PDA

View Full Version : சாவதே மேல்.



M.Jagadeesan
25-12-2012, 07:07 AM
மாலை மணி நான்கு இருக்கும்.

வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. விரைந்து சென்று கதவைத் திறந்தார் கந்தசாமி.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். மீசை தாடியுடனும், பரட்டைத் தலையுடனும், அழுக்கடைந்த ஆடைகளுடனும் காட்சியளித்த அந்த முதியவர் , பார்க்கப் பரிதாபமாக இருந்தார்.

" யார் நீங்கள் ? உங்களுக்கு என்ன வேணும் ? "

" கந்தசாமி ! என்னைத் தெரியவில்லையா உனக்கு ? நான்தான் உன்னுடைய பால்ய சிநேகிதன் ராமசாமி! '

" ராமசாமியா நீ ? பார்த்து 30 வருடங்களுக்குமேல் இருக்குமே ! அதான் சட்டென்று அடையாளம் தெரியவில்லை; உள்ள வா ராமசாமி ! "

ராமசாமி உள்ளேசென்று சோபாவில் அமர்ந்தார்.

கந்தசாமி , " அபிராமி ! " என்று சொல்லி தன் மனைவியைக் கூப்பிட்டார். அபிராமி வந்தாள்.

" அபிராமி ! நான் அடிக்கடி சொல்வேனே ; என் நண்பன் ராமசாமி ! அவர் இவர்தான். ரொம்பநாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கார்! "

" வாங்க ! " என்று சொல்லி ராமசாமியை வரவேற்றாள் அபிராமி.

" அபிராமி ! காபி கொண்டுவா!"

அபிராமி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே நண்பர் இருவரும் பேசத் தொடங்கினர்.

" என்னப்பா ராமசாமி ! தாடியும், மீசையுமாக இது என்ன கோலம் ? "

ராமசாமி சிறிதுநேரம்என் எதுவும் பேசவில்லை; அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

" ஏம்பா ராமசாமி ஏன் அழறே ? என்ன ஆச்சு உனக்கு ? "

" கந்தசாமி ! இப்ப என்னோட நிலைமை சரியில்லப்பா! என் பையன் அவனோட பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு என்னை வீட்டைவிட்டுத் துரத்திட்டான்; என்னை அவன் மதிப்பதில்லை ! அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாம நடுத்தெருவுக்கு வந்துட்டேன்பா ! பிச்சை எடுக்க என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை! சொந்த ஊரில் இருக்கவும் பிடிக்கவில்லை. உன்னுடைய வீட்டுவிலாசம் என்னிடம் இருந்தது; அதான் உன்னைத்தேடி பறப்பட்டு வந்திட்டேன். என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச காசும் செலவாகிவிட்டது. தெரியாதவர்களிடம் சென்று உதவி கேட்பதைவிட , பழகிய நண்பனிடம் உதவி கேட்பது மேலானதல்லவா! அதுதான் உதவிகேட்டு உன்னிடம் வந்துள்ளேன். " இடுக்கண் களைவதாம் நட்பு " என்ற வள்ளுவர் வாக்குப்படி என்னுடைய துன்பத்தை நீதான் போக்கவேண்டும்." என்று சொன்ன ராமசாமியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

