PDA

View Full Version : உள்ளூர் வியாபாரியா...உலக சர்வாதிகாரியா..?



அமீனுதீன்
18-12-2012, 03:10 PM
காலையில் எழுந்தது முதல்... இரவு படுக்கைக்குப் போகும் வரை குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது, நம் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் அண்ணாச்சி கடை, செட்டியார் கடை, பாய் கடை... என்று மளிகைக் கடைகளுக்கு போய்... வராதவர்கள் இங்கே குறைவு! உரிமையோடு பேசி, வேண்டியதை நாம் வாங்கிக்கொள்ள, பத்து ரூபாய், இருபது ரூபாய் குறைந்தால்கூட, ''அதுக்கென்னக்கா நாளைக்கு கொடுங்க...'’ என்று அன்பொழுக அவர் அனுமதிக்க... ''அப்புறம், கோயமுத்தூர்ல பொண்ணைக் கட்டிக் கொடுத்தீங்களே... எப்படி இருக்கா?'’ என்று கடைக்காரர் விசாரிக்க... என நம்மூர் கடைக்காரர்களுடன், நம் பெண்களுக்கு இருக்கும் பந்தம்... உடன்பிறவா சகோதர பந்தம்!

அப்படிப்பட்ட பந்தத்தை பங்குபோட வந்து கொண் டிருக்கின்றன... அந்நிய நாட்டைச் சேர்ந்த வால்மார்ட் போன்ற பெரும் பெரும் நிறுவனங்கள். 'இந்திய தொழில் வளத்தை அதிகரிக்கவும், நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தவும், சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது' என்றபடி வெளிநாட்டுக் கடைகளை இங்கே திறப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது மத்திய அரசு.
இதையடுத்து, 'இது நாட்டுக்கே ஆபத்து' என்றபடி பல்வேறு அரசியல் கட்சிகளும், நம்முடைய கடைக்காரர்களும் போராட ஆரம்பித்துள்ளனர். ''இது, நாட்டுக்கு மட்டுமல்ல... வீட்டுக்கான ஆபத்தும்கூட. அந்நிய நிறுவனங்கள் இங்கே கடைவிரித்தால், நுகர்வோர்களாகிய நாம், எதிர்காலத்தில் மோசமாக பாதிக்கப்படுவோம்' என எச்சரிக்கிறார்கள்... சமூக பொருளாதார நிபுணர்கள் பலரும்!

சில்லறை வணிகத்தைப் பொறுத்தவரை 'நுகர்வோர்’ என்பது பெரும்பாலும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பெண்களே. மளிகை முதல் காய்கறி வரை பார்த்துப் பார்த்துப் பேரம் பேசி வாங்குவதும் அவர்களே. அத்தகைய பெண்களுக்கு, தற்போது நாட்டில் பரபரப்பாகிக் கிடக்கும் 'சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு’ பற்றி, தெளிவு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை யின் தலைவர் த.வெள்ளையன் முதலில் இங்கே பேசுகிறார்.

''விலைவாசி கூடிக்கொண்டே போகிறது, வகை வகையான பொருட்கள் வேண்டும், தரமான பொருட்களாக வேண்டும், இடைத்தரகர்கள் பெருகிவிட்டார்கள், நிறைய உணவுப் பொருட்கள் வீணாகின்றன... இதையெல்லாம் சரிபடுத்தவே, நேரடி அந்நிய முதலீட்டை கொண்டுவருகிறோம்’ என்கிறது மத்திய அரசு. விலைவாசி ஏறுவதற்கு அரசு கொண்டு வந்த 'ஆன்லைன் டிரேடிங்’ முறையும் காரணம் என்பது, பொருளாதார மேதைகள் நிரம்பிய இந்த அரசுக்குத் தெரியாமல் போனது விந்தை. அதிக வரி வசூலிப்பதற்காகவே கொண்டு வந்த இந்த 'ஆன்லைன் டிரேடிங்’ முறையில், ஒரு பொருள் மக்களிடம் சேர்வதற்கு முன் குறைந்தது 10 முறை வாங்கப்பட்டு மற்றும் விற்கப்படுகிறது. அதாவது, நேரடியாக ஒரு பொருளை வாங்காமல், கிடங்கில் வைத்துக் கொண்டே, பலரும் ஆன் லைன் மூலமாக மாற்றி மாற்றி வாங்கி விற்கிறார்கள். இதன் எதிர்விளைவு... விபரீத விலைவாசி உயர்வு.

