PDA

View Full Version : பொய்கள்...



PremM
17-12-2012, 04:18 AM
கண்ணீர் படர்ந்த காகிதக் கவிதைகள்,
விழி துடைக்கும் கைக் குட்டை ஆனதும்..

மிச்சம் இருந்த சோகம் அனைத்தும்,
நீல மையின் நீளம் கூட்டியதும்..

வார்த்தைகளை சிதைக்காத
உன் மெல்லிய குரலில்,
சிதைந்த எண்ணங்களின்
பிற்பாடு நிகழ்வுகள் அவை..

மஞ்சள் நிற விடியலை
முகமெங்கும் பூசிக் கொண்டு,
எனக்காய்க் காத்திருக்கையில்
மறந்துப் போனது சில உண்மைகள்..

மாலை நேரத் தென்றலோடு ஊஞ்சலாடும்,
உன் துப்பட்டா உரசியதில்,
மறந்துப் போனது சில உண்மைகள்..

அரை நொடியில் அவிழ்ந்து விடும் உறவுகள்,
பொய்களென்னும் நூழிலையில் தொடரும் பயணங்கள்..

அவை சுமக்கும் உறவுகளின்
கனம் ஏராளம்.

இரவு ஒரு இடைவெளி,
அது கனவுகளின் சமவெளி,
அதில் கால் பதித்த கணமெல்லாம்,
இதயம் கடக்கும் உன் முகம்..

அழுது முடித்த மேகத்தின்,
கைக்குட்டை நாம் என்றாய்..
மழை நின்றப் பின்பும்
தனியே அழும்
மரமாகிப் போனேன் இன்று..

புழுதிக் காற்றில் புன்னகைத்தால்,
கண்ணீர் தான் தோற்றிடுமா?

ஏனோ இதயம் சுமக்கும் கணத்தினை,
அவைகள் மட்டும் அறிவதெப்படி?

மீண்டும், தீண்டும் உந்தன் புன்னகை,
எனை மீண்டெடுக்கும் நம்பிக்கை..

மஞ்சுபாஷிணி
17-12-2012, 04:45 AM
நேசம் பகிர்வதில் இருக்கும் அக்கறை...

நேசத்தை ஒற்றையாக்கும் பொய்கள்.....

தனிமையின் சோகத்தின் கணங்கள்.....

மீண்டிடும் நம்பிக்கையில் கவிதை வரிகள்....

அழுத்தமான ஆழமான நேசத்தின் கவிதை வரிகள் மிக அருமை... அன்பு வாழ்த்துகள்...

கும்பகோணத்துப்பிள்ளை
17-12-2012, 01:49 PM
புரைதீர்த்த நன்மை பயக்கும் பொய்கள்!
அதுவும் காதலில் பொய்கள்
இருபாலரையும் ரசிக்க வைக்ககூடியது
ஏனெனில் அங்கே
இயம்புதலை நம்புவதைவிட
இதயங்களே அதிகம் நம்பப்படுகிறது!
பொய்ப்பாலமிட்ட உறவுகளின் தொக்கல்கள்
புரிந்தாலும் சரி
பிறிந்தாலும் சரி
ரசிக்கலாம்!
ரசனையுள்ள கவிதை!

HEMA BALAJI
28-12-2012, 05:59 AM
//அழுது முடித்த மேகத்தின்,
கைக்குட்டை நாம் என்றாய்..
மழை நின்றப் பின்பும்
தனியே அழும்
மரமாகிப் போனேன் இன்று..//
ரசித்த வரிகள்." மறந்து போனது" என்றுதான் வரும் என்று நினைக்கிறேன். மறந்துப் போனது.. ப் வராது. திருத்திவிடுங்கள். அழகான கவிதை தந்தமைக்கு பாராட்டுகள்

PremM
14-01-2013, 01:46 AM
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஹேமா..

பென்ஸ்
14-01-2013, 04:45 AM
பிரேம்....
உறவுகளின் பிரிவின் துயரத்தையும், காத்திருப்பையும் உணர்த்தும் கவிதையாய் உணர்கிறேன்....
தலைப்பிற்க்கும், கவிதைக்கும் இடையே உள்ள இணைப்பை விளக்கலாமா..???