PDA

View Full Version : எந்தப் படத்தை மாட்டக்கூடாது?M.Jagadeesan
30-11-2012, 04:06 PM
எடுத்த காரியம் யாவினும் தோல்வி. தொட்டது எதுவும் துலங்கவில்லை. அடிக்குமேல் அடி; துன்பத்துக்கு மேல் துன்பம். சோதனைக்கு மேல் சோதனை. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாளவில்லை. வரவுக்கு மீறிய செலவு; வீட்டில் காசு பணம் தங்குவதில்லை. செய்வினையோ அன்றித் தெய்வக் குற்றமோ தெரியவில்லை. அலுவலக நண்பன் சோமுவிடம் யோசனைக் கேட்டேன். அவன் ஒரு வாஸ்து நிபுணன்.

" வாசு ! உன்னுடைய வீட்டைப் பார்த்த பிறகுதான் எதுவும் சொல்லமுடியும்! வாஸ்துவின் வக்கிரமமாக இருந்தால் அதற்குப் பரிகாரம் செய்துவிட்டால், உன்னுடைய வறுமை நீங்கி வளமை வந்துவிடும்." என்றான் சோமு.

" சரி! சோமு! நாளை என் வீட்டிற்கு வா! "

" கண்டிப்பாக வருகிறேன் வாசு ! "

சொன்னபடி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சோமு என் வீட்டிற்கு வந்தான். சோமுவை வரவேற்று ஹாலில் அமர வைத்தேன். காபி டிபன் கொடுத்து உபசரித்தேன். அப்போது ஹாலில், சுவரில் மாட்டியிருந்த குழலூதும் கண்ணனின் படத்தை சோமு பார்த்தான். அது மிகவும் அழகான படம். பசு மாடு ஒன்று புல்வெளியில் மேய்ந்துகொண்டு இருந்தது. அந்த மாட்டின்மீது சாய்ந்தவாறு கண்ணன் குழலூதிக் கொண்டிருந்தான். அந்தப் படத்தைப் பார்த்த சோமு,

" குழலூதும் கண்ணனின் படத்தை வீட்டில் மாட்டக் கூடாது; அது வீட்டிற்கு ஆகாது. புல்லாங்குழலில் ஒரு துளையில் ஊதுகின்ற காற்று,பல துளைகளின் வழியாக வெளியேறுவதைப் போல , வீட்டிற்கு ஒரு வழியில் வருகின்ற செல்வம், பல வழிகளில் வெளியே போய்விடும். வீட்டில் தங்காது. உன்னுடைய வறுமைக்கும், எல்லாத் துன்பங்களுக்கும் இந்தப் படம்தான் காரணம். இதைக் கழட்டிவிட்டு, வேறு ஒரு அழகான கண்ணனின் படத்தை மாட்டு." என்று சொன்னான்.

" சரி சோமு! அவ்வாறே செய்கிறேன்; அடுத்த அறைக்குப் போகலாம் வா! "

அடுத்த அறையில் முருகன் ஆண்டிக் கோலத்தில் , மலை மீது நிற்கின்ற ஒரு படத்தை சுவரில் மாட்டியிருந்தேன்.பழநிக்குச் சென்றபோது வாங்கியது. அதைப் பார்த்த சோமு அதிர்ச்சி அடைந்தான்.

' வாசு ! உனக்கு அறிவிருக்கா? கோவிலில் இருக்கவேண்டிய படத்தை யாராவது வீட்டில் மாட்டி வைப்பார்களா? நீ போண்டி ஆனதற்கு இந்த ஆண்டியின் படம்தான் காரணம்.முதலில் இதைக் கழட்டிவிட்டு , வேறு ஒரு அழகான முருகன் படத்தை மாட்டு." என்று சொன்னான்.

" சரி சோமு ! அவ்வாறே செய்கிறேன்; அடுத்த அறைக்குப் போகலாம் வா ! "

அடுத்த அறையில் , சுவரில் ஒரு காளி தேவியின் படத்தை மாட்டியிருந்தேன். உருட்டும் விழிகளுடன், தொங்கும் நாக்குடன், பதினாறு கைகளுடன் காளி பயங்கரமாகக் காட்சி அளித்தாள். அந்தப் படத்தைப் பார்த்த சோமு பதட்டமடைந்தான்.

" அய்யய்யோ! இது உக்கிர காளியின் படமல்லவா! மந்திரவாதிகளின் வீட்டில் இருக்கவேண்டிய படத்தை யாராவது வீட்டில் மாட்டி வைப்பார்களா?
இந்தக் காளியின் படம் வீட்டில் இருப்பது ஆபத்து; உயிர்ப்பலி கேட்கும். ஆகவே இதை கழட்டிவிட்டு வேறு ஒரு காளியின் படத்தை மாட்டு."

இதைக் கேட்டவுடன் எனக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. வேகமாக அடுத்த அறைக்குச் சென்று அங்கிருந்த ஒரு படத்தைத் துணியால் மறைத்து வைத்தேன். எனக்குப் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்த சோமு , அதைப் பார்த்துவிட்டான்.

" என்ன வாசு ! அது யாருடைய படம்? அதை ஏன் எனக்குக் காட்டாமல் மறைக்கிறாய்? என்னிடம் ஒளிவு மறைவு கூடாது. என்னிடம் எதையாவது மறைத்தால் சரியான பரிகாரம் என்னால் சொல்ல முடியாது !"