' அழாதேப்பா! உனக்கா இந்த நிலை! பள்ளியிலும், கல்லூரியிலும் நாம் ஒன்றாகப் படித்த நாட்கள், பழகிய நாட்கள் இன்றும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. மற்றவர்களுக்காக ஓடி ஓடி உதவி செய்வாயே! உனக்கா இந்த கதி ? எனக்காகப் பலமுறை பள்ளிக் கட்டணமும், தேர்வுக் கட்டணமும் கட்டி உதவி செய்தாயே ! அந்த நன்றியை நான் மறக்கமுடியுமா ? நான் தினமும் தயிர் சோறும் , ஊறுகாயும் மதிய உணவுக்காகக் கொண்டுவருவேன்; ஆனால் நீயோ வகை வகையாய்ச் சமைத்த சுவையான உணவுகளைக் கொண்டுவருவாய்! அதையெல்லாம் நீ எனக்கு ஊட்டி மகிழ்வாயே! அந்த நாட்களையெல்லாம் எப்படி நான் மறக்கமுடியும்? ஒருசமயம், கல்லூரி மைதானத்தில் ,நாம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில், வேகமாக வந்த கிரிக்கெட் பந்து என்தலையில் பட்டு இரத்தம் கொட்டிய சமயத்தில், மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்று , எனக்குச் சிகிச்சை அளித்து , என்னை வீட்டிலே கொண்டுபோய் விட்டாயே! அதை எப்படி நான் மறக்க முடியும்?கடைசியாக நாம் கல்லூரியைவிட்டுப் பிரியும் சமயத்தில், உன் நினைவாக ,எனக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாகக் கொடுத்தாயே !அதை இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். ராமசாமி ! உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ? சொல் ! "

ராமசாமி சிறிதுநேரம் பேசவில்லை. குரல் தழுதழுக்க , " கந்தசாமி ! நான் இருக்கப்போவது இன்னும் கொஞ்சநாள்தான்; நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடப்பா ! வேலைசெய்து பிழைக்க என் உடலில் தெம்பு இல்லை; என் கடைசி நாட்களை அங்கு கழிக்க விரும்புகிறேன் ! "

" ராமசாமி ! அதெல்லாம் இருக்கட்டும்; முதலில் நீ சாப்பிடு ! மற்றவற்றை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்."

" அபிராமி ! ரெண்டு பேருக்கும் இலைபோடு ! "

அபிராமி இலைபோட்டு இருவருக்கும் உணவு பரிமாறினாள். நண்பர்கள் இருவரும் கைகழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்.

" கொஞ்சம் உள்ள வந்துட்டுப் போங்க ! " அபிராமி கூப்பிட்டாள்.

கந்தசாமி உள்ளே சென்றார்.

" உங்க பிரண்டை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போறீங்களா ? "

" ஆமாம் ! "

" முதியோர் இல்லத்துல முதல்ல டெபாசிட் கட்டச் சொல்லுவாங்க ! அப்புறம் மாசாமாசம் பணம் கட்டணும்; அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது; உங்க பிரண்டு கிட்ட , சாப்பிட்ட கையோட அஞ்சோ பத்தோ குடுத்து அனுப்பிடுங்க ! தேவையில்லாத பிரச்சினையில மாட்டிக்காதீங்க !"

" மெதுவா பேசுடி ! அவரு காதில விழப்போகுது ! அவரு எனக்கு எவ்வளவோ செய்து இருக்காரு ! ஏதோ அவருடைய கெட்ட காலம் , அவரோட மகன் வீட்டைவிட்டுத் துரத்திட்டான். அவரு கேட்ட இந்த உதவிகூட நான் செய்யலைன்னா , என்னைவிட நன்றிகெட்டவன் இந்த உலகத்துல யாரும் இருக்கமுடியாது. அதுக்கு நான் சாகறதே மேல் ; மேற்கொண்டு எதுவும் பேசாதே ! வந்து சாப்பாடு பரிமாறு ! "

கந்தசாமி டைனிங் ஹாலுக்கு வந்தார். அங்கு ராமசாமி இல்லை. இலையில் பரிமாறிய உணவு அப்படியே இருந்தது.

" ராமசாமி ! என்று அழைத்துக்கொண்டே தெருவுக்கு வந்தார். தெருக்கோடி வரைக்கும் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் ராமசாமியைக் காணவில்லை.

கவலையோடு வீட்டுக்குத் திரும்பினார் கந்தசாமி. மனைவியுடன் எதுவும் பேசவில்லை; சாப்பிடவும் இல்லை; படுக்கை அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். இரவு முழுவதும் நண்பன் ராமசாமியின் நினைவாகவே இருந்தார். ஒரு வாய் சாப்பாடு கூடச் சாப்பிடாமல் சென்றுவிட்டாரே என்று வருத்தப்பட்டார். தூக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார்.

