PDA

View Full Version : நன்னெறி



M.Jagadeesan
01-01-2013, 03:10 AM
வாய்மை பேசல் வாய்க்கு அழகு
தூய்மை பேணல் மேனிக் ( கு ) அழகு.
தாய்மை உறுதல் பெண்ணுக் ( கு ) அழகு
சேய்மை பேணல் உறவுக் ( கு ) அழகு.

தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை
பாயை மிஞ்சிய படுக்கை இல்லை
வாயை மிஞ்சிய பகைவன் இல்லை
நாயை மிஞ்சிய காவல் இல்லை.

கற்ற வழியே நிற்றல் நன்று
குற்றம் இல்லா வாழ்க்கை நன்று
பெற்றம் பாலைக் குடித்தல் நன்று
சுற்றம் சூழ இருத்தல் நன்று.

உப்பைக் கடனாய் வாங்கல் தீது
தப்பை இருமுறை செய்தல் தீது
குப்பையை வீட்டில் குவித்தல் தீது
தொப்பை வளர்த்தல் என்றும் தீது.

கண்ணின்று பிறத்தல் காதல் ஆகும்
மண்ணின்று பிறத்தல் தங்கம் ஆகும்
பெண்ணின்று பிறத்தல் தெய்வம் ஆகும்
பண்ணின்று பிறத்தல் இன்பம் ஆகும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
பழகிய நட்பு வறுமையில் தெரியும்
அழகிய மனது முகத்தில் தெரியும்
மழலைச் சொல்லில் இனிமை தெரியும்.

ஆவி நீப்பினும் ஆன்மா போகா
காவி உடுப்பினும் கவலை போகா
பாவி என்றுனைத் தூற்றும் முன்பே
தாவி இறைவன் திருவடி பற்றுக !

முரளி
01-01-2013, 05:25 AM
மிக அருமையான நன்னெறி. பின் பற்ற வேண்டிய நெறி.

நீரோட்டம் போன்ற நடை. சிறப்பாக இருந்தது. நன்றி...

ஜானகி
02-01-2013, 12:40 AM
எளிய தமிழில், தெளிவாக....... நன்றையும் தீதையும் எடுத்துரைத்து, ஆவதையும் தெரிவதையும் சுட்டிக்காட்டி, அழகையும் அழகில்லாததையும் பிரித்துக்காட்டி, போகும் ஊருக்கு வழிகாட்டியுள்ள பாங்கு மிகவும் நன்று ! பாராட்டுக்கள் !

M.Jagadeesan
02-01-2013, 05:50 AM
முரளி , ஜானகி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !