*****

ரமணி
22-04-2013, 04:53 AM
பயிற்சி 2. தளைவர அமைத்தல்:
இயற்சீர் வெண்டளை: விடை

காக்கை கரைந்தால் விருந்தினர் வாசலில்
யாக்கை விரைத்தால் உறவினர் வாசலில்
எஞ்சும் வினைகள் இனிவரும் யோனியில்
மிஞ்சும் பெயரும் மறைந்திடும் நாட்செல.

*****

ரமணி
22-04-2013, 05:11 AM
பயிற்சி 3. தளைவர அமைத்தல்: இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/04/459-3.html

கீழ்வரும் அடிகளின் சீர்களைப் பிரித்து
முன்வரும் அடியிணை இயற்சீர் வெண்டளை
பின்வரும் அடியிணை வெண்சீர் வெண்டளை
நாவலர் நானலம் நாவலரும் நாவன்மை
என்பன அடிகளின் முதற்சீராய் வரவே
அடிகள் நான்கினில் அமைத்து எழுதுக.

பாவலர் கொண்டானே. நாவன்மை நாவலரும்
நானலம் கைநலம் பாவன்மை நாவலர்
கைவண்மை நாடிவரும் காவலனே பாநலம்
பாவலரும் நாடிடும் கொண்டவன். காவலன்

*****

ரமணி
26-04-2013, 01:52 PM
பயிற்சி 3. தளைவர அமைத்தல்:
இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்: விடை

இயற்சீர் வெண்டளை:
நாவலர் பாவலர் நாடிடும் காவலன்
நானலம் பாநலம் கைநலம் கொண்டவன்.

வெண்சீர் வெண்டளை:
நாவலரும் பாவலரும் நாடிவரும் காவலனே
நாவன்மை பாவன்மை கைவண்மை கொண்டானே.

*****

ரமணி
02-05-2013, 01:52 PM
’4.59 தளைப் பயிற்சி’யில் மீதமுள்ள ஏழு பயிற்சிகளையும் என் ’கவிதையில் யாப்பு’ வலைப்பூவில் முனைந்துபார்த்து விடைகளையும் அறிந்துகொள்ளலாம்:
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

*****

ரமணி
02-05-2013, 02:20 PM
4.60. அடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடியெனும் சொல்லின் பொருளாய் வருகிற
அடிக்கால் ஆதி பாதம் என்பன ... ... ... ... [அடிக்கால்=காலின் அடிப்பாகம்]
அடியெனும் உறுப்பில் ஆகி வருமே.

செய்யுள் எழுதல் சீர்களில் என்றால்
செய்யுள் பேசுதல் ஓசையில் என்றால்
செய்யுள் உருத்தல் பாவினில் என்றால்
செய்யுள் நடத்தல் அடிகளில் எனலாம்
செய்யுள் அடிகளில் பாவகை தெரியுமே.

சீர்களும் தளைகளும் பாவகை பெயர்பெற ... ... [அகவல், வெண்பா, வஞ்சி உரிச்சீர்கள்; கலித்தளை]
சீர்களும் தளைகளும் அடிகளில் தொடர
செய்யுளின் ஆதி வடிவே அடியென.

4.61. அடியென்பது

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு
முடிவது அடியென இலக்கணம் கூறும்
இதையே ஒன்று முதலிய தளைகள்
அடுத்து முடிவது அடியென உரைப்பரே.

முடிவது என்பது பொருள்குறித் தல்ல
முடிவது அடியில் சீர்தளைத் தொடுப்பே
முடிவது அடியெனில் தளையும் ஓசையும்
வடிவுறும் பொருளும் அடிகளில் தொடருமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
சீர்-தளை அடிகளில் எண்ணிப் பார்த்தால்
சீர்களின் எண்ணில் ஒன்று குறைவெனத்
சீரிடைத் தளைகள் மொத்தம் வருமே.
எனினும்
சீர்களின் இடையிலும் அடிகளின் இடையிலும்
பாக்களில் தளைகள் பெரிதும் வருவதால்
ஈற்றுச் சீரின் தளையும் சேர்த்திட
சீர்-தளை எண்ணே அடியினில் சமமே.
இப்படிப்
பாவின் மொத்தச் சீர்களின் கணக்கில்
பாவின் மொத்தத் தளைகளின் கணக்கே
ஒன்று குறைவெனக் கண்டு கொள்க.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்

மேல்வந்த அடிகளில் சீர்களை எண்ணிட
1நெல்லுக் 2கிறைத்தநீர் 3வாய்க்கால் 4வழியோடிப்
5புல்லுக்கு 6மாங்கே 7பொசியுமாம் -- 8தொல்லுலகில்
மொத்தம் எட்டு வருவது காண்க.

மேல்வந்த அடிகளில் தளைகளை எண்ணிட
நெல்லுக்1 கிறைத்தநீர்2 வாய்க்கால்3 வழியோடிப்4
புல்லுக்கு5 மாங்கே6 பொசியுமாம்7 -- தொல்லுலகில்
மொத்தம் ஏழே வருவது காண்க.

*****

ரமணி
04-05-2013, 07:17 AM
4.62. அடி வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகளின் அமைப்பை நிர்ணயம் செய்யும்
மரபுகள் இரண்டு வழிகள் இரண்டு:
சீர்கள் எண்ணுதல் எழுத்துகள் எண்ணுதல்
சீர்கள் எண்ணுதல் சீர்வகை அடியிலே
எழுத்துகள் எண்ணுதல் கட்டளை அடியிலே
வழக்கினில் பெரிதும் சீர்வகை அடிகளே.

கட்டளை அடிகள்
கட்டளைக் கலித்துறை அடியொன் றினிலே
நேரில் தொடங்கின் பதினா றெழுத்துகள்
நிரையில் தொடங்கின் பதினே ழெழுத்துகள்.

எண்ணப் படுகிற எழுத்துகள் வகையில்
ஒருமாத் திரையொலி உயிர்மெய் உயிருமே.
ஒற்றெழுத் துகளும் ஆய்த எழுத்தும்
குற்றிய லுகரமும் எண்ணப் படாதெனின்
முற்றிய லுகரம் எண்ணப் பட்டுக்
கட்டளை அடியில் அளவினை வரைக்குமே. ... ... ... [தொல்.செய்.42]

தொல்காப் பியம்தரும் கட்டளை அடிகளில்
ஒல்கும் எழுத்துகள் ஓர்க்கும் போது
குறளடி யில்வரும் நான்குமுதல் ஆறுவரை
சிந்தடி யில்வரும் ஏழுமுதல் ஒன்பது
அளவடி பத்துமுதல் பதிநான் குவரை
நெடிலடி பதினைந் துமுதல் பதினேழு
கழிநெடில் பதினெட் டுமுதல் இருபதே.

எழுத்தில் இயங்கும் கட்டளை அடிக்கு
வி.எஸ். ராஜம் புத்தகம்* தருகிற ... ... ... [பக்.142]
உரைகளில் வருகிற சான்றுகள் கீழே.

’பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து’
பே-பே சா-சா என்னும் நான்கு
குற்றிய லிகரம் கணக்கில் வராத
எழுத்துகள் வருவதால் குறளடி யாமே.

’நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்’
நீ-வா கொ-ட நீ-ல மூ-வா
எட்டெழுத் துவரும் சிந்தடி யாமே.

’நன்மணங் கமழும் பன்னல் லூர’
ந-ம-ண க-ம-ழு ப-ன லூ-ர
பத்தெழுத் துவரும் நேரடி யாமே.

’அணிநகை நசை*இய அரியமர் சிலம்பின்’
அ-ணி-ந-கை ந-சை-இ-ய அ-ரி-ய-ம சி-ல-பி
பதினைந் எழுத்தில் நெடிலடி யாமே.

’நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்’
ந-ளி-மு-ழ-வு மு-ழ-கி-ய அ-ணி-நி-ல-வு ம-ணி-ந-க
பதினெட் டெழுத்தில் கழிநெடி லடியாம்.

[*Ref: 'A Reference Grammar of Classical Tamil Poetry' by V.S.Rajam]

சீர்வகை அடிகள்
சீர்வகை அடிகள் மொத்தம் ஐந்து.
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடில் எனவரும் வகைகள் ஐந்தே.

சீர்கள் இரண்டில் முடிவது குறளடி
சீர்கள் மூன்றில் முடிவது சிந்தடி
சீர்கள் நான்கில் முடிவது அளவடி
சீர்கள் ஐந்தில் முடிவது நெடிலடி
சீர்கள் ஆறும் மேலும் கழிநெடில்
சீர்கள் நான்கில் முடியும் அளவடி
அடியின் இயற்கை அளவெனச் சொல்வரே.

அடிகளின் பெயரெலாம் காரணப் பெயர்களே
வடிவினில் தீரக் குள்ளனைக் ’குறளன்’
அவனின் நெடியான் ’சிந்தன்’ நெடியான்
அவனினும் ’அளவிற் பட்டான்’ தீர
நெடியான் ’கழிய நெடியான்’ என்று
வடிவம் சுட்டிய பெயர்கள் வழக்கிலே
முன்னொரு காலம் மன்னிய தாலே
வடிவம் சுட்டி அடிப்பெயர் இட்டனர்.

’நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ ... ... ... [தொல்.செய்.31]
தளையும் தொடையும் நேரடி குறித்தே ... ... ... [நேரடி=அளவடி]
’அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ ... ... ... [தொல்.செய்.34]

அளவடி தொட்டே பிறவகை அடிகள்
அளவுகள் குறித்துப் பெயர்கள் பெறுவன.
அளவடி தொட்டே தொடைகளின் பெயர்களும்.
தளைகள் குறிக்கவும் பொதுவில் அளவடி.
அளவடி இயல்வன மூவகைப் பாக்கள்
அகவல் வெண்பா கலிப்பா எனவே.
குறளடி சிந்தடி வஞ்சியில் வருமே.

சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.
கழிநெடி லடிகள் பொதுவில் வரிகள்
ஒன்றின் மிக்கு எழுதப் படுமே.

*****

ரமணி
09-05-2013, 01:02 PM
4.63. குறளடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒருதளை யடுத்(து)இரு சீரில் முடிவது
குறளடி யென்னும் குறுவடி யாமே.
அடிவகை அனைத்திலும் குறுமை யுடையதாய்க்
கடிதின் ஒலிக்கக் குறளடி யெனப்படும்.

வஞ்சிப் பாவினுக் குறியது குறளடி
வஞ்சியடி யல்லாத தாய்வரும் குறளடிக்கு
நான்குமுதல் ஆறுவரை எழுத்தளவு கூறுவார்
தொல்காப் பியர்தம் தொல்கப் பியத்திலே. ... ... ... [தொல்.செ.35]

கட்டளைக் குறளடிச் சான்று
கட்டளைக் குறளடிச் சான்றெனப் பார்க்க
ஒவ்வொரு அடியிலும் ஐந்தெழுத் துவரும்
வஞ்சித் துறையடி கீழே வருமே.

பேரறி வன்னான்
சார விருந்த
வூரினு மில்லென்
றார விகழ்ந்தே
---தொன்னூல் விளக்கம், 242

இவ்விதம் இன்னொரு சான்று பகர
ஒவ்வொரு அடியிலும் ஆறெழுத் துவரும்
செவ்விய குறளடி சூளா மணிதரும்.

நிரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
---சூளாமணி 738

குறளடிப் பொருளை ஆறெழுத் துவரும்
குறளடி களிலே கீழுள்ள வாறு
குறையா தெழுத நிறைவாய் விளங்குமே.

கரிய கவசமாய்க்
கருமை வண்டுகள்
நிரைந்து மொய்த்திடும்
நறுமை மாலையாய் ... ... ... [நறுமை=வாசனை]

மேல்வரும் சான்றுகள் சீர்வகை நோக்கிலும்
ஏலுதல் காண்க சீர்கள் இரண்டில் ... ... ... [ஏலுதல்=பொருந்துதல்]
இருவகை நோக்கிலும் குறளடி யெனவே.

சீர்வகைக் குறளடிச் சான்று
எழுத்துகள் மிகினும் சீர்கள் இரண்டால்
குறளடி யெனவரும் புகழ்மிகு சான்று
தருவது யா.க. விருத்தி கீழே.

சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
---யாப்பருங்கல விருத்தி, பக்.64

இவ்வடிகள் பொருள்நோக்கின்:
சுறாமீன் ஆறெல்லாம்
இறால்மீன் இல்நிறையும்
மீன்திரியும் அகழிகளில்
தேன்மலர்கள் சோலையிலே

*****

ரமணி
15-05-2013, 01:35 PM
4.63. குறளடி முயற்சி: கட்டளைக் குறளடி

(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் குறளடி முயன்றிடு வோமா?
நான்குமுதல் ஏழுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் குறளடி புனைவோம் முதலிலே.

கந்தன் சிந்தை வந்து விந்தை
என்னும் சொல்வகை அடியெது கைவர
நாமம் நம்முளம் ஏற்றுதல் செய்தல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
கந்தனை எண்ணி
வந்தனை செய்து
விந்தைகள் புரிய வேண்டிடு வோமே.

நான்கு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தன் நாமம்
சிந்தை ஏற்றில்
வந்தே நம்முள்
விந்தை செய்வான்.
[சீர்கள்: எல்லாம் தேமா; தளைகள்: எல்லாம் நேரொன்றாசிரியம்; ஓசை: ஏந்திசை யகவல்]

ஐந்து எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமம்
சிந்தையில் ஏற்ற
வந்தே நம்முளம்
விந்தைசெய் வானே!
[சீர்கள்: கூவிளம் தேமா; தளைகள்: இயற்சீர் வெண்டளை நேரொன்றாசிரியம்;
ஓசை: ஒழுகிசை யகவல்]

ஆறு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமமே
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் மனதில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

கந்தனின் நாமத்தைச்
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் உள்ளத்தில்
விந்தைகள் செய்வானே!
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: எல்லாம் வெண்டளை; ஓசை: ஒழுகிசைச் செப்பல்]

ஏழு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் திருநாமம்
சிந்தையில் ஏற்றினாலே
வந்துநம் மனதிலே
விந்தைகள் செய்திடுவான்.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

4.63. குறளடி முயற்சி: சீர்வகைக் குறளடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கட்டளைக் குறளடி முயன்ற பின்னர்
சீர்வகைக் குறளடி முயலுதல் எளிது
சீர்கள் இரண்டில் தளையொலி தகைக்கவே.

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்ய

வஞ்சிப் பாவில் தனிச்சொல் முன்வரும்
கொஞ்சப் பகுதியிது; மீதம் உள்ளதைத்
தக்க தனிச்சொல் சுரிதகம் இவற்றின்
பக்க பலம்சேர்த்துப் பின்னர்க் காண்போம்.

விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ?

இதுவும் வஞ்சிப் பாவின் பகுதி
இனிவரும் தனிச்சொல் சுரிதகம் கொண்டு
இதனின் எதிர்மறை பின்னர் முடிப்போம்.

*****

ரமணி
20-05-2013, 01:53 PM
4.63. குறளடிப் பயிற்சி

குறளடிப் பயிற்சிகள் இரண்டையும் கீழுள்ள வலைதளத்தில் செய்துபார்க்கவும்:
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

*****

ரமணி
25-05-2013, 12:47 PM
4.64. சிந்தடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இருதளை யடுத்தே இயலும் சிந்தடி
சீர்வகை யாயின் முச்சீர் அமையும்
எழுத்தடி யாயின் ஏழெட் டொன்பதே.

வஞ்சிப் பாவிற் குரித்தென அமையினும்
வெண்பா ஈற்றடி சிந்தடி யாய்வரும்
நேரிசை யகவலின் ஈற்றய லடியிலும்
இணைக்குற ளகவலின் இடையிலும் வருமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)
தொல்காப்பியம் தரும் அடிகளின் பெயர்கள்
எழுத்துகள் கொண்டு இயல்வன ஆயினும்
சங்க காலம் தொட்டே பாக்கள்
சீர்வகை அடிகளில் யாக்கப் பட்டன
இதனால்
சீர்களை எண்ணியே அடிகளின் பெயர்களைச்
காரிகை போன்ற நூல்களும் குறித்தன
எழுத்துகள் எண்ணும் கட்டளை அடிகள்
வழக்கில் வந்தது பிற்கா லத்தே.

கட்டளைச் சிந்தடிச் சான்று
அடிகள் தோறும் எழுத்துகள் ஒன்பதில்
முடிவுறும் சிந்தடிச் சான்று கீழே.
இவ்வகை அடிகள் வருவன அரிதே.

இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 736

சீர்வகைச் சிந்தடிச் சான்று
வாளா வார்கழல் வீக்கிய
தாளார் தாமுடைந் தோடினார்
நாளை நாணுடை மங்கைமார்
தோளை நாணிலர் தோயவே.
---தோலாமொழித் தேவர், சூளாமணி, 1355

நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரம்
சேறணி வளவயற் சிரபுரமே
---சம்பந்தர் தேவாரம், 1177

பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி.
---இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், கானல் வரி, 26

வள்ளியப்பா பாப்பாப் பாட்டில் நெஞ்சை
அள்ளும் எளிய சொற்கள் வேய்ந்த
சிந்தடி சீராய்ச் சிரிப்பது காண்பீர்.

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒண்ணு வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்
பந்து போல ஆனது
பலமாய் நானும் ஊதினேன்
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தாள் பார்க்கலாம்--அல்லது
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்!
---குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

வெண்பா ஈற்றடிச் சான்றுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்ணிறப் பாவெனிலும் வண்ணங்கள் இறைக்கும்
வெண்பாவின் ஈற்றடியில் பலவகை ரசங்களில்
கண்ணையும் கருத்தையும் கவரும் சான்றுகள்
திண்ணைப் பேச்செனப் பறிமாறிக் கொள்வோமே.

திருக்குறள்
என்புதோல் போர்த்த உடம்பு.
இம்மையும் இன்பம் தரும்.
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
ஞாலத்தின் மாணப் பெரிது.
அன்றே மறப்பது நன்று. 5
எச்சத்தாற் காணப் படும்.
பிறவும் தமபோல் செயின்.
ஆரிருள் உயித்து விடும்.
மலையிணும் மாணப் பெரிது.
நாவினாற் சுட்ட வடு. 10
என்றும் இடும்பை தரும்.
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
அழுக்காறு இல்லாத இயல்பு.
தீவினை என்னும் செருக்கு.
தீயினும் அஞ்சப் படும். 15
ஊதியம் இல்லை உயிர்க்கு.
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
எல்லா உயிருந் தொழும்.
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மூக்கிற் கரியார் உடைத்து. 20

ஔவையார்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
குலத்தளவே ஆகுமாம் குணம்.
எல்லார்க்கும் பெய்யும் மழை.
தீதொழிய நன்மை செயல். 5
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
பாவிகாள் அந்தப் பணம்.
எனையாளும் ஈசன் செயல்.
கல்லாதான் கற்ற கவி.
முற்பவத்தில் செய்த வினை. 10

ஈற்றடிப் பழமொழிகள்: முன்றுறை அரையனார்
கற்றலிற் கேட்டலே நன்று.
பாம்பறியும் பாம்பின் கால்.
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.
அணியெல்லாம் ஆடையின் பின்.
திருவினும் திட்பம் பெறும். 5
கல்தேயும் தேயாது சொல்.
நாவிற்கு நல்குரவு இல்.
குன்றின்மேல் இட்ட விளக்கு.
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.
தங்களை நாய்குரைத் தற்று. 10
நுணலும்தன் வாயால் கெடும்.
இருதலைக் கொள்ளியென் பார்.
மகனறிவு தந்தை அறிவு.
தமக்கு மருதுவர் தாம்.
தட்டாமல் செல்லாது உளி. 15
கண்டதூஉம் எண்ணிச் சொல்.
புலித்தலையை நாய்மோத்தல் இல்.
முறைமைக்கு மூப்பிளமை இல்.
ஆயிரம் காக்கைக்கோர் கல்.
அஞ்சுவார்க் கில்லை அரண். 20
தனிமரம் காடாதல் இல்.
வித்தின்றிச் சம்பிரதம் இல்.
ஒன்றுக் குதவாத ஒன்று.
தாய்மிதித்(து) ஆகா முடம்.
இறைத்தோறும் ஊறும் கிணறு. 25

தனிப்பாடல் ஈற்றடிகள்
ஔவையார்:
கொடையும் பிறவிக் குணம்.
கீச்சுக்கீச் சென்னுங் கிளி.
கூறாமல் சந்நியாசங் கொள்.
எறும்புந்தன் கையாலெண் சாண்.
புலவர்க்கும் வெண்பா புலி.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

திருவள்ளுவ நாயனார்
வருவது தானே வரும்.
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
அப்பாலும் பாழென் றரி.

காளமேகப் புலவர்
பாம்பாகும் வாழைப் பழம்.
ஆடுபரி காவிரியா மே.
துப்பாக்கி யோலைச் சுருள்.
பூசணிக்காய் ஈசனெனப் போற்று.
குடத்திலே கங்கையடங் கும். 5
போட்டாளே வேலயற்றுப் போய்.
அன்னமிறங் காமலலை வாள்.
எலியிழுத்துப் போகிற தென்.
கண்டதுண்டு கேட்டதில்லை காண்.
குதிரை விற்றவனைக் கொண்டு. 10

*****

ரமணி
31-05-2013, 04:15 AM
4.64. சிந்தடி முயற்சி: கட்டளைக் சிந்தடி

(இணைக்குறள் ஆசிரியப்பா)
நாமும் சிந்தடி முயன்றிடு வோமா?
ஏழுமுதல் ஒன்பதுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் சிந்தடி புனைவோம் முதலிலே.

காலம் ஞாலம் பாலம் கோலம்
என்னும் சொல்வகை அடியெது கைவர
மாறுதல் அமைத்தல் வரைதல் நீங்குதல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
பாலங்கள் அமைத்துப்
பாவங்கள் நீக்கி
ஞாலம் நலம்பெறும் ஞானம் அறிவோமே.

ஏழு எழுத்துக் குறளடி (2 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலம் மாறிடும் உண்மை
ஞாலம் மாறுதல் உண்டோ?
பாலம் அமைக்கும் உள்ளம்
கோலம் வரைந்து பார்க்கும்.

எட்டு எழுத்துக் குறளடி (3 + 3 + 2): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கொண்ட
கோலங்கள் மாறலாம் அன்றோ?
பாலங்கள் அமைத்தல் நன்றே
பாவங்கள் நீங்குதல் என்றோ?

ஒன்பது எழுத்துக் குறளடி (3 + 3 + 3): (வஞ்சி விருத்தம்)
காலங்கள் மாறினால் கொண்டுள்ள
கோலங்கள் மாறலாம் அல்லவோ?
பாலங்கள் அமைத்தல் நன்றாகும்
பாவங்கள் நீங்குதல் எப்போதோ?

4.64. சிந்தடி முயற்சி: சீர்வகைக் சிந்தடி

பழமொழிகள் இணைத்து:
நல்குரவு இல்லாத நாக்கினை
வல்லிதின் அடக்க விழைவோம்
கல்தேயினும் தேயாது சொல்லென்பதால்
நல்லதே உரைக்கப் பழகுவோம்.

வஞ்சி விருத்தக் குறட்பாக்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்
பசும்புல் தலைகாண்பு அரிது.
தானம் தவமிரண்டும் தங்கா
வானம் வழங்கா தெனின்.

நாளெல்லாம் நடையாய் நடந்ததில்
தாளெல்லாம் ஆயின திண்ணென;
அற்புதம் ஏதேனும் நிகழ்ந்தாலே
விற்பனை யுண்டு மனமே!

வேளாண்மைக் குறைவால் பயிர்கள்
தாளாகிப் போகத் தாளாத
வேளாளன் தற்கொலை துணிய
வாளா விருந்தது அரசு.

*****

ரமணி
03-06-2013, 01:41 PM
4.64. சிந்தடிப் பயிற்சி

சிந்தடிப் பயிற்சிகள் இரண்டையும் கீழுள்ள வலைதளத்தில் செய்துபார்க்கவும்:
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

*****

ரமணி
04-06-2013, 04:30 AM
4.65. அளவடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நாற்சீர் அமைந்து முடிவது அளவடி
நாற்சீர் அடியின் இயல்பு என்பதால்
அளவடி யென்று அழைக்கப் பட்டது
நேரடி என்றும் இதனை அழைப்பரே.

பழந்தமிழ் இலக்கியப் பனுவல் பலவும்
அளவடி கொண்டே அமைந்து வருவன.
அகவல் வெண்பா கலிப்பா என்னும் ... ... ... [அகவற்பா=ஆசிரியப்பா]
மூவகைப் பாக்களில் அளவடி வருமே.

அளவடிச் சான்றுகள் எளிதில் காணலாம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ(டு) இணங்க வேண்டாம்.
--உலகநாதர், உலகநீதி

ஆசிரியப்பா சான்றுகள்
(நேரிசை ஆசிரியப்பா)
பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.
--கபிலர், புறநானூறு 107

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ
--சிலப்பதிகாரம், 1.2.73-79

தானமும் தருமமும் தவமும் தன்மைசேர்
ஞானமும் நல்லவர்ப் பேணும் நன்மையும்
மானவ வையம் நின்மகற்கு வைகலும்
ஈனமில் செல்வம் வந்தியைக என்னே
--கம்பராமாயணம் 2.1.80

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
--மஹாகவி பாரதியார்

வெண்பாச் சான்றுகள் (ஈற்றடி சிந்தடி)
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
--திருக்குறள் 1

(நேரிசை வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

(இன்னிசை வெண்பா)
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்
--நாலடியார் 36

கலிப்பா சான்றுகள்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
--மாணிக்கவாசகர், திருவாசகம் 19

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.
--இராமலிங்க அடிகள், ஆளுடைய அடிகள் அருள்மாலை 7

*****

ரமணி
06-06-2013, 01:12 PM
4.65. அளவடி முயற்சி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அளவடி நாமும் முயன்றிடு வோமா?
அளவடி பயிலும் பாவகை அனைத்தும்
ஒருகை பார்ப்போம் சிறுகை யாயினும்!

