PDA

View Full Version : வேண்டாத வேலை - முரளி



முரளி
21-12-2012, 08:52 AM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRSZxOS_Sh6ddjhQ3PD4sNXIvYSZeLTjwHy1gBQggz-SAglE7Dn

நேரம் காலை 7.30 மணி.

முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். ஒன்று அமரரான அவனது அப்பாவுடையது. அந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். கீழே முகேஷும் அவனது அம்மாவும் குடியிருந்தார்கள்.

மாடி வீட்டு அனு, அழகான 7 வயது பள்ளி சிறுமி. ரொம்ப ஸ்மார்ட். அணில் போல துறு துறு. பள்ளிசீருடையில், தூக்க முடியாமல் , புத்தக பையுடன் மாடியிலிருந்து இறங்கினாள்.

“ஹாய் அனு, ஸ்கூல் கிளம்பியாச்சா!” முகேஷின் கேள்விக்கு அனுவின் “ஆமா!” என்ற அரைகுறை முனகல்.

வாசலில், அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர், பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்.. இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

வழக்கம் போல் ஸ்கூல் பஸ் 7.30 மணிக்கு வந்தது. வந்த பஸ், வழக்கம் போல் ஒரு 30 அடி தள்ளி நின்றது. பசங்கள், வழக்கம் போல் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். வழக்கம் போல் அனு கொஞ்சம் பின்னால்.

இது தினம் நடப்பது வழக்கம் தான். இதை பார்த்துக்கொண்டே இருந்த முகேஷ், ஒரு நாள், அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான்.

அனுவின் அருகில் சென்று கேட்டான்: “ஆமாம்! அனு ! நீ பஸ் பிடிக்க ஏன் ஒரு நாளைப் போல ஓடற? ஏன் உனக்கு சீட் கிடைக்காதா?”

“ஏன் கேக்கறீங்க அண்ணா ? எல்லோருக்கும் சீட் இருக்கே!” - அனு

“பின்னே ஏன் நீ முன்டியடிச்சிகிட்டு ஓடற?” - முகேஷின் அடுத்த கேள்வி.

“முதல்லே வண்டியிலே ஏறணும்! அதுக்கு தான்.”- அனு

“ஏன் முதல்லே வண்டியிலே ஏறணும்?” - விடுவானா முகேஷ்.

“இது வரைக்கும் நான் பஸ்லே முதல்லே ஏறினதே இல்லே. எல்லாரும் எனக்கு முன்னாடியே எறிடறாங்க..” சொல்லும்போதே அனுவின் கண்கள் குளமானது.

“சரி! சரி , கண்ணை தொடச்சுக்கோ. நீ ஏன் முதல்லே ஏறணும்? என்ன கிடைக்கும் ? சாக்லேட் கிடைக்குமா ? வேறே எதாவது பரிசு கொடுப்பாங்களா என்ன ?”

அனு கொஞ்சம் யோசித்தாள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லியே!”.

“அப்போ நீ ஏன் அனு ஓடணும்?” முகேஷ் கேட்டான்.

அனு மீண்டும் யோசித்தாள். “தெரியல்லையே!”

புரிந்ததோ இல்லையோ, குழந்தை அனு ஓடி விட்டாள். பேருந்திலும் ஏறிக்கொண்டு விட்டாள்.

****
அடுத்த நாள் காலை.

வழக்கம்போல் வாசலில் முகேஷ் அவனது வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து கீழே இறங்குகையில், அனுவின் “ஹலோ அண்ணா” குரல். “ஹாய் அனு’ என்று முகேஷ் பதில் குரல் கொடுத்தான். அவன் அருகில் அனு வந்து நின்று கொண்டாள்.

வழக்கம் போல் பஸ் வந்தது. பசங்க அனைவரும் ஓடினர், அனுவைத்தவிர. இன்று அவள் ஓட வில்லை. நிதானமாக போய் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு முகேஷை பார்த்து கையாட்டினாள்.

முகேஷ்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அனுவிற்கு ஒரு பெரிய விஷயத்தை ரொம்ப சுலபமாக விளக்கிய திருப்தி. தன்னைத்தானே “நீ பெரிய புத்திசாலிடா முகேஷ்” மார்பில் தட்டிக்கொண்டான்..

