PDA

View Full Version : கதறுதடா எம் மனசு!lenram80
05-12-2012, 02:06 PM
மருதமும் நெய்தலும் கலந்து இருக்கின்ற டெல்டா பகுதியைச் சார்ந்த தஞ்சை மாவட்ட படிக்காத பெண்ணொருத்தி...

ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன பாக்குறா. பாத்ததுலேருந்து அவ அவளா இல்லை. அவங்கிட்டே போயி எதுவும் சொல்ல முடியல. அவள் படும் பாட்டை ஒரு பாட்டாக எழுதினால்....


தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உன் வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

சந்தக் கடை கூட்டத்துல தொலஞ்சுருக்கேன்!
ஓங் ஒருத்தங்கிட்ட நானா வந்து தொலச்சுருக்கேன்!

புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!

சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)

விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!

அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கருவா பய உன்ன கண்டு குறஞ்சுருச்சே!

உச்சி வெயிலு நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!

நந்த வன தேகத்துல
பூபூக்குற எதயத்துல
ரம்பம் வச்சு அறுக்குறியே!
நம்ப வச்சு உருக்குறியே!

சூறாவளி சுத்துகிற
சுறா விழி ரெண்டு வச்சு
சத்தமில்லா யுத்தத்தை
நெஞ்சுகுள்ள நடத்துறியே!

அண போட்டு அடைச்சாலும்
கடல் நோக்கி ஓடிவரும்
காட்டாத்து நதி போல
கதறுதடா எங் மனசு!

காதால நீ கேக்க
இதய சத்தம் ஏத்தி வச்சேன்!
கண்ணால நீ பாக்க
கவிதையா என்ன மாத்தி வச்சேன்!

lenram80
05-12-2012, 02:09 PM
ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு நேற்றிரவு இரண்டு மணி நேரத்தில் நான் எழுதிய கவிதை இது. 'கடல்' படத்தில் வரும் "நெஞ்சுகுள்ள" படத்தின் மெட்டோடு இதைப் பாடலாம்.

கீதம்
05-12-2012, 09:29 PM
பாடல் மிகவும் அழகாக உள்ளது. ஒரு கிராமியப்பெண்ணின் மனக்காதலை வெளிப்படுத்தும் அழகிய வரிகள்.

உச்சி வெயிலு நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ந.க
05-12-2012, 09:52 PM
இதைப் பாட்டு என பாராட்டலாம்,
வெறுமே வார்த்தையாலமில்லாமல்
ஒரு கிராமிய யதார்த்தத்தின்
உயிர் மூச்சை
கொண்டு வந்து கொண்டாடி இருக்கிறீர்கள்,

தமிழ் மன்னினை நேசித்து வாசித்த பாவலனே,
மண்ணை பெண்ணைப் போற்றிய
உன் காதல் நெஞ்சம் சுமக்கும் பாவினால்,
புலவனுக்குரிய இலக்கணம் கண்ட நீர் பாராட்டுக்குரியவர்.


யதார்த்தத்தைப் பின்னி ....காதலின் மெல்லிய உணர்வை விரசமின்றி......
வயல் வெளிகளைக் கொண்டு வந்து பல்வரிசையில் சிரிக்கப்பண்ணிய கவிஞனே வாழ்க!

உன் பேனா உயரட்டும்!
வயல் வெளிக்காற்றை
அதன் வசந்தத்தை தொட்டுச் செல்லும்
உன் வரிகள் தழைக்கட்டும்.

தமிழ் வயலில் வெறும் நச்சுப் பூண்டுகளை
கலைத்து செயயட்டும் அரிய கலை,

கனல் தரட்டும் உன் கவிப் பிறப்பால்.
தொற்றிவிட்ட களைகள் அகலட்டும்.

பாரதி பாவின் எழுத்தும்
அவன் ஆவியும்
உன்னில் உயிர்க்கட்டும்.

வாழ்க உன்தமிழ்.
வளர்க கிராமியமும்..
எழிலான எழுச்சிமிக்க தமிழும். :icon_b::icon_b::icon_b:

lenram80
06-12-2012, 12:57 PM
'அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சுருக்கு' சொன்ன ஜானகி, கீழை நாடான் , கௌதம் மற்றும் வாழ்த்து சொன்ன கீதம் அவர்களுக்கும் நன்றி.

வாழ்த்து சொல்லச் சொன்னால் வாழ்த்து மடலே எழுதிய கண்ணப்பு க்கு ஸ்பெசல் நன்றிகள்.


பாரதி பாவின் எழுத்தும்
அவன் ஆவியும்
உன்னில் உயிர்க்கட்டும்!

என்னில் மட்டும் இல்லை. இங்கே எழுதும் எல்லா கவிஞர்களிடமும் அது உயிர்க்கட்டும்.!