விடிந்ததும் , மனைவிடம் கூடச் சொல்லாமல் நண்பனைத்தேடிப் புறப்பட்டார். பேருந்து நிறுத்தத்தில் சென்று பார்த்தார். நண்பனைக் காணவில்லை. அங்கேயே சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தார். எங்குசென்று நண்பனைத் தேடுவது ? ஒருவேளை சொந்த ஊருக்கே புறப்பட்டுப் போயிருப்பாரோ ? சிந்தனையில் ஆழ்ந்தார். அங்கிருந்த பெட்டிகடைக்கு வெளியே செய்தித்தாள் தொங்கிக்கொண்டு இருந்தது. அதில்

" முதியவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை ! " என்று போட்டிருந்தது.

ஏதோ பொறி தட்டவே செய்தித்தாள் ஒன்றை வாங்கிப் படித்தார்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்குப் பல துண்டுகளாக சிதறிவிட்டது. அவரது தற்கொலைக்கு வறுமை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது சட்டைப் பையில் ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. அதில் ஒரு விலாசம் குறிப்பிட்டிருந்தது. அந்த விலாசம்...

அந்த விலாசத்தைப் பார்த்த கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார். அது தன்னுடைய விலாசம். இறந்துபோனது தன் நண்பன் ராமசாமி என்று தெரிந்ததும் , துக்கம் அவரது தொண்டையை அடைத்தது. அது ஒரு பொதுஇடம் என்பதையும் மறந்து , வாய்விட்டுக் கதறி அழுதார். சிறிதுநேரம் அழுதுகொண்டு இருந்த கந்தசாமி , துக்கத்தைக் கட்டுப் படுத்திக்கொண்டு மெல்ல எழுந்தார். ஒரு முடிவுக்கு வந்தார். கால்போன போக்கில் நடந்தார். நண்பனின் நினைவாகவே இருந்தார்; திடீரென நின்றார். தான் நின்றுகொண்டிருக்கும் இடம் ஓர் ஆற்றுப் பாலம் என்பதை அறிந்துகொண்டார். ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பாலத்தின் கைப்பிடிச் சுவரின்மீது ஏறி நின்றார்.

" ராமசாமி ! உன்னைத்தேடி , நீ இருக்கும் இடத்திற்கு நானும் வந்துட்டேன்பா ! " என்று சொல்லிக்கொண்டே ஆற்றில் குதித்தார்.


குறள்
=====

சாதலின் இன்னாதது இல்லை; இனிததூம்
ஈதல் இயையாக் கடை. ( ஈகை-210 )


இறத்தலைப் போலத் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை;ஆனால் பிறர் யாசிக்கும்போது , அவருக்கு உதவி செய்யமுடியாத நிலை ஏற்படுமாயின், அவ்விறத்தலாகிய துன்பமும் கூட இன்பமாய்விடும்.

குணமதி
25-12-2012, 12:25 PM
குறள் விளக்கச் சிறுகதை அருமை!

மஞ்சுபாஷிணி
25-12-2012, 03:23 PM
கதை படிக்க படிக்க கண்கள் நிறைகிறது :(

நான் அறிந்தவரை நிறையபேர் வீட்டில் இது தான் இப்போது நடக்கிறது... தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும் அம்மா அப்பா பாரமாகி போவதும்... போகும் இடம் தெரியாமல் வாழும் வழி அறியாமல் நட்பை தேடி வந்து அழுது தன் நிலை சொல்லி......

கந்தசாமி அவர் செய்ததை எல்லாம் இந்த நிமிடம் வரை மறக்காமல் இருந்திருக்காரே.... சந்தோஷமாக இருக்கிறது... நன்றி மறக்காமல் இருக்கும் நல்லவரை கூட கதையில் மட்டும் தான் காணமுடிகிறது....

