PDA

View Full Version : அனாதை...



PremM
14-01-2013, 01:43 AM
இரண்டொரு பக்கத்தில்
சலித்துவிட்ட
சுவாரஸ்யமில்லாத கதை தானோ நான்??

அல்லது பிழையென்று எண்ணி,
கசக்கி எறிந்த காகிதமோ..

உடைந்த உறவுகளின்
கண்ணாடித் துகளோ?

அல்லது,சுயலாபத்திற்க்குக் கிடைத்த
சாட்டை அடி நானோ?

நான் ஆண்மையின் விருட்சமா?
அல்ல அரை நொடி அவலமா?

பெண்மையின் கவிதையோ?
அல்ல அவளின் சோக கீதமோ?

விலை போகாத புத்தகமாய்
வானம் பார்த்து கிடந்திருந்தேன் அன்று..

மார் சுமக்க வேண்டியதை
மண் சுமந்திருந்தது..

அவள் குழல் பாடும் தாலட்டை,
மழைப் பாடிக் கொண்டிருந்தது..

யாரோ உயர்த்திப் பிடித்த
நிலவென்னும் கடிகாரம்,
அது இரவென்று உறுதியளித்தது..

உயிர் தீண்ட மறுத்தப் போதும்,
எனை அணைத்துக் கொண்டது பசி..

கண்ணீர் இல்லாது நான் எழுதிய,
ஒரே கவிதை
அந்த முதல் அழுகை...