PDA

View Full Version : இனி எல்லாமே மின் வணிகம் (E-Commerce) - 1



lavanya
10-01-2004, 07:16 PM
இ- காமர்ஸ் பற்றிய விரிவான தொடர்

நன்றி

1. அறிவரசு - இண்டர்நெட் உலகம்
2. ரீனா ஜோஸபின் - ஷெப்ரோடெக்
3. அனுஷா - �பிளை டெக்

Internet - ல் E- Commerce

தலைப்பை பார்த்தவுடன் ஏதோ தவறு இருப்பது போல் தோன்றும்.இணையத்தில் நடைபெறும் வணிகம்தானே மின் வணிகம் என்று சொல்லக்கூடும்.Electronic Commerce எனப்படும்
மின்னணு வணிகமே E-Com என்று மின் வணிகமாய் சுருங்கிற்று.

ஏதேனும் ஒரு கணிப்பொறி பிணையத்தின் வழியே நடைபெறும் வணிகத் தகவல் பரிமாற்றமே
மின்னணு வணிகம் எனப்பட்டது.அந்த பிணையம் இணையமாகத்தான் இருக்கவேண்டியது என்பது இல்லை.இணையம் சேராத பிணையம் வழியாகவும் வணிகத் தகவல் பரிமாற்றம்
நடைபெற முடியும்.அதுவும் மின் வணிகம்தான். எனவே E-Com என்றாலே இணைய வழி
வணிகம்தான் என கொள்ள கூடாது.

மின் வணிகம் என்பது ஒரு விற்பனை நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையே
நடைபெறும் பொருள் விற்பனை நடவடிக்கையை மட்டுமே குறிப்பதாக எடுத்துக்கொள்ள கூடாது.இரண்டு வணிக நிறுவனங்கள் தமக்குள்ளே வணிக தகவல்களை பரிமாறிக்
கொள்வதும் இதில் அடங்கும்.மேற்கண்ட இரண்டு நடவடிக்கையையும் சேர்த்து E-Business
என்று சொல்வார்கள்.மின் வணிக நடவடிக்கையை பொதுவாக நான்கு வகையாய் பிரிப்பார்கள்

1. தமது சுற்றத்துக்குள் வர்த்தகம் ( Business Internal)

2. வணிக நிறுவனங்களுக்குள் வர்த்தகம் (Business To Business)

3. வணிக நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் (Business To Consumer)

4. நுகர்வோருக்கும் நுகர்வோருக்கும் (Consumer To Consumer)

இனி இவற்றைப் பற்றி ஓரிரு வரிகள்

1. தமது பிணையத்துக்குள் வர்த்தகம் ( Business Internal)

ஒரு வணிக நிறுவனம் தன் கிளைகளுடனும் சார்பு நிறுவனங்களுடனும் நடத்திக்கொள்ளும்
உள் தகவல் பரிமாற்றம்.

2. வணிக நிறுவனங்களுக்குள் வர்த்தகம் (Business To Business)

இரண்டு வணிக நிறுவனங்களுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றமும் பண
பரிமாற்றமும் கொண்ட நடவடிக்கைகள்.

3. வணிக நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் (Business To Consumer)

வணிக நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையே பொருள்களை விற்பது/வாங்குவது
தொடர்பாய் நடைபெறும் தகவல் மற்றும் பண பரிமாற்றங்கள்.

4. நுகர்வோருக்கும் நுகர்வோருக்கும் (Consumer To Consumer)

நுகர்வோர் தமக்குள்ளே நடத்திக்கொள்ளும் ஏல விற்பனை போன்ற வணிக நடவடிக்கைகள்
அவர்களுக்கிடையே நடைபெறும் வர்த்தக மற்றும் பண பரிமாற்றங்கள்.

இவற்றுள் முதலிரண்டு வகையான வணிக நடவடிக்கைகள் இணையம் வழியே நடைபெற
வேண்டிய அவசியம் இல்லை.தனியான கணிப்பொறி பிணையங்கள் (Computer Network)
மூலமாகவும் தொலைத்தொடர்பு வழியாகவும் நடைபெற முடியும்.கடைசி இரண்டு வகை
வணிக தகவல் பரிமாற்றங்கள் முழுக்க முழுக்க இணையம் வழியாகவே நடைபெறுகின்றன.

சில வேளைகளில் பொருள் விற்றல்/வாங்கல் நடவடிக்கையில் நூற்றுக்கு நூறு தகவல்
பரிமாற்றம் கணிணி மூலமாகவே முடிந்து விடுகிறது.இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்ன
வெனில் இசைப்பாடல்கள்,நூல்கள்,ஓவியங்கள்,கணிணி மென்பொருள்கள்,சட்ட/மருத்துவ
ஆலோசனைகள் இவற்றை உரிய விலை கொடுத்து உடனுக்குடன் பதிவிறக்கம் (download)
செய்து கொள்ள முடியும்.