மத்தவங்க விஷயத்திலே தேவையில்லாமல் தலையிடுவது முகேஷின் ஹாபி. மூக்கை நீட்டுபவர் பல ரகம். சிலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது, என்பது ' தான் உயர்ந்தவன்' என்பதை காட்டிக் கொள்ளவே. தங்களது வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள ஒரு சிலர், பொறாமை காரணமாக , விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு நேரடியாகவோ பின்னாலோ குறை கூற வேறு சிலர்.

'உங்களிடம் எனக்குஅக்கறை இருக்கிறது' என்பதை காட்டி கொள்ள மூக்கை நீட்டும் மூக்கர்கள் பலர் உண்டு. அனைவரது பிரச்னைகளுக்கும் இவர்களிடம் தீர்வு உண்டு, அவர்களது பிரச்னைகளை தவிர. முகேஷ் இந்த ரகம்.


அவன் பண்ணின வேண்டாத வேலையின் விபரீதம், அப்போது அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
****


மூன்று நாள் கழித்து.

அனுவின் அம்மா, முகேஷின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சுன்னே தெரியலை அக்கா! திடீர்னு அனுவின் போக்கே புரிபடலை. பசங்க கூட விளையாட மாட்டேங்கிறா. “சும்மா பந்து போட்டு பிடிச்சு விளையாடறாதாலே என்ன லாபம்? ஓடிப்போய் கம்பம் தொட்டு திரும்பி ஓடி வந்து விளையாடறதிலே என்ன பிரயோசனம்? நான் விளையாட போகலை! போகமாட்டேன்.” இதுமாதிரி ஏடாகூடமாக பேசறா. பள்ளி வகுப்பாசிரியை என்னை பள்ளியிலே வந்து பாக்க சொல்லியிருக்காங்க!” அனுவின் அம்மா குரலில் கவலை தெரிந்தது.

தற்செயலாக அங்கே வந்த முகேஷுக்கு ‘சொடேர்’ என்றது. ‘ஐயையோ ! அனுவின் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ? அனு போட்டு கொடுத்து விட்டால், அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே!.’

****
இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா சொல்படி, முகேஷ், வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். மெல்லியதாக ‘க்ருக் க்ருக்’ என்று ஒரு சத்தம். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற கூட்டை உடைத்துக் கொண்டிருந்தது. தலை வெளியேவந்து விட்டது. ஆனால், அதன் . இறக்கை இன்னும் வெளியே வரவில்லை. முட்டி மோதிக் கொண்டிருந்தது. “ஐயோ பாவம்!”. பூச்சியின் அவஸ்தை, பார்த்துக் கொண்டிருந்த பரோபகாரி முகேஷின் மனம் பதைபதைத்தது. அவனுக்கு உதவி செய்ய ஆசை. உடனே, ஒரு மெல்லிய குச்சியை எடுத்து அந்த கூட்டை , ரொம்ப மெதுவாக குத்தி உடைத்தான். வண்ணத்துப்பூச்சி, கூட்டை விட்டு, வெளியே வந்து விட்டது. அதை பார்த்து முகேஷ் ‘ஆஹா! பூச்சியை காப்பாற்றி விட்டோமே! என எண்ணினான். பூரித்தான். . அவன் மனம் ஆனந்தத்தால் இறக்கை கட்டி பறந்தது.

பூச்சி மெல்ல தத்தி தத்தி நடந்தது. ..நடந்தது.... நடந்தது....ஆனால் பறக்கவேயில்லை.

முகேஷ் இப்போது அந்த பூச்சியையே ஆதங்கத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தான்.

‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ அந்த வண்ணத்து பூச்சியின் இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. இப்போது முகேஷுக்கு புரிந்தது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலை.

பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்கும். பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் அனாவசியமாக தலையிட்டிருக்க கூடாதோ?

****


மறுநாள் காலை நேரம் 7.30 மணி.

முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போக தயாராக, அனுவும், கூட அவள் அம்மாவும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். . அனுவின்அம்மா அவளை அர்ச்சனை பண்ணிக் கொண்டே வர, அனு முகேஷ் பக்கம் கை காட்டி, கண்ணை கசக்கிக் கொண்டு ஏதோ சொல்லி கொண்டே வந்தாள். அனுவின் அம்மா, முகேஷை பார்த்த பார்வையில் நெருப்பு. முகேஷ் தலையை தாழ்த்திக் கொண்டான்.

வழக்கம் போல், பள்ளி பஸ் வந்தது. தள்ளி நின்றது. வழக்கம் போல், பசங்கள் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ‘நான் முந்தி நீ முந்தி’ என்று ஓடி, முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அனுவின் அம்மா அனுவை ஓடிபோய் ஏற ஊக்குவித்தார். அவளும் ஓடிப்போய் முண்டியடித்து வண்டியில் ஏறினாள். அனு சிரிக்க, அம்மா கை காட்டி அனுப்பி வைத்தார்.

