PDA

View Full Version : சந்தேகம் -- முரளி



முரளி
07-12-2012, 04:15 AM
சைதாபேட்டை அனன்யா மகளிர் கல்லூரி நூலக வளாகத்தை விட்டு நான் வெளியே வரும்போது சரியாக மாலை 6.00 மணி. கடந்த எட்டு வருடங்களாக இங்குதான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன், லைப்ரரியனாக.

வெளியே வரும்போது யாரோ “லஷ்மி” என்று கூப்பிட்டது போல் இருந்தது. திரும்பினேன். என்னை இல்லை. வேறு யாரையோ?

நேரம் பார்த்து, யாழினி, எனது உதவியாளினி, 5.00 மணிக்கு வேலை கொடுத்து விட்டாள். ஏதோ அவசரமாம். முடிக்க இவ்வளவு நேரம். அடிக்க வேண்டும் அவளை. இனிமேல்தான் ஆட்டோ பிடித்து, நகை வாங்கிக் கொண்டு, ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக்கொண்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போய், எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து திருவள்ளூர் செல்ல வேண்டும். வீடு அங்குதான்.

இன்று பார்த்து லேட். அப்பா காத்துக் கொண்டிருப்பார் பணத்திற்காக. ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும். நகை ஆர்டர் கொடுத்திருந்தேன், தங்கையின் வளை காப்புக்காக. அதை வேறு வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். இல்லைன்னா, அம்மாவும் அக்காவும் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். .

என்னோட அக்காவும் இப்போ எங்க கூடத்தான். வாழா வெட்டி. அக்காவை பார்த்தபிறகு திருமண வாழ்க்கையில் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் சுத்தமாக போய்விட்டது. கல்யாணம் செய்து கொள்வதாக எண்ணம் இப்போது கிஞ்சித்தும் இல்லை. இப்படியே இருந்து விடலாம், வயதான பெற்றோருக்கு துணையாக என முடிவு பண்ணி நிம்மதியாக இருக்கிறேன். அப்பாதான் அப்பப்போ "கல்யாணம் பண்ணிக்கோ லஷ்மி! எங்களுக்கு அப்புறம் உனக்கு துணை வேண்டாமா ?" என்று நச்சரிப்பார். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன் . அப்பா பேச்சை கேக்க நான் என்ன கேனையா ?

எனது தங்கையின் கல்யாணம், காதல் கடிமணம். ! ரெண்டு வருஷம் முன்பு , வீட்டை விட்டு போனவள் தான். இதுவரை அப்பா அவளை வீட்டிற்குள் சேர்க்க விடவில்லை. அம்மாவின் நச்சரிப்பால், இப்போது , மெதுவாக குடும்பத்துடன் சேர ஆரம்பித்திருக்கிறாள். இப்பவும் அம்மாவின் அரிப்பு தாங்காமல், அவளுக்கு எங்கள் வீட்டில் வளைகாப்பு . இன்னும் நான்கு நாட்களில்! அதற்கு தான் இத்தனை முஸ்தீபுகள்.

இரவில் நகை, பணத்துடன் திருவள்ளூர் வரை செல்ல கொஞ்சம் பயம்தான். என்ன செய்வது? வேக வேகமாக, தி நகர் போய் நகையை வாங்கிக் கொண்டு, ரயில் நிலையம் அருகே பணம் எடுத்துக் கொண்டு, மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் ஏறினேன். அப்போதுதான் யாரோ என்னை பின் தொடர்வது போன்ற உணர்வு எனக்கு. திரும்பினேன். சுமார் 45 வயது மதிக்கதக்க ஆள், கட்டையான உருவம், பத்து நாள் தாடி, என்னையே குறு குறு வென்று பார்ப்பது போல் இருந்தது. ஒருவேளை ஜெவேல்லேரியிலிருந்து தொடர்கிறானோ? ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது பார்த்திருப்பானோ?

கைப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டே மின்சார வண்டியில் முதல் வகுப்பில் ஏறினேன். அவனும் என்னைத்தொடர்ந்து ஏறினான். கம்பார்ட்மெண்ட்டில் சுமாரான கூட்டம். அப்பாடா ! அவனைப்பார்க்காத மாதிரி ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.