ஆசிரியப்பா முயற்சி
அகவற் பாவொன்று தகவுடன் புனைய
குறைந்தது மூன்று அடிகள் தன்னில்
மாமுன் நேரும் விளமுன் நிரைவரும்
ஆசிரியத் தளைகள் சீரிடை அடியிடை
மாசற ஒன்றிப் பிறதளை விரவுமே!

உள்ளுவ தனைத்திலு முயர்ந்ததே உறைந்து
தள்ளுவ தனைத்தும் தள்ளி வாழ்ந்தால்
விள்ள லின்றி வாழ்க்கை நடக்குமே.

கூவிளம் கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் புளிமா தேமா தேமா
தேமா தேமா தேமா கருவிளம்

உள்/ளுவ(து) (நிஆ) அனைத்/திலு(ம்) (நிஆ) உயர்ந்/ததே (நிஆ) உறைந்/து (நேஆ)
தள்/ளுவ(து) (நிஆ) அனைத்/தும் (நேஆ) தள்/ளி (நேஆ) வாழ்ந்/தால் (நேஆ)
விள்/ள(ல்) (நேஆ) இன்/றி (நேஆ) வாழ்க்/கை (இவெ) நடக்/குமே.

வெண்பா முயற்சி
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்;
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

அடிகள் இரண்டில் குறள்வெண்பா மற்றும்
அடிகளில் நாலாம் அளவியல் வெண்பா
வடித்துத்தான் பார்ப்போமே நாம்.

குறள் வெண்பா முயற்சி
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ ஐயா!

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் தேமா

ஏற்ற வகைகளில் வெண்டளை வந்தாலும்
ஈற்றசையின் வாய்பாடு தப்பு.

திருத்தியது
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்.

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

இன்னும் இயல்பாக
எல்லோரும் நல்லவர் என்றாகிப் போனாலே
தொல்லுலகம் தாங்குமோ சொல்லு?

தேமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்

எல்/லோ/ரும் (வெவெ) நல்/லவர் (இவெ) என்/றா/கிப் (வெவெ) போ/னா/லே (வெவெ)
தொல்/லுல/கம் (வெவெ) தாங்/குமோ (இவெ) சொல்/லு.

இன்னிசை வெண்பா (அலகிட்டுத் தளைகளை அறிக)
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலப் பல்வகையில் சேர்ந்துவந்து
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு.

நேரிசை வெண்பா (இப்படி எழுதுவது இன்னும் சிறப்பு):
நல்லவரும் அல்லவரும் வல்லவரும் மெல்லியரும்
கல்லுடன் மண்போலச் சேர்ந்துவந்து - பல்வகையில்
அல்லும் பகலுமாய் அல்லலுறும் நாடகமே
தொல்லுலக வாழ்வென்று சொல்லு.

கலிப்பா முயற்சி
(குறள் வெண்செந்துறை)
கலித்தளையே பெரிதுவரப் பிறதளைகள் விரவிவந்தால்
கலிப்பாவின் அடிகளாகி ஒலித்துள்ளல் பயின்றுவரும்.

(கலிவிருத்தம்)
நீலவானப் பெருவெளியில் கோலமிடும் நிறவகைகள்
மாலையிலே தொடுத்திட்ட மலர்கள்போல் பலநிறங்கள்
காலையிலே எழுந்ததுமே கண்ணிறைக்கும் சிவந்தவானில்
ஆலயமணி செவியினிலே மிதந்துவந்து அமைதிதரும்.

கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்கனி கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்

நீ/லவா/னப் (கத) பெரு/வெளி/யில் (வெவெ) கோ/லமி/டும் (கத) நிற/வகை/கள் (வெவெ)
மா/லையி/லே (கத) தொடுத்/திட்/ட (கத) மலர்/கள்/போல் (கத) பல/நிறங்/கள் (வெவெ)
கா/லையி/லே (கத) எழுந்/தது/மே (வெவெ) கண்/ணிறைக்/கும் (கத) சிவந்/தவா/னில் (வெவெ)
ஆ/லய/மணி (வறி) செவி/யினி/லே (கத) மிதந்/துவந்/து (கத) அமை/தித/ரும்.

*****

ரமணி
09-06-2013, 04:29 AM
4.65. அளவடிப் பயிற்சி

அளவடிப் பயிற்சிகள் மூன்றையும் கீழுள்ள வலைதளத்தில் செய்துபார்க்கவும்:
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

*****

ரமணி
11-06-2013, 04:52 AM
4.66. நெடிலடி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஐந்துசீர் கொண்டு முடிவது நெடிலடி
அளவடி விஞ்சும் சீர்கள் வருதலால்
நெடிலடி என்று பெயர்பெற் றிடுமே
நெடிலடி மற்றும் கழிநெடி லடிகள்
பாவினங் களிலே பெரிதும் வருமே.

சான்று 1.
(கலித்துறை)
வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினைநீங்கி நின்றார்
--தோலாமொழித் தேவர், சூளாமணி, கடவுள் வாழ்த்து

சான்று 2.
(கலித்துறை)
செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயி னோடும்
சந்தார்தடந் தோளடும் தாழ்தடக் கைக ளோடும்
அந்தாரக லத்தொடும் அஞ்சனக் குன்ற மென்ன
வந்தானிவன் ஆகுமவ் வல்விலி ராம னென்றாள்.
--கம்பராமாயணம், 3.7.3215

[color=#000080]சான்று 3.
(கலித்துறை)
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளிக்
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
--அருணகிரிநாதர், கந்தலரங்காரம் 72

*****

ரமணி
21-06-2013, 02:26 PM
4.66. நெடிலடி முயற்சி

(குறள் வெண்செந்துறை)
அடிகள் தோறும் ஐந்துசீரில் முடியும்
நெடிலடி இயற்ற நாமும் முயல்வோம்

அளவொத்த எவ்வகை அடியும் எத்தளையும் கொண்டு
அடிகள் இரண்டுவரும் குறள்வெண் செந்துறையில் முனைவோம்.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)

கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.

வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.

மூச்சினை அடக்கி யாண்டு எண்ணுவது ஒருமைப்பட்டு
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?

முயற்சி 2.
(கலித்துறை)
வந்ததும் இருப்பதும் தெரியும் வருவது தெரியுமோ?
நொந்ததும் நிகழ்ந்ததும் தெரியும் நாளையென் தெரியுமோ?
பந்தைய எலிகள் வாழ்வில் விந்தைகள் ஏதுமுண்டோ?
சிந்தனை தறிகெட் டோடும் சிறுமதிதான் சாதனையோ?

முயற்சி 3.
(கலித்துறை)
தென்றலின் அலையில் தலைசாயும் நெற்பயிர் வயல்கள்
கன்றுடன் பசுக்கள் தொழுவம் திரும்பிடும் மாலை
மேற்கினில் மறையும் கதிரவன் ஒளியின் கீற்றுகள்
காற்றிலே ஊடுருவிக் கண்களில் பட்டு வழியும்.

*****

ரமணி
07-07-2013, 07:35 AM
4.66. நெடிலடிப் பயிற்சி

நெடிலடிப் பயிற்சிகள் இரண்டையும் கீழுள்ள வலைதளத்தில் செய்துபார்க்கவும்:
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

*****

4.67. கழிநெடிலடி
http://kavithaiyilyappu.blogspot.in/2013/06/467.html

ரமணி
25-07-2013, 05:25 AM
4.67. கழிநெடிலடி முயற்சி
http://kavithaiyilyappu.blogspot.in/2013/07/467.html

ரமணி
04-08-2013, 07:17 AM
அன்புடையீர்!

என் ’கவிதையின் யாப்பு’ தொடரை நான் மூன்று மன்றங்களில் வெவ்வேறு உரிப்பொருள் இயல்கள் வரை பதிந்து வருவதைத் தொடர்வது சிரமாக இருப்பதால் கீழ்வரும் உரிப்பொருள் இயல்களை ’ஈகரை தமிழ்க் களஞ்சியம்’ வலைதளத்தில் படித்துக்கொள்ள வேண்டுகிறேன். இணைப்புகள் கீழே.

வெண்பா முதற்கொண்டு எல்லா மன்றங்களிலும் பொதுவாக, ஒருசேர எழுதினால் தொடர்வது எளிதாக இருக்கும் என்பதே என் எண்ணம். விரைவில் இந்த இணைப்புகளைப் பார்த்துப் பாட்டெழுதத் தயாராவீர்! பயிற்கள் வரவிருக்கின்றன.

4.70. அடிப்படை உறுப்புகள்: பா: பாவும் செய்யுளும்
http://www.eegarai.net/t91128p120-topic

5. யாப்பு விவரணம்: செயல்வகை உறுப்புகள்: தொடை
http://www.eegarai.net/t91128p120-topic

5.5. எதுகைத் தொடை
http://www.eegarai.net/t91128p135-topic

5.30. மோனைத் தொடை
http://www.eegarai.net/t91128p150-topic

5.50. முரண் தொடை
http://www.eegarai.net/t91128p165-topic

5.60 இயைபுத் தொடை
http://www.eegarai.net/t91128p180-topic

5.70 அளபெடைத் தொடை
http://www.eegarai.net/t91128p180-topic

5.76 அந்தாதித் தொடை
http://www.eegarai.net/t91128p180-topic

5.80 இரட்டைத் தொடை
http://www.eegarai.net/t91128p195-topic

5.85 செந்தொடை
http://www.eegarai.net/t91128p195-topic

அன்புடன்,
ரமணி

*****

ரமணி
04-08-2013, 07:26 AM
6. வெண்பா

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வேறேதும் வண்ணம் விரவாத வெள்ளையே
மாறாது நிற்பது மாண்பாகும் - வேறு
தளையால் அடியினால் ஆகாது நின்று
விளைந்திடும் வெண்பாச் சிறப்பு.

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்மையே வெள்ளையின் இன்னோர்பேர் ஆவதுபோல்
வெண்பாவை வெள்ளைப்பா வென்பரே - ஒண்மைமிகு
வெண்பாவை ஒண்பா வெனவும் அழைப்பரே
உண்மையில் அத்தனை பொற்பு!

[ஒண்மை=இயற்கை அழகு, ஒழுங்கு, அறிவு; பொற்பு=பொலிவு]

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்பா விலக்கணம் மீறமுடி யாததால்
வெண்பாவோர் வன்பா எனப்படும் - ஒண்ணா
விலக்கும் அயற்றளைச் சீரடியால் வெண்பா
புலவர்க்கு ஆகும் புலி.

ஔவை சொன்னது:
காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி.
--தனிப்பாடல்

பொருள்
உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு அம்புலிப் பருவம் பாடுவது புலியாம் (அரிய செயல்);
சிறப்பாகப் பேசப்படும் உலாப் பாடும் புலவர்க்கு பெதும்பைப் பருவம் பாடுவது புலியாம்;
ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் கவியோர்க்கு) வண்ணப் பாடல் புலியாம்;
மற்றெல்லாப் பாவலர்க்கும் வெண்பா பாடுதல் புலியாம் (முயற்சி மிக்க செயலாகும்).

கி.வா.ஜ. சொன்னது:
வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
--’கவி பாடலாம்’, பக்.69

விளக்கம்:
வெண்பா வகைப் பாடலை இருமுறை கற்பித்தும் கல்லானையும்;
வெள்ளிய ஓலையில் கண்ணுக்குத் தெரியுமாறு கையால் எழுதத் தெரியாதவனையும்;
பெற்ற தாய் பாவஞ் செய்திருக்க வேண்டும்; அவள் பெற்றது பிறர் அவளை ஏளனம் செய்வதற்கே;
பேயே அவர்களை முக்காலும் தாக்குவாயாக, என்னை ஏன் தாக்குகிறாய்?

பாடல் பின்னுள்ள கதை:
https://groups.google.com/forum/#!topic/tamil_ulagam/amCdNYlwJxo

*****

ரமணி
05-08-2013, 03:27 PM
6.1. வெண்பாவின் பொது இலக்கணம்

பொதுவிலக்கணம்
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
ஈற்றடி சிந்தடி ஏனை அளவடி
ஏற்பது வெண்டளை செப்பலின் ஓசையில்
நால்வகை ஒன்றில் அசைச்சீர் இறுதியாய்
நாள்மலர் காசு பிறப்பு.

விளங்காய்ச்சீரும் விளாங்காய்ச்சீரும்
(பஃறொடை வெண்பா)
விளாங்காயின் சீர்பயிலும் வெண்டளை வந்தால்
வளாவிடும் செப்பலொலி வண்ணம் குறையும்
கருவிளங்காய் கூவிளங்காய் நாமங்கள் தாங்கி
நிரைநடு வாகும் விளங்காய் வகையில்
குறிலிணை ஒன்றெனவோ ஒற்றுடனோ வந்தால்
குறையாது செப்பல் ஒலி.

விளங்காய்ச்சீர் சான்று
(இருவிகற்பக் குறள்வெண்பா)
’நல்வரவில் நால்வரும்பெண்’ போலக் குறிலிணை,
ஒற்றுடன் கூவிளங்காய்ச் சீர்,

’பலர்நடுவில்’ என்றோ ’இனிவரும்பெண்’ என்றோ
கருவிளங் காய்ச்சீர் களும்,

இதுபோல் விளங்காய்கள் ஓசை குறைப்பதில்லை
வெண்பாவில் கூடும் இவை.

விளாங்காய்ச்சீர்
(பஃறொடை வெண்பா)
குறில்நெடில் ஒன்றெனவோ ஒற்றுடனோ வந்தால்
விளாங்காய் எனச்சொல்வர் இற்றைநாள் யாப்பில்*
விளாங்காய் நெடில்களால் சீர்கள் பிரிய
வளம்குன்றும் செப்பலொலி; வெண்பாவில் இங்ஙன்
விளாங்காய் தவிர்த்தல் இனிது.
[*’கவிதை இயற்றிக் கலக்கு’, பேராசிரியர் பசுபதி]

சான்று
(இருவிகற்பக் குறள்வெண்பா)
’மூவரேகாண் வேர்ப்பலாக்கண்’ போலக் குறில்நெடில்,
ஒற்றுடன் கூவிளங்காய்ச் சீர்,

’வருவரேகாண்’ என்றோ ’கிளைப்பலாக்கண்’ என்றோ
கருவிளங் காய்ச்சீர் களும்,

இதுபோல் விளாங்காய்கள் ஓசை குறைப்பதால்
வெண்பாவில் கூடா திவை.

ஈற்றடி
(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம்
ஈற்றடி பேசுமே வெண்பா அலங்காரம்
ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம்
ஈற்றடியே வெண்பா உயிர்.

ஈற்றுச்சீர்
(ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இற்றிடும் சீரசை காசு பிறப்பெனில் ... (இறுதல்=முடிதல்)
குற்றுகரம் வந்து முடிதல் அவசியம்
மற்ற உகரம் அரிது.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வராதன
வெண்பாவில் நான்கு கனிச்சீரும் வாராது
வெண்பாவில் வேறு தளைகள் வராது
அளவடி சிந்தடியே வேறடிகள் கூடா
உளத்தினில் வைப்பீர் உகந்து.

பொழிப்பு மோனை
பொழிப்பெனும் மோனையே ஒவ்வோர் அடியும்
எழில்கூட்ட ஓசைகூட்ட வேண்டும்வெண் பாவினில்
அற்பம் ஒரூஉவாம் மோனை வருவது
சிற்சில பாக்க ளிலே.

பொழிப்பு எதுகை
பொருளின் செறிவில் பொழிப்பெனும் மோனை
வருதல் சிரமம் பொருளது குன்றுமெனில்
அந்த அடியில் பொழிப்பு எதுகையென
வந்தது செய்திடும் ஈடு.

வகையுளி
வகையுளி பாவில் வருதல் பொதுவாய்த்
தகவுற இன்றித் தடுக்கும் பொருளோட்டம்
சிற்சில போதுகள் ஏலும் வகையுளி
முற்றப் பொருளின் நுகம். ... ... (நுகம்=நுகத்தடி)

சான்று
(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
மேற்சொன்ன அத்தனை வெண்பா நலன்களும்
மேற்கொண்ட வெண்பா இனி.

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

அலகிடல்: சீர்கள்
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு

தளைகள்
இவெ இவெ இவெ வெவெ
வெவெ இவெ வெவெ இவெ
வெவெ வெவெ வெவெ இவெ
வெவெ இவெ

அடிகள்
அளவடி அளவடி அளவடி சிந்தடி

மோனை
பொழிப்பு மோனை நான்கு அடிகளிலும்

எதுகை
இருவிகற்ப அடியெதுகை

வகையுளி
ஏதும் எங்கும் இல்லை

இதர சான்றுகள்
(மேலுள்ளது போல அலகிட்டு அறிக)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நமக்குத் தொழில்கவிதை; நாட்டுக் குழைத்தல்
இமைப்போதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.
--பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
--பாரதியார், மஹாசக்தி வெண்பா

*****

ரமணி
07-08-2013, 09:04 AM
6.2 வெண்பாவின் சீர்

(பஃறொடை வெண்பா)
அகவற்சீர் ஆகிய நான்கு இயற்சீர்
தகவுடன் வெண்பா வுரிச்சீர் பெயர்தாங்கும்
காய்ச்சீர்கள் நான்கும் பயின்றுவரும் வெண்பா
இறுதியடி ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய்
அறுதியிடும் நால்வகை யில்.

தேமா புளிமா கருவிளம் கூவிளமாய்
ஏமாப் பெயரியற்சீர் ஈரசையில் நான்குடன் ... ... [ஏமா=களிப்பு, அரண்]
ஈரசை யோடொரு நேரசை சேரவரும்
மூவசைக் காய்ச்சீர்கள் நான்கென்று மொத்தமாய்
எண்வகைச் சீர்களும் வெண்பாவில் வந்தமர்ந்து
ஒண்பாவாய் நிற்கும் ஒளிர்ந்து.

*****

6.3. வெண்பாவின் ஈற்றுச்சீர்

அசைச்சீர் வாய்பாடு
(இன்னிசை வெண்பா)
வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நால்வகையில்
பண்பட்டு வந்துநிற்கும் ஓரசையாய் - உண்டாகும்
நாள்,மலர் காசு பிறப்பெனும் வாய்பாட்டில்
நால்வகையில் நிற்கும் இசைந்து.

அசைச்சீரின் அசைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்,நிரை நேர்பு நிரைபு எனவொன்றில்
ஓரசையாய் நிற்கும் இசைந்து.

நாள் மலர்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்தனியே வந்திட நாளென் றறிக
நிரைதனியே வந்தால் மலர்.

[உதாரணம்: நாள்: கு, தா, கல், சொல்]
மலர்: உள, உளம், கலா, கலாம்]

காசு பிறப்பு
(இன்னிசை வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
ஒற்றைக் குறில்தவிர்த்த நேருடன் குற்றுகரம்
சேர்வது காசெனும் நேர்பு; நிரையுடன்
சேர்ந்தால் பிறப்பாம் நிரைபு.

தனிக்குறில் ஒற்றுடன், ஒற்றுடன் ஓர்நெடில்,
அன்றித் தனிநெடில், ஆகிய நேரசை
மூன்றுடன் குற்றுகரம் சேர்ந்து வருவது
காசெனும் நேர்பா வது.
[காசு உதாரணம்: கொக்கு, வீடு, மூப்பு]

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனியாக, ஒற்றடுத்து வந்திடும் நான்கு
நிரையசை யோடொரு குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு.
[பிறப்பு உதாரணம்: சிறகு, சிறப்பு, வரைவு, இசைந்து]

(குறள் வெண்பா)
குற்றுகரம் ஆகும் குசுடு துபுறு
உயிர்மெய் எழுத்துகள் காண்.

ஈற்றடியில் வாய்பாட்டுச் சொல்
(குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வந்திடுமோ வாய்பாட்டுச் சொல்?

(பஃறொடை வெண்பா)
நாள்சொல் தனிநேர் எனவே வரலாம்
மலர்சொல் வரலாம் தனிநிரை யாவதால்
காசுசொல் ஆகுமே நேர்-பின் உகரம்
பிறப்புசொல் ஆகும் நிரை-பின் உகரத்தால்
என்று நினைவினில் கொள்.

(குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நாள்,மலர் காசு பிறப்பு.

வேறெந்தச் சீராக நாள்,மலர் கூடாது
ஓரசைச்சீர் என்றா வதால்.

(இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராகக் காசு பிறப்பு
வரலாம் எனினும் அதுபோல வந்தாலோ
இங்கு முதலடியில் உள்ளது போலவே
ஈரசைச் சீர்களாகும் காண்.

(குறள் வெண்பா)
நிரை-நேர் எனப்பிறப்பும் நேர்-நேர் எனக்காசும்
ஈரசைச் சீர்களாகும் காண்.

ஈற்றுச் சீர் சான்றுகள்
(குறள் வெண்பா)
நாள்மலர் காசு பிறப்பில் முடிகிற
வெண்பாக்கள் கீழே உள.

நண்பனே நண்பனே ஞாபகம் வந்ததே
நெஞ்சினில் நாம்பிரிந்த நாள்.

பூவெல்லாம் பூவல்ல புன்னகை பூக்க
அவள்பார்க்கும் கண்கள் மலர்.

கேட்பதற்கு நாதியில்லை வேலையும் இல்லை
அவனொரு செல்லாத காசு.

எல்லாப் பிறப்பும் பிறப்பல்ல ஈசனருள்
கிட்டும் பிறப்பே பிறப்பு.

*****

ரமணி
09-08-2013, 02:58 AM
6.4. நாள் மலர் காசு பிறப்பு சான்றுச் சொற்கள்

(குறள் வெண்பா)
கீழ்வரும் சான்றுகளை நோக்கத் தெரியுமே
நாள்மலர் காசு பிறப்பு.

க-கல்-கா-கால் சொற்களில் நேர்தனி வந்திட
நாளெனும் வாய்பாடா கும்.

(சிந்தியல் வெண்பா)
கட-கடல் மற்றும் கடா-கடாம் சொற்கள்
நிரைதனி வந்து மலரெனும் வாய்பாடால்
ஆவது என்று உணர்.

படுஎனும் சொல்லில் தனிநிரை காணலாம்
பட்டு எனும்போது குற்றுகரம் சேர்வதால்
நேர்பெனும் காசா வது.

தகாஎனும் சொல்லில் தனிநிரை காண
தகாது எனும்சொல்லில் குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு.

(குறள் வெண்பா)
சிறுபான்மை முற்றுகரம் கூட வருவதுண்டு
சொல்லு, கதவு என.

(பஃறொடை வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்களாம்
கூம்பு-சாய்த்து ஆடு-பாரு தந்து-நில்லு அஞ்சு-நீர்க்கு
சொற்களைச் சேர்க்கும் கழித்தல் குறிநீக்க
எல்லாமே நேர்பெனும் காசு.

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்கள்
முடங்கு குவவு விரைந்து அலங்கு
பலவு இரவு உறாது இராது
அனைத்தும் நிரைபு பிறப்பு.

*****

6.5. நாள் மலர் காசு பிறப்பு திருக்குறள் சான்றுகள்

(குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வள்ளுவரின் சான்று சில.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... [நாள்]

வெண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ... [மலர்]

இருள்சேற் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ... [காசு]

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ... [பிறப்பு]

*****

6.6. நாள் மலர் காசு பிறப்பு: அனைத்துவகைச் சான்றுகள்

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்ப்
பைந்தமிழ்ச் சான்றுகள் பார்க்கும் பொழுது
இறுதி இரண்டடிகள் இங்கு.

நாள்மலர் காசு பிறப்பு அனைத்து
வகைச்சான்றும் கீழே உள.

கீழுள்ள சான்றுகள் ஔவையின் பாக்களே
வேறு இரண்டு தவிர்த்து.

முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு. ... [தனிக்குறில்: நேர்: நாள்]
---காளமேகப் புலவர் இஞ்சிக்குடி தாசி கலைச்சியை இகழ்ந்து பாடியது.

இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல். ... [தனிக்குறிலொற்று: நேர்: நாள்]

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா. ... [தனிநெடில்: நேர்: நாள்]

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். ... [தனிநெடிலொற்று: நேர்: நாள்]

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. ... [குறிலிணை: நிரை: மலர்]

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேள் இட்ட கலம். ... [குறிலிணையொற்று: நிரை: மலர்]

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. ... [குறில்நெடில்: நிரை: மலர்]

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம். ... [குறில்நெடிலொற்று: நிரை: மலர்]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு. ... [தனிக்குறிலொற்று+உகரம்: நேர்பு: காசு -- தனிக்குறில்+உகரம் வரக்கூடாது.]

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. ... [தனிநெடில்+உகரம்: நேர்பு: காசு]

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. ... [தனிநெடிலொற்று+உகரம்: நேர்பு: காசு]

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. ... [குறிலிணை+உகரம்: நிரைபு: பிறப்பு]

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிடம் எல்லாம் சிறப்பு. ... [குறிலிணையொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
நிரையுள்ளே இன்னா வரைவு. ... [குறில்நெடில்+உகரம்: நிரைபு: பிறப்பு]
---பழமொழி நானூறு 68

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து. ... [குறில்நெடிலொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

*****

ரமணி
11-08-2013, 07:01 AM
6.7. செப்பலோசையின் வகைகள்

(பஃறொடை வெண்பா)
மூன்று வகையெழும் செப்பலெனும் ஓசையாம்
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
ஏந்திசை வெண்பா வுரிச்சீரால் மட்டுமே
தூங்கல் இயற்சீரால் மட்டும் ஒழுகிசையில்
இவ்விரு சீர்கள் கலந்து.

