PDA

View Full Version : வேளை வரவில்லைகோபாலன்
16-12-2012, 12:59 PM
ஆழ்ந்த தூக்கத்தில் அலையலையாய் நினைவுகள்
எங்கெங்கோ பயணித்து
மரணத்தை தாண்டமுடியாமல்
தடுத்து நிறுத்தப்பட்டன

உடலைவிட்டு உயிர் போனபின்னே
உறங்கா நினைவுகள் உறைந்துவிடுமோ
அல்லது உயிர்போகும் திசையில்
உடன்சேர்ந்து பயணிக்குமோ?

குழந்தையாய் பிறந்து குதூகலித்து
பெற்றோரின் அரவணைப்பில் பெரிதாகி
தம்பி தங்கையின் அன்பினில் திளைத்து
தாத்தா பாட்டியின் கதைகளில் களித்து

ஆசிரியர்களின் அறிவினால் உலகம்தெரிந்து
நண்பர்களின் சேர்க்கையில் உளம்மகிழ்ந்து
உறவுகளின் விசாரிப்புகளில் மனம்நிறைந்து
அரிதாய் கிடைக்கும் பாராட்டுகளில் முகம்மலர்ந்து

சிறிதும்பெரிதுமாய் சில தவறுகள் புரிந்து
சிலநேரங்கள் சிறு உதவிகள் செய்து
உலகமெலாம் தெரியவேண்டி உழைக்கும்
நான் வெறும் நினைவுதனா?

நீங்காத நினைவுகள் நெடுநேரம் பயணித்து
நித்தியமானவனை சரணடையுமோ
எனக்குமுன் பயணித்த நினைவுகள்
இங்கேதான் இறங்கியிருக்குமோ

கடவுள் என்செயல்களை ஆராய்வாராயின்
முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நன்றாயிருக்குமே
எல்லாவற்றையும் நினைவூட்டி அனுப்பியிருந்தால்
எல்லாரும் நல்லவராய் இருந்திருப்பரே

சிந்தித்து சிந்தித்து களைப்படைந்தேன்
சீக்கிரம் எழுந்திருடா வேலை இருக்கிறது
அசரீரியாய் குரல் கேட்க
எழுந்து பார்த்தேன் அம்மா

ஆம் எனக்கு வேலை இருக்கிறது
எனக்கான வேளை வரவில்லை!

கும்பகோணத்துப்பிள்ளை
18-12-2012, 12:50 PM
இது என்ன கோபாலன்?!
இருபத்துமுன்று வயதில்
இப்படியொரு
மரணவிசாரம்?!
மரணத்தில் நினைவுகள் தப்பிபோகும்!
வாய்விட்டு அரற்றிய வார்த்தைகள் மட்டும்
வானமெங்கும் நிறைந்திருக்கும்மென கேள்விப்பட்டிருக்கிறேன்!

ஜானகியம்மாதான் விளக்கவேண்டும்!

ஜான்
18-12-2012, 01:30 PM
மிக ஆழ்ந்த சிந்தனை!!!

வாழ்க்கை என்பது என்ன??என்னதான் இந்த வாழ்க்கை என்று பார்த்தால் கடைசியில் வெறும் நினைவுகள்!!!அத்தனை இன்ப துன்பங்களையும் ,செல்வம் செழிப்பு, அவற்றை துய்த்தல் என்று எல்லாவற்றிலும் மிஞ்சியும் எஞ்சியும் நிற்பது வெறும் நினைவுகளே!
ஆனால் வெறும் நினைவுகள் என்று சொல்ல முடியாது!!
எல்லாவற்றையும் இளமையில் துய்த்துவிட்டு,நன்மையையும் தீமையும் நாடிச் செய்துவிட்டு,மத்திய அல்லது முதிர் வயதில் துரத்துகிறோம்,ஓடுகிறோம் ஒளிகிறோம் ஒளிர்கிறோம் அவற்றின் பலன்களால்

வெகுமதிப்பதும் தண்டிப்பதும் நம் நினைவுகளே!

அதைத்தான் மனசாட்சி என்கிறோம் போல!

ஆன்மா என்பதையும் நினைவுகள் என்பதையும் ஒரு முடிச்சில் ஒரே இழையில் கொண்டுவர முயலும் கோ பாலனுக்கு பாராட்டுகள்

ஜானகி
19-12-2012, 01:18 AM
மரண அநுபவத்தை உணர்ந்தபின்னர் தான் ரமணருக்கு ஞானம் பிறந்தது. அதற்கு வயது ஒரு பொருட்டல்ல.

"நான், நான்" என்று நமக்குள்ளே வியாபித்திருக்கும் உணர்வின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டால், அது தானே அடங்கி, ஒன்றான மூலத்தின் தரிசனம் கிடைக்குமாம்....

மனம் என்பதே நினைவுகளின் மாயத் தோற்றம் தானாம் !

நினைவுகளற்ற, சலனமற்ற மோனத்தில், உண்மை நிதர்சனமாகுமாம் !

அதன் பின்னர், சந்தேகமோ, குழப்பமோ மிஞ்சாது....நிர்மலமான சாந்தியும், அமைதியும், நிறைவும் தானாம் !

அவரவர் அநுபவத்தால் மட்டுமே இதனை உணரமுடியும்...இறையருளும், குருவருளும் இணைந்தால்.....

இதனைக் " கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர் "

கனவுகளற்ற ஆழ்துயிலில், நாம் ஒவ்வொருவரும் தினமும் சச்சிதானந்த நிலையில் தான் இருக்கிறோமாம்...! பெரியோர்கள் சொல்லுகிறார்கள் !

எனக்கும் கேள்வி ஞானம் தான்...அநுபவம் இல்லை !

வேளை வந்தால்....எல்லாம் புரியும் ! காத்திருப்போம் !