பார்க் ஸ்டேஷன்ல வண்டி நின்றவுடன் இறங்கி சென்ட்ரல் ஸ்டேஷன் நோக்கி விறு விறுவென நடந்தேன். எதேச்சையாய் திரும்பினால், தாடிக்காரன்.. என்னைப் பார்க்காதது போல் பின்னாடியே வந்துகொண்டிருந்தான். என் படபடப்பு அதிகமாயிற்று. மணியோ 7.30. இரவு. கையில் நகை, ரூபாய்40,000 ரொக்கம். திருவள்ளூர் ஒரு கோடி போகவேண்டும். “இந்த அப்பா ஏன் திருவள்ளூரில் வீடு கட்டினாரோ?” திட்டிக்கொண்டே நடந்தேன். திருட்டுத்தனமாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். தாடிக்காரனைக்காணோம். அப்பாடா!. அனாவசியமாக பயந்து விட்டேனோ? வீட்டில் சொன்னால், அப்பா, அம்மா, அக்கா மட்டுமல்ல, அக்கா பையன் நிகிலும் சிரிப்பான். “சரியான சந்தேக பிராணி! ” என்று.

வீடு சேர 10 மணியாகிவிடும். அப்பா டென்ஷன் ஆகி விடுவார். மொபைலில் கூப்பிட்டு “ லேட்டாகும்பா! பயப்பட வேண்டாம்!” என்றேன். அப்பா கொஞ்சம் கவலைப்படற ஜாதி. “பத்திரம்! வேணுமென்றால் நான் ஸ்டேஷன் வரட்டுமா லஷ்மி” என்றார். அப்பாவுக்கு என்னை விட நகை, பணம் பேரில் கவலை. “வேண்டாம் வேண்டாம், ஸ்டேஷன் லேதான் என் ஸ்கூட்டி இருக்கே” நிராகரித்தேன்.

திருவள்ளூர் செல்லும் மின் வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பார்த்துக் கொண்டே நடந்தேன். துணை கிடைத்தால் தேவலை. சிக்னல் விழுந்து விட்டது. லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் கூட்டம் இல்லை. கொஞ்சம் காலி தான். பக்கத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறினேன். சுமாரான கூட்டம். கைப்பையோடு நான் ஏறும் போது, யாரோ என்னை இடித்துக்கொண்டே, முண்டியடித்து ஏறினார்கள்.

“இடியட்”. திட்டிக்கொண்டே திரும்பினேன். திக்கென்றது. அதே தாடிக்காரன். என் சந்தேகம் சரிதான். மாம்பலத்திலிருந்து என்னைத் தொடர்ந்து வந்து, இங்கும் ஏறி விட்டான். உடனே என் கைப்பையை தூக்கி பார்த்தேன். பத்திரமாக இருந்தது. போன உயிர் வந்தது. உஸ்! அப்பா ! நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்துக்கொண்டு, நெஞ்சு படபடக்க உள்ளே காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தேன். எதிர் இருக்கையில் இருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி மெலிதாக முறுவலித்தாள். சக பிரயாணி. நானும் பதில் புன்னகை பூத்தேன்.

தாடிக்காரன் இரு வரிசை தள்ளி என்னைப் பார்த்தபடி உட்கார்ந்தான். கொஞ்சம் உதறல்தான் நகையையும், பணத்தையும் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டுமே!. கடவுளே! என்னைக் காப்பாற்று.- வேண்டிக்கொண்டேன். எங்கே பார்த்தாலும் கொள்ளை, நகை பறிப்பு பற்றி தினசரியில் படிப்பதால், எனக்கு பயத்தில் கொஞ்சம் ஜுரமே வந்தது போலிருந்தது.

வண்டி திருவள்ளுரை நெருங்க நெருங்க முதல் வகுப்பு காலியாகிவிட்டது. நானும் தாடிக்காரனும் மட்டும்தான். கத்தி, கித்தி எடுத்து மிரட்டுவானோ? குத்தி விடுவானோ? ஏன்தான் முதல் வகுப்பில் ஏறினேனோ? அவன் மெதுவாக எழுந்து என்னை நோக்கி நடப்பது போலிருந்தது.

