PDA

View Full Version : கொண்டான் மேல் கிடந்தேன்.



M.Jagadeesan
15-12-2012, 12:05 PM
மீனாட்சி : எந்தன் உள்ளம் துள்ளி விளை யாடுவதும் ஏனோ ?
............. கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ!

காமாட்சி : என்னடி மீனாட்சி ! ஏதடி உனக்கு ஆச்சு ?
............. புன்னகை பூக்கின்றாய்; பூ முகம் காட்டுகிறாய்!
............. பொன்எழில் மேனியிலே புத்தொளி வீசுதடி !
............. மன்னவன் வந்துனக்கு மாலை இட்டானோ ?
............ மின்னலிடை மோகினியே! என்தோழி ! எனக்குரைப்பாய்!

மீனாட்சி : மல்லாண்ட திண்தோள் மாவீரன் ஒருவன்
............. வில்லேந்தி தினமும் என்அருகில் வந்திடுவான்
.............சொல்லேதும் பேசாது சொக்கியே நின்றிடுவான்
.............பொல்லாத பார்வைக் கணைகள் வீசிஎன்னைக்
.............கொல்லாமல் கொல்கிறான் என்மீது அவன்கொண்ட
.............காதலைப் பேசாது வறிதே சென்றிடுவான்
.............பேதையேன் நானும் ஏங்கியே அவன்சென்ற
.............பாதையைப் பார்த்தே பன்னாளும் நின்றிடுவேன்
.............போதை காதலினால் போகம் வேண்டுகிறேன்.

காமாட்சி: அவன்மீது நீகொண்ட காதலை உரைப்பதனால்
..............தவறேதும் இல்லையடி ! தக்க தருணத்தில்
............. காளை முகம்பார்த்துக் காதலை உரைத்திடுவாய்!
............. வேளை வரட்டும்என வீணாய்க் கழிக்காதே!

மீனாட்சி: பெண்ணே தன்னாசைப் பேசுதல் உண்டோடி?
............. வண்டைத் தேடியே மலர்கள் சென்றிடுமோ?
............. நாணம் தடுக்குதடி ! நாக்கு எழவில்லை!
............. கோணல் பிறைசூடி சிவனால் எரியுண்ட
............. மன்மதன் தன்னுடைய மலரம்பு வீசியே
............. துன்பம் செய்கின்றான் தூக்கம் போனதடி!
............. அன்றொருநாள் ....

காமாட்சி: அன்றொருநாள் என்ன நடந்தது ?

மீனாட்சி: தீஞ்சுவைப் புனத்தினிலே இருந்த மரக்கிளையில்
............ ஊஞ்சல் கட்டியே ஆடிக் கொண்டிருந்தேன்
............ அந்த வேளையிலே ஆண்மகன் வந்தானே !
............ சொந்தம் கொண்டாட என்மனம் தூண்டியதால்
............ நாணம் விட்டொழித்து நம்பி முகம்நோக்கி
............ ' ஊஞ்சல் ஆட்டிடுவாய்! உல்லாசம் தந்திடுவாய்! '
............ என்றே நான்கூற , " நன்று " எனச்சொல்லி
............ ஆடவனும் ஆட்டிவிட ஆசை எழுந்ததடி
............ மோடி கிறுகிறுத்து மோகம் தலைக்கேற
............ மயங்கி அவனுடைய மார்பில் விழுந்திட்டேன்
............ தயங்கி ஆண்மகனும் வாரித் தழுவிட்டான்
............ பொய்யாய்க் கண்மூடித் தூங்கும் என்னிலையை
............ மெய்யென்று நம்பியே மேனி பதைத்திட்டான்
............ கண்திறந்து விழித்தாலோ காளை எனைவிட்டுப்
............ " பெண்ணே நீ செல்க !" என்றே சொல்கின்ற
............ பண்பாளன் உயர்குலத்துக் கோமான் என்றறிவாய்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




கயமலர் உண்கண்னாய் ! காணாய் ; ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் , தொடைமாண்ட
கண்ணியன், வில்லன் வரும்;என்னை நோக்குபு,
முன்னத்திற் காட்டுதல் அல்லது , தான் உற்ற
நோய் உரைக்கல்லான், பெயரும்மன் பன்னாளும்,
பாயல்பெறேன்,படர்கூர்ந்து,அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண்ணின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்;
பெண்அன்று உரைத்தல் நமக்காயின்; இன்னதூவும்
காணான், கழிதலும் உண்டு என்று, ஒருநாள் என்
தோள் நெகிழ்புற்ற துயரால் துணிதந்து ஓர்
நாண்இன்மை செய்தேன்; நறுனுதால்! ஏனல்
இனக்கினி யாம் கடிந்து ஓம்பும் புனத்துஅயல்
ஊசல் ஊர்ந்துஆட ஒருஞான்று வந்தானை
' ஐய ! சிறிது என்னை ஊக்கி எனக்கூறத்,
" தையால் ! நன்று " என்று அவன்ஊக்க கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில்! வாயச்செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்
மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ; ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவேனாயின், ஒய்யென
" ஒண்குழாய் ! செல்க " எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.


குறிஞ்சிக்கலி- கபிலர்.

கும்பகோணத்துப்பிள்ளை
15-12-2012, 04:47 PM
தோள் நெகிழ்புற்ற துயரால் துணிதந்து ஓர்
நாண்இன்மை செய்தேன்

ஒண்குழாய் ! செல்க " எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.

தமிழர் பண்பாட்டை பதிக்கும் வரிகள்!

எல்லோர் மனத்துள்ளும் நல்லதும் கெட்டதும் ஒன்றை ஒன்று மிகவே எழும்
பண்பின் அங்கண் உடையோர் எஞ்ஞான்றும் நல்லதை மிகவிட்டு அதன்படி நடப்பர்
மனமடக்கி குணம் காப்போரே உயர்குடிபிறந்தோர்!
எக்காலத்தும் பொருந்தும் உண்மையிதுவே!

M.Jagadeesan
15-12-2012, 11:47 PM
கும்பகோணத்துப் பிள்ளை அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

ஜான்
22-12-2012, 02:00 PM
கொண்டான் மேல் கிடந்தேன் என்ற தலைப்பே மிக மிக அருமையாக இருக்கிறது

M.Jagadeesan
27-11-2014, 02:45 PM
ஜான் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.