PDA

View Full Version : எங்கே நிம்மதி? - முரளி



முரளி
16-12-2012, 03:29 AM
சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் உள்ள கொஞ்சம் கிராமியமான,
கோதண்டராம புரம். ரம்மியமான சுமாரான ஊர்.
அந்த ஊரின் கோடியில் ஒரு ராமர் கோயில்.
அந்த கோவிலை ஒட்டி ஒரு சிறிய குளம்.
அந்த குளத்தை ஒட்டி ஒரு அரச மரம்.
அந்த மரத்தை சுற்றி கல் மேடை.

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcS4OOMv6FlPmwyprYgyQOrR8G5vX5O_GQ0-jwNSQrfWPphfC7BY

*
கொஞ்ச நாளாக அந்த அரச மரத்து நிழலில், கல் மேடையில் ஒரு பெரியவர் வந்து உட்கார ஆரம்பித்தார். வயது சுமார் ஒரு அறுபது அறுபத்தி ஐந்து இருக்கும். அவரது நடை,உடை, பாவனை தோரணை அவர் படித்தவர், பசையுள்ளவர் என்பதை பறை சாற்றிக் கொண்டு இருந்தது. அவரது வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வெள்ளை தாடி, நெற்றியில் திருநீறு , நடுவில் சந்தனக்கீற்று அவர் ஒரு ஆன்மிக வாதி என்பதை கோடு போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

ஆனால், அவரது முகத்தில் எதையோ இழந்தது போல் ஒரு சோகம். அவரது கண்களில் கொஞ்சம் வெறித்த பார்வை. தேவைப் பட்டால் மட்டுமே மற்றவரிடம் பேசினார். கோவிலுக்கு பக்கத்தில் ஒரு ஒட்டு வீடு ஒன்று அவரது பூர்விக சொத்து. அதில் அவர் தங்கியிருந்தார்.

நிறைய நேரம் கோவில் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். பார்ப்பவர்களுக்கு அவர் ஏதோ தியானத்தில், தீவிர சிந்தனையில் இருப்பது போல் தோன்றியது.

மெதுமெது வாக, கோவிலுக்கு வரும் அந்த ஊர் மக்கள் அவரை நெருங்க ஆரம்பித்தனர். அவரை கும்பிட ஆரம்பித்தனர். முதலில் அசட்டையாக இருந்த அவர், கொஞ்ச நாளில் அவர்களுடன் பேச ஆரம்பித்தார். பின்னர் அவர்களது குறைகளை கேட்க ஆரம்பித்தார். குறைகளுக்கு , தர்க்க ரீதியாக , தனக்கு தெரிந்த நிவர்த்திகளையும் சொல்ல ஆரம்பித்தார். அதனால் தானோ என்னவோ, கேட்பவர் குறைகள் நிவர்த்தியாக ஆரமபித்தன. அவர் சொல்வது நடக்கும் என எண்ணினர். அவர் வாக்கு அருள் வாக்கு என மக்கள் நினைத்தனர்.

ஒரு மாதம் கழிந்தது. மக்கள் அவரை தேடி அவரது வீட்டிற்கே வர ஆரம்பித்தனர். நீலகண்டன், அதுதான் அந்த பெரியவரின் பெயர்.

*
ஒரு நாள். மாலை 6 மணி. நீலகண்டன் வீடு. வாசலில் அரவம். நீலகண்டனை பார்க்க ஒரு நான்கு ஐந்து பேர் வாசலில் நின்று கொண்டிருந்தனர். நீலகண்டன் அவர்களை வரவேற்று, வாசலில் , திண்ணையில் அமர்ந்தார்.

முதலில் ஒரு இளைஞன். பதினெட்டு வயது கூட இருக்காது. அவரது காலில் விழுந்தான். வணங்கினான்.

“சாமி!. எனக்கு வாழ்க்கையே பிடிக்கலை. அடிக்கடி தற்கொலை கூட பண்ணிக்கலாம் போல இருக்குது. அதனாலே , உங்களை பாக்க சொல்லி என் அம்மா தான் அனுப்பிச்சாங்க.”

“ஏம்பா! பாக்க நல்லா இருக்கியே! உனக்கு என்ன குறை?”

“எனக்கு படிப்பு வரல்லை சாமி. எவ்வளவு படித்தும் மூளையில் ஏற மாட்டேங்கிறது. பிளஸ் டூ கூட தேற முடியலை.. என் அண்ணன் அக்கா எல்லாரும் பெரிய படிப்பு. குடும்பத்தில் என்னால் ரொம்ப அவமானம்”- கலங்கினான் இளைஞன்.

“நாம இதை பற்றி அப்புறம் பேசுவோம். உனக்கு ஒன்னும் அவசரமில்லையே ! இங்கேயே கொஞ்சம் ஓரமாக உட்கார்ந்து கொள். மத்தவங்க பிரச்னையும் என்னன்னு கேப்போம் !”

அடுத்தவன் வந்தான். அவனுக்கு சற்றேறக்குறைய 25 வயதிருக்கும். கொஞ்சம் பெரியவன். அவனும் அவர் காலில் விழுந்தான்.
“சாமி!. எனக்கும் வாழ்க்கையே பிடிக்கலை. வெறுப்பாயிருக்கு. செத்துபோகலாம்னு தோணுது.”

“அட கடவுளே ! அப்படி உனக்கு என்ன குறை?”