பயத்தில் என்ன செய்கிறேனேன்றே தெரியவில்லை. அவசர அவசரமாக, கைப்பையை எடுத்துகொண்டு திருவள்ளூரில் வண்டி நிற்கும்முன் பிளாட்பாரத்தில் குதித்தேன். வலது கால் கொஞ்சம் மடங்கியது. நல்ல வேளை. சமாளித்துக் கொண்டேன். “ பார்த்து, பார்த்து” சத்தம் கேட்டது லேடீஸ் கம்பார்ட்மெண்ட் அருகில்..

திரும்பினேன். முதல் வகுப்பில் தாடிக்காரன் நான் உட்கார்ந்திருந்த இருக்கை பக்கத்திலிருந்து கூவி அழைத்துக் கொண்டிருந்தான்..என்னைத்தான்! ஐயையோ!

”ஏங்க ! கொஞ்சம் நில்லுங்க! அவசரத்தில் உங்க பர்ஸ் கீழே விழுந்ததை பாக்காம போறீங்களே?”

அப்போது தான் உறைத்தது எனக்கு. அவசரத்தில் , பயத்தில் எனது பர்ஸ், பாண்ட்பாக்கேட்டிலிருந்து விழுந்ததைக்கூட கவனிக்கவில்லை.வெட்கமாக இருந்தது எனக்கு. நின்று பர்சை வாங்கிக் கொண்டேன்.

“ரொம்ப தேங்க்ஸ்” – நான்

“பரவாயில்லை. ! தவற விடறது எல்லாருக்கும் சகஜம் தானே !ம்ம்.. சார் !உங்களை எனது கசின் யாழினியுடன் பார்த்திருக்கிறேன். அனன்யா மகளிர் கல்லூரிலே தானே வேலை பார்க்கிறீர்கள்? நானும் திருவள்ளுர்தான். கொஞ்ச நாளாச்சு இங்கே வந்து”- தாடிக்காரன்.

“அடக் கடவுளே! என்ன ஒரு சந்தேகம் எனக்கு” – எனக்குள் திட்டிக்கொண்டே, தாடிக்காரருக்கு மறுபடி ஒரு தேங்க்ஸ் போட்டுவிட்டு, டூ வீலர் ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன், லஷ்மி நரசிம்மன் ஆகிய நான்.


முற்றும்....


எனது முதல் கதை. நன்றி பல மன்றத்திற்கு. ( தமிழ் மன்றம் 2012 நடத்திய சிறுகதை போட்டியில், மூன்றாம் பரிசு பெற்றது !)

M.Jagadeesan
07-12-2012, 04:45 AM
கடைசி வரையில் ஆணைப் பெண்ணாகக் கொண்டுசென்ற சஸ்பென்சுக்குப் பாராட்டுக்கள்.

jayanth
07-12-2012, 06:19 AM
சூப்பர்...!!!

rishvan
07-12-2012, 10:41 AM
நன்றாக இருந்தது.. http://www.rishvan.com

கும்பகோணத்துப்பிள்ளை
07-12-2012, 03:59 PM
மடியில் கனம்!
வழியில் பயம்!
மிக நல்ல சித்தரிப்பு!
யுக்தியும் பிரமாதம்!
பாராட்டுகள்!

கலைவேந்தன்
08-12-2012, 01:49 AM
கதை சொல்லும் திறமை உங்களிடம் மிக அருமையாக வந்துள்ளது. லட்சுமி என்னும் பெயரைவைத்து எங்களை கண்ணாமூச்சு விளையாடி கடைசியில் அது லக்*ஷ்மி நரசிம்மன் என்று சொல்லி குமுதம் வார இதழின் ஒருபக்கக்கதைகளுக்குத் தகுதிபெற்றதுபோல் எழுதியமைக்குப் பாராட்டுகள்.

கலையரசி
09-12-2012, 04:01 AM
முதல் கதை என்பதை நம்பமுடியாமல் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆணைப் பெண்ணாக்கும் யுக்தியை வைத்து மன்றத்தில் ஏற்கெனவே சில கதைகள் வெளியாகியுள்ளன. யுக்தி மிகவும் பழசு தான் என்றாலும் எழுதியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
உங்களின் எழுத்துத் திறமை இன்னும் பளிச்சிடத் தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள் முரளி!