" ஒன்றுமில்லை சோமு! இது என்னுடைய மனைவியின் படம். இதை நீ பார்த்துவிட்டு , என்னுடைய எல்லாத் துன்பங்களுக்கும் இந்தப் படம்தான் காரணம்; இதைக் கழட்டிவிட்டு வேறு ஒரு நல்ல அழகான பெண்ணின் படத்தை மாட்டு என்று நீ சொல்லப் போக, அதை என் மனைவி கேட்கப் போக , வீடு இரணகளமாகிவிடும். அப்புறம் நான் புவ்வாவுக்கு என்ன செய்வது? என்று நான் பயந்த காரணத்தால்தான் இந்தப் படத்தை உன் கண்ணில் படாதவாறு மறைத்தேன்.'

இதைக்கேட்ட சோமு விழுந்து விழுந்து சிரித்தான்.


நன்றி: சன் தொலைக் காட்சியில் கேட்ட ஒரு seythiyai அடிப்படையாகக் கொண்டு நான் புனைந்த கதை.

தாமரை
30-11-2012, 04:14 PM
கடவுளின் வீட்டை விட்டு கடவுளையே துரத்தி அடிச்சிட்டாங்களே... நம்மை நம் வீட்டை விட்டு துரத்தி அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்

கீதம்
01-12-2012, 04:18 AM
அவரவர்க்கு என்ன நம்பிக்கை உள்ளதோ அதன் அடிப்படையில் தங்கள் வீட்டை அலங்கரிப்பதே நல்லது. கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுளின் எந்தப் படம் இருந்தால்தான் என்ன? நம்முடைய தவறுகளுக்கு வீட்டையும், பொருட்களையும் குற்றம் சொல்வதை விடுத்து நம்மை நாமே சுய அலசல் செய்து தவற்றின் மூலத்தைக் கண்டறிந்து அதை சரிசெய்யவேண்டும். நல்ல சிந்தனையோடு முடிவில் நகைச்சுவையையும் கலந்து படைத்த கதை அருமை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
01-12-2012, 04:35 AM
கடவுளின் வீட்டை விட்டு கடவுளையே துரத்தி அடிச்சிட்டாங்களே... நம்மை நம் வீட்டை விட்டு துரத்தி அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்

இன்று வாஸ்து சாஸ்திரத்தால், கட்டிடக் கலைஞர்களும், பொறியியல் வல்லுனர்களும் தங்கள் விருப்பப்படி வீடு கட்டமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

M.Jagadeesan
01-12-2012, 04:38 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

தாமரை
01-12-2012, 11:26 AM
இன்று வாஸ்து சாஸ்திரத்தால், கட்டிடக் கலைஞர்களும், பொறியியல் வல்லுனர்களும் தங்கள் விருப்பப்படி வீடு கட்டமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

எந்த சாத்திரம் குற்றம் குறை சொல்லச் சொல்லிக் கொடுக்கிறதோ அந்த சாத்திரத்திற்குத் தான் இன்று மதிப்பு போல...

முரளி
01-12-2012, 12:21 PM
சும்மா சொல்லக் கூடாது ஐயா!
சூப்பரா கதை சொன்னீங்க மெய்யா!

நன்றி.

த.ஜார்ஜ்
01-12-2012, 02:14 PM
நல்ல வேளை மனைவியை மாற்றி விடு என்று சொல்லாமல் விட்டாரே...

Keelai Naadaan
01-12-2012, 02:38 PM
நல்ல கதை. மிகவும் ரசித்தேன்.

ஒரு ஆன்மீக கேள்வி பதிலில், குழலூதும் கண்ணண் படத்தை வைத்து வணங்கலாம் என்று பதில் அளித்திருந்தார்கள்.

சில வீடுகளில் "என்னை பார் யோகம் வரும்" ஒரு கழுதை படத்தை மாட்டியிருக்கிறார்கள்.
கடவுளுக்கு பதிலாக அதை மாட்டினால் பரவாயில்லையா?

இதையெல்லம் சொன்னவர்கள் என்ன நினைத்து சொன்னார்களோ...
நாம் எப்படி புரிந்து கொண்டிருகிறோமோ.. யார் கண்டது.

கும்பகோணத்துப்பிள்ளை
02-12-2012, 12:50 AM
அய்யா! தயவுசெய்து
அவரை எங்கவீட்டுக்கு வரச்சொல்லுங்கையா!
அவர் வருவதற்குமுன் என் மனைவி படத்தை மாட்டி வைக்கிறேங்கையா!

jayanth
02-12-2012, 03:28 AM
வாஸ்த்து சிலருக்கு நம்பிக்கை பலருக்கு மூட நம்பிக்கை...

aren
06-12-2012, 05:12 AM
கதையில் முதல் பாராவில் வரும் அனைத்து எனக்கும் மிகவும் பொருந்தும். ஆனால் என்னால் இந்த வாஸ்துவை நம்ப முடியவில்லை ஆகையால் எனக்கு காரணம் அதுவல்ல வேறு ஏதோ ஒன்றுதான் என்று அதைக் கண்டுபிடிப்பதில் இப்போது முனைந்திருக்கிறேன்.

நல்ல கதை, நல்ல படிப்பினை. இன்னும் எழுதுங்கள்.

M.Jagadeesan
07-12-2012, 01:41 AM
தாமரை ,ஆரென், ஜெயந்த்,கும்பகோணத்துப் பிள்ளை,கீழை நாடான்,ஜார்ஜ், முரளி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

மும்பை நாதன்
17-09-2013, 05:50 PM
வாஸ்து என்ற பெயரில் பலரையும் ஏமாற்றி பிழைத்துக்கொண்டு இருக்கின்றனர் சிலர்.

உண்மையில் இது எல்லாமே அவரவரின் மனதைப் பொறுத்ததே ஆகும்.

ஆனாலும் ஒரு நகைச்சுவையோடு கதையை முடித்து இருப்பது மிக நன்றாக இருக்கிறது.

மும்பை நாதன்