“எனக்கு படிப்பு நல்லா வந்தது. நல்லா மார்க் வாங்கினேன். ஆனால் என்ன பிரயோஜனம்? என்னோட படிப்புக்கேத்த வேலை கிடைக்கலை. என் தம்பி, அண்ணா , நண்பர்கள் எல்லாரும் நல்ல வேலைலே இருக்காங்க. என்னை எல்லாரும் கேலி பண்றாங்க. ரொம்ப அவமானமாக இருக்கு” கலங்கினான்.

“சரி! சரி! விசனப்படாதே! இங்கேயே உட்கார்ந்து கொள்”

மூன்றாமவன் வந்தான். வாராத தலை. கசங்கிய உடை. மண்டிய தாடி. காதல் தோல்வி கண்ட அந்த காலத்து ஜெமினி கணேசன் போல். ஒரு 30-35 வயதிருக்கும்.

நீலகண்டன் கேட்டார்: “உனக்கும் வாழ்க்கையே பிடிக்கலை. வெறுப்பாயிருக்கா? சரி, உன்னோட பிரச்னை என்ன?”

“ஆமா ஐயா!. நான் நல்லா படிச்சேன். நல்ல வேலை கிடைச்சுது. நல்ல சம்பளம். வேலை செய்யற இடத்திலேயே ஒரு அழகான பெண்ணை நேசித்தேன். ஆனால் அவள் என்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு எனது நண்பனை கல்யாணம் பண்ணிகிட்டாள். நண்பர்களிடையே, அலுவலகத்திலே ரொம்ப அவமானம். என் கிட்டே என்ன குறை கண்டாள்? ஒரு மாதமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை. யாரையும் பாக்க விருப்பமில்லை. எங்க வீட்டு மாடியிலிருந்து குதிச்சிடலாமன்னு கூட தோணுது ! ”.

“அடடா ! பாவமே! காதல் தோல்வி ரொம்ப கொடுமை தான் ! நாம இதை பற்றி அப்புறம் பேசுவோம். இங்கேயே உட்கார்”

நான்காவது வந்தவள் ஒரு யுவதி. ஏறத்தாழ 35 வயது. நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, திருமணமும் செய்து கொண்டாளாம். ஆனால், இப்போது கணவனுடன் இல்லை. அவன் வேறு பெண்ணுடன். அவனுக்கு இவளது அழகில் மனம் லயிக்கவில்லையாம் இப்போது. தற்கொலைக்கு முயற்சித்தாள். ஆனால் உயிரை மாய்த்துக்கொள்ள முடியவில்லை. அழுதாள்.

நீலகண்டன் அவளையும் உட்கார சொன்னார்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க இந்த நால்வரும் மற்றும் கூடியிருந்தவரும் ஆவலாக அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள்.

அவர் சொன்னார்: “நீங்கள் எல்லோரும் உங்கள் குறைகளை சொன்னீர்கள். உங்கள் வேதனையை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள். ஆனால், உண்மையை சொல்லப் போனால், உங்கள் நால்வருடைய விரக்தி நிலையில்தான் நானும் இருக்கிறேன். ஆச்சரியப்பட வேண்டாம். எனக்கும் ரொம்ப துக்கம். நான் இந்த ஊருக்கு வந்ததே எனது வேதனையை மறக்கத்தான்”

சுற்றியிருந்தவர்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியம் தான். அட இவருக்குமா? எல்லாம் துறந்தவர், பற்றற்றவர் என நினைத்தோமே! இவருக்குமா கவலை?

நீலகண்டன் தொடர்ந்தார்: “உங்களுக்கு தெரிந்திருக்கும், நான் பல பெரிய பதவிகளில் இருந்தவன். அரசாங்க பணி. நிறைய ஆள் பலம், வாகனம், பெரிய வீடு, வசதி, விருந்து என இருந்தவன். எனது அதிகாரம் எங்கும் பறந்தது.

“எல்லாம் நான் வேலையிலிருக்கும் வரை தான். ஒய்வு பெற்ற பின் எல்லாம் போயிற்று. இப்போ என்னிடம் பதவி இல்லை, அதிகாரம் இல்லை. வேலையிலிருக்கும் வரை, நான் இட்ட வேலையை தலையால் செய்தார்கள். ஒய்வு பெற்றபிறகு சொன்ன பேச்சு கேட்க ஆள் இல்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள், காசு பணம் இருந்தென்ன, இன்று நான் தனி மரம். அன்பு செலுத்த ஆளில்லை.”

"நான் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, என் மகன் இன்று சுத்தமாக என்னை மதிப்பதில்லை. மருமகளும் உதாசீனப் படுத்துகிறாள். இருவரும் என்னை விட நல்ல வேலையிலிருக்கிறார்கள். நான் சொன்ன பேச்சு கேட்பதில்லை. எனது மனைவியும் இப்போது உயிருடன் இல்லை. அந்த ஆறுதலும் இல்லை.மகனுடன் இருக்க பிடிக்காமல் இங்கே வந்து விட்டேன். எனக்கும் வாழ்க்கையே பிடிக்கலை. ரொம்ப வெறுப்பாயிருக்கு.