மனைவி கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் முதியோர் இல்லத்தில் சேர்க்க டெப்பாசிட் என்று என்னென்னவோ சொல்ல ஹூம் மானஸ்தர் ... சாப்பிடக்கூட இல்லை...

ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை....

தன் நிலைக்கு பிச்சை எடுப்பதை விட உதவி கேட்டு தளர்வதை விட தற்கொலை மேல் என்று முடிவெடுத்தார்....

ஆனால் கந்தசாமியோ தன் நட்பின் நிலை நினைத்து இனி வாழும் ஒவ்வொரு நொடி தன் மனசாட்சி தூங்கவோ உண்ணவோ விடாது என்று அறிந்து தன்னை மாய்த்துக்கொண்டாரே.. உயர்ந்துவிட்டார் மனதில்....

அருமையான கதை... கதையா இது... இல்லை வாழ்க்கை..... ஒவ்வொரு மனிதனின் கண்ணீர் துளிகளின் சேர்க்கை...... மனம் மீள் பெற சிறிது நாட்களாகலாம் இந்த கதையில் இருந்து...

ஜெகதீசன் ஐயா..... என்ன சொல்வதென்று தெரியவில்லை.. மனம் பிரமிப்புடன் இருக்கிறது..... இவை நடப்பது இயல்பு தான் என்றாலும் மனதை அசைத்த வரிகள்...


அன்பு நன்றிகள் ஐயா கதை பகிர்வுக்கு.....

பாண்டி
25-12-2012, 03:41 PM
இன்றய நிகழ்வுகள் இவ்வாறு தான் உள்ளது

கும்பகோணத்துப்பிள்ளை
25-12-2012, 08:13 PM
கேட்பதே இழிவானது
அதனினும் மானம் பெரிதென நிருபித்திருக்கறார் இராமசாமி!

ஈயேன் என்பது இழிநிலை!
அந்நிலையைவிட சாவு துன்பமில்லை! நிருபித்தவர் கந்தசாமி!

மற்றொரு நீதியுமிருக்கிறது கதையில்

செய்நன்றி கொன்றவர்க்கு உய்வில்லை!

உய்யாதிருப்பர் (உயிர்வாழார்) செய்த நன்றிக்கு மாறுசெய்யமுடியாதெனின்!

செறிவான கதை!

இராஜேஸ்வரன்
26-12-2012, 01:22 AM
மனதை நெகிழ வைத்த கதை. பகிர்வுக்கு நன்றி.

baboo
26-12-2012, 04:06 AM
நிகழ் கால நிகழ்வுகளை வைத்து எழுதியுள்ள நல்ல கதை. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

முரளி
26-12-2012, 05:07 AM
மிக அருமையான இன்றய நிகழ்வுகள். அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள், குறள் விளக்கத்துடன் .
அரசு கொடுக்கும் முதியோர் பென்ஷன் ரூ200/- -- 500/- (என்று தான் நினைக்கிறேன்) கூட இன்றைய கால கட்டத்தில், விலை வாசியில் எந்த மூலைக்கு?

அரசாங்கம், மற்றும் நற்பணி மன்றங்கள், முதியோர் இல்லங்களை அதிகபடுத்தி , திறமையோடு நடத்தினால், இந்த தற்கொலைகள் , முதியோரின் மன அழுத்தங்கள், உடல் உபாதைகளுக்கு ஒரு சுமாறான தீர்வு காணலாம். நடக்குமா அது? அதுவரை, ???

கதையாக படிக்காமல், தன்னிச்சையாக கருத்து சொல்ல தூண்டும் கதை. அழுத்தமான கதை. பாராட்டுக்கள்.

M.Jagadeesan
24-04-2015, 02:00 PM
குணமதி , மஞ்சுபாஷிணி , பாண்டி , கும்பகோணத்துப் பிள்ளை , இராஜேஸ்வரன் , பபூ , மற்றும் முரளி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !