PDA

View Full Version : கனவிடைக் கனல்மூட்டுங் காதற் கணவ!ரௌத்திரன்
02-01-2013, 06:16 PM
ஆவியைப் பறித்துச் சென்ற
====அன்புடைக் கள்வ ருக்கு
ஓவியத் திருவைப் போல
====ஒற்றையில் கிடந்து நித்தம்
காவியக் கருவைப் போலக்
====கண்ணீரை வடிப்ப தன்றி
நாவிலே வார்த்தை இல்லா
====நங்கையின் கடித மீது!

போதையை ஊட்டு கின்ற
====பருவத்தை அடைந்த இன்னும்
பாதைகள் மாறி டாமல்
====பெண்மையின் உணர்வ டக்கி
காதலில் வீழ்ந்தி டாமல்
====கன்னிமை விரதம் காத்தப்
பேதையள் இற்றை நாளில்
====படுகின்ற துயரம் அந்தோ!

மலைபோலக் கட்டுப் பாடு
====மங்கைநான் காத்து மென்ன?
இலைபோல அசைத்து விட்டீர்!
====இதயத்தை ஆசை தன்னில்
அலைபோல ஆட வைத்தீர்!
====அல்லொடு பகலு மென்னை
சிலைபோல ஆக்கி வைத்துச்
====சீவனைத் திருடிக் கொண்டீர்!

"மாற்றிலா பொன்னே!" என்றீர்!
===="மாணிக்கம்" என்றீர்; "ஈடு
சாற்றொணா காதல் கொண்டோம்
====சடுதியில் மணப்பேன்" என்று
சாற்றினீர்; மாதம் எட்டு
====சென்றுமே வந்தீ ரில்லை!
நேற்றிரா நடந்த கூத்து
====நேயனே உரைப்பக் கேளீர்!

தாயுமே உறங்கிப் போக
====தெருவினைக் காவல் காக்கும்
நாயுமே உறங்கிப் போக
====நான்மட்டும் உறக்க மின்றி
நோயிலே வீழ்ந்தார் போல
====நினைவெலாம் நீரே யாகிப்
பாயிலே புரண்டி ருந்தேன்
====படர்ந்தது ஓர்கை என்மேல்!

உதறிய படியே மெல்ல
====உள்ளமும் அடித்துக் கொள்ள
பதறியே பார்த்தேன்; அச்சோ!
====பளிங்குபோல் உருவம் ஒன்று!
கதறியே அணைத்துக் கொண்டேன்!
====காதல! நீர்தான்! நீர்தான்!
அதரமே துடிது டித்து
===="அத்தான்!"என் றழைத்தும் விட்டேன்!

அன்னையோ உறக்கம் தன்னில்
====அமைதியாய் உறங்கு என்று
சொன்னதும் பதற்றம் ஏறிப்
====பற்றினேன் இறுக்கி உம்மை!
"அன்னமே!" என்று காதில்
====ஆசையாய்க் கொஞ்சி வைத்து
மின்னையே தோற்க டிக்கும்
====மெல்லிடை வளைத்துக் கொண்டீர்!

"தாய்!"எனச் சொல்வ தற்கு
====தலைவனே மெல்ல என்றன்
வாயினைத் திறக்கப் பார்த்தேன்
====வாயினால் வாய டைத்துச்
சேயினைப் போல என்னை
====வாரியே அணைத்துக் கொண்டு
போயினீர்; மயக்கத் தோடு
====பூவிழி திறந்து பார்த்தேன்!

"வண்டுகள் தேன்கு டிக்க
====வருக!"வென் றழைத்தல் போலச்
செண்டுகள் தோறும் நீரைச்
====சில்லெனத் தெளித்து வைத்துக்
கொண்டுள சோலை யொன்று!
====பூமியின் மீதும் சொர்க்கம்
உண்டெனச் சொல்வ தற்கோர்
====உவப்புறுஞ் சான்று அஃது!