(இன்னிசை வெண்பா)
ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

(பஃறொடை வெண்பா)
நால்வகைக் காய்ச்சீர்கள் வெண்பா வுரிச்சீராம்
நால்வகை மாவிளச்சீர் ஆகும் இயற்சீராம்
காய்முன்னே நேர்வர வெண்சீரின் வெண்டளை
மாமுன் நிரையும் விளமுன்னே நேருமென
மாறி வருதல் இயற்சீரின் வெண்டளை
இவ்வா(று) இருதளை எண்சீர் இயன்றுவரும்
செவ்வையே வெண்பா அமைப்பு.

மூவசையா லாகிவந்து நீரலையா யேந்திவந்து
நாவசைய ஓசையெழும் ஏந்திசையின் செப்பலாக
தூங்கிசைச் செப்பல் இயற்சீர் வரவரும்
தூங்கி வருவது தொங்கி வருதல்
இருவகை வெண்டளையும் யாப்பில் கலத்தல்
இருவகை ஓசை ஒழுக்கு.

ஏந்திசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் காசு

(சிந்தியல் வெண்பா)
விண்ணோரும் மானிடரும் ஏத்துகின்ற ஈசனவன்
கண்மூன்று கொண்டவனாம் காப்பவனாம் நானிலத்தை
எண்ணத்தில் ஈசனருள் வேண்டு.

தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் காசு

(அளவியல் வெண்பா)
ஏரானைக் காவிலுறை யென்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவருஞ் சித்திவருந் தான்.
--தனிப்பாடற்றிரட்டு, பகுதி 1 காப்பு வெண்பா

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்

மேல்வந்த வெண்பாக் குறிப்பு
(இன்னிசை வெண்பா)
ஒருசீர் தவிர பிறசீர் களிலே
வருவது மூவசைக் காய்ச்சீர்கள் ஏந்திசை
போற்றினால் என்பதைப் போற்றினாஅல் என்றுநாம்
மாற்ற இதுவுமே காய்.

(பஃறொடை வெண்பா)
காலையிளம் சூரியனின் கண்ணிறையும் கற்றையொளி
சோலையெலாம் பொன்னிறமாய்த் தோன்றிநிற்கும் ஓர்காட்சி
புள்ளினங்கள் வாய்திறக்கப் பண்ணலைகள் காற்றினிலே
அள்ளிவரும் தென்காற்றுக் காலைமலர் வாசனையை
தெள்ளியநீ ரோடையிலே மெல்லவரும் நீரோட்டம்
தள்ளிநின்று உள்ளிநிற்பேன் நான்.

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்

தூங்கிசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
---திருக்குறள் 040:01

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா நாள்

பாலொடு தேன்கலந் தற்றே மணிமொழி
வாலெயி றூறிய நீர்.
---திருக்குறள் 113:01

கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்

(சிந்தியல் வெண்பா)
இருவிழி பார்த்தே ஒருமனம் உள்ள
வருவது ஐயம் விழியோ மனமோ
அருவம் விளத்தது என்று.

கருவிளம் தேமா கருவிளம் தேமா
கருவிளம் தேமா புளிமா புளிமா
புளிமா கருவிளம் காசு

(அளவியல் வெண்பா)
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
--நாலடியார், 65

புளிமா புளிமா புளிமா கருவிளம்
தேமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா மலர்

(பஃறொடை வெண்பா)
நிலவும் மலரும் உறவினைப் போல
நிலவும் புதுமண மக்கள் உறவு
விடியும் பொழுதை விதிக்கும் அலுவல்
முடியும் பொழுதோ இரவுப் பொழுது
கடிநகர் வாழ்க்கை இயல்பு.

புளிமா புளிமா கருவிளம் தேமா
புளிமா கருவிளம் தேமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
கருவிளம் தேமா பிறப்பு

ஒழுகிசைச் செப்பல் சான்றுகள்
குறள் வெண்பா
தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
---திருக்குறள் 040:06

கூவிளம் தேமா புளிமாங்காய் புளிமா
கருவிளம் தேமா பிறப்பு

(சிந்தியல் வெண்பா)
பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே
கூடி வணங்குமுல கு.
--கி.வா.ஜ., ’கவிதை இயற்றிக் கலக்கு’ பக்.90

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் நாள்.

(அளவியல் வெண்பா) [அலகிட்டு ஓசை அறிக]
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

(பஃறொடை வெண்பா) [அலகிட்டு ஓசை அறிக]
முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56

*****

ரமணி
13-08-2013, 02:09 AM
6.8. செப்பலோசை வெண்பா முயற்சி

(குறள் வெண்பா)
ஓர்பொருள் பற்றியே மூவகை ஓசையில்
ஈரடி வெண்பா முயல்வு.

ஏந்திசைச் செப்பல்
பாழடைந்த கேணியில் பேயொன்று ஓலமிடும்
காழிருந்தால் அவ்வழியே போ.
[காழ்=மனவுறுதி]

தூங்கிசைச் செப்பல்
அழிந்த கிணற்றில் கதறும் ஒருபேய்
வழியது போனால் பயம்.

ஒழுகிசைச் செப்பல்
அழிந்த கிணற்றினிலே கத்துமே ஓர்பேய்
வழியது போனாலே தீது.

(சிந்தியல் வெண்பா)
முல்லைப்பூ மல்லிகைப்பூ பூத்துவரும் போதினிலே
மெல்லியதோர் காற்றினிலே சிற்றிலைகள் சற்றசையச்
சொல்லினிலே பூத்தமுகப் பெண்.

மல்லிகை முல்லை மலரும் பொழுதிலே
மெல்லிய காற்றில் இலைகள் அசையவே
சொல்லில் மலர்பெண் முகம்.

மல்லிகை முல்லை மலர்ந்திடும் போதினிலே
மெல்லிய காற்றிலே சிற்றிலைகள் சற்றசையச்
சொல்லில் மலர்பெண் முகம்.

(அளவியல் வெண்பா)
தத்திவரும் ஆழியலை மத்தளத்தின் ஓசையொடு
எத்திவிடும் பாப்பாவின் சென்னியெலாம் மண்துகள்கள்
கத்தியுரை யாடுமப்பா காதினிலே செல்ஃபோனாம்
அத்தையுடன் அம்மாவின் பேச்சு.

தத்தும் கடலலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தை தலையெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் செல்ஃபோன் செவியிலே
அத்தையும் அன்னையும் பேச்சு.

தத்திவரும் ஆழியலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தையின் சென்னியெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் செல்ஃபோன் செவியினிலே
அத்தையுடன் அன்னையின் பேச்சு.

*****

ரமணி
15-08-2013, 06:42 AM
6.09. செப்பலோசை வெண்பாப் பயிற்சி
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/08/609-1.html

நினைவிற் கொள்ள:
(இன்னிசை வெண்பா)
ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பாக்கள்

(பஃறொடை வெண்பா)
மூவகைச் செப்பல் ஒலியின் குறட்பாக்கள்
மூன்று கலைந்துள சொற்களில் கீழுள
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
தேர்ந்தின் நிரல்களில் மூன்று குறட்பாவும்
ஓர்ந்து அமைத்தே எழுது.

உள்ளத்தால் உள்ளலும் காணாதாற் பெருமை
கள்ளத்தால் காட்டுவான் பிறன்பொருளைக்
தான்காணான் விடும். கள்வேம் தீதே
மறைமொழி நிலத்து வாறு.
எனல். தான்கண்ட நிறைமொழி காட்டி
மாந்தர் காணாதான் கண்டானாம்

*****

ரமணி
16-08-2013, 01:32 PM
6.09. செப்பலோசை வெண்பாப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பாக்கள்: விடை

ஏந்திசைச் செப்பல்
காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
--திருக்குறள் 085:09

தூங்கிசைச் செப்பல்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
--திருக்குறள் 003:08

ஒழுகிசைச் செப்பல்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
--திருக்குறள் 029:02

*****

ரமணி
17-08-2013, 05:11 AM
பயிற்சி 2. திருக்குறள் நிரல்வர அமைத்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/08/609-2.html

(இன்னிசை வெண்பா)
மூன்றுகுறட் பாக்கள் கலைந்த நிரல்கீழே
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
என்ற நிரலில் அடிகள் வருமாறு
நன்றே அமைத்து எழுது.

தம்தம் வினையான் வரும்.
அறனன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

*****

ரமணி
18-08-2013, 06:15 AM
பயிற்சி 2. திருக்குறள் நிரல்வர அமைத்தல்: விடை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற வொழுக்கு.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து.

*****

ரமணி
19-08-2013, 02:18 AM
6.10. வெண்பாவின் தளை

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேர்வர
வாகுமே வெண்டளை காண்.

வெண்டளையில் வெண்சீர் இயற்சீர் எனவே
இரண்டு வகைகள் உள.

இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
வெண்பா இயற்சீர் என.

வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும்
வெண்பாவின் காய்ச்சீர் என.

*****

6.11. வெண்பாவின் அடி

வெண்சீர் இயற்சீர் இயன்றிடும் வெண்பாவில்
நாற்சீர் பயிலும் அளவடி மட்டுமே
ஈற்றடி முச்சீரில் சிந்தடியாய் நின்றிட
ஈற்றுச்சீர் நாள்,மலர் காசு பிறப்பென
மேற்சொன்ன நால்வகை யில்.

கீழெல்லை யாக இரண்டடி வந்துநிற்க
மேலெல்லை வெண்பா வகைபொறுத்து மாறும்
குறட்பா இரண்டடி மேலெல்லை கீழெல்லை
சிந்தியல் மேலெல்லை மூன்று.

அளவியல் மேலெல்லை நான்கடி யில்வரும்
பஃறொடை ஐந்தும் பனிரெண்டும் எல்லை
கலிவெண்பா பத்துடன் மூன்றடி கீழெல்லை
மேலெல்லை யேது மிலை.

மூச்சீரே வந்திடும் வெண்பாவின் ஈற்றடிக்கு
முக்கா லடியென்றும் ஓர்பெயர் சொல்லுவர்
ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம்
ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம்
மூவடி முக்கால் அளவடி எல்லையாம்
பன்னிரண்டு முக்காலாம் பஃறொடை எல்லை
பதிமூன்று முக்கால் கலிவெண்பாக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை.

*****

ரமணி
20-08-2013, 05:44 AM
6.12. எதுகையால் வரும் வெண்பா விகற்பம்

வெண்பா வகையை அடியெது கைவரும்
எண்ணுடன் சேர்த்துக் குறித்தல் வழக்கம்;
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா புனைந்தால்
வருமே அடியெதுகை ஒன்று.

ஒருவிகற்ப மற்றும் இருவிகற்ப ஏனைப்
பலவிகற்ப வெண்பாக்கள் சான்று முறையே
வரும்பாக்கள் கீழுள் ளவை.

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
---திருக்குறள் 1:1

(ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

(இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 12

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56

*****

ரமணி
22-08-2013, 02:13 AM
6.13. வெண்பாவின் வகைகள்

வெண்பா வடிகளின் மேலெல்லை யெண்வைத்தே
வெண்பா வகைகள் பெயரிடப் பட்டன.
வெண்பா வகைகளாம் ஐந்து.

குறள்வெண்பா சிந்தியல் மற்றும் அளவியல்
பஃறொடை மற்றும் கலிவெண்பா என்று
உறழும் வகைகளாம் ஐந்து.

அடிகள் இரண்டில் குறட்பா வருமே
அடிமூன்று வந்திடின் சிந்தியல் வெண்பாவாம்
நாலடி வெண்பா அளவியல் பேர்பெறும்
ஐந்துமுதல் பன்னிரண்டு பஃறொடை வெண்பா
பதிமூன்றும் மேலும் கலிவெண்பா வென்று
கதித்திடும் ஐவகைவெண் பா.

அடியாற் பெயராம் குறள்வெண்பா சிந்தியல்
ஓசையால் நேரிசை இன்னிசை வெண்பா
தொடையாலே பஃறொடை யே.

வெண்பா எனும்சொல் பொதுவில் குறிப்பது
வெண்பா வகையாம் அளவியல் ஆகும்
குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.

நேரிசை இன்னிசை யில்லாக் குறளொன்று
நேரிசை இன்னிசை நால்வகை பெற்றதால்
நேரிசை இன்னிசைச் யென்றிரு சிந்தியல்
நேரிசை இன்னிசை யென்று அளவியல்
நேரிசை இன்னிசை யென்றிரு பஃறொடை
நேரிசை இன்னிசை யென்று கலிவெண்பா
ஆகவெண் பாவொன் பது.

*****

ரமணி
24-08-2013, 06:59 AM
6.14. பழந்தமிழ் வெண்பா நூல்கள்

முற்றிலும் வெண்பாவா லான பழந்தமிழ்
மற்றும் இடைக்காலப் பிற்கால நூல்வகை
சிற்சில காண்போம் இனி.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டும்
பனுவல் திருக்குறள் முற்றும் குறள்வெண்பா
தெய்வப் புலவர் படைப்பு.

களவழி நாற்பது ஆசாரக் கோவை
அளவியல் வெண்பா அறநெறி நூல்களில்
சிற்சில பாக்களில் சிந்தியல் வெண்பாவும்
பஃறொடைவெண் பாவும் வரும்.

ஔவையின் மூதுரை நல்வழி நாலடியார்
செவ்விதின் நீதிநெறி செப்பும் பனுவல்கள்
இன்னா இனியவை கார்கள நாற்பது
இன்னிலை கைந்நிலை நன்னெறி ஏலாதி
கப்பும் கிளையாய் இதுபோல் பலவகை
செப்பலில் சொல்லும் அறம்.

நளவெண்பா நாலா யிரதிவ்ய வெண்பா
அருட்பா சிவநேச வெண்பா சிலேடைகள்
அந்தாதி ஆன்மீகம் தண்டி யலங்காரம்
இந்தவிதம் வெண்பா விரிப்பு.

புலவர் குழந்தைத் தொடையதி காரம்
பலவகை நூல்கள் தரும்.

*****

ரமணி
25-08-2013, 03:20 PM
6.15. குறள் வெண்பா
பொதுவிலக்கணம்

வெண்பா இலக்கணம் பெற்றுக் குறள்வெண்பா
விண்டிடும் ஈரடி யில்.

ஒருவிகற்பத் தாலோ இருவிகற்பத் தாலோ
குறள்வெண்பா ஆகிடு மே.

ஒருவிகற்பம் வந்தால் இனக்குறள் வெண்பா
இரண்டில் விகற்பக் குறள்.

மோனை யெதுகை முரண்போல ஐந்தொடையால்
ஆன(து) இனக்குறட் பா.

பொருளின் செறிவால் அடிகள் இரண்டால்
தொடைகள் அமைவ தரிது.

விகற்பம் இரண்டாகச் செந்தொடை பெற்று
விகற்பக் குறட்பா வரும்.

விகற்பம் எனும்சொல் அடியெதுகை யெண்காட்டும்
செந்தொடையில் எத்தொடையும் இல்.

சிறப்பிலக்கணம்

புலவர் குழந்தை* குறிக்கும் சிறப்பு
பலவே குறட்பா விலே.
[*அவரது ’யாப்பதிகாரம்’ மற்றும் ’தொடையதிகாரம்’ நூல்கள்]

ஒருவிகற்பம் மோனை பொழிப்பில் அடிகள்
அரிதாய் ஒரூஉமிக மாண்பு.
[ஒருவிகற்பம்=ஒரே அடியெதுகை; பொழிப்பு மோனை=சீர்கள் 1-3-இல் மோனை;
ஒரூமோனை=சீர்கள் 1-4-இல் மோனை.]

எதுகைச் சிறப்பு அடிகளில் காணுக
மோனையில் சீர்கள் சிறப்பு.

அடியெதுகை யில்லாத போது ஒரூஉ
வெதுகை யமைதல் சிறப்பு.

தொடைகள் பலவகை வந்தால் அவற்றில்
பொழிப்புமோனை யாகும் சிறப்பு.

மோனை பொழிப்பிலா வேறு தொடையில்
ஒரூஉ வெதுகை சிறப்பு.

செந்தொடை வந்தாலோ செப்பலோசை தப்பாது
வந்திட வேண்டும் குறள்.

மோனை எதுகை வலிந்துகொளல் இல்லாது
ஆனதே செந்தொடை யாம்.

விகற்பக் குறளிலும் மோனை வருதல்
சிறப்பெனக் கொள்ளுதல் நன்று.

எழுசீர் சிறுமையிலும் இத்தனை பாங்கில்
எழுதுதல் வேண்டுமே இன்று.

இனிவரும் அத்தியா யத்திலே காண்போம்
நனிமிகு பாக்குறள் சான்று.

*****

ரமணி
28-08-2013, 03:30 AM
6.16. யாப்பமைதிக்கோர் அளவுகோல்

புலவர் குழந்தையின் நூல்கள் இரண்டு
பலவிதக் கூறு தரும்.

ஒவ்வோர் அடியிலும் மோனை பொழிப்பிலே
செவ்விதின் வேண்டும் வர.

குறள்சிந்து வெண்பா அடியெதுகை ஒன்றாய்
வரவேண்டும் ஓர்விகற்ப மாய்.

ஒன்றோ இரண்டோ விகற்பம் அளவியலில்
நன்றாய் அமைதல் நலன்.

நேரிசை வெண்பா ஒரூஉ எதுகையும்
சீருடன் வேண்டும் வர.

பொழிப்பினில் மோனை இயலாத போது
பொழிப்பில் எதுகை நலம்.

சிறுபான்மை மோனை எதுகை ஒரூஉ
வருதலே பாவில் தகும்.

வேறு தொடைகள் அமையினும் கூடவே
மேலுள்ள வையே சிறப்பு.

யாப்பமைதிக் கூறுகள் காணவே புள்ளிதந்தால்
பாக்கள் அளத்தல் எளிது.

ஓர்விகற்பம் மோனை பொழிப்பு அதேஎழுத்து
நூறு சதவிகித மாம்.

கீழ்வரும் அட்டவணை சொல்லும் பிறவகைக்
கூறுகளின் புள்ளி களை.

http://www.tamilbrahmins.com/attachments/literature/3026d1377656951-2965-2997-3007-2980-3016-2991-3007-2994-3021-2991-3006-2986-3021-2986-3009-00venpa-yappamaidhi.jpg

*****

ரமணி
30-08-2013, 01:45 AM
6.17. இனக்குறள் சான்றுகள்

வள்ளுவர் யாப்பிற்(கு) அளவுகோல் ஏதுமில்லை
உள்ளுவது சொல்லும் உளி.

யாப்பின் இலக்கணக் கூறுகள் யாவுமே
பாக்களில் காணும் குறள்.

மோனை எதுகை இனக்குறட் பாக்களில்
ஆனது அர்த்தம் பொறுத்து.

எதுகையும் மோனையும் இல்லாக் குறளும்
பொதுவில் பதியும் உளம்.

அன்றுமுதல் இன்றுவரை வெண்பாவே உள்ளத்தை
நன்றாக ஈர்த்திடும் பா.

வெண்பா வகையினில் செய்யுள் முனையவே
நண்பனாம் யாப்பமைதிக் கோல்.

பல்வகைச் சோதனை அன்றைய யாப்பிலே
வல்லதைக் கொள்ளவேண்டும் நாம்.

தமிழில் மரபு தழைத்திட இன்று
உமிநீக்கிக் கொள்வோம் மணி.

மணியின் ஒலியில் பொருளின் செறிவை
அணிசெய்த லேவெண்பா யாப்பு.

சான்றுகள்
குறள் 1.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு.
--திருக்குறள் 018:09

[ஒருவிகற்பம் அதே எழுத்து; அளவடி: பொழிப்பு மோனை அதே எழுத்து;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே எழுத்து.]

இதேபோல் சில குறட்பாக்களை அளவிட்டதில் கிடைத்தவை கீழே:

குறள் 2.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
--திருக்குறள் 010:10

[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை அதே;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளையெழுத்து.]

குறள் 3.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
--திருக்குறள் 020:10

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]

குறள் 4.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
--திருக்குறள் 006:02

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]

குறள் 5.
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
--திருக்குறள் 051:06

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ எதுகை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]

குறள் 6.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
--திருக்குறள் 022:05

[ஒருவிகற்பம் கிளையெழுத்து; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]

குறள் 7.
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
--திருக்குறள் 015:05

[ஒருவிகற்பம் அதே; சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]

குறள் 8.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
--திருக்குறள் 015:01

[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை கிளை.]

குறள் 9.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
--திருக்குறள் 016:01

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை.]

குறள் 10.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
--திருக்குறள் 081:05

[ஒருவிகற்பம் கிளை; அளவடி: பொழிப்பு மோனை கிளை;]

குறள் 11.
வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
--திருக்குறள் 009:05

[ஒருவிகற்பம் கிளை; அளவடி: ஒரூஉ மோனை.]

குறள் 12.
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
--திருக்குறள் 070:01

[ஒருவிகற்பம் அதே.]

*****

ரமணி
01-09-2013, 04:08 AM
6.18. விகற்பக்குறள் சான்றுகள்

இனக்குறள் ஓரெதுகை யென்றால் விகற்பக்
குறளின் எதுகை யிரண்டு.

விகற்பக் குறளில் பொதுவாய் ஒரூஉ
எதுகை அமையுமே வந்து.

நேரிசை வெண்பா ஒரூஉ எதுகைக்
குறள்வழி வந்ததென் பர்.

சான்றுகள் (ஒரூஉ எதுகை)
மனத்துக்கண் மாசிலன் னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
---திருக்குறள் 004:04

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
---திருக்குறள் 014:01

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
---திருக்குறள் 067:07

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
---திருக்குறள் 109:01

சான்றுகள் (செந்தொடை)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
---திருக்குறள் 007:04

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைக்குமே
நன்னுதல் நோக்கோர் வளம்.
--யாப்பருங்கலச் சான்று

*****

ரமணி
04-09-2013, 04:47 AM
6.19. திருக்குறளில் பொருள்சிறக்க வரும் முரண்தொடை

முரண்படச் சொல்லோ பொருளோ தொடுத்தால்
முரண்தொடை வந்திடும் காண்.

அறத்தினைக் கற்பிக்கும் நூல்கள் அதோடு
மறத்தையும் சொல்வது உண்டு.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
---திருக்குறள் 008:06

நல்லது சொல்கிற செய்யுளில் கூடவே
அல்லதும் சொன்னால் அழகு.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
---திருக்குறள் 010:06

நல்லதும் அல்லதும் பக்கத்தில் நின்றிட
நல்லதின் தன்மை மிகும்.

முரண்படும் செய்திகள் சொல்கிற போது
முரண்படும் சொற்கள் வரும்.

அறநூல் களிலே இதுபோல மிக்க
முரண்தொடை வந்திடு மே.

முரண்தொடை சீர்த்து வருகிற ஓர்நூல்
திருக்குறள் என்றிட லாம்.

முரண்தொடை யால்பொருள் சீர்த்து விளங்கிடும்
வள்ளுவர் பாக்கள் சில.

பொருளை விளக்க வருவது சொல்முரண்:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
---திருக்குறள் 009:06 ... [செல்விருந்து வருவிருந்து]

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
---திருக்குறள் 007:10 ... [மகன் தந்தை]

தந்தை மகன்மற்றும் செல்-வரு என்றது
சொல்லினில் மட்டும் முரண்.

சொல்லில் பொருளில் முரண்வரும் பாக்கள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
---திருக்குறள் 010:10 ... [இனிய இன்னாத, கனி காய்]

இனிய பதத்தின் பொருள்முரண் இன்னாத
காய்-கனி சொல்முர ணாம்.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
---திருக்குறள் 012:04 ... [தக்கார் தகவிலர்]

தக்கார் தகவிலர் என்று பொருளொடு
சொல்லும் முரணுத லாம்.

*****

ரமணி
05-09-2013, 09:12 AM
6.20. திருக்குறளில் நிரோட்ட/இதழகல் குறட்பாக்கள்

ஓஷ்டம் எனும்சொல் உதட்டுக்கு சம்ஸ்க்ருதத்தில்.
ஓட்டம் இதன்தமிழ்ச் சொல்.

உதடுகள் ஒட்டினால் ஓஷ்டம் நிரோஷ்டம்
உதடுகள் ஒட்டாத து.

நிரோஷ்டம் தமிழினில் ஆகும் நிரோட்டம்
இதழகல் இன்னோர் பெயர்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
---திருக்குறள் 035:01

இதழகல் என்ற நிரோட்டப்பா உத்திக்கு
இக்குறள் சீர்மிகு சான்று.

இளங்கோவன் மின்வலையில் வேறுபல காண்க
அவற்றி லிருந்து சில.

அவர்தரும் முற்றும் இதழகல் பாக்கள்
இனிவரும் மூன்று குறள்.

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
---திருக்குறள் 031:10

எய்தற் கரிய தியைந்தகாண் அந்னிலையே
செய்தற் கரிய செயல்.
---திருக்குறள் 049:09

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குநல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
---திருக்குறள் 109:02

முற்றும் இதழகலா வேறுசில பாக்களில்
சிற்சில காண்போம் இனி.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
---திருக்குறள் 067:08

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று.
---திருக்குறள் 021:08

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
---திருக்குறள் 068:09

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
---திருக்குறள் 042:09

மீதமுள்ள பாக்குறள்கள் அன்னாரின் கீழுள்ள
மின்தளத்தில் உள்ளன வே.
http://muelangovan.blogspot.in/2012/03/blog-post_26.html

நிரோட்டம் இதழகலுக் காகா எழுத்துகள்
கீழ்வரு மாறு கணக்கு.