மின் வணிகத்தின் வளர்ச்சிப் படிகள்

மின் வணிகத்தின் வளர்ச்சிப்படிகளை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

1. தனியான பிணையங்கள் மூலமாக நடைபெறும் வணிக நிறுவனங்களுக்கு இடையான
மின்னணு தகவல் ( Electronic Data Information)பரிமாற்றம்.

2. இணையம் மூலம் நடைபெறும் வணிக நிறுவனங்களுக்கு இடையேயான மின்னணு தகவல்
பரிமாற்றம்.

3. இணையத்தில் நடைபெறும் பொருள் விற்பனை.அது தொடர்பான பணப்பரிமாற்றம்.இது
நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடைப்பட்டது.


தொடக்கத்தில் மின் வணிகம் , மின்னணு தகவல் பரிமாற்றம் (Electronic Data Interchange)
என்ற வடிவில்தான் முளைவிட்டது.சுருக்கமாய் EDI என்பார்கள். மதிப்பேற்றுப் பிணையம்
என்று சொல்லை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? (Value Added Network - VAN) எனப்படும்
தனிப்பட்ட பிணையங்களின் மூலம் இத்தகைய்ய தகவல் தொடர்புகள் இன்று நன் முறையில்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நிறுவனமும் தத்தமது கணிப்பொறி பிணையங்களுக்கென்றே நாடு முழுவதும்
உலகம் முழுதும் தகவல் தொடர்பு தடங்களை நிறுவிப்பராமரிப்பது இயலாத செயல். சில அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இது போன்ற நாடு தழுவிய தகவல் தொடர்பு
கட்டமைப்புகளை நிறுவி பிற வணிக நிறுவனங்கள் கட்டண அடிப்படையில் இக்கட்டமைப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கின்றன.இத்தகைய்ய கட்டமைப்புகள்
தான் மதிப்பேற்று பிணையம் என அழைக்கப்படுகின்றன.

மின் வணிகம் என்னும் புதிய வணிக நடைமுறைக்கு இந்த மதிப்பேற்று பிணையங்களே
மூல காரணம் என்றால் அது மிகையில்லை.மின் வணிகத்தின் முதல் பத்து ஆண்டுகள் VAN
வழியாகவே வளர்ந்து பெருகியது.1995 ஆம் ஆண்டு வரை மின் வணிகம் என்பது VAN Network மூலம் நடைபெற்ற வணிக பரிமாற்றங்கள் மட்டுமே என்றுதான் சொல்லவேண்டும்.

sara
10-01-2004, 07:48 PM
மதிப்பேற்றுப் பிணையம் -- இதுபோன்ற வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறீர்கள் லாவண்யா? மிக நன்றாக இருக்கிறது.

கட்டுரை நன்றாக தொடங்கப்பட்டிருக்கிறது. மிகச்சுருக்கமாக கொடுத்திருக்கிறீர்கள். ஒருவேளை இங்கு கணினி பற்றி அறியும் ஆர்வலர்கள் குறைவாக இருப்பது ஒரு காரணமோ? (இந்த பகுதியில் உள்ள பதிவுகளின் எண்ணிக்கையையும், அதற்கு வந்துள்ள பதில்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.)

இளசு
10-01-2004, 11:17 PM
கணினிப் பாடங்கள் கற்றுத்தர தீராத ஆர்வம் கொண்ட உங்களுக்கும்
துணை நிற்கும் உங்கள் நட்புகுழு அறிவரசு, ரீனா, அனுஷா ஆகியோருக்கும்
என் பணிவான நன்றிகள்..

மீண்டும் ஒரு தொலைநோக்குத் தகவலைத் தந்தமைக்கு பாராட்டு...

உங்களிடம் கற்றவை
தகவல் தள மேலாண்மை அமைப்பில் (Data Base Management
System)
பிணைய தொழில்நுட்பங்கள்
தனித்த கணினி
இல்லாத தகவலாக (empty data)
ஒத்திசைவாய்
மூலக்கூறுகளின் முப்பரிமாணம்
உள்ளீடு
கணிணியின் நினைவகத்தில்
தோற்றத்தின் முதல் முனை (Visual View Point)
செலுத்துதல் ( Navigation)
மாற்றிக் கொள்ளுதல் ( Manipulation)
ஆழ்ந்து விடுதல் ( Immersion) _ (நண்பன் & சாந்தலாதேவி போல்!!! :D )
ஊடக சாதனம்
நிகழ்தகவு தத்துவங்கள்
உட்பொதி,
உள்ளிணை கணிப்பொறி முறைமை
இயக்கதொகுப்பு
இயக்க முறைமை
ஒளியில் ஏற்படும் செறிவு வேறுபாடு
நடுஉரு எழுத்துக்கள்
குரலேற்பு முறைமை

இன்று மதிப்பேற்று பிணையம்..

