PDA

View Full Version : நிறம் மாறிவிட்ட நியாயங்கள்!



ரௌத்திரன்
02-01-2013, 06:19 PM
(அது 2008 மார்ச் மாதம். ஒரு தனியார் நிறுவனம்.

முந்தைய ஆண்டு 35 கோடியை எட்டிய உற்பத்தி இந்த ஆண்டு 65 கோடியை எட்டச் செய்தால், முன்பு வழங்கிய ஊதிய உயர்வை இருமடங்காக்கித் தருவதாகத் திண்ணமாய் அறிவித்தார் முதலாளி.

நம்பிய தொழிலாளர்கள் இரவுபகல் உழைத்தார்கள். அறிவித்த இலக்கு 65 கோடி. அந்தத் தொழிலாளர்கள் தம் அயராத உழைப்பால் அளித்த உற்பத்தியோ 84 கோடி. ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டு வழங்கப்பட்டதில் பாதி. அதாவது முந்தைய ஆண்டு 500/- வாங்கியவனுக்கு 250/- ரூபாய். 1000/- வாங்கியவனுக்கு 500/- ரூபாய்.

பாவம். படிப்பறிவற்ற அந்தப் பாட்டாளிகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மன்றாடினார்கள். மனமிரங்கவில்லை முதலாளி. மாறாக,, விருப்பமற்றவர்கள் வேலையை விட்டு வெளியேறலாமென்று கூறிவிட்டார்.

அவர்களுக்குப் படிப்பறிவு இல்லை என்பதோடு வேறு தொழில் தெரியாது. வேலையை விட்டுவிட்டால் அடுத்த வேளைச் சோற்றுக்கு குடும்பம் திண்டாட வேண்டிய நிலையும் வந்துவிடும்.

சத்தியமாய் அத்தனைத் தொழிலாளர்களின் கண்களும் கலங்கின. சிலர் அடக்கமுடியாமல் அழுதும்வீட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனினும் நான் படித்தவன். உயர்மட்ட ஊழியன். எனக்குச் சேரவேண்டியதை சண்டையிட்டுப் பெற்றுக்கொண்டேன். ஆயினும் அழுகை வந்தது.

அப்போது நான் கவிஞனல்லன். சமூகப் பிரக்ஞை உடைய சீர்திருத்தவாதியல்லன். எனில், என்னை அழவைத்தது எது?

மனிதாபிமானமோ? இருக்கலாம்!

அன்று எழுத்தறிவற்ற அந்த ஏமாளிகளின் கதறலைக் கண்டு நான் வடித்த இருதுளிக் கண்ணீரை ஏறக்குறைய 5 வருடங்களுக்குப் பிறகு கவிதையில் சிறைப்பிடிக்க முயற்சிக்கிறேன்....)


முதலாளிகளே!
இரும்புப் பெட்டியைப் போலவே
இதயத்தையும்
பூட்டிவைத்தே
பழக்கப்பட்டவர்களே!

நா நயத்தால்
நாணயம் சேர்க்கும்
நரித்தனம் கற்றவர்களே!

நீங்கள்
நிமிர்ந்து நடக்க
குனிந்து குனிந்தே
கூன்விழுந்தவர்களின்
கூக்குரல் இது

கொஞ்சம்
காது கொடுங்கள்!

உங்கள்
தனரேகையை வளர்க்க
அல்லும் பகலும் உழைத்து உழைத்தே
ஆயுள் ரேகையை
அழித்துக்கொண்டவர்களின்
அழுகுரல் இது

கொஞ்சம்
காது கொடுங்கள்!

வேர்வை உப்பை தாண்டியொரு
சந்தனம் பூசாத
சரீரத்திற்குச்
சொந்தக்காரர்களின் கேள்விகளிவை

சொல்லுங்கள்!

வானவில்லாய்
வளைந்து உழைத்தவர்க்கு
சாயம்போன வாழ்க்கைதான்
சீதனமா?

உங்கள்
இரும்புப் பெட்டிகளை
இரவுபகல் நிரப்பியவர்க்கு
சவப்பெட்டிகள்தான்
சன்மானமா?


நந்தவனங்களை
நட்டு வளர்த்தவர் மார்புக்கு
மலர்வளையம் வைப்பதுதான்
மரியாதையா?


தங்கக் காசுகள்
தயாரித்துக் கொடுத்தவர்கள்
நெற்றிக்காசும் கடன்வாங்கி
நீட்டிப்படுக்கவா?

சொல்லுங்கள்!

கலங்குவதற்கென்றே
கண்களும்...

துடிப்பதற்கென்றே
நெஞ்சும்.....

உழைப்பதற்கென்றே
உடம்பும்....

ஊசலாடுவதற்கென்றே
உயிரும்...

வறுமைக்கென்றே
வயிறும்...

வாங்கிவந்தோமா
நாங்கள்?

புரிந்துகொண்டோம்!

உங்கள்
உடம்பில் ஓடுவது
ரத்தமல்ல

அது
துரோகத்தின்
திரவவடிவமென்று

தெரிந்துகொண்டோம்.....


விளங்கிக்கொண்டோம்!

உங்கள்
நுரையீரலை
நிரப்புவது மூச்சல்ல

வஞ்சகத்தின்
வளிவடிவமென்று

விளங்கிக்கொண்டோம்...

இதோ!
இறுதியாய்ச் சொல்கிறோம்.

இதற்கு மட்டும்
காது கொடுங்கள்
கணவான்களே!

இது ஒன்றும்
நாங்கள்
வளைந்து நெளிந்து
வைக்கும் கோரிக்கையல்ல

எக்காளமிடும் உங்களுக்கு
எங்களின் இறுதி
எச்சரிக்கை!

உழைக்கும் மக்கள்
உகுக்கும் கண்ணீர் முன்
பத்தினி சாபமும்
பொய்த்துவிடும்...

எம்
உள்ளங்கையின்
உஷ்ணத்தில்
சூரியன் கூடச்
சாம்பலாகிவிடும்.....

கேட்டுக்கொள்ளுங்கள்!

ஏழை வீட்டு அடுப்புக்கு
முதலாளிகளின்
முதுகுகளில் இருந்துதான்
விறகெடுக்க வேண்டுமெனில்
அந்த நாளும்
வரத்தான் போகிறது!

அன்று
வறுமைக் கோட்டை
விழிநீரால் அல்ல
உங்கள்
ரத்தத்தால் துடைத்தழிப்போம்....


(பாட்டாளிகளின் பாதங்களுக்கு இந்தப் படைப்பு என் காணிக்கை)





--------------------ரௌத்திரன்

கும்பகோணத்துப்பிள்ளை
03-01-2013, 12:08 PM
இப்படிப்பட்ட முதலாளிகள் மட்டுமல்ல
அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும்
லஞ்சமெனும் கைகோர்த்துக்கொண்டு
கொஞ்சநஞ்சமாகவா செய்கிறார்கள்
கொடுமை!
உழைக்கும் வர்க்கத்திற்க்கு ஊறிழைக்கும்
உன்மத்தர்களை உன்டு இல்லையென்று பார்த்தால்தான் நாடு உருப்படும்!
இவர்களை என்ன செய்யப்போகிறோம் நாம்?!..

கனலாய் வெளிப்பட்ட கவிதை! பாராட்டுகள்!