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் ௧௨ உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

பார்க்க:
http://muelangovan.blogspot.in/2012/03/blog-post_26.html

*****

ரமணி
07-09-2013, 02:21 AM
6.21. திருக்குறளில் ஓட்டம்/இதழுறல் குறட்பாக்கள்

நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால்.

ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02

6.22. ஔவையின் குறள்மூலம்

ஔவை அருளிய ஞானக் குறளாம்
குறள்மூலம் பாக்கள் சில.

மாசற்றக் கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 016

எழுபத் தீராய நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல். 031

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 084

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191

பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். 214

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. 272

6.23. குறள்வெண்பாவில் ஹைக்கூ

அசைகள் பதினேழில் ஜப்பானின் ஹைக்கூவாம்.
மூன்று வரியில் மனது.

இரண்டு வரிகளில் ஈரசை மூவசைச்
சீர்களேழு வந்து இறுதிச்சீர் ஓரசையாய்
முற்றும் குறள்வெண்பா ஏற்ற வடிவம்
தமிழ்மொழியில் ஹைக்கூ எழ.

கீழெல்லை ஈரசை மொத்தம் பதிமூன்று
மேலெல்லை மூவசை பத்துடன் ஒன்பது
காய்ச்சீர் இயற்சீர் இணைப்பில் இடையெல்லை
போதாதா ஹைக்கூ எழ?

தமிழ்மொழியில் ஹைக்கூ குறளில் எழும்போது
ஐக்குறள் என்போம் அதை.

அணுக்குறள் என்றும் துளிக்குறள் என்றும்
அழக்கலாம் என்போம் இதை.

*****

இயற்கை முரண்காட்டி வெட்டும் பதமொன்றில்
சேருமே ஹைக்கூவில் காண்.

பனித்துளி ஆவியாகும்; வையம் பனித்துளி.
ஓர்நொடியில் போகும் புதிது.

புகழ்பெற்ற ஜப்பான்ய ஹைக்கூ கவிஞராம்
இஸ்ஸாவின் ஹைக்கூ இது.

வேறுசில ஜப்பான்ய ஹைக்கூ வரும்கீழே
ஐக்குறள் ரூபத்தில் நம்.

சேற்றிலே நாற்றுநடும் பெண்கள் அழகில்லை.
பாடிடும் தொல்பாட் டழகு. ... [ரைஃஜான்]

வளிக்காலம். கூட்டில் பசிமிக வீணாக
வாய்திறக்கும் இஸ்ஸாவோ தத்து. ... [இஸ்ஸா]

அழகான கிண்ணத்தில் பூக்கள் அமைப்போமா?
உண்பதற்கு இல்லை உணவு. ... [பாஷோ]

கீழ்விழுந்த பூவா கிளைக்குத் திரும்புவது?
வெண்பட்டுப் பூச்சியே ஓ! ... [மோரிடாகே]

*****

முதல்வரியில் காட்சி. இரண்டினில் காரணம்.
ஐக்குறள் தட்டெழுதும் போது.

இப்படியோ அல்லது வேறு அமைப்பிலோ
ஐக்குறள் ஆக்குவோம் நாம்.

குறள்வடிவு மட்டும். எதுகைமோனை கட்டில்லை.
தானே அமைந்தால் அழகு.

*****

அம்மா எனும்பசு அய்யோஓ என்கிறது.
வாயில் நெகிழிப்பை யோடு! ... [நெகிழி=plastic]

புல்லிருந்த பூமியை நக்கித் துடைத்திடும்.
நாயாய் அலையும் பசு.

எறும்புக்கு இட்ட அரிசிமாவுக் கோலம்.
கரந்துண்ணும் காக்கை அணில்.

சுட்டெரிக்கும் வெய்யில். சுவரோரம் வண்டி.
எருதுகள் வாயில் நுரை.

முன்னே ஒளிவெள்ளம். சாலை விருட்சம்.
சுவரில் எறிந்துசெல்லும் கார்.

*****

ரமணி
11-09-2013, 02:44 PM
6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/2013/09/624-1.html

கலைந்த குறட்பாக்கள் கட்டில் அமைக்க
விளைந்திடும் பாக்குறள் மூன்று.

விளைந்திடும் மூன்று குறட்பா முதற்சீர்
இயற்-உல தள்ளா வென.

கல்லா ரறிவிலா தார்.
வகுத்தலும் வல்ல தரசு.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
செல்வருஞ் சேர்வது நாடு.
இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த

*****

ரமணி
14-09-2013, 08:41 AM
6.24. குறள்வெண்பாப் பயிற்சி
பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்
http://kavithaiyilyappu-payirchchi.blogspot.in/

காணாத சீர்கள் அமைத்துக் கோடுகளில்
காணுக முழுக்குறட் பா.

வழிய உடம்பு. ஏதிலார் மன்னு
உலைவின்றித் தாழா

அன்பின் ----- துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த -----

----- குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ ----- முயிர்க்கு.

ஊழையும் உப்பக்கம் காண்பர் -----
----- துஞற்று பவர்.

பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்

கீழ்வரும் பாக்கள் இரண்டு இடங்களில்
பின்னசைத் தட்டும் தளை.

தட்டும் தளையைச் சரிசெய் தெழுதுக
கட்டுடன் வந்திடும் பா.

எதுகையும் மோனையும் மாறா திருந்து
அதுவென வாக அமை .

கணிணி யறிதல் கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிதல் தரிது.

பணமும் புகழும் வருதல் நன்றே
குணமது மேன்மையே யுறின்.

காலையின் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்த்திடும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிருமே பனித்துளி
சித்தமே ஒளிர்க்கும் இரவு.

அந்தி சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தை வந்தால் சிறப்பு.

*****

ரமணி
16-09-2013, 02:28 AM
6.24. குறள்வெண்பா பயிற்சி விடைகள்
பயிற்சி 1. குறட்பா நேர்வரச் செய்தல்: விடை

இயற்றலும் ஈட்டலும் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
--திருக்குறள் 039:05

உலகத்தோ ரொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
--திருக்குறள் 014:10

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
--திருக்குறள் 074:01

பயிற்சி 2. குறட்பா பூர்த்தி செய்தல்: விடை

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
--திருக்குறள் 008:10

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
--திருக்குறள் 019:10

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
--திருக்குறள் 062:10

பயிற்சி 3. குறட்பா தளைப்பிழை திருத்துதல்: விடை

கணிணி யறிவது கட்டாயம் இன்றேல்
பணிநீ புரிவ தரிது.

பணமும் புகழும் வருவது நன்றே
குணமது மேன்மை யுறின்.

காலைக் கதிரவன் கற்றை யொளியிலே
சோலையில் ஆர்க்கும் ஒலி.

முத்தாய் இலையில் ஒளிரும் பனித்துளி
சித்தம் ஒளிர்க்கும் இரவு.

அந்தியின் சந்தியில் ஆண்டவன் எண்ணமும்
சிந்தையில் வந்தால் சிறப்பு.

*****

ரமணி
18-09-2013, 04:33 AM
பயிற்சி 4. குறட்பாவில் நிரல்வரும் சீர்கள்

கீழ்வரும் சீர்நிரல் தன்னில் அமையக்
குறட்பா எழுதிப் பழகு.

ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
நேர்வர வேண்டுமிங் கே.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்/பிறப்பு

சான்று
தீதும் நலனும் பிறர்தர வாகுமோ
ஏதும் செயல்ந மதே.

முன்னோர் மொழிகள் மனம்பட வாழ்ந்திடத்
தன்னால் பெருகும் தகவு.

***

புளிமா கருவிளம் கூவிளம் தேமா
புளிமா கருவிளம் நாள்/காசு

சான்று
விழிமுன் தெரிவதே வேண்டுவன் என்றால்
வழியில் துயரமே தான்.

இலையின் பனித்துளி செஞ்சுடர் பட்டு
கலைகள் விழிப்படும் காடு.

***

கருவிளம் கூவிளம் தேமா புளிமா
கருவிளம் கூவிளம் நாள்/காசு

சான்று
கதவுகள் மூடிடும் காலம் பொறுத்தால்
உதவிகள் தேடிவ ரும்.

அலர்மக ரந்தமே கால்கள் பிடிக்க
மலர்வலம் வந்திடும் வண்டு.

***

கூவிளம் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்/பிறப்பு

சான்று
காடுதான் மீண்டும் எனவந் திடும்சுழல்!
வீடுதான் கூடு மெவண்?

கார்முகில் வானம் கனிந்தே பொழிந்திட
ஊர்தனில் உள்ளக் களிப்பு.

***

உதவி:
தமிழில் தட்டெழுத
http://kandupidi.com/editor/

பாவகை ஆய்ந்து சரிபார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam-download

*****

ரமணி
21-09-2013, 06:24 AM
பயிற்சி 5. குறட்பாவில் நிரல்வரும் காய்ச்சீர்கள்

ஓரெது கையும் பொழிப்பினில் மோனையும்
சீர்வரும் காய்ச்சீர் இனி.

இவ்வகைச் சீர்கள் இனிதே அமைந்திடச்
செவ்வியப் பாக்கள் எழுது.

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு

சான்று
தென்காற்றில் காற்றாலை மென்சுற்றும் கம்பீரம்
முன்செலுமே தார்ச்சாலைப் பாம்பு.

வானத்தில் வெண்மேகம் ஐராவ தம்போல
மௌனத்தில் வீசும்தென் றல்.

***

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு

சான்று
வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
யானுமொரு நீர்த்துளியே தான்.

வான்வழியே தேனமுதாய்க் காலிறங்கும் மென்துளிகள்
கானமிசைக் கும்கூரை மீது.

***

ஓரெது கைவரும் போது உயிர்மெய்யும்
ஒற்றும் எதுகையா காது.

ஒற்றுடன் ஒற்றதே சேரும் உயிர்மெய்
வருக்கக் குறில்நெடி லாய்.

கீழ்வரும் பாக்குறள் ஓரெது கையல
ஒற்றோ டுயிர்மெய் வர.

மாட்டின் மடியினில் பால்மிகக் கோனாரும்
பாடியே பால்கறப் பார்.

இதனால் இனிவரும் காய்ச்சீர் நிரல்கள்
எதுகையில் ஒன்றாய் வராது.

கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.

கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.

புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் நாள்/காசு.

புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு.

***

இயற்சீரும் காய்ச்சீரும் சேரும் வகைகள்
பயில்வது பற்பல வாய்.

இயற்சீர் தமக்குள் வகைகள் பலவாய்
இயன்று வருவ தியல்பு.

திருக்குறள் யாப்பைத் திருத்தமாய்க் நோக்க
வரும்வகைக் கண்படும் நன்கு.

*****

ரமணி
24-09-2013, 07:46 AM
6.25. குறள்வெண்பா வித்தகங்கள்

வித்தகம் பற்பலவாய் விந்தைக் குறள்வெண்பா
உத்தி பலவா றுள.

ஒருவிகற் பத்தில் பொழிப்பினில் மோனை
இரட்டைச் சிறப்பெனத் தேறு.

உத்தி 1. முதற்சீர் இரண்டெழுத்து முடிவில் வருதல்

ரமணி:
தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
ஆத்தா தடியெடுத் தா. ... 1

வாசிவாசி யென்று மனதில் முணுமுணுத்தால்
பேசுமொழி யாகும் சிவா. ... 2.

சுவாசப் பயிற்சிகளில் தேர்ந்து மனதை
சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

சுகாதாரம் சிங்கார வஸ்துகள் அல்ல
விகாரம் விளைப்பதே காசு. ... 4

வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
ஓசியா என்றான் சிவா. ... 5

புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
தன்னல மில்லாத அன்பு. ... 6

திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
உறவாவார் பார்த்’சா ரதி. ... 7

புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
அறியுமோ வாழ்வில் இரிபு? ... 8
[இரிபு=தோல்வி, வெறுப்பு]

குலவும் கலியில் கலித்துக் களித்துப்
பலவிதமாய் வாழும் உலகு. ... 9

விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
நிரல்களைச் செய்தார் ரவி. ... 10
[தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்.]

மேலும் பாக்களுக்கு:
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/EZ0mnRh32rE/tdgMtULMJjUJ
https://groups.google.com/forum/#!searchin/santhavasantham/முடிபிறழ்$௨0அடி/santhavasantham/9dmhNUiaULw/NywyN0xsYkAJ

பயிற்சி
இந்த வகைவரும் விந்தைக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****

ரமணி
27-09-2013, 08:09 AM
உத்தி 2. முதல் ஒலிபிறழ மாறும் முடிவு

முதற்சீர் எழுத்து இரண்டிலோ மேலோ
அதனொலி மாறிவரும் ஈற்று.

எழுத்திடம் மாறுவதால் மாறும் ஒலியே
எழுத்தின் வகையைப் பொறுத்து.

ராம்-எனும் சொல்மாற மார்-என ஆகுமே
கூத்து திரும்பினால் தூக்கு.

மேலும் சில காட்டுகள்
சாவி-வாசி, குருவி-உருகி, கப்பல்-பக்கல்,
வேதம்-தேவம், காதம்-தாகம், வேதனை-தேவனை

ராம்ராம் வடநாட்டில் ராமா தமிழிலே
ராமாஞ்ச நேயரனு மார். ... 1

ரோம்நாட்டில் அன்று குடிமக்கள் சாப்பாட்டில்
யாம்கண்ட தில்லையே மோர். ... 2

ரவைதரும் உப்புமா சட்னியுடன் ஆகா!
சுவைப்போமே உள்ள வரை! ... 3

வார்த்திகம் எய்தியதில் ஆளே உருமாற
யாரெனும் கேள்வியில் ராவ். ... 4

குச்சுவீட்டில் ஏதுவழி காப்பிக்கு? காலையில்
பச்சரிசிக் கஞ்சியில் சுக்கு. ... 5

தலாரூபாய் நூறுதர முந்நூறு தந்தாள்
கலாவின் மகளாம் லதா. ... 6

சாவுபல தீவிபத்தில் மாண்டோர் கணக்கிலே
பாவம்நம் தீயணையர் வாசு. ... 7

காத்துப் பயனில்லை மாற்றானின் பாசறையை
ராத்திரியில் சூழ்ந்துநின்று தாக்கு. ... 8

தூக்கிக் கழிநுனியில் ஊசலாட வைப்பானே
ஊக்கில் எழும்கழைக் கூத்து. ... 9

தோப்புவழிச் சென்றபோது தோன்றித் தலையுயர்த்த
கூப்பிட்ட தேவோர்செம் போத்து. ... 10

பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****

ரமணி
30-09-2013, 01:54 AM
உத்தி 3. முதற்சீரில் வரும் சொல் முடிவில் வேறு பொருளில் வருதல்

நூற்கண்டு தேர்ந்ததில் நூல்கிழியத் தேடினேனே
நூற்றைக்க ஊசிநூற் கண்டு.

கற்கண்டு சிற்பி கலைவடிக்கத் தோன்றிய
பற்பல பெண்ணுருகற் கண்டு.

உண்டும் உறங்கியும் போதைக் கழிப்பதில்
குண்டனைப் போலெவர் உண்டு?

குடியுயரக் கோனுயரும் சொல்மாறி யின்று
குடிமக்கள் கேடு குடி.

படிதாண்டாப் பத்தினி மாறினாள் இன்று
படித்துமுன் னேறும் படி.

தேர்தலின் கூட்டத்தை விஞ்சிப் பொதுமக்கள்
பார்க்க நகர்ந்தது தேர்.

அக்கரைக்கு இக்கரை பச்சை குடியிருப்பு
இக்கரையேன் பின்னக் கறை?

தலைப்பு அறிவிக்கப் பாட எழுந்த
கலைக்கையில் சேலைத் தலைப்பு.
[கலை என்பது ஒரு பெண்ணின் பெயர்]

கதையால் துரியோத னைவீமன் தாக்கி
வதைசெய முற்றும் கதை.

அரிச்சுவடி மேற்படிப்பு எல்லாம் சரிதான்
அரிசி அரிச்சு வடி.

பயிற்சி
இந்த வகையிலே சொந்தக் குறட்பாக்கள்
சிந்தனை செய்தே எழுது.

*****

ரமணி
02-10-2013, 11:29 AM
6.30. நேரிசை இன்னிசை வெண்பாக்கள்

குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.

நேரிசை இன்னிசை வெண்பா வகையென
பேரும் இலக்கணம் பெற்று வருதல்
அளவியல் வெண்பா கருதியே என்று
உளத்தில் இருத்தவேண் டும்.

சீரது நான்கில் இரண்டாம் அடிவரும்
நேரிசை வெண்பாச் சிறப்பாம் தனிச்சொல்லே
நேரிசை வெண்பாக் குறி.

6.31. நேரிசை வெண்பா என்பது

வெண்பா விலக்கணம் பெற்று அடியிரண்டின்
ஈற்றில் தனிச்சொல் ஒரூஉ எதுகையாக
நேரிசை வெண்பா வரும்.

அடியிரண்டின் ஒன்றாம்சீர் நான்காம்சீர் மற்றும்
அடியொன்றின் ஒன்றாம்சீர் ஓரெதுகை யென்பது
நேரிசை வெண்பா மரபு.

அதாவது சீரொன்றும் சீரைந்தும் எட்டும்
பொதுவில் எதுகைகள் ஒன்றாய் அமைவது
நேரிசை வெண்பா மரபு.

அளவியல் நேரிசை வெண்பா வருமே
அளவடி நான்கிலும் ஓர்விகற்ப மல்லது
முன்னீ ரடிகள் விகற்பம் ஒருவகை
பின்னீர் ரடிகள் விகற்பம் ஒருவகை
என்று எதுகையி ரண்டு.

ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா சான்று

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -- நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 6

*****

ரமணி
05-10-2013, 12:03 PM
6.32. இன்னிசை வெண்பா என்பது

நேரிசை வெண்பா இலக்கணம் இல்லாத
வேறிசை வெண்பாக்கள் எல்லாமே இன்னிசை
பேர்பெறும் வெண்பா என.

இன்னிசை வெண்பா விகற்பத்தில் ஒன்றுபல
வென்றுவரும் ஒன்றுபல வாய்த்தனிச் சொல்வர
அன்றித் தனிச்சொல்லே அற்று.

இன்னிசை வெண்பா விதங்களை நோக்கினால்
ஒன்றும் தனிச்சொல் வராத வகைகளில்
ஒன்றே எதுகை முழுதும் வருவதும்
ஒன்றின் அதிகம் எதுகை வருவதும்
என்று வகைகள் இரண்டு.

தனிச்சொல் வருகிற இன்னிசை வெண்பாத்
தனிச்சொல் அடியிரண்டில் இன்றிவே றெங்கோ
தனிச்சொல்லாய் ஒன்றுபல வென்றோ வரலாம்
தனிச்சொல் அடிதோறும் என்று வரலாம்
தனிச்சொல் அடியிரண்டில் வந்தால் விகற்பம்
இரண்டினும் மிக்கு வரும்.

தனிச்சொல் அடியிரண்டில் வந்து விகற்பத்தில்
ஒன்றோ இரண்டோ வருவதெலாம் நேரிசை
வெண்பா வகைப்படு மே.

இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்
ஒருவிகற்பம், தனிச்சொல் இன்றி

நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற் குறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 25

பலவிகற்பம், தனிச்சொல் இன்றி

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகவினிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்னினிதே
எள்துணை யானும் இரவாது தானீதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 16

பலவிகற்பம், இரண்டாம் அடியில் தனிச்சொல்லுடன்

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
---நாலடியார் 151

*****

ரமணி
11-10-2013, 02:12 PM
6.35. சிந்தியல் வெண்பா

யாப்பின் வழக்கினில் சிந்து வெனும்*அடையில்
பாப்புனைவர் சீரோ அடியோ வரமூன்று.
சிந்துவின் ஓர்பொருள் மூன்று.

சிந்தடி யென்பது சீர்மூன்று வந்ததே
சிந்தியல் என்ப(து) அடிமூன் றியல்வதே
சிந்தடிவெண் பாவடியே மூன்று.

சிந்தியல் வெண்பா அளவடியில் வந்தாலும்
வந்தது மூன்று அடிகளே ஆயினும்
சிந்தடியே இவ்வெண்பா ஈறு.

வெண்பா வனைத்துமே சிந்தடியீற் றென்றாலும்
பண்பினில் மூன்றே அடியிதாகச் சிந்தியல்
வெண்பா பெயர்பெற் றது.

6.36. சிந்தியல் வெண்பா இலக்கணம்

வெண்பா விலக்கணம் பெற்றுவரும் சிந்தியல்
வெண்பா அளவடி ஈரடி ஈற்றடி ... [ஈரடி = இரண்டு அடி]
சிந்தடி யென்று வரும்.

விகற்பம் இரண்டொன்றோ மூன்றோ அமைந்து
வகைகளில் நேரிசை இன்னிசை யென்றிரண்டாய்ச்
சிந்தியல் வெண்பா வரும்.

நேரிசை இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்கள்
மேற்சொன்ன வாறு இலக்கணம் பெற்று
வகைகள் இரண்டில் வரும்.

6.37. நேரிசைச் சிந்தியல் வெண்பாச் சான்றுகள்

ஒன்றிரண்டு என்று விகற்பம் வரத்தனிச்சொல்
என்றுவரும் நேரிசைச் சிந்தியல் வெண்பாவின்
சான்றுகள் காண்போம் இனி.

அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் -- சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
--யா.கா.மே. 26

பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் -- தேடியே
கூடி வணங்கு முலகு.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே -- பொற்றேரான்
பாலைநல் வாயில் மகள்.
--யா.கா.மே. 26

படைக்கலம் ஏந்தாமற் பாரித்துப் போரை
நடத்தியவன் காந்தியெனும் நல்லான் -- அடற்கெதிரே
ஆரேநின் றாற்றுகிற் பார்.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

6.38. இன்னிசைச் சிந்தியல் வெண்பாச் சான்றுகள்

ஒன்றிரண்டோ மூன்றோ விகற்பம் தனிச்சொல்லே
இன்றிவரும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவின்
சான்றுகள் காண்போம் இனி.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலத்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.
--இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், மங்கல வாழ்த்துப் பாடல்

நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்ட்ட்ர் அடி.
--யா.கா.மே. 26

கண்ணன் அடியே கருதி வணங்குபவர்
எண்ணமெலாம் எண்ணியவா றீடேறும் என்பதனைத்
திண்ணமாய் நெஞ்சே அறி.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

சொல்லிற்குள் ளேபொருளில் தோய்ந்துணர்வி லேயூறி
நல்லசுவை கண்டுவகை நாட்டமுடை யோர்பாவின்
இன்பமெலாம் காண்பர் இனிது.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.90

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை.
--யா.கா.மே. 26

முல்லை முறுவலித்துக் காட்டின மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற போயினார்
திண்டேர் வரவுரைக்கும் கார்.
--யா.கா.மே. 26

தெய்வந் தெளிந்தோர் சிறிதும் பிறர்க்கின்னல்
சூழாது நன்மைசெய்யும் தூயோர் அறமொன்றே
ஆற்றுவோர் நல்லோர் அறி.
--கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.91

*****

ரமணி
15-10-2013, 03:50 AM
6.39. சிந்தியல் வெண்பா முயற்சி

நேரிசைச் சிந்தியல் வெண்பா
கணிணியைப் போற்று கணிணியைப் போற்று
பணியது செய்திடும் பாங்கில்- அணியாம்
மணித்துளியில் வேலையாவ தால்.

உதைத்தால் பணிதொடங்கும் உட்சுமைகள் தாங்கும்
சிதைக்காது தோய்த்துத் திரையில் - கதைக்கும்
கழுதைக் கணினி யிது!
[உதைத்தால் = boot செய்தால்]

ஊக்கம் தருகிற ஏக்கம் இதுவென்றால்
தூக்கம் விடுத்துச் செயல்படலாம் - சீக்கிரமே
ஆக்கம் விழையும் மனது.

ராணி குதிரைகள் ஆனைகள் ஒட்டகம்
ஆணியுடன் ராஜாவைக் காத்தாலும் - ராணியின்
ஆற்றலோ ராஜாவின் மிக்கு.
[ஆணி = மேன்மை, ஆசை]

அழுக்குச் சுமைகளைத் தாங்கிநான்கு கால்கள்
பழுக்க நடக்கும் மவுனம் - விழுப்பில்
கழுதை கவிதைக் கனல்.
[விழுப்பு = விழுப்பம் = மேன்மை]

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
சித்திரம் பேசுதடி சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போலேயுன் மோகனப்
புன்னகை மின்னும் முகம்.

ஆனை குதிரையை வெட்டும் குதிரையோ
சேனையின் வீரனை வீரனோ யாரையும்
மன்னனுக் கில்லையே சாவு.

கழுதையென் றானாள் வரவர மாமி
கழுதையும் தேய்ந்தது கட்டெறும்பு ஆனது
என்றபடி மாமி எறும்பு?

ஆடாத அம்மி அடிமேல் அடிநகர்ந்தே
ஆடியின் காற்றில் பறப்பதால் ஆவாளோ
அம்மி யரைப்பாள் மிடுக்கு?

காக்கைக்குத் தன்குஞ்சு ஆயினும் பொன்குஞ்சு
காக்கைக்கு அஞ்சுகுண மாய்ச்சொல்வ தாதலால்
குஞ்சுக்கும் அஞ்சு குணம்.

*****

ரமணி
25-10-2013, 06:21 AM
6.50. அளவியல் வெண்பா

யாப்பின் வழக்கில் அளவின் அடையிலே
பாப்புனை வர்நா லடியிலோ சீரிலோ
நாற்சீர் அளவடி நான்கு வருமே
அளவியல் வெண்பா விலே.

வெண்பா வெனிலே குறிக்கும் அளவியல்
வெண்பா விலக்கணம் பெற்றுவரும் நான்கு
அடிகள் இயலும் அளவியல் வெண்பா
வடிவில் வகைகளி ரண்டு.