இப்போ, நீங்களே சொல்லுங்கள் , நானும் தற்கொலை பண்ணிக்கவா?” நிறுத்தினார். “நான் இறந்து போய்விட்டால் , என் பிரச்னை தீர்ந்து விடும். என்னை மாய்த்துக் கொள்ளவா ? என்ன சொல்கிறீர்கள்? ”

தொடரும் ...

முரளி
16-12-2012, 03:32 AM
எங்கே நிம்மதி? - கதையின் தொடர்ச்சி....


கூடி இருந்தவர் ஒன்றும் பேசவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரவர் , தங்கள் தங்கள் மனக் கவலைகளை, மனத்திரையில் ஓட விட்டனர். யாருக்கும் தாங்கள் நிம்மதியாக இருப்பதாக தோன்றவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை, பல கவலைகள், வித விதமாக.

நீலகண்டன் “ இப்போ இங்கே என்னை தேடி வந்திருக்கீங்களே , உங்க பிரச்னை என்ன? ஒருவருக்கு படிப்பு வரல்லே அதனாலே - வெறுப்பு. இன்னொருவருக்கு படிப்பு இருக்கு ஆனால் வேலை கிடைக்கலே – அதனாலே வெறுப்பு. வேறொருவருக்கு படிப்பும் இருக்கு, வேலையும் கிடைச்சது ஆனால் விரும்பிய பெண் கிடைக்க வில்லை. அதனால் கசப்பு. இந்த பெண்ணிற்கு கல்யாணம் ஆகியும், நல்ல வாழ்க்கை அமையலே – அதனாலே வெறுப்பு.தற்கொலை பண்ணிக் கொள்ளும் அளவுக்கு விரக்தி. எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது ஆனால், வயதாயிற்று எல்லாம் போச்சு- அதனாலே எனக்கும் வெறுப்பு.”

நீலகண்டன் ஒரு நிமிட மௌனத்திற்கப்புறம் மீண்டும் தொடர்ந்தார் “மொத்தத்திலே எல்லாருக்கும் வெறுப்பு, வேதனை. வேடிக்கையாயில்லை? இப்போ நம்ப ஐந்து பேர் மட்டும் இல்லே! இங்கே இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது ஒரு வேதனை, கஷ்டம், வருத்தம் இருக்கும். எல்லாவற்றிற்கும் எல்லாரும் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான பாதையா சொல்லுங்கள்? அப்போ யார் தான் இந்த உலகத்தில் வாழறது?”

நான்காவதாக வந்து தனது குறை சொன்ன யுவதி கேட்டாள்: “அப்போ இதுக்கு என்னதான் வழி? ஐயா, நீங்களே சொல்லுங்க”

நீலகண்டன் வெறுமையாக சிரித்தார். “கிட்டத்தட்ட நம்ப எல்லோருடைய பிரச்னையும் ஒன்று தான்”

அந்த நான்கு பேருடன், சுற்றி இருந்த அனைவரும், பாம்பு தலையை தூக்குவது போல் ஒரு சேர தலையை தூக்கி அவரை பார்த்தனர். என்ன சொல்றார் இவர் ? எல்லாருக்கும் கொஞ்சம் குழப்பம்.

“சுருக்கமாக சொல்ல போனால், நாம எல்லாரும் நம்மை சுத்தி இருக்கவங்க நம்மை பற்றி என்ன நினைப்பாங்க என்றே கவலைப் படுகிறோம். சமூகம் நம்மை தாழ்வாக நினைக்க கூடாது என்பதே நம் கவலையாக இருக்கிறது. மற்றவர்கள் நன்றாக இருக்கிறார்களே? நாம இல்லியே? என்று பொறாமை படுகிறோம். சரியா?”

“நம் நிலை தாழ்ந்து விட்டதோ? நம்ம வீட்டிலே , நமது நண்பர்கள், உறவுகள் நம்மை அவமதிப்பார்களோ என்ற எண்ணமே நம்மை கீழே தள்ளுகிறது. வெறுப்பாயிருக்கு. அதனாலே தற்கொலை கூட பண்ணிக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படுது."

நீலகண்டன் தொடர்ந்தார்: “வாழ்க்கையிலே எப்பவுமே வெற்றியே பார்க்க ஆசைப் படுகிறோம். தோல்வி கண்டு பயம். சொல்லபோனால், தோல்வியை விட, தோல்வி அடைந்து விடுவோமோ என்கிற நடுக்கம் தான் அதிகம் நம்மை ஆட்டி படைக்கிறது. நான் சொல்றது சரிதானே? ”

நிறுத்தினார். கூட்டத்தில் ஒரு பெரியவர் கேட்டார். . “நீங்க சொல்றது சரிதான் ஐயா. எங்க குடும்பத்தில் கூட இதை பார்க்கிறோம். எங்கே அவமானம் ஏற்பட்டுடுமோ , தலைக் குனிவு ஏற்பட்டுடுமோன்னு பயப்படறோம் தான். அப்போ, என்ன வழி?”

“நல்ல கேள்வி. ஒரே வழி தான் எனக்கு தெரிந்து. உங்க வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள். சமூகம், சுற்றம் சொல்வதை கேளுங்கள். தப்பில்லை. ஆனால், உறவுக்காக, ஊருக்காக உங்கள் வாழ்வை பாழ் பண்ணிக் கொள்ளாதீர்கள். சுய வெறுப்பினால், உங்களை நீங்களே கருக்கி கொள்ளாதீர்கள். வேதனையில் வெந்து போகாதீர்கள். வெற்றி தோல்வி சகஜம் . உங்களது குறைகளை ஆராய்ந்து, கண்டு பிடித்து நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள்”. நிறுத்தினார் நீலகண்டன்.