அப்பா! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. அனுவின் அம்மா அனுவின் பிரச்சினையை ஏதோ கண்டித்து பேசி, சரி செய்து விட்டார். . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம் போலிருக்கு. . ..

முடிவு செய்து விட்டான் முகேஷ், இனி தன் ஹாபியை மாற்றுவதென்று. இன்றிலிருந்து, முந்திரி கொட்டையாக, மற்றவர் காரியங்களில், தன் மூக்கை நுழைப்பதில்லை. தேவையில்லாமல் தலையிடுவதில்லை.

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTJPee3fIVBfMn2aG5QuFMmsuAXGmcD5q-MC_ZF44JopgKpKuiiHQ




**** முற்றும் ( நன்றி கூகிள் : வலையில் படித்த ஒரு துணுக்கில் பின்னிய வலை)

இராஜேஸ்வரன்
21-12-2012, 09:42 AM
‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. கோபிக்கு புரிந்தது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலையா? பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்குமோ? பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் தலையிட்டிருக்க கூடாதோ?

உண்மைதான். சில நேரங்களில் அவசரப் படுதலே காரியத்தை கெடுத்து விடுகிறது.

புரிந்தது அவனுக்கு. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம். பிரச்னைகளை எதிர் கொள்ள இதெல்லாம் ஒரு பழக்கமாக்க வேண்டும்.

நல்ல படிப்பினையைத் தரும் கதை. பாராட்டுக்கள்.

jayanth
22-12-2012, 02:34 AM
படிப்பினைக் கதை. பாராட்டுகள் ஐய்யா...!!!

முரளி
22-12-2012, 05:42 AM
பாராட்டுக்களுக்கு நன்றி இராஜேஸ்வரன்,

சிலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது, என்பது ' தான் உயர்ந்தவன்' என்பதை காட்டிக் கொள்ளவே. மூக்கை நீட்டுபவர் பல ரகம். தங்களது வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள ஒரு சிலர், பொறாமை காரணமாக , விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு நேரடியாகவோ பின்னாலோ குறை கூற வேறு சிலர்.

'உங்களிடம் எனக்குஅக்கறை இருக்கிறது' என்பதை காட்டி கொள்ள மூக்கை நீட்டும் மூக்கர்கள் பலர் உண்டு. கோபி இந்த ரகம். நல்லவன். அனைவரது பிரச்னைகளுக்கும் மூக்கர்களிடம் தீர்வு உண்டு, அவர்களது பிரச்னைகளை தவிர.

இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நமக்கு நல்லது.

முரளி
22-12-2012, 05:44 AM
நன்றி ஜெயந்த். கதையில் உள்ள குறைகளை சொன்னால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

மஞ்சுபாஷிணி
22-12-2012, 05:54 AM
மிக அருமையான படிப்பினை கதை பகிர்வு முரளி....

குழந்தைகள் களிமண் போல.... நாம் எப்படி வடிவமைக்கிறோமோ அதே போல் அழகுபெறும் புத்திசாலி செல்வங்கள்..... குழந்தைகள் மனதில் எந்த ஒரு விஷயமும் பசுமரத்தாணி போல பதிந்துவிடும்... ஒரு வார்த்தை நாம் சொன்னால் அதை எல்லாவற்றுக்கும் பொருத்தி பார்ப்பதும் உண்டு குழந்தைகள்....

கோபி செய்தது தப்பில்லை... அருமையான விஷயம் தான்... அடிச்சு பிடிச்சு ஓடி முன்னாடி போய் என்ன பயன் என்று தான் கோபி கேட்டது....

அனு குழந்தை தானே.. அதை பஸ்ஸுக்கு மட்டும் சொன்னதா எடுத்துக்காம எல்லா விஷயத்துக்கும் எடுத்துக்கிட்டா புத்திசாலிக்குழந்தை.....

அதனால் தான் குழந்தைகளிடம் நாம் எதையும் சொல்லும்போதும் அதை குழந்தைகள் சரியாக புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லவேண்டும் என்று உணர்த்திய கதை வரிகள்....