அடியிரண் டீற்றில் தனிச்சொல் வரினே
வடிவமாம் நேரிசை அவ்விதம் ஆகா
வடிவமாம் இன்னிசை வெண்பா வெனவே
படித்தது மேல்வந் ததே. ... ... இயல் 6.30

*****

6.51. நேரிசை அளவியல் வெண்பா

அளவடி யாள்வதால் நேரிசை வெண்பா
அளவியல் நேரிசை வெண்பா - உளங்கொள
உற்றவோர் பேருடன் வெண்பா விலக்கணம்
முற்றும் இயன்று வரும்.

நேரிசை வெண்பா அளவடி நான்கிலே
சீரெட் டுவரும் தனிச்சொல்லே -- பூரணமாய்ச்
சொற்பொருள் ஓசையில் அந்தத் தனிச்சொல்லும்
நிற்கச் சிறந்து வரும்.

ஒன்றே எதுகை அடிதோறும் சீரொன்றில்
நின்ற தனிச்சொல் எதுகையும் -- ஒன்றும்பா
ஓர்விகற்ப நேரிசை வெண்பா வெனப்பெறும்
பேராம் எதுகை பொறுத்து.

முதலில் இரண்டடி யுற்ற தனிச்சொல்
எதுகை அதேவர வேறோர் - எதுகை
இரண்டு அடிகளில் பின்வந் தமையும்
இருவிகற்ப நேரிசைவெண் பா.

விகற்பவகை நேரிசை வெண்பாவே மேலும்
வகையிரண் டாகி வருமே - தகவில்
இருகுறள் ஆசிடைப் பேர்பெறும் வெண்பா
இரண்டின் விளக்கம் பிறகு.

*****

ரமணி
01-11-2013, 07:15 AM
6.52. ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நல்வழி:
கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வார் -- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்டெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
---ஔவையார், நல்வழி 34

தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
தேமா புளிமாங்காய் நாள்.

பாடலைச் சந்திகள் நீக்கிப் பொருளினைத்
தேடவெளி தாக்கியே இப்படிப் -- போட
கலித்தளை வந்துபூச் சீர்கள் அமைந்து
ஒலியில் கெடுதலை யுள்ளு.

கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வார் -- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

[கைப்பொருளொன்று=கூவிளந்தண்பூ; வேண்டாள்மற்று=தேமாந்தண்பூ; இதனால், சொல்=மா;
சென்றங்கு | எதிர்கொள்வார் = கலித்தளை; செல்லாது | அவன்வாயிற் = கலித்தளை]

அலகிடும் போதுநாம் சந்திகள் சேர்த்தே
உலவிடும் சீர்கொள வேண்டும் - கலத்தல்
பிரித்தே அலகிடச் சீர்தளை குன்றி
உரித்த விலக்கணம் போம்.

மூலமாம் செய்யுள் முதலில் எழுதிப்பின்
சாலும் பதபாடம் காட்டினால் - ஏலம்போல்
சொல்லும் பொருளும் சுவைபெற்றே யோங்கிடச்
சொல்வரும் செய்தி யுறும்.

அவ்வையின் நேரிசைவெண் பாவின் சிறப்புகள்
வவ்வத் தனிச்சொல் அடியெதுகை - ஒவ்வுறும்
ஒற்றினம் மோனை பொழிப்புகள் நோக்கியே
கற்றுத் தெளிவீரே நன்கு.

காலம் கடந்துநிற்கும் ஔவையின் நல்வழிச்சொல்
ஞாலம் முழுதுமே மாந்தரின் - கோலத்தைத்
தெள்ளிதின் காட்டுமனக் கண்ணாடி போலிருத்தல்
உள்ளிட வோங்கும் உவப்பு.

அவ்வையின் மற்றொரு பாவில் இதுபோல
வவ்வும் ஒலியும் தனிச்சொல்லும் - எவ்வாறு
செய்தி உவமையிற் செவ்விதின் சொல்வதுகாண்
மெய்ப்பாடு மேவிட வே.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12

*****

திருத்தாண்டகம்:
பின்வரும் வெண்பாவில் சீர்கள் வகையுளி
யின்றி வருவதில் காய்ச்சீரும் - பின்வரும்
கூவிளச் சீர்களும் ஒன்றியே பாம்பெனும்சொல்
தாவி வருவது காண்.

இன்னுமந்த பாம்பெனும்சொல் ஈற்றடியில் நேர்பு-காசு
என்றுவந்து வேறடியில் தேமாச்சீர் - என்றுமே
நன்று பயின்று பொருளுடன் சொல்லினைப்
பின்னி வருவதும் பார்.

திருமுடியில் கண்ணியும் மாலையும் பாம்பு
திருமார்பில் ஆரமும் பாம்பு -- பெருமான்
திருவரையில் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்தில் கங்கணமும் பாம்பு.
---திருத்தாண்டகம்

*****

ஐந்திணை எழுபது:
என்னைகொ றோழி அவர்கண்ணு நன்கில்லை
யன்னை முகனு மதுவாகும் - பொன்னலர்
புன்னையும் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை.
---மூவாதியார், ஐந்திணை எழுபது, 58

பதம் பிரித்து:
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கில்லை
அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்
புன்னையும் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்லது இல்லென்று உரை.

பாட்டில் பயிலும் இடையினம் மெல்லினம்
காட்டும் தலைவியின் சோகமும் - வேட்டபொருள்
ஈட்டிடச் சென்றான் பிரிவும் செவிலியின்
காட்ட நிலையுமே பாட்டு.

*****

கி.வா.ஜ:
முந்தையோர் பாடிவைத்த முத்தமிழ்நூல் தம்மையெல்லாம்
அந்துமுதற் பூச்சி அழிக்காமல் -- வந்தெடுத்துத்
தந்தபெரு வள்ளல் தமிழ்ச்சாமி நாதகுரு
செந்தமிழ்த்தாய் பெற்றமணிச் சேய்.
---கி.வா.ஜ., ’கவி பாடலாம்’

குருவுக்குப் பாமாலை சூட்டும் கி.வா.ஜ.
உருநீண்ட காய்ச்சீர் விரித்தே - பொருளும்
குருவின் பெயரில் வகையுளியும் ஈற்றில்
தருகிற முத்தாய்ப்பும் பார்.

*****

ரமணி
07-11-2013, 02:07 PM
6.53. இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

இருவிகற்பம் பெற்றுவரும் நேரிசைவெண் பாவே
பெரும்பாலும் யாத்தனர் அன்று - பொருளைப்
பதங்களில் நன்கு விளக்க இதுவே
இதமென்று கண்டனர் முன்பு.

மூதுரை, ஔவையார்:
நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே -- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர். ... 8

வருக்க எதுகை அடியிரண்டு ஈற்றில்
வருவதால் இஃது எதுகை - சுருங்கப்
பலவிகற்ப இன்னிசை வெண்பாபோல் தோன்றும்
இருவிகற்ப நேரிசை யே.

இற்றை வழக்கினில் ஔவையார் சொன்னதை
இப்படிச் சொல்லலா மோ?

நல்லார்க்குச் செய்த உதவி அவர்மனதில்
கல்மேல் எழுத்துப்போல் காணுவர் -- அல்லாது
ஈரமில் நெஞ்சினர்க்கு ஈந்தால் மறந்திடுவார்
நீர்மேல் எழுதியது போல்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே*எ -- நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.
---ஔவையார், மூதுரை 8

மாசில் இலக்கணம் காணவரும் வெண்பாவின்
வாசகத்தில் ஔவை அறிவுரையை - யோசித்துத்
தேடியே நல்லோரை வேண்டி அவர்களைக்
கூடி இருப்போமே இன்று.

*****

இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் -- நடைதீர்த்தல்
கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும்.
---கணிமேதையார், ஏலாதி 4

பொருள்
துயர்தீர்ப்போன் கேலிசெய்யான் கீழோரைச் சேரான்
வயிற்றுப் பசிகளைவோன் தீமை -- பயிலான்
பிறரிடம் பேச்சினியான் கண்டால் துறந்தார்
அறநூல்கள் தேவையில்லை யாம்.

*****

ரமணி
16-11-2013, 12:37 PM
6.54. இருகுறள் நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நேரிசை வெண்பா இரண்டு வகையிலே
வேறோர் முறையில் பிரிவதும் உண்டு
இருகுறள் ஆசிடை நேரிசை யென்றவ்
விருவகை பேர்பெறு மே.

இருகுறள் நடுவண் தனிச்சொற் பெற்றும்
இரண்டொன் டாசும் அவணிடை யிட்டும்
ஒருவிகற் பாகியும் இருவிகற் பாகியும்
நிகழ்வன நேரிசை வெண்பா ஆகும்.
--யாப்பருங்கலம்

குறளிரண்டு சேர்ந்துவர முன்னுள பாவின்
இறுதிவரும் சீரது ஈரசை யாகத்
தனிச்சொல் இணைத்திட நேரிசை வெண்பா
கனிந்து வருவதும் உண்டு.

சான்றுகள்
இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று -- வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சா
தாரத்தின் நன்று தனி. ... [நன்று, தனி]
---ஔவையார், நல்வழி 31

நகைகொள் முகமுடைய நல்லோனாம் காந்தி
பகைவனையும் அன்பிற் பரிந்து -- மிகநலஞ்செய்
பாங்கதனைக் காட்டியிந்தப் பாருலக முள்ளளவும்
ஓங்கிநின்றான் நல்லோர் உளத்து.
---கி.வா.ஜ., ’கவி பாடலாம்’

முன்னே குறட்பா முடிவுறும் சீரினை
ஒன்றிரண்டு சீர்பற்றி ஆசிடை யிட்டும்
தனிச்சொல் இணைந்துவர நேரிசை வெண்பா
கனிந்து வருவதும் உண்டு. ... [இயல் 6.55. கீழே.]

சான்று
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
---ஔவையார், மூதுரை 12
[’பொசி’ என்னும் முதற்குறள் முடிவைப் ’பொசியுமாம்’ என்று நீட்டியது ஆசிடை]

*****

ரமணி
22-11-2013, 04:22 AM
6.55. ஆசிடை நேரிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

ஒன்றையொன்று சேர்த்தே உலோகம் இரண்டினை
ஒன்றெனப் பற்றவைக்கும் தூள்*ஆசு என்பது
நேரோ நிரையசையோ சீரேழில் வந்ததை
ஆசிடுதல் ஆசிடைவெண் பா.

சான்று
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -- மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் டென்னும் பறை.
---நாலடியார் 25

வெண்பா இதிலேழாம் சீர்நோக்கின் வந்திடும்
’கண்டு’ எனும்பதம் காசுவெனும் வாய்பாடாம்
’கண்டும்’ எனும்பதம் ’உம்’சேர்ந்த ஆசுவெனக்
கண்டுகொள் ளப்புரியும் ஆசு.

முதற்குறள் வெண்பா முடிவில் வரும்சொல்
அதனுடன் ஓரசை ஆசிட்டு வந்ததால்
ஓரா சிடையிட்ட நேரிசை வெண்பாவாம்
ஈரா சிடுவதும் உண்டு.

சான்று
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பை*அவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
---நாலடியார் 66

’பொறுத்து’ எனும்பிறப்பு ஈரசை யாசாய்ப்
’பொறுத்துய்ப்பர்’ என்றுவந்து பூட்டுவதால் இவ்வெண்பா
ஈரா சிடையிட்ட நேரிசை வெண்பாவாம்
சீரேழில் வந்த சிறப்பு.

*****

ரமணி
24-11-2013, 07:39 AM
6.56. ஒருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

சான்று 1.
வருகிற வெண்பா இயைபுகள் நோக்கு.
அறம்பொருள் இன்பத்தில் வாழ்பவன் சீலன்
அறிந்தவன் ஞானி அமல்செய்வான் மன்னன்
இறைகளன் என்றே பொருள்.

முப்பொருள் உண்மை தெளிவா னருஞ்சீலன்
முப்பொருள் உண்மை யுடையா னருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பா னிறையாங்கு
முப்பொருள் உண்மைக் கிறை.
---பொய்கையார், இன்னிலை 16

சான்று 2.
அறங்கூறும் சேந்தனார் இன்னிசை வெண்பா:
பிறர்பொருள் நாடாது பாவங்கள் நீக்கி
அறம்வழி நின்றுதீயோர் சேர்க்கை தவிர்க்கும்
திறன்தெரிந்து வாழ்தல் இனிது.

பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 21

சான்று 3. (இரண்டாம் அடியில் தனிச்சொல்)
கற்றவர் மேன்மை உரைக்கும் பழமொழி:
ஆற்றவும் என்றால் மிகுதியாக; கட்டமுது ... (கட்டுச்சோறு)
ஆற்றுணா என்றது; சென்றவிடம் போற்றிடக்
கற்றோர்க்குக் கிட்டும் இவை.

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.
---முன்றுரையரையனார், பழமொழி நானூறு 6

*****

ரமணி
27-11-2013, 01:36 AM
6.57. இருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

சான்று 1.
அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.
---நல்லாதனார், திரிகடுகம் 89

அகத்தில் இரக்கமின்றி வாழ்பவன், செல்வம்
நுகராமல் சேர்ப்பவன், உள்ளா(து) உளம்நோகப்
பேசுபவன், மூவர் பிறந்தது வீணென்று
ஏசுகிறார் நல்லா தனார்.

சான்று 2.
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றாது,
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி,
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுமின் மாண்டார் அறம்.
---நாலடியார் 36

என்றோ வருவான் எமனென்று எண்ணாமல்
பின்னாலே நிற்பதாக எண்ணிச் சடுதியில்
அல்லவை நீக்கிவிட்டு நல்லவை ஆற்றென்று
சொல்வது நாலடியார் பாட்டு.

*****

ரமணி
28-11-2013, 03:54 AM
6.58. பலவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகவினிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்னினிதே
எள்துணை யானும் இரவாது தானீதல்
எத்துணையும் ஆற்ற இனிது.
---பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது 16

வெண்பாவின் ’மாணமிக’ ஒப்புகள் நோக்கிப்
பொருளறியக் கீழ்வரும் பா.

கற்றார்நம் கல்வியைச் சோதித்தல் நல்லது.
கற்றாரைச் சேர்தல் அதனினும் நல்லது.
எள்ளளவும் கேட்காது தான்கொடுத்தல் நன்றிவற்றை
எவ்வளவும் செய்வது நன்று.

கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டந் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை 16

குட்டம் எனும்பதம் ஆழமும் போழ்வர்
பிளப்பதும் பாய்மா விரைகுதிரை தோமில்
குறையற்ற தன்னுடையான் உள்ளம் அடக்கியோன்
என்றும் பொருள்பெறும் காண்.

மாலுமி ஆழ்கடல் வீரன் படைக்கடல்
தன்மனம் கட்டத் தவக்கடல் கற்றான்
அவைக்கடல் என்று எளிதில் கடப்பார்கள்
என்பது பாடல் பொருள்.

*****

ரமணி
30-11-2013, 12:25 PM
6.59. தனிச்சொல் பெற்ற இன்னிசை அளவியல் வெண்பாச் சான்றுகள்

நினைவிற் கொள்ள:
தனிச்சொல் வருகிற இன்னிசை வெண்பாத்
தனிச்சொல் அடியிரண்டில் இன்றிவே றெங்கோ
தனிச்சொல்லாய் ஒன்றுபல வென்றோ வரலாம்
தனிச்சொல் அடிதோறும் என்று வரலாம்
தனிச்சொல் அடியிரண்டில் வந்தால் விகற்பம்
இரண்டினும் மிக்கு வரும்.

தனிச்சொல் அடியிரண்டில் வந்து விகற்பத்தில்
ஒன்றோ இரண்டோ வருவதெலாம் நேரிசை
வெண்பா வகைப்படு மே.

தனிச்சொல் முதல் அடியில்
குன்றம் கவினும் குறிஞ்சியிலே -- நின்றபிரான்
வென்றி வடிவேற்கை வீரன் மயிலேறும்
அண்ணல் முருகன் அவனடியே தஞ்சமென
நண்ணுவார்க் கெய்தும் நலம்.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88

தனிச்சொல் இரண்டாம் அடியில்
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றும், சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்.
---நாலடியார் 151

அலகிலா வானத்தில் தண்ணொளி வீசும்
நிலவும் பெரியோரும் ஒன்று -- நிலவு
களங்கம் பொறுக்கும் பெரியோர் மனம்கலங்கித்
தேய்வர் வரப்பெற்றால் மாசு.

காவிரிசூழ் மோகைநகர்க் காந்தமலை மேயபிரான்
பூவிரிதாழ் போற்றுகின்ற புண்ணியர்க்கு -- நாவிரியும்
பல்புகழும் நீளும் பரந்த பொருளடையும்
ஏற்றமன்றித் துன்பம் இலை.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.89

தனிச்சொல் மூன்றாம் அடியில்
கொல்லிமலை வேளுக் குறிச்சியிலே கோழியினை
மெல்லத் துடையிடுக்கி வேட்டுவக்கோ லங்கொண்டு
வல்ல முருகன் வருமெழிலை -- நல்லபடி
பார்த்தார் உளம்போம் பறி.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88

தனிச்சொல் அடிதோறும்
மழையின்றி மாநிலத்தார்க் கில்லை -- மழையும்
தவமிலா ரில்வழி யில்லைத் -- தவமும்
அரசிலா ரில்வழி யில்லை -- அரசனும்
இல்வாழ்வி ரில்வழி இல்.
---கி.வா.ஜ., கவி பாடலாம், பக்.88

மேல்வந்த சான்றுகளில் எல்லாம் தனிச்சொல்
எதுகை அதனடியின் சீரொன் றுடனும்
பெரும்பாலும் முன்பின் அடியெது கையுடனும்
ஒன்றி வருவது காண்.

*****

ரமணி
03-12-2013, 01:36 PM
6.60. முடுகு வெண்பா

கீழுள்ள செய்யுளினை வாய்விட்டு வாசித்துச்
ஓசையிலே மூவசைச்சீர் நோக்கப் பயின்றிடும்
உத்தி எதுவென் றுணர்.

அத்தனத்தன் தத்தனத்தன் நர்த்தனத்தை எத்தனிக்க
மத்தளத்தை மொத்தெனத்தன் சத்தனைத்தும் - ஒத்திசைக்க
எத்திறத்தும் இத்தரத்தை ஒத்திருக்க மத்தொருத்தன்
இத்தலத்தும் எத்தலத்தும் இல்.
---இலந்தை ராமசாமி
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/01QgwhYFNg4/dysRJZeSfxIJ

[அத்தனத்தன் - சிவன், தத்தெனத்தன் - தத்தன எனத் தன்
மத்தளத்தை - நந்தி தனது திறமையெலாம் கூட்டி மத்தளத்தை ஹ்மொத்து மொத்து என்று
மொத்தி வாசிக்க
இந்த நடனத்துக்கு ஈடாக ஆட மற்றொருவர் எந்த உலகிலும் இல்லை]

முடுகுவது என்றால் விரைவது ஆகும்.
முடுகிவரும் ஓசை இருகுறில் சேர்ந்துவர.
வெண்பாவில் மூவசைச்சீர் மையம் பெரும்பாலும்
வண்ணம் முடுக்கி வரும். ... [வண்ணம் = இனிய ஓசை]

காய்ச்சீர் நடுவண் குறிலிணை வந்துநிரை
யாகிடக் கேட்கும் முடுகு.

அடிகள் இறுதியும் ஈற்றயலும் ஓசை
முடுகி வருவது பின்முடுகு; முற்றும்
முடுக முழுமுடுகு; முன்னால் இரண்டு
முடுகிட முன்முடுகு ஆம்.

அத்தனத்தன் வெண்பா அனைத்துச்சீர் கள்வரும்
சத்தம் முடுகிவர அஃது முழுமுடுகு
வெண்பா எனும்பேர் பெறும்.

பின்முடுகு முன்முடுகுச் சான்று முறையேகாண்
பின்வரும் வெண்பாக் களில்.

தேரோடும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும்
நீரோடு லாவிவரும் நெல்லையே! - காரோடும்
கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர்
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு!
---வேம்பத்தூர் பெருமாளையர், ’நெல்லை வருக்கக் கோவை’

[காரோடும் = கருமையான
கந்தரத்தர் = கழுத்து உடையவர்
அந்தரத்தர் = ஆகாயத்தில் உள்ளவர்
கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர்
அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர்
கந்தர் அத்தர் = முருகனுக்குத் தந்தை
அந்தரத்தர் = ஆகாயத்தை மேனியாகக் கொண்டவர்]
https://groups.google.com/forum/#!msg/santhavasantham/01QgwhYFNg4/dysRJZeSfxIJ

ஞானவயில் வேலிறைவ நாகமயி லேறிறைவ
வானவர்பி ரானிறைவ மாலிறைவ -- கோலிறைவ
என்றுதுதித் திப்பா ரிருமையு மேல்வாழ்க்கை
ஒன்றுவ ருள்ளே வுணர்.
---பாம்பன் சுவாமிகள்

*****

ரமணி
08-12-2013, 02:12 AM
6.62. பஃறொடை வெண்பா

வெண்பா விலக்கணம் பெற்றே அடிகளில்
நண்ணும் விகற்பம் பலவென ஒன்றென
சிற்றெல்லை ஐந்தடி பேரெல்லை பன்னிரண்டு
பெற்றுவரும் நேரிசை அல்லது இன்னிசை
வெண்பாவே பஃறொடை யென்று.

இரண்டடிக் கோர்தனிச்சொல் பெற்றவ் வடிகள்
இரண்டிலும் வந்த எதுகை தனிச்சொல்லும்
பெற்று வருவது நேரிசை; இஃதல்லாப்
பஃறொடை வெண்பாக்கள் யாவுமே இன்னிசைப்
பஃறொடை வெண்பா வென.

இரண்டடிக் கேற்ற தனிச்சொல் அமைய
இரட்டைப் படையெண் அடிகளில் வந்திடும்
ஆறடி எட்டடி பத்தடி பன்னிரண்
டாகும் அடிகளில் மட்டும் வருவதாம்
நேரிசைப் பஃறொடை யே.

பலதொடை பெற்றதால் பஃறொடை யாகிப்
பலவடி நீள்வதால் பஃறொடை வேண்டித்
தனிச்சொல் எதுகை பொறுத்திவை நேரிசை
இன்னிசைப் பஃறொடை யாக வருவதுடன்
இன்னிசைப் பஃறொடை யேதும் தனிச்சொல்லே
இன்றியும் வந்திடு மே.

*****

6.63. நேரிசைப் பஃறொடை வெண்பாச் சான்றுகள்

ஆறடி, ஒரு விகற்பம்
கண்முன்னே காண்பதெல்லாம் கண்விழி யுட்போக
உண்மை உணருமோ உள்ளமிது? - கண்காணும்
வண்ணம் பலவற்றில் வாலறிவு சுட்டிடும்
தண்ணொளி யாகத் தகைப்பதெது? - வெண்மையே!
வெண்மையே ஆதியாம் வெண்மையே அந்தமாம்
வெண்மையே ஈசன் வெளி.
--ரமணி

ஆறடி, பல விகற்பம்
ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வியும் ஆறறிவில்
தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் - தீந்தமிழின்
சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்னனையான்
இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் - நெல்லிருக்கக்
கற்கறித்து மண்தின்று காய்த்துக் களத்தடித்த
புற்கறித்து வாழ்வதனைப் போன்ம்.
--புலவர் குழந்தை

எட்டடி
ஒன்றெனவே நின்றுள் ளுயிர்க்கும் பரம்பொருளை
நன்றா யுணர்வதே ஞானமாம் - என்றுதான்
இவ்வுணர்வு வாய்க்கும் எனிலே உயிரினைக்
கவ்வுமகங் காரமெனக் கண்டறிந்தே - ஒவ்வா
அதனை அறவே அகற்றும் பணியில்
முதலாவ தாக, உடலே - சிதைவதாம்
ஆன்மாவே என்றுமுள தாமென் றறியுமனப்
பான்மைவர வேண்டுமப் பா.
--ரமணி

பத்தடி
மேனி படித்தபின் மேவுமனம் நோக்கவது
தேனனாய்க் கள்ளமெலாம் தேக்கியே - ஏனோ
பதுங்கியும் ஓடியும் பாய்ந்தும் இருளில்
ஒதுங்கிச் செயல்பட்டு ஓய்ந்தே - கதவு
திறக்க முனைந்துத் திரும்பித் திறம்பி
வெறுப்புடன் கோபமும் ஏற - அறம்பிறழ்ந்தே
வாழ்வின் பொருளென்று யாதொன்றும் ஓராதே
தாழ்வே சிறப்பாய்த் தழைக்கவே - வீழ்ந்து
வினைபல ஆற்றி வினைகளைச் சேர்த்தே
முனைய முதுமை யுறும்.

[தேனன் = திருடன்]
--ரமணி

*****

பன்னிரண்டடி
வெளிச்செல்லும் உள்ளம் வினைபற் றுவதால்
அளித்தாட் கொளவே கடவுள் - விளிப்பதில்
போற்றுவதில் தெய்வத்தை யுன்னவே தெய்வமும்
ஆற்றி அளிக்கும்மெய் ஞானமே - ஊற்றெனப்
பொங்கிப் பெருகியே பொல்லா வினைகளின்
பங்கினை மட்டுறுத்த ஆன்மவொளி - தங்கியே
உள்ளம் உறுதியாக்கி உண்மை தெளிவுறுத்தி
வெள்ளொளி உள்விளை வித்திடவே - உள்ளம்
உடலினைக் கட்ட உணரும் பொறிகள்
அடங்கியே செல்லும் அறத்தில் - திடவுள்ளம்
முக்தி விழைய முனைவழி முற்படியாய்
பக்தியில் வைக்குமே பற்று.
--ரமணி

*****

ரமணி
12-12-2013, 04:37 AM
6.65. வெண்பா நுணுக்கங்கள்:
அடிகளில் இயற்சீர் நிரல்கள்

காய்முன் நிரையும் விளம்முன்னே நேரசையும்
ஆய்ந்தால் இயற்சீரின் வெண்டளை யாவதால்
வெண்பா அடியின் இயற்சீர் நிரல்வருதல்
கண்படுமே கீழுள்ள வாறு.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
சாமான் யமாகத் தெரியும் நிரலே
ஒருசீர் அடியில் ஒருமுறை யென்றே
உறழ்ந்து இறுதியில் ஒவ்வொரு சீராய்ப்
பிறழ்ந்தே வரலாம் புளிமா கருவிளம்
கூவிளம் தேமா வென.