பொருள், விளைகிற இடத்திலிருந்து அல்லது தயாரிக்கிற இடத்திலிருந்து சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்பவர்களை மத்திய அரசு இடைத்தரகர்கள் என்கிறது. வெளி நாட்டுக்காரர்கள் நேரடியாக கொள் முதல் செய்யலாம். ஆனால், நேரடியாக மக்களிடம் விற்க முடியுமா? நிச்சயமாக வாய்ப்பே இல்லை. பொருட்களை சேமிப்பு கிடங்குகளில் பாதுகாத்து வைத்து, எங்கு அதிக விற்பனைத் தொகை கிடைக்கிறதோ, அங்கு தான் விற்பார்கள். அப்போது அவர்களும் இடைத்தரகர்கள்தானே?!'' என்று கேட்ட வெள்ளையன்,

''வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தால், விவசாயிகளுக்கு அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை. முடிவில், விவசாயிகள் தங்களின் தொழில் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். இதன் எதிரொலியாக தரமில்லாத பொருட்களை மக்களின் தலையில் கட்டுகிற சூழல் இயல்பாகவே உண்டாக வாய்ப்பு அதிகம்.

உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விற்பனைச் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரைதான் அந்நிய முதலீட்டாளர்கள் குறைந்த விலை நிர்ணயிப்பார்கள். ஒருகட்டத்தில் முழுக்க வேரூன்றி அவர்களின் ஆளுமைக்குள் வந்த பிறகு, அவர்கள் நிர்ணயிக்கும் அதிக விலைக்கு மக்கள் பணிந்தாக வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். சில நிறுவனங்களோடு ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஃபேக்டரி பர்ச்சேஸ் அல்லது பல்க் பர்ச்சேஸ் என்று மொத்தமாக அவர்கள் கொள்முதல் செய்துவிட, அதிஅத்தியாவசியப் பொருட்கள்கூட நம் அருகில் உள்ள கடைகளில் கிடைக்காத சூழலை ஏற்படுத்துவார்கள். வெளிநாட்டு நிறுவனத்திடம் மட்டும்தான் அதை வாங்கமுடியும் என்ற நிலை வந்த பிறகு, நுகர்வோரின் நிலை ரொம்பவே தடுமாற்றமாகும்'' என்று எச்சரித்து முடித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சுற்றிச் சுழலும் இந்த முக்கியப் பிரச்னை பற்றி, புள்ளிவிவரங்களுடன் பேசினார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.

''முதலில் காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். இன்று விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளுக்கு கொஞ்சம் கமிஷன் வைத்து, அந்தந்த நேரத்துக்குள்ளேயே விற்றுவிடுகிறார்கள். ஆனால், அதையே நான்கு முதல் ஐந்து நாட்கள் குடோ னில் ஸ்டாக் வைத்து, குளிரூட்டப் பட்ட அறை, அதற்குப் பாதுகாப்பு பணியாளர்கள் என்று செலவுகள் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், அந்தச் செலவுகளையும் காய் கறிகளின் விலையில்தானே ஏற்றுவார்கள். இப்போதெல்லாம் காலையில் பறிக்கப்படும் காய்கறிகள், இயற்கையாகவே உலர்வதற்குள் நுகர்வோரின் கைக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்நியர்கள் கடை விரித்தால், இந்தச் சூழலை மக்கள் மறந்துவிட வேண்டியதுதான். காய்கறிகள் பதப்படுத்தப் பட்டு, பாதுகாக்கப்பட்டு அந்நிய முதலீட்டாளர்கள் முடிவு எடுத்த பின்னரே சந்தைக்கு வரும். அதுவும் அதிக விலையில் என்பதை மறந்துவிடக்கூடாது.

