PDA

View Full Version : மூவர் யார்?



M.Jagadeesan
03-12-2012, 01:50 PM
வள்ளுவர் எண்களைப் பயன்படுத்தி பல குறட்பாக்களை எழுதியுள்ளார். அவ்வாறு எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில், அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல் , நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். உதாரணமாக,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல்-35 )

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.( வான்சிறப்பு-19 )

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.( நீத்தர்பெருமை-27 )

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.( மெய்யுணர்தல் -360 )

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( இறைமாட்சி- 381 )

மேலே காட்டிய குறட்பாக்களில் இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, ஆறு ஆகிய எண்களைப் பயன்படுத்திய வள்ளுவர் , அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆனால் சில குறட்பாக்களில் எண்களை மட்டும் கூறிவிட்டு, அந்த எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைக் கூறாது விட்டுவிடுவார். நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார்.

உதாரணமாக,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (கடவுள் வாழ்த்து-9 )

இக்குறளில் , " எண்குணத்தான் " என்று கூறிய வள்ளுவர் இறைவனின் எட்டு குணங்களைக் கூறாது விடுத்தார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.( மருந்து- 942 )

இக்குறளில் நோய்செய்யும் மூன்று எது என்பதைக் கூறாது விடுத்தார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )

இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார். " எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.

குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.

வானப்பிரத்தன்- மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் இருப்பவன்.

கீதம்
04-12-2012, 08:50 PM
குறள் ஆய்வுகள் மூலம் குறள்கள் பற்றிய, பலப்பல புதிய தகவல்களையும் குறள்களையும் அறிமுகப்படுத்தும் தங்களுக்கு நன்றியும் பாராட்டும் ஐயா.

கலையரசி
09-12-2012, 04:10 AM
" எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.”

திருக்குறள் பற்றிய பல செய்திகளை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி. ’எண்குணத்தான்’, நோய்செய்யும் மூன்று’ எவை எவை என்பதையும் விளக்கினால் என் போன்றோர்க்கு நல்லது.

M.Jagadeesan
10-12-2012, 03:52 PM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!