முயற்சி, முந்துதல், உழைப்பு, தன்னம்பிக்கை... இதெல்லாம் தான் குழந்தையில் இருந்து கற்று முட்டி முண்டி முந்த நினைப்பது..... பூச்சி, பறவை, மிருகம், மனிதன் எல்லோருமே செய்வதும் இதையே தான்... செய்ய தவறும்போது தான் பிறரின் வழிக்காட்டுதல் அவசியம்.... அதையே செய்யும்போது வழிக்காட்டுதல் அவசியமின்றி குழந்தைகளே முயற்சி செய்வதே சாதனை தான்....

முரளி... உங்கள் கதைகள் எல்லோருக்கும் ஒரு அருமையான மெசெஜ்... படிப்பினை.... தரும் பயனுள்ள பகிர்வாக அமைகிறது மனதுக்கு நிறைவை தருகிறதுப்பா...

மிக இயல்பான கதை நடையில் ஒரு அருமையான கதை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் முரளி....

முரளி
22-12-2012, 06:11 AM
உங்கள் பாராட்டிற்கு நன்றி மஞ்சுபாஷினி. குழைந்தைகள் மனவியல் பற்றி நான் சொல்ல நினைத்தது அனைத்தையும் அழகாக சொல்லி விட்டீர்கள். மிக அருமையான அலசல்.

"யாரிடம், எதை, எப்படி, எப்போது சொல்கிறோம்" என்பது வாழ்க்கையில் முன்னேற மிக முக்கியம். கோபிக்கு கொஞ்சம் குறைவு.அந்த திறமையை உளவியல் " Practical Intelligence" என்கிறது. சொல்லப்போனால், நடுத்தர அல்லது ஏழை குடும்பங்களில் இந்த திறமை காண்பது கொஞ்சம் கடினம். படிப்பு ஓரளவே இதை சொல்லி கொடுக்கும்.

ஏன் எப்படி என்பதற்கு காரணங்கள் உள்ளன. இதை பற்றி விரிவாக மற்றொரு கதையில் சீக்கிரமே சொல்ல விருப்பம். சொல்கிறேன்.

உண்மையில், இந்த கதைகளை பயந்து கொண்டே எழுதுகிறேன், உறவுகளிடையே வரவேற்பு இருக்குமா அல்லது ஊத்திக்குமாவென்று.. :traurig001:.

ஆனால், மன்றத்தில் இது போன்ற உளவியல் கதைகள் விரும்புவது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் அலசல் ஒரு சாட்சி.

ஜானகி
22-12-2012, 09:57 AM
இது போன்ற உளவியல் கதைகள் நம் மனதை நாமே தராசில் வைத்துப்பார்க்க உதவும். தொடர்ந்து எழுதுங்கள் !

மஞ்சுபாஷிணி
22-12-2012, 10:16 AM
உறவுகளிடையே வரவேற்பு இருக்குமா அல்லது ஊத்திக்குமாவென்று.. :traurig001:.

ஆனால், மன்றத்தில் இது போன்ற உளவியல் கதைகள் விரும்புவது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் அலசல் ஒரு சாட்சி.

உங்கள் கதைகள் எல்லாமே மிக அருமை முரளி.... வெற்றி மட்டுமே அடையும் உங்கள் படைப்புகள்...:icon_good::icon_good:

ஜான்
22-12-2012, 02:21 PM
மிக எளிய கதை!!

ஆனால் நன்றாக இருக்கிறது

முரளி
23-12-2012, 02:54 AM
நன்றி ஜான்

தாமரை
23-12-2012, 03:08 PM
பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் முதல் நாளே நாம்தானே நல்லா படிக்கணும்.. 100 க்கு 100 வாங்கணும். முதல் ரேங்க் வாங்கணும் என்று ஏத்தி விடுகிறோம். அன்றைய தேதி முதல் ஆரம்பிக்கும் ஓட்டப்பந்தயம் இது.

குழந்தைகள் தங்களுக்குள்ளே போட்டியிட்டுக் கொள்வது நல்ல விஷயம்தான். ஆனால் அந்த வெற்றியை பெரியவர்களான நாம் அவர்களின் கர்வமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே போதும்.

போட்டியிடும் குழந்தைகள்தான் வித்தியாசமான சிந்தனா சக்தியை வளர்த்துக் கொள்கின்றன. தோல்வியை தூரப்போட்டு அடுத்த ஆட்டத்திற்கு ரெடியாகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றன. பல குழந்தைகளுடன் பழகுவதும் போட்டியின் மூலமாகத்தான் நடக்கிறது.