தலைவநும் மார்பி ருந்து
====தலையினை விலக்கிக் கொண்டு
அளவிலா துயரில் ஆழ்த்தி
====அகன்றதும் ஏனோ? என்று
புலவிதான் கொள்ள ஆவல்
====பூத்திட்ட தேனும் "இன்று
கலவிதான் இழந்தால் மீண்டும்
====காண்பதும் என்றோ?" என்ன

குளவிபோல் ஒற்றை எண்ணம்
====குடைந்திடப் பாழும் நெஞ்சு
பிளவெனப் பிளந்தாற் போல
====பெரியதோர் வலியுங் காண
இழந்தது போதும் இன்னும்
====இழப்பதற் கிசையேன் என்று
புலம்பிய திதையம்; நீரோ
====புன்னகை ஒன்று சிந்தி

மெல்லென இதழின் மீது
====இதழினைப் பொருத்தி வைக்கத்
துள்ளென சுகத்தில் மேனி
====துள்ளியே குதித்தக் காலை
கள்ளெனக் கூறிக் கூறிக்
====கண்மூடிக் குடித்தி டாமல்
கொல்லெனக் கொன்ற தேபோல்
====கனியிதழ் எடுத்துக் கொண்டீர்!

உதட்டினை எடுத்தீர் என்றா
====உத்தமர் நீர்நி னைத்தீர்?
உதட்டினை யல்ல என்றன்
====உயிரினை எடுத்துக் கொண்டீர்!
"உதட்டினால் உதட்டி னூடே
====உயிரினை ஊட்டீர்!" என்ன
உதட்டினைக் குவித்தேன் மங்கை
====உணர்ந்துநீர் ஊட்ட லானீர்!

இடையினைப் பிடித்தீர்; மெல்ல
====இறுக்கினீர்; ஆசை மீறி
உடையினைப் பறித்தீர்; சீவன்
====உசுப்பினீர்; மிச்ச முள்ளத்
தடையினை நீக்கி வைத்துத்
====தழுவினீர்; இன்ப வெள்ள
மடையினைத் திறந்து மேனி
====முழுவதும் படர லானீர்!

சொக்கினேன்; சுகத்தில் கண்கள்
====செருகினேன்; விரகம் மீறி
விக்கினேன்; தாகம் ஏறி
====விம்மினேன்; பேச்சி ழந்து
திக்கினேன்; "அம்மா!" என்று
====தியங்கினேன்; "நானா?" என்று
வெட்கினேன்; இருந்து மென்ன?
====விரும்பினேன்; "இதுவே சொர்க்கம்!

"அத்தான்!என் அத்தான்!" என்று
====அரற்றினேன்; அரற்றி மீண்டும்
"அத்தான்!"என் றழைத்து உம்மை
====ஆரத்த ழுவியே கோடி
முத்தங்கள் ஈயப் பாவி
====முந்தினேன்; அச்சோ! அச்சோ!
செத்தேன்!நான் செத்தேன் யாவும்
====கனவன்றி நனவே யல்ல!

உம்மைநான் ஏறெ டுத்துப்
====பார்த்திட்ட நாளி ருந்து
அம்மவோ! தூக்கம் போச்சு!
====அமைதியும் கெட்டுப் போச்சு!
வெம்மையும் ஏறிப் போச்சு
====விரகமும் கூடிப் போச்சு!
விம்மிடும் மார்பி னுக்கும்
====விவஸ்தையும் இன்றிப் போச்சு!

இனிமேலும் பொறுத்தற் கில்லை
====இத்துன்பம் ஏற்றற் கில்லை
கனிமேலும் இலைதான் கீழும்
====கைக்கொள மணநாள் பார்ப்பீர்!
பனிபோலும் மார்பில் சேர்த்து
====புத்துயிர் அளிப்பீர்; இன்றேல்
எனையாளும் தேவா வந்து
====என்பிணம் எடுத்துச் செல்வீர்!
-----------ரௌத்திரன்