உடன் அமர்ந்திருந்த தற்கொலை படையில் இருந்த நால்வரில் ஒருவன் கேட்டான்.”சாமி! அதெல்லாம் சரி.எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்!. நான் என்ன பண்ணனும்?” அவன் வேதனை அவனுக்கு.

அவனை பார்த்து முறுவலித்தார் நீலகண்டன். “நான் யாருக்கும் அட்வைஸ் கொடுக்க விரும்ப வில்லை . நீங்க என்ன பண்ணனும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால், இப்போ நீங்க கேட்பதனால், உங்க பிரச்னை என்னங்கிறதை சொல்றேன். எப்படி தீர்க்கலாம்னு சொல்றேன், முடிவை நீங்களே எடுக்கனும், சரியா?”

"ம்"

நீலகண்டன் தொடந்தார். “ஒவ்வொரு துயரத்திற்கும் ஒரு விடிவு உண்டு. அதை நாமதான் தேடிக்கணும். உனக்கு படிப்பு வரல்லையா? கவலையை விடு. உனக்கு தெரியுமோ, படிப்பு வராதவங்க நிறைய பேர் , பெரிய பணக்காரங்களாகவும், தொழிலதிபர்களாகவும், நடிகர்களாகவும் கோடி கணக்கில் சம்பாதிக்கிறாங்க. சிவாஜி கணேசன் படித்தவரா? இல்லே காமராஜர் படித்தவரா? அவங்க வழியிலே போயேன் ! திருபாய் அம்பானி படிக்காதவங்க தான். பில் கேட்ஸ் கல்லூரி கேட் கூட தாண்டவில்லை. கோடி கோடியா சம்பாதிக்கலை? நீயும் உனக்கு பிடித்த , தெரிந்த தொழிலில் இறங்கு. நன்றாக வருவாய். முடிவு உன் கையில் !”

நீலகண்டன் இரண்டாவதாக வந்தவனை பார்த்தார். “அப்புறம், நீங்க, படிச்சு வேலை கிடைக்கலைன்னு கவலைப் பட வேணாம்., இன்போசிஸ் , விப்ரோ கம்பெனிகளை ஆரம்பித்தவர்கள், அவங்களே வேலைக்கு போகலே. செய்த வேலையை விட்டு விட்டார்கள். என்ன குறைந்துவிட்டார்கள்? தனியாக தொழில் ஆரம்பித்தார்கள். இன்று கோடீஸ்வரர்கள். இவங்க மாதிரி உங்களுக்கு பிடிச்ச விஷயத்தில் இறங்குங்கள். பிரமாதமாக வருவீங்க. ஒரு ஜன்னல் மூடியிருந்தாலும் , தேடுங்கள், இன்னொரு பக்கம் கதவே திறந்திருக்கும்.”

“மூணாவதா வந்த ஐயா, உங்க பிரச்னை, என்ன ? காதலித்த பெண் கிடைக்கலை. அதுதானே ? உங்களுக்கு பழமொழி தெரியாதா “கிட்டாதாயின் வெட்டென மற”. அந்த பெண்ணை மறந்துட்டு, அவள் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, மேலே போய்கிட்டே இருங்க”.

யுவதியை பார்த்து சொன்னார்: “ இங்கே பாருங்க அம்மணி ! ஊர் என்ன சொல்லும் என்று ஏன் கவலைப்படறீங்க? நாலு பேர் நாலு விதமாகத்தான் பேசுவாங்க. அதையெல்லாம் சட்டை பண்ணாதீங்க! நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. நல்ல வேலையிலிருக்கீங்க. வயசும் இருக்கு . நீங்க ஏன்வேறே கல்யாணம் பண்ணிக்க கூடாது? நிச்சயமா நல்லா இருப்பீங்க”

அப்போது, அங்கே இருந்த காதலியை பறி கொடுத்த வாலிபன், நால்வரில் ஒருவன் சொன்னான்.”ஐயா. எனக்கு ஒன்னு தோணுது. அவங்களுக்கு விருப்பமிருந்தா , நானே அவங்களை திருமணம் செய்து கொள்கிறேன்”.

“பாத்திங்களா! பிரச்னை எப்படி தானாகவே தீருகிறது? நீங்க என்னம்மா சொல்றீங்க? விருப்பமா?” நீலகண்டன் யுவதியை வினவினார்.

அந்த பெண்ணும் சரியென வெட்கத்துடன் தலையாட்ட, கூடியிருந்த மக்கள் கை தட்டி கரவொலி எழுப்பினார்கள்.

கூட்டம் சிறிது நேரத்திற்கு பின் கலைந்தது.

கூட்டத்தில் ஒருவன் மற்றவனிடம் சொல்லிக் கொண்டே நகர்ந்தான். “ நான் சொல்லலே! சாமி வாக்கு அருள் வாக்கு. உடனே பலிக்கும். பார். கல்யாணம் கூட கூடி வந்திடிச்சி”. கூட இருந்தவன் சொன்னான்: “ ஆமாமா! நாளைக்கு வெள்ளனே வந்து சாமி கிட்ட வாக்கு கேப்போம்.”


*

அன்று இரவு நீலகண்டனுக்கு உறக்கம் வரவில்லை. எல்லோருக்கும் தீர்வு சொன்னோமே! தனக்கு என்ன வழி? என் பிரச்சனையை நான் ஏன் தீர்த்துக் கொள்ளாமல் ஓடி வந்து விட்டேன்? ஒரே யோசனை. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

*
அடுத்த நாள். நீலகண்டனை தேடி வந்த சிலர், அவரது வீடு பூட்டியிருந்தது பார்த்து ஆச்சரியம். “ சாமி எங்கே போயிட்டார்? ’ என தேடினர். எங்கும் காணவில்லை. சென்னைக்கு போய்விட்டார் என செய்தி பரவியது. தொந்திரவு தாங்காமல், அவர் இமயமலைக்கே போய் விட்டார் எனவும் வதந்தி.

*

நீலகண்டன், இப்போது சென்னையில் தன் மகன் குடும்பத்தோடு வந்து சேர்ந்து விட்டார். அவர் நிறைய மாறிவிட்டார். எல்லோரிடமும் கலகலப்பாக பேசினார். பேரனோடு விளையாடினார். மகன் மருமகளோடு இயல்பாக , சகஜமாக நடந்து கொண்டார். தன் ஸ்டேடஸ் கீழே போய்விட்டதோ என்னும் கவலையை விட்டொழித்து விட்டார். யாரிடமும் குறை காண்பதில்லை. தனக்கு வேலை போச்சு, ஆரோக்கியம் போச்சு, துணை போச்சு எனும் பயம் இப்போது அவருக்கு இல்லை. மற்றவர் தன்னை மதிக்கவில்லை என நினைத்து வருந்த வில்லை.

தனக்கு பிடித்ததை செய்ய கிடைத்த நேரம் இது என புரிந்து கொண்டார். இது வாழ்க்கையின் மற்றொரு கட்டம் என்பதை இப்போது உணர்ந்து விட்டார். இது கோதண்டராம புரம் அவருக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

இப்போதெல்லாம், தினமும் பத்து மணிக்கு அருகிலிருந்த அனாதை ஆஸ்ரமத்துக்கு போய்விடுவார். தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்.

மாலைகளில் முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் கொஞ்ச நேரம் பொழுதை கழித்தார். உபயோகமாக உதவிகள் செய்தார். எப்போதெல்லாம் நேரம் கிடைத்ததோ, அப்போது தனது வயதொத்த நண்பர்களுடன் அருகிலிருந்த ஆஸ்பத்திரியில், நோயாளிகளுக்கு ஆறுதல் சொன்னார். நோயாளிகளுக்கு பிடித்த விஷயங்களை அன்புடன் பேசினார். முடியும் போது பழங்கள், பூங்கொத்து கொடுத்து தேறுதல் கூறினார். அவர் எண்ண அலைகளுக்கேற்ற நண்பர்களுடன் பழகினார்.

இப்போது,நீலகண்டனுக்கு “தன்னோட மதிப்பு இழந்துட்டோமோ”என்னும் பயம் இல்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறார். இப்போது தான் ,வாழ்க்கையில் ஏதோ சாதிப்பது போன்ற சந்தோஷம் அவருக்கு.

****
முற்றும்

aren
17-12-2012, 01:41 AM
அருமையான படிப்பினை சொல்லும் அழகான கதை. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இன்னும் எங்களுக்கு நிறைய கொடுங்கள்.

முரளி
17-12-2012, 03:41 AM
உங்கள் பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி Aren. நம் அனைவரையும் ஆட்டி படைக்கும் ஒரு மன நிலை. "status Anxiety" பற்றி இந்த கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறேன். மன்ற அன்பர்களின் , முக்கியமாக ஒய்வு பெற்றவர்களின் மன கிலேசம் குறைய உதவியாயிருந்தால் மிக்க மகிழ்ச்சி.

மஞ்சுபாஷிணி
17-12-2012, 04:58 AM
நம்மைப்பற்றி, நம் சந்தோஷங்கள் பற்றி, நமக்கு கிடைக்காத விரக்தி பற்றி, எல்லாம் நமக்கு நாம் நமது என்ற நிலையில் மட்டுமே இருப்போருக்கு தான் இப்படிப்பட்ட துன்பங்கள் எல்லாம் வருகிறது வாழ்க்கையில்....

எனக்கு , எனது, என்ற நிலையை விட்டு அடுத்தவர் துன்பத்தை களையவோ அல்லது ஆறுதல் தர முயற்சிக்கும்போது நம் துன்பங்கள் நமக்கு தூசாக தெரியவரும் என்பதே உண்மை...

மிக அருமையான கதை பகிர்வு முரளி... முதலில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சனைகளைப்பற்றி வரிசையாக கூறிக்கொண்டே வருகின்றனர்.... அதற்கும் முன்னாடி யாரிடமும் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கும்போது மக்களே அவரை சாமியாராக்கி அவரிடம் அருள் வாக்கு கேட்கும் அளவுக்கு போவது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக கூட இருந்தது....

