PDA

View Full Version : "இரவு தேசம் "krishna1988
25-12-2012, 12:37 PM
நெடுநாள் பழகியது போன்ற உணர்வை ஏற்படுத்தும் முகங்கள், நன்கு தெரிந்த பழக்கப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடங்கள். என பல விடயங்கள் சில நிமிடங்கள் அல்லது நொடிகளுக்குள் ஏற்படுபவைதான். எப்போதோ எங்கேயோ மனதுக்குள் ஒரு ஓரமாய் ஒழிந்து
கிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் அந்த சமாச்சாரங்களை கிண்டிக்கிளறி எடுக்கும் மேற்படி விடயங்களுக்கு நன்றி சொல்லி மரியாதை செய்வது அதிகம் பொருந்தும். நிதானிக்க நேரமின்றி
ஒடுபவார்களுக்கு ஏறி வந்த ஏணியை நினைவுபடுத்தும் வல்லமை உள்ளவை இம்மாதிரியான நினைவுபடுத்தும் விடயங்கள்.

நேற்று இரவு நாடு முழுவதும் கன மழை. கொழும்பில அல்லது நகர்ப்புறங்களில் இயற்கை கொடுக்கும் சந்தோசங்களை ஈடுபாட்டுடன் அனுபவிக்க ஒரு மகான் நிலை கண்டிப்பாய் வேண்டும். அவ்வளவு கஷ்டமானது. வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தும்மல் வராமல் போவது போன்ற அசவ்கரியத்தை கொடுக்கும் சம்பவங்கள் நிறைய நடப்பது இங்குதான் , பல பொழுதுகள் கடற்கரை, காற்றையும் அலை சொல்லும் சேதிகளையும் கேட்டு ரசிக்க செல்லும் மன நிலையை கூட அலை அலையாய் வரும் காதல் ஜோடிகள் மாற்றி விடுகின்றன என்பது உதாரணம். இது வயது கோளாறு?
இருளை அனுபவிப்பது ஒரு அலாதியான இன்பம். அதிலும் அது செயற்கை தன்மை அல்லாத இருளாக இருப்பது இன்பத்தை கூட்டும், கலப்படம் இல்லாத இருள் என்பது முக்கியம் , இங்கும் நகர்புற இருளை குறை சொல்ல வேண்டிவருகின்றது, உண்மை இருள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு மோன நிலை... அது கனவில்லாத தெளிந்த உறக்கம் போன்றது , நினைவில்லாத நிம்மதி போன்றது , இயற்கைக்கே உரிய அழகான ஓசைகளை தவிர்த்து அனைத்தும் வாய் மூடி மௌனித்திருக்கும் நிலை, பிறந்து 6 , 7 மாதம் ஆன குழந்தை விடிவதற்குள் எழுந்து தனக்குத்தானே சிரித்துக்கொள்லுமே அப்படியான ஒளியும் இயற்கையின் அழகான சத்தங்களில் ஒன்றுதான். அவை ஒன்று கலந்த இருளை அனுபவிப்பதும் அள்ளி அள்ளி பருகுவதும் அளவில்லாத ஆனந்தத்தை தரவல்லது,இப்படியான இருள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் கிடைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று !

இரவை இருளை அனுபவிப்பது என்பது ஒரு அழகான, ஆழமான பயணம். அந்த பயணம் நமக்குள் மாற்றங்களை கொண்டுவரக்கூடியது, நம்மை நாம் அனுபவிக்கும் பயணமது.
எந்த நிலையில் இருந்தாலும் எதை அடைந்திருந்தாலும் அடிப்படை என்ன என்பதை சொல்லும் பயணமது , நமக்குள் நாம் உரையாடிக்கொள்ளும் பயணம். இன்னும் தயார்படுத்தலின் விதைகள் இருளுக்குள் விழும் போது விருட்சம் பெரு விருட்சம்!!! ,

கண் திறந்திருக்கும் போது நம்முடையது என்று நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட அடையாளங்களை பற்றி இருளுக்கு எந்த அக்கறையும் இல்லை, அங்கு எல்லாமே எங்களுடையது எதுவுமே எங்களுடையது அல்ல , சாத்தப்படும் போது அதாவது மூடப்படும்போது எல்லை வந்துவிடும் இதுதான் யதார்த்தம், கதவு யன்னல், கேட் என்று எது மூடப்பட்டாலும் அது ஒரு எல்லையை உருவாக்கும் ஆனால் இமைகள் மூடப்படும்போது மட்டும் இமை என்னும் கதவை ஊடறத்து பயணப்பட முடிவது ஆச்சர்யம்!!! அங்கு எல்லைகளே கிடையாது இமைகளை தாண்டி "எல்லை இல்லாத ஒரு எல்லைக்கு நம்மை அழைத்து செல்லும்",பல இமை மூடிய இருள்கள் நீதிமன்றத்தை போல நடந்துகொள்ளும் அங்கு நாம் உண்மை மட்டுமே பேசுபவர்களாக மாறி விடுகிறோம் பொய் அங்கு இரண்டாம் பட்சமாய் உதவிக்கு மட்டுமே வரும். அல்லது ஆறுதலுக்காக வரும். அந்த நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு நியாயத்தை மட்டுமே தொடும்., சில நேரங்களில் பிரபஞ்ச ரகசியமே அந்த இருள்தானோ என்று நான் இருளுடன் முட்டி மோதி தோற்றதுண்டு ( சிறு பிள்ளைத்தனம் ) !ஆனால் .... உண்மை இருளுக்குள் ஆத்மார்த்தமாய் மூழ்கும் போது நம்மிடம் இருந்தும்,நாம் என்று அடையாளப்பட்டிருக்கும் நம் தேவை உள்ள பலரிடம் இருந்தும், நமக்கு அவசியமானவர்களிடம் இருந்தும் நம்மை அறியாமலே விலகிச்செல்லும் சந்தோசமான அபாயமும் உண்டு. இவை எல்லாம் அலாதியான அனுபவங்கள் , அனுபவிக்க வேண்டிய நிஜங்கள் கண்டுகொள்ளப்படாமல் வீணடிக்கப்படுகின்றது

"இரவில் பெய்த கன மழைதான் இந்த ஒப்பீட்டு நினைவுக்கு தூண்டிய அடிப்படை "