சான்றுகள்
நீயோ அவளோ இருவரும் வந்திட
நாயும் வருமே யுடன்.

அவர்கள் இருவரும் வந்திட நாயும்
உவந்தே யுடன்வரு மே.

இருவரும் வந்திட நாயும் வருமே
அரியதோர் நண்பனா க.

வந்திடும் நாயும் இருவர் முதுகுபின்
சந்துபொந் தெல்லாம் நுழைந்து.

*****

ரமணி
14-12-2013, 05:56 AM
6.66. வெண்பா நுணுக்கங்கள்: காய்ச்சீர் நிரல்கள்

நிரைமுதல் காய்ச்சீர் புளிமாங்காய் மற்றும்
கருவிளங்காய் வந்தால் அடிமுதலே; எல்லாமே
காய்ச்சீராய் வந்தால் அடிகளின் ஈற்றிலே
மாச்சீர் வரவேண்டு மாம்.

நிரைமுதல் காய்ச்சீர் இடைவாரா காய்முன்
நிரைவரா தென்பதா லே.

சான்று: புளிமாங்காய் முதற்சீரில்
திரைபின்னே உள்ளதெலாம் திண்ணமுறைப் பார்யார்?
வரையாலே கட்டுண்ண வாட்டமெவண் போகும்?
புரைநீங்கிப் பொன்னாகப் போற்றிடவே ஈசன்
கரைநீக்கி யாட்கொள்வா னாம்.

சான்று: கருவிளங்காய் முதற்சீரில்
திரையிதன்பின் உள்ளதெலாம் திண்ணமுறைப் பார்யார்?
வரையிதுவே கட்டாக வாட்டமெவண் போகும்?
புரையறவே பொன்னாகப் போற்றிடவே ஈசன்
கரையறவே ஆட்கொள்வா னாம்.

***

தேமாங்காய் கூவிளங்காய்ச் சீர்கள் இரண்டுமே
ஆமாம் வரலாம் அடுத்தடுத்தே ஆயின்
இடையில் இயற்சீர்கள் சேர்ந்தே பெரிதும்
நடைபயின் றாலஃ தழகு.

சான்று: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
எல்லாமே ஓர்பொருளாம் என்றேநம் உள்வரவே
அல்லல்கள் இல்லையென அற்றுப்போய் - பல்வகையில்
பேர்பெற்றே வாழுமுயிர் எல்லாமே நம்முறவாய்
நேர்காண்போம் அன்பொழுக வே.

சான்று: காய்ச்சீர் இயற்சீர் அழகுற வந்தது
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

*****

ரமணி
15-12-2013, 06:16 AM
6.70. வெண்பா இன்று

புதுக்கவிதைத் தாக்கம் புரையோடும் இன்று
பொதுவாக யாப்பின் மரபினில் வெண்பா
புனைவதில் ஈடுபாடு குன்றாது கொண்டு
முனைவோர் இணையத்தில் உண்டு.

பலவே மரபினில் பாக்கள் முனைவோர்
பலரின்று உள்ளபோதும் வெண்பா வடிவமே
பாவலர் மேற்கொளும் பாவென் றிருந்திட
ஆவலுடன் நாடுவோ ராம்.

வெண்பா புலவர் புலியெனச் சொன்னதின்று
நண்பர்கள் வீட்டில் வலம்வரும் பாரதியின்
வெண்ணிறமும் சாம்பலும் சாந்தும் கலந்தபல
வண்ணத்தில் பூனையாயிற் றாம்.

மரபில் கவிமுனைவோர் பற்பலர் என்று
தெரியும் எளிதிலே கூகிள் வகைத்த
வலைதேடும் மென்பொருள் எந்திரம் மூலம்
வலையில் விளையும் மரபு.

மரபுக் கவிதை யெனத்தமிழில் தட்டி
உருவில் யுனிகோடாய் மாற்றியே தேட
ஒருலட்சம் மேற்பட்ட மின்பக்கம் காண
மரபின் விளங்கும் முனைப்பு.

அறன்பொருள் இன்பம் வழியுரைத்த வெண்பா
மறமோங்கும் இந்நாள் அகிலத்தின் சாதனைகள்
போதனைகள் வேதனைகள் போக்குகள் பூசல்கள்
பேதங்கள் பேசுமே இன்று.

மரபில் எழுதி அனுபவம் பெற்றோர்
பரவிக் கிடந்திடும் பாவலர் ஆக்கிய
வெண்பாக்கள் பார்ப்போம் சில.

*****

1. குறள் வெண்பா இன்று
அகரம் அமுதா
பேணும் பெருங்கற்பே பெண்டிற்(கு) எழிலாகும்
ஆணுக்கும் அஃதே அழகு!

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!

***

சுந்தரராஜ் தயாளன்
பிறவிக் குருடர்கள் பற்றி
இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்
கருவில் உருவாகாக் கண்.

குறைசொல்வோர் கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார் நில்லார் நிலைத்து.

இடத்துக் கிடம்மாறும் இங்கிருக்கும் அங்கே
படரும், பதுங்கும் பணம்.

*****

கேளிக்கைக் குறள்வெண்பா

மனமகிழ் பாக்குறள் யாப்பதும் உண்டு
சனரஞ் சகமா கவே.

முதற்சொல்லை வைத்து முடிவு அமைப்பர்
அதற்குவேறு அர்த்தம் வர.

இலந்தை ராமசாமி
உடைந்துள்ள கண்ணாடி உட்கதவின் பின்னாடி
உள்ளதே என்றன் உடை.

கடைசியில் தேடிநான் கண்டு பிடித்துவிட்டேன்
கண்ணாடி விற்கும் கடை.

ஓட்டுக்கள் போட்டும் உதவாத பேர்வழியை
ஊருக்குள் வாராமல் ஓட்டு.

***

தங்கமணி
நாடுன் தவமன்றோ நாளுமதன் மேன்மையை
நாடும் தகவினை நாடு.

கொடுப்பினை என்றால் கொடுத்தின்பம் கொள்ளல்
கொடுப்பதை அன்பாய்க் கொடு.

***

வி.சுப்பிரமணியன்
கல்லென்றும் கல்லார் சில(ர்)அவர் வாழ்வினில்
செல்லும் வழியெங்கும் கல்.

கடனென்று வாங்கியதைக் காலம் தவறா(து)
அடைத்தல் ஒருவர் கடன்.

*****

பக்திக் குறள்வெண்பா

வி.சுப்பிரமணியன்
இலையோ மலரோ இறைவனுக்(கு) இட்டால்
நலம்பெறலாம்; துன்பம் இலை.

இருகரம் கூப்பி இறைவனைப் போற்றி
ஒருகுறை இன்றி இரு. ... [’ஒருகுறையும்’ என்றிருந்தால் இன்னும் சிறக்குமே?]

நச்(சு)அரவை நல்ல அரைநாணாக் கட்டிய
பிச்சனை நெஞ்சேநீ நச்சு.

கூடுவிட்டுப் போம்முன்னே கூன்பிறையைச் சூடிநடம்
ஆடும் இறைவனைக் கூடு.

விடையேறும் ஈசனை வேண்டினால் ஈவான்
அடைந்தார்க்கு நல்ல விடை.

கழலா வினையும் கழலும் மனமே
விழைவாய் இறைவன் கழல்.

ஓடுநதி ஆடுமர வோடுபிறை சென்னிமிசை
சூடுமிறை கையினிலோர் ஓடு.

ஆற்றுச் சடையான் அணிமதி சூடியைப்
போற்றி நிதம்திருத்தொண்(டு) ஆற்று.

பரவும் சடைமேல் பனிநிலாச் சூடும்
பரமனைப் பாடிப் பரவு.

*****

ரமணி
22-12-2013, 04:39 AM
2. சிந்தியல் வெண்பா இன்று
அகரம் அமுதா.
நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்
அல்லார் உறவால் அறந்தேயும் - பொல்லார்
தொடர்விடுதல் மேலாந் துணை!

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது
தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்
இன்புற்று வாழ்வ ரினது!

விசய பாரதி ந.வீ.
தெள்ளுதமிழ்ச் சொத்தெமக்கு; சிந்தனைக்கு நல்லறிவை
அள்ளியள்ளி ஊட்டும் அமுதமழை - வெள்ளமது
வள்ளுவமோர் முப்பால் மது.

3. நேரிசை அளவியல் வெண்பா இன்று
இக்பால்
அருளிருந்தால் சொர்க்கம் அடையலாம் என்பார்
பொருளின்றி வாழ்க்கையுண்டோ பூமேல்? - திருவே
வருமானம் தேவைக்கு வந்துவிட்டால் எல்லா
இருளும் வெளிச்சம் எனக்கு.

துன்பத்தைக் கண்டு துவண்டு மருளாதே
இன்னல் விலகலாம் எக்கணமும் - அன்புள்ளாய்
தோயும் இருள்விலக்கித் தோன்றுவான் சூரியன்
காயில் இருக்கும் கனி.

குறிப்பிட்ட வேளையில் கூட்டம் தொடங்கி
வெறுஞ்சடங்கு எல்லாம் விலக்கி - நறுந்தமிழில்
கற்றார் உரையாற்றுங் காலத்தில் அல்லவோ
வெற்றி பெறும்நம் விழா!

தன்னை மறைக்கும் தவஞானி வேராவார்
புன்னகை செய்பவர் பூக்களாம் - இன்புறவே
அள்ளிக் கொடுப்பார் அருங்கனி; கைவிரித்து
இல்லையெனச் சொல்வார் இலை.

தந்தை,தாய் நல்லுயிர்; தாரம் சுடர்விழி
கந்தம் கமழ்பிள்ளை கைநமக்கு - சொந்தபந்தம்
கால்கள்; துயரம் களையப் பறந்துவரும்
தோழன் சுமைதாங்கும் தோள்.

ஜெயபாரதன் சி.
ஈழத்தில் இட்டதீ சீதைக்(கு)! எழில்மதுரை
சூழத்தீ இட்டது கண்ணகிக்கு! - வாழாது
மீண்டும் நகைச்சண்டை! மேனியில்தீ தங்கைக்கு!
வேண்டாம் வரதட் சணை!

4. இன்னிசை அளவியல் வெண்பா இன்று
இக்பால்
உழைப்புக்குத் தக்கபடி ஊதியம்நல் காமல்
பிழைக்கும் பணந்தேடிப் பேய்கள் - கிளியேகேள்
ஆறாமல் ஏழை அழுது வடித்தகண்
நீரும் நெருப்புக்கு நேர்.

ஜெயபாரதன் சி.
பிறப்பும், இறப்பும், பெருமையும், தாழ்வும்
துறப்பும், பிணைப்பும் தொடரும் - எரியும்
நெருப்பும், பனியும் நிலையாது மாறும்
இருளும், வெளிச்சம் எனக்கு.

5. கேளிக்கை வெண்பாக்கள்
மாதவச் சிவஞான யோகிகள்
சற்றே துவையலரை தம்பியோர் பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை - குற்றமிலை
காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.

காளமேகப் புலவர் பற்றிய செவிவழிச் செய்தி
புலவர் ’பாக்குத்...நன்நாக’ வரை எழுதிப் பாதியில் விட்ட வெண்பாவை வேறு ஒருவர் முடித்தது:

பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்கு தமிழுரைக்கும் நன்நாகை - மூக்குமுட்ட
உண்ணும் உணவை உருட்டி விழுங்கிடின்
தொண்டையில் விக்குமே சோறு.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ராயகோபுரக் கல்வெட்டில் நேரிசை வெண்பா
(காளமேகம் தன்னைப்பற்றி எழ்திக்கொண்ட வெண்பா என்று கருதப் படுகிறது)

மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணா யிரம்.

*****

இக்பால்
சீர்விளங்கும் காதற் செழுமலரைக் கைபிடித்தேன்
பேர்விளங்கும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன் - ஊர்மதிக்கும்
பொன்னும் மணியும் புகழும் மிகப்பெற்றேன்
என்னதான் வேண்டும் இனி?

வேதனை எல்லாம் விதிப்பயன் என்றுசொல்லிப்
பேதலிப்பார் நெஞ்சின் பிழைதிருந்தப் - போதிப்பேன்
வாடும் மனிதர் வளம்பெற்று வாழ்ந்திடவே
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

கன்னலும் பாலும் கனிச்சாறும் செந்தேனும்
உண்ணத் தெவிட்டலாம் ஓர்நாளில் - பைந்தமிழ்
அன்றாடம் தேடியே அள்ளியள்ளி உண்டாலும்
தின்னத் தெவிட்டாத தேன்?

சுரேஷ் பாபு
கண்கள் நறுங்குவளை, கன்னங்கள் வெண்ரோசா,
நுண்நாசி எள்ளின்பூ, வெண்பற்கள் மல்லிகை, ...
பூவை விரும்புகிறாள் என்றியற்கை வைத்தானோ!
பூவைமேல் எத்தனைப் பூ!
[நுண்நாசி எள்ளின்பூ, மல்லிகை - வெண்பற்கள், என்று வந்திருந்தால் நேரிசை வெண்பா]

நிரஞ்ஜன் பாரதி எழுதியதை இலந்தை ராமசாமி திருத்தியது
தாயவளின் பொற்கரத்தால் தங்கமாய் வந்துதித்துச்
சேயவனின் நெஞ்சத்தைச் சேகரித்து - வாயதனில்
அக்கறை கொண்டென்றன் அம்மா கனிந்தூட்டும்
சக்கரைப் பொங்கல் தனி.

ஜெயபாரதன் எஸ்.
வயிற்றுக்குச் சோறில்லை, வாங்கிடக் காசே(து)?
அயர்ச்சியில் சோர்வாய் அறிவு - மயங்கிடினும்
நாடுவேன் வெண்பாவை, நாள்தோறும் சிந்தித்துப்
பாடுவேன் பைந்தமிழ்ப் பா.

அரையுடையில் தோற்றம்! அறுபதுபேர் ஆட்டம்!
திரையிலே தேவையற்ற கூத்தா? - அரங்கத்தில்
புல்லரின் எந்திரப் பொம்மைகள் பேயாட்டம்
கல்லாதான் ஆக்கும் கலை.

[Ref:https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/fc8c416a2b42f73a/df7b25420646f165?hl=ka%CF%9Ba95bbc19f1759&]

*****

ரமணி
29-12-2013, 05:10 AM
6.64. சவலை வெண்பா

இருகுறள் சேர்ந்தே தனிச்சொல் விடுத்து
வருமே சவலைவெண் பாவாம்
அடியிரண்டில் சீர்மூன்றே வந்துவெண் பாப்போல்
முடியும் இலக்கணம் பெற்று.

முழுமையாய் வெண்பா இலக்கணம் இன்றி
எழுமே சவலைவெண்பா என்றாலும்
இருகுறள் வெண்பா இணைவதால் மட்டும்
வருவதென் றாகா தது.

அறுவகை யிலக்கணம் சொல்வதிலிருந்து:
(ஆசிரியர்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

முதற்குறள் ஈற்றுச்சீர் ஓரசை யல்லா(து)
அதுவேவெண் பாக்குறிய ஏனைய
சீர்களில் ஒன்றாய் இருந்து தனிச்சொல்லை
ஏராது நிற்கு மிது.

வேறோர் வகையில் இலக்கணம் சொன்னாலோ
நேரிசை வெண்பாத் தனிச்சொல்லை
நீக்கச் சவலை; தனிச்சொல் இதனுடன்
சேர்க்க வரும்நே ரிசை.

அரிதே பயிலும் சவலைவெண் பாவைப்
பெரிதாய்ப் புலவர் இயற்றிட
வில்லை யெனவே இதுவே பொதுவாக
இல்லை வழக்கிலென் போம்.

சான்றுகள்
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசந்து
சுட்டாலும் வெண்மை தரும்.
--ஔவையார், மூதுரை 4.

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
--பெருவாயின் முள்ளியார், ஆசாரக் கோவை 16.

அவமிருந்தோ ராயிரம்நீத் தாண்டுகொண்ட தன்றிச்
சிவன்விழிநீ யென்றுமுரை செய்தாய்
பவமொழியச் சற்றருட்கண் பாராய் பழனித்
தவகுலவே டக்குருநா தா.
--பழனிக் கலம்பகம் 61.

*****

ரமணி
04-01-2014, 07:28 AM
6.65. கலிவெண்பா

வெண்பா விலக்கணம் ஏற்றே வரும்கலி
வெண்பாக்கீ ழெல்லை யடிபதின் மூன்றாகும்;
வெண்பாமே லெல்லையே பாவலர் உள்ளமாம்;
வெண்பா விதுவருமே இன்னிசை நேரிசை
யென்றே இருவகை; ஈரடிக் கோரெதுகை
ஒன்றிட மோனை பொழிப்பில் வருவதாம்;
நண்ணி எதுகையில் ஒன்றும் இரண்டடிக்
கண்ணி யெனவும் அழைக்கப் படுமே.
தனிச்சொல் பெறுவது நேரிசை யாகும்
தனிச்சொல் பெறாததே இன்னிசை யாகுமே;
தூது உலாமடல் போன்ற பிரபந்தம்
ஓதும் கலிவெண்பா நேரிசை யாகும்;
திருவா சகத்தின் சிவபுராணம் மற்றும்
பெரிய சிறிய திருமடல் நூலில்
விரியுமே இன்னிசை யே.

நேரிசைக் கலிவெண்பாச் சான்று
’தமிழ்விடு தூது’, இயற்றியவர்: மதுரைச் சொக்கநாதர்
(268 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)

சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் 1

டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே 2

செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் 3

கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா 4

மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே 5

மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால் 6

தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி 7
... ... ...

துறவாதே சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா. 268

***

இன்னிசைக் கலிவெண்பாச் சான்று
’சிறிய திருமடல்’, இயற்றியவர்: திருமங்கை ஆழ்வார்
(77 கலிவெண்பாக் கண்ணிகளில் முதல் ஏழும் இறுதியும்)

காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1

பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கை யென்னுமிப் 2

பாரூர் சொலப்பட்ட மூன்றன்றெ அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3

ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
சீரார் இருகலயும் எய்துவர் சிக்கெனமது 4

ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் 5

ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி 6

தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆரா வமுதமண் கய்தி அதுனின்றும் 7
... ... ...

ஊரா ரிகழினும் ஊரா தொழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல். 77

*****

M.Jagadeesan
06-01-2014, 02:04 AM
தமிழ்விடுதூது என்னும் நூலை இயற்றியவர் மதுரை சொக்கநாதர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றே தமிழறிஞர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். விளக்கம் தேவை.

ரமணி
06-01-2014, 02:48 AM
வணக்கம்.

இந்தச் சுட்டியில் ஆசிரியர் பெயர் மதுரைச் சொக்கநாதர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0040.html


தமிழ்விடுதூது என்னும் நூலை இயற்றியவர் மதுரை சொக்கநாதர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றே தமிழறிஞர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். விளக்கம் தேவை.

ரமணி
11-01-2014, 12:39 PM
6.80. வெண்பா வினங்கள்

(வெண்டுறை)
வெண்பா விலக்கணம் தழுவியோ வழுவியோ
வெண்டளை யியங்கியோ வேற்றளை விரவியோ
அடிகள் சீர்களில் அதுவாய்ப் பலவாய்
இடையில் முடிவில் சீர்குன்றி
ஒன்றும் ஒன்றா ஒலியோடே
குன்றி வரும்வெண் பாவினமே.

வெண்பா வினம்வரும் வெண்டுறை வெண்டா ழிசைவெளி விருத்தமென
வெண்குறட் பாவரும் குறள்வெண் செந்துறை குறட்டா ழிசையெனவே
வெண்டா ழிசையில் ஒலியொத் துவரின் வெள்ளொத் தாழிசையாம்
வெண்டுறை யிலுமே ஓரொலி வேற்றொலி விதமுண்டே
வெளிவிரு தத்தில் தனிச்சொல் அதுவே அடிதோறும்.

துறையெனச் சொன்னால் தத்தம் பாவகை யொழுக்கில் துறைபோல் நிற்பதுவாம்
துறைபோல் தத்தம் பாவியல் பெல்லாம் வந்தும் ஒடுங்கியே நிற்பதுவாம்
தாழம் பட்ட ஓசை யோடு வருதல் தாழிசையாம்
தாழம் என்றால் தாமசம் மந்தம் தாழ்வு எனப்பொருளாம்
விருத்தம் தத்தம் பாவடி அளவின் மிக்கு வருவதுவாம்
விருத்தம் தத்தம் பாவகை யிலக்கணம் பொதுவில் பெறுவதில்லை.

6.81. குறள் வெண்செந்துறை

ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே.
--யாப்பருங்கலம்

எவ்வகைச் சீரும் தளையும் ஈரடி அளவொத்தே
செவ்விதின் முடிவன வெல்லாம் குறள்வெண் செந்துறையே.

எதுவோ முதலடிச் சீர்களின் எண்ணிக்கை
அதுவே அடுத்தடி வருவது அளவொத்தல்.

பொதுவில் நாலசைச் சீர்கள் காண்பதிலை
அதிகம் நாற்சீர் அளவடி யேகாண்போம்.

நேரிய இசையும் சீரிய பொருளும் பெறவரும் குறள்வெண் செந்துறையின்
வேறு பெயர்களாம் வெள்ளைச் செந்துறை அல்லது வெறுமே செந்துறையாம்.

பொருளின் விழுமம் பற்றியே இலக்கணம் குறையச் செந்துறை எனப்பெயராம்
பொருளின் விழுமம் பற்றித் தொடைகள் இலாதது செந்தொடை என்பதுபோல்.

செந்துறைப் பாட்டு செந்துறை வெள்ளை எனவும் பெயர்பெறுமே
இந்த நாளில் எவ்வகைப் பொருளும் தாங்கும் செந்துறையே.

பொதுவில் பொருளது முடியும் ஈரடியில்
அதுவே இன்று நீளும் பலவடியே.

முதலில் வந்த குறள்வெண் செந்துறைப் பாக்களையே
எதுகை மோனை ஓசை நோக்கி எழுதிலையே.

சான்று
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.

ஆசான் பசுபதி நூலது செந்துறை பின்னாள் வளம்பெறுமே
பேசும் எதுகையும் மோனையும் ஒழுங்கில் வரவே எனக்காட்டும்.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்

எண்ணில் அளவொத்த சீர்கள் பயில
எண்ணில் இரண்டே அடிகள் வந்திடும்
செந்தொடை பின்னாள் பலவடி நீள
வந்து நிற்கும் சான்றுகள் கீழே
இவ்வகைப் பாக்களில் பொதுவில் எதுகை
செவ்விதின் அமையும் ஈரடிக் கொன்றென.

இரண்டடியின் மிக்க செந்துறைச் சான்றுகள்
1. அடியெதுகையின்றிப் பொழிப்பு மோனை பயின்றது

தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை

2. அடியெதுகையும் பொழிப்பு மோனையும் பயின்றது

பார்புகழ் நோபல் பரிசுவென்று பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன்
இதற்கென்ன காரணம் என்றவர்க்(கு) உரைத்தார்
ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்
ஸொமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!
--பசுபதி

*****

ரமணி
23-01-2014, 03:42 AM
6.82. குறள் வெண்செந்துறை வளர்ச்சி

அளவொத்த அடிகள் இரண்டில் அமையும் குறள்வெண் செந்துறை
அளவின் வசதியால் அழகாய் வளரும் சாதனை செய்ததே.

ஆசான் பசுபதி நூலது செந்துறையின் பின்னாள் வளர்ச்சியில்
பேசும் எதுகையும் மோனையும் ஓசையும் ஒருங்கே வந்ததை விரித்திடுமே.
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

தோற்றம்
தோன்றிய போது அளவடி யிரண்டில்
எதுகை மோனை யின்றிய மைந்ததே.

சான்று:
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.

எதுகை மோனையுடன்
அடியெது கையுடன் பொழிப்பில் மோனையும்
திடம்பட அமைந்தன பின்னெழு பாக்களிலே.

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

பொழிப்பு மோனையுடன்
எதுகை அடியில் ஏதும் இன்றி
பொழிப்பில் மோனையிற் போனதும் உண்டே.

சான்றுகள்
எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மந்திரிக் கழகு வரும்பொருள் உரைத்தல்
--அதிவீரராம பாண்டியர், வெற்றிவேட்கை

தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை

பொழிப்பு எதுகையுடன்
எதுகை அடியில் எதுவும் இன்றி
பொழிப்பில் எதுகையின் வழக்கும் உண்டே.

சான்றுகள்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்

ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும்
எட்டுத் திசைகளையும் கட்டியர சாள்வானாம்

சிந்தடி, குறளடிக் குறள்வெண் செந்துறைகள்
அளவொத்தே அடிகள் பயில்வதால்
அளவடிக் கீழும் அமையுமே.

அறம்பொரு ளின்பம் பெறும்பயனாம்
ஆன்றோர் உரையே அறமாகும்
இன்சொல் அன்புக் கிருப்பிடமாம்
ஈருளங் கலந்த தில்லறமாம்
உண்மையே ஒழுக்கத் துரைகல்லாம்
ஊரவர் வாழ்வுக் குறுதுணைசெய்.
--புலவர் குழந்தை

அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
--ஔவையார், ஆத்திசூடி

கண்ணிகள் போல்
(வெண்டுறை)
ஈரடி யளவொத்தே சீர்கள் ஓசையில்
நாரினில் இருமலராய் நின்றே - சீரிய
தனிச்சொல் அமைந்தோ அமையாமலோ ஈற்றடி
குனிந்தோ அளவொத்தோ வரும்செய்யுற் கண்ணிகள்
குறள்வெண் செந்துறை உருவினை யொட்டியே
பிறந்தன என்பர் இன்று.

சான்றுகள்
நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தான் - சோராத்

துயில்காத்து அரமமகளிர் சோர்குழை காத்தும்பர்
எயில்காத்த நேமி இறையோன்
--மூவருலா: குலோத்துங்க சோழனுலா, கண்ணிகள் 3-4

ஆங்கார முள்ளடங்கி யைம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்? .. 2
--பத்ரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்

கட்டளை அடிகள்
அடிகளில் ஒற்றுகள் கணக்கிடாத எழுத்துகள் எண்ணிக்கை யொன்றி
அடிச்சீர் நிரலோர் வாய்பாடில் அமைவது கட்டளை யடிகளாம்.

கட்டளை யடிகளாய் மாலை மாற்றாய்ச் சம்பந்தர் அருளிய
எட்டும் மூன்றும் பாவரும் பதிகம் குறள்வெண் செந்துறையே.

யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா ... 1
--சம்பந்தர், மாலைமாற்றுப் பதிகம்

சுப்ரமண்ய பாரதியார்
பாரதியின் பாக்கள் பலவற்றில் பயிலுமே
ஆரமாய் ஈரடிக் குறள்வெண் செந்துறையே.

வானில் பறக்கின்ற புள்ளெலாம்நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம்நான்;
கானில் வளரும் மரமெலாம்நான்,
காற்றும் புனலும் கடலுமேநான்.
--இரட்டைக் குறள்வெண் செந்துறை

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடாநீ நேற்றைக் கிங்குவர வில்லையென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
--கண்ணன் என் சேவகன்

பாரதியின் பாக்களில் வெண்டளை பயின்று
சாரத்தில் வெண்பாவாய் அமைவது காண்க.

குயில்பாட்டில் பாஞ்சாலி சபதத்தின் பகுதிகளில்
பயில்வது செந்துறையே என்பார் குழந்தையார்.
[புலவர் குழந்தையின் ’தொடையதிகாரம்’, பக்.65]

பொருள மைதியோ டெளிதில் பாடுதற் கேற்ற செய்யுளுருக்
குறள்வெண் செந்துறையே அம்மானைப் பாக்களில் என்பார் குழந்தையார்.

*****

ரமணி
29-01-2014, 05:33 AM
6.84. குறட்டாழிசை

குறள்வெண் பாவினம் இரண்டாம் குறள்வெண் செந்துறை தாழிசையே
குறட்டா ழிசையே மூவகை வருமே.

வகை 1. முதலடி பலசீர் ஈற்றடி குறைசீர்

அடியிரண் டாகி நாற்சீ ரின்மிகு பலசீர் கொண்டே முதலடியும்
அடியிரண் டில்சீர் குறைவரும் வகைக்குறட் டாழிசையே. ... 1.

சான்று:
நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடி வார்கள் கற்றவரே.
--யாப்பருங்கலம்

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரிவர் தன்மை யறிவாரார்.
--சம்பந்தர் தேவாரம், 3.112.1.

வகை 2. சிதைந்த குறள்வெண்பா

குறள்வெண் பாவில் வேற்றுத் தளைமிகக்
குறட்டா ழிசைவகையா கும். ... 2.

சான்று (யாப்பருங்கலம்):
வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய லல்லள் படி.
(முதலடி ஈற்றில் கலித்தளை வந்தது)

தண்ணந் தூநீர் ஆடச் செய்த
வண்ண ஓதி கண்.
(அனைத்தும் ஆசிரியத்தளை)

வகை 3. சிதைந்த குறள் வெண்செந்துறை

விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இல்லாக் குறள்வெண் செந்துறையில்
விழுப்பமில் திண்ணிய பொருளுடன் சிதைந்தே வரும்வகை குறட்டா ழிசையே. ... 3.

விழுமிய திண்ணிய பொருள்வகை யெல்லை மாறிய விந்நாளில்
பழுதுள குறள்வெண் செந்துறை தாழிசை வேற்றுமை அரிதே.

சான்று (யாப்பருங்கலம்):
அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினி போவையி னீரே.

என்னே செல்லுதி வாழி நங்காய்
பொன்னே சொல்லுவன் போகு நங்காய்

*****

ரமணி
07-02-2014, 04:34 AM
6.86. வெண்டுறை

அளவடி நாற்சீர் கொண்டோ அதனின் மிக்கோ
அளவில் மூன்றடி முதலே ஏழின் மிகாதே
முன்னடி களினும் பின்னடி களின்சீர் முறையாய்
ஒன்றோ மேலோ குன்றி வருவதே
வெண்டுறை யிலக்கண மென்ப தறிக.

முன்னடி களினும் பின்னடிச் சீர்கள், இடையிடை
அன்று, முறையாய்க் குறைந்தே வெண்டுறை வருமே
அடிகளில் ஓரொலி வந்தால் ஓரொலி வெண்டுறை
அடிச்சீர் குன்றும் பின்னடி களிலே
வேறொலி வந்தால் வேற்றொலி வெண்டுறை.

சான்றுகள்: ஓரொலி வெண்டுறை
(மூன்றடி)
தாளாள ரல்லாதார் தாம்பலராயக்கா லென்னா மென்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.
--யா.கா.

(நான்கடி)
குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலை மேற்பாய
அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோ னெஞ்சழிந்து கல்லருவி தூஉம்
நிழல்வரை நன்னாட னீப்பானோ வல்லன்.
--யா.கா.

(ஐந்தடி)
வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வரும்வழி யுரைப்பன வுரைப்பன்மற்
செறிவுறு தகையினர் சிறந்தன ரிவர்நமக்
கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
பிறபிற நிகழ்வன பின்.
--யா.கா.

சான்றுகள்: வேற்றொலி வெண்டுறை
(நான்கடி)
அருணையதிரும் கழலாறணுசெஞ் சடையாளர் அரிவை பாகர்
கருணைநெடுங் கடலான்பெரு மானார்தா டொழுதார் நதியை நாடின்
மரணமிலா இமையவர்தம் வானுலகம் அன்றே
பொருணிரையும் நான்மறையோர் புகலுமத்தாட் பூவே.
--பசுபதி, க.இ.க.

(ஐந்தடி)
கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற் கருமம் யாதாம்
இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால் இயைவ தென்னாம்
பொல்லாதார் நன்கலன்கள் மெய்புடையப் பூண்டாலும் பொலிவ தென்னாம்
புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே
அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?
--யா.கலம்.

(ஆறடி)
முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய
எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ.
--யா.கலம்.

(ஏழடி)
முழங்குதிரைக் கொற்கை வேந்தன் முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான்
வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக்
கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்
இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்
தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.
--யா.கலம்.

*****

ரமணி
13-02-2014, 03:59 AM
6.88. வெண்டாழிசை

சிந்தியல் வெண்பாவில் வெண்டளை பிறழ்ந்தே
வந்தமூன் றடியில் வெண்பாபோல் ஈற்றடி
வந்துமுடி வதுவெண்டா ழிசை.

ஒருபொருள்மேல் வெண்டாழிசை யடுக்கி மூன்றோ
இரண்டோ ஒன்றோவரும்; சிந்தியல்வெண் பாமூன்று
வரினது வெள்ளொத் தாழிசை.

சான்றுகள்: வெண்டாழிசை
(வெண்டளை பிறழ்ந்தது)
போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணையான்
தாதார் மலரடியைத் தணவாது வணங்குவார்
தீதார் வினைகெடுப்பார் சிறந்து.
--யா.கலம்.

(ஆசிரியத்தளை)
நன்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்.
--யா.கலம்.

(கலித்தளை)
சீர்கொண்ட கருங்கடலிற் றிரைமுகந்து வலனேந்திக்
கார்வந்த ததனோடும் கமழ்குழலாய் நிற்பிரிந்தார்
தேர்வந்த திதுகாணாய் சிறந்து.
--யா.கலம்.

(வஞ்சித்தளை)
முழங்குகடல் முகந்த மூரிக் கொண்மூத்
தழங்குகுரல் முரசிற் றலைசிறந் ததிர்ந்து
வழங்கின*இவை காணாய் வந்து.
--யா.கலம்.

(ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த சிந்தியல் வெண்பாக்கள்)
அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்’
--யா.கலம்.

*****

ரமணி
20-02-2014, 04:07 AM
6.90. வெள்ளொத்தாழிசை

சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி
வந்ததுவெள் ளொத்தா ழிசையென வாகும்
ஒருபொருள்மேல் மூவெண்பாக் கூட்டு.

வெண்பாவை யொத்துவந்த தாழிசை யென்பதால்
வெண்பாமூன் றும்வெள்ளொத் தாழிசை யாகும்
பொதுவிலிவை இன்னிசைவெண் பா.

மூன்றுமேவெண் பாவெனில் தாழிசைப் பேரேனோ?
பஃறொடைபோ லின்றி இடையிடை சிந்தடியாய்
ஓசையது தாழ்வதாலிப் பேர்.

சான்றுகள்:
அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்’
--யா.கலம்.

அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே இறந்து விடல்.

வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே இறந்து விடல்.

கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே !
ஆளாக ஆண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா இறந்து விடல்.

*****

ரமணி
25-02-2014, 04:05 AM
6.92. வெளிவிருத்தம்

சீரைந் தாகி நெடிலடி பயிலும் - வெளிவிருத்தம்
சீரைந்தில் ஒரேதனிச்சொல் அடிதோறும் பயிலும் - வெளிவிருத்தம்
ஓரெதுகை மூன்றடியோ நாலடியோ பயின்றுவரும் - வெளிவிருத்தம்.

இருவகையாம் பொருள்முடிந்தால் அடிமறி மண்டில வெளிவிருத்தம்
பொருளதுவே அடிதோறும் தொடர்ந்தா லதுநிலை - வெளிவிருத்தம்
இருவகையும் இன்று இல்லையே வழக்கில் - வெளிவிருத்தம்!

சான்றுகள்: அடிமறி மண்டில வெளிவிருத்தம்
(அடிமாறினும் பொருள் மாறாத வகை)

மூன்றடி
உற்ற படையினார் பெற்ற பகையினார் - புறாவே
பெற்றம் உடையார் பெருஞ்சிறப் பாண்டகை - புறாவே
மற்றை யவர்கள் மனையிற் களிப்பதோ - புறாவே!
--யா.கலம்.

ஆடு கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே - எந்தைகுன்றம்
நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே - எந்தைகுன்றம்
கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே - எந்தைகுன்றம்.
--யா.கலம்.

நான்கடி
சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்
கொல்லல் கொல்லல் செய்நலம் கொல்லல் - எஞ்ஞான்றும்
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும்.
--யா.கலம்.

ஆவா என்றே அஞ்சினர் ஆழா௧ - ஒருசாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்
ஏகிர் நாய்கீர் என்செய்தும்த் என்றார் - ஒருசாரார்.
--யா.கலம்.

சேயரி நாட்டமும் செவ்வாயும் அல்குலுமோ - அம்மானாய்
ஆய்மலரும் தொண்டையும் ஆழியந் திண்டேரும் - அம்மானாய்
மாயிருந் தானை மயிடன் றலையின்மேல் - அம்மானாய்
பாயின சீறடிப் பாவை பகவதிக்கே - அம்மானாய்!
--யா.கலம்.

சான்றுகள்: நிலை வெளிவிருத்தம்
(பொருள் மாறுவதால் அடி மாறா வகை)

மூன்றடி
ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ் - புறாவே
வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேற் - புறாவே
பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே!

நான்கடி
வெஞ்சமன் அஞ்ச வேலொடு எதிர்ந்தால் - நமரங்காள்
அஞ்சல் எனுஞ்சொல் ஆர்சொல வல்லார்? - நமரங்காள்
மஞ்சிவர் இஞ்சி மன்றம் இறைஞ்சீர் - நமரங்காள்
நஞ்சம் அயின்றவர் நல்குவர் மாதோ நமரங்காள்.

*****
வெண்பா வெண்பாவின இயல் முற்றியது.

ரமணி
18-03-2014, 03:08 AM
7.00. ஆசிரியப்பா
(ஆசிரியத் தாழிசை, ஆசிரியப்பா)

ஆசிரியம் ஆசிரியப்பா அகவற்பா என்று
மூவகைப் பெயர்பெறும் முதற்பா வகைக்கு
அப்பெயர் அமைந்திடக் காரணம் என்ன?

பாக்களில் மிகவும் பழமை யானது
ஆக்குதற் கெளிய ஆசிரியப் பாவினில்
அகவல் ஓசை ஒலிக்க அகவற்பா.

அகம்புற நானூறு குறுந்தொகை நற்றிணை
அகமே துறந்து அமுதம் சுரந்த
மணிமே கலைபோல் சங்கப் பனுவலில்
அணிமிகு ஆசிரியம் அகவிக் கேட்குமே.

ஆசிரியன் என்பவர் ஆசான் ஆவதால்
ஆசிரிய நோக்கினில் ஆக்கும் பாவாகி
ஆசிரியம் ஆனதோ அகவற் பாவே?

அகம்புற நானூறு குறுந்தொகை நூல்களில்
அகம்புறம் பொருளில் ஆசான் நோக்கினில்
புரவலன் புகழைப் புலவோர் பலரும்
பரவிப் பாடி யாசீர் வதிக்க
அகவற் பாவும் ஆசிரியம் ஆனதே.

ஆசு என்பது பூசுதல் ஆயினும்
மாசு எனவும் மற்றுமோர் பொருளுண்டு.
ஆசினை இரித்தல் என்றே சொன்னால்
மாசினை நீக்குதல் என்றே பொருள்படும்.
ஆசிரியம் இப்படி ஆசிரித்த பாவாம்.

இலக்கணம் வருமுன் இலக்கியம் இருந்ததால்
இலக்கியம் இருந்த காலத்தில் எழுதிய
இலக்கண ஆசுடைப் பாக்களி லிருந்து
ஆசினை இரித்தொரு பாவடி வாக்க
ஆசிரி யப்பா பிறந்தது என்று
பேசுவார் ஒருவர் யோசனை செய்தே.
[http://venbaaeluthalaamvaanga.blogspot.in/2009/08/blog-post_25.html]

ஆசு என்பது சிறிது நுண்ணிது
ஆசிரியப் பாவில் சீரில் பொருளில்
ஓசையில் நுட்பம் ஓர்த்து வந்து ... [ஓர்த்து=எண்ணி, ஆராய்ந்து]
ஆசிரியன் போல அறிவிப்ப தாலே
ஆசிரியம் எனும்பெயர் காரணக் குறியென
யாப்பருங் கலநூல் விளக்கம் கூறும்.

*****

ரமணி
21-03-2014, 05:33 AM
7.10. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
இயற்சீர் பயிலும் அயற்சீர் விரவும்
தன்தளை தழுவும் பிறதளை மயங்கும்
பின்னிரு கனிச்சீர் வருதற் கூடா
மூன்று முதலாப் பலவடி கொள்ளும்
அகவல் ஓசை சுகமுற நடக்கும்
தகவுற இந்த இலக்கணம் உகந்தது
அகவற் பாவெனும் ஆசிரியப் பாவே.

அகவல் முடிவில்-ஏ காரம் வந்தால்
மிகவும் சிறந்தது என்னும் மரபு
அன்றும் இன்றும் வழக்கில் உளதே.

அகவல் ஈற்றசை அன்றைய மரபில்
’ஏஓஈ ஆய்-ஐஎன்’ என்றா(று) அசைகளும்
காரிகை சொல்லும் ஈற்றசை இறுதியாம்;
ஒற்றில் எழுத்தில் வேறோர் அசையில்
இற்றிடும் பாக்கள் இன்றுநாம் காணலாம்.

7.11.. ஆசிரியப்பாவின் சீர்

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
ஈரசை இயலும் இச்சீர் நான்கும்
அகவற் சீராய் இயற்சீர் என்றும்
ஆசிரி யவுரிச் சீரெனப் படுமே.

இயற்சீர் நான்கும் இயலும் அகவலில்
அயற்சீர் விரவலாம் ஆயினும் நால்வகைக்
கனிகளில் கூவிளங் கருவிளங் கனியென
கனிச்சீர் நிரைநடு வருத்ற் கூடா.
தனிச்சீர் ஆகவே இயற்சீர் இருந்தும்
காய்ச்சீர் இடையே கலந்து வந்து
காம்பீர ஓசை வருமெனார் கி.வா.ஜ.

’கண்ணன் கழல்கள் காண்போம் மனதில்’
தேமா புளிமா தேமா புளிமா
மாச்சீர் களேவந்த ஆசிரிய அளவடியே.

’கண்ணனின் கழலிணை காணுவோம் மனதிலே’
கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
விளச்சீர் களேவந்த ஆசிரிய அளவடியே.

’கண்ணன் காலிணை நினைக்கும் உள்ளமே’
தேமா கூவிளம் புளிமா கூவிளம்
மாச்சீர் விளச்சீர் விரவி வந்ததே.

’கண்ணாநின் காலிணையைக் காணுவேன் மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் புளிமா
இயற்சீர் காய்ச்சீர் விரவி வந்ததே.

’கண்ணாநின் காலிணையைக் காணுவேனே என்மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
அனைத்துச் சீர்களும் காய்ச்சீர் ஆகிட
அகவல் ஓசை வருதல் இன்றிச்
செப்பல் ஓசை பயில்வ தாகுமே.

’மல்லிகைமுகம் தன்னில் விழிச்சுரும்புகள் இரண்டு’
கூவிளங்கனி தேமா கருவிளங்கனி புளிமா
இவ்விரு கனிச்சீரும் வருதல் கூடாதே.

*****

ரமணி
23-03-2014, 04:52 AM
7.12. ஆசிரியப்பாவின் தளை

மாமுன் நேர்வரும் நேரொன் றாசிரியம்
விளமுன் நிரைவரும் நிறையொன் றாசிரியம்
அகவற் பாவின் தகவுறு தளையெனவே.

இயற்சீர் பெரிதும் இயலும் அகவலில்
இயற்சீர் வெண்டளை விரவியே வந்திடும்
மூவசைச் சீர்கள் அருகியே வருதலால்
வெண்சீர் வெண்டளை அருகியே வந்திடும்.

மாமுன் நிரையும் விளம்முன் நேருமென
மாறியே வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வர வெண்சீர் வெண்டளையே.

காய்முன் நேர்வரும் கலித்தளை சிறிதே
ஆய்ந்தே வரலாம் ஆயினும் இருவகை
வஞ்சித் தளைகள் வருதற் கூடா.

நேரொன் றகவல் நிரையொன் றகவல்
இயற்சீர் வெண்டளை கீழ்வரும் அடிகளில்
அலகிட்ட சீர்களால் அறிந்து கொள்வீர்.

உள்ளார் கொல்லோ தோழி முள்ளிடை
இலவ மேறிய கலவ மஞ்ஞை
எரிபுகு மகரி ரேய்க்கும்
அரிபடு கள்ளியங் காடிறந் தோரே.
---ஐங்குறுநூறு

தேமா தேமா தேமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா தேமா
கருவிளம் புளிமா தேமா
கருவிளம் கருவிளம் கூவிளம் தேமா

புனைந்த சான்றுகள்
முழுதும் நேரொன்றாசியத் தளை:
வானாய்க் காற்றாய் மண்ணாய் ஆகி
ஊனில் ஆவி யூன்றச் செய்தே
காட்டில் ஆடும் காள கண்டன்
தேட்டாய்க் கொள்ளத் தீமை போமே.

முழுதும் நிரையொன்றாசிரியத் தளை:
வெளியென வளியென நிலமென உருவினன்
துளியென உயிரினை உடலிலே உறுத்தவன்
வனமதில் நடமிடும் வளர்மதிச் சடையனை
இனங்கொள வினைகளும் இலையென அழியுமே.

முழுதும் இயற்சீர் வெண்டளை:
வானெனக் காற்றென மண்ணென ஆனவன்
ஊனிலே ஆவியை யூன்றிடச் செய்தவன்
காட்டிலே ஆடிடும் காளமார் கண்டனைத்
தேட்டெனக் கொள்ளவே தீமைகள் போகுமே.

ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை வந்தது:
வானெனவே காற்றெனவே நிலமெனவே ஆனவனே
ஊனிலே உயிரினை யூன்றச் செய்தவனாம்
காட்டிலே நடமிடும் காளமார் கண்டனைநாம்
தேட்டெனக் கொள்ளத் தீமைகள் போகாவோ?

*****

ரமணி
27-03-2014, 02:02 PM
7.13. ஆசிரியப்பாவின் ஓசை வகைகள்

கூற்றும் மாற்றமும் ஆகவே ஒருவன்
வேற்றொரு வனுக்கு விடைகூறல் செப்பல்.
கூற்று என்பது வினவிக் கேட்டல்
மாற்றம் என்பது விடையாய்க் கூறுதல்.
கூற்றும் மாற்றமும் இன்றியே கருதியது
சாற்றல் வரையாது என்பதே அகவல்.

அகவல் ஓசையில் மூவகை யுண்டு.
நேர்நேர் இயற்றளை நேர்ந்தால் ஏந்திசை
நிரைநிரை இயற்றளை நிறைந்தால் தூங்கிசை
இயற்றளை யிரண்டும் இயன்றால் ஒழுகிசையே.

ஏந்திசை யகவ லோசை வருகிற
காரிகை மேற்கோள் கீழே வருவது ... ... ... [காரிகை=யாப்பருங்கலக் காரிகை]
ஈற்றுச் சீரில் மூவசை வரினும்
முழுதும் பயில்வது நேரொன் றாசிரியம்.

போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னுவோரே.
---யா.கா. மேற்கோள்

தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா கூவிளங்காய்

தூங்கிசை யகவ லோசை வருகிற
காரிகை மேற்கோள் கீழே வருவது
நிரையொன் றாசிரியம் முழுதும் பயில
ஈற்றய லடியினில் மூன்றே சீர்வர
நேரிசை அகவற் பாவகை யாகுமே.

அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.
---யா.கா. மேற்கோள்

கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா

ஒழுகிசை யகவ லோசை வருகிற
யா.கா. மே.கோ. கீழே வருவது
இயற்சீர் வெண்டளை ஆசிரி யம்வர.

குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் கணங்கே.
---யா.கா. மேற்கோள்

தேமா புளிமா தேமா கருவிளம்
கருவிளம் புளிமா புளிமா கூவிளம்
தேமா கருவிளம் புளிமா
தேமா கூவிளம் கூவிளம் புளிமா
---யா.கா. மேற்கோள்

7.14. ஆசிரியப்பாவின் அடி

ஆசிரி யம்மெனும் அகவற் பாவாம்
நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
பாவின் சிற்றெல் லையடி மூன்று
பாவின் பேரெல் லைபா டுவுளமே.

நேரிசை அகவற் பாவில் ஈற்றயல்
மூன்றுசீர் கொண்ட சிந்தடி யாய்வரும்
ஈற்றயல் என்றது இறுதியின் முன்னடியே.

இணைக்குறள் அகவலில் அடிகள் விரவுமே
இடையிலே இருசீர் கொண்ட குறளடி
முச்சீர் கொண்ட சிந்தடி என்று
அச்சீர் அடிகள் ஒன்றோ பலவோ.

*****

ரமணி
01-04-2014, 04:41 AM
7.15. ஆசிரியப்பா வகைகள்

அடிகள் தோறும் அளவடி வந்திடும்
அகவற் பாவின் வகைகள் நான்காம்
நேரிசை அகவலில் ஈற்றயல் சிந்தடி
இணைக்குறள் அகவலில் இடையிடைச் சிற்றடி
நிலைமண் டிலத்தில் அனைத்தும் அளவடி
அடிமறி மண்டில அளவடிப் பெருமையாய்
அடிகளே மாறினும் பொருளது மாறாதே.

ஓசையாற் பெயர்பெறும் நேரிசை யகவல்
அடியாற் பெயர்பெறும் இணைக்குறள் அகவல்
பொருளாற் பெயர்பெறும் நிலைமண் டிலமே
தொடையாற் பெயர்பெறும் அடிமறி மண்டிலம்.

ஆசிரியப் பாவகைப் பெயர்கள் குறித்து
ஆசிரியப் பாவகை அனைத்திலும் சொன்னால்
வாசக அடிகள் இவ்வா றமையுமே.

நேரிசை அகவல் வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறும்
நேரிசை ஓசையாற் பெயர்பெறும்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.

இதையே இணைக்குறள் வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால்
நேரிசை ஓசையால்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.

இதுவே நிலைமண்டில வகையில் சொன்னால்
அடியாற் பெயர்பெறும் இணைக்குற ளாசிரியம்
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறும்
நேரிசை ஆசிரியம் ஓசையால் பெயர்பெறும்
நிலைமண் டிலமோ பொருளா லென்பரே.

அகவல் பெயர்களில் அடிமறி மண்டிலமே
அடியாற் பெயர்பெறும் இணைக்குறள் வகையே
அடிமறி மண்டிலம் தொடையால் பெயர்பெறுமே
நேரிசை அகவல் ஓசையாற் பெயர்பெறுமே
நிலைமண் டிலமோ பொருளாற் பெயர்பெறுமே.