மனிதர்களாக பிறந்த எல்லோரின் மனதிலும் இறைவன் இருக்கிறார்.. நம் மனசாட்சி, நாம் செய்யும் நற்செயல்கள் தான் இறைவன்.. அது தான் அன்பு.. அதை அறிந்து தெளிந்தோமென்றால் நாம் இன்னொரு சாமியாரைத்தேடி நம் பிரச்சனைகளை தூக்கிக்கொண்டு ஓடவேண்டிய அவசியமில்லை... நம் பிரச்சனைகளை நாம் அலசுவதை விடவா மற்றவர் தீர்த்துவிடமுடியும்?

ஒருவருக்கோ படிப்பு ஏறவில்லை.. படிப்பே இல்லாத காமராஜர் இப்ப இருக்கும் அரசியலை விட அதி அற்புதமாக நடத்தி மக்களை சுபிட்சமாக வைத்திருந்தார்....

படிப்பு நன்றாக படித்தும் வேலை கிடைக்காத சூழல் இன்னொருவருக்கு... சொந்தத்தொழிலில் முன்னுக்கு வந்த எத்தனையோ பேர் சாதித்து காட்டி இருக்கின்றனர்... இன்னொருவரை நம்பி கைநீட்டி வேலை கேட்பதைவிட நம்மிடம் இருக்கும் அறிவுத்திறனைக்கொண்டு திறமையைக்கொண்டு முன்னுக்கு வரும் யோசனையை கொஞ்சம் யோசித்திருந்தாலோ?

இன்னொருவருக்கு தான் நேசித்த பெண் தன் நண்பரை கல்யாணம் செய்துக்கொண்ட வெறுமை.. தன்னை விட்டு ஒன்று போகிறது என்றால் போகவிட்டது அவர் தவறு.... தன்னிடம் இல்லாத ஏதோ ஒன்று தான் அந்த பெண்ணை இன்னொருவரை நாடி போக செய்தது என்றால் எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய அந்த பெண்ணை மணக்காமல் இருந்ததே நன்று என்று சொல்லலாம்.. கல்யாணம் ஆனப்பின் இவரை பிடிக்கவில்லை என்று இன்னொருவரை தேடி போயிருந்தால் இன்னும் எத்தனை அவமானம்?

இன்னொருவரோ தன் கணவர் தன்னை விட்டு இன்னொருத்தியிடம் சரண் அடைந்துவிட்டார் என்ற வேதனை.. போகிறேன் என்ற பேர்வழியை எத்தனை நாட்களுக்கு தான் கைப்பிடித்து நிறுத்தமுடியும்? விட்டுட்டு ஓடி போனதால் வாழ்க்கையில் ஒன்று மாறுதல் அடையப்போவதில்லை...

தேசிகன் கதையோ இன்னும் சோகம்.....

எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னலமற்ற அன்பை மட்டுமே பொழிவோருக்கு இது போன்ற சங்கடங்கள் வருவதில்லை.. தம் பிள்ளையிடம் ஈகோ பார்க்காமல் நடந்துக்கொண்டால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து சென்றால் வாழ்க்கை இன்னும் சௌக்கியமாகவே இருந்திருக்கும்....

சமூகத்திற்கு பயந்து வாழாமல் தம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அதை மீறின செயல்கள் செய்யாமல் வாழ்ந்தாலே போதுமானது...

சமூகம் நாம் சிரித்தால் உடன் தோள் அணைத்து சிரிக்கும்.. நாம் அழுதாலோ முதுகுக்கு பின் நின்று பரிகசிக்கும் எதிரில் நின்று சோகத்தை கக்கும்....

அருமையான தீர்வை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க முரளி இரண்டாவது பகுதியில்....

கதையின் நேர்த்தி மிக சிறப்பு.. எல்லோருமே படித்து பயன் பெறக்கூடிய கதை பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

முரளி
17-12-2012, 06:14 AM
மஞ்சு பாஷினி அவர்களே : செறிந்த உயிரோட்டத்துடன் கூடிய சிறந்த பின்னூட்டத்திற்கு நன்றி. மிக அழகாக அலசியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது அனைத்துமே சரி. பாராட்டிற்கு மிக்க நன்றி.

தாமரை
17-12-2012, 09:14 AM
எப்பொழுது நாம் நம்மை உலகிற்கு தேவையற்றவராக எண்ணுகிறோமோ அப்போது இறந்து விடுகிறோம்.

சடாரென உடல்நலம் குன்றி இறந்து போன பலரை ஆராய்ந்த பொழுது நான் கண்ட உண்மை இது.

நாம் யாருக்கும் தேவையில்லை என்ற எண்ணம் மனதில் தோன்றும் பொழுது ஏற்படும் கவலைக்கு ஈடு எதுவும் கிடையாது.

ஆனாலும் நாம் அறிவதில்லை. நம் தேவை சிலருக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் நம்மை அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டால் அது சாத்தியம்.

நம்மை பிறர் மதிக்க வேண்டும் என்ற எண்ணமே சாதாரணமாக மனிதன் மனதில் இருக்கிறது..

ஏன் மதிக்க வேண்டும் என்பதற்கு காரணங்களை உண்டாக்கிக் கொண்டே இருந்தால் மதிப்பு இருந்து கொண்டே இருக்கும். காரணங்கள் பழையதாக பழையதாக மதிப்பும் பழசாகிக் கொண்டே இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

நல்ல கருத்துச் செறிவு கொண்ட கதை..