இன்னும் கற்பேன் லாவ்..

நன்றிகள்!

puppy
12-01-2004, 04:12 PM
லாவ்ணயா நல்லா கொடுத்து இருக்கீங்க....இந்த VAN தான் கொஞ்சம் உதைக்குது......அப்படின்னு ஒன்னு இல்லையா....VPN-ஐ சொல்றீங்களா நீங்க....அதுதான் முன்னாடி உபோயகபடுத்தபட்டது...இப்பவும் கூட ஆனால் அதில் வர்த்தகம் பண்ணவே தான் ஒரு தனி டிபார்ட்மென்ட் இருக்கும்....applied electronic commerce என்று........இப்போ எல்லாமே ip வைத்து தானே.........அது தான் எங்குமே இருக்கிறதே.....

lavanya
12-01-2004, 07:43 PM
இல்லை பப்பி...இந்த வார்த்தைப் பிரயோகம் இப்போது இல்லை.
அதனால்தான் குழப்பமே....பொதுவான அனைத்து வியாபார
பிணையங்களும் இந்த பதத்தில்தான் இதன்கீழ்தான் பேசப்பட்டன..
உங்களது கடைசி வரி மிகச்சரி...நான் இன்னும் அந்த இடத்திற்கு
வரவில்லை....

தவறான செய்தி வந்துவிடக்கூடாதே என்ற கவனத்தில்தாந்தான்
கட்டுரை மிக கவனமாக பின்னப்படுகிறது...மிக தெளிவாய் கேட்டு
வைத்தமைக்கு நன்றி..பப்பி...இக்கட்டுரை இறுதியில் அதைப்
பற்றியும் சொல்கிறேன்..நன்றி...

poo
14-01-2004, 03:10 PM
மிக சுவாரஸ்யமான பதிவு..

தொடங்கியமைக்கு நன்றிகள்...

madhuraikumaran
15-01-2004, 03:51 AM
C2C எனப்படும் நுகர்வோருக்கு இடையேயான வணிகத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. யாரும் எதிர்பார்க்காத வளர்ச்சி இது. பழைய பொருள்களை ஏல முறையில் விற்பதென்பது உள்ளூரில், தெருமுனைகளில் அல்லது வீட்டு கேரேஜில் மட்டுமே சாத்தியமென்றிருந்த காலம் போய், அதன் சந்தையை நாடு முழுவதுமுமாக்கிய பெருமை மின் வணிகத்தையே சாரும்.
நுகர்வோருக்கிடையேயான வணிகப் பரிமாற்றம் என்பது பரஸ்பர நம்பிக்கையின் மூலமே நடைபெறுவதால், அந்த நம்பகத்தன்மையை ஒரு இணையத் தளம் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட போது, வியாபாரம் எளிதாகிப் போனது.
E-Bay, அமேசான் ஆகிய வணிகத்தளங்களின் அசுர வளர்ச்சிக்கு இதுவே காரண்மாயிற்று. பழைய பொருள்கள் மட்டுமின்றி, புதுப் பொருள்களையும் தனிநபர்கள் ஸ்டாக் எடுத்து, கடை - உரிமம் போன்ற பிரச்சனைகள் இன்றி இத்தளத்தில் விற்று எளிதில் லாபம் பார்க்க முடிந்தது. இதைப் பார்த்த சில பெரிய நிறுவனங்கள் தாங்களே நேரடியாக E-Bay போன்ற தளங்களில் தங்களின் பொருட்களை விற்க ஆரம்பித்தன.
நான் வேலை பார்க்கும் நிறுவனம் இவ்வாறான ஒரு முடிவெடுத்து E-bay மூலம் நேரடி வியாபாரம் செய்யத் தொடங்கிய போது அதற்கு டீலர்கள் எனப்படும் வினியோகஸ்தர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு நிறுவனம் தந்த உறுதியான பதில் : "உங்களால் விற்க முடியாதவற்றையே நேரடியாக விற்கிறோம். இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. இதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் இரண்டு பேரும் அழியப் போவது உறுதி !".
அதன் பின் வினியோகஸ்தர்களும் இத்தகைய விற்பனை முறைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயினர்.
ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு...
'One that doesn't change - doesn't grow
One that doesn't grow - dies'
- மாற மறுப்பது வளருவதில்லை... வளர முடியாதது இறந்து போகும் !.

இளசு
15-01-2004, 10:20 PM
அருமையான கூடுதல் தகவல்கள்..

ஹோம் தியேட்டர் பதிவு நினைவு வருகிறது..

அடிக்கடி அதை நினவுபடுத்துங்கள்..இதுபோன்ற பதிவுகளால்..

பாராட்டுகள் மனங்கவர்ந்த ம.கு. நண்பா..