முரளி செய்தது சின்ன வேலைதான். ஆனால் சிறப்பான வேலை.. அது எதற்காக இது எதற்காக என்று சிந்திக்கும் பகுத்தறிவைத் தூண்டி விட்டிருக்கிறார். ஆனால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்தக் கேள்விகளைத் தங்களுக்குள் எழுப்ப மறந்ததினால்தான் அவர்களால் அந்தக் கேள்விகளை எதிர் கொள்ள முடியவில்லை. உடற்பயிற்சி விளையாட்டுகளின் நன்மை என்னவென்று எடுத்துச் சொல்லாத ஆசிரியரால் என்னதான் சொல்லித் தர முடியும்?

குழந்தைகளின் மூளை ஐந்து வயதிற்குள் வெகுவாக வளர்ந்து விடுகிறது. வெறும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அர்த்தமுள்ளதில் ஜெயிக்க வேண்டும் என்று மாற்றும் முரளியின் கூற்றில் தவறில்லை.

அதையே அனைத்திற்கும் உபயோகித்துப் பார்த்த குழந்தையிடமும் தவறில்லை.

மற்றவர்களின் இயலாமை முரளி மீது குற்றத்தைச் சுமத்தி தப்பிக்கச் சொல்கிறது.

உடற்பயிற்சி போல மனப்பயிற்சியும் மிக முக்கியமான ஒன்று. குழந்தை சிந்திக்கும் திறன் அதிகம் உள்ளவள் என்றால் அவளின் சிந்தனையைத் தூண்டுதல் தவறல்ல.

மனிதனின் சிறப்பே அதுதானே..

புலிக் குட்டியும் சிங்கக் குட்டியும் வேட்டையாடப் பழகும். மான் குட்டி ஓடப் பழகும். பறவைக் குஞ்சு பறக்கப் பழகும்.

மனிதனின் குழந்தை சிந்திக்கப் பழகுவதுதானே சிறந்தது???

நல்ல காட்சிகள்.. ஆனால் திசைகாட்டி தவறான திசை காட்டுவதாக எண்ணுகிறேன்,

ஒரு அதட்டலில் ஒரு மொட்டு கருகி விட்டதோ????

கும்பகோணத்துப்பிள்ளை
24-12-2012, 02:05 AM
"யாரிடம், எதை, எப்படி, எப்போது சொல்கிறோம்" என்பது வாழ்க்கையில் முன்னேற மிக முக்கியம். கோபிக்கு கொஞ்சம் குறைவு.அந்த திறமையை உளவியல் " Practical Intelligence" என்கிறது. சொல்லப்போனால், நடுத்தர அல்லது ஏழை குடும்பங்களில் இந்த திறமை காண்பது கொஞ்சம் கடினம். படிப்பு ஓரளவே இதை சொல்லி கொடுக்கும்.
ஏன் எப்படி என்பதற்கு காரணங்கள் உள்ளன. இதை பற்றி விரிவாக மற்றொரு கதையில் சீக்கிரமே சொல்ல விருப்பம். சொல்கிறேன்.

உண்மையில், இந்த கதைகளை பயந்து கொண்டே எழுதுகிறேன், உறவுகளிடையே வரவேற்பு இருக்குமா அல்லது ஊத்திக்குமாவென்று.. :traurig001:.

பலாபலன்களை யோசியாமல் சொல்வதுவும் செய்வதுவும்மாய் கோபிபோல் நிறைய மனிதர்கள் உலாவுகிறார்கள் என்பது நாம்கண்ட உண்மை ஆனால் இவ்வகை மனிதர்கள் பணக்காரகளிடையே அதிகம் கானப்படுதில்லை நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே அதிகம் காணப்படுகிறார்கள் என்பதின காரணத்தை அறிந்துகொள்ள உங்கள் அடுத்ததிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.

உளவியல் மற்றும் சுயமுன்னேற்றம் பற்றிய செய்திகள், கட்டுரைகள், அலசல்கள், ஆலோசனைகள் போன்றவற்றை 'நமக்கு நாமே' (அ) 'நம்மை நாமே' என்ற தலைப்பில் தனிப்பகுதியாக மல்லி அல்லது சாமந்தி மன்றத்தில் தனிப்பகுதியாக இடலாமே. நிர்வாகிகள் ஆலோசிக்கவும்.

முரளி
24-12-2012, 03:49 AM
மிக்க நன்றி தாமரை. மிக அழகான பின்னூட்டம் . மற்றவரிடமிருந்து மாறுபட்ட கருத்து.