கும்பகோணத்துப்பிள்ளை
17-12-2012, 01:28 PM
சிறுவயது முதற்கொண்டு தண்ணீரில் ஆட்டம் போடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது
பெருங்குளங்களும் ஆறும் உடையது எங்கள் ஊர்.
பலமுறை குளத்தில் தலைகீழாக குதிக்கும் போதும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போதும்
நீரினில் முழ்கிப்போகும் நிலை எற்பட்டது.. இனிமேல் அவ்வளவுதான் போன்ற நிலை!
ஏதோ ஒரு உந்து சக்தி! உயிர் போராட்டம்! என்னிலிருந்து எமுந்து நான் தப்புவதற்க்கு உதவி செய்திருக்கிறது.
இந்த சக்தி அல்லது போராட்ட குணம் ஒவ்ஒரு உயிருக்கும் இயற்க்கையானது.
'ஆகா! இப்படிப்பட்ட நிலை வந்ததே இனி தொலைந்தோம் நாம்' என்ற நிலை வரும்போதெல்லாம் நம்மை மீட்டெடுத்திருக்கிறது.
பிரச்சனைகள் வரும்போதெல்லாம் அதில் முழ்கிப்போகாமல் நம்மை நாமே மீட்டெடுக்கவேண்டும்.
அமிழ்த்தும் உணர்வுகளை உருவி எடுத்துவிடவேண்டும். தள்ளி நினறு பார்க்கும் குணம் வேண்டும்.
இது எளிதில் கைவரப்பெறுவதில்லை! அனுபவங்கள் சொல்லித்தரவேண்டும்!
இல்லையெனில் மனதுக்கு வெளியில் ஒரு ஆதாரப்புள்ளி வேண்டும் அது தெய்வமாகவுமிருக்கலாம் குருவாகவுமிருக்கலாம் (வழிகாட்டி).
இக்கதையில் வரும் நால்வருக்கு தேசிகன் கிடைத்தது போல் அதைக்கொண்டு நம் மனதை முழ்கிப்போகாமல் சட்டென்று திருப்பிபோட்டு பிரச்சனைகளை தீர்கலாம்

மிகவும் எளிதாக என் தாயார் இதை எனக்கு சொல்லித்தந்திருக்கிறார்கள் அவர் சொல்லிய போதெல்லாம் எனக்கு அதன் அர்த்தமும் ஆழமும் புரியாமலே பின்பற்றியிருக்கிறேன். நான் தொய்ந்து போய் அமர்ந்திருக்கும்போதெல்லாம் 'ஏன்டா தம்பி! இதுக்கெல்லாம் மனச தளரவிடபிடாது! அபிராமி! பிரச்சனை உன்னதுன்னுட்டு அவமேல பாரத்தை இறக்கிவச்சிட்டு ஆகிற காரியத்தை பாரு!' என்று உக்கபடுத்துவார்கள். இதில் உள்ளோடிய உளவியல் ரீதியான மனமாற்த்தத்துவத்தையும் ஆன்மீக ரீதியான சரனாகதி தத்துவத்தையும் பின்னாளில் சிந்தித்தறிந்துகொண்டேன்.

சிந்தனையை சீர்த்துக்கி பார்க்கவைத்த கதை
பாராட்டுகள் முரளி!

முரளி
18-12-2012, 04:03 AM
தாமரை அவர்களே: மிக அழகாக சொன்னீர்கள்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்" - என்றார் வள்ளுவ பெருந்தகை. புகழும், மதிப்புமே மற்றவரை நம்மை நோக்கி திருப்புகிறது.

'ஏன் மதிக்க வேண்டும் என்பதற்கு காரணங்களை உண்டாக்கிக் கொண்டே இருந்தால் மதிப்பு இருந்து கொண்டே இருக்கும்' - உங்கள் எண்ணம் மிக சரி.

"தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்" என்று சொல்கிறது பகவத் கீதை. இந்த கருத்தை மனதில் கொண்டாலே
நாம் நம்மை உலகிற்கு தேவையற்றவராக எண்ணுவதை நிறுத்தி விடுகிறோம்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இவ்விதம் மனவியல் எண்ணங்கள் , மன்றத்தில் ஆராயப்படுவது, மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

முரளி
18-12-2012, 04:17 AM
பிரச்சனைகள் வரும்போதெல்லாம் அதில் முழ்கிப்போகாமல் நம்மை நாமே மீட்டெடுக்கவேண்டும்.
அமிழ்த்தும் உணர்வுகளை உருவி எடுத்துவிடவேண்டும். தள்ளி நினறு பார்க்கும் குணம் வேண்டும்.
இது எளிதில் கைவரப்பெறுவதில்லை! அனுபவங்கள் சொல்லித்தரவேண்டும்!
இல்லையெனில் மனதுக்கு வெளியில் ஒரு ஆதாரப்புள்ளி வேண்டும் அது தெய்வமாகவுமிருக்கலாம் குருவாகவுமிருக்கலாம் (வழிகாட்டி).


கும்பகோணத்து பிள்ளை அவர்களே, மிக அழாகாக, எளிமையாக சொன்னிர்கள். செறிவான சிறந்த பின்னூட்டம். சரணாகதி தத்துவத்தை பற்றி நீங்கள் குறிப்பிட்டது மிக்க அழகு.

"வெள்ளத்து அனைய மலர் நீட்டம் : மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு" என தண்ணீரையே உவமை வைத்து வள்ளுவர் சொன்னது உங்கள் பின்னூட்டத்தை கண்டதும் நினைவுக்கு வந்தது.