சரி... இவர்களின் வியாபார வியூகத்தைப் பார்ப்போம். ஆண்டுக்கு 23 லட்சம் கோடி வரவு செலவு செய்யக்கூடிய நிறுவனம் எல்லாம் இங்கு பிஸினஸ் செய்ய வரவிருக்கிறது. அவர்களின் ஒரு நிமிட இலக்கு வருமானமே ஒரு கோடியை நெருங்கும். அப்படியான சூழலில் எந்தப் பொருளையும் எளிதில் வாங்கக்கூடிய வசதி அவர்களுக்கு இருக்கும். எனவே, மெகா கொள்முதல் செய்து, ஆரம்பத்தில் 20 சதவிகிதம்வரைகூட விலையைக் குறைத்து விற்பார்கள். அதனால் மக்கள் அங்கு விரைவார்கள். ஆனால், இதன் ஆபத்தை போகப் போகவே நுகர்வோர் உணர்வார்கள்.
முன்பு எல்லாம் நம்ம ஊர்களில் தயாரித்த குளிர்பானங்களே விற்பனை ஆகி வந்தன. அந்தக் குளிர்பானம் அப்போது ரூ.3.50 காசுக்குக் கிடைக் கும். திடீரென இங்கு உட்புகுந்த அந்நிய நாட்டு குளிர்பானங்கள் ரூ.2.80 காசுக்கே கிடைத்தன. எல்லோரும் அவர்களை நோக்கி ஓடி னோம். அப்படியே கொஞ்சம் கொஞ்ச மாக அவர்களது ஆதிக்கம் தலை தூக்க ஆரம்பித்து, இன்றைக்கு எந்தளவுக்கு விலை உயர்ந்து இருக்கிறது? அப்போது இருந்த உள்ளூர் குளிர்பான நிறு வனங்கள் எல்லாம் தொலைந்தே போன சோகத்தையும் நாம் அறிவோம்'' என்று புரியவைத்தவர்.

''நேரடி அந்நிய முதலீட்டால் தமிழகத்தில் மட்டுமே 15 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். அது டீக்கடை முதல் உணவுக்கூடங்கள் வரை என்று வைத்துக்கொள்ளலாம். அதில், அவர்களைச் சார்ந்த ஒரு கோடி பேரும் அடங்குவார்கள். நாடு முழு வதும் 7 கோடி பேர் பாதிக்கப்படு வார்கள். அதிலும் அவர்களைச் சார்ந்த 20 கோடி பேர் அடங்குவார்கள். இது.. கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்களின் கணக்கு மட்டுமே. இதனால் பாதிக்கப்படப் போகும்.. நுகர்வோர்... 120 கோடி! ஆம், ஒட்டுமொத்த இந்திய மக்களுமே பாதிக்கப்படுவோம்.

உள்ளூர் வியாபாரிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில், இந்த உலக சர்வாதிகாரிகள் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டத் தொடங்கிவிடுவார்கள். அப்போது, 'நான் வைத்ததுதான் விலை' என்று இவர்கள் விற்பனை செய்யும்போது... நுகர்வோராகிய நாம்தானே பாதிக்கப்படுவோம். பெண்களே... 'யார் விற்றால் நமக்கு என்ன? பொருள் குறைவான விலைக்கு கிடைத்தால் போதும்!’ என்று அலட்சியமாக, அறியாமையுடன் இருந்துவிட வேண்டாம். இன்று நாம் எட்டக்கூடிய விலையில் வாங்கும் பொருட்கள் எல்லாம், ஒவ்வொன்றாக நாம் நெருங்க முடியாத விலைக்குச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது. சகோதரிகளே விழித்துக் கொள்ளுங்கள்!'' என்றார் அக்கறையுடன் விக்கிரமராஜா.