கீதம்
09-12-2012, 07:12 AM
நான் மிகவும் ரசித்த கதை இது. ஒரு பின்மாலை நேரத்தில் கையில் பணத்துடனும் நகையுடனும் தனியே ரயிலேறிப் பயணிக்கும் ஒரு பெண்ணின் திக் திக் உணர்வை எழுத்துக்களில் கொண்டுவந்து வாசிப்பவரையும் அதே உணர்வை அனுபவிக்கச் செய்தது உங்கள் எழுத்தின் வலிமை. முதல் சிறுகதை என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்குத் தேர்ந்த எழுத்துநடை. கலையரசி அக்கா குறிப்பிட்டதுபோல் மன்றத்தில் முன்பே இதுபோல் பால்மாற்றக் கதைகள் நிறையப் படித்திருந்தாலும் இந்தக் கதையில் துளியும் சந்தேகம் எழாதபடி இறுதிவரை சஸ்பென்ஸ் உடையாமல் கொண்டுசென்றது சிறப்பு. பாராட்டுகள். தொடர்ந்து பல கதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

Keelai Naadaan
09-12-2012, 08:44 AM
கதையை படிக்கும் வாசகருக்கும் ஒருவித கலவர உணர்வை ஏற்படுத்தும் வரிகள்.

தாடிக்காரன் நல்லவனாக இருப்பதும் ஒரு எதிர்பாராத திருப்பம். மேலும் லஷ்மி-நரசிம்மனாக சொல்லப்படுவது நல்ல திருப்பம். இரண்டுமே ரசிக்க கூடியதாய் இருந்தது.

முதல் கதை என்றாலும் வரிகள் அதிகமாய் நீளாமல் கனகச்சிதமாய் முடித்திருப்பது சிறப்பு. பாராட்டுக்கள்.

மேலும் பல வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இராஜேஸ்வரன்
18-12-2012, 07:50 AM
நல்ல கதை. கதையை விட அதை சொன்ன விதம் பிரமாதம். பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
19-12-2012, 01:16 AM
இறுதிவரை இரசிப்புத்தன்மையை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்.

பொதுவாக சொல்வார்கள். களவு எடுப்பவனுக்கு ஒருபாவம். கொடுத்தவனுக்கு பல பாவம் என்று. (எல்லோரையும் சந்தேகப்படுவது) :D

வாழ்த்துக்கள்.

முதல் கதைபோல தெரியல...

முரளி
21-12-2012, 03:38 AM
அன்பு ரசிகன் அவர்களே, சந்தேகமே பட வேண்டா. கதையெழுத நினைத்து நான் எழுதிய முதல் கதை சந்தேகம். எனக்கெல்லாம் கதை எழுத வருமா என்ற சந்தேகத்தோடு. அப்போது கதையில் எந்த செய்தியும் சொல்லத்தெரியாத புதியவன் (இப்போது மட்டும் என்ன வாழ்ந்தது? நீங்க சந்தேகபடறது சரியே!). கதை போட்டி மூலம் என்னை மன்றத்தில் இணைத்தது சந்தேகமே இல்லாமல் 'சந்தேகமே'.

இந்த மன்றத்தில் புதிய கருத்துக்கள் மிக இயல்பாக எடுத்துக் கொள்ளபடுகிறது. நன்றாக அலச படுகிறது. அதுவே மன நிறைவை கொடுக்கிறது.

பாராட்டிய ஜெகதீசன் ஐயா, ஜெயந்த், ரிஸ்வான், கும்பகோணத்து பிள்ளை (கொஞ்ச நாள், புலி என படித்து கொண்டிருந்தேன்.:lachen001:), கலைவேந்தன், கீதம், கீழை நாடான், ராஜேஸ்வரன், கலைஅரசி , நீங்கள், அனைவருக்கும் என் நன்றி.

கும்பகோணத்துப்பிள்ளை
25-12-2012, 12:23 AM
கும்பகோணத்து பிள்ளை (கொஞ்ச நாள், புலி என படித்து கொண்டிருந்தேன்.:lachen001:)

ஆகா!... கும்பகோணத்துக்கேவா!
குசும்பு!.. ம்!..ம்!.. இருக்கட்டும்!.. இருக்கட்டும்!...:p

முரளி
24-12-2015, 07:22 AM
கும்பகோணத்துப்பிள்ளை !எப்படி இருக்கிறீர்கள் ? மன்றம் பக்கம் வருவதுண்டா ?