" மனிதனின் குழந்தை சிந்திக்கப் பழகுவதுதானே சிறந்தது??? " என்று கேட்டிருக்கிறீர்கள். சரியான கேள்வி. அனு விஷயத்தில் யாருக்கு அந்த பொறுப்பு என்பதே என் கேள்வி.

சோம்பி இரு என கோபி மறைமுகமாக சொல்வதை உடனே அனு கேட்டுவிட்டாள். அவளுக்கு அது வசதியாயிற்று. குழந்தையின் மனது களிமண் போல் .

கோபியின் பிரச்னையே "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று சொல்லிவிட்டு செல்வதே. நல்ல உள்ளமாக இருக்கலாம். ஆனால், இடம் பொருள் ஏவல் தெரியாதவன்.

அவனது கருத்து சரியானதே. ஆனால் யாருக்கு? பகுத்தறியும் திறன் உள்ளவர்களுக்கே. அனுவுக்கு அல்ல. அனுவுக்கு பொறுப்பு, அவளது பெற்றோர், ஆசிரியர். கோபி யார் மூக்கை நுழைக்க ? இதுவே எனது கேள்வி?

இந்த பிரச்சினையில் நிறைய மாறுபட்ட கருத்துக்கள் வரக்கூடும். வருவது நல்லதே.

முரளி
24-12-2012, 04:07 AM
பலாபலன்களை யோசியாமல் சொல்வதுவும் செய்வதுவும்மாய் கோபிபோல் நிறைய மனிதர்கள் உலாவுகிறார்கள் என்பது நாம்கண்ட உண்மை ஆனால் இவ்வகை மனிதர்கள் பணக்காரகளிடையே அதிகம் கானப்படுதில்லை நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே அதிகம் காணப்படுகிறார்கள் என்பதின காரணத்தை அறிந்துகொள்ள உங்கள் அடுத்ததிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.

உளவியல் மற்றும் சுயமுன்னேற்றம் பற்றிய செய்திகள், கட்டுரைகள், அலசல்கள், ஆலோசனைகள் போன்றவற்றை 'நமக்கு நாமே' (அ) 'நம்மை நாமே' என்ற தலைப்பில் தனிப்பகுதியாக மல்லி அல்லது சாமந்தி மன்றத்தில் தனிப்பகுதியாக இடலாமே. நிர்வாகிகள் ஆலோசிக்கவும்.

நன்றி கும்பகோணத்து பிள்ளை.

மதி
24-12-2012, 04:19 AM
உளவியல் சார்ந்த கதை. குழந்தைகளிடம் நமது அணுகுமுறை எப்படி இருத்தல் வேண்டுமென்று. சொல்லவந்த கருத்து நன்று முரளி ஐயா..

ஆயினும் கதை என்று பார்க்கையில் முற்றுப்பெறவில்லையோ எனத் தோன்றுகிறது. கோபியின் கதாபாத்திரமாகட்டும் அனுவின் கதாபாத்திரமாகட்டும் ஏதோ குறைகின்ற மாதிரி ஒரு தோற்றம். கதையின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அந்த உணர்வு ஏற்படவில்லையோவென தோன்றுகிறது..

ஆயினும் நல்ல கருத்துள்ள கதைக்கு நன்றி.. அடுத்த கதையினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

முரளி
24-12-2012, 05:00 AM
நன்றி மதி

மஞ்சுபாஷிணி
24-12-2012, 07:16 AM
அருமையான விஷயங்களை மிக அழகாய் சொல்லி இருக்கீங்க தாமரை...

மும்பை நாதன்
19-09-2013, 06:34 PM
பொதுவாக அனைவருக்குமே, குறிப்பாக குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் என்ன தகவல் எப்படி தரப்பட வேண்டுமென்று ஒரு கணம் யோசித்து பார்த்து அனைவருமே பழகுவது ஒரு நல்ல பழக்கமாக இருக்கும்.

ஒரு நல்ல கருத்துள்ள கதையை படைத்ததற்கு நன்றி, முரளி.

மும்பை நாதன்

jasminet
06-04-2014, 04:05 AM
இதில் கோபியைப் போன்றோரைக் குறை சொல்வதா?அல்லது புதிதாய் சோம்பலுக்கு ஒரு காரணம் கண்டறிந்த அனுவைக் குறை சொல்வதா? பூச்சியை உட்புக வைத்து படிப்பினை சொன்னதும் அருமை....

முரளி
09-04-2014, 02:03 PM
நன்றி மும்பை நாதன், நன்றி ஜாஸ்மிநெட்...