PDA

View Full Version : ஓட்டைப் படகு.



M.Jagadeesan
17-12-2012, 04:41 AM
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.

குணமதி
18-12-2012, 02:14 AM
குறளை விளக்க ஒரு புதிய முயற்சி. பாராட்டுகிறேன்.

M.Jagadeesan
18-12-2012, 06:25 AM
குணமதி அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

ஆதி
18-12-2012, 06:53 AM
அறிவின் துணை கொண்டு மரணத்தையும் வெல்ல முடியும் என்பது உண்மைதான், அதே வேளையில் பதட்டமும், பயமும் இல்லாமல் இருக்க வேண்டும், அப்படி இருக்குங்கால் எவ்வளவு பெரிய பிரச்சனையையும் மிக சுலபமாக கையாளலாம், இல்லையே அறிவாய் இருந்தாலும் மூளை வேலை செய்யாமல் போய்விடும்
அறிவு என்பது இங்கு கூரிய புத்தி மட்டுமல்ல தெளிவான மனதையும் சேர்ந்த ஒன்று என்றே கொள்கிறேன்

கதையோடான குறள் விளக்கத்துக்கு நன்றிகள் ஐயா

கும்பகோணத்துப்பிள்ளை
18-12-2012, 07:51 AM
"A little knowledge that acts is worth infinitely more than much knowledge that is idle"
என்ற கலீல் ஜிப்ரான் வரிகள் எனோ என் ஞாபகத்திற்க்கு வருகிறது.
நான்கு தகர பீப்பாய்கள் இருந்தது என்வோ தெய்வச்செயலாக இருந்தாலும்
அதை சமயோஜிதமாக உபயோகித்தது தத்துவஞானியின் அறிவுடைமையையும் ஆக்கமுடைமையையும் காட்டும்
நன்றி ஜயா!

M.Jagadeesan
18-12-2012, 08:08 AM
ஆதி , கும்பகோணத்துப் பிள்ளை ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

இராஜேஸ்வரன்
18-12-2012, 08:34 AM
அவர் பேசுவதைப் பார்த்தால் காரியத்திற்கு உதவாத தத்துவஞானியாக இருப்பாரோ என்று நினைத்தேன். உண்மையில் புத்திக் கூர்மையானவர் என்று நிரூபித்து விட்டார்.

பொருத்தமான குறள்கள். பாராட்டுக்கள்.

M.Jagadeesan
08-01-2013, 02:36 PM
இராஜேஷ்வரனின் பாராட்டுக்கு நன்றி !