இனி, நுகர்வோராகிய நீங்கள்தான் முடிவுஎடுக்க வேண்டும். யாருக்கு உங்கள் ஆதரவு... உள்ளூர் வியாபாரிக்கா... உலக சர்வாதிகாரிக்கா?

நன்றி: www.vikatan.com (http://www.vikatan.com)

M.Jagadeesan
18-12-2012, 11:51 PM
பயனுள்ள கட்டுரைகளைத் தொடர்ந்து பகிர்ந்துவரும் திரு அமீனுதீன் அவர்களுக்கு நன்றி! மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வருமானால் நாடு முழுவதும் FDI வருவது உறுதி. எனவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கப்படவேண்டும்.

உதயசூரியன்
19-12-2012, 02:02 AM
50:50

FDIயை பிஜெபியும் ஆதரிக்கும்.. இதொ சென்னையில் வால் மார்ட்டுக்கு இடம் கொடுத்து அனுமதிக்கும் அதிமுகவை என்ன சொல்வது..
அதே நேரதில் இடை தரகம் என்ற பெயரில் கொள்ளை தடுக்க படும்.. ஆனால்.. இதில் பிக்பஜார்.. ரிலையன்ஸ் நீல்கிரீஸ்.. இவைகளுக்கு தான் போட்டி வரும்.. போட்டி வந்தால் மக்களுக்கு விலை குறையலாம்.. அது சரி.. ஏற்கனவே பல சூப்பர் மார்கட்டுகள் இருக்கின்றன..

இதில் அன்றாடம் வாங்கும் அண்ணாச்சி கடைகளுக்கு பாதிப்பு வராது என்பது என் கருத்து..

ஆனாலும்.. மானிலம் நலம் கருதி.. அரசு FDIயை தடுத்தால் முடிவெடுத்தால்.. அதை வரவேற்க தயார்...

jayanth
19-12-2012, 02:44 AM
பயனுள்ள சுவையான தகவல். பகிர்விற்கு நன்றி அமீன்...

aren
19-12-2012, 05:30 AM
இப்போது இருக்கும் நிலையில் இந்த மாதிரியான பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வருவதை யாரும் எளிதில் தடுத்துவிடமுடியாது. இந்திய ஸாஃப்ட்வேர் கம்பெனிகள் வெளிநாடுகளில் ஊடுறவவில்லையா, அதே மாதிரிதான். முன்பெல்லாம் என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான் என்று சொல்லிக்கொள்வதில் பலர் பெருமைப்படுவர், ஆனால் இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார் இந்த ஸாஃப்ட்வேர் மூலமாக. அதை அமெரிக்கா அனுமதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்தியா அவர்கள் நம் நாட்டில் வியாபாரம் ஆரம்பிக்க முடியாது என்றால் எப்படி சாத்தியமாகும். அவர்களும் நம் மக்களை உள்ளே வரவிடாமல் தடுத்தால்????

இவர்கள் வருவதால் சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் வரும் என்று சொல்வது தவறு. விலை குறைவால் மக்களுக்கு நன்மையே கிடைக்கும் என்பது என் கருத்து.

இங்கே சிங்கப்பூரில் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் வாங்கினால் அது வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் வாங்குவதைவிட ஒரு 30% விலை அதிகம். விலை அதிகத்திற்கு காரணம் இவை கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ், ஆகையால் உங்களுக்கு வீட்டுக்கு அருகிலேயே கிடைப்பதால் நீங்கள் அதிகவிலை கொடுக்கவேண்டும் என்கிறார்கள்.

இடைத் தரகர்களுக்குத்தான் நஷ்டம் வரும் என்று நான் நினைக்கிறேன்.

தாமரை
19-12-2012, 01:51 PM
புவி வெப்பமயமாதலுக்கு வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் மிகப் பெரிய காரணம்.