PDA

View Full Version : கோழைகளே சுடுங்கள்!



ரௌத்திரன்
02-01-2013, 06:06 PM
(1967. அக்டோபர் 8.

பொலிவிய மலைகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்த கொரில்லா மேஜர் "எர்னஸ்டோ-சே-குவேரா" காயப் படுத்தப்பட்டு அமெரிக்க வீரர்களால் நிராயுதபாணியாகக் கைதுசெய்யப் படுகிறான்.

marunaal அக்டோபர் 9

C I A அதிகாரிகளின் முன்னிலையில் சுட்டுக் கொல்வதற்காக அழைத்துவரப் படுகிறான். மரணம் தன்னை முற்றுகையிட்டு விட்டதை உணர்ந்துகொண்ட குவேரா அலட்சியமாகச் சிரிக்கிறான். அவன் சிரிப்பு அவனைச் சூழ்ந்துநிற்கும் ராணுவ வீரர்களுக்கு அச்சத்தை ஊட்டுகிறது. துப்பாக்கி ஏந்திய அவர்களின் கைகள் நடுங்க ஆரம்பிக்கின்றன.

இதோ, அந்தப் புரட்சிக்காரனின் புன்னகையை எனது பேனா மொழிபெயர்க்கிறது....)



சுடுங்கள்!
கோழைகளே சுடுங்கள்!

நான் ஒன்றும்
உயிர்ப் பிச்சை கேட்டு
உங்கள் கால்களில் விழப்போவதில்லை!


ஆம்,
மழைக் காளான்களின் குடைகீழ்
மலை ஒதுங்காது....

புழுதிக்குப் பயந்து
புயல்
புறமுதுகு காட்டாது....

இதோ
இங்கேயே நிற்கிறேன்!

சுடுங்கள்!
கோழைகளே சுடுங்கள்!

என்
மார்பைத் தீண்டிய பிறகேனும்
உங்கள்
துப்பாக்கித் தோட்டாக்கள்
துணிவு பெறட்டும்.....

சுடுங்கள்!

என்
மூச்சுக் காற்றுக்கு
மரணம் என்பது
முற்றுப் புள்ளியன்று

உலகின்
கடைசிப் பாட்டாளியின்
நுரையீரலிலும்
நுரைத்துக் கொண்டே இருக்கும்
என் மூச்சு....

சுடுங்கள்!

உங்கள் தோட்டாக்கள்
என்
சரீரத்தை வேண்டுமானால் துளைத்துவிடலாம்
சரித்திரத்தை?

என் பெயரைச்
செரிக்கும் சக்தி
வரலாற்றின்
வயிற்றுக்கும் கிடையாது....

சுடுங்கள்!

இன்று
என் நெஞ்சைத் துளைக்கும்
தோட்டாக்கள் ஒவ்வொன்றும்
நாளை உங்கள்
முதலாளித்துவத்தின் நெற்றிப் பொட்டில்
மீண்டும் வந்து பாயத்தான் போகிறது....

சுடுங்கள்!

நான்
மரணத்தால் வீழ்ந்துவிடுவதில்லை!

ஆம்,
பகல் நிலவின் ஒளியில்
பகலவன் மங்கிவிடுவதில்லை....

காக்கைகள் சிறகடித்து
ககனம் இடிந்துவிடுவதில்லை.....

நண்டுகள்
கரையில் கிழிக்கும்
கோட்டுக்கு அஞ்சி
கடல் அடங்கிவிடுவதில்லை.....

சுடுங்கள்!
கோழைகளே சுடுங்கள்!

என்னைத் தீண்டி
மரணம்
முக்தி பெறட்டும்!

சுடுங்கள்.......



-------------ரௌத்திரன்