உங்கள் பாராட்டிற்கு நன்றி.

இராஜேஸ்வரன்
18-12-2012, 05:30 AM
“வாழ்க்கையிலே வெற்றியே பார்க்க ஆசைப் படுகிறோம். தோல்வி கண்டு பயம். சொல்லபோனால், தோல்வியை விட தோல்வி அடைந்து விடுவோமோ என்கிற நடுக்கம் தான் அதிகம் நம்மை ஆட்டி படைக்கிறது”

இதுதான் உண்மை. பயம்தான் பெரும்பாலும் நம்மை ஆட்சி செய்கிறது.

உங்க வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள். சமூகம், சுற்றம் சொல்வதை கேளுங்கள். தப்பில்லை. ஆனால், உறவுக்காக, ஊருக்காக உங்கள் வாழ்வை பாழ் பண்ணிக் கொள்ளாதீர்கள். வெறுப்பினால், வெந்து போகாதீர்கள். உங்களது குறைகளை ஆராய்ந்து, கண்டு பிடித்து நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள்”.

சிறப்பான அறிவுரை.

வேலை போச்சு, ஆரோக்கியம் போச்சு, துணை போச்சு எனும் பயம் இப்போது இல்லை. இது வாழக்கையின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்திருந்தார்.

வாழ்க்கையை அனுபவிக்கும் முறையை கற்றுக்கொண்டார்.

அற்புதமான, இக்கால வாழ்க்கை முறைக்கு வேண்டிய கருத்துக்களை கொண்ட கதை. பாராட்டுக்கள்.

மதி
18-12-2012, 05:34 AM
அற்புதமான கதைக்கு முதற்கண் நன்றி..

மனசு அற்புதமான விஷயம். அது துன்பப்படுவதற்கு துயரப்படுவதேயில்லை. கவலைப்படுவதில் அத்தனை சந்தோஷம் அதற்கு.

நிலைமைக்கு ஏற்றாற்போல் நிலையைமாற்றிக்கொண்டால் மனதில் என்றென்றும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும் என்ற நல்ல கருத்துள்ள கதைக்கு 1000 இபணங்கள்.. :icon_b:

முரளி
18-12-2012, 08:57 AM
மதி. உங்கள் பாராட்டிற்கும் பண முடிப்பிற்கும் மிக நன்றி. நீங்கள் சொல்வது சரியே.

முரளி
18-12-2012, 08:59 AM
இராஜேஸ்வரன் : அழகாக அலசியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

Keelai Naadaan
25-12-2012, 11:49 AM
நிம்மதி வெளியில் இல்லை, அது நமக்குள் தான் இருக்கிறது என பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். அதை நிரூபிக்கும் விதமான கதை. பாராட்டுக்கள்.

முரளி
15-01-2013, 10:00 AM
நிம்மதி வெளியில் இல்லை, அது நமக்குள் தான் இருக்கிறது என பலர் சொல்ல கேட்டிருக்கிறோம்.

மிக அழகாக சொன்னீர்கள் கீழை நாடான்.

கண்ணதாசன் சொன்னது, சுமை தாங்கி படத்தில் (நன்றி கூகிள்).

உங்களது கருத்தை இதை விட எளிமையாக யார் சொல்ல முடியும்?

"மயக்கமா கலக்கமா ? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு


என்ன அர்த்தம் பொதிந்த , தத்துவ வரிகள். எவ்வளவு எளிமை?

கும்பகோணத்துப்பிள்ளை
15-01-2013, 05:33 PM
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

'செத்தநாழி சிவனேன்னு இரப்பா! எல்லாம மேல ஒருத்தன் இருக்கான் அவ எல்லாம் பார்துப்பான்!' என்ற வழக்குமொழிக்கு ஒப்பிடத்தோன்றுகிறது!

ரமணி
22-01-2013, 03:18 AM
பிறரது பிரச்சினகளை அலசித் தீர்வு கூறப்போக அது தன் பிரச்சினைக்கும் தீர்வாக அமைந்தது என்று காட்டியிருப்பது கதைக்கு வலுவூட்டுகிறது.

முரளி
25-03-2013, 12:47 PM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ரமணி.

மும்பை நாதன்
28-08-2013, 06:11 PM
கதையில் மட்டும் இல்லாமல் தொடர்ந்த பின்னூட்டங்களிலும் மிக நல்ல கருத்துகள் பொதிந்து இருக்கின்றன.
பெரும்பான்மையான விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தால் கூட ஒரு பிரச்சனையில், கஷ்டத்தில் இருக்கும் போது நல்ல கருத்துகளை நினைவூட்ட ஒரு கருவி தேவை.
அப்படி ஒரு கருவியாக மற்றவர்களுக்காக இருந்த போது தனாகவே தனது சொந்த பிரச்சனைகளுக்கும் தீர்வை கண்டு கொண்டு விட்டார் பெரியவர்.
கதைக்கும் மற்றும் பின்னூட்டங்கள் பதிவு செய்தவர்களுக்கும் நன்றி.
மும்பை நாதன்

முரளி
08-03-2015, 05:55 AM
நன்றி மும்பை நாதன் ! காலம் தாழ்த்திவிட்டேன் ! :icon_03: உங்கள் பின்னூட்டமே காணவில்லையே ஏன்?