மண்டிலம் என்பது சக்கரச் சுழற்சி
நிலைமண் டிலத்தில் கிடைநிலைச் சுழற்சி
அடிமறி மண்டிலத்தில் நிமிர்நிலைச் சுழற்சியே.

அகவல் என்பது பொதுவில் குறிப்பது
அடிகள் தோறும் அளவடி பயிலும்
நிலைமண் டிலவகைப் பாவென் பதுவே.

*****

ரமணி
05-04-2014, 04:53 AM
7.16. ஆசிரியப்பாவில் இயங்கும் நூல்கள்

தமிழ்சங்க காலச் தீந்தமிழ் நூல்களில்
பத்துப் பாட்டின் நூல்கள் அனைத்தும்
எட்டுத் தொகையில் பரிபாடல் கலித்தொகை
விட்டு மற்றவை அகவலமை நூல்களே.

காப்பிய நூல்களின் யாப்பினை நோக்க
மாதவி மகளாம் மணிமே கலைக்கதைக்
காப்பியம் முழுதும் அகவலில் அமைந்ததே.

இயலிசை நாடகம் மூன்றுமே இயலும்
நயமிகு சிலப்பதி காரப் பனுவலில்
பயிலும் அகவல் இடையிடைத் தொடர்ந்தே.

இன்றைய இலக்கிய நூல்கள் நோக்கிட
கந்த சஷ்டிக் கவசப் பாக்களும்
பாரதி பாக்கள் பலவிலும் அகவல்
மரபின் வழியில் முயலும் பாவலர்
பெரிதும் யாப்பது அகவற் பாவே.

7.17. நேரிசை ஆசிரியப்பா

அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி வருவது
நேரிசை ஆசிரி யப்பா ஆகுமே

நேரிய இசையினில் நேரிய சொல்லினில்
நுண்ணிதின் பொருளை உரைக்கும்
நேரிசை யகவல் சீரிய வகையே.

ஈற்றசை பலவித மாக முடியும்
நேரிசை யகவல் சான்றுகள்
பழந்தமிழ் இலக்கிய மரபில் கீழே.

ஏகார முடிவு:
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே
---செம்புலப் பெயனீரார், குறுந்தொகை 40

ஓகார முடிவு:
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவள்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ
---அள்ளூர் நன்முல்லையார், அகநானூறு 46

ஈகார முடிவு:
குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து
பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி
இரங்குமென் றழுங்கல் வேண்டா
செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ
---அகநானூறு

ஆய் என்ற முடிவு:
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்
---அகநானூறு

ஐகார முடிவு:
நின்றன நின்று தன்றுணை ஒருசிறைப்
பூந்தண் சிலம்பன் தேந்தழை இவையெனக்
காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப்
பூண்முலை நோக்கி இறைஞ்சி
வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை

இகார முடிவு:
அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
எங்குல தேவா போற்றி
சங்கரன் மகனே தாளிணை போற்றி!
---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 28

*****

ரமணி
11-04-2014, 05:00 AM
7.18. நேரிசை ஆசிரியப்பா முயற்சி

அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி பயிலும்
நேரிசை அகவல் நாமும் செய்வமே.

காதலில் காமம் களியைத் தரினும்
காதலின் நெடுமையில் பரஸ்பர மதிப்பே
காதலில் சாதனை அன்பே
காதலின் வெற்றி பெற்றோர் உடன்பாடே.

நேரிசை அகவலில் ஈற்றயல் அமையும்
மூவசை அடியின் ஓசை நிறுத்தம்
மேல்வந்த சான்றினைப் போல
நேரிசை அகவலில் நிறைவாய் ஒலிக்குமே.

காலையில் எழுந்தால் கண்சுடும் கதிரோன்
சாலையின் சுழலில் ஊர்ந்தே
வேலைமேற் சென்றால் வீடுவர நள்ளிரவே.

நீதிசார நூல்தரும் கீழ்வரும் வெண்பா
நேரிசை அகவல் ஆக்குவோம்
சீரிய பொருளது மாறி விடாமலே.

பெற்றதாய் மட்டுமல்ல கற்பித்தார் இல்லாளும்
கொற்றவன் நாயகியும் மூத்தோன் மனைவியும்
தன்னில்லாள் தாயுமென் றைந்துவகை நங்கையரை
உன்னுவரே தாய்க்கு நிகர்.
---நீதிசாரம் 22

பெற்றன்னை கற்பித்தார் எனினும் இல்லாள்
கொற்றவன் மனைவி மூத்தவன் மனைவி
உற்ற இல்லாளின் அன்னையெனச்
சுற்றம் ஐவரும் தாயார் ஆவரே.

*****

ரமணி
15-04-2014, 04:33 AM
7.20. இணைக்குறள் ஆசிரியப்பா

அகவலின் இலக்கணம் தகவுற அமைந்தே
அந்தமும் ஆதியும் அளவடி யாகியே
இடையிடைச் சீர்கள் அடிகளிற் குறைந்தே
குறளடி யாகவோ
அன்றிச் சிந்தடி யாகவோ
இணைந்து வரும்-இணைக் குறளா சிரியமே.

சிந்தடி முச்சீர் குறளடி யிருசீர்
வந்திடும் அடிகள் என்று
தம்முள் பேதம் உடையன ஆயினும்
அளவடி நோக்க
அளவில் இரண்டுமே குறளெனப் பெயர்பெறுமே.

தொல்காப் பியர்தம் இலக்கண நூலில்
குறள்வெண் பாவும்
சிந்தியல் வெண்பா வகையும்
ஒருங்கு சேர்த்துக் குறுவெண் பாட்டெனக்
கூறுதல் இங்கு நோக்கற் பாலதே.

முதலிலும் ஈற்றிலும் அளவடி வரினும்
’இடைபல குன்றின் இணைக்குறள்’ என்பதில்
இடைபல என்று
காரிகை நூற்பா கூறுவ தாலே
இடைவரும் சிற்றடி யோடு
அளவடி இடைவரல் விலக்கல என்று
உளத்தில் இருத்தல் நன்று
உளதே சான்று மேலுள அடிகளிலே.

பசுபதி யவர்கள் பேசுதல் போல*
இணைக்குறள் அகவற் பாவின் வடிவே
இன்றைய புதுக்க விதையாம்.
நன்றே புனைவோம் நாமொரு புதுக்கவிதை
இணைக்குறள் அகவல் வடிவந் தனிலே.
[*’கவிதை இயற்றிக் கலக்கு’, பேராசிரியர் பசுபதி, பக்.93]

என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்குப் பிடிக்கும்
என்று சொன்னேன் என்றேன்.
’ஸ்மார்ட்’ என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது
சுருங்குதல் கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன்
என்றாளே பார்க்கலாம் என்முகம் மலரவே!

*****

ரமணி
23-04-2014, 04:38 AM
7.21. இணைக்குறள் ஆசிரியப்பா சான்றுகள்

புகழ்மிகு சான்றென இணைக்குறள் அகவலில்
தகவுற ஒலிக்கும் கீழ்வரும் பாடல்
காரிகை தருகிற சான்றாய் வருவது.

சான்று 1.
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.

சிறப்புடை நேரொன் றாசிரி யத்தளை
பெரிதும் பயின்று
ஈற்றய லடிகள் குறளடி சிந்தடி
என்று வந்த சான்றிணைக் குறளிதே.

தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோம்.

தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்தே மறையும்
கிட்டவரச் சூடேறும் தீயின் வெம்மை
எட்டியே விலகக் குறைந்தே மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
ஒன்றியபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
நீரின் தண்மையாய்த்
தீயின் வெம்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!

சான்று 2.
இவனினும் இவனினும் இவள்வருந் தினளே
இவளினும் வருந்தினன் இவனே
இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே
தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே
நன்மலை நாடனும் உளனே
புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே.

சிறப்புடை நிரையொன் றாசிரி யத்தளை
பயின்று இடையில் சிந்தடி
இரண்டு வந்த சான்றிணைக் குறளிதே.

சான்று 3.
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் (65)
அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்
இந்திர விழவூர் எடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ் கானல்வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
...
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு (85)
இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இதுபால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.
---சிலப்பதிகாரம், புகார்க் காண்டம்

சிலம்பின் ஆசிரியப் பாவடிகள் முடிவது
’என்’எனும் ஈற்றசை கொண்ட சீர்களிலே
மேல்வந்த வரிகளிலே
இடையிடைச் சீர்குறைய
இணைக்குறள் ஆசிரியப் பாவென ஆயிற்றே.

4. இணைக்குறள் அகவல் இன்று

பொதுவில் இன்று இணைக்குறள் முயல்வோர்
புதுக்கவிதை போலதை எழுதி
மரபின் தகைமை சேர்த்திட முயல்வரே.

உமா:
http://enathutamilkavithaigal.blogspot.in/

செல்வம் நிலையாமை
இன்றுளது நாளை இல்லா தாகும்
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!

விழி திறந்து காட்டுவழி
கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமும்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!

*****

ரமணி
04-05-2014, 03:08 AM
7.23. நிலைமண்டில ஆசிரியப்பா

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மண்டிலம் எனும்சொல் வட்டம் எனப்பொருள்
மண்டிலம் மையம் இருந்து புறப்படும்
தண்டுகள் யாவும் அளவினில் சமம்போல்
மண்டில அகவற் பாவடி அனைத்தும்
அளவடி யென்று நாற்சீர் நிலைக்க
நிலைமண் டிலவா சிரியப் பாவே.

அகவலின் இலக்கணம் தகவுற அமைந்தே
வகையில் அடிகள் அளவடி யாகி
அகவலின் முடிவினை ஈற்றசை பெறவரும்
வகையே நிலைமண்டில ஆசிரியப் பாவே.

நிலமண் டிலத்தின் இன்னொரு சிறப்பாம்
நிலைபெறும் அளவடி அமைப்பின் நடுவில்
யாப்பில் சேராது பொருளினை விரித்தோ
மாற்றியோ வருகிற தனிச்சொல் என்பதே.
நிலைமண்டில அகவற் பாவகைத் தனிச்சொல்
நிலைமண் டிலத்தில் அருகியே வருமே.

கவிஞனின் மனமே மையம் என்றால்
கவிஞன் சொற்களில் அளவடி அமைந்து
கவிதை மண்டிலம் போலப் பரவிக்
கவிதைச் சக்கரம் சுழன்று சுழன்று
கவினுறச் செய்நிலை மண்டில அகவலே.

7.24. நிலைமண்டில ஆசிரியப்பா சான்றுகள்

சான்று 1.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18

விளக்கம் (கலிவிருத்தம்)
தலைவனின் களவில் தலைவியின் காதல்
அலைபோ லெழுந்தே ஆவியை வதைக்கத்
தலைவனிடம் தோழி தலைவியை மணம்கொளத்
தலைப்படு மாறு தெளிவுறுத் தினளே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் என்பது மலைவிளை மூங்கில்
சாரல் என்பது மலையினைக் குறிக்கும்
வேரல் மரமே வேர்ப்பலா வேலியாகும்
சாரல் நாட! செவ்விய மதியுடன்
வரைக தலைவியை மணத்தில்! ஏனெனில்
வேர்ப்பலா காம்பென அவளுயிர் சிறிது
வேர்ப்பலா போன்றவள் காதல் பெரிது
பழமது மிகவும் பழுத்து விழுந்தால்
உழன்றிடும் உயிரே நீங்கிடும் அன்றோ?

சான்று 2.

ஆக்கப் படுக்கு(ம்) அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும்
காக்கப் படுவன விந்திரிய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே
---வளையாபதி 13.

பொருள்:
ஆக்கம் தந்திடும் காவலில் தள்ளிடும்
ஊக்கத் துய்த்திடும் நரகத் துழல்விக்கும்
காக்க வேண்டிய கரணம் ஐந்தில்
நாக்கின் அளவு எதுவும் இல்லையே.

சான்று 3.
தனிச்சொல் பெற்றுவந்த நிலைமண்டில ஆசிரியப்பா

வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது;
...
இற்றைநாள்
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
...
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே.
---பாரதியார், பாரத மாதா நவரத்தின மாலை

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் தோறும் அகவற் பாவில்
ஈரடிக் கொருமுறை எதுகை வருதல்
செய்யுள் ஓசை சிறக்க உதவுமே.
அத்துடன்
அகவற் பாவின் அடிகள் தன்னின்
தகவுற மோனை சீரொன்றில் மூன்றில்
வந்திடச் செய்யுளின் ஓசை சிறக்கும்
அந்த வகையில் அமைவது இன்றேல்
சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் எதுகை
நேர்வர மோனைக் குறைவு நீங்கும்
இப்படி அமைந்த சான்றுகள் கீழே.

சான்று 3.

வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன்
பரும அல்குற் பரத்தி நுளைச்சி
நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்
அளவர் அளத்தியர் அலைகடற் காக்கை
சுறவம் பாக்கம் பெறலரும் பட்டினம்
உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டகம் அடம்பு
கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல்
புலவ மீனுப்பு விலைகளிற் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்தல்
உணங்கவை விற்றன்மீன் உணக்கல்புள் ளோப்பல்
நெடுங்கட லாடல் நெய்தற்கருப் பொருளே.
--நெய்தலின் கருப்பொருள் நிரல்,
அகப்பொருள் விளக்கம், நாற்கவிராச நம்பி

கபிலர், குறிஞ்சிப் பாட்டு:
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீ*இப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை .... 80

*****

ரமணி
15-05-2014, 01:43 PM
7.26. அடிமறிமண்டில ஆசிரியப்பா

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
மறித்தல் என்றால் தடுத்தல் திரும்புதலே
நிலைமண் டிலத்தில் நிலைத்த அடிகளே
அடிமறி மண்டிலம் எவ்வடி எங்குமே.

அகவலின் இலக்கணம் தகவுற அமையுமே
அகவலின் முடிவினை ஈற்றசை பெறுமே
அடிகள் யாவும் அளவடி யாகுமே
அடிகள் எதுவும் எங்கும் வருமே
அடிகள் மாறினும் பொருள்மா றாதே
அடிகள் மாறினும் ஒலிவழு வாதே
அடிகள் எதுகையில் ஒன்றுதல் சிறப்பே
அடிகளில் பொழிப்பு மோனை சிறப்பே.

சான்று 1.
சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
சாரல் நாட நீவரல் ஆறே
வாரல் எனினே யானஞ் சுவளே.
--யா.கா.மேற்கோள்

சான்று 2.
தீர்த்த மென்பது சிவகங் கையே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே
ஏத்த ருந்தல மெழிற் புலியூரே.
--குமரகுருபரர், சிதம்பர செய்யுட் கோவை 26

7.27. அடிமறிமண்டில ஆசிரியப்பா முயற்சி

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
அடிமறி மணிடில அகவல் புனையவே
அடிகள் தோறும் பொருளது முடியுமே
அடிகள் எதுகையில் ஒன்றுதல் சிறப்பே.

முயற்சி 1.
ஆடல் நாயகன் தோடுடைச் செவியனே
கூடல் மாநகர்க் கூத்தன் பித்தனே
தேடல் ஓயத் திருவருள் செய்வனே
பாடிப் பரவுவோம் பரமன் புகழையே

முயற்சி 2.
நாளை நடப்பதை யாரே அறிவார்
காளை மாடு கன்றுகள் ஈனலாம்
பாளை பிளைந்து பாறை தோன்றலாம்
கூளம் யாவும் காஞ்சனம் ஆகலாம்

முயற்சி 3.
மழுவும் மானும் மகேச்சுரன் கையிலே
பழுதையும் பாம்பும் பரமன் உருவாம்
கழுதையும் கூடக் கடவுள் வடிவமே
கொழுகொம் பாவது கூத்தனின் அடியே

*****

ரமணி
05-07-2014, 07:48 AM
7.30. ஆசிரியப்பா இனங்கள்

(ஆசிரியத்துறை)
அடிகள் மூன்றாய் அளவொத் தாகியும்
அடிகள் நான்காய் இடைகுறைந்தும்
அடிகள் கழிநெடில் நான்கள வொத்தும்
அடிகள் பயிலின் அகவல் இனமே.

(ஆசிரியத் தாழிசை)
அடிகளின் சீரெண் எதுவும் ஆகலாம்
அடிகளில் பொதுவாய் எதுகை ஒன்றே
அடிகள் இவ்வகை அகவல் இனமே.

7.31. ஆசிரியத்துறை
(ஆசிரியத்துறை)

அடிகளில் ஈற்றயல் குறைந்தும், அடிகள் இடையிடை குறைந்தும்,
அடிகளில் ஈற்றயல் குறைந்தே இடைமடக் காகியும்,
இடையிடை குறைந்தே இடைமடக் காகியும்,
அடித்தொகை நான்கென ஆசிரி யத்துறை நால்வகை வருமே

அடிகள் நான்காம் ஆசிரி யத்துறை இருவகை
அடியொன் றேதன் அளவிற் குறைந்தே
அடிபிற அளவொத் தமைந்தால் ஆசிரிய நேர்த்துறை யாமே
அடியொன் றின்மேல் குறைதல் ஆசிரிய இணைக்குறள் துறையே.

அடிகள் நான்கும் அளவிற் குறையும்
அடிகள் முதலில் வரலாம்
அடிகள் இடையில் வரலாம்
அடிகள் ஈற்றயல் இறுதியும் வரலாம்.

சான்றுகள் (யாப்பருங்கலம், காரிகை)
ஈற்றயலடி (மட்டும்) குறைந்தது

கரைபொருங் கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருவீ ராயின்
அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்று போக
நரையுறு மேறு நுங்கைவே லஞ்சும் நும்மை
வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ.

ஈற்றயலடி (மட்டும்) குறைந்த இடைமடக்கு

வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத்
தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன் யாரே?
தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம்
பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோ னன்றே?’

இடையிடை குறைந்தது

கோடல் விண்டு கோபம் ஊர்ந்த கொல்லைவாய்
மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம்
ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய்
வாடல் மைந்தர் தேரும் வந்து தோன்றுமே.

இடையிடை குறைந்த இடைமடக்கு

இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
வரங்க மணிபொழிலா வாடும் போலு மிளவேனி
லரங்க மணிபொழிலா வாடு மாயின்
மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்ச மென்செய்த திளவேனில்.

*****

ரமணி
29-07-2014, 04:56 AM
7.32. ஆசிரியத்துறை முயற்சி

நவரச நாடகம்
(ஆசிரியத்துறை)

நகை:
மணியடிக்க நேரம் ஆகிட வகுப்பா சிரியர்
தணிகா சலம்கேட்டார்: சந்தேகம் உண்டா?
பணிவுடன் எழுந்தே பார்த்தான் பின்பெஞ்ச்
மணிகண்டன்: உங்கள் மகளின் பேரென்ன சாரே!

அழுகை:
ஆறிலும் சாவென்று ஆர்தான் சொன்னாரோ? உண்மையாச்சே!
நூறு வயசு உனக்குன்னு சொன்னேனே முந்தாநாள்!
நூறு வயசிந்த லோகத்ல வேணாம்னு...
ஆறு வயசிலே அய்யாவுன் ஆயுள் முடிஞ்சதோ?

இளிவரல்:
படிக்கும் காலம் படியாது ஊர்ச்சுற்றி யானேன்
அடித்த தந்தையை ஆசானைத் தூற்றினேன்
பிடிப்பென்றோர் கைத்தொழில் ஏதும் கற்றேன் இல்லை
வெடிகளைக் கட்டும் அடிமை வேலையே இன்று.

மருட்கை (மயக்கம், வியப்பு):
மருளும் கண்களில் மயக்கமும் வியப்பும் கண்டேன்!
பொருளை விடவும் பெரிது காதலின்
அருமை யென்றென் அழைப்பில் வந்ததில்
பெருமை யெனினும் பெருவியப்பே! என்செய் வேனோ?!

அச்சம்:
’சட்டச்சட சட்டச்சட டட்டா!’
விட்டம் அதிரும் இடியோசை, மீண்டும் மின்னல், மழைவெள்ளம்!
பொட்டில் அடித்தாற்போல் பொறிகலங்கத் தாவியென் கழுத்தைக்
கட்டிக் கொண்டாளென் ஆறு வயதுக் கருவிழிச் சிறுமகளே!

பெருமிதம்:
தாலாட்டுப் பாடினாள் அன்னை, பிள்ளையைத் தூங்க வைக்க;
காலாட்டிக் கூடவே பாடியது பிள்ளை!
கால்மொழி அரைமொழிக் காதுற அன்னை
கால்வலி மறந்தே களிப்புடன் தூக்கி முத்தமிட் டாளே!

வெகுளி (சினம், வெறுப்பு):
நெருங்கிய நண்பனே நெரித்தான் கழுத்தை எதிர்பார்க்க வில்லை!
இருவரும் சேர்ந்தே செய்த தொழிலின்
வருவாய் முழுதும் வற்றச் சுரண்டி நீட்டினான் கம்பி!
எருமை யேறுகாலா! எத்தனுயிர் கொள்வாய் விரைவிலே!

உவகை:
இளங்காலை நேரம்; சில்லெனும் கற்பாவு கோவில் வெளிச்சுற்றில்;
தளிர்க்கால் வைத்துத் தந்தை விரல்பிடித்தே
தளிர்க்கால் வைத்ததில் தடுமாறி நின்றும்
ஒளிமுகம் இழையச் சுற்றிலும் பார்த்தும் குழந்தை வலம்வருமே!

அமைதி:
மாலை நேர மாருதம்; வானவண்ணம், புள்ளினக் கூட்டம்;
ஆலய மணியோசை; ஆரத்தி சோதி;
காலசைவில் தலையசையக் காதசையக் கழுத்துறும் சதையசைய ஆவினம்;
ஓலமனம் தூங்க புத்திவிழித் தின்புறும் பேசாதே.

*****

ரமணி
15-09-2014, 02:35 PM
7.33. ஆசிரியத் தாழிசை
(ஆசிரியத் தாழிசை)

அடிகளின் சீரெண் தளைவகை எதுவும்
அடிகள் மூன்றில் ஒன்றாம் எதுகை
அடிகள் இங்ஙனம் அகவற் றாழிசை.

அகவற் றாழிசையாம் ஆசிரியத் தாழிசை
தகவுறும் மூன்று அடிகளில் தனித்தோ
புகலும் பொருள்மேல் மூன்றடுக்கி யோவரும்.

மூன்றடுக்கி வந்தால் முற்றும் சிறப்பென்றும்
மூன்றில்லாத் தனித்தது சற்றே சிறப்பென்றும்
ஆன்றோர் உரைகள் ஆமுறை சொலுமே. ... [ஆமுறை = ஆகும் முறை]

சான்றுகள்
மூன்றடுக்கி, வெண்டளை

கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!

கொல்லியஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் மானுற் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!
--சிலப்பதிகாரம், ம.கா., ஆய்ச்.குர.

தனித்தே, ஆசிரியத்தளை

வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்.
--யாப்பருங்கலம்

தனித்தே, கலித்தளை

நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி
. நிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவி
வீடற்குந் தன்மையினான் விரைந்து சென்று
. விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி
பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப்
. பகவன்றன் அடியிணையைப் பயிறும் நாமே.

*****

ரமணி
17-11-2014, 04:10 AM
7.34. ஆசிரியத் தாழிசை முயற்சி

கணநாதன் துதி
(ஆசிரியத் தாழிசை: வெண்டளை, அளவடி, ஒருபொருள் மூன்றடுக்கி)

ஐங்கரத்தான் ஓங்காரன் அம்பிகையின் முன்னவனாய்
ஆங்காங்கே எழுந்தருளி அருள்செய்யும் கணநாதன்
கைங்கரியம் செய்தேநாம் கள்ளமற்று வாழ்வோமே.

கரிமுகத்தான் ஏரம்பன் கண்ணுதலான் கங்கைசுதன்
பெருவயிறன் ஏகதந்தன் பேர்சொல்லி வழிபட்டே
அருச்சனையும் செய்தேநாம் ஆயுளுடன் வாழ்வோமே.

மும்மதனாம் இறைமகனாம் முக்கண்வி நாயகனே
நம்மனதில் தங்கிநின்று நல்வாழ்வு தந்திடவே
செம்மையுளம் கொள்ளவரும் சிறப்புடனே வாழ்வோமே.

*****

மாலைக் காட்சி
(ஆசிரியத் தாழிசை: ஆசிரியத்தளை, ஒரு பொருள் மூன்றடுக்கி)

பொன்னொளிர் ஞாயிறு புகுந்திடும் மலையுளே
மன்னும் அமைதியில் மகிழும் சூழல்
இன்னும் இன்னும் என்றென் இதயமே.

கண்களில் வழிந்திடும் கதிரவன் ஒளியில்
மண்ணிது மறைய வான்வரும் ஒளித்திரள்
எண்ணம் இன்னும் என்றே நாடுமே.

மாலைத் தென்றலின் மலர்மணம் நுகர்ந்தே
சோலை வழிச்செலும் சுகத்திலென் மனமே
காலை வருடும் காற்றினும் விழையுமே.

*****

தனித்தே, கலித்தளை, எழுசீரடி

நடந்ததுவும் நடப்பதுவும் நலமொன்று விளைவதற்கே
. நமதுவசம் எதுவுமிலை எனவாழ்ந்தால்
கடந்ததுவும் கடப்பதுவும் கவலையினைத் தருவதெனில்
. கலக்கமெதும் கொளவேண்டாம் எனுமுணர்வில்
திடம்படவே வருவதெல்லாம் எதிர்கொண்டே அனுபவிக்கும்
. திறமுற்றே துணிவுடனே தினவாழ்வே.

*****