PDA

View Full Version : கள்வன் மகன்.



M.Jagadeesan
19-12-2012, 06:35 AM
தோழி: யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
......... ஏனடி இந்த உல்லாசம் ?

தலைவி: ஆற்றங்கரை மணலில் ஆலமர நிழலில்
............. ஊற்றுநீர் தோண்டி உண்டு மகிழ்ந்ததெல்லாம்
............. நேற்று நடந்ததுபோல் இருக்குதடி ! அந்த
............. நினைவு நெஞ்சினிலே இனிக்குதடி !
............. சின்னஞ்சிறு வயதில் அறியாப் பருவத்தில்
............. கன்னல் மொழிபேசி களிப்புடனே நம்மோடு
............. ஆடி மகிழ்ந்த அச்சிறுவன் நாமிருவர்
............. கட்டியமணல் வீட்டை அவனது காலால்
............. எட்டியே உதைத்துச் சிதைத்த அச்சிறுவன்
............. தலையில் சூடிய மலர்களைப் பறித்து
............. குலைத்து வீசி மகிழ்ந்த அச்சிறுவன்
............. பந்தைக் கவர்ந்து ஓடியே நம்மனதை
............. நொந்து போகவே செய்த அச்சிறுவன்
............. நெடுநாள் கழித்து நேற்று வந்தனனே !
............. அடடா ! என்னே ! அவனது தோற்றம்!
............. பரந்த மார்பும் விரிந்த தோளும்
............. சுருண்ட குழலும் கூரிய கண்ணால்
............. மருண்டு நோக்கிய பார்வையும் கண்டு
............. நாணம் மிக்குநான் உள்ளேசெல்ல
............. காண என்னை விரும்பிய அவனோ
............. " அம்மா ! கொஞ்சம் தண்ணீர் வேண்டும்
............. அருந்தக் கொடுப்பீர் ! " என்றே கேட்க
............. அன்னை எந்தன் முகத்தை நோக்கி
............. " கண்ணே ! யாரோ வாசலில் வந்து
............. தண்ணீர் வேண்டி காத்து நின்றார்
............. தங்கக் குவளையில் தண்ணீர் மொண்டு
............. தாகம் தீர்த்து வாவென இயம்ப
............. அவனது தாகம் தீர்க்க வேண்டி
............. குவளை அவன்கை கொடுத்த போது
............. வளையல் அணிந்த எந்தன் கையை
............. இளையோன் அவனும் இறுகப் பற்ற
............. ஐயோ ! அம்மா இவனைப் பாரென
............. பொய்யாய் நானும் குரலை எழுப்ப
............. " என்ன நடந்தது ? என்றே அலறி
............. அன்னையும் பயந்து அவ்விடம் போத
............. காதலன் தன்னைக் காட்டிக் கொடுக்க
............. பேதை நானும் விரும்பா நிலையில்
............. " உண்ணும் நீரை விக்கினன் " என்றே
............ நம்பும் படியாய்ப் பொய்யைச் சொல்ல
............ " ஐயோ ! பாவம் ! ' என்றே சொல்லி
............ அன்னையும் அவனது முதுகைத் தடவ
............ என்னைப் பார்த்து அப்பெருங் கள்வன்
............ புன்னகை செய்தே கண் சிமிட்டினனே!





சுடர்த் தொடீஇ ! கேளாய் ! தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா , அடைச்சிய
கோதை பரிந்து , வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, " இல்லிரே !
உண்ணுநீர் வேட்டேன் " என வந்தாற்கு, அன்னை,
அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் , சுடர் இழாய் !
உண்ணுநீர் ஊட்டிவா " என்றாள்; என யானும்,
தன்னை அறியாது சென்றேன்; மற்று , என்னை
வளை முன்கை பற்றி தலியத், தெருமந்திட்டு,
" அன்னாய் ! இவன் ஒருவன் செய்தது காண் ! " என்றேனா!
அன்னை அலறிப் படர்தரத் , தன்னையான்
" உண்ணுநீர் விக்கினான் "என்றேனா ; அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம்,
செய்தான் அக் கள்வன் மகன். "


குறிஞ்சிக்கலி - கபிலர்.

குணமதி
19-12-2012, 01:52 PM
இலக்கியச் சொற்பொழிவாளர் தவறாது குறிப்பிடும் கலித்தொகைப்பாடல் இது.

நல்ல அறிமுகம். பாராட்டு!

ஜான்
22-12-2012, 09:48 AM
;)மன்னிக்கணும் ஐயா....திரி மாறி பதிந்து விட்டேன்

கும்பகோணத்துப்பிள்ளை
24-12-2012, 11:48 PM
அய்யா! சிரகம் என்ற வார்த்தை பற்றி ஒரு விளக்கம் தேவை!

திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாடல்:

அந்நிலை மண நீர் ஆதி அரும் கலப் போர்வை போர்த்த
கன்னியைக் கொணர்ந்து நம்பி வல வயின் கவின வைத்தார்
பன்னியொடு எழுந்து சோம சேகரன் பரனும் பங்கின்
மன்னிய உமையும் ஆக மதித்து நீர்ச் சிரகம் தாங்கி.

இதில் வருகிற சிரகம் - குடத்தை குறிப்பதென்றால்

கபிலரின் 'சிரகம்' - அதையேதான் குறிக்குமா?

'உண்ணுநீர்' கேட்டால் பொற்குடத்திலா தருவார்கள்!
செல்வ நிலைப்பற்றி சிறப்பும்மையாக சொல்லப்பட்டிருக்கறதோ!

M.Jagadeesan
25-12-2012, 12:53 AM
அக்காலத்தில் நீர் உண்ணும் கலத்திற்கு, " சிரகம் " என்று பெயர். திருவிளையாடற் புராணத்திலிருந்து எடுத்துக்காட்டு தந்தது , தங்களுடைய இலக்கிய ஆர்வத்தைக் காட்டுகிறது. நன்றி கு. பிள்ளை அவர்களே!

M.Jagadeesan
25-12-2012, 12:56 AM
அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே


என்றொரு பாடல் உண்டு நினைவு வருகிறது

கலித்தொகையில் நான் குறிப்பிட்ட பாடலுக்கும், தாங்கள் குறிப்பிட்டுள்ள இப்பாடலுக்கும் என்ன தொடர்பு உள்ளது ?

ஜான்
25-12-2012, 02:55 AM
கலித்தொகையில் நான் குறிப்பிட்ட பாடலுக்கும், தாங்கள் குறிப்பிட்டுள்ள இப்பாடலுக்கும் என்ன தொடர்பு உள்ளது ?

மன்னிக்கணும் ஐயா....திரி மாறி பதிந்து விட்டேன்

aren
27-12-2012, 02:53 AM
பாடல் இயற்றிய காலத்தில் தமிழகம் செல்லச் செழிப்புடன் இருந்திருக்கவேண்டும், அது மாதிரி காவிரி பெருக்கெடுத்து ஓடியிருக்கவேண்டும், காரணம் தங்கக்குடத்தில் தண்ணீர் வழிப்போக்கனுக்கு அருந்தக் கொடுக்கிறார்களே.

M.Jagadeesan
27-11-2014, 02